இரவி பரமேஸ்வரி
முற்றுப்புள்ளி ஒன்றினை இந்நான்காம் பகுதியுடன் வைத்துவிட வேண்டும். அல்லது இறப்பரை இழுத்தாற்போல, அர்த்தமற்று இக்கட்டுரை நீண்டு கொண்டே சென்றுவிடும். அதனால் நிகழக்கூடியது என்னவெனில் மையம் சிதைந்து விடுகிறது. அதாவது மையக்கருத்தில் நிலைகொள்ளாமல் அங்கிங்கு என்று அலைந்து சொல்லவந்த விடயங்களை கோட்டை விட்டுவிட்டு, சொல்லத் தேவையற்றவற்றையும் சொல்லி கட்டுரை நிறைவு பெற்றுவிடும்.
இது திரைக்கதைப் பிரதிகளிலும் பலசமயங்களில் நடந்துவிடுவதுண்டு. இதனால் பிரதி அற்புதமான ஓர் ஓவியத்தை வரைய முடியாமல், வண்ண மைகளை வீணே கொட்டியது போல் ஆகிவிடும். அதனால் வண்ணங்களும் வீண், திரையும் வீண், அதன் வாழ்வும் வீண் என்று ஆகிவிடும். இதற்கும் உதாரணம் வேண்டும் என்றால் கமல்காசனிடம்தான் செல்ல வேண்டும். அதற்கு அவருடைய சில திரைப்படங்களைக் குறிப்பிடலாம் என்றாலும், அநியாயமான ஓர் உதாரணம் 'மகாநதி' திரைப்படம்.
'மகாநதி'யில் திரைப்பிரதி குறித்து ஏற்கெனவே கவனித்தது என்றாலும், மெலிதாக அதைத் தொட்டுவிட்டு அப்பால் போகிறேன். கிராமத்திலிருந்து நகரத்திற்குப் போகும் ஒருவர் படக்கூடிய பாடுகளை 'மகாநதி'யின் மைந்தன் சொன்னான். நகரத்திலிருந்து கிராமத்திற்கு வந்தவன் 'தேவர் மகன்.'
தன் கையை தானே வெட்டி, சரியப் போகும் தருணம், இல்லையென்று நிமிர்ந்து 'வீழ்வேனென்று நினைத்தாயோ?' என உணர்ச்சி வசப்படுகிறான் 'மகாநதி'யின் மைந்தன். 'பிள்ளைகளைப் படிக்க வையுங்கடா' என்று கதறி கைவிலங்கு பூட்டியபடி தொடரூந்தில் ஏறுகிறான் 'தேவர் மகன்.'
'தேவர் மகன்' இன் கவலை நியாயமானது, கோபம் நியாயமானது என்ற உடனேயே ஏற்றுக் கொள்கிறது மனம். 'மகாநதி'யில் மைந்தன் கமல்காசன் என்பதனால் வெறும் உணர்ச்சிகளுக்கு அப்பால் அது நம்மை எதுவும் செய்துவிடவில்லை. காரணம் திரைக்கதைப் பிரதி. அதன் வலிமை, செழுமை, தர்க்கபூர்வமான கட்டமைப்பு. ஒன்றை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். திரைக்கதைப் பிரதி வலிமையில்லாத எந்தத் திரைப்படைப்பும் 'தலையால் கிடங்கு வெட்டினாலும்' வெற்றி கொள்ளல் கடினம்.
ஒரு திரைக்கதைப் பிரதி எவ்வாறு உருவாகின்றது? ஒரு பிரதியை எவ்வகையில் நிர்ணயம் செய்கின்றனர்? பல்வேறு படிகளில் ஏறி தாம் தொடர விரும்பியதை தொட்டுவிடுகின்றனர். அதேவேளை, தொட்டுவிட முடியாதது மாத்திரமல்ல, எட்டிப்பார்க்க முடியாது போனவர்களும் உண்டு.
ஆரம்பத்தில் 'தட்டையான' திரைக்கதைப் பிரதிகளே ஆக்கப்பட்டன. ஏற்கெனவே தெரிந்த, அறிந்த, வாசித்த புராண, இதிகாச, காப்பியக் கதைகளே திரைக்கதைப் பிரதிகள் ஆகின. இங்கு திரைக்கதை ஆசிரியருக்கு ஏதும் வியாக்கியானம் செய்யும் தேவையிருக்கவில்லை. தொன்மங்களில் பரவி, தத்துவங்களில் செறிந்து ஆன்மீகப்பயணம் செய்த, மரபார்ந்த உயர்வான படைப்புக்கள் தமிழிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் இருந்தன.
இராமாயாணம், மகாபாரதம் என்ற இதிகாசங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான ஐம்பெரும் காப்பியங்கள் சூளாமணி, உதயனகுமார காவியம் முதலான ஐஞ்சிறு காப்பியங்கள், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் என்ற வகைப் புராணங்கள் என்று பல நிறத்திலான 'கதைகள்' தமிழில் மலிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து சிறு பகுதியைப் பிய்த்தெடுத்து அல்லது ஒரு கதையை உருவியெடுத்து திரைக்கதை ஆக்கினர். தெரிவு செய்தல் ஒன்றைத் தவிர இக்காலத் திரைக்கதை ஆசிரியர்களுக்கு வேறு வலிமை, திறமை, படைப்பாற்றல், புனைவு என்ற ஒன்றும் தேவையாயிருக்கவில்லை. முற்காலத் திரைப்படங்களின் தலைப்புகளைப் (பக்த ஹனுமான், நந்தனார், கண்ணகி) பார்த்தாலே இவற்றைப் புரியமுடியும்.
புராணக் கதைகள்தாம் என்றாலும், நான் உணர்ந்த வகையில் செழுமையான திரைக்கதைப் பிரதி அமைத்து வெற்றி பெற்றவர் ஏ.பி.நாகராஜன் அவர்கள். தமிழ்த் திரை உலகில் அவர் பல சாதனைகளுக்கு உரித்துடையவர். திருவிளையாடல் புராணத்தில் இருந்து சில கதைகளை உருவி எடுத்து, செழுமையான திரைக்கதைப் பிரதியாக்கி, 'திருவிளையாடல்' என்ற திரைப்படமாக இயக்கியிருந்தவர் ஏ.பி.நாகராஜன். நான் நம்புகிறேன் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 'திருவிளையாடல்' போல் வெற்றியும், செழுமையும் பெற்ற ஒரு திரைப்படம் கிடையாது.
யாருக்கும் 'திருவிளையாடல்' பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால், அதன் திரைக்கதை உருவாக்கத்தை உற்றுக் கவனியுங்கள். தொடக்கம், வளர்த்தெடுத்துச் செல்லும் முறை, சலிப்பு ஏற்படாத திரைப்பட அமைப்பு, முடிவு என்று சீரான ஓட்டத்தை அத்திரைப்படப் பிரதியில் நாம் காணலாம்.
அதேயளவு என்றில்லாவிட்டாலும், பெரிய புராணத்தை 'திருவருட் செல்வர்' என்று ஆக்கிய விதத்திலும், கந்தபுராணத்தை 'கந்தன் கருணை' என்று ஆக்கிய விதத்திலும் மிளிர்ந்து நிற்கிறார் ஏ.பி.நாகராஜன் அவர்கள். அவருடைய சிறப்பு என்னவெனில் திரைக்கதை ஆக்கத்தில் அவர் மிக்க கவனம் கொள்கிறார். சாறை எடுத்துவிட்டு சக்கைகளைத் துப்பிவிடுகிறார். எடுத்த சாற்றிலும் எத்தனை துளிகள் தரவேண்டும், எப்படித் தரவேண்டும் என்றும் தெரிகிறது அவருக்கு.
சினிமா நுட்பம் தெரிந்தவர்கள் ஒன்றை அவர் மீது குறையாக வைப்பார்கள். சினிமா என்றாலும் அத்தனையும் நாடக பாணியாக இருக்கிறதே என்பது தான் அக்குறை. நாகராஜன்மீது மட்டும் அக்குற்றத்தை சுமத்திவிட முடியாது. காலத்திற்கும் அதில் பங்குண்டு. சிவாஜி கணேசன் என்ற மகா கலைஞன்மீது இக்குற்றச் 'சாட்டை' எடுத்து விளாசுகிறோம் தானே? மற்றும் இது சினிமா பற்றிய விமர்சனம் அல்ல. திரைக்கதையாக்கம் பற்றிய ஒரு பதிவு.
திரைக்கதை ஆக்கத்தில் ஏ.பி.நாகராஜன் அவர்களின் திறனை மேலும் இரண்டு உதாரணங்கள் மூலம் புரிய வைப்பேன். ஒன்று, ஏலவே சொல்லப்பட்ட புனைவை (Fiction) அல்லது படைப்பை ஓர் அற்புதமான திரைக்கதையாக்கி அதனை வெற்றி பெறச் செய்திருக்கிறார். அப்புனைவு கொத்தமங்கலம் சுப்பு, ஆனந்த விகடன் இதழில் தொடர் கதையாக எழுதிய 'தில்லானா மோகனம்பாள்'. ஏ.பி.நாகராஜன் அவர்கள் அப்பிரதியில் கைவைத்து மந்திரம் சொன்னார். சண்முகசுந்தரமும் மோகனாம்பாளும் நம்முன் நாதஸ்வரம் வாசித்தனர். நடனம் ஆடினர். நம்மை நெகிழச் செய்தனர். ஏ.பி.நாகராஜன், சிவாஜி கணேசன், பத்மினி, பாலையா, நாகேஷ், கே.வி.மகாதேவன், மதுரை சேதுராமன், பொன்னுச்சாமி சகோதரர்கள் போன்ற ஒப்பற்ற கலைஞர்கள் இணைந்து தமிழின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக 'தில்லானா மோகனம்பாள்' திரைப்படத்தைப் படைத்தனர். திரைக்கதைப் பிரதியே இதன் முழுமுதற் காரணம் என்பேன் நான்.
இரண்டு, சிவாஜி கணேசன் ஓர் அற்புதமான கலைஞன். அதில் எந்த ஐயப்பாடும் கிடையாது. பாரதியார் எப்படித் தமிழுக்குக் கிடைத்தாரோ, அப்படித் தமிழுக்கு கிடைத்த ஒருவர் சிவாஜி கணேசன். 'மிகச்சிறந்த நடிகர், ஆனால் மோசமான நடிப்பு' என்ற விமர்சனமும் அவர் மீது உண்டு. 'மோசமான நடிப்பு'க்கு அவர் காரணம் அல்ல என்பது என் மேலான அபிப்பிராயம். இருக்கட்டும்.
சிவாஜிகணேசனின் இந்த அதிதிறமையை உச்சபட்சமாக வெளிப்படுத்துவதற்கு ஏ.பி.நாகராஜன் ஒரு திரைக்கதைப் பிரதி யாத்தார். அதுவே 'நவராத்திரி' என்ற திரைப்படம், நவரசங்களை வெளிப்படுத்துவதற்காக ஒன்பது பாத்திரங்கள் அமைக்கப்பட்டன. அந்தக் கதையிலும் சிவாஜி கணேசன் தோன்றினார். நவரசங்களையும் அதி அற்புதமாக வெளிப்படுத்தினார். கொஞ்சம் தவறினாலும் சிவாஜி கணேசனின் நவரச நடிப்புத் திறமையைக் காட்டுகின்ற விவரணமாகவோ, அபத்தமாகவோ மாறிவிடும் அபாயம் உண்டு. ஆனால் திரைக்கதைப் பிரதி அந்த அபாயத்தைத் தவிர்த்து விட்டது. பிரதி என்ன செய்ததென்றால், சிவாஜியின் நடிப்புத் திறமையை நியாயப்படுத்தி விட்டிருந்தது.
சிவாஜி கணேசனின் நவரசங்களை வெளிப்படுத்திய இத்திரைக்கதைப் பிரதி, சாவித்திரியின் திறமையையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. சாவித்திரிக்கும் நவரசங்களைக் காட்டக்கூடிய சந்தர்ப்பத்தை இப்பிரதி வழங்கியது. யாருக்கேனும் 'நவராத்திரி' திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா? தயவுசெய்து கவனியுங்கள் சாவித்திரியின் நடிப்பை. நவரசங்களையும் பிழிந்து தருகிற என்னவோர் அற்புதமான நடிகை சாவித்திரி.
'நவராத்திரி'யின் திரைக்கதைப் பிரதியை நான் மெச்சக் காரணம், கமல்காசனின் 'தசாவதாரம்' திரைக்கதைப் பிரதியின் பலவீனமே. கமல்காசனுக்கு 'தான் அடுத்த சிவாஜி கணேசன்' என நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சிவாஜி கணேசன் 'நவராத்திரி'யில் ஒன்பது வேடங்களில் நடித்துவிட்டார். ஒன்றைக்கூட்டி பத்து வேடங்கள் என்பதற்கு 'தசாவதாரம்' என்ற சொல் பொருத்தமாக இருந்தது. ஆனால் திரைக்கதைப் பிரதி பொருத்தமாக வரவில்லையே. மூன்று அல்லது நான்கு பாத்திரங்களுக்கு மேல் கமல்காசனுக்கு அப்பிரதி நியாயம் செய்யவில்லை. ஒரு விநோத உடைப் போட்டிக்கு ஆறேழு உடைகளில் கமல்காசன் வந்து போனார். உண்மையில் மூன்று அல்லது நான்கு தவிர மீதி அத்தனை பாத்திரங்களும் வீண் என்றே உணரவைத்தன. நண்பர்களே புரிய முடிகிறதா, திரைக்கதைப் பிரதியின் பலத்தையும், பலவீனத்தையும்?
திரைக்கதைப் பிரதிகள் தொன்மத்தில் தோய்ந்தெழுந்து வருகின்றபோது அவை செம்மைப்பட்டவை ஆகின்றன. இதிகாச, காவிய, ஆன்மீகச் செழுமைகளை உண்ணக் கொடுக்காது, அவற்றின் சாரத்தைப் பிழிந்து அச்சாறை தன் வியாக்கியானத்தில் வெளிப்படுத்துவதே தொன்மம் எனலாம். உதாரணம் ஒன்றைக் கூறின் சுலபமாக விளங்கிடமுடியும். 'கர்ணன்'இன் கதை யாவருக்கும் தெரிந்ததே. மகாபாரதத்தில் கர்ணனும், இராமாயாணத்தில் இராவணனும் ஓர் அவலச்சுவை (tragedy) நிறைந்த பாத்திரம். அவலச்சுவை என்பது துன்பியல் அல்ல. அது வேறொன்று. கர்ணனே எடுத்துக் கொண்டால் ஒருபக்கம் தாயப்பாசம். மறுபக்கம் துரியோதனன் மீதான செஞ்சோற்றுக் கடன். என்ன செய்வான் கர்ணன்? இராவணனுக்கு சீதை மீதான ஆசை ஒரு பக்கம் என்றால் வீரமும், தர்மமும் நிரம்பப் பெற்றவராக இருக்கிறான். இராவணன் என்ன செய்வான்? இதுவே அவலச்சுவை.
இந்தக் கர்ணனின் கதையை தனக்குள் வீழ்த்துகிறார் மணிரத்னம். ஓர் அற்புதமான திரைக்கதைப் பிரதி அவரிடமிருந்து உருவாகிறது. அதுவே 'தளபதி'. கர்ணனும் தளபதியும் காட்சிக்குக் காட்சி ஒன்றாகவே இருக்கிறது. இதில் மணிரத்னம் என்ன செய்தார் என்ற கேள்வி எழும். 'கர்ணன்' திரைப்படத்தையும், 'தளபதி' திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் அதனைப் புரியமுடியும். பி.ஆர்.பந்துலுவின் (கர்ணன்) திரைக்கதை மெச்சத்தக்கது தான் எனினும், கர்ணன் மீது சிலசமயங்களில் கோபமும், அசூயையும் வரவைத்து விடுகிறார் பந்துலு,
மணிரத்னத்தின் கர்ணன் (தளபதி) சூழ்நிலைக் கைதியாக, இக்கட்டில் நின்று தவிப்பவராக, அவலத்தின் உச்சக்கட்டமாக படைக்கப்பட்டிருந்தார். ('கர்ணன்' சிவாஜியிலும் பார்க்க 'தளபதி' ரஜனிகாந்தின் நடிப்பு அபாரம்.) தமிழ்த்திரை வரலாற்றில் மிகச்சிறந்த திரைக்கதைப் பிரதிகளைத் தந்தவர்களில் மணிரத்னம் ஒருவர். நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே என்பன மிக முக்கியமானவை. 'மௌனராகம்' திரைக்கதையைக் குறிப்பிடலாம் என்றாலும், மகேந்திரனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' திரைக்கதைப் பிரதியின் ஒத்த சாயலை 'மௌனராகம்' கொண்டிருப்பதாக எனக்குப் படுகிறது.
இதிகாசத்தின் மற்றொரு அவல நாயகனான இராவணனை வியாகியானப்படுத்த முயன்ற மணிரத்னம் அதில் படுதோல்வி கண்டதை நாம் அறிவோம். காரணத்தைத் தேடுவது என் வேலை அல்ல. அதேபோல் எம்.ஜி.ஆர், கருணாநிதி என்ற 'இருவர்' ஐயும் திரைக்கதையாக்கி குப்புற வீழ்ந்ததை நாம் கண்டோம். மணிரத்னம் என்ற திரைக்கதையாசிரியருக்கு என்ன ஆயிற்று? என்ற வேதனை தான் மிஞ்சுகிறது.
அவ்வாறே அபிராமிப்பட்டர் என்ற சக்தி உமாசங்கரின் கதையை 'குணா' என்று கமல்காசன் திரைக்கதை ஆக்கியிருந்தார். கர்ணனாக ரஜனிகாந்தால் மாறமுடிந்த அளவுக்கு அபிராமிப்பட்டராக கமல்காசன் என்ற 'சகலகலாவல்லவரால்' முடியவில்லை. அதற்குரிய திரைக்கதையை ஆக்க கமல்காசன் விரும்பவில்லைப் போல் தெரிகிறது. இறுதிக் காட்சியில் 'குணா' மலையிலிருந்து குதிப்பதற்கு முன்னரே 'குணா'வின் திரைக்கதை மலையிலிருந்து குதித்துவிட்டது.
இப்படியான திரைக்கதைப் பிரதிகள் மரணமடைவதும் உண்டு உயிர்த்து வாழ்வதும் உண்டு. எனவே இப்படி ஒரு முடிவு எடுப்போமா?
'ஒரு திரைப்படத்தின் உயிர்நாடி திரைக்கதைப் பிரதி.'