Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடலாமா?

கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடலாமா?
தாமரை காருண்யன்

 

மனந்திறந்து பேசுவோமே – 4

நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்துபோது முதலில் எழுதிய கட்டுரையினை 'சிவில் - அரசியல் சமூக மோதுகை நன்மை தரக்கூடியதா' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.

இந்தக் கட்டுரை தொடர்பான ஒரு எதிர்வினைக் குறிப்பினை கனடாவில் இருந்து நக்கீரன் எனப் பரவலாக அறியப்பட்ட தங்கவேலு ஜயா எழுதியிருந்தார்.

அவரது இந்த எதிர்வினைக் குறிப்பினை முதலில் வாசகர்களின் கவனத்திற்குத் தந்துவிட்டு, அந்த எதிர்வினையினை ஒட்டி இந்தப்பத்தி எழுதப்படுகிறது.

பொங்குதமிழில் வெளியாகிய முதலாவது கட்டுரையினை வாசிக்கத் தவறிய வாசகர்களுக்காகவும் இந்தப்பத்தியுடன் இணைத்து மீள வாசிக்க விரும்பும் வாசகர்களின் வசதிக்காகவும் முதலில் இக் கட்டுரைக்கான இணைப்பினை இங்கு தருகிறேன்.

சிவில் - அரசியல் சமூக மோதுகை நன்மை தரக்கூடியதா?

இக் கட்டுரைக்கு நக்கீரன் எழுதிய எதிர்வினைக் குறிப்பு கீழே தரப்படுகிறது.

'சிவில் சமூகத்தின் தேவை பற்றி இந்தப் பத்தியாளர் எழுதிய கருத்தோடு உடன்படுகிறேன். அப்படியான ஒரு சிவில் சமூகம் அரசியல் சமூகத்துக்கு விருப்பு வெறுப்பின்றி நடுநிலமையோடு சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அதாவது ஓர் அரசனுக்கு எப்படி இடித்துரைக்கும் ஓர் அமைச்சர் தேவையோ அதுபோல இந்த சிவில் சமூகம் இயங்கலாம். ஆனால் மின்னாமல் முழங்காமல் வெற்றுக் கடிதத்தில் 75 பேர்களது பெயரைப் போட்டுவிட்டு 'நாம்தான் தமிழ் சிவில் சமூகம். நாங்கள் சொல்வது போலத்தான் ததேகூ நடக்க வேண்டும்' என்று புறப்பட்டதை யாரும் இரசிக்க முடியாது.

அந்தக் கடிதத்தில் முதல் கையெழுத்திட்டு இருக்கும் ஆயர் இராயப்பு யோசேப் அதில் எழுதியிருப்பதைப் படியாமலே தனது பெயரை சேர்த்திருக்கிறார். 'நீங்கள் அந்தக் கடிதத்தை படித்தீர்களா?' என்று கேட்டதற்கு 'இல்லைத் தம்பி படிக்கவில்லை' என்று அசடு வழிந்திருக்கிறார்.

குறைந்தபட்சம் இந்த ஒரு கூட்டத்தைக் கூட்டி சமகால அரசியலை அலசி ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒரு அறிக்கை தயாரித்திருந்தால் அதனை வரவேற்றிருக்கலாம். அதனை விடுத்து தொலைபேசியில் பேசிவிட்டு வைத்திய கலாநிதிகளது பெயர்களையும் பாதிரிமார்களது பெயர்களையும் அந்தக் கடிதத்தில் சேர்த்தது பித்தலாட்டமாகும்.

அந்தக் கடிதத்தை ஊன்றிப் படிப்பவர்கள் அதற்குப் பின்னால் சென்ற தேர்தலில் கட்டுக்காசை இழந்த அரசியல்வாதிகள் இருப்பதை கண்டிருப்பார்கள். தில்லியில் நடந்த கூட்டத்தில் புளட் சித்தார்த்தனும் ஆனந்தசங்கரியும் கையெழுத்துப்போட மறுத்தமைக்கு ததேகூ யை எப்படி குற்றம் காண முடியும்?

வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ போட்டியிடக் கூடாது, அவர்களுக்குப் பதில் சுயேட்சைகளை நிறுத்த வேண்டும் என்று த.சி.ச முன்வைத்த கோரிக்கையில் உள்நோக்கம் என்ன? த.தே.கூ பலவீனப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் அதில் உண்டா? இல்லையா?

மேலும் த.தே.கூ வடமாகாண சபைத் தேர்தலில் வெல்லும், அதையே மகிந்த இராசபக்சேயும் விரும்புகிறார் என்ற த.சி.ச இன் வாதம் முட்டாள்த்தனமாகப் படவில்லையா?

இதையேன் இந்தப் பத்தி எழுத்தாளர் காண மறுக்கிறார்? அல்லது கண்டும் காணாது விடுகிறார்?

த.தே.கூ ஒரு இராசதந்திர கட்டுமானத்தோடுதான் (Diplomatic strategy) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் த.தே.கூ தனது முன்மொழிவுகளை சிங்கள அரசோடான பேச்சுவார்த்தையின்போது தொடக்கத்திலேயே முன்வைத்து அதன் அடிப்படையில் பேசி வந்தது. த.தே.கூ எந்த அடிப்படைக் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்கவில்லை. தாயகம், தேசியம், உள்ளக தன்னாட்சி உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை.

இந்தியாவின் அழுத்தம், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல், அமெரிக்காவின் அழுத்தம் என வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்பவர்களிடம் ஒரு கேள்வி. இந்த நாடுகளின் ஒத்துழைப்பின்றி தமிழர் தரப்பு தனது உரிமைகளை வென்றெடுக்க முடியுமா?'

இந்த எதிர்வினைக்குறிப்பில் நக்கீரன் குறிப்பிட்டுள்ளவாறு மன்னார் ஆயர் அவர்கள் சிவில் சமூகக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விடயங்களைப் படிக்காமலே தனது பெயரைச் சேர்த்தாரா என்பது குறித்து நம்பகமான தகவல் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் நக்கீரன் வெளிப்படுத்தும் இத் தகவல் நம்புவதற்கு கடினமானதொன்றாக இருக்கிறது என்பதனை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இரண்டாவது, இச் சிவில் சமூகத்தின் கடிதத்துக்கு 'தேர்தலில் கட்டுக்காசு' இழந்தவர்கள் பின்னால் உள்ளார்கள் என்ற வாதத்தினையும் நான் நிராகரிக்கிறேன்.

இவ்வாறு கூறுவது சிவில் சமூகத்தின் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளவர்களின் சுயாதீன சிந்தனையினைக் கேள்விக்குள்ளாக்குவதாக அமையும். என்னைப் பொறுத்தவரையில் இக் கடிதத்தில் கையொப்பம் இட்டவர்கள் தமது சுயசிந்தனையின் அடிப்படையில் இயங்கியுள்ளார்கள் என்றே கருதுகிறேன்.

இவை தவிர்ந்தால் எஞ்சியுள்ள விடயங்கள் மூன்று:

1. சிவில் சமூகத்தின் பிரதிநிதித்துவ உரிமை பற்றியது. எவர் தம்மை சிவில் சமூகமாக இனங்காட்டவும் பிரதிநிதித்துவப்படுத்தவும் உரிமையுடையவர்கள் என்பது தொடர்பான ஒரு கேள்வி. இதனை நக்கீரன் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: 'ஆனால் மின்னாமல் முழங்காமல் வெற்றுக் கடிதத்தில் 75 பேர்களது பெயரைப் போட்டுவிட்டு, நாம்தான் தமிழ் சிவில் சமூகம். நாங்கள் சொல்வது போலத்தான் ததேகூ நடக்க வேண்டும் என்று புறப்பட்டதை யாரும் இரசிக்க முடியாது.'

2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணத் தேர்தலில் போட்டியிடாமல் சுயேச்சைக் குழுக்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கூட்டமைப்பை பலவீனப்படுத்தாதா?

3. இந்தியா, அமெரிக்கா போன்ற பலம்மிக்க அரசுகளின் ஆதரவின்றி தமிழ் மக்கள் தமது உரிமைளை வென்றெடுக்க முடியுமா?

இம் மூன்று விடயங்களுக்கும் சுருக்கமாக பதிலளிக்க இப் பத்தி முயல்கிறது.

முதலாவது விடயம் சிவில் சமூகத்தின் பிரதித்துவ உரிமை தொடர்பானது. இவ் விடயத்தை நக்கீரனை விட வேறு சிலரும் இந்தச் சிவில் சமூம் தமிழ் மக்களின் மத்தியில் உள்ள அடிநிலை மக்களை பிரதித்துவப்படுத்தவில்லை என வாதிட்டிருந்தமைனையும் காண முடிந்தது.

சிவில் சமூகம் தொடர்பான வாதப்பிரதிவாதங்களில் இதன் பிரதித்துவ உரிமை முக்கியமாகப் பேசப்படும் ஒரு விடயம். சிவில் சமூகவெளி வளர்ச்சியடையாத நாடுகளில் சிவில் சமூகத்துக்கும் அரசியல் சமூகத்துக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படும்போது அரசியல் சமூகம் அடிக்கடி இக் கேள்வியினை எழுப்புவதுண்டு.

தமது அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளிநாடுகள் சிவில் சமூகம் என்ற போர்வையில் தூண்டிவிடுவதான குற்றச்சாட்டும் பல அரசுகளால் முன்வைக்கப்படுவதனையும் நாம் அவதானித்திருக்கிறோம். சில சந்தர்பங்களில் இக் குற்றச்சாட்டுக்களில் உண்மையும் இருப்பதுண்டு.

ஜனநாயக நாடுகளில் அரசியல் சமூகத்துக்கு மக்களிடம் இருந்து பிரதித்துவ உரிமை கிடைக்கிறது. ஆனால் பல சிவில் சமூக அமைப்புக்களுக்கு பரந்த அளவில் இத்தகைய ஜனநாயக வழியிலான பிரதித்துவ உரிமையினை மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதில்லை.

மேலும் சிவில் சமூகங்கள் தாம் குறிப்பாக அக்கறை கொண்டுள்ள விடயங்களில் தமது செயற்பாடுகளை கூடுதலாக மேற்கொள்வதால் பரந்துபட்ட மக்கள் அங்கீகாரமும் சிவில் சமூகங்களுக்குத் தேவைப்படுவதில்லை.

மேலும் எந்தவொரு சமூகத்திலும் சிவில் சமூகம் என ஒன்று மட்டும் இருப்பதில்லை. இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் ஏகபோக சிவில் சமூகம் என எதுவும் இருப்பதில்லை.

நாங்கள் பல்வேறுவகையான சிவில் சமூக அமைப்புக்கள் இயங்குவதனை நடைமுறையில் காண்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கும் சிவில் சமூக வெளியின் அளவினைப் பொறுத்தும் ஜனநாயகப் பாரம்பரியத்தினைப் பொறுத்தும் சிவில் சமூக அமைப்புகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வேறுபட்டதாக அமைகின்றன.     

இதேவேளை பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் ஒரு பொது நோக்கத்துக்காக ஒரு குடைக்குள் ஒருங்கிணைவதுமுண்டு.

சிவில் சமூகம் தொடர்பான எனது முதலாவது பத்தியில் சிவில் சமூகத்துக்கான ஒரு வரைவிலக்கணமாக, 'சிவில் சமூகத்தினை ஒரு பரந்த அர்த்தத்தில் அரசு (State), சந்தை (Market), குடும்பம் (Family) என்ற நிறுவனங்களுக்குள் உள்ளடங்காத ஒரு சமூகவெளி' எனக் குறிப்பிட்டிருந்தேன்

இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கு கடிதத்தை எழுதியவர்கள் தம்மை சிவில் சமூகம் என அழைத்துக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை.

இதேவேளை, ஈழத் தமிழர் சமூகத்தின் மத்தியில் உள்ள சிவில் சமூகத்தின் ஏகபிரதிநிதிகளாகவும் நாம் இவர்களை நோக்க வேண்டியதில்லை. இந்த சிவில் சமூகத்தினரும் அத்தகைய எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தியதில்லை.

ஈழத் தமிழர் சிவில் சமூகத்தில் முக்கியமாக அமையக்கூடியவர்களால் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளைக் காழ்ப்புணர்வுடன் நோக்காமல், இந்த சிவில் சமூகத்தை நிராகரிக்காமல் சிவில் சமூகத்துடன் கூட்டமைப்பு ஆரோக்கியமான உரையாடலில் (dialouge) ஈடுபடுவதே அரசியல்ரீதியில் ஆரோக்கிமானது.

அண்மையில் கூட்டமைப்புக்கும் சிவில் சமூகத்துக்கும் இடையில் நடைபெற்ற நேரடிச் சந்திப்பு இவ் விடயத்தில் ஓர் நல்ல ஆரம்பம்.

***

அடுத்த விடயம் கூட்டமைப்பு மாகாணசபைத் தேர்தலில் பங்கெடுப்பது தொடர்பானது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அறிவித்தல்கள் எதுவும் வெளிவராத இன்றைய சூழலில் இவ்விடயம் உடனடிக் கவனத்துக்குரியதாக இல்லாதிருக்கலாம்.

எனினும் இவ்விடயம் தொடர்பான கருத்துத்தள விவாதங்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதால் எனது கருத்தினையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

அரசியல் அமைப்புக்கள் தமது நிலைப்பாடுகளை அடிப்படையான நிலைப்பாடுகள் (principle positions), நடைமுறைதழுவிய நிலைப்பாடுகள் (pragmatic positions) என இரண்டு வகையாகப் பகுத்துக்கொள்ள வேண்டும்.

இவற்றில் அடிப்படையான விடயங்களில் விட்டுக்கொடுப்பற்றும் நடைமுறை தழுவிய விடயங்களில் விட்டுக்கொடுப்புடனும் நடந்து கொண்டு ஒரு வெற்றிகரமான அரசியல் அமைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கேற்ற முறையில் தனது மூலோபாயம், தந்திரோபாயங்களை ஒரு அரசியல் அமைப்பு வகுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குபெறவில்லை. வடக்கு கிழக்கு இணைந்ததே தமிழர் தாயகம் என்ற தமது அடிப்படையான நிலைப்பாட்டில் இருந்து கீழே இறங்கி இந்தத் தேர்தலில் கலந்து கொள்ள முடியாது என்பதே கூட்டமைப்பு இதற்காக முன்வைத்த வாதம்.

இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டபோது கூட்டமைப்பு முன்வைத்த இந்த வாதம் இப்படியான நிலைப்பாட்டில் இருந்து எழுந்தது.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற நிலைப்பாட்டை கூட்டமைப்பு எப்போதும் தனது அடிப்படையான நிலைப்பாடாகக் (principle position) கொள்ள வேண்டும். இதில் எந்த வகையான விட்டுக் கொடுப்பும் இருக்கக்கூடாது. இந் நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்தும் எந்தவகையான அரசியல் முடிவுகளையும் எடுக்கக்கூடாது.

2008 ஆம் ஆண்டின் அரசியற் சூழலுக்கும் தற்போதய அரசியற் சூழலுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவரீதியில் தோற்கடிக்கபட்டிருக்கலாம். இவையெல்லாம் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற தமிழர் தேசத்தின் நிலைப்பாட்டை எந்த வகையிலும் மாற்றியமைத்து விடவில்லை.

மாறாக, கூட்டமைப்பிற்கு தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு தற்போது உள்ளது. தாயகத் தமிழ் மக்களின் தற்போதய காலகட்டத்து அரசியல் தலைமை என்ற வகையில் இக் கூடுதல் பொறுப்பை மிகுந்த பொறுப்புணர்வுடனும் உறுதியுடனும் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு கூட்டமைப்புத் தலைவர்களுக்கு உள்ளது.

கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் இது வடக்கு கிழக்கு பிரிந்த தமிழர் தாயகத்தை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொண்டதாகி விடும்.

இதன் பின்னர், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தினை வலியுறுத்தும் அரசியல் நகர்வுகைள மேற்கொள்வது நீர்த்துப்போன ஒரு நடவடிக்கை ஆகிவிடும்.

மேலும் மாகாணசபைகளால் ஆக்கபூர்வமான எந்த ஒரு அரசியல் முன்னெடுப்பையும் மேற்கொள்வது சாத்தியமாகப் போவதில்லை. தமிழர் தேசத்தினை கரைத்துச் சிதைக்கும் சிங்களத்தின் திட்டத்தினையும் தடுத்து நிறுத்த முடியப்போவதில்லை.

இத்தகைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழர் தேசத்துக்கும் ஓர் அரசியற் தற்கொலையானதாகத்தான் அமையும்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் விடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?

ஒரு தேர்தற் பகிஸ்கரிப்பு வடமாகாணசபைத் தேர்தலில் தமிழர் தேசத்துக்கு எதிராகவும் சிங்களத்துக்கு ஆதரவானதுமான விளைவுகளைத் தருவதாகவே அமையும். டக்ளஸ் வட மாகாணசபைக்கு முதலமைச்சர் ஆவதற்கும் இதன் ஊடாக சிங்கள அரசு வடக்கில் ஸ்திரப்படுவதற்கும் துணை புரியும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் தலைமையாக தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக அரங்கிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் தேர்தல்கள் வழங்கிய பங்களிப்பினை நாம் மறுக்க முடியாது.

இதனால் கூட்டமைப்பு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டாலும் சிக்கல், போட்டியிடாவிட்டாலும் சிக்கல் என்ற நிலை உள்ளது.

இதனை ஒரு நடைமுறைதழுவிய நிலைப்பாட்டுடன் (pragmatic position) கையாண்டு இச் சிக்கலைக் கையாள முடியும்.

இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்குள்ள வழி கூட்டமைப்பு தனக்கு ஆசியும் ஆதரவையும் பெற்ற ஒரு குழுவைத் தேர்தலில் நிற்க வைப்பதுதான்.

இந்தக் குழு ஓர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிச் சின்னத்தில் தேர்தலில் நிற்பதால் நன்மைகள் இருக்கும் பட்சத்தில் ஒரு கட்சிச் சின்னத்தில் போட்டியிடுவது பற்றிச் சிந்திக்கலாம்.

ஆனால் அண்மைக் காலங்களில் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் தமிழரசுக் கட்சியோ அல்லது வீடு சின்னமோ வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒதுங்கியிருக்க வேண்டும்.

கூட்டமைப்பு தான் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாமைக்கான காரணத்தைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இதனை ஒழித்து மறைக்கக்கூடாது. இவ்வாறு பகிரங்கமாக தனது நிலைப்பாட்டை அறிவிப்பதுதான் ஒரு அரசியல் நகர்வாக, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயக நிலைப்பாட்டை வலுப்படுத்துவதாக அமையும்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாது விட்டதற்கு என்ன காரணத்தை கூட்டமைப்புக் கூறியதோ அதே காரணத்தின் அடிப்படையில் - வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்தும் வகையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தாம் போட்டியிட முடியாது என்பதனை தமிழ்மக்களுக்கும் சிங்கள தேசத்துக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இதேவேளை, தமது ஆதரவும் ஆசியும் பெற்ற குழு தேர்தலில் போட்டியிடுகிறது என்பதனையும் அதற்கான காரணத்தையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இக் குழுவுக்கு ஆதரவினை வழங்குமாறு மக்களையும் கோர வேண்டும்.

வெளிப்படையாகப் பார்க்கும்போது இது ஒன்றுக்கொன்று முரண்பாடான முடிவு போல் தோற்றமளிக்கலாம். ஆனால் இது உண்மையில் அப்படியானது அல்ல.

ஒரு விடயத்தை அடிப்படை நிலைப்பாட்டில் (principle position) இருந்தும் நடைமுறை தழுவிய நிலைப்பாட்டில் (pragmatic position) இருந்தும் அணுகவேண்டிய அரசியல் யதார்த்தத்தைச் சந்திக்கும்போது இத்தகைய இரண்டு நிலைப்பாடுகளையும் உள்வாங்கி முடிவுகளை எடுத்துக் காய்களை நகர்த்துவதே விவேகமானது.

***

மூன்றாவது விடயம் இந்தியா, அமெரிக்கா போன்ற அரசுகளின் ஒத்துழைப்பின்றி தமிழர் தரப்பு தனது உரிமைகளை வென்றெடுப்பது சாத்தியமானதுதானா என்பது குறித்தது.

ஈழத் தமிழர் தேசம் அனைத்துலக ஆதரவினைத் தனக்கு ஆதரவாக வென்றெடுக்க வேண்டும் என்பதும் ஈழத் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க இந்த ஆதரவு அவசியம் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. தமிழர் உரிமை பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் இவ் விடயத்தில் மாற்றுக் கருத்து இருக்கும் எனவும் நான் எண்ணவில்லை.

விடுதலைப்புலிகள் அடைந்த தோல்வி, அடிப்படையில் வெளியுறவுக் கொள்கையிலும் அனைத்துலக உறவுகளிலும் ஏற்பட்ட தோல்வி என்ற புரிதலுடன் இவ்விடயத்தை நோக்கும்போது இதன் முக்கியத்துவத்தை மேலும் உணர முடியும்.

இருப்பினும் வெற்றிகரமான அனைத்துலக உறவு என்பது நமது நலன்களை நாம் முன்னிறுத்தி, நமது நலன்களையும் அனைத்தலக நலன்களையும் ஒருங்கிணைய வைத்து அனைத்துலக ஆதரவினை வென்றெடுப்பதுதான்.

பலம்மிக்க அரசுகளின் நலன்களுக்கு சேவகம் புரிவதற்காக நமது நலன்களைத் தாரைவார்த்துக் கொடுப்பதல்ல.

எவ்வாறு ஈழத் தமிழர் தேசம் அனைத்துலக அரசுகளைக் கையாள வேண்டும் என்பது நாம் விரிவாக ஆராய வேண்டிய ஒரு விடயம். இது குறித்த விவாதமும் தமிழர் அரசியற்பரப்பில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பின்னொரு சந்தர்ப்பத்தில் இவ் விடயம் குறித்து எனது கருத்துக்களை இப் பத்தியில் நோக்கலாம்.

2/28/2012 3:32:53 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்