Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஸ்டீபன் சோடர்பர்க்கின் சே குவேரா

ஸ்டீபன் சோடர்பர்க்கின் சே குவேரா
யமுனா ராஜேந்திரன்

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 16

ஸ்டீபன் சோடர்பர்க்கின் ஐந்து மணிநேர முழுநீளப்படமான சே திரைப்படத்தில் சே குவேரா பாத்திரமேற்று நடித்ததற்காக பெனாசியோ டெல் டோராவுக்கு 2008 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பிரெஞ்சு கேன் திரைப்படவிழாவில் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. அதே ஆண்டு ஸ்பானிய திரைப்பட விழா விருதான கோயா திரைவிருதையும் தனது நடிப்புக்குப் பெற்றார் பெனாசியோ டெல் டோரா. தனது கணவரது பாத்திரத்தையேற்றுக் கச்சிதமாக நடித்ததற்காக சே குவேராவின் மனைவியும் சே குவேராவின் சக கெரில்லாவுமான அலீடா மார்ச்சே தனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

2008 ஆம் ஆண்டு டிசம்பரில் இப்படம் கியூபாவில் சே குவேராவின் கெரில்லாத் தோழர்களாக இருந்து இன்றும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் காமில்லோ, பெனிக்னோ போன்றவர்கள் உள்ளிட்ட 2000 புரட்சியாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டபோது, அவர்கள் 10 நிமிடங்கள் தொடர்ந்து எழுந்து நின்று கரகோஷமிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். ஹவானாவில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியொன்றில் பிடல் காஸ்ட்ரோவை பெனாசியா டெல்மோரா சந்தித்தபோது இந்தத் திரைப்படத்திற்காக டெல் டோரா மேற்கொண்ட பரந்துபட்ட ஆய்வுகள் குறித்து தமது தனிப்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார் பிடல் காஸ்ட்ரோ. திரைப்படத்தின் மீது காதல் கொண்ட பிடல் காஸ்ட்ரோ கியூபா வெற்றி வாகை சூடியவுடனேயே இலத்தீனமெரிக்காவில் முதல் திரைப்படக் கழகத்தினைக் கியூபாவில் அமைத்தார் என்பதனையும் இங்கு நினைவுகூர்வோம்.

அமெரிக்கத் திரைப்பட இயக்குனர்களில் கணிசமானவர்கள் கியூபப்புரட்சியின் ஆதரவாளர்கள். ஆலிவர் ஸ்டோன், டெரன்ஸ் மாலிக், பிரான்சிஸ் போர்ட் கொப்பாலோ, மார்டின் ஸ்கோர்சிஸே மற்றும் நடிகர்களான சீன் பென், ரோபர்ட் ரெட்போர்ட், ரோபர்ட் டுவல் என அந்தப் பட்டியல் மிக நீண்டது.

அமெரிக்க சினிமாவானது புரட்சியாளர்கள் குறித்த முக்கியமான திரைப்படங்களை உருவாக்கியே வந்திருக்கிறது. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் எனும் புத்தகத்தின் அடிப்படையில் ஜான் ரீடின் வாழ்க்கை வரலாறு ரெட் எனும் திரைப்படமாக வெளியானது. பிடல் காஸ்ட்ரோ குறித்த இரண்டு ஆவணப்படங்களை ஆலிவர் ஸ்டோன் இயக்கி இருக்கிறார். சோட்பர்க்கின் இயக்கத்தில் வெளியான சே குவேரா திரைப்படத்தினை முதலில் டெரன்ஸ் மாலிக் இயக்க, சோடர்பர்க் தயாரிப்புப் பொறுப்பினை ஏற்பதாகவே இருந்தது. 1966 ஆம் ஆண்டு பொலிவியாவில் சே குவேராவின் கெரில்லா யுத்தம் துவங்கப்பட்டபோது அது குறித்து ஒரு கட்டுரை எழுதுவதற்காக பொலிவியாவில் பத்திரிக்கையாளராகத் திரிந்தவர் டெரன்ஸ் மாலிக் என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்வோமானால், சே குவேரா குறித்த திரைப்படத்தினை இயக்க அவர் காட்டிய ஈடுபாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாம் உலகப் போர்க்காலகட்டம் பற்றிய அவருடைய தி தின் ரெட் லைன் படமும், வியட்நாம் யுத்தம் பற்றிய ஸ்டான்லி குப்ரிக்கின் புல் மெட்டல் ஜாக்கட் எனும் இரு திரைப்படங்களும் போரின் குரூரங்களும் அழிவும் குறித்த உலகப் புகழ்வாய்ந்த படங்களாகும். ஸ்டீபன் சோடர்பரக், செக்ஸ், லைஸ் அன்ட எ வீடியோ டேப், டிராபிக் மற்றும் எரன் பிராங்கோவிக் போன்ற சோதனைபூர்வமான படங்களை எடுத்தவர். இதில் ஜூலியா ரோபர்ட் கதாநாயகியாக நடித்த எரன் பிராங்கோவிக் சூழலியல் உரிமைக்காகப் போராடிய ஒரு அமெரிக்கப் பெண்ணின் சுயவாழ்வுச் சித்திரமாகும். டெரன்ஸ் மாலிக்கிடமிருந்து சே குவேரா திரைப்படம் சோடர்பர்க்கிடம் வந்ததன் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

பெனாசியோ டெல் டோராவும் டெரன்ஸ் மாலிக்கும் இணைந்து, சே குவேரா குறித்து ஜோன் லீ ஆன்டர்ன் எழுதிய வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில்தான் திரைப்படம் முதலில் எடுப்பதாகத் திட்டமிடப்பட்டது. சே குவேரா திரைப்படத்தில் முதலீடு செய்வதற்கு அமெரிக்கப் படமுதலாளிகள் எவரும் முன்வராத சூழலில், காலதாமதமாகிக் கொண்டே சென்ற நிலைமையில் டெரன்ஸ் மாலிக் புதியதொரு படத்தை இயக்குவதற்காகச் சென்றுவிட்டார். பிற்பாடாக சே குவேராவின் பொலிவிய அனுபவம் பற்றி மட்டுமே திரைப்படத்தினை மட்டுப்படுத்திக் கொள்வோம் எனத் திட்டமிட்ட பெனாசியோ டெல் டோரா அதனை சோடர்பர்க்கிடம் பகிர்ந்து கொண்டபோது, கியூபப் புரட்சியைப் பற்றிச் சொல்லாமல் சே குவேரா பொலிவியாவிற்குப் போராடப்போன அரசியல் உள்ளடக்கத்தையும் நோக்கத்தையும் நிலைநாட்ட முடியாது எனக் கண்ட சோடர்பர்க், கியூபா-பொலிவியா என இரண்டும் தழுவியதாகத் திரைபடத்தினை உருவாக்க வேண்டும் எனும் முடிவுக்கு வந்தார்.

ஜோன் லீ ஆன்டர்சனின் நூலுக்கு மாற்றாக இப்போது சே எழுதிய இரு நூல்களின் அடிப்படையில் திரைப்படம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. கியூப கெரில்லா யுத்த அனுபவங்கள் மற்றும் பொலிவியன் டைரி என்பன அந்த இருநூல்கள். இந்த இருநூல்களோடு சே குவேராவோடு கியூப-பொலிவிய யுத்தத்தில் பங்கெடுத்த கெரில்லாத் தோழர்களின் நேர்காணல்களின் அடிப்படையிலும் திரைக்கதை முழுமையாக்கப்பட்டது.

ஸ்டீபன் சோடர்பர்க்கின் சே குவேரா

திரைப்படத்தின் கால அளவு ஐந்து மணிநேரம் வரும் எனக் கண்டார்கள். திரைப்படத்தினை ஆங்கில மொழியில் உருவாக்குவதனை மறுத்த சோடர்பர்க், புரட்சியோடும் புரட்சியாளர்களோடும் தொடர்புபட்ட நிலத்தின் மொழியான ஸ்பானிய மொழியில் மட்டுமே உருவாக்க வேண்டும் எனும் முடிவுக்கு வந்தார். திரைப்படம் ஐந்து மணிநேரம் என்பது வழமையான அமெரிக்க மரபுக்கு மாறானது. எவரும் ஐந்து மணி நேர திரைப்படத்தைக் காண விரும்பமாட்டார்கள். விநியோகஸ்தர்களும் வாங்கமாட்டார்கள். முதலாளிகள் எவரும் மூலதனம் போடமாட்டார்கள். அனைத்துக்கும் மேலாக ஒரு ஸ்பானிய மொழிப்படத்தில் முதலிட எந்த அமெரிக்க ஸ்டுடியோவும் முன்வரவில்லை.

பிரெஞ்சுத் திரைப்பட நிறுவனம் ஒன்றும், ஸ்பானியத் திரைப்பட நிறுவனம் ஒன்றும் முதலிட முன்வந்தன. வட அமெரிக்கா உள்பட விநியோகஸ்தர்கள் சிலர் முன் பணம் தந்தார்கள். இவ்வாறுதான் படத்துக்கான 58 மில்லியன் டாலர் பட்ஜெட் தொகை திரட்டப்பட்டது.

படத்தினை கியூபாவிலும், பொலிவியாவிலும் படம்பிடிக்க நினைத்தார் சோடர்பர்க். கியூபாவின் மீது அமெரிக்காவின் பொருளாதாரத் தடையும், பயணத்தடையும் இருப்பதால் கியூபாவில் படம்பிடிப்பது என்பது சாத்தியமில்லாமல் போனது. ஸ்பெயின்-மெக்சிக்கோ-கோஸ்ட்டா ரிக்கோ போன்ற நாடுகளில் மொத்தமாக 78 நாட்களில் படம் இறுதியாக்கப்பட்டது. பொலிவிய அனுபவங்கள் குறித்த பகுதி ஸ்பெயினிலும், கியூப அனுபவங்கள் குறித்த பகுதி மெக்சிக்கோ-கோஸ்ட்டா ரிக்கோவிலும் படமாக்கப்பட்டது. ஐந்து மணி நேரம் உருவாக்கப்பட்ட படம் முழுமையாகக் கேன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, அமெரிக்காவிலும் மேற்கு நாடுகளிலும் திரையிடும் பொருட்டு அரை மணி நேரம் வெட்டிக் குறைக்கப்பட்டு இரண்டு தனித்தனித் திரைப்படங்களாகத் திரையிடப்பட்டன.

முதல் படம் அர்ஜன்டீனன் எனும் பெயரிலும், இரண்டாவது திரைப்படம் கெரில்லா எனும் பெயரிலும் திரையிடப்பட்டன. இவ்வாறு இரண்டு தனித்தனிப் படங்களாகத் திரையிடப்படும் முன்னால், ஒரு சில காட்சிகள் மட்டும் இலண்டன் கர்ஸான் சோஹோ திரையரங்கில் முழுமையான ஐந்துமணி நேரத் திரைப்படமாகத் திரையிடப்பட்டது. அதிஷ்டவசமாக முழுமையான படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வழமையான ஒளித்தட்டாக இப்போது கிடைக்கும் வடிவம் அரை மணி நேரம் வெட்டிக் குறைக்கப்பட்ட படம்தான் என்றாலும், முழமையான வடிவம் இப்போதும் வேறுவடிவில் கிடைக்கிறது. கிரைட்டேரியன் எனும் அமெரிக்க கலை அமைப்பு வழங்கும் பொதியில் வெட்டப்பட்ட காட்சிகளும், படம் குறித்த மூன்று ஆவணப்படங்களும் இணைத்து வெளியிடப்பட்டிருக்கின்றன. படத்தை அதனது வரலாற்றுப் பின்னணியுடன் முழுமையாகப் பார்க்க விரும்புபவர்கள் இப்போதும் அதனை அடையமுடியும்.

படத்தின் இரண்டு பகுதிகளும் படம் பிடிக்கப்பட்ட முறையினாலும், நிறபேதம் எனும் அளவிலும் இருவிதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. திட்டவட்டமான யுத்ததந்திரத்துடன் நடந்த, வாகை சூடிய கியூபப் புரட்சி குறித்த, புரட்சியின் பின்னால் நிதானமாக எழுதப்பட்ட சே குவேராவின் நூலின் அடிப்படையிலான முதல் பாகம், அகண்ட திரையில், அடர்ந்த பச்சை வண்ணத்தில், அதிக மஞ்சள் வண்ணம் கலந்திருக்கப் பளிச்செனப் படம் பிடிக்கப்பட்டது. படத்தின் இரண்டாவது பாகம், புரட்சி எவ்வாறு செல்லும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலைமை குறித்தது. பதட்டமான நிகழ்காலத்தில் எழுதப்பட்ட பொலிவியன் டைரியின் அடிப்படையில் உருவானது. முழுக்கவும் அடர்ந்த காடுகளின் இடையில் உருவானது. இதனது வண்ணம் மூட்டமான அடர்ந்த பச்சை நிறத்தில், அதிக நீலம் கலந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

முதல் பகுதிப் படம் நிலைத்த காமிராவினாலும், மேல் கீழ் காட்சிக் கோணங்களாலும் படம் பிடிக்கப்பட்டிருக்க, அடர்ந்த கானகங்களிலேயே முழுக்க நடந்து முடிவுறும் இரண்டாவது பாகம் ஹேன்ட் ஹெல்ட் காமெரா - கைகளில் கொண்டு அலைந்து திரியும் ரெட் காமெராவினால் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

சே குவேரா பற்றி அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இரண்டாவது திரைப்படம் இது. பிரபல நடிகர் ஒமர் ஷெரீப் சே குவேராவாக நடிக்க, ரிச்சரட் பிளெட்சர் இயக்க, 1969 ஆம் ஆண்டு சே குவேரா குறித்த முதல் திரைப்படம் சே எனும் பெயரில் வெளியானது. சே குவேரா குறித்தும், பொலிவிய கெரில்லா யுத்தம் குறித்தும், பிடல் காஸ்ட்ரோ குறித்தும் அவதூறுகளைப் பரப்பிய படமாகவே அது இருந்தது. அமெரிக்க சினிமா சே குவேராவின் மீது சுமத்திய கறையை சோடர்பர்க்கின் இரண்டு பாகங்களிலான சே என்றென்றைக்கும் அழித்துவிட்டிருக்கிறது. ஓருவகையில் சேவைப் பொறுத்து ஹாலிவுட் மீதான அவப்பெயரை சோடர்பர்க் துடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

யுத்த சாகசக் காட்சிகளையோ அல்லது சேவின் பரவசமான அருகாமைக் காட்சிகளையோ எதிர்பார்த்துப் போகிறவர்களுக்கு சோடர்பர்க்கின் சே திரைப்படம் ஏமாற்றத்தையே தரும். எப்போதும் தனிமனிதனாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத, கூட்டியக்கத்தின் பகுதியாகத் தன்னைக் கண்ட, கம்யூனிச முன்மாதிரி மனிதனாக சேவைக் காண நினைப்பவர்களுக்கான திரைப்படம் சோடர்பர்க்கின் சே. சோடர்பர்க் குறிப்பிடுகிறபடி அவர் உருவாக்க விரும்பிய திரைப்படம் கெரில்லா இயக்கமொன்றின் நடவடிக்கை குறித்த திரைப்படமே அல்லாது, சே குவேரா எனும் தனிமனிதன் குறித்தது இல்லை. இந்தக் காரணத்திற்காகவே சே குவேரா குறித்து நான் பார்த்த எல்லாப் படங்களிலும் சோடர்பர்க்கின் சே திரைப்படமே எனக்குப் பிடித்திருக்கிறது.

அடுத்த இரு கட்டுரைகளில் எனது பார்வைகளை, எனது ரசனைசார் அனுபவங்களை விரிவாக எழுதுகிறேன்.

12/29/2011 2:10:31 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்