தாமரை காருண்யன்
மனந்திறந்து பேசுவோமே! - 1
ஈழம் தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? எனும் தொடரை பொங்குதமிழ் ஆரப்பிக்கப்படும்போது எழுத ஆரம்பித்து 25 தொடர் கட்டுரைகளை எழுதியிருந்தேன்.
இப்போது பொங்குதமிழ் தனது மூன்றாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும்போது 'மனந்திறந்து பேசுவோமே' எனும் பெயரில் இன்னுமொரு தொடருடன் உங்களைச் சந்திக்கிறேன்.
இத்தொடர் முன்னைய தொடரைவிட மாறுபட்டது. முன்னைய தொடர் ஒரு கருப்பொருளை மையமாக வைத்துத் தொடர்ச்சியாக எழுதப்பட்டது. இது அப்படியானதல்ல.
ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு விடயத்தைக் கருப்பொருளாகக் கொள்ளப் போகிறது.
அரசியல், சமூகம், பொருளதாரம், பண்பாடு போன்ற வெவ்வேறு விடயங்களைத் தேவைக்கேற்ப இத்தொடர் தனது பேசுபொருளாகக் கொள்ளும். எனினும் சமகால அரசியல் இத்தொடரில் கூடுதலான இடத்தைப் பிடித்துக் கொள்ளும்.
முன்னர் பாலு மகேந்திரா கதைநேரம் என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சித் தொடரை இயக்கியிருந்தார்.
வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் கதை நேரத்தில் காவியமாகியிருந்தன. ஒவ்வொரு தொடரும் தனித்தனிச் சிறுகதைகளை கொண்டதாக, தொடர்ச்சியாக வெளியாகி கதைநேரம் என்ற யெரில் தொடராகியிருந்தன.
இத் தொடரும் இத்தகையதொரு அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கிறது.
வெவ்வேறு விடயங்களைப் பேசியவாறே தொடர்ச்சியாகவும் திறந்த மனத்துடன் எழுதப்படுவதனாலும் 'மனந்திறந்து பேசுவோமே' என ஒரு பொதுத் தலைப்புடன் இது தொடராகிறது. ஒவ்வொரு பத்தியும் தனித்தனித் தலைப்பினைப் பெறுகின்றன.
ஓர் எழுத்தாளனின் கைகளில் உள்ள எழுத்தாணியின் பணி ஆக்கத்துக்கு உதவுவதுதான். அழிவுக்கு இட்டுச் செல்வதல்ல.
எனினும் சில விடயங்களில் தீயவையகன்று நன்மைகள் செழிப்பதற்கு – வரலாறு முன்னோக்கி நகர்வதற்கு - புத்தாக்கத்துக்கான அழிவு (Creative distrcution) தேவைப்படலாம்.
இங்கு எது நல்லது எது தீமையானது என்பது மிகுந்த பொறுப்புணர்வுடன் தீர்மானிக்கப்படவேண்டியவை. இவ்விடயத்தில் இலட்சியத்தினதும் அறநெறிகளதும் பங்கு தீர்மானகரமானது.
ஓர் எழுத்தாளனின் சொந்த விருப்பங்களில் இருந்து மட்டும் வரலாற்றில் நன்மை தீமை தீர்மானிக்கப்படுவதில்லை.
பலரும் பொதுவாகக் கருதுவதைப்போல் வெற்றி பெறுபவர்களின் கதைகள் மட்டும் வரலாறாகி விடுவதில்லை. சரி – பிழை, நன்மை - தீமை சமகாலத்தில் மட்டும் தீர்மானிக்கப்படுவதுமில்லை.
சோவியத்தின் ஸ்டாலின் தனது கட்சியின் அடுத்த தலைமுறையினராலேயே வரலாற்றில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு விட்டார்.
சீனாவின் மாவோ கலாச்சாரப் புரட்சியின் கொடுரம் காரணமாக அடுத்த தலைமுறையினரின் கண்டனத்துக்குள்ளானாலும் சீனப்புரட்சிக்கு அவர் வழங்கிய பங்களிப்புக்கு அடுத்த தலைமுறை மதிப்பளித்ததால் வரலாற்றுக் குற்றவாளியாகாது தப்பித்துக் கொண்டார்.
புரட்சியின் நாயகர்கள் என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட பெருந் தலைவர்களையே வரலாறு புரட்டிப் போட்டுக் கொண்டு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் புரிதலுடன்தான் இத் தொடர் எழுதப்படுகிறது.
***
அண்மையில் ஈழத்தின் சிவில் சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கைகள் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.
இது சிவில் - அரசியல் சமூகங்களுக்கிடையே மோதல் ஆரம்பிக்கின்றதா என்ற கேள்வியினையும் எழுப்புகிறது.
சிவில் சமூக அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை முன்னிறுத்துவதற்குப் பதிலாக சிவில் சமூகம் மீதான கண்டனங்களும் எழுப்பப்படுகின்றன.
இவ் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளவர்கள் மேட்டுக்குடியினைச் சேர்ந்தவர்கள் எனவும் ஈழத் தமிழர் தேசத்தின் உண்மையான சிவில் சமூகப் பிரதிநிதிகள் இவர்கள் இல்லை எனவும் சிலர் வாதிடுகின்றனர்.
சிவில் சமூகத்தின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த அரசியல் எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தது என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
சிவில் சமூக அறிக்கையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தவும் ஈழத் தமிழர் தேசத்தின் ஒற்றுமையினைக் குலைக்கவும் துணைபோகிறது என்ற கண்டனமும் எழுப்பப்படுகிறது.
இதேவேளை சிவில் சமூகத்தின் அறிக்கையினை ஆதரித்தும் வலுவான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய பத்தி சிவில் - அரசியல் சமூக உறவுகள் குறித்த சில கருத்துக்களைப் பதிவு செய்ய முனைகிறது.
முதலில் சிவில் சமூகம், அரசியல் சமூகம் என்பவற்றை இப் பத்தி எத்தகைய அர்த்தத்தில் பயன்படுத்துகிறது என்பதனைத் தெளிவுபடுத்தல் அவசியம்.
சிவில் சமூகத்தினை ஒரு பரந்த அர்த்தத்தில் அரசு (State), சந்தை (Market) குடும்பம் (Family) என்ற நிறுவனங்களுக்குள் உள்ளடங்காத ஒரு சமூகவெளி எனக் குறிப்பிடலாம்.
இங்கு குடும்பம் என்பது பொதுத்தளத்தில் (public sphere) இயங்காது பிரத்தியேகத் தளத்தில் (private sphere) இயங்கும் நிறுவனம் ஆக உள்ளது. ஏனைய இரண்டும் பொதுத்தளத்தில் இயங்குபவை.
சிவில் சமூகமும் பொதுத்தளத்தில் இயங்கும் ஒரு சமூகவெளிதான்.
இந்த அர்த்தத்தில் பார்த்தால் அரசு மற்றும் சந்தை போன்ற நிறுவனங்களுக்கு வெளியில் பொதுத்தளத்தில் இயங்கும் அனைத்து சமூகச் செயற்பாடுகளையும் நாம் சிவில் சமூக செயற்பாடுகள் என அழைக்க முடியும்.
இந்த பரந்த அர்த்தத்தில் பார்த்தால் கல்விச் சமூகம், தொழிற் சங்கங்கள், சமய நிறுவனங்கள், பல்வேறு வகையான மக்கள் அமைப்புக்கள், ஊடகங்கள் என இவை அனைத்துமே சிவில் சமூகம் என்ற வகைக்குள் உள்ளடங்கப்படக்கூடியவை.
சிலர் ஊடகங்களை அரசின் ஒரு பகுதியாக, அரசின் ஏனைய மூன்று அங்கங்களான சட்டவாக்க அலகு, நிர்வாக அலகு, நீதிபரிபாலன அலகு என்பவற்றுடன் நான்காவது அங்கமாக வர்ணிப்பதுமுண்டு.
அரசியல் சமூகம் என்பது ஏதோ ஒரு வகையில் அரசுடன் தொடர்புபடக்கூடியது. ஒரு நாட்டின் சட்டவாக்கத்திலோ அல்லது நிர்வாகத்தைத் தலைமை தாங்கி நடாத்துவதிலோ பங்கு கொள்ளக்கூடியது.
ஜனநாயக நாடுகளில் நாடாளுமன்றம் சட்டவாக்கத்துக்குப் பொறுப்பாக இருக்கும். அரசாங்கம் (Government) நிர்வாக அலகுக்குப் பொறுப்பாக இருக்கும்.
நாம் நடைமுறையில் அரசு, அரசாங்கம் என்பவற்றை ஒரே அரத்தத்தில் - அதாவது அரசாங்கத்துக்குரிய அர்த்தத்திலேயே அரசு என்பதனையும் பயன்படுத்துவதுண்டு.
ஆனால் அரசியல் அரத்தத்தில் அரசு, அரசாங்கம் என்பவை வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை. அரசின் ஓர் அங்கமாகத்தான் அரசாங்கம் உள்ளது.
அரசின் அங்கமாக அமையக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட அரசியல்கட்சிகள் அரசியல் சமூகத்தின் முக்கிய பங்காளிகளாக அமைவர்.
இவ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி நாட்டின் சட்டங்களை ஆக்கிக் கொள்கின்றனர். இவர்களின் பெரும்பான்மை பெறுபவர்கள் நாட்டின் நிர்வாக அலகினைப் பொறுப்பெடுத்து அரசாங்கத்துக்கு தலைமை தாங்குகின்றனர். நீதிபரிபாலன அலகு சட்டங்களுக்கமைய குடிமக்களும் அரசாங்கமும் நடந்து கொள்வதைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துகின்றன.
அதிகாரங்கள் ஒரே அலகில் குவிக்கப்படுவதால் ஒரு நாட்டுக்கு ஏற்படக்கூடிய தீமைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே அரசின் அதிகாரங்கள் இம் மூன்று அலகுகளுக்கிடையேயும் பகிரப்பட்டுள்ள நடைமுறையினை ஐனநாயக நாடுகள் பின்பற்றுகின்றன.
இத்தகைய பின்னணியுடன் அரசியல்கட்சிகளை, இயக்கங்களை நாம் அரசியல் சமூகம் என அழைக்க முடியும்.
இத்தாலிய அறிஞர் கிராம்சி தனது மேலாண்மை (Hegemony) தொடர்பான கோட்பாட்டை விளக்கும்போது சிவில் சமூகம் (Civil socirty), அரசியல் சமூகம் (Political society) என்பவற்றை அரசில் உள்ளடக்கி அரசு (State) என்பதற்கு ஒரு விரிந்த அர்த்தத்தைக் கொடுத்திருந்தார்.
ஆனால் இப் பத்தி சிவில் சமூகத்தை அரசில் உள்ளடங்காத பகுதியாகவே நோக்குகிறது.
சிவில் சமூகம் செழிப்பாக இருக்க வேண்டுமாயின் இயங்குவதற்கு போதிய வெளியும் சுதந்திரமும் இருக்க வேண்டும்.
இதனால்தான் ஐனநாயக நாடுகளின் சிவில் சமூகம் வீச்சுக் கொண்டதாகவும் சர்வாதிகார நாடுகளில் சிவில் சமூகம் சேடமிழுப்பவையாகவும் அமையக் காணப்படுகின்றன.
அரசியல்சமூகத்தின் ஆளுகைக்குள் சிவில் சமூகம் சிக்கிக் கொள்ளும்போது - இது விருப்பத்தின் பேராலோ அல்லது அழுத்தத்தின் பேராலோ – எந்தவகையிலாவது நிகழும்போது அங்கு அரசியல் சமூகத்தின் மேலாண்மை சிவில் சமூகத்தின்மீது நிறுவப்பட்டுவிடுகிறது.
இத்தகைய தருணங்களில் சிவில் சமூகத்தின் தனித்துவமான குரல் அடங்கி அரசியல் சமூகத்தின் குரலாகவே சிவில் சமூகத்தின் குரலும் ஒலிக்கத் தொடங்கிவிடுகிறது.
இத்தகைய ஒரு நிலையே தமிழீழ விடுதலைப் போரட்டத்தின் வளர்ச்சிப்போக்கில் ஏற்பட்டது. 1990களுக்குப் பிந்திய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் சமூகத்தின் தலைமைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டது.
ஈழத் தமிழர் தேசத்தின் சிவில் சமூகமும் - விருப்பத்திலோ அல்லது அழுத்தத்திலோ - விடுதலைப்புலிகளின் ஆளுகைக்கு உள்ளாகி விடுதலைப்புலிகள் அமைப்புடன் ஒத்து இயங்கியது.
இந்த ஆளுகைக்குள் உள்ளாக விரும்பாத சிவில் சமூகத்தின் பகுதி தன்னை பெரிதும் அமைதியாக்கிக் கொண்டது. (விடுதலைப் புலிகளுக்கு ஈழத் தமிழர் சமூகத்தின் மத்தியில் எதிர்ப்பே இருக்கவில்லை என்ற அர்த்தத்தில் இக் கருத்து இங்கு பதியப்படவில்லை. ஒரு பெரிய சட்டகத்தில் விடயங்களைப் பொருத்தி ஆராய்வதற்காக பிரதான போக்கே இங்கு குறிப்பிடப்படுகிறது)
ஆதனால் விடுதலைப்புலிகள் காலத்தில் சிவில் - அரசியல் சமூக மோதுகை நடைபெறுவதற்கான சூழல் இருக்கவில்லை. சிவில் சமூகத்தின் அழுத்தமும் அரசியல் சமூகத்தின் மீது விழவில்லை.
இந்த நிலைமை ஈழத் தமிழர் தேசத்துக்கு நன்மையினைத் தந்ததா என்பது இன்று நாம் எழுப்ப வேண்டிய ஒரு முக்கிமான ஒரு கேள்வி.
ஆமார்த்யா சென் (Amartya Sen) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசினைப் பெற்ற அறிஞர். இன்று உலகில் பலராலும் மதிக்கப்படும் ஒருவர்.
இந்தியாவிலும் சீனாவிலும் நிகழ்ந்த பட்டினிச் சாவுகள் குறித்து ஆய்வினைச் செய்த அவர், சுதந்திர இந்தியாவில் பட்டினிச் சாவுகள் நிகழாது தடுத்தமையில் அங்கு நிலவிய ஜனநாயகச் சூழலை சிலாகித்துப் பேசுகிறார்.
ஊடகங்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழல் இந்தியாவில் நிலவியமை பட்டினிச் சாவுகள் நிகழ்ந்துவிடாமல் தடுப்பதற்கான வாய்ப்பினைக் கொடுத்தது என்கிறார் சென்.
பட்டினிச் சாவுகள் தொடர்பான அயாயச் சங்கை முன்னரே வலுவானமுறையில் ஒலிக்க வைத்து இந்திய அரசாங்கத்தை முன்கூட்டியே எச்சரித்துப் போதிய முன்னேற்பாடுகளைச் செய்வதற்கான அழுத்தங்கள் வழங்கக்கூடிய நிலைமை நிலவியமை பட்டினிச் சாவுகளைத் தடுக்க உதவியது எனவும் சென் குறிப்பிடுகிறார்.
சீனாவில் இத்தகைய ஜனநாயகச் சூழல் இல்லாது இருந்தமை பட்டினிச் சாவுகளைத் தடுப்பதில் எதிர்மறையான விளைவையே தந்தன என்று சென் கருதுகிறார்.
சீனாவில் ஊடகங்கள் உட்பட்ட சிவில் சமூகத்தின் அழுத்தங்கள் இல்லாதபோது அரச இயந்திரத்தின் கணிப்பில் தவறுகள் நிகழும்போது முன்னேற்பாட்டு அபாய சங்கு ஒலிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் தவறிப்போகும் ஆபத்தைச் சென் சுட்டிக் காட்டுகிறார்.
அரச இயந்திரம் காலம் தாழ்த்தி நிலைமையினை உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தி தொடங்கும்போது நிலைமை கட்டை மீறிச் சென்று சீனாவில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் சென் தனது ஆய்வில் வெளிப்படுத்துகிறார்.
சென் பட்டினிச் சாவுகள் குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் தொடர்பாக ஆழமாகக் கவனத்தில் எடுக்க வேண்டும்
தற்போது ஈழத் தமிழர் தேசம் தனக்கென ஓர் அரசினைக் கொண்டிருக்கவில்லை. சிறிலங்கா அரசின் நாடாளுமன்றத்துக்கே ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் பிரதிநிதிகளை தற்போது அனுப்பிக் கொண்டிருக்கிறது.
ஈழத் தமிழர் தேசத்தின் இறைமை சிறிலங்கா அரசால் பறிக்கப்பட்டிருக்கிறது. இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் ஈழத் தமிழர் தேசம் தற்போது சிறிலங்காவின் சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசின் சகல அங்கங்களும் - நாடாளுமன்றமாக, அரசாங்கமாக, நீதிபரிபாலனமாக – எவையாக இருந்தாலும் சிங்கள பௌத்த நிறுவனங்களாக உள்ளன.
இதனால் சிறிலங்காவில் ஜனநாயகம் என்பது சிங்கள இனத்தின் சர்வாதிகாரமாகவே உள்ளது.
இத்தகைய ஒரு சூழலில்தான் தாயகத்தில் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் சமூகத்தின் தலைமைப் பொறுப்பு தமிழர் தேசியக் கூட்டமைப்பிடம் மக்களால் கையளிக்கப்பட்ருக்கிறது.
இதேவேளை ஈழத் தமிழர் தேசத்தின் சிவில் சமூகமும் தனித்துவமாகத் தனது குரலை எழுப்பத் தொடங்கியுள்ளதனை சமீபத்திய சிவில் சமூகத்தின் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இது சிவில் சமூகம் அரசியல் சமூகத்தின் மீது அழுத்தத்தைத் தரக்கூடிய ஒரு சூழல் உருவாகி வருவதனைச் சுட்டிக் காட்டுகிறது.
இது மே 2009 முன்னர் இருந்த நிலைமயினை விட மாறுபட்டது. ஆனால் சரியாகக் கையாண்டால் நன்மை தரக்கூடியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிவில் சமூகத்தின் அறிக்கையினை, அழுத்தத்தினை பிரச்சினையாக, தலையிடியாகக் கருதக்கூடாது.
பேச்சுவார்த்தைகள் தொடர்பாக சிறிலங்காவும், இந்தியாவும் அனைத்துலக அரசுகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பிரயோகிக்கக்கூடிய அழுத்தத்தை எதிர்கொள்வதற்குரிய ஒரு கவசமாக சிவில் சமூகத்தின் நிலைப்பாட்டை கூட்டமைப்பு அணிந்து கொள்ள முடியும்.
அதிகாரங்களைத் தன்னகத்தே குவித்து வைத்திருக்கும் மகிந்தர் தன்னைத் தெரிவு செய்த மக்களுக்கு தாம் துரோகம் செய்ய முடியாது என்று கூறி மக்கள் மத்தியில் தான் முன்வைத்துள்ள மகிந்த சிந்தனையினைத் தனக்குக் கவசமாக எவ்வளவு அழகாகப் பயன்படுத்துகிறார்!
சிவில் சமூகத்தின் நிலைப்பாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின்போது மக்கள் முன்வைத்த நிலைபாட்டில் இருந்துதான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிவில் சமூகத்தின் அறிக்கையினையும் தாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தையும் முன்னிறுத்தி பேச்சுவாரத்தைகளைக் கையாள்வது அவசியமானது.
இது ஈழத் தமிழர் தேசத்துக்கு நன்மை தரக்கூடியதே.
குறைந்த பட்சம் இந்த தசிச அம் ஒரு கூட்டத்தைக் கூட்டி சமகால அரசியலை அலசி ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒரு அறிக்கை தயாரித்திருந்தால் அதனை வரவேற்றிருக்கலாம். அதனை விடுத்து தொலைபேசியில் பேசிவிட்டு வைத்தியகலாநிதிகளது பெயர்களையும் பாதிரிமார்களது பெயர்களையும் அந்தக் கடிதத்தில் சேர்த்தது பித்தலாட்டமாகும்.
அந்தக் கடிதத்தை ஊன்றிப் படிப்பவர்கள் அதற்குப் பின்னால் சென்ற தேர்தலில் கட்டுக்காசை இழந்த அரசியல்வாதிகள் இருப்பதை கண்டிருப்பார்கள். தில்லியில் நடந்த கூட்டத்தில் புளட் சித்தார்த்தனும் ஆனந்தசங்கரியும் கையெழுத்துப் போட மறுத்தமைக்கு ததேகூ யை எப்படி தசிச அம் குற்றம் காண முடியும்?
வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ போட்டியிடக் கூடாது அவர்களுக்குப் பதில் சுயேட்சகளை நிறுத்த வேண்டும் என்று தசிச முன்வைத்த கோரிக்கையில் உள்நோக்கம் என்ன? ததேகூ பலவீனப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் அதில் உண்டா? இல்லையா?
மேலும் ததேகூ வடமாகாண சபைத் தேர்தலில் வெல்லும் அதையே மகிந்த இராசபக்சேயும் விரும்புகிறார் என்ற தசிச இன் வாதம் முட்டாள்த்தனமாகப் படவில்லையா?
இதையேன் இந்தப் பத்தி எழுத்தாளர் காண மறுக்கிறார்? அல்லது கண்டும் காணாது விடுகிறார்?
ததேகூ ஒரு இராசதந்திர கட்டுமானத்தோடுதான் (டிப்லொம்யாடிக் ஸ்ட்ர்யாடஜீ) பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் ததேகூ தனது முன்மொழிவுகளை சிங்கள அரசோடான பேச்சுவார்த்தையின் போது தொடக்கத்திலேயே முன் வைத்து அதன் அடிப்படையில் பேசி வந்தது. ததேகூ எந்த அடிப்படைக் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்கவில்லை. தாயகம், தேசியம், உள்ளக தன்னாட்சி உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை.
இந்தியாவின் அழுத்தம், இந்தியாவின் நிகழச்சி நிரல், அமெரிக்காவின் அழுத்தம் என வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்பவர்களிடம் ஒரு கேள்வி. இந்த நாடுகளின் ஒத்துழைப்பின்றி தமிழர் தரப்பு தனது உரிமைகளை வென்றெடுக்க முடியுமா?