Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நிலக் கபளீகரத்துக்கெதிராக அனைத்துலக ஆதரவினை வெல்வது எவ்வாறு?

நிலக் கபளீகரத்துக்கெதிராக அனைத்துலக ஆதரவினை வெல்வது எவ்வாறு?
தாமரை காருண்யன்

 

மனந்திறந்து பேசுவோமே - 8

தாயகத்திலும் புலத்திலும் சிங்களத்தின் நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக அனைத்துலகக் கவனத்தினை ஈர்ப்பதற்கான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

போராட்டங்கள் சிறிய அளவிலேயே நடைபெற்றாலும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நடைபெற்ற போராட்டங்கள் என்ற வகையிலும் மே 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாயகத்திலும் புலத்திலும் ஒரே நோக்கத்துக்காக ஒரே நேரத்தில் நடைபெற்ற போராட்டங்கள் என்ற வகையிலும் இப் போராட்டங்கள் கவனத்தினை ஈர்க்கின்றன.

ஈழத் தமிழ்த் தேசிய இனம் தற்போது எதிர்நோக்கும் மிகப் பெரும் ஆபத்தும் சவாலும் தமிழர் தாயகப் பகுதிகள் சிங்களத்தால் மிக வேகமாக கபளீகரம் செய்யப்படுவதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பதுதான்.

இந்த விடயத்தில் சிங்களம் மிகத் தெளிவான செயற்திட்டத்துடன் செயற்பட்டு வருகிறது. இது உண்மையில் ஒரு அரசாங்கத்தின் திட்டம் அல்ல. அரசின் திட்டம். அரசின் கொள்கை (State policy).

இதனால் எந்த சிங்கள அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலக் கபளீகரம் தொடரவேதான் செய்யும். செய்யப்படும் முறையிலும் வேகத்திலும் சில வேளைகளில் வேறுபாடுகள் இருக்கக்கூடும்.

இதனால் ஈழத் தமிழர் தேசத்தின் போராட்டத்தின் பெரும் பகுதி தமிழர் தாயகப் பிரதேசத்தைக் காப்பதனை மையமாகக் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த வகையில் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் இன்னும் தீவிரம் அடைய வேண்டும்.

நிலக் கபளீகரத்துக்கெதிராக அனைத்துலக ஆதரவினை வெல்வது எவ்வாறு?

இங்கு தீவிரம் என்று கூறும்போது போராட்டங்களின் அளவினை, எண்ணிக்கையினை (quantity) மட்டும் குறித்துரைக்கவில்லை. போராட்டங்களின் தரமும் (quality) கனதியும் மிகவும் முக்கியமானவை.

இங்கு தரம் எனும்போது போராட்டங்கள் நமது உணர்வின், உணர்ச்சியின் வெளிப்பாடாக மட்டும் அமையாது நில ஆக்கிரமிப்பினைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கக்கூடிய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கும் நிலையே குறிப்பிடப்படுகிறது.

இதனால் நமது நிலத்தைச் சிங்களத்திடம் இருந்து பாதுகாப்பதற்கு எத்தகைய போராட்ட வடிவங்கள் தேவைப்படுகின்றன என்பதனை ஈழத்தமிழர் தேசம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

நாம் எதிர்நோக்கும் ஆபத்தினை நன்கு உள்வாங்கிக் கொள்ள வழிசெய்யும் வகையில் சிங்களத்தின் நிலக்கபளீகரத் திட்டநிரல் தொடர்பான சில விடயங்களைக் முதலில் குறித்துக் கொள்வோம்.

1. சிங்களத்தைப் பொறுத்தவரை இலங்கைத்தீவு சிங்கள தேசத்துக்குரியது. ஏனையோர் அனைவரும் வந்தேறுகுடிகள். இவர்கள் வாடகைக் குடியிருப்பாளர்கள் போன்றவர்கள். இவர்களுக்கு நிலத்தைப் பயன்படுத்துவதற்குக்கூட வரையறுக்கப்பட்ட உரித்தே இருக்கிறதேயன்றி பிரதேசங்களை உடமை கொள்ள எவ்வகை உரித்தும் இல்லை. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்கள் என்பதனை சிங்களம் ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை.

2. இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கைத்தீவின் வட கிழக்குப் பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பூமி என இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் நடைமுறையில் நிலம் தொடர்பான எந்த அதிகாரமும் தமிழர் கைகளுக்குக் கிடைக்க சிங்களம் அனுமதித்ததில்லை. அனுமதிக்கப் போவதுமில்லை. தற்போதய சிங்கள அரசு -கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் முக்கிய நெருக்கடியினை ஏற்படுத்தியதில் நில உரிமை தொடர்பான விடயத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

3. வடக்கு கிழக்கை தமிழர்களும் முஸ்லிம்களும் உரிமை கோருவதனை இல்லாதொழிக்க வடக்கு கிழக்கில் உள்ள நிலங்களைக் கபளீகரம் செய்தும் சிங்களவர்களைக் குடியேற்றம் செய்தும் சிங்களப் பகுதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களுடன் இணைத்தும் இப் பிரதேசங்களின் மக்கள் குடிசனப் பரம்பலை மாற்றியமைத்தல் நிலக்கபளீகரக் கொள்கையின் பெறுபேறாக (outcome) திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழர்களோ முஸ்லிம்களோ பெரும்பான்மையினர் இல்லாத நிலையினை காலப்போக்கில் உருவாக்கும் திட்டம் இதில் முக்கிய ஒரு பகுதி. கிழக்கிலிருந்து ஆரம்பித்து வன்னியூடாக வடக்கு நோக்கி நகர்தல் என்பதே நிலக்கபளீகரத்துக்கான சிங்களத்தின் போர்த்திட்டம். இந்தப் போர்த்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது சிங்கள அரசின் முக்கிய பணி.

4. ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் சிங்களத்தின் நிலக்கபளீகரப் போர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆயுதம் தாங்கிய போரை சிங்களம் வென்ற பின்னர் நில ஆக்கிரமிப்பினை மிகவும் வேகமாகவும் இலகுவாகவும் செய்யக்கூடிய வாய்ப்பு சிங்களத்துக்குக் கிடைத்திருக்கிறது. வீதிக்கு வீதி நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரும் சிங்களத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதுணையாக அமையும் நிர்வாகத்துறையும் இணைய நிலக்கபளீகர முயற்சி வேகப்படுகிறது.

5. சிங்களத்தின் திட்டம் இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்தும் நிலையினை, தகமையினை இல்லாதொழிப்பதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனால் தமிழர் தாயகம் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பாக அமையாது அவற்றைத் துண்டாடுதல் சிங்களத் திட்டத்தில் முக்கியம் பெறுகிறது.

6. சிங்களத்தின் நிலக்கபளீகரத் திட்டம் நிலவடிவமைப்பு (Landscape) ஆக்கிரமிப்பினையும் முக்கிய பகுதியாகக் கொண்டுள்ளது. நிலவடிவமைப்பு நிலத்துக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்புகளிலேயே பொதுவாக உருவாகிறது. இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் இயற்கைக்கும் (nature) பண்பாட்டுக்கும் (culture) உள்ள உறவுகளும் தொடர்புகளும் முரண்களும் நிலவமைப்பில் பிரதிபலிக்கும். குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களின் பண்பாட்டு அம்சங்கள் நிலவடிவமைப்பில் வெளிப்படும். உதாரணமாக கட்டிடங்கள், கோவில்கள், சாலைகள், பூங்காக்கள் போன்றவை அமைக்கப்படும்போது இவற்றின் வடிவம், பயன்படுத்தப்படும் நிறங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் இப் பகுதியில் வாழும் மக்களின் பண்பாட்டுடன் இணைந்த வகையில் அமைந்திருக்கும். இவை ஒரு நிலப்பரப்பின் வடிவமைப்பின் தன்மையினைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும். தற்போது தமிழர் தாயகப் பகுதிகளில் புதிது புதிதாக அமைக்கப்படும் புத்தர் சிலைகளும் கோவில்களும் தமிழர்தாயகத்தின் நிலவடிவமைப்பினை மாற்றியமைத்துக் கொண்டிக்கின்றன. புதிதாக அமைக்கப்படும் கட்டிடங்களும் சிங்களக் கட்டிடக்கலையின் வெளிப்பாட்டை கூடுதலாகக் கொண்டவையாகவே அமையப் போகிறது. இதனால் தமிழர் தாயகத்தின் நிலவடிவமைப்பு சிங்களப் பிரதேசங்களின் நிலவடிவமைப்பை ஒத்ததாக மற்றமடையும் நிலை காலப்போக்கில் உருவாகும் ஆபத்தும் கூடவே காத்திருக்கிறது.

7. தமிழர் நிலத்திலும் நிலவடிவமைப்பிலும் சிங்களம் ஏற்படுத்திவரும் மாற்றங்களை பின்னாளில் மீண்டும் மாற்றியமைப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. எதிர்காலத்தில் தமிழர் கையில் முழுமையான அதிகாரம் வரும் காலம் உருவாகும்போதுகூட மீண்டும் மாற்றியமைக்கமுடியாத அளவுக்கு மக்களோடும் (சிங்கள), மதத்தோடும் (பௌத்த) இணைந்த வகையிலேயே இம் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பின்னாளில் மாற்றங்களை ஏற்படுத்துவதாயின் குடியமர்த்தப்பட்ட சிங்களவர்களோடும் பௌத்த மத நிறுவனங்களோடும் மோத வேண்டிய நிலையே தமிழர் தரப்புக்கு ஏற்படும். அனைத்துலக விழுமியங்களை மதிக்கும் ஒரு நாகரீகமான மக்கள் கூட்டத்தால் இதனைச் செய்ய முடியாது.

8. சிங்களத்தின் நிலக்கபளீகரம் தமிழ் இனக்கபளீகரத்தின் ஒரு முக்கிய பகுதியாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தை இலங்கைத்தீவில் உதிரிகளாக்கும் இனக்கபளீகரத் திட்டத்தின் பாற்பட்டுத்தான் நிலக்கபளீகரம் நடைபெறுகிறது. இந்த வகையில் இது இனஅழிப்பின் (genocide) பகுதியாகத்தான் கருதப்படவேண்டும்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் சிங்களத்தின் நிலக்கபளீகரத் திட்டத்தின் சில அம்சங்களையும் தமிழர் தேசத்திற்கு ஏற்படும், ஏற்படக்கடிய ஆபத்துக்களையும் குறித்துக் காட்டுகின்றன.

இந் நிலக்கபளீகரத் திட்டத்தை சிங்களம் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி மேற்கொண்டு வருகிறது. இவற்றில் மூன்று திட்டங்கள் முக்கியம் பெறுகின்றன.

முதலாவது, அரசகாணிகளைப் பயன்படுத்தல். இலங்கைத்தீவில் மிகப்பெரும் நிலவுடைமையாளர் அரசே. இதனால் தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை சிங்களம் தனது திட்டத்துக்கு ஏற்ப பயன்படுத்துவதற்குத் தடையாக சட்ட நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. இதனால் அரச காணிகளை மிக இலகுவாகத் தமது திட்டத்துக்குப் பயன்படுத்தும் நிலையில் சிங்களம் உள்ளது. பயன்படுத்தியும் வருகிறது. இராணுவக் குடும்பங்களின் குடியேற்றங்கள், விவசாய மற்றும் மீன்பிடிச் சிங்களக் குடியேற்றங்களுக்கு கூடுதலாகப் பயன்படுத்தப்படுவது அரச உடைமைக் காணிகளே. 

இரண்டாவது, தனியார் காணிகளைக் கபளீகரம் செய்தல். தனியார் காணிகளையும், மக்கள் குடியிருந்து வந்த நிலப்பகுதிகளையும் இராணுவத் தேவைக்காகவும், மேம்பாட்டுத் திட்டம் என்ற போர்வையிலும் கபளீகரம் செய்யும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலக்கபளீகர முயற்சிக்கு ஏற்ற முறையில் சட்டத்தையும் நிர்வாக இயந்திரத்தினையும் கையாளும் ஒரு பொறிமுறையினைச் சிங்களம் தோற்றுவித்துள்ளது.

மூன்றாவது, தமிழர் பிரதேசங்களில் உள்ள தமிழர்களின் தனியார் காணிகளை சிங்கள முதலாளிகளும் சிங்கள மக்களும் பணம் கொடுத்து வாங்கி அவற்றை சிங்கள உடமையாக்கும் திட்டம். இத் திட்டம் பாலஸ்தீனர்களின் கைகளில் இருந்த நிலங்களை யூதர்கள் தம்வசப்படுத்திக் கொண்ட முறையில் இருந்து சிங்களத்தின் அக்கறையினைப் பெற்றிருக்கிறது. எல்லையோரக் கிராமங்களில் உள்ள தமிழர் காணிகளும் தமிழர் தாயகத்தில் கேந்திர மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள காணிகளும் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் குறிவைக்கப்படுகின்றன. இவற்றைவிட, போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேறுவதற்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டு, இவர்களைத் தமது பகுதிகளில் குடியேறாது தடுத்து இவர்களின் நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்து நிலக்கபளீகரம் செய்யும் நிலைமைகளும் உள்ளன.

இப் பின்னணியில் இன்று நம் முன்னால் உள்ள முக்கியமான கேள்வி இதுதான். சிங்களத்தின் இந்த நிலக்கபளீகரத்தை நாம் எவ்வாறு தடுத்து நிறுத்தப் போகிறோம்? நாம் தற்போது மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் சிங்களத்தின் நிலக்கபளீகரத்தைத் தடுத்து நிறுத்தப் போதுமானவையா?

ஈழத் தமிழர் தேசம் தற்போது இவ்விடயத்தில் மேற்கொண்டுவரும் போராட்டங்களும் செயற்பாடுகளும் போதுமானவை அல்ல என்பதனைப் புரிந்து கொள்வதற்கு பெரிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை.

இன்றைய சூழலில் தமிழர் தேசம் சிங்களத்தின் நிலக்கபளீகரத்தினை எதிர்கொள்வதற்கு எத்தகைய போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? எந்த வகையில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளலாம்? இவை குறித்து தமிழர் தேசம் மிகவும் ஆழமாக விவாதித்து திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நிலக்கபளீகரம் தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் தனித்து நின்று போராடி இதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய சூழலை உருவாக்க முடியாது.

இதனால் அனைத்துலக கவனத்தை ஈர்ப்பதில் இருந்து முன்னேறி, அனைத்துலக ஆதரவினை இப் போராட்டத்துக்கு ஆதரவாக நாம் வென்றெடுக்க வேண்டும். இதனை நோக்கி நாம் முன்னேறுவது எவ்வாறு?

இவ் விடயம் தொடர்பான சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வது பயன் தரக்கூடியது.

நாம் அனைத்துலக சமூகம் எனப் பொதுவாகக் கூறினாலும் அனைத்துலக அரசுகளே - அதுவும் பலம் வாய்ந்த அரசுகளே அனைத்துலக சமூகத்தின் முக்கியமான, தீர்மானமான சக்தியாக உள்ளன.

இதனால் அனைத்துலக சமூகம் எனப் பேசும்போது அரசுகளை ஒரு குழுமமாகவும் அரசுகளாக இல்லாத ஏனைய பங்காளர்களை வேறொரு குழுமமாகவும் வைத்துச் சிந்தித்தல் நன்று.

அரசுகள் என்ற முறைமையினுள் (System) இவற்றுக்கிடையேயான உறவுகள், முரண்கள் உள்ளடங்கலான ஓர் உறவொழுங்கு முறையாக உலக ஒழுங்கு அமைந்துள்ளது.

இன்றைய உலக ஒழுங்கில் அரசுகளுக்கிடையே உறவுகளும் முரண்பாடுகளும் சமகாலத்திலேயே நிலவுதும் இவற்றை அரசுகள் தமக்கிடையேயான இராஜதந்திர அணுகுமுறையின் ஊடாகக் கையாள்வதும் மிக இயல்பாக உள்ளது.

உதாரணமாக அமெரிக்காவும் இந்தியாவும் சில விடயங்களில் ஒத்த நிலைப்பாட்டையும் வேறு சில விடயங்களில் முரண்பட்ட நிலையையும் கொண்டிருப்பதும் இன்றைய உலக ஒழுங்கில் மிக இயல்பானது. பனிப்போர் கால அணிசார் கூட்டுக்கள் தற்போது மாற்றமடைந்துள்ளன.

இதனால் இன்றைய காலத்து அரசுகளின் உறவுகள் முரண்பாடுகளும் ஒத்துழைப்புக்களும் இணைந்த ஒரு கலவையாக உள்ளன.

இலங்கைத்தீவினைப் பொறுத்தவரை சீனாவின் மேலாதிக்கம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பொது அக்கறைக்குரிய விடயமாக உள்ளது.

இத்தகைய பின்புலத்தில், சிங்களத்தின் நிலக்கபளீகரத்துக்கு எதிராக அனைத்துலக அரசுகளின் ஆதரவினை வெல்வதற்கு அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆதரவினை ஈழத் தமிழர் தேசம் வென்றெடுக் வேண்டியது அவசியமாக உள்ளது. சீனா உறுதியாக சிறிலங்கா அரசின் பக்கம்தான் நிற்கும்.

இந்த அரசுகளின் ஆதரவினை வெல்வதற்கு தர்மத்தின் மொழி மட்டும் உதவப்போவதில்லை. நமது நலன்களும் இந்த அரசுகளின் நலன்களும் ஏதாவது ஒரு பொதுப்புள்ளியில் சந்தித்தாக வேண்டும்.

சிங்கள அரசினை தம்வசப்படுத்தி இலங்கைத்தீவினை தாமும் பங்குபோட்டுக் கொள்ள வேண்டும் எனச் சிந்திக்கும் இந்த அரசுகளை நாம் எவ்வாறு வென்றெடுப்பது?

இதுவே ஈழத் தமிழர் சமூகத்தின் மத்தியில் உள்ள முக்கியமான சவால்.

இந்தியாவினைக் கையாள்வதற்கு தமிழகம்தான் திறவுகோல். ஆனால் தமிழகத்தை கையாளக்கூடிய வித்தை மத்திய அரசுக்கு நன்கு தெரிகிறது.

தமிழர் தாயகம் சிங்களத்தின் கபளீகரத்துக்கு உள்ளாகிப் போனால் இலங்கைத்தீவில் இந்தியா தோல்வியடைந்து சீனா வெற்றியடையும் நிலை உருவாகும். இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களை உணர வைக்க முடியுமா?

இலங்கைத்தீவில் நிரந்திர அமைதி இருக்க வேண்டுமானால், இந்த அமைதி நிலையின் ஊடாகத்தான் அமெரிக்க நலன்கள் உறுதிப்படும் என அமெரிக்கா கருதுமானால் - சிங்கள - தமிழர் தேசங்கள் சமத்துவமான நிலையில் தமக்கிடையேயான உடன்பாட்டை எட்டுவதே சிறந்ததாக அமையும் என அமெரிக்காவை ஏற்றுக்கொள்ள வைக்க முடியுமா?

தற்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளின் குடிசனப்பரம்பலை மாற்றிமைக்கும் சிங்களத்தின் முயற்சியினை மேற்குலகம் அவ்வளவாக இரசிக்கவில்லை எனத் தெரிகிறது. இலங்கைத்தீவில் அமைதியினை ஏற்டுத்தும் முயற்சிக்கு இது இடையூறாக அமையும் என இவர்கள் கருதுவதாகவும் அறிய முடிகிறது.

இந்தச் சூழலை ஈழத் தமிழர் தேசம் தனக்குச் சாதகமாக பயன்படுத்த வேண்டும்.

சிங்களத்தின் நில ஆக்கிரமிப்பினை எதிர்த்துப் போராட பரந்துபட்ட ஐக்கிய முன்னணியொன்றினை கட்டியெழுப்ப வேண்டும்.

தமிழீழம் பேசுவோரும், பேசாதோரும் ஏன் எதிர்ப்போரும் கூட – சிங்களத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் இந்த ஐக்கிய முன்னணியில் இணையும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

புலிகளை ஆதரித்தோர், ஆதரிக்காதோர், எதிர்த்தோர் எவராயினும் சிங்களத்தின் நிலக் கபளீகரத்தை எதிர்க்க முன்வரின் இந்த ஐக்கிய முன்னணியில் இணையும் நிலை இருக்க வேண்டும்.

தமிழர்கள் மட்டுமன்றி முஸ்லிம்கள், சிங்களவர்கள், அனைத்தலக சமூகத்தவர் என - நில ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்பட முன்வரும் எவரும் இந்த ஐக்கிய முன்னணியில் இணையும் சூழல் உருவாக்கப்படவேண்டும்.

இலங்கைத்தீவிலும் தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் மேற்குலகிலும் இந்த நில ஆக்கிரமிக்கு எதிரான காத்திரமான போராட்டங்களும் அரசியல், அறிவியல், இராஜதந்திரத் தளங்களிலான செயற்பாடுகள் தொடர்ச்சியாவும் எழுச்சியாகவும் நடைபெறவேண்டும்.

அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என நம்மிடையே ஒரு முது மொழி உண்டு. முயற்சி திருவினையாக்கும் எனவும் நம்புவர்கள் நாங்கள்.

இதனால் நிலக்கபளீகரத்துக்கு எதிராக பரந்தபட்ட தளத்தில் செயற்பட தமிழர் தேசம் தயாராக இருக்க வேண்டும்.

இத் தருணத்தில் காதில் விழுந்த நம்பகமான தகவல் ஒன்றையும் குறிப்பிட வேண்டும். இத் தகவல் ஒர் எச்சரிக்கை மணியினையும் ஒலிக்க வைக்கிறது.

நோர்வேயில் ஒஸ்லோப் பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா அரசின் நிலக்கொள்கை தொடர்பாகவும் நில ஆக்கிரமிப்புத் தொடர்பாகவும் கடந்த யூன் மாதம் 22 ஆம் திகதி ஓர் அறிவியல் கருத்தரங்கு ’நோர்வே தமிழர் கல்வி மையம்’ என்ற அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கருத்தரங்கில் தமிழ் முஸ்லிம் சிங்கள மற்றும் அனைத்துலக சமூகத்தினைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பங்கு பற்றியிருந்தனர். மே 2009 க்குப் பின்னர் நிலப்பிரச்சினை தொடர்பாக அறிவியல் தளத்தில் இடம்பெற்ற முதலாவது கருத்தமர்வு என இதனைக் குறிப்பிடலாம்.

இக் கருத்தரங்கில் உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வண. இம்மானுவல் அடிகளாருக்கும் அழைப்பு விடுக்கபட்டு அவரும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்.

இங்கு வேதனையான தகவல் என்னவென்றால் அடிகளாரை இந் நிகழ்வில் பங்குபற்ற வேண்டாம் என அவருக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடிகளார் இந்த அழுத்தத்தையும் மீறி நிகழ்வில் பங்குகொண்டிருந்தமை மகிழ்வு தரும் விடயமாக உள்ளது.

இன்னுமொரு முக்கியமான புலத்துத் தலைவர் கருத்தரங்கில் பங்கு கொள்ள விரும்பியபோதும் அழுத்தத்துக்கு கட்டுப்பட்டு இறுதிநேரத்தில் பங்கு கொள்வதனைத் தவிர்த்து விட்டார்.

இந்த அழுத்தங்கள் போராட்டத்தின் பேராலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. தாம் மட்டும் இயங்க வேண்டும் என்ற ஏகபோகச் சிந்தனையில் இருந்து இந்த அழுத்த முயற்சி பிறப்பெடுத்திருக்கிறது. அழுத்தத்தை வழங்கியவவர்கள் யார் என்பதனைக் கண்டறியும் பொறுப்பினை வாசகர்களிடமே இப் பத்தி விட்டு விடுகிறது. நான் இதனை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு.

நிலக்கபளீகரத்துக்கெதிரான பரந்துபட்ட ஒரு ஐக்கிய முன்னணியினை இத்தகைய குத்தகை மனப்பான்மையுடன் கட்டியெழுப்ப முடியுமா?

இனத்தின் மக்களின் நன்மைக்காக நாம் நம்மைச் சுற்றிக் கட்டிவைத்திருக்கும் குறுகிய வட்டத்தினை விட்டு வெளியே வரமாட்டோமா?

இல்லை என அடம் பிடிப்போமானால் - காத்திரமான போராட்டங்களுக்குத் தேவையான ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியினை கட்டியெழுப்பத் தவறுவோமேயானால் -

சிங்களம் தனித்து நின்று இந்த நிலக் கபளீகரத்தினைச் செய்யவில்லை – நாமும் தமிழர் தாயக நிலப்பகுதிகளை சிங்களத்திடம் தாரைவார்த்துக் கொடுத்தோம் என்பதே வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

7/4/2012 6:21:43 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்