தாமரை காருண்யன்
மனந்திறந்து பேசுவோமே - 13
ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் அமைப்புக்கள் அரசியல் நிலைப்பாடுகளைக் (political positions) கொண்டிருக்கிறார்களேயன்றி இந்த நிலைப்பாடுகளை அடைந்து கொள்வதற்கான அரசியல் வேலைத்திட்டம் (political programme) எதனையும் முன்வைத்துச் செயற்படுவதாகத் தெரியவில்லை என முன்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
இன்றைய பத்தி தமிழர் தேசத்தின் மத்தியில் தற்போது காணப்படும் இரு வேறுபட்ட அரசியல் போக்குகளை நோக்குகிறது. இதனை விடுதலைப்புலிகள் அமைப்பின் வீழ்ச்சி ஏற்பட்ட பின்புலத்தில் இருந்து ஆரம்பித்தல் பொருத்தமானது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன்னர் தாயகத்திலும் சரி புலத்திலும் சரி ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமை விடுதலைப் புலிகளின் கைகளில் இருந்தது. இதனால் தாயகத்திலும் புலத்திலும் முன்னெடுக்கப்பட்ட அரசியல் வேலைத்திட்டம் ஒரே இலக்கை நோக்கியதாக இருந்தது.
ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்கு சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்வதுதான் இந்த அரசியல் இலக்கு. விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடும் இதுதான்.
இந்த அரசியல் இலக்கை அடைந்து கொள்ள ஆயுதம்தாங்கிய போராட்டத்தின் ஊடாக தமிழர் தாயகப் பகுதிகளை சிறிலங்காப் படையினரின் பிடியிலிருந்து மீட்டெடுத்துப் பாதுகாத்தல், தமிழரின் நடைமுறையரசினை (De facto state) நிறுவுதல், நிறுவப்பட்ட அரசுக்கு அனைத்துலக அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளல் (De jure state) என்ற படிமுறைகளை தமது இலக்கினை அடைவதற்கான வழிமுறையாக விடுதலைப்புலிகள் அமைப்பு வகுத்திருந்தது.
சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே விடுதலைப்புலிகள் நோக்கினர். சிறிலங்காவுடனான பேச்சுவார்த்தைகள் - அவை நேரடிப் பேச்சுவார்த்தைகளாக இருந்தால் என்ன – அல்லது மூன்றாவது தரப்பு ஊடான பேச்சுவார்த்தைகளாக இருந்தால் என்ன – தமிழீழம் என்ற ஒரு தனியரசினை அமைத்துக் கொள்வதற்கு உதவக்கூடியதொன்றாக அவற்றை ஆக்கிக் கொள்ளல் என்பதே விடுதலைப்புலிகள் அமைப்பின் நோக்கமாக இருந்தது.
தாம் கடக்கவேண்டியது நெருப்பாறாக இருக்கும் என்பதும் விடுதலைப்புலிகளுக்குத் தெரியும். தமது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, கணிப்புகளுக்கு முரணாக யதார்த்தநிலை அமைந்து விட்டிருந்தாலும்கூட, தாம் சென்றடைய வேண்டிய இலக்கினை எப்படிச் சென்றடைவது என்ற திட்டம் விடுதலைப்புலிகளிடம் இருந்தது. இத் திட்டத்தை இவர்கள் சொந்த மக்களையும் மண்ணையும் நம்பியே வகுத்திருந்தனர்.
ஆனால் ஒரு நாட்டின் தேசிய இனப்பிரச்சனையினை அனைத்துலக ஒழுங்குச் சக்கரத்தில் பொருத்திப் பார்க்கும்போது அது உள்நாட்டுப் பிரச்சனையாக மட்டும் இருப்பதில்லை.
தேசிய இனப்பிரச்சனைகள் - அதுவும் தேசங்கள் தனிஅரசைக் கோரும் பிரிச்சனைகள் அடிப்படையில் அனைத்துலகப் பரிமாணம் கொண்ட பிரச்சனைகளாகவே இருக்கும்.
ஏனெனில் புதிய அரசுகளை அமைப்பதற்கான தேசங்களின் போராட்டங்கள் உலகில் ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் அரசுகள் என்ற குழுமத்தில் புதிய உறுப்பினர்கள் உள்நுழையும் நிலைமைகளைக் கொண்டவை. நிலவும் அனைத்துலக ஒழுங்கில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.
இதனால் ஒரு புதிய அரசு உலகில் உருவாகுவது தமது நலன்களுக்கு உகந்ததா இல்லையா என உலகில் பலம்வாய்ந்த நாடுகள் போடும் கணக்குகளே புதிய அரசுகளை உருவாக்கும் போராட்டங்களின் தலைவிதியினை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இதனால் புதிய அரசுகளை அமைக்கும் போராட்டத்துக்கு உலகின் பலமிக்க அரசுகளின் ஆதரவும் அங்கீகாரமும் ஏதோ ஒரு கட்டத்தில் தேவைப்படும். அவ்வாறு இல்லாவிட்டால் புதிய அரசுகளுக்கான போராட்டங்கள் தப்பிப் பிழைத்தல் மிகவும் கடினமாகும்.
இலங்கைத்தீவில் புதியதொரு நாடு உருவாகுவதனை விரும்பாத உலக நாடுகள் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் தமது நலன்கள் சார்ந்து எடுத்துக்கொண்டபோது இந்த உலகச் சூழலுடன் விடுதலைப்புலிகளால் ஒத்திசைந்து போக முடியவில்லை.
இந்நிலையும் நீண்ட போராட்டப் பாதையில் தம்மீது புலிகள் அமைப்பு ஏற்றிக் கொண்ட சுமையும் சேர்ந்துகொள்ள, தாங்கமுடியாத பாரத்தைச் சுமக்க வேண்டிய நிலைக்கு புலிகள் அமைப்பு தள்ளப்பட்டது.
இந்த நெருக்கடி நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வவதற்கு புலிகள் ஈழத் தமிழர் தேசத்தின் திரட்டச்கூடிய சக்தியையெல்லாம் திரட்டிப் போராடிப் பார்த்த போதும் புலிகள் அமைப்பால் தமது வீழ்ச்சியினைத் தடுக்க முடியவில்லை.
எந்தவொரு சக்திக்கும் அதி உச்ச தாங்குசக்தி (carrying capacity) ஒன்று உண்டு.
இது மனிதர்களானாலும் சரி - அமைப்புக்களானாலும் சரி -இயந்திரமானாலும் சரி - ஏன் நிலமாக இருந்தாலும் சரி - அவற்றுக்குரிய தாங்குசக்தியினை மீறி இவை இயங்க முடியாது.
உதாரணமாக, ஒரு மேய்ச்சல் நிலத்தில் எத்தனை மாடுகள் மேய்வதன் மூலம் இம் மாடுகள் உயிர் வாழ முடியும் என்பது அந்த மேய்ச்சல் நிலத்தின் தாங்கு சத்தியாக இருக்கும்போது இவ் எண்ணிக்கைக்கு கூடுதலான மாடுகள் இந் நிலத்தில் மேயுமானால் அந் நிலத்தினால் இந்த மாடுகளுக்குரிய உணவினை நீண்டகாலம் வழங்க முடியாது.
ஒரு பலமுள்ள மனிதன் பலமற்ற மனிதனைவிட கூடுதல் பாரத்தைச் சுமக்க முடியும். ஆனால் அந்தப் பலமான மனிதனுக்கும் தான் தாங்கக்கூடிய உச்ச சக்தி ஒன்று உண்டு. ஒரு எல்லைக்குமேல் தனது தலையில் பாரத்தைச் சுமக்க வேண்டிய நிலையில் அந்தப் பலமான மனிதன் இருப்பானாக இருந்தால் ஒரு கட்டத்தில் அவன் முறிந்து விழுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இதுதான் நடந்தது.
ஈழத் தமிழர் தேசம் என்ற சிறிய தேசத்தில் இருந்து வேறு எந்தவொரு சக்தியாலும் விடுதலைப்புலிகள் அமைப்பு நடாத்தியதுபோல வீரமிகு போரை நடாத்தியிருக்க முடியாது.
ஆனால் இந்தப் போர் உலகை எதிர்த்;து நடாத்த வேண்டிய போராக மாற்றம் கண்ட பின்னர் ஒரு கட்டத்துக்கு மேல் விடுதலைப்புலிகள் அமைப்பால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னால் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியினை விடக் கூடுதலான சுமையினை சுமக்கும் நிலைக்கு உள்ளாகிக் கொண்டது. அதன் தர்க்கரீதியான வளர்ச்சி புலிகளின் வீழ்ச்சியில் கொண்டு போய்ச் சேர்த்தது.
இதனால் தமது இலக்கை அடைவதற்கான செயற்திட்டத்தை கொண்டிருந்தபோதும் புலிகள் அமைப்பால் ஒரு கட்டத்துக்கு மேல் முன் நோக்கி நகர முடியவில்லை.
புலிகளின் வீழ்ச்சி, புலிகள் காலத்தில் தமிழ் மக்கள் கொண்டிருந்த அரசியல் பலத்தை இழக்கச் செய்துவிட்டது.
இச் சூழலில்தான் மே 2009 ஆம் ஆண்டின் பின்னரான ஈழத் தமிழர் அமைப்புக்களின் அரசியல் ஆரம்பமாகிறது.
மே 2009 க்குப் பிற்பட்ட காலத்தில் தாயகத்தில் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக் கொள்கிறது. கொள்கை வேறுபாட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாகிக் கொள்கிறது. இருந்தபோதும் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மக்கள் ஆதரவைப் பெறமுடியவில்லை.
விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தாயகத்தில் தமிழீழம் பற்றிப் பேசுவதற்கான அரசியல்வெளி இல்லாது போகிறது. தமிழத் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலில் இருந்து தம்மை விடுவித்து, 1983 இற்குப் பின்னரான அமிர்தலிங்கம் காலத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டது.
இதனால் தற்போது ஈழத் தமிழர் அரசியலில் இரு வேறுபட்ட அரசியல் போக்குகள் உருவாகியுள்ளன.
ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தேசிய சிறுபான்மை இன அரசியல். இதனைத் தேசிய இன அரசியல் எனக் கூட்டமைப்பு அழைத்துக் கொள்கிறது. 'ஒரு நாடு இரு தேசிய இனங்கள்' எனக் கூட்டமைப்பு அதனை அழைத்துக் கொள்கிறது.
கூட்டமைப்பினுள் இருக்கும் இடைமட்டத் தலைவர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் தேசிய சிறுபான்மை இன அரசியலை விரும்பாது இருக்கலாம். ஆனால் அவர்களால் தற்போதைய சூழலில் கூட்டமைப்பின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தல் சாத்தியம் அற்றதாகவே தெரிகிறது.
மற்றையது, ஈழத் தமிழரை தேசம் என வரையறுத்து இதன் பாற்பட்டு நடைபெறும் அரசியல். இது ஈழத் தமிழரின் அரசமைக்கும் உரிமையினைக் கோரிநிற்கும் அரசியல்.
இதனைத் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொள்கிறது. பிரிந்து போய்த் தனியரசு அமைக்கும் உரிமை பற்றிப் பேசும் அரசியல்வெளி தாயகத்தில் இல்லாத காரணத்தால் 'ஒரு நாடு இரு தேசங்கள்' என இவர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்.
இரு இறைமையுள்ள தேசங்கள் தமக்கிடையே சமத்துவ நிலையில் பேசி இலங்கைத்தீவின் ஆட்சிமை முறைமையை தீர்மானித்துக் கொள்ளலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடு.
புலத்தில் தேச நிலைப்பட்ட அரசியலே மேலோங்கியிருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் இவ் அரசியலின் அடிப்படையில் தமிழீழத் தனியரசே அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டைப் பகிரங்கமாக முன்வைத்துச் செயற்படுகின்றனர்.
உலகத் தமிழர் பேரவை (பிரித்தானியத் தமிழர் பேரவை உட்பட) தேச நிலைப்பாட்டின் அடிப்படையிலான அரசியலினையே கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் தமிழீழத் தனியரசு பற்றி வெளிப்படையாகப் பேசுதில்லை. ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்துகின்றனர்.
இவ்விரு அரசியல் நிலைப்பாடுகளும் அடிப்படையில் வேறுபட்டவை. தேசிய இன அரசியல் எனக் கூறப்படும் தேசிய சிறுபான்மை அரசியல் சிங்கள தேசத்தின் அரசமைக்கும் உரிமையை ஏற்றுக் கொண்டு தமிழர் தேசத்தின் அரசமைக்கும் உரிமையை விரும்பியோ விரும்பாமலோ கைவிடுகிறது.
ஆதலால் அரசமைத்திருக்கும் சிங்கள தேசத்திடம் இருந்து அதிகாரங்களை பகிர்ந்தோ அல்லது பரவலாக்கியோ தமிழர்களுக்குத் தருமாறு கோருகிறது.
சிங்கள தேசம் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்திருப்பதாகவோ அடிமை கொண்டிருப்பதாகவோ தமிழ்த் தேசிய சிறுபான்மை அரசியல் பிரகடனப்படுத்துவதில்லை. ஒரு அரசு என்ற வகையில் படையினரை நாடு முழுவதும் வைத்திருக்கும் அரசின் உரிமையினை ஏற்றுக்கொண்டு மக்களின் இயல்வு வாழ்க்கைக்கு இடையூறு இல்லாத வகையில் படையினர் முகாம்களுக்குள் இருக்க வேண்டும் எனக் கோரக் கூடியது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் அண்மைய பாராளுமன்றப் பேச்சில் சிறிலங்காப் படையினர் தொடர்பாக வெளிப்பட்ட நிலைப்பாடு தேசிய சிறுபான்மை அரசியல் என்ற நிலைப்பாட்டில் இருந்துதான் எழுகிறது.
தேச நிலைப்பட்ட அரசியல் சிங்கள தேசத்தின் அரசமைக்கும் உரிமையை அங்கீகரிக்கும் அதேவேளை, தமிழர் தேசத்தின் அரசமைக்கும் உரிமையை வலியுறுத்துகிறது.
தேச நிலைப்பட்ட அரசியல் தற்போது சிங்கள தேசம் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்திருப்பதாக நோக்குகிறது. சிங்களப் படையினர் முற்று முழுவதுமாக தமிழர் தாயகப் பிரதேசத்திலிருந்து வெளியேற வேண்டும் எனக் கோருகிறது.
இவ்வாறாக இவ்விரு அரசியல் போக்குகளும் கொள்கை நிலையில் இரு வேறுபட்ட நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவவையாகத்தான் இருக்கும்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை ஆதரித்து வந்தவர்களால் முதலாவது வகைப்பட்ட தேசிய சிறுபான்மை அரசியல் நிலைப்பாட்டை இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியாது.
இக் கட்டுரையாளரின் நிலைப்பாடும் இப் பத்தியின் நிலைப்பாடும் இதுதான்.
இவ்விரு போக்குகளையும் ஒத்திசைய வைப்பது சாத்தியம் தானா? இதற்கான பதில் இல்லை என்பதுதான்.
இப்படியானால் இவ்விரு போக்குகளும் மோதிக் கொண்டுதான் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுக்கப்படவேண்டுமா?
இதற்கும் இப் பத்தியின் நிலைப்பாடு இல்லை என்பதுதான்!
அப்படியானால் எப்படித்தான் முன்னேறிச் செல்வது?
இவ்விரு நிலைப்பாடுகளும் ஒன்றோடு ஒன்று ஒத்திசைய முடியாதே தவிர, ஒன்றுக்கொன்று உதவக்கூடியதாக இயங்கக்கூடிய வாய்ப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் நமது சூழலில் தருகிறது.
தேசிய சிறுபான்மை அரசியல் நிலைப்பட்டு கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகளை 'சிறிலங்கர்கள் ஒரு மக்கள்' என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தும் சிங்கள பௌத்த பேரினவாதம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இதனால் தேசிய சிறுபான்மை அரசியல் வெற்றியடையப் போவதில்லை. இந்த அரசியலின் தோல்வியில் இருந்துதான் தேச நிலைப்பட்ட அரசியலுக்கான அனைத்துலக அங்கீகாரம் வளர முடியும்.
தற்போதய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை நாம் இரு காரணங்களால் குறைத்து மதிப்பிட முடியாது.
முதலாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தமது பிரதிநிதிகளாக தாயக மக்கள் தமது வாக்குகள் மூலம் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இரண்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தாயக மக்களின் பிரதிநிதிகளாக அனைத்துலக சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆதனால் நாம் இப்போது சிந்திக்க வேண்டியதெல்லாம் எவ்வாறு இவ்விரு போக்குகளாலும் நாம் நமக்குள் மோதிக் கொள்ளாமல் ஒரு மூலோபாய அடிப்படையிலான புரிந்துணர்வுக்கு வருவது என்பதுதான்.
வரலாற்றுப்போக்கில் தேசிய சிறுபான்மை அரசியல் பலவீனமடைய தேச அரசியல் நிலைப்பாடு பலமடையும் என்றே இப் பத்தி கருதுகிறது.
அப்போது கூட்டமைப்பும் தேச நிலைப்பாடு அரசியலை கையில் எடுக்க வேண்டி வரும். அல்லது ஓட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் கையளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.