தாமரை காருண்யன்
மனந்திறந்து பேசுவோமே -7
அண்மையில் 'நந்திக்கடலை நோக்கி நடத்தல்' எனும் தலைப்பில் நிலாந்தன் எழுதிய கட்டுரையொன்று பொங்குதமிழில் வெளியாகியிருந்தது.
தலைவர் பிரபாகரனின் ஆவி கொழும்பு ஆட்சியாளர்களைத் துரத்த ஆரம்பித்து விட்டது எனவும் 'இனி அவரவர் அவரவருக்கேயான நந்திக்கடலை நோக்கி நடக்க வேண்டியதுதான்' என்ற எதிர்வுகூறலுடன் அவரது கட்டுரை நிறைவுற்றிருந்தது.
இப் பத்தி எழுதப்படும்போது இலண்டனில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவுக்கு எதிராகத் தமிழ் மக்கள் நடாத்திக் கொண்டிருந்த எதிர்ப்புப் போராட்டங்களையும் இந்த ஆவி உதாரணத்துடன் பொருத்திப் பார்க்க முடியும்.
ஆனால் இது தமது நலன்கள் என்ற இலாபநட்டக்கணக்கின் பாற்பட்டு இயங்கும் அனைத்துலக அரசுகளின் நன்மைக்காக மகிந்தரை நோக்கி ஏவிவிடப்படும் ஆவி அல்ல. மாறாக முள்ளிவாய்க்காலிலும், வன்னிப் பெருநிலமெங்கும், தமிழீழப் பரப்பெங்கும் கருக்கி வீழ்த்தப்பட்ட நம்மவர்களுக்காக நீதி கேட்டுத் துரத்தும் ஆவி.
உலகின் தலைசிறந்த ஆயுதப் போராட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை வெற்றி கொண்ட 'சிங்கத் தலைவன்' என்ற இறுமாப்புடன் வீரப்பிரதாபம் பேசும் அரச தலைவனாக அனைத்துலக அரச தலைவர்களைச் சந்திக்க விரும்பும் மகிந்தரை 'போர்க்குற்றவாளியே திருப்பிப் போ' என்ற தமிழ் மக்களின் குரல் கலைத்துத் துரத்துகிறது.
அனைத்துலக சமூகம் முன்பு, அதுவும் பிரித்தானிய மகாராணியின் வைரவிழா நிகழ்வுகளின்போது மனிதத்துவத்துத்துக்கு எதிரான பெரும் குற்றவாளி என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாவது மகிந்தரை பெரும் அவமானத்துக்கு உள்ளாக்கும். கடும் சினத்துக்கும் உள்ளாக்கும். விழாநிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட படங்களில் காணப்படும் அவரது களையிளந்த முகம் இந்த அவஸ்தையினை நன்கு வெளிப்படுத்துகிறது.
மகிந்தருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இக் கோபம் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல பிரித்தானியா அரசுக்கும் மேற்குலகத்துககும் எதிராகவும் திரும்பும்.
பிரித்தானிய அரசு நினைத்திருந்தால் இந்த எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றே மகிந்தர் எண்ணியிருப்பார். மேற்குலகில் இருக்கும் ஜனநாயகவெளியினை மேற்குலக அரசுகள் விழுமியங்களின் அடிப்படையில் இல்லாது தமது நலன்களின் அடிப்படையிலேயே பயன்படுத்துகின்றன என்பதே மகிந்தரின் கணிப்பாக இருந்திருக்கும்.
இதனால் பிரித்தானியாவில் தமிழ் மக்களால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை தனக்கெதிரான மேற்குலகத்தின் சதியாகவே மகிந்தர் அர்த்தம் கொண்டிருப்பார்.
மகிந்தரிடமும் தலைவர் பிரபாகரனிடம் இருந்த குணவியல்புகளில் சில பொதுத்தன்மை உண்டு. இவற்றில் ஒன்று வெளிப்புறச் சத்திகளின் அழுத்தங்களுக்குப் பணிவதில்லை என்ற நிலைப்பாட்டை அடிப்படையில் கொண்டது.
இராஜதந்திர நோக்கத்திற்காக வளைவது என்பது வேறு. பணிதல் என்பது வேறு என்பதில் இவர்கள் இருவருக்குமிடையே ஒத்த அணுகுமுறை உண்டு.
தமது நோக்கத்தில் அல்லது நிலைப்பாட்டில் இருந்து வழுவாது அனைத்துலக அழுத்தங்களைச் சந்திப்பதற்காக சில விட்டுக்கொடுப்புகளைச் செய்து வளைவதற்கு இவர்கள் தயாராக இருந்தார்களேயன்றி தமது நிலைப்பாடுகளைக் கைவிட்டு பணிவதற்கு இவர்கள் தயாராக இருக்கவில்லை.
அடிப்படை நிலைப்பாடுகளைக் கைவிடாது இவ்வாறு வளைவதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் ஒரு win-win சூழல் தோற்றும் பெற்றால் - அழுத்தங்களைத் தருபவர்களுக்கும் அழுத்தங்களுக்கு உள்ளாகுபவர்களுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டால் - முரண்பாட்டு நிலை கட்டுக்குள் வந்து விடும். இல்லாவிடின் இதன் தர்க்கரீதியான வளர்ச்சியில் முரண்பாடு முதிர்ச்சி கண்டு இதன் விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.
இத்தகைய உடன்பாடுகள் எட்டப்படாவிட்டாலும் சில சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வளைந்து பின்னர் முறித்து தமது இலக்கிகை நோக்கிப் பயணிக்கும் சூழலும் வாய்ப்பதுண்டு.
இதற்கு உதாரணமாக, 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் விடுதலைப்புலிகள் அமைப்பின் விருப்பத்துக்கு முரணாக கைச்சாத்திடப்பட்டு இந்திய இராணுவமும் தமிழர் தாயகப் பகுதிகளில் வந்திறங்கிய பின்னர் தலைவர் பிரபாகரன் எடுத்த அணுகுறையினைக் குறிப்பிடலாம்.
1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி இந்தியாவில் இருந்து தமிழீழம் வந்திறங்கிய தலைவர் பிரபாகரன் முக்கிய தளபதிகளையும் போராளிகளையும் அழைத்துக் கூறிய முதல் வார்த்தை இதுதான்.
'இப்ப உள்ள பிரச்சினை வளையிறதா அல்லது முறியிறதா எண்டதுதான். நான் வளையிறதெண்டு முடிவெடுத்திருக்கிறன்'.
இவ்வாறு வளைந்து பின்னர் முறித்து தனது இலக்கினை நோக்கிப் போகமுடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான நிலைமைகளும் இருந்தமையினை இந்தியத் தலையீடு காலத்தில் பிரபாகரன் நிகழ்த்திக் காட்டியிருந்தார்.
ஆனால் இந்த நிலைமையும் வாய்ப்பும் இறுதிப்போர்க்காலத்தில் கிட்டவில்லை.
இறுதிப்போர்க்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவரீதியான அழிக்கப்படுவதற்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தியது மேற்குலகத்துடன் புலிகள் இயக்கம் ஒரு win-win சூழலை எட்ட முடியாது போனமைதான்.
இவ்வாறு எட்டுவதாயின் வளைவது என்ற எல்லையினைக் கடந்து பணிதல் என்ற நிலையினை எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும் நிலை இருந்தது. இதற்கு பிரபாகரன் தயாராக இருக்கவில்லை.
இப்போது நடைபெறுவது மகிந்த காண்டம். பிரபாகரனை மகிந்தரை வைத்துக் கையாண்ட மேற்குலகம் இப்போது மகிந்தரை நேரடியாகக் கையாள ஆரம்பித்திருக்கிறது.
பிரபாகரனுக்கு தமிழீழத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் கைவிட்டுத்தான் மேற்குலகுடன் சமரசம்காண முடியும் என்ற நிலை எழுந்தபோது அந்த வழியே பயணிக்காது வேறு வழியில் பயணம் செய்ய அவர் முயன்றார். இப் பயணத்தில் வெற்றியீட்டும்போது மீண்டும் மேற்குலகினை தமிழருக்கு சாதமாக நிலையில் இருந்து அணுக முடியும் என அவர் கருதினார்.
ஆனால் இப்போரில் மேற்குலகம் நடுநிலைமை வகிக்கவில்லை. சிறிலங்காவுக்கு உறுதியான ஆதரவினை வழங்கியது. விளைவு முறிந்து போகவேண்டிய நிலையாகி விட்டது.
இன்றைய நிலையில் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய இந்த மூன்று பெரும் சக்திகளையும் சமரசம் செய்தவாறு நிலைமைகளைக் கையாளவே மகிந்தர் விரும்புகிறார். இதில் மகிந்தரின் இயல்பான தெரிவு (default chioce) சீனா தான். சீனாவிடம் இருந்து இவரது அரசியலை அல்லது ஆளுமையினைப் பாதிக்கும் அழுத்தங்கள் எதுவும் வருவதில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் கையாளும் அணுகுமுறைகள் அப்படியதானதல்ல.
தற்போதய சூழலில் மேற்குலக வியூகத்தில் இருந்து தப்பிக்க மகிந்தருக்கு இருக்கும் முக்கியமான வழி சீனாவைக் கைவிடுவதுதான். ஆனால் மகிந்தர் இவ்வாறு செய்ய விரும்பவில்லை. மகிந்தர் விரும்பினாலும் இனி சீனா இதற்கு இடம் கொடுக்க மாட்டாது.
மேற்குலகத்தைப் பொறுத்தவரை சிறிலங்கா ஜனநாயக மற்றும் மனித உரிமை விழுமியங்களை மதித்துச் செயற்படுகிறது என்பதனையும் மகிந்தர் செயற்படுத்திக் காட்டவேண்டும். இது மேற்குலகத்தால் மகிந்தர் மீது அழுத்தம் போடுவதற்கு பயன்படுத்தப்பட்டாலும் இது மேற்குலக சிவில் சமூக அக்கறைக்குரிய விடயம்.
மேற்குலக அரசுகளும் தாம் புரியும் போர் குறித்து பச்சையாக உண்மைகளை தமது மக்களுக்கும் உலகத்துக்கும் கூறுவதில்லை. தமது போருக்கான காரணங்களாகவும் பொருளாதார நலன்களைக் கூறுவதில்லை. தமது நாட்டின் பாதுகாப்பு, உலக சமாதானத்தின் மீதான அக்கறை, மனித விழுமியங்களைப் பாதுகாத்தல் போன்றவையே காரணங்களாகக் கூறப்படுபவை.
உதாரணமாக, ஈராக்கின் சதாம் மீது 2003 இல் தொடுத்த போரை எண்ணையுடன் தொடர்புபடுத்தி அமெரிக்க அரசு பேசவில்லை. சதாமிடம் நாசகார ஆயுதங்கள் இருப்பதான பொய்யான பிம்பத்தினை வெளிப்படுத்தியே அமெரிக்க அரசு போருக்கான நியாயங்களைக் கூறியது. பொருளாதார நலன்களுக்காகப் போர் என்பதனை மேற்குலக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இதே போன்றதொரு அணுகுமுறையினை மகிந்தரும் எடுத்துப் பார்த்தார். தாம் நடாத்தியது போர் அல்ல. மனிதாபிமான நடவடிக்கை என்றார். இது சிங்கள மக்களுக்காக கூறப்பட்டதல்ல. அனைத்துலக சமூகத்துக்காகவே கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் போர் நடாத்தப்பட்ட முறை தொடர்பான குற்றச்சாட்டுக்களைக் சமாளிக்க இது பெரியளவில் உதவவில்லை.
தற்போது மகிந்தர் மேற்குலகத்திடம் வளையப்போகிறாரா அல்லது முறியப்போகிறாரா என்பது பலரும் அக்கறையுடன் கவனிக்கும் விடயம்.
நிலாந்தன் தனது கட்டுரையில் இதனை வெளிப்படுத்தியுள்ள விதம் மகிந்தர் முறியப்போகிறார் என்பதனை கட்டியம் கூறுகிறது. இதனை நம்பிக்கையுடன் மகிந்தர் முறியும் நாள் தமிழ் மக்கள் விடுதலை அடையும் நாள் என மகிழ்வோரும் ஆறுதல் அடைவோரும் நம்மிடையே உள்ளனர்.
இங்கு முக்கியமான ஒரு கேள்வியினை எழுப்ப வேண்டியுள்ளது. மகிந்தரின் வீழ்ச்சி சிங்களத்தின் வீழ்ச்சியாகி விடுமா? தமிழர்களின் வெற்றியாகி விடுமா?
இதில் தமிழர் தேசத்துக்கும் சிங்கள தேசத்துக்கும் இடையே ஒரு பெரும் அடிப்படை வேறுபாடு உள்ளது.
பிரபாகரன் முறிந்தபோது தமிழர் தேசம் மகவும் பலவீனப்பட்டுப்போனது. ஆனால் மகிந்தர் முறியும் போது சிங்கள தேசம் பலமடையப் போகிறது. ஏனெனில் சிங்கள தேசத்தின் கைகளில் ஒரு அரசு உள்ளது.
நான் கடந்த பத்தியில் சிங்கள அரசின் தன்மையினைப் பற்றிக் குறிப்படும்போது சிங்கள அரசு தனக்கு நெருக்கடி ஏற்படும்போது ஒரு ஆட்சி மாற்றத்துக்கூடாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது எனக் குறிப்பிட்டிருந்தேன்.
மகிந்தர் மேற்குலகத்திடம் பணியாவிடினும்கூட அனைத்துலக அரங்கில் போர்க்குற்றவாளியாக மகிந்தரைத் தண்டிக்கும் வாய்ப்பு இலகுவில் கிட்டப் போவதில்லை. சீனாவும் ரஸ்யாவும் மகிந்தரைப் பாதுகாக்கும்.
இதனால் மகிந்தர் பணியாவிடின் ஒரு ஆட்சிமாற்றத்தை நோக்கி சிறிது சிறிதாக முன்னேறுவதே மேற்குலகின் திட்டமாக இருக்கிறது. இது இப்போது வெற்றியளிக்காவிடினும் காலப்போக்கில் போர்வெற்றி மயக்கம் தணிந்து பொருளாதாரா நெருக்கடியும் அதிகரிக்கும் போது வெற்றி தரலாம்.
மகிந்தர் வீழ்ந்து ஒரு ரணிலோ அல்லது சுனிலோ ஆட்சிக்கு வருவது சிங்களத்தின் வீழ்ச்சியாகிவிடாது. மாறாக சிங்களம் தற்போது சந்திக்கும் நெருக்கடியில் இருந்து விடுவிக்கப்பட்டு புதுப்பிக்கப்படும்.
பின்னர் புதிய ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினையினை சிங்கள இனவாத அடிப்படையிலேயே கையாள்வார்கள்.
இதனால் மகிந்தரின் வீழ்ச்சி சிங்களத்தின் தோல்வியாகவோ தமிழரின் வெற்றியாகவோ ஆகி விடாது.
தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தினை, மகிந்தரை எதிர்த்துச் செயற்படுவதற்கு நம்மிடம் தார்மீக நியாயம் இருக்கிறது. நமது இந்த நிலைப்பாடு மேற்குலக அரசுகளின் நலன்களுடனும் தற்போது ஒத்துப் போகிறது. ஆனால் நமது விடுதலை நோக்கிய பயணத்தில் நாம் குறிவைக்க வேண்டியது ஆட்சியாளர்களையா? அல்லது அரசையா? நாம் ஆட்சியாளர்களை மட்டும் குறி வைப்பது விவேகமான அணுகுமுறையாக இருக்கப் போதில்லை.
இதனால் மகிந்தரை வீழ்த்துவதற்கு மேற்குலகத்துக்கோ அல்லது இந்தியாவுக்கோ தமிழர் தரப்பு உதவுவதாக இருந்தால் இது நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது. இக்கூற்று தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கே கூடுதல் பொருத்தம்.
வெறுமனே தமிழீழத்தைக் கைவிட்டு விட்டோம். நாடு பிரியாத தீர்வுக்கு நாங்கள் தயார். மகிந்தர் அரசாங்கம் தீர்வுக்குத் தயார் இல்லை என அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்துவதால் எந்தக் கருமமும் ஆகப் போதில்லை.
மகிந்தரை பதவியகற்றும் மேற்குலக - இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு இலவசமாகச் சேவை செய்வதில்தான் இது போய் முடியும். புதிய ஆட்சியாளர்களும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினை குறித்து எதுவுமே உருப்படியாகச் செய்யப் போதில்லை. இவர்களும் இனவாதக் குட்டையில் ஊறிய மட்டைகள்தானே.
சிறிலங்காவின் சிங்கள இனவாதச் சூழலில் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்கு இரண்டு தர்க்கரீதியான தீர்வுகளே உள்ளன. ஒன்று சுதந்திரத் தனிநாடு- தமிழீழம் மற்றையது சிங்கள தேசத்தின் அடிமைக் குடிமக்களாகத் தமிழ் மக்கள் வாழ்வது.
தமிழர்கள் அடிமைகளாக வாழ்வதற்கு எந்தவொரு தமிழர் அரசியல் அமைப்பின் தேவையும் அவசியம் இல்லை. தமிழர் தேச அரசியல் அமைப்புக்களின் தேவை சுதந்திரவாழ்வுக்கான போராட்டத்துக்காகவே.
தருவதைக் கேட்டுப் பெறுவதற்கும் நமக்கு அரசியல் அமைப்புக்கள் தேவை இல்லை. தன்னார்வத் தொண்டர் நிறுவனங்கள் போதும்.
இதனால் கூட்டமைப்பு சிறிலங்கா அரசு மறுசீரமைப்புக்குள்ளானால் அன்றி எந்தவிதமான அதிகாரப் பகிர்வுக்கும் - அது எந்த ஆட்சியாளர்களின் கீழும் வராது என்பதனை வெளிப்படுத்தி பகிரங்கமாக அரசு மறுசீரமைப்பைக் கோர வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகளை மேற்குலகும் இந்தியாவும் நிராகரிக்க முடியாது இருந்தால் போதும். சிங்களம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
தற்போதய காலகட்டத்தில் கூட்டமைப்பு பின்வரும் அரசு மறுசீரமைப்பு கோரிக்கைளை முன்வைத்தல் அவசியமானது.
1. சிறிலங்கா ஒரு மத சார்பற்ற அரசாக மாற்றம் செய்யப்படவேண்டும்.
2. இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த தொடர் பகுதி ஈழத் தமிழர் தேசத்தின் தாயகம் என அரசியலமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்
3. ஒற்றையாட்சி முறை அகற்றப்படவேண்டும்.
இக் கோரிக்கைகள் அனைத்துலக சமூகத்தால் நிராகரிக்கபட முடியாதவை. எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் முன் நிபந்தனையாக அமையக்கூடியவை. சிறிலங்காவில் உள்ள அரசியல் வெளிக்குள்ளும் முன்வைக்கப்படக்கூடியவை.
இந்த மூன்று கோரிக்கைகளையும் சிங்களம் ஏற்றுக் கொள்ளாது. இவை ஏற்கப்படாத நிலையில் ஒரு தீரவை ஏற்றுக் கொள்வதென்பது அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்வதுதான்.
இக் கோரிக்கைகைளை உறுதியாக முன்வைத்தால் ஈழத் தமிழ் மக்களின் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்குத் துணைசெய்வதாக அமையும்.
கூட்டமைப்பு சுதந்திர வாழ்வுக்கு வழிகாட்டப்போகிறதா? அல்லது அடிமை வாழ்வுக்கு வழி சமைக்கப் போகிறதா?