தாமரை காருண்யன்
மனந்திறந்து பேசுவோமே – 6
ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தற்போதய காலகட்டத்தில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து ஈழத் தமிழர் அரசியல் சமூகத்திடம் இதுவரை ஏற்படவில்லை. இவை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஈழத் தமிழர் தேசம் நாடு கடந்த ஒரு தேசமாகவும் இதன் அரசியல் நாடு கடந்த அரசியலாகவும் முகிழ்த்திருக்கும் ஒரு சூழலில் தாயகத்திலும் புலத்திலும் இயங்கும் அரசியல் அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் சமூகம் என இப் பத்தி விளிக்கிறது.
இந்த அரசியல் சமூகத்தின் மத்தியில் வேறுபாடுகள் இருந்தாலும் தோழமையுணர்வுடனான உரையாடல் ஊடாக ஒரு வகையான புரிந்துணர்வுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இன்னும் அற்றுப்போய்விடவில்லை. ஒவ்வொரு அரசியல் அமைப்பும் காலத்தின் தேவை கருதி ஏகபோக மனப்பான்மை தவிர்த்து ஒருவரை ஒருவர் மதித்து தமக்கிடையிலான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஆனால் இத்தகைய உரையாடல்களை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது தொடர்பான ஒரு பொதுத்தளம் ஒன்றை இனங்காண்பது உரையாடல் தொடர்பான சிந்தனைகளை வளர்ப்பதற்கு உதவக்கூடியது.
ஈழத் தமிழர் ஒரு தேசமா அல்லது ஒரு தேசிய இனமா? ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலா அல்லது அதிகாரப் பரவலாக்கலின் அடிப்படையிலா? நாடு பிரிந்த வகையில் இரண்டு அரசுகள் கொண்ட தீர்வு முறையா? அல்லது ஒரு நாடு இரு தேசங்கள் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலான தீர்வு முறையா? சிறிலங்கா அரசு தரக்கூடியதைப் பேசிப்பெறுவதா அல்லது தரமாட்டாததைக் கோரி நின்று எதுவும் அற்றுப்போவதா? அனைத்துலக சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்க அவர்களது நலன்களுடன் இணைந்து போவதா அல்லது நமது நலன்கள்தான் முக்கியம் என்றுகூறித் தனிமைப்பட்டு நிற்பதா?
இவை போன்ற வாதப்பிரதிவாதங்கள் ஈழத் தமிழர் அரசியல் சமூகத்தின் மத்தியில் இடம் பெற்று வருகின்றன. இத்தகைய வாதங்கள் தமிழர் தேசத்தின் அரசியலைச் செழுமைப்படுத்தவதற்கு அவசியம்தான்.
ஆனால் இவற்றையும் கடந்து தமிழர் தேச அரசியல் சமூகம் தமக்கிடையிலான ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது முக்கியமான ஒரு அரசியல் நாகரீகமாக அமைய வேண்டும்.
இத்தகைய உரையாடல்களை ஆரம்பிப்பதற்கான ஒரு பொதுத்தளமாக ’சிறிலங்கா அரசினைப் புரிந்து கொள்ளலும் எதிர் கொள்ளலும்' என்பது அமைய முடியும் என்பது இப்பத்தியின் கருத்து.
ஏனெனில் சிறிலங்கா அரசு தொடர்பான ஒரு வரலாற்றுப் புரிதல் நமக்கிருக்கிறது. இவ் விடயத்தில் வரலாறு நமக்கு ஒரு வழிகாட்டியாக இயங்கும்.
சிறிலங்கா அரசை நாம் புரிந்து கொள்வது தொடர்பான எனது கருத்துக்களை இங்கு குறித்துக் கொள்வது ஈழத் தமிழர் சமூகம் மத்தியிலான உரையாடலுக்கான அழைப்புக்குத் துணை புரியும் எனக் கருதுகிறேன்.
சிறிலங்கா அரசு எத்தகையது என்பதனை புரிந்து கொள்வதற்கு நாம் சிறிலங்கா அரசு - சிறிலங்கா அரசாங்கம் இவை இரண்டையும் இவற்றுக்கிடையேயான வேறுபாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். நம் மத்தியில் அரசு (State), அரசாங்கம் (Government) – இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் மாறி மாறி பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. இதற்கு முன்னரும் அரசு - அரசாங்கம் இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்து எனது பத்திகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.
கோட்பாட்டுரீதியில் அரசும் அரசாங்கமும் ஒன்றல்ல. ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அரசின் ஒரு பகுதிதான் அரசாங்கம். அரசு என்பது ஒரு நாட்டின் ஆளுமை முறையின் திரட்சி. ஒரு நாட்டின் சட்டங்களை இயற்றுவது, நாட்டை நிர்வகிப்பது, சட்டம் ஒழுங்கப் பாதுகாப்பது, நீதி பரிபாலனம் செய்வது உட்பட ஒரு நாட்டை ஆளுகை செய்வதற்குத் தேவiயான அனைத்துக் கட்டமைப்புக்களும் அரசின் அங்கங்கள்.
ஜனநாயகப் பாரம்பரியத்தில் ஒரு நாட்டின் அதிகாரங்கள் ஒரு இடத்தில் குவிமையப்படுவதனைத் தடுத்து அவற்றை வெவ்வேறு இடங்களில் பகிரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நாம் பொதுவாக மூன்று வகையாகப் பகுத்துப் பார்க்கலாம்.
முதலாவது, ஒரு நாட்டை ஆளுகை செய்வதற்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம். இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சபையிடம் இருக்கும்.
இரண்டாவது, நாட்டை ஆளுகை செய்யும் நிர்வாக இயந்திரம். இந்த நிர்வாக இயந்திரம்தான் அரசாங்கம். அதனை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கூடுதலான ஆதரவைப் பெற்ற (பெரும்பான்மை அரசாங்கம்) அல்லது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மைப் பிரதிநிதிகளினால் நிராகரிக்கப்படாத (சிறுபான்மை அரசாங்கம்) கட்சியோ அல்லது கட்சிகளோ தலைமை தாங்கும்.
மூன்றாவது, சுதந்திரமான ஒரு நீதிபரிபாலனத்துறை. மக்களின் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக நீதி நிர்வாக விழுமியங்களுக்கு உட்பட்டு ஒரு நாடு ஆளுகை செய்யப்படுவதனை உறுதிப்படுத்தும் ஒரு பொறிமுறை.
இவையே பாரம்பரியமாக அரசின் அங்கங்களாகக் கருதப்படுபவை. ஆளுகைமுறையின் கண்காணிப்பாளராக இருக்கக்கூடிய ஒரு நிலை சுயாதீன ஊடகங்களுக்கு இருப்பதனால் ஊடகங்களையும் ஒரு அரசின் நான்காவது அங்கமாக வர்ணிக்கும் போக்கும் ஜனநாயக நாடுகளில் உண்டு.
ஒரு நாட்டின் இறைமை மக்களின் கைகளில் இருப்பதாகக் கருதப்படுவதால் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக நாட்டை ஆளுகை செய்யும் முறை கட்டியமைக்கப்பட்டுள்ளது.
இவை பொதுவாகக் கூறப்பட்ட விடயங்களே. பல நாடுகளில் மக்களால் ஆட்சித் தலைவர் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் முறை உண்டு. இங்கு மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் முக்கியத்துவம் ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படும். சிறிலங்காவிலும் இந்த நடைமுறை உண்டு.
இத்தகைய ஒரு பின்னணியில் இருந்து நாம் சிறிலங்கா அரசினைப் புரிந்து கொள்ள முயல்வோம்.
இப்பத்தி சிறிலங்கா அரசு குறித்து பத்து அவதானிப்புக்களைப் பதிவு செய்து கொள்கிறது.
முதலவாது, சிறிலங்கா அரசு மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளால் ஆளுகை மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறையினை பின்பற்றி வருகிறது. இந்த நடைமுறை காரணமாக ஒரு ஜனநாயக நாடு என்ற பெயரை அனைத்துலக அரங்கில் பெற்றுள்ளது.
இரண்டாவது, சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குள் உள்ள ஒரு அரசு. இந்த அரசின் நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, நிர்வாக இயந்திரமான அரசாங்கமாக இருந்தாலும் சரி, நீதி பரிபாலனத்துறையாக இருந்தூலும் சரி, ஏன் ஊடகங்களாக இருந்தாலும் சரி – இவை அனைத்துமே சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குள் இருக்கிறது. மேலும், ஜனநாயக அடிப்படையிலான பெரும்பான்மையினரின் அதிகாரம் என்ற நடைமுறையினைப் பயன்படுத்தி பெரும்பான்மை இனத்தவரின் அதிகாரம் என்ற அடிப்படையில் சிறிலங்கா அரசு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் இங்கு ஜனநாயகம் (Democracy) என்பது இனநாயகமாக (ethnocracy) உள்ளது.
மூன்றாவது, சிறிலங்கா அரசு மகாவம்ச இதிகாச மயக்கத்தை வரலாற்று உண்மை என்று திரிபுபடுத்தி இந்தத் தளத்தில் இருந்து இந்தியாவுக்கும் தமிழருக்கும் எதிரான அரசாகக் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இதில் தமிழர் எதிர்ப்பினை வெளிப்படையாக முதன்மைப்படுத்தி இந்திய எதிர்ப்பினை மறைமுகமாகப் புதைத்து வைத்திருக்கும் இராஜதந்திர அணுகுமுறையும் இணைக்கப்பட்டள்ளது.
நான்காவது, சிறிலங்கா அரசின் மீதான சிங்கள பௌத்த ஆதிக்கமானது மிகவும் இறுக்கமடைந்து ஒரு பேரினவாத அரசாக வலுவடைந்துள்ளது. மேலும் எந்த வகையான அரசு சீரமைப்பு முயற்சியினையும் (state reforms) இப் பேரினவாத நிறுவனம் எதிர்த்துப் போராடி முறியடிக்கும் வல்லமையினையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ ஊற்றெடுக்க முனையின் அதனை விழுங்கி ஏப்பம் விடும் வலிமை இப் பேரினவாதப் பூதத்துக்கு உண்டு.
ஐந்தாவது, சிறிலங்கா அரசு தன்வசமுள்ள எந்தவித அதிகாரங்களையும் பகிர்ந்தளிக்க தயாராக இல்லை. வரலாற்று ரீதியாகத் தமிழர் தலைமைகள் சிறிலங்கா அரசாங்கங்களுடன் நடாத்தி வந்த பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளும் தோல்வியில் முடிவடைந்ததற்கான ஒரு முக்கியமான காரணம் இது.
ஆறாவது, இலங்கைத்தீவில் இருப்பது ஒரு தேசம்தான், ஒரு தேசிய இனம்தான் - அது சிங்கள தேசமே – சிங்கள தேசிய இனமே – என்பதுதான் சிறிலங்கா அரசின் நிலைப்பாடு. ஏனைய சிறுபான்மையினர் வந்தேறுகுடிகள். உதிரிக் குடியினர். சிங்களதேசத்தின் தீர்மானத்தின்படி வாழவேண்டியவர்கள். தம்மை சிறிலங்கர் என்ற அடையாளத்துகள் அமிழ்த்திக் கரைய வேண்டியவர்கள். இந்த பேரினவாத நிலைப்பாடு சிறிலங்கா அரசின் ஆதார அடிப்படைகளில் முக்கியமானது.
ஏழாவது, சிறிலங்காவில் ஜனநாயகமுறையின் ஊடாக ஆட்சிமாற்றம் நடைபெறக்கூடிய நிலை இருப்பது சிறிலங்கா அரசின் உயிர்வாழ்வுக்கு உறுதுணையாக உள்ளது. அரசின் மீது எழும் எதிர்ப்பினை அரசாங்கத்தினைத் தலைமை தாங்கும் கட்சியின் மீதான எதிர்ப்பாக வெளிப்படுத்தி ஒவ்வொரு ஆட்சிமாற்றத்தின் ஊடாகவும் சிறிலங்கா அரசு தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. இதனால் சிறிலங்காவினைப் பொறுத்தவரை தேர்தல் ஜனாயகம் என்பது பேரினவாத அரசைப் பாதுகாக்கும் கருவியாகப் பயன்படுகிறது.
எட்டாவது, சிறிலங்கா அரசு ஒரு தேச-அரசு (Nation -State) அல்ல. மாறாக ஒரு பிரதேச-அரசு (territorial state). ஒரு தேச அரசு ஒரு தேத்துக்குரிய அரசாக தனக்கென்ற வரையறுக்கப்பட்ட பிரதேச எல்லைகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான மேற்கு ஜரோப்பிய அரசுகள் இத்தகைய தேச அரசுகளே. ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களைக் கொண்ட நாடுகளிலும் ஒரு பொதுத் தேசஉருவாக்கத்தை (Nation building) வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்போது அவற்றையும் தேச-அரசாகக் கொள்ள முடியும். ஆனால் தனது பேரினவாத நிலைப்பாட்டால் சிறிலங்கா அரசால் 'இலங்கையர்' என்ற ஒரு பொது தேசத்தை உருவாக்க முடியவில்லை. தற்போது 'சிறிலங்கர்' என்ற தேச உருவாக்கத்தை ஆக்கிரமிப்பின் ஊடாகச் செய்ய முயல்கிறது.
ஒன்பதாவது, கடந்து முப்பதாண்டுகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிர் கொள்வதற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பை எதிர்த்துப் போராடுவதற்கும் கட்டி எழுப்பட்ட இராணுவ, புலனாய்வுக் கட்டமைப்புக்களால் சிறிலங்கா அரசு ஒரு வலுவான இராணுவத்தைக் கொண்ட, இராணுவ மையவாத அணுகுமுறை கொண்ட அரசாக மாற்றம் கண்டிருக்கிறது இது தற்போதய அரசாங்கத்தின் அணுகுமுறையாக மட்டும் இல்லாது அரசின் அணுகுமுறையாக வளர்ச்சி காண்பதால் ஆட்சிமாற்றங்கள் அரசின் இராணுவத்தின் வகிபாகத்தை நிராகரிக்க முடியாத நிலை தோற்றம் கண்டு வருகிறது.
பத்தாவது, சிறிலங்கா அரசு தான் ஆளுகை செய்யும் இலங்கைத்தீவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக உலகப் பெரும் நாடுகளை கவரும் தன்மையினைக் கொண்டுள்ளது. இதனால் தனது நலன்களுக்கேற்றவாறு உலகப்பெரும் நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பினைக் கொண்டதாக உள்ளது. ஆட்சியாளர்களின் அணுகுமுறைக்கேற்ப கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டாலும் சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக அரசுகளின் அரங்கில் நண்பர்வட்டம் இருந்து கொண்டிருக்கும்.
இங்கு நான் குறிப்பிட்டுள்ள சிறிலங்கா அரசு தொடர்பான அவதானிப்புக்கள் குறித்து ஈழத் தமிழர் தேசத்தின் தமிழ் தேசிய நிலைப்பட்ட அரசியல் சமூகத்தின் மத்தியில் கருத்து வேறுபாடுகள் பாரியளவில் இருக்கும் என நான் கருதவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருந்தாலும் சரி, நாடு கடந் தமிழீழ அரசாங்கமாக இருந்தாலும் சரி, உலகத் தமிழர் பேரவையான இருந்தாலும் சரி, மக்கள் அவைகளாக இருந்தாலும் சரி – எல்லோரும் வெளிப்படையாகப் பேசாவிடினும் சிறிலங்கா அரசு தொடர்பான இவர்களது கணிப்பில் பாரிய வேறுபாடுகள் இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை.
ஈழத் தமிழ் மக்களும் சிறிலங்கா அரசினை நன்கு புரிந்துதான் வைத்துள்ளனர். வரலாற்றுரீதியாக சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் ஆதரித்ததில்லை.
இயங்குதிறன் என்ற நோக்கில் பார்த்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டக்ளஸ் தேவானந்தாவின் அருகில் நெருங்கக்கூட முடியாது. கூட்டமைப்பின் வெற்றி என்பது இயங்குதிறனின் வெற்றியல்ல.
கூட்டமைப்பின் வெற்றியினை சிறிலங்கா அரசு தொடர்பான தமிழ் மக்களின் புரிதலில் இருந்து எழுந்த வெற்றியாகத்தான் நோக்க வேண்டும். சிறிலங்கா அரசு இனவாத அரசாக இருக்கின்றமையால் அதனை எதிர்கொள்ள பலமான தமிழர் தலைமை வேண்டும் என்பதே மக்கள் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
தமிழரசுக்கட்சி – விடுதலைப்புலிகள் அமைப்பு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அமைப்புக்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு, வெவ்வேறு காலகட்டங்களில் உள்ள நிலைமைகளுக்குள், ஒரு பலமான தமிழர் தலைமையினைத் தமிழர் தேசம் கொண்டிருக்க வேண்டும் என்ற மக்களின் நிலைப்பாட்டில் இருந்தே எழுந்திருக்கிறது.
ஈழத் தமிழர் அரசில் சமூகத்தின் மத்தியில் உள்ள அணுகுமுறை சார்ந்த வேறுபாடுகள் சிறிலங்கா அரசினை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது கையாள்வது என்பதில் இருந்துதான் எழுகிறது என்றே நான் கருதுகிறேன். (இங்கு அதிகாரப் போட்டிகளால் எழும் முரண்பாடுகளைத் தவிர்த்தே பேசப்படுகிறது)
இதனால் சிறிலங்கா அரசினைப் புரிந்து கொண்டு சிறிலங்கா அரசினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகத் தமிழர் அரசியல் சமூகம் தமக்குள் உரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
சிறிலங்கா அரசை எவ்வாறு கையாள்வது? அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசை எவ்வாறு தனிமைப்படுத்துவது? ஈழத் தமிழர் தேசம் தனிமைப்பட்டுப் போகாமல் தடுப்பது எவ்வாறு? தமிழர் தேசத்தின் அரசியல் அடையாளத்தை அழித்து, தேசம் என்ற தகைமையினை தகர்த்து, சிறிலங்கர் அடையாளத்துக்குள் கரைத்து விடத்துடிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சியினை தடுத்து நிறுத்துவது எவ்வாறு? யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மீளக் கட்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் எவை? தாயகத்தில் தமிழர் தேசத்தின் பொருளாதார வலிமையினை வளப்படுத்தவது எவ்வாறு? போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக கவனத்தினை தமிழர் தேசத்தின் நலனக்கேற்பப் பயன்படுத்தவது எவ்வாறு?
இவையெல்லாம் ஈழத் தமிழர் அரசியல் சமூகம் தமக்குள் கூடிப்பேசுவதற்கான உடனடிப் பேசுபொருளாக அமையக்கூடியவை. இத்தகைய உரையாடல்களின் ஊடாக சிறிலங்கா அரசினை எதிர்கொள்வது தொடர்பான ஒரு பொது உடன்பாட்டுக்கு ஈழத் தமிழர் அரசியல் சமூகம் வரவேண்டும்.
இங்கு பொது உடன்பாடு என்பது ஈழத் தமிழர் அரசியல் சமூகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே வேலைத்திட்டத்தில் இயங்க வேண்டும் என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படவில்லை. முன்னர் ஒரு தடவை இப் பத்தியில் குறிப்பிட்டது போன்று எல்லோரும் ஒரே புள்ளியில் இணைய வேண்டும் என இப் பத்தி கருதவில்லை. ஆனால் ஒரு சட்டகத்துக்குள் ஒருங்கிணையும் புரிந்துணர்வை ஈழத் தமிழர் அரசியல் சமூகம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துகிறது.
இதனைச் செய்ய தமிழத் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஈழத் தமிழர் அரசியல் சமூகம் தயங்குமானால், தவறுமானால் இது சிங்களத்துக்கு வாய்ப்பு கொடுப்பதாகவே அமையும். இதற்காக வலராறு நமது தலைமுறையைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும்.