Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தானியா மற்றும் சே குவேரா: பொய்கள் - புனைவுகள் - அவதூறுகள்

தானியா மற்றும் சே குவேரா: பொய்கள் - புனைவுகள் - அவதூறுகள்
யமுனா ராஜேந்திரன்

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 15

தானியா கொல்லப்பட்டதன் பின், வெலிகிரண்டா மலைக் பிரதேத்துக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடலை பொலிவிய ஜனாதிபதி பாரியான்டோஸ் தமது படையினருடன் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் உலகெங்கிலும் வெளியிடப்பட்டது. தானியாவின் மரணமும் தீரமும் பேசப்பட்டது போல உலகில் பிறிதொரு கெரில்லாப் பெண் போராளியின் வரலாறு பேசப்பட்டதில்லை. காரணம், சே குவேராவினால் தலைமை தாங்கப்பட்ட பொலிவியக் கெரில்லா யுத்தக் குழுவின் ஒரேயொரு பெண்போராளி தானியாதான்.

இன்றும் உலகின் ஆயுத விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் ஆதர்ஷமாகப் பேசப்படும் கியூப விடுதலைப் போராட்டத்தில் சீலிய சாஞ்சஸ், ஹெய்டி சாந்தாமரியா போன்று நூற்றுக்கணக்கான பெண் போராளிகள் ஈடுபட்டிருந்தார்கள். கியூபப் புரட்சியினால் ஆதர்ஷம் பெற்ற நிகரகுவா, எல் ஸால்வடோர், ஜபடிஸ்டா போன்ற கெரில்லா இயக்கங்களிலும், ஈழவிடுதலைப் போரிலும் பெண்போராளிப் படைப்பிரிவுகளே இருந்தன. இவற்றில் ஈடுபட்ட பெண் போராளிகள் அனைவரும் அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். தானியா இவர்களிலிருந்தெல்லாம் வேறுபட்ட பண்புகள் கொண்டவர்.

நாசிகளிடமிருந்து தப்பி அகதிகளாக அர்ஜன்டினா வந்த ஜெர்மானியக் கம்யூனிஸ்ட்டுகளான பெற்றோருக்குப் பிறந்து, இட்லரின் வீழ்ச்சியின் பின் மறுபடி கிழக்கு ஜெர்மன் திரும்பி, சே குவேராவைச் சந்தித்த பின் கியூபப் புரட்சியின் பின்னான புதிய சோசலிசக் கட்டுமானத்தில் ஈடுபடும் நோக்கோடு தன்னந்தனியாக கியூபாவுக்கு வந்து, பிற்பாடாக உலகு தழுவிய புரட்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, உலகெலாம் அதன்பொருட்டு அலைந்து, தனது 29 ஆவது வயதில் இறுதியில் பொலிவியாவில் கொல்லப்பட்ட தானியா, அதனது முழுமையான அர்த்தத்தில் சர்வதேசியவாதியாகத் திகழ்ந்தவர். பெண் போராளிகளின் முழு வரலாற்றிலும் இது ஓர் அபூர்வமான நிகழ்வு.

கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்ட ஐரோப்பியப் பெண் என்பதாலும், பல்லாண்டுகள் தம்மை வெற்றிகரமாக ஏமாற்றி உளவறிந்தவர் என்பதாலும், தானியாவின் மீது பற்பல அவதூறுகளை பொலிவிய அரசும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் பரப்பி வந்தன. கியூபா எனும் நாட்டின் அரசுத் தலைவரான பிடல் காஸ்ட்ரோ - அரசுகள் கடந்த சர்வதேசியப் புரட்சியில் ஈடுபட்ட சே குவேரா என இரு பெரும் ஆளுமைகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளையும், சே குவேராவுக்கும் சமாதான சகவாழ்வுக்குக் கொள்கையை முன்வைத்து ஆயுதவிடுதலைப் போராட்டங்களை மறுத்த சோவியத் யூனியனுக்கும் இருந்த முரண்பாடுகளையும் முன்வைத்து, இயல்பாகவே ஒரு கெரில்லா யுத்தத்தில் ஏற்படக் கூடிய தவறுகளை தத்தமது அரசியல் வியாக்யானங்களுக்கு உட்படுத்த முயன்றவர்கள், தானியாவை சே குவேராவைக் கொல்வதற்கெனவே பிடல் காஸ்ட்ரோ அனுப்பி வைத்தார் என அவதூறுகள் பரப்பினார்கள். தானியா ஒரே சமயத்தில் கியூபா-கிழக்கு ஜெர்மனி-ரஸ்யா போன்ற நாடுகளின் உளவாளியாக இருந்தார் எனவும், அவரே பொலிவியப் படைகளுக்கு சே குவேராவைக் காட்டிக் கொடுத்துக் கொல்லக் காரணமாக இருந்தார் எனவும் அவதூறுகள் பரப்பப்பட்டன.

சே குவேராவின் ரகசியக் காதலியாக இருந்ததோடு மரணமுறும் தருவாயில் சே குவேராவின் மூன்று மாதக்கருவை தானியா சுமந்து கொண்டிருந்தார் எனவும், கெரில்லாக்களின் பாலியல் துணையாகவே அவர் வாழ்ந்தார் எனவும், பொலிவிய அரசியல் தலைவர்களோடும், செல்வமிக்க முதலாளிகளோடும் அவர் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு திரிந்தார் எனவும் அவதூறுகள் பரப்பப்பட்டன. வன்முறையையும் பாலுறவையும் வைத்துக் காசுசேர்த்துக் கொண்டிருந்த அமெரிக்க- மேற்கத்தியக் கலாச்சாரச் சீரழிவாளர்களுக்கு ஆயுத விடுதலைப் போராட்டமும் அதில் ஈடுபட்ட பெண்களையும் வன்முறையின் பிம்பங்களாகவும், பாலியல் அடிமைகளாகவும் மட்டும்தான் பார்க்க முடிந்தது. இன்னும் கெரில்லா வாழ்வு தரும் தனிமையையும், வனங்களின் இடையிலான இயற்கை சார் அவர்களது வாழ்வையும் வைத்துப் பாலுறவு விழைச்சைக் கட்டற்றுத் துய்த்தவர்கள் கெரில்லாக்கள் எனும் உக்கிரமான சிருங்காரக் கற்பனைகளே அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மிஞ்சின. தானியாவின் மரணத்தின் பின்பு, தானியாவின் வாழ்வை முன்வைத்து கொச்சையான வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதப்பட்டன. தானியாவின் வாழ்வை வைத்து திரைப்படங்கள் தயாரிக்க ஹாலிவுட் முதலாளிகள் திட்டமிட்டார்கள்.

தானியா கொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து 1970 ஆம் ஆண்டில் தானியா கிழக்கு ஜெர்மன் அரசின் உளவாளி எனும் கட்டுக்கதையை முதலில் அவிழ்த்துவிட்டவர் கிழக்கு ஜெர்மன் பாதுகாப்புச் சேவையில் இருந்து வெளியேறி அமெரிக்கா சென்று, கம்யூனிச எதிர்ப்பாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட குந்தர் மென்னல் என்பவர். செக்கோஸ்லாவாக்கியத் தலைநகர் பிராகில் தானியா உளவுத்துறைப் பணிகளில் பயிற்சி பெற்றபோது, செக்கோஸ்லவாக்கியாவில் இருந்த சே குவேராவும் தானியாவும் திருமணம் மீறிய பாலுறவு கொண்டிருந்தார்கள் எனும் கிசுகிசுவை அவர் பரப்பினார். இதனை அப்படியே அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவும் பொலிவிய உளவுத்துறையும் காவிக்கொண்டது.

குந்தர் மென்னல் குறிப்பிடும் காலகட்டத்தில், முழு இலத்தினமெரிக்க விடுதலைத் திட்டமான ஆபரேசன் பொன்டாஸ்மா பணிகளுக்காக சே குவேரா செக்கோஸ்லாவாக்கியாவில் இருந்தார். தானியா பிராக் நகரத்திற்கு வெளியில் ஒரு பண்ணையிலிருந்தபடி உளவுத்துறைப் பாதுகாப்புப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். என்றாலும், அவர்கள் பிராக் நகரத்தில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு போதும் இருக்கவில்லை என்பது பிற்பாடு நிருபிக்கப்பட்ட பின்னால், அந்தக் கட்டுக்கதை இல்லாமல் போனது. இதே குந்தர் மென்னல்தான் தானியா கிழக்கு ஜெர்மனியின் உளவுத்துறை ஏஜன்டாக இருந்தார் எனும் கட்டுக்கதையையும் பரப்பினார். கிழக்கு ஜெர்மன் உளவுத்துறையும், ரஸ்ய உளவுத்துறையும் சேர்ந்து தானியாவை குவேராவைக் கொல்ல அனுப்பியது எனவும், சே குவேரா மீது கொண்ட காதலால் தானியா தனது மனதை மாற்றிக் கொண்டு சே வின் கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டு மரணமுற்றார் எனவும் இந்தக் கதைகள் பிற்பாடு கால் கை முளைத்த பொய்களாகப் பரவின.

தானியா மற்றும் சே குவேரா: பொய்கள் - புனைவுகள் - அவதூறுகள்

தானியா குறித்த இந்தக் கதையை வேறொரு விதத்தில் வியாக்யானப்படுத்தியவராக மெக்சிக்க எழுத்தாளர் ஜோர்ஜ் காஸ்டநாடா இருப்பதாக தனது கார்டியன் பத்திரிக்கைக் கட்டுரையில் குறிப்பிடுகிறார், தானியா குறித்த எல்ஸ்ட்ராடவின் நூலுக்கு விமர்சனம் எழுதிய பாப் பிரிட்டன். எல்ஸ்ராடாவும் தானியா குறித்த தனது நூலில் காஸ்டநாடாவின் திரிபுகள் குறித்துக் குறிப்பிடுகிறார். காஸ்டநாடா, தானியா கிழக்கு ஜெர்மன் சமூகத்தில் வாழப்பிடிக்காமல், சோசலிசத்திற்குத் துரோகமிழைத்த கிழக்கு ஜெர்மன் சமூகத்திலிருந்து தப்பி, இலத்தீனமெரிக்கா போக முடிவெடுத்தார் எனவும், கியூபப் புரட்சியை அவர் நம்பினார் எனவும், சே குவேரா அதனை பிற இலத்தீனமெரிக்க நாடுகளுக்கும் எடுத்துச் சென்று சோசலிசக் கொள்கைகளுக்கு நேர்மையாகச் செயல்படுகிறார் என நம்பியே அவர் கியூபா வந்தார் எனவும் எழுதுகிறார் எனக் குறிப்பிடுகிறார் பாப் பிரிட்டன். கிழக்கு ஜெர்மன் உளவுப்பிரிவான ஸ்டாசியும் ரஸ்ய உளவுப்பிரிவான கேஜிபியும் சே குவேராவின் இயக்கத்தில் ஊடுருவி அதைச் சிதைப்பதற்காக அவரை அனுப்பியது எனவும் காஸ்டநாடா எழுதுகிறார் எனவும் குறிப்பிடுகிறார் பாப் பிரிட்டன்.

குந்தர் மென்னல் முதல் காஸ்டநாடா வரை தானியாவின் மீது முன்வைக்கும் ஸ்டாசி-கேஜிபி குற்றச்சாட்டினை என்றென்றைக்கும் பொய்யானது என நிரூபித்திருக்கிறார் தானியாவின் அன்புத்தாயான நாடியா பங்க். இதற்காக அவர் ரஸ்ய-ஜெர்மன் உளவுத்துறை ஆவணக்காப்பகங்களுக்குப் பயணம் செய்தார். 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 மற்றும் 22 ஆம் திகதியிட்டு இரு கடிதங்களை ரஸ்ய உளவுத்துறை நாடியாவிடம் கையளித்தது. தானியாவுக்கும் கேஜிபிக்கும் உறவு இருப்பதற்கான எந்த ஆவணப்பதிவுகளும் தகவல்களும் ஆதாரங்களும் தம்மிடம் இல்லை என்பதனை அந்தக் கடிதங்கள் உறுதி செய்திருக்கின்றன. அதைப் போலவே 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதியிட்டு ஜெர்மன் உளவுத்துறை ஆவணக் காப்பகமும் ஒரு கடிதத்தினை நாடியாவிடம் கையளித்தது. தானியாவுக்கும் ஸ்டாசிக்கும்; உறவு இருப்பதற்கான எந்த ஆவணப்பதிவுகளும் தகவல்களும் ஆதாரங்களும் தம்மிடம் இல்லை என்பதனை அந்தக் கடிதம் உறுதி செய்திருக்கிறது.

இதனோடு, முதன் முதலாக, எண்ணற்ற ஆபரேசன் பென்டாஸ்மோ தொடர்பான கியூப உளவுத்துறை ஆவணங்களும், தானியா தனது கியூப, செக்கோஸ்லாவாக்கிய, பொலிவியப் பயிற்சி மற்றும் அனுபவங்கள் தொடர்பாக கியூப உளவுத்துறைக்கு எழுதிய அறிக்கைகளும், தானியாவின் பயிற்சி தொடர்பாக நியமிக்கப்பட்டவர்கள் பதிவு செய்த கியூப உளவுத்துறை அறிக்கைகளும் எல்ஸ்ராடவின் புத்தகத்தில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் அனைத்தும் தர்க்கபூர்வமாக 1962 ஆம் ஆண்டு முதலே பொலிவிய அயுதப் போராட்டம் தொடர்பான திட்டம் தீட்டப்பட்டதையும், அது வளர்ந்த முறையையும் சொல்கிறது. 1961 ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனிக்கு சே விஜயம் செய்தபோது ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளராக சே குவேராவைச் சந்தித்த தானியா, அதன் பின்பாக 1966 ஆம் ஆண்டுதான் சே குவேராவை பொலிவியாவில் சந்திக்கிறார். இடையில் சே குவேராவைத் தனிமையில் அவர் சந்தித்ததற்கான சான்றுகள் இல்லை.

சே குவேராவும் தானியாவும் திருமணம் மீறிய பாலுறவு கொண்டிருந்த காதலர்கள் என குந்தர் மென்னல் துவங்கிய வைத்த பிரச்சாரம் 1997 ஆம் ஆண்டு உருகுவே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான ஜோஸ் அந்தோனியா பிரீடல் ஜப்பாட்டா ஜெர்மன் மொழியிலும் பிற்பாடு 1999 இல் ஸ்பானிய மொழியிலும் வெளியிட்ட தானியா, சே குவேராவைக் காலித்த பெண் எனும் நூலினையடுத்து மறுபடியும் பரபரப்பான விஷயமாக ஆனது. இந்த நூல் வெளியான தருணத்தில்தான் சே குவேராவினதும் தானியாவினதும் உடல்கள் பொலிவிய வெலிகிரன்டா மலையில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதனையும் நாம் ஞாபகம் வைத்துக் கொள்வோம்.

ஜோஸ் அந்தோனியாவின் நூல் வெளியானதை அடுத்து தானியாவின் அன்னையான நாடியா பங்கின் நேர்முகம் 1998 ஆம் ஆண்டு மார்ச் 7-8 ஆம் திகதி வெளியான ஜூங் வெல்ட எனும் ஜெர்மானியச் சஞ்சிகையில் வெளியானது. அதனது ஆங்கில மொழியாக்கத்தினையும் எல்ஸ்ட்ராடாவின் நூல் பின்னிணைப்பாகக் கொண்டிருக்கிறது. அந்தோனியாவின் நூலின் தலைப்புக்கு ஆதாரமாக அந்த நூலின் உள்ளே அரை வாக்கியம் மட்டுமே இருப்பதாக நாடியா குறிப்பிடுகிறார். சேகுவேரா கிழக்கு ஜெர்மனிக்கு சில வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்திட வருகிறார். இரண்டு நாட்கள் மட்டுமே அங்கே இருந்துவிட்டு பிற்பாடு புகையிரத வண்டியில் போலந்துக்குச் சென்று விடுகிறார். வியாபார ஒப்பந்தம் சம்பந்தமான சந்திப்புக்களில் சே குவேராவுக்கு ஸ்பானிய மொழிபெயர்ப்பாளராக தானியா செயலாற்றுகிறார். இதுபற்றிச் சொல்லும்போதுதான் தானியா சே குவேராவுடன் நெருக்கமாக (intimately involved) இருந்தார் என எழுதுகிறார் அந்தோனியோ. இந்த முழுநூலிலும் தானியா சே குவேராவைக் காதலித்தார் என்பதற்கு இதுதான் ஆதாரம் என்கிறார் நாடியா.

தானியா பொலிவியாவில் இருந்த நாட்களில் பொலிவிய தூதரக அதிகாரிகள், ஜனாதிபதி பாரியன்டோஸ், ராணுவ ஜெனரல், ஓவியர்கள், நாட்டுப்புற ஆய்வாளர்கள் எனப் பலருடன் பழக்கம் கொண்டிருந்தார். ஜெர்மன், ஸ்பானிய மொழிகளில் புலமை, தொல்பொருளியலிலும், இனவரைவியலிலும், நாட்டுப்புறவியலிலும் அவருக்கு இருந்த புலமை போன்ற அவரது ஆளுமைப் பண்புகளே அவர்பால் பலரையும் ஈர்த்தன. தனது அரசியல் செயல்பாட்டுக்காக அதனை அவர் பயன்படுத்திக் கொண்டார். இதனை வெறுமனே பாலுறவுச் சாகசமாகக் குறுக்கிப் பார்த்திருக்கிறார் அந்தோனியோ என்கிறார் நாடியா. தனது புதல்வியின் மீது ஆதாரமற்ற அவதூறுகள் கொண்டது இந்தப் புத்தகம் என நூல் பதிப்பாளர் மற்றும் நூலாசிரியர் மீது வழக்குத் தொடுத்தார் நாடியா. 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் தீர்ப்பளிக்கப்பட்டது. 75 பிரதிகளே மிச்சமிருக்க விற்றுத் தீர்ந்திருந்த அந்தப் பதிப்பின் பின், புத்தகம் தடை செய்யப்பட்டது. 5 இலட்சம் மார்க் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறைத்தண்டனை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நூல் வெளியிடப்படவேயில்லை.

தானியா, சே குவேரா உள்பட பொலிவியாவில் தனது அரசியல் செயல்பாட்டுக்காக மேரேஜ் ஆப் கன்வீனியன்ஸ் எனும் அளவில் மணந்து கொண்ட பொலிவிய மாணவன் உள்பட, தானியா எவரையும் காதலிக்கவில்லை எனும் நாடியா, ஆப்ரோ கரீபியரான யுலிசிஸ் எல்ஸ்ராடாவைத் தான் காதலிப்பதாகவும், பொலிவியக் கடமை முடிந்து கியூபா திரும்பிய பின் அவரை மணந்துகொள்ள இருப்பதாகவும் தானியா தனக்குக் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார். அந்த எல்ஸ்ராடாதான் 2005 ஆம் ஆண்டு தானியா குறித்த வரலாற்று நூலை எழுதியிருக்கிறார். இவ்வகையில், தானியா காதலித்ததும், அவர் உடலுறவு கொண்டதும், தனது பொலிவியக் கடமை முடிந்த பின்னால் கியூபா திரும்பி, மணந்துகொண்டு பற்பல முலாட்டோ கலப்பினக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பியதும் எல்ஸ்ராடாவுடன்தான் என்கிறது தானியாவின் வரலாற்று நூல்.

தானியாவின் அன்னை நாடியா 2003 ஆம் ஆண்டு மரணமுறுவதற்கு முன்னால், 2002 ஆம் ஆண்டு அந்தோனியா பென்டராஸ் சே குவேராகவும், நிகோல் கிட்மேன் தானியாவாகவும் நடித்துத் தயாரிக்கப்படவிருந்த ஒரு ஹாலிவுட் படத்திற்கு எதிராகப் போராடி அதனைத் தயாரிப்பதனைத் தடை செய்தார். தானியா எனும் பெயரிலேயே அந்தப்படம் தயாரிக்கப்படவிருந்தது. குந்தர் மென்னலின் அதே பொய்களின் அடிப்படையில் அந்தப்படம் தயாரிக்கப்படவிருந்தது. தானியா கிழக்கு ஜெர்மன் உளவாளியாக இருந்து அந்த நாட்டின் மாணவர்களை உளவு பார்த்தார் எனவும், பொலிவிய சென்ற அவர் பொலிவிய ஜனாதிபதியுடனும், ராணுவ ஜெனரல்களுடனும், வசதியான தொழில் முதலாளிகளுடனும் படுக்கையில் புரண்டு திரிந்த கடின இதயம் கொண்ட ஒரு சாகசக்காரி, ஒரு புரட்சிப் பைத்தியக்காரி என்பதாகத் தானியா அப்படத்தில் சித்தரிக்கப்படவிருந்தார். ஹாலிவுட் வசூல் பார்முலாவான மட்டுமீறிய இரத்தம் தெறிக்கும் வன்முறை, துப்பாக்கிச் சமர்கள், நீலப்படவகைப் பாலுறவுக் காட்சிகள் நிறைந்ததாக அப்படம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆதாரமற்ற பொய்களின்மீது கட்டப்பட்ட, தனது புதல்வியைக் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தை என்றென்றும் தயாரிக்கப்பட முடியாதபடி செய்துவிட்டுக் கண்மூடினார் நாடியா.

மறுபடி மறுபடி ஆவணங்களும் ஆதாரங்களும் குவிந்தாலும் அவதூறுகள் என்றும் நிற்பதில்லை. புரட்சியாளர்களை அவமானப்படுத்தும் முதலாளித்துவ ஊடகங்களும் ஓய்வதில்லை. தானியாவின் அன்னையினது மரணத்தின் பின், யுலிசிஸ் எல்ஸ்ட்ராடாவின் தானியா குறித்த ஆதாரபூர்வமான ஆவணங்களின் அடிப்படையிலான நூல் வெளியாகி மூன்று ஆண்டுகளின் பின் பிரித்தானியாவின் டைம்ஸ் பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டு மறுபடியும் அதே அவதூறுகளுடன் வெளிவந்தது. இந்த முறை கியூப - பொலிவியப் புரட்சிகளில் முக்கியமான பங்காற்றிய பெனிக்னோவின் நேர்முகத்தின் வழியில் அது முன்வைக்கப்பட்டது. பெனிக்னோ பிடல் காஸ்ட்ரோ வரிசைப் புரட்சியாளர்களில் ஒருவர். ஆபரேசன் பொன்டாஸ்டோ திட்டத்தின்படி தானியாவிற்கு பயிற்சி வழங்க நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர். சே குவேராவுடன் பொலிவியாவிற்குப் போராடப்போன ஒரு கெரில்லாப் போராளி. சே குவேராவும் தானியாவும் கொல்லப்பட்ட பின் பொலிவியாவிலிருந்து தப்பிய சொற்பமான போராளிகளில் ஓருவர். சிலி ஜனாதிபதியான அலண்டேவினால் காப்பாற்றப்பட்டு பின் கியூபா வந்தடைந்த பெனிக்னோ, கியூப சோசலிச நடைமுறையில் முரண்பட்டு பாரிசில் நாடு கடந்து வாழ்ந்து கொண்டிருப்பவர். சே குவேரா மீதும், கியூபப்புரட்சி இலட்சியங்கள் மீதும் நம்பிக்கை தெரிவிக்கும் பெனிக்னோ, பிடலின் கியூபா ஜனநாயகமற்ற, சிறைச்சாலைச் சமூகம் என்கிறவர்.

அவரிடம் டைம்ஸ் பேட்டியாளர் தானியா குறித்துக் கேட்கிறார்: தானியாவுக்கும் சே குவேராவுக்கும் இருந்த காதல் குறித்த, தானியா மரணமுறும்போது அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்தார் என்பது குறித்துக் கேட்கிறார்கள். பெனிக்னோ அவர்கள் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும் எனப் பதில் சொல்கிறார். அதற்கு அவர் சொல்கிற ஆதாரம் அவர்கள் பேசிக்கொள்ளும் போது யாருக்கும் கேட்காதவாறு மெதுவாகப் பேசிக்கொள்வார்கள் என்பதுதான். கர்ப்பம் பற்றிக் கேட்கும்போது அதனை அவர் மறுக்கிறார். அப்படியே இருந்தாலும் அது சே குவேராவினதாக இருக்காது. மாறாக, ஒரு ஆப்ரோ கரீபியருடையதாக இருக்கலாம் என்கிறார். தானியா நினைப்பது போலக் கடுமையானவர் அல்ல எனச் சொல்லும் பெனிக்னோ, தானியா பெண்மைப் பண்புடன் இருப்பதை விரும்பியவர் எனவும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் எனவும் சொல்கிறார்.

ஒரு விவசாயியாக, பெண்கள் குறித்த மரபார்ந்த விவசாயிகளின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவராக பெனிக்னோவை நாம் புரிந்துகொண்டால், தானியாவின் மாதவிடாய் இரத்தப் போக்கிற்கு நாப்கினாகத் தனது மேல்சட்டையைக் கிழித்துக் கொடுத்தேன் எனும் அவரது வார்த்தைகளைப் புரிந்து கொண்டால், தானியா குறித்த பெனிக்னோவின் மேலோட்டமான பார்வையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஒரு பெண்ணாக தானியா குறித்துப் பேசும் பெனிக்னோ ஒரு கடப்பாடுள்ள புரட்சியாளராகத் தானியாவின் மீது தனது பெருமதிப்பை வெளியிடுகிறார். பெனிக்கோ கியூப எதிர்ப்பாளர்களான மியாமி வகை வலதுசாரிகளுடன் தன்னை இணைத்துக் கொள்ள மறுக்கிற கியூபப் புரட்சி குறித்த, குறிப்பாக பிடலின் கியூபா குறித்த விமர்சனங்கள் கொண்டவர் எனும் அளவிலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவும் மேற்கத்திய ஊடகங்களும், பொலிவிய ஜனாதிபதி பரியான்டோசும் தானியாவின் மீது இவ்வளவு வெறுப்பும் அருவருப்பும் கொள்ளக் காரணம்தான் என்ன? இன்றளவிலும் திரும்பத் திரும்ப ஏன் அவதூறுகளைப் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்? சே குவேரா பொலிவியாவில் மரணமுறுவதற்கு முன்னால் தனது மனைவி அலீடா மார்ச்சுக்கு எழுதிய காதல் ததும்பும் கவிதைகளை அவர் வெளியிட்ட பின்பும், தானியா யுலிசிஸ் எல்ஸ்ட்ராடாவுடன் காதலுறவு கொண்டிருந்தார் என ஐயம்திரிபற நிலைநாட்டப்பட்ட பின்பும், சே குவேரா-தானியா காதலுறவை இட்டுக்கட்ட வேண்டிய அவசியம்தான் என்ன? காரணம் ஒன்றே ஒன்றுதான். உளவுத்துறைப் பயிற்சியிலும் உளவு பார்ப்பதிலும் தாம் மட்டுமே கெட்டிக்காரர்கள் எனும் மமதையை தானியா என்றென்றும் உடைத்தெறிந்திருக்கிறார்.

விடுதலைப் போராட்டங்களை உளவறிந்து சிதைத்து, லுமும்பா முதல் சே குவேரா வரை விடுதலைப் போராட்டத் தலைவர்களையும் உளவறிந்து கொன்ற அமெரிக்க உளவுத்துறைக்கே துர்சொப்பனமாக, அதுவும் பெண்ணாக இருந்து ஏகாதிபத்தியப் பெருவல்லமையின் மீது காறி உமிழ்ந்த புரட்சியாளராக தானியா திகழ்கிறார். அதுவும், வட அமெரிக்காவின் செல்வாக்கு மண்டலத்தினுள், அவர்கள் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அதே பொலிவியாவினுள் இருந்தபடி மூன்று ஆண்டுகள் அவர்களது கண்களில் மண்ணைத் தூவியபடி வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார் தானியா. இறுதி வரையிலும் தானியாவின் அடையாளத்தை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கெரில்லா இயக்கத்திற்குத் துரோகமிழைத்தவர்களே தானியாவைக் காட்டிக் கொடுத்தார்கள். இதுவே தானியாவின் மீது தீராத ஆத்திரத்தை அவர்களிடம் தோற்றுவித்திருக்கிறது. அமெரிக்க-மேற்கத்திய உளவுத்துறை என்பது என்றும் பெண்களின் பாலுறவுக் கவர்ச்சியை தமது எதிரிகளுக்கு எதிரான ஆயுதமாகவே பாவித்திருக்கிறது. பாலுறவுக் கவர்ச்சி உள்பட பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல 601 முறை தாம் முயற்சி செய்ததாக சிஐஏ தெரிவித்திருக்கிறது. தானியாவிடம், அவரது புரட்சிகர சர்வதேசிய உணர்விடம், உலகின் மிகப்பெரும் வல்லரசுகள் தோற்றிருக்கின்றன. இந்த வரலாற்றுத் தோல்வியை அவர்களால்; சகித்துக் கொள்ளவே முடியவில்லை. ஆகவே தான் இன்றும் ஜேம்ஸ் பான்ட்டையும் உளவறியும் காமக் கணைவீசம் கவர்ச்சிக் கன்னிகளையும் உலகின் மீது ஏவிக் கொண்டிருக்கும் மேற்கத்திய அரசுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதே ஆயுதங்களைத்தான் தானியாவும் கொண்டிருந்துதான் வென்றார் எனும் அவதூறுகளை ஏவி, அவரைக் கொச்சைப்படுத்த சளையாது முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

தானியா தனது தகத்தகாயமான எல்லைகள் கடந்த விடுதலை வேட்கையினால் அதனையும் வென்று உலகப் புரட்சியாளர்களின் மனங்களில் நிரந்தரமாகக் கனன்றபடியிருக்கிறார்..

ஆதாரங்கள்

1. Haydée Tamara Bunke Bider: The woman who died with Che Guevara: an interview with Benigno by Cristine Tomey: Sunday Times: 10 August 2008 

2. Tania, the Women who loved Che Guevara: Jose Antonia Freidl Zapata: 1997

3. Tania: Undercover with Che Guevara in Bolivia: Book Review by Bob Briton: The Guardian: 26 January 2005

4. Mother fights Che film over 'lover' claims: By Tony Paterson in Berlin and Oliver Poole in Los Angeles: The Daily Telegraph: 17 Mar 2002

5. Campanero: Life and death of Che Guevara: Jeorge Castaneda: 1998

6. Tania: Undercover with Che Guevara in Bolivia: Ulises Estrada: Ocean Books: Australia: 2005

12/8/2011 3:35:05 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்