Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சோறா? சுதந்திரமா?

சோறா? சுதந்திரமா?
தாமரை காருண்யன்

 

மனந்திறந்து பேசுவோமே – 3

 

சோறா? சுதந்திரமா? என்ற தலைப்பில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ஒரு சிறிய கவிதை வடிவிலான நூலை 70 களின் முற்பகுதியில் படித்த ஞாபகம் உண்டு.

இங்கு சோறு என்பது அபிவிருத்தி அல்லது மேம்பாடு என்பதன் குறியீடாகிறது. சுதந்திரம் என்பது அரசியல் அதிகாரத்தின் குறியீடாகிறது.

1970 களின் ஆரம்பத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஆட்சிக்காலத்தில் தமிழர் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்வது அவசியம் என்ற கருத்தும் சில தமிழர்களால் பலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.

யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா இந்த அபிவிருத்திப்பாதையில் பயணம் செய்தவர்களில் முக்கியமானவர்.

இந்தக் காலகட்டத்தில்தான் யாழ்ப்பாணத்துக்கும் பல்கலைக்கழக வளாகம் வந்து சேர்ந்தது.

இதே காலகட்டத்தில்தான் தமிழ் மாணவர்களுக்கெதிரான உயர்கல்வி வாய்ப்பில் தரப்படுத்தல் நடைமுறை கொண்டுவரப்பட்டது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு, இலங்கை சிறிலங்கா ஆக மாற்றமடைந்தது.

1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸ் வன்முறையும் தமிழர் உயிர்ப்பலியும் நிகழ்ந்தன.

தமிழ் இளைஞர்களின் தேசிய எழுச்சி திரட்சி அடையத் தொடங்கியதும் இக்கால கட்டத்தில்தான். ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கான விதைகள் தூவப்பட்டதும் இதே காலகட்டத்தில்தான்.

இக் காலகட்டத்தில், எனது சிறுபராயத்தில் சோறா? சுதந்திரமா? என்ற கவிஞர் காசி ஆனந்தனின் இந்த நூலை நான் படித்திருக்கிறேன். சிறிய கவிதை வடிவில் உணர்ச்சியைப் பிழிந்து கொடுத்து இந் நூல் ஆக்கப்பட்டிருந்ததாகவும் ஞாபகம்.

அதில் இருந்த கவிதை வரிகள் எதுவும் எனக்கு இப்போது நினைவில் இல்லை. படிக்கும்போது உணர்ச்சி முறுக்கேறியது நினைவில் வருகிறது.

எனது நினைவில் இருக்கும் பதிவின்படி சோறு முக்கியம் அல்ல – சுதந்திரம்தான் முக்கியம் என்ற கருத்தை இந்நூல் ஆணித்தரமாக இடித்துரைத்தது.

இன்று ஏறத்தாழ 40 வருடங்களுக்குப் பின் நாம் மீண்டும் சோறா? சுதந்திரமா? என்ற வகையிலான வாதப்பிரதிவாதங்களைக் கேட்கிறோம்.

வரலாறு மீண்டும் சுற்றிச் சுற்றி வரும் (History repeats itself) எனக் கூறப்படுவதற்கு இதுவும் நல்லதொரு உதாரணம் போல்தான் இருக்கிறது.

உண்மையில் இங்கு எது முக்கியம்? சோறா? சுதந்திரமா?

சோறு இல்லாது மனிதன் மிகக் கீழ்நிலையை அடைந்து சீரழிந்த பின்னர் சுதந்திரம் வந்துதான் என்ன பயன்? இதனால் சோறுதான் முக்கியம் என்கிறது சோறுக்காக வாதாடுபவர்களின் வாதம்.

சுதந்திரம் வருவதற்கு மிகக்கூடிய காலம் எடுக்கலாம். அல்லது வராமல் கூடப் போகலாம். இதனால் சுதந்திரத்துக்காகக் காத்திருந்து சோற்றை இழந்து இழிநிலையை நாம் எட்டத்தான் வேண்டுமா?

இதனால் சுதந்திரம் கிடைக்கும் நேரம் கிடைக்கட்டும். நாம் முதலில் சோற்றைக் கவனித்துக் கொள்வோம் எனப் போகிறது இவ் வாதம்.

இதனை மறுத்துரைக்கிறது சுதந்திரத்தை முதன்மைப்படுத்தும் மறுவாதம்.

சுதந்திரம் இல்லாவிட்டால் நாம் எமக்கு ஏற்ற வகையில் சோற்றை நாம் ஆக்க முடியாது. இதனால் சுதந்திரம்தான் முக்கியம் என்கிறது இவ்வாதம்.

சுதந்திரம் இல்லாது சோற்றுக்கு அலைந்தால் மற்றவர் கிள்ளிப்போடும் பிச்சைச் சோற்றில் காலத்தை ஓட்டவேண்டி வரும் என எச்சரிக்கிறது சுதந்திரம்தான் முக்கியமானது எனக் கூறும் இவ் வாதம்.

இதனை இன்னொரு வகையில் கூறப்போனால் சுதந்திரம் குதிரை போன்றது. சோறு இக் குதிரையில் கட்டப்பட்டிருக்கும் வண்டி போன்றது.

சுதந்திரம் என்ற குதிரை எமது கையில் இருந்தால்தான் சோறு என்ற வண்டியினை நாம் விரும்பும் திசையில் நம்மால் இழுத்துச் செல்ல முடியும்.

வண்டியை குதிரைக்கு முன்னால் கட்டுவதில் பயன் ஏதும் இல்லை என எடுத்துரைக்கும் இவ்வாதம் மேம்மாட்டுக்கு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்ட அறிஞர் அமார்தயா சென்னின் (Amartya Sen) இன் Development as Freedom என்ற கருதுகோளையும் துணைக்கழைத்துக் கொள்கிறது.

இப் பத்தியைப் பொறுத்தவகையில் மேம்பாட்டைத் தீர்மானிப்பதில் அரசியலின் - அரசியல் அதிகாரத்தின் முதன்மைப் பாத்திரத்தைப் புரிந்து கொள்கிறது. ஏற்றுக் கொள்கிறது.

மேம்பாட்டின் அரசியல் (Politics of development) குறித்த அக்கறையும் இப் பத்திக்கு உண்டு.

ஒரு தேசம் - ஒரு மக்கள் கூட்டம் - தனது கைகளில் அரசியல் அதிகாரத்தை எடுக்கும்போது மட்டும்தான் மேம்பாடு உட்பட்ட அனைத்து விடயங்களையும் தனது தேவைக்கும் விருப்புக்கும் ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்த முடியும்.

இதனால் சுதந்திரம் இல்லாத சோறு நிலைத்து நிற்கக்கூடியதொன்றல்ல. ஈழத் தமிழர் தேசத்துக்கு ஆரோக்கியமான அடித்தளத்தை இடுவதற்கு உதவக்கூடியதல்ல.

அதிலும் சோற்றுக்காகச் சுதந்திரத்தைக் கைவிடுவோமானால் அது நமது தேசத்தின் தலைமேல் நாமே கொள்ளிக்கட்டையினை தூக்கிப் போட்டது போலத்தான் ஆகிவிடும்.

இந்த அடிப்படையான அரசியல் புரிதலில் இருந்து நாம் தற்போதய யதார்த்தத்தை நோக்குவோம்.

தற்போதய சூழலில் சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் இறைமையினை ஏற்றுக் கொள்ளவோ – ஏன் குறைந்த பட்சம் தன்னிடம் குவிந்திருக்கும் அதிகாரங்களை மிகக் குறைந்த அளவில்கூட ஈழத் தமிழ் தேசத்துடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை.

இதனால் அரசியல் அதிகாரத்துக்காக – சுதந்திரத்துக்காகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய நிலையில் ஈழத் தமிழர் தேசம் உள்ளது.

இது நீண்டதொரு போராட்டமாக வளர்வதற்கான நிலைமைகள் நிறையவே உள்ளன.

இத்தகையதொரு சூழலில் சுதந்திரம் வரும் வரை நாம் சோற்றுக்காகக் காத்திருக்க முடியுமா? இவ்வாறு காத்திருப்பது நமது மக்களுக்கு நன்மை தரக்கூடியதா?

தொடர்ச்சியான போர்க்காலத்திலும் இறுதிப் போர் நேரத்திலும் தம்மிடம் இருந்த வளங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, தமது வாழ்வின் மிக விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பார்த்து சோறு இப்போது முக்கியம் அல்ல சுதந்திரம்தான் முக்கியம். அதுவரை காத்திருங்கள் என்று கூறுவது சாத்தியமா? இவ்வாறு கூறுவது நியாயம்தானா?

இவ்வாறு கூறுவோமாயின் அதனை அம் மக்கள் ஏற்றுக்கொண்டுதான் விடுவார்களா?

நமது மக்கள் மேலும் நலிந்து விடுவார்களாயின் நமது சுதந்திரத்துக்கான போராட்டமும் நலிவடைந்துவிடும் என்ற வாதமும் புறந்தள்ளக்கூடியதொன்றல்ல.

இதனால் நமது சிந்தனை முறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. சோறா? சுதந்திரமா? எனச் சிந்திப்பதற்குப் பதிலாக நாம் சோறும் சுதந்திரமும் எனச் சிந்திக்க வேண்டும்.

இச் சிந்தனை முறையானது சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை மறுதலிக்காது. அதேவேளை சுதந்திரத்தின் பின் சோறு என்பதற்குப் பதிலாக சுதந்திரத்துக்கும் சோற்றுக்காகவும் ஒரே நேரத்தில் போராட வேண்டும் எனக் கோருகிறது.

சுதந்திரத்துக்கான பயணத்தை பாதையினை எவ்வகையிலும் தடைப்படுத்தாது சோற்றை ஆக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும் என இச்சிந்தனை முறை பரிந்துரைக்கிறது.

சிங்கள தேசமோ ஈழத் தமிழ் தேசத்தின் தனித்தவத்தை மறுத்து, அதன் தேசம் என்ற தகைமையினை சிதைத்து, ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை இல்லாதொழிக்க முயல்கிறது என்பதனை இச் சிந்தனை முறை கவனத்துக்கு எடுக்கிறது.

சிறிலங்கா அரசு ஈழத் தமிர் தேசத்தின் மீது அனைத்து வகையிலான அடக்குமுறையினைப் பிரயோகிப்பதுடன், மேம்பாடு என்பதனை தனது ஆதிக்கத்தை ஈழத் தமிழர் தேசம்மீது நிலைநிறுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்த முயல்கிறது என்பதனை புரிந்து கொள்கிறது.

சிங்களத்தின் நோக்கத்துக்கு பலியாகி விடாமல் - அதேவேளை ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திரத்திற்கான விருப்பினை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் எவ்வாறு சோற்றை ஆக்க முடியும் எனச் இச் சிந்தனைமுறை சிந்திக்கிறது.

இதற்கு ஏற்ற வகையிலான செயற்திட்டங்களை வடிவமைக்குமாறு தமிழர் அமைப்புக்களையும் ஈழத் தமிழர் தேசத்தையும் கோருகிறது.

இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவதுடன் தனது தேவைக்கேற்ற மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்று இச் சிந்தனைமுறை கோருகிறது.

ஈழத் தமிழர் தேசம் தனக்கென முன்னெடுக்கும் மேம்பாட்டுத் திட்டம் சிறிலங்கா அரசின் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒரு மாற்றீடாக அமைய வேண்டும்.

சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்தி சிங்கள தேசத்தைப் பலப்படுத்தும் ஒரு அரசியல் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது.

ஆனால் ஈழத் தமிழர் தேசம் முன்னெடுக்கும் மேம்பாட்டுத் திட்டம் ஈழத் தமிழ் தேசத்தைப் பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.

எந்த வகையிலும் சிறிலங்கா அரசினைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை நலிவடையச் செய்யக் கூடியதாகவும் அமையக்கூடாது.

ஈழத் தமிழர் தேசம் சிறிலங்கா அரசின் பிடியிலும் இராணுவ ஆக்கிரமிப்பிலும் உள்ள சூழலில் அதனை எவ்வாறு செய்வது? இதனை சிறிலங்கா அரசு அனுமதிக்குமா?

இது எல்லோர் மனதிலும் முக்கியமாக எழக்கூடிய ஒரு கேள்வி.

ஈழத் தமிழர் தேசத்தின் கழுத்தை சிங்களம் திருகி வைத்திருக்கும் ஒரு சூழலில் இது இலகுவாக இருக்காது என்பது உண்மைதான்.

ஆனால் சரியான முறையில் திட்டமிட்டு உரிய புரிந்துணர்வுடன் களமும் புலமும் இணைந்து செயற்பட்டால் நாம் சோற்றுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் ஒரே நேரத்தில் போராட முடியும்.

உலகமயமாக்கல், நாடு கடந்த உறவுமுறை, சந்தைப் பொருளாதாரம் போன்றவை தரக்கூடிய வெளிகளை நாம் இம் முயற்சியில் பயன்படுத்த வேண்டும்.

மக்கள், மக்களில் தங்கியிருந்து மேம்பாட்டு முயற்சிகளை மேற்கோள்ளும் சமூக பொருளாதார சிந்தனையின் அடிப்படையில் நமது சோறு ஆக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபடலாம். இம் முயற்சிகள் கீழிருந்து மேற்கிளம்புவையாக அமைய வேண்டும்.

சிறு கைத்தொழில் முயற்சிகைள உருவாக்கல், இதன் ஊடாகப் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தாயகத்தில் நமது பொருளாதார முயற்சிகளின் அடிப்படையில் உருவாகும் பொருட்களுக்கு புலத்தில் சந்தை வாய்ப்புக்களை உருவாக்கல், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், மக்களின் சுகாதார நலத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் - இவை போன்ற பல விடயங்கள் நமது சோறு ஆக்கும் முயற்சியில் முக்கியம் பெறலாம்.

இவை அடிப்படையில் மனிதவளத்தை வளப்படுத்தும் நடவடிக்ககைளின் பாற்பட்டவையாக அமையக்கூடியவை.

இவற்றை எவ்வாறு செய்வது குறித்த மூலோபாயம், தந்திரோயாயம் குறித்து ஈழத் தமிழர் தேசம் ஆழமாக தனக்குள் விவாதித்துக் கொள்ள வேண்டும். இவ் விவாதங்கள் பகிரங்கத் தளத்தில் நடக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இவற்றைச் செய்பவர்கள் தெளிந்த அரசியல் உடையவர்களாக இருத்தல் முக்கியமானது. இதேவேளை இவர்கள் வெளிப்படையாக அரசியல் பேச வேண்டிய அவசியம்கூடக் கிடையாது.

நோய்த் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டவர்கள் நோயில் இருந்து பாதுகாக்கப்படுவது போல, தெளிந்த அரசியல் என்ற கவசத்தை அணிந்து இம் முயற்சியினை எடுப்பவர்கள் தடம் மாறாமல் பயணிப்பார்கள்.

இவர்கள் ஆக்கும் சோறு நமது சுதந்திரத்துக்கும் வலுச்சேர்க்கும்.

2/10/2012 3:21:04 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்