Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கலப்பின உலகமயமாக்கலும் பூமியை மீட்கவல்ல புதிய தேசியவாதமும்

கலப்பின உலகமயமாக்கலும் பூமியை மீட்கவல்ல புதிய தேசியவாதமும்
மு.திருநாவுக்கரசு

 

இன்று இந்த உலகம் புதிய அறிவியல், அரசியல், பொருளாதார, கலாச்சார யுகத்திற்குள் நுழைந்துள்ளது. தேசியவாதம் முடிவடைந்து விடவில்லை. ஆனால் நவீன தேசியவாதம் முடிவடைந்து புதிய தேசியவாதம் பிறந்துள்ளது.

இந்த புதிய தேசியவாதமானது ஆதிக்க புதிய தேசியவாதம், ஆதிக்கத்திற்கு உட்படும் புதிய தேசியவாதம் என இரு கூறுகளாக உள்ளது. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பொருதியும் அதேவேளை ஒன்றுடன் ஒன்று இணைந்தும் செயற்படும் ஒருவித இயக்கப் போக்கை கொண்டுள்ளன. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டதும், ரஷ்யா கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது மட்டுமன்றி, மத்திய கிழக்கிற்கு படையை அனுப்பி தன் ஆளுமையை நிரூபித்ததும், சீனா தென்சீனக் கடலில் மட்டுமன்றி தன் பிரதேசத்தைத் தாண்டி இந்து சமுத்திரத்தை நோக்கி விரிவடைவதும், இன்றைய அமெரிக்க ஜனாதிபதி தீவிர அமெரிக்க தேசியவாதத்தின் மீது காலூன்றி அங்கு எல்லையில் பெருமதில் எழுப்பப்போவதிலிருந்து வெளிநாட்டவர்களின் இருப்பை கட்டுப்படுத்த முயல்வதும் என மேற்படி வல்லாண்மை கொண்ட அரசுகள் தமது பாதையில் ஒரு புதிய தேசியவாதத்தை முன்னெடுக்கின்றன. அதேவேளை ஒடுக்கப்படும் இனங்கள், அரசுகள் தமக்கான ஒரு தற்காப்பு புதிய தேசியவாதத்தை வளர்க்க வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. 

இது சம்பந்தமான கோட்பாடுகளையும் நடைமுறை சார்ந்த விடயங்களையும் இச் சிறிய கட்டுரையில் விபரிப்பது சாத்தியமில்லை. அடுத்த வெளிவரவுள்ள எனது நூல் இது சம்பந்தமான கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் விளக்க முற்பட்டுள்ளது. ஆனால் இக்கட்டுரையில் இப் புதிய தேசியவாதம் தொடர்பான சில குறிப்புக்களை மட்டுமே கூறமுடியும்.

பொதுவாக இந்த யுகத்தை நவ உலகமயமாக்கல் யுகமென அழைத்தாலும் குறிப்பாக மரபணு கலப்பின உலகமயமாக்கல் யுகம் (Hybrid Globalization Era) என்று அழைப்பதே மிகவும் பொருத்தமானது.

இந்த உலகின் இன்றைய வாழ்நிலை, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என்பன சார்ந்த போக்கை அடிப்படையில் நிர்ணயிக்க வல்லவையாய் இருவகை விஞ்ஞான தொழில்நுட்பம் உள்ளன. ஒன்று மரபணு தொழில்நுட்பம் (Genetic Engineering). மற்றையது E-Technologies எனப்படும் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்கள் என்பனவாகும்.

கலப்பின உலகமயமாக்கலும் பூமியை மீட்கவல்ல புதிய தேசியவாதமும்

இவை இரண்டில் மரபணு தொழில்நுட்பம்தான் பிந்தியதும், உணவு உற்பத்தி, கலாச்சாரம் மற்றும் வாழ்நிலை என்பனவற்றில் வேகமான பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். ஆதலால் அத்தகைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள 'கலப்பின' (Hybrid) உற்பத்தி போக்கின் பெயரால் இந்த யுகத்தை மரபணு கலப்பின உலகமயமாக்கல் யுகம் (Hybrid Globalization Era) என்று அழைக்க முடியும்.

அதேவேளை மேற்படி இரு தொழில்நுட்பங்களும் தொடர்வண்டி இரும்புப் பாதையைப் போல சமாந்தரமாக பயணிக்கின்றன என்பதையும் கருத்தில் எடுக்க தவறக்கூடாது.

மூச்சுவிடுவது கலப்பினம் என்றும் – Hybrid, பேசுவது கைபேசி என்றும் - Hand Phone என்றும் காணப்படும் அளவிற்கு இவை இரண்டும் வாழ்நிலையை, அரசியலை மற்றும் கலாச்சாரம் என்பனவற்றை நிர்ணயிக்கின்றன.

கலப்பின உலகமயமாக்கலும் பூமியை மீட்கவல்ல புதிய தேசியவாதமும்

அரிசி கலப்பினம், மாவு கலப்பினம், தானியங்கள் கலப்பினம், காய்கறிகள் கலப்பினம், பறவை, கால்நடை, இறைச்சி வகைகள் கலப்பினம். இப்படி மனிதன் உண்பதும், உட்கொள்வதும் ஆகிய அனைத்துமே கலப்பினமாகிவிட்டது. இந்தவகையில் இந்த உலகம் முற்றிலும் கலப்பின உலகமயமாக்கலுக்கு உட்பட்டிருக்கிறது.

மரபணு தொழில்நுட்பமானது மனிதகுல வரலாறு கண்ட மிகப்பெரும் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவியல் சாதனையாகும். விஞ்ஞான-தொழில்நுட்பம் மனிதனுக்கு சேவகனாய் இருக்க வேண்டுமே தவிர மனிதன் விஞ்ஞான-தொழில்நுட்ப பண்டங்களின் பகுதியாகிவிடக் கூடாது. மனிதன் இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள் போல் ஆகமுடியாது. இயந்திரம் மனிதனின் ஒரு சாதனமே தவிர மனிதன் இயந்திரத்தின் பகுதியல்ல.

ஆனால் இன்று மரபணு தொழில்நுட்பத்தின் வாயிலாக உற்பத்தியாகும் அநேகமான கலப்பின உணவுப் பொருட்கள் மனிதயின வாழ்விற்கும் இயற்கையின் ஆயுளுக்கும் சவால் விடுவனவாய் அமைந்துள்ளன.

விஞ்ஞான-தொழில்நுட்பம் விரல்விட்டு எண்ணக்கூடிய உலகளாவிய சில பண முதலைகளின் கைகளில் சிக்குண்டுள்ளது. பணத்தை உற்பத்தி பண்ணுவதே அவர்களின் பிரதான நோக்கம். பணத்தை உற்பத்தி பண்ணுவதற்காக அவர்கள் கலப்பின பண்டங்களை உற்பத்தி பண்ணுகிறார்கள். இவை இயற்கைக்கும் வாழ்விற்கும் ஊறுவிளைவிப்பதைப் பற்றியும் சவாலாய் அமைவதைப் பற்றியும் அவர்களுக்கு சிறிதும் கவலை கிடையாது.

இயற்கையின் நியதியின்படி இந்த பூமியின் இருப்பு இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். ஆனால் 100 கோடி ஆண்டுகளில் இந்த பூமி இயற்கையாகவே மனிதன் வாழ்வதற்கான தகுதியை இழந்துவிடும். அப்படியென்றால் இயற்கையின் நியதியின்படி மனிதன் இன்னும் 100 கோடி ஆண்டுகள் இந்த பூமியில் வாழமுடியும் என்பதே உண்மை. இயற்கையின் நியதியின்படி 100 கோடி ஆண்டுகளில் வெப்ப அதிகரிப்பின் காரணமாக பூமி முழுவதும் கடலாகி பின்பும் கடல்நீர் முற்றிலும் ஆவியாகி பின்பு பூமி முழுவதும் பாலைவனமாகி இறுதியில் அது சூரியனின் ஈர்ப்புவிசைக்கு உட்படும் போது பூமிக்கு சூரியன் சுடுகாடாய் ஆகிவிடும். இதனை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எமது பிரச்சனை அதுவல்ல.

மனிதனின் செயலால் பூமி தன் ஆயுளை எந்நேரத்திலும் இழந்திடலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. அணுவாயுத பிரயோகம், ஆட்கொல்லி கொள்ளை நோய் பரவல் போன்றன பூமியின் ஆயுளை பெரிதும் குறுக்க வல்லன. இந்தவகையில் பூமி இன்னும் 1000 ஆண்டில் உயிர்வாழும் தகுதியை இழந்துவிடக்கூடிய ஆபத்து உண்டென்று உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) தெரிவித்துள்ளார்.

இப்போது எமது முதற்தரப் பிரச்சனை மேற்படி பண முதலைகளின் தேவைக்காக அழிக்கப்படும் உயிரினங்கள், மனிதவாழ்வு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சார்ந்த விடயங்களை எவ்வாறு பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது என்பதும் இந்த பூமியின் உயர்வாழ்வை இயற்கையின் நியதிக்கு உட்பட்ட 100 கோடி ஆண்டுகள் வரை நீடித்துச் செல்வதும் என்பனதான்.

பணத்தை உற்பத்தி பண்ணுவதற்காக கலப்பின பண்டங்களை உற்பத்தி பண்ணுகிறார்கள். அந்த கலப்பின பண்டங்களை பரப்புவதற்காக பூமியின் பல பகுதிகளிலும் உள்ள அந்த அந்தப் பிரதேசங்களுக்கு இயற்கையாகவே பொருத்தமான தாவரங்கள், பயிரினங்கள், பறவையினங்கள், கால்நடையினங்கள் ஆகியனவற்றை அவர்கள் அழிக்கிறார்கள். தமது கலப்பினங்களை பரப்ப வேண்டுமென்றால் இயற்கையாகவே அப்பிரதேசங்களில் உள்ள பிராணிகளையும், பயிர்வகைகளையும் அழிக்க வேண்டும்.

மாட்டுகள் கலப்பினம், மாட்டு இறைச்சி கலப்பினம், ஆடுகள் கலப்பினம், ஆட்டிறைச்சி கலப்பினம், கோழிவகைகள் கலப்பினம், கோழி இறைச்சி கலப்பினம். இவற்றிற்கு அப்பால் பன்றியையும் மாட்டையும் கலப்பினம் செய்து ஒரு புதிய பன்றிமாட்டு இறைச்சியை உற்பத்தி பண்ணுகிறார்கள். இவை சந்தையில் வேகமாக பெருமளவு விநியோகம் செய்யப்படும். இதனால் சந்தை இவற்றின் வசமாகிவிடுகிறது. சந்தைகளில் மக்கள் இவற்றைத்தான் வாங்க முடியும். இவற்றுடன் சேர்ந்தே அவர்கள் நோய்களையும் கொள்வனவு செய்கிறார்கள்.

கலப்பின பண்டங்கள் பணத்தை மட்டும் உற்பத்தியாக்கவில்லை. கூடவே நோய்களையும் உற்பத்தி பண்ணுகின்றன. பின்பு இந்த நோய்களுக்கு மேற்படி பணமுதலைகள் மருத்து மாத்திரைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். இங்கு கலப்பின உணவும் பணத்தை உற்பத்தி பண்ணுகிறது. அந்த உணவுகள் உற்பத்தி பண்ணும் நோய்களும் பண முதலைகளுக்கு மேலும் பணத்தை உற்பத்தி பண்ணிக் கொடுக்கின்றன. ஆனால் மனிதனோ நோய்காவு வாகனமாகிறான். மனிதனின் ஆயுள் நோய்களுடன் போராட வேண்டியதாய்விடுகிறது.

இந்த கலப்பின உணவுப் பண்டங்களின் வளர்ச்சியானது தெரிந்தவரையில் நீரழிவு நோய்களை அதிகரிக்கிறது. கிட்டிய அண்மைக்காலத்தில் நீரழிவு நோய் இல்லாத மனிதனையே இந்த பூமியில் காணமுடியாது என்ற நிலையுள்ளது.

மேற்படி கலப்பின பண்டங்களின் தாக்கங்களை கண்டறிய இன்னும் காலம் தேவைப்படலாம். அவற்றை நாங்கள் 50-100 வருடங்களிற்தான் அடையாளம் காணலாம் என்றில்லை. அவற்றை காலப்போக்கிற்தான் காணமுடியும் என்ற நிலையில் பல நோய்களின் வரவை நாம் இன்னும் தெரிந்து கொள்ளமுடியாது இருக்கிறது. எப்படியோ இவை பூமியின் ஆயுளை இவை குறுக்கப் போகின்றன என்பது மட்டும் உண்மை.

இயற்கை தாவரங்களை அழிக்கிறார்கள், அந்தந்த பிரதேசங்களுக்குரிய உள்ளூர் பிராணிகளை அழிக்கிறார்கள். தங்களின் கலப்பின கோழியையும், கோழி இறைச்சியும், கோழி இறைச்சி கடைகளையும் உலகமயமாக்குகிறார்கள். இறைச்சி வகை, குளிர்பான வகை என எல்லாமே ஒருசிலரின் தேவைக்காக உலகமயமாக்கப்பட்டு பல்சுவை தன்மை கெடுக்கப்பட்டு உலகை ஒருசுவைக்கு உட்படுத்துவதுடன் உலகின் ஆயுளையும் சுருக்குகிறார்கள்.

இயற்கையின் மீது இவர்கள் புரியும் பலாத்காரம் புரிகிறார்கள், இயற்கையை கற்பழிக்கிறார்கள். இயற்கையை நாம் வசப்படுத்தலாமே தவிர அதன் மீது பலாத்காரம் புரியவோ அதை கற்பழித்து பூமியை பாழாக்கவோ அனுமதிக்க முடியாது.

விஞ்ஞானிகள் உன்னதமானவர்கள். ஆனால் அவர்களை மேற்படி பண முதலைகள் கொள்வனவு செய்துவிடுகிறார்கள். அவர்களை வைத்து கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டு அக்கண்டுபிடிப்புகளுக்கு உரிமங்களை பதிவு செய்து அவற்றை பண முதலைகள் தமது நிறுவனங்களுக்கான தனியுடைமையாக்கி அதன் மூலம் உலகம் முழுவதையும் தமக்கான சந்தையாக்கி விடுகிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட அந்த குறித்த விஞ்ஞானி அந்த பொருளை கண்டுபிடிக்காது விட்டால் இன்னொரு விஞ்ஞானி பின்னாளில் கண்டுபிடிப்பான். ஆனால் மேற்படி முதலைகளின் கையிலுள்ள விஞ்ஞானி கண்டுபிடித்த பொருள் தனியுடமையாக்கப்பட்டு ஒரு சில பணமுதலைகளின் தேவைக்காக உலகமயமாக்கப்படுகிறது. இது அனைத்து வகை கலப்பின பண்டங்களுக்கும் பொருந்தும்.

தற்போது பேரறிவாக காணப்படும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒருவகையில் சமசீரற்ற (Uneven) அறிவியல் வளர்ச்சியையே உருவாக்கியுள்ளன. அதாவது அறிவு ஒருசில பக்கத்தால் வீங்கிப் பெருத்துள்ளது. இது ஓர் ஆரோக்கியமான நிலையல்ல. எனவே அறிவியல் வளர்ந்திருக்கின்றது என்று செங்குத்தாக பார்க்காமல் அதன் பல்பரிமாணத்துடன் அதனை நோக்க வேண்டும். சமூகத்திற்கு பல்துறைசார் ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சிதான் தேவை. ஆனால் இந்த பணமுதலைகள் தாம் பணம் பண்ண தேவையான வகையில் அறிவியலை ஊதிப் பெருக்கவைத்து சமூகத்தை நோய்க்கூறாக ஆக்விடுகிறார்கள்.

இந்தவகையில் உலகம் இப்போது கலப்பின உலகமயமாக்கத்திற்கு உட்பட்டு அழிவை நோக்கி வளர்ந்து செல்கிறது. நாம் விஞ்ஞானத்தையும் அறிவியலையும் அதன் சாதனைகளையும் ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்காக விஞ்ஞானத்தால் செய்யப்பட்ட அணுகுண்டுகளை எம் தலைகள் மீது வீசுவதை அனுமதிக்க முடியாது.

எந்த விஞ்ஞானமும் அறிவியலும் அரசியலுக்கு கீழ்ப்பட்டது. அரசியல் என்பது அடிப்படையில் பொருளாதாரம் பற்றிய வித்தையாகும். ஒரு விஞ்ஞானி அணு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தாலும் அதை என்ன செய்வது எப்படி பிரயோகிப்பது என்பதை அரசியலே தீர்மானிக்கிறது. ஐன்ஸ்டீனும் அரசியலுக்கு கட்டுப்பட்டவரே.

ஆகவே நாம் விஞ்ஞான-தொழில்நுட்பங்களை கண்டபடி பணமுதலைகளின் தேவைகளுக்காக பிரயோகிக்கும் அரசியல் போக்கை அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு பிரதேசத்திற்குரிய மக்களும் அப்பிரதேசங்களைச் சார்ந்த இயற்கையோடும், தாவரங்களோடும், பிராணிகளோடும், மலையோடும், தரையோடும், கடலோடும், ஆற்றோடும் பின்னிப்பிணைக்கப்பட்டவர்கள். அவர்களின் வாழ்க்கை முறையும், பண்பாடும் அவற்றின் பின்னணியில் ஆக்கம் பெறுகின்றன.

ஆதலால் மனிதவாழ்வை, இயற்கையை, வாழ்நிலையை, பண்பாட்டை, உணவு பழக்கவழக்கங்களை, சுவை உணர்வுகளை அவ்வப்பகுதிக்குரியதாக பேணவேண்டுமே தவிர இவற்றை உலகமயமாக்க முடியாது. உலகமயமாக்கலால் இவற்றை அழிக்க அனுமதிக்கவும் முடியாது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 60 வீத உள்ளூர் பிராணிகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் உண்டு.

கடலும் - ஆறும், குன்றும் - குழியும், நீர்நிலைகளும், புல்லும்-பூண்டும், பூச்சியும்-புழுவும், கோவிலும்-குளமும்-வழிபாட்டு இடமும், மரமும்-செடியும், பற்யையும்-பறுகும், மழையும்-வெய்யிலும், காடும்-பாலைவனமும், பனியும்-குளிரும், பகலும்-இரவும், உழைப்பும்-உறக்கமும் என இவை போன்ற அனைத்தும் ஒன்றுதிரண்டு உருவாகும் ஒரு திரட்சிதான் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய வாழ்வும், தேசிய பண்பாட்டு அடையாளமும் ஆகும். இயற்கையின் சமநிலையைக் குழப்புவது ஒரு பெரும் குற்றச் செயலாகும். இயற்கையின் சமநிலையை பாதுகாக்க வேண்டும். 

இப்போது இவற்றை பாதுகாக்க ஒரு புதிய தேசியவாதம் அவசியமாகிறது. அதாவது மேற்படி ஒடுக்கும் அழிக்கும் போக்குக்கான புதிய ஆதிக்க தேசியவாதத்திற்குப் பதிலாக இவற்றை பாதுகாக்கவல்ல புதிய ஆக்கபூர்வ தேசியவாதம் தேவை. ஒடுக்குபவனும் அதற்கு வசதியாக தேசியவாதத்தின் அடிப்படையிலேயே ஒடுக்குமுறைகளை கட்டமைப்பு செய்கிறான். ஒடுக்கப்படுபவனும் அதற்கு எதிராக தேசியவாதத்தின் அடிப்படையிலேயே தன்னை ஒருங்கிணைத்து பலப்படுத்தி தன் வாழ்வையும், பண்பாட்டையும் மீட்க முடியும். தேசியம் சார்ந்த இயற்கை சூழலை பாதுகாப்பது என்பது பூகோளம் தழுவிய முழு இயற்கையையும் பாதுகாப்பது பற்றிய ஓர் அங்கமாகும்.

ஜல்லிக்கட்டின் பேரால் ஓர் அமைதியான வியப்புக்குரிய அரசியல் போராட்டம் ஒன்று இந்தியாவில், தமிழகத்தில் வெற்றிகரமாக இவ்வருடம் ஜனவரியில் நிறைவேறியது. பீட்டா (PETA – People for Ethical Treatment of Animals) எனப்படும் அமைப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அதனை உலகமயமாக்கல் அரசியல் பொருளாதார போக்கின் ஓர் அங்கமாகவும், அதன் சேவகனாகவும் வர்ணித்தார்கள். மிருகவதைக்கு எதிரானவர்கள் என்பதன் பேரில் உள்ளூர் மிருகங்களை அழிப்பவர்கள் என்ற கோஷங்கள் தொலைக்காட்சிகளிலும் மற்றும் கூட்டங்களிலும், மெரினா கடற்கரையிலும் எழுந்தன.

போராட்டம் உச்சநிலையை அடைந்திருந்த போது இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட கருத்து மிகவும் கவனத்திற்குரியது. அதாவது 'தமிழ்நாட்டின் செழுமையான பண்பாட்டைக் கண்டு நாம் பெருமை அடைகிறோம். தமிழ் மக்களின் பண்பாட்டு அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான அனைத்துவகை முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன' என்று கூறியதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை தமிழர் தம் பண்பாட்டின் மீது வைத்திருந்த பற்றுக்கான ஒரு குறியீடாக ஏற்றுக் கொண்டமை மட்டுமன்றி இப்போராட்டத்தை பண்பாட்டு மீட்சிக்கான அம்சமாகவும் அவர் அதை அங்கீகரித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

நாட்டின மாடுகளை அழிப்பதுடன் கூடவே நாட்டின நாய்களும் அழிக்கப்படுவதாக எழுத்தாளர் திரு.பா.செயப்பிரகாசம் தனது கட்டுரை ஒன்றில் கூறியிருப்பதன் சாராம்சம் பின்வருமாறு.

சைதாப்பேட்டையிலுள்ள தமிழக அரசின் உள்ளூர் நாய்வளர்ப்பு பிரிவுக் கூடத்தை மூடவேண்டுமென 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் பீட்டா ஒரு வழக்கை தாக்கல் செய்ததைப் பற்றியும் அதன்படி 2016 டிசம்பர் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அதனை மூடுமாறு உத்தரவிட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேற்படி ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போதும் இந்த விடயம் பெரிதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதாவது சிப்பிம், பாறை, கன்னி, ராஜபாளையம் என்ற வகையிலான உள்நாட்டு நாயினங்கள் அழிந்திடாது பாதுகாப்பதற்காக மேற்படி தமிழக அரசின் நாய் வளர்ப்பு கூடத்தில் நாய்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன என்று கூறப்பட்டுள்ளது. இந்த நாயினங்கள் உள்ளூர் உணவுகளை உண்பதுடன் அவை உள்ளூர் சுவாத்தியத்திற்கு பழக்கப்பட்டவையாகவும், மருந்து வகைகள் பெரிதும் தேவையற்றவையாகவும் காணப்பட்டன என்றும் இவ்வுள்ளூர் இன நாய்களை அழித்துவிட்டு வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்தால் அவற்றிற்கான விசேட தீவனங்கள் தேவைப்படும் என்றும், அப்படியே சுவாத்தியத்திற்கும், சூழலுக்கும் பொருந்தாத அந்நாய்களுக்கு அதிகம் மருத்துவப் பொருட்களும் தேவைப்படும் என்றும், இதனால் மேற்படி தீவனங்களையும், மருத்துவ பண்டங்களையும் விற்பதற்கான சதியின் ஒருபகுதியாக உள்ளூர் நாய் ஒழிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வீரியமுள்ள பிரதேசத்திற்கும், சூழலுக்கும் பொருத்தமான பிராணிகளை, தாவரங்களை பேணுவதும் பாதுகாப்பதும் வாழ்வியலுக்கான அடிப்படையாகும். இன்று கலப்பின உலகமயமாக்கலால் முழு மனிதவாழ்வும், பூமியும் அழிவை நோக்கி பிரயாணிக்கின்றன. இந்நிலையில் புதிய தேசியவாதத்தின் பெயரால் இவற்றை பாதுகாக்க வேண்டியுள்ளது.

புதிய தேசியவாதமானது இயற்கையை பாதுகாப்பது பற்றியது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றியது, சுத்தமான நீர்நிலைகளை பாதுகாப்பது பற்றியது, கடல்வளத்தை பாதுகாப்பது பற்றியது, காற்றை சுத்தமாக வைத்திருப்பது பற்றியது, பூமியை வெப்பமாகாது தடுப்பதற்கு அவ்வப்பகுதிக்குரியவர்களின் பணியைப் பற்றியது, அரசியல் பொருளாதார இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது, சர்வாதிகார அரசியலுக்கு எதிரானது, அனைத்துவகை மேலாதிக்கங்களுக்கும் எதிரானது.

அது குழந்தைகளுக்கு இயற்கையை பரிசளிக்க விரும்புகிறது. குழந்தைகளுக்கும், சிறியவர்களுக்கும் இந்த இயற்கையையும், வளங்களையும் முதன்மையாக்க விரும்புகிறது. முதியோர்களுக்கான பராமரிப்புக்கு முன்னுரிமை கோருகிறது, மனிதனின் வாழ்விற்கும், பண்பாட்டு பேணலுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் அது முன்னுரிமை கோருகிறது. மனிதனின் ஆக்க சக்தியை வளர்க்க தேவையான அனைத்தையும் அது உருவாக்க விரும்புகிறது. இரும்புக் கரங்கள் முன்னும், சப்பாத்து கால்களுக்குள்ளும் மனிதனின் ஆக்க சக்திகள் வளரமுடியாது.

ஈழத் தமிழர்கள் உள்ளும் புறமும் மேற்படி தாக்கங்களுக்கு உள்ளாகி அல்லற்படுகின்றனர். அவர்கள் மேற்படி ஆதிக்கங்களால் இரும்புச் சப்பாத்து போடப்பட்ட கால்களாய் சூம்பிப்போய் உள்ளனர். புதிய தேசியவாதத்தின் துணையால் அவர்கள் தமக்கான விமோசனத்தை தேடவேண்டியிருக்கிறது. இது உலகில் உள்ள ஏனைய இன மக்களுக்கும் பொருந்தும். எவ்வகையிலும் உள்ளும், புறமுமான மேற்படி ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் அல்லது உள்ளாகக்கூடிய உலகின் அனைத்து மக்கள் பிரிவுகளுக்கும் பொருந்தும்.

2/6/2017 3:46:03 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்