Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17

தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17
தாமரை காருண்யன்

 

ஈழம் தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா?

இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம்.

நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம்.

முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம்.

முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல.

இது உலகத் தமிழ் மக்கள் மனதெங்கும் உறைந்திருக்கும் தார்மீகச் சீற்றத்தின் குறியீடு. 

சிங்களம் ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடாத்திய இனப்படுகொலையின் இரத்த சாட்சியம்.

முள்ளிவாய்க்கால் நினைவுகளில் ஒரு துளிதானும் எஞ்சியிருக்கும்வரை ஈழத் தமிழர் தேசம் சிங்களத்தின் காலடிகளில் மண்டியிடப்போவதில்லை.

இதனை வரலாறு நிச்சயம் நிருபிக்கும்.

இந்த வாரம் இந்த உறுதியையும் வலிமையையும் நம் எல்லோருக்கும் தரட்டும்.

இவ்வாரத்தில் எதைப் பற்றிப் பேசுவது? எதைப் பற்றிப் பேசாது விடுவது?

இத் தொடர் 'எல்லாம் முடிந்து விட்டது' இனி ஏது செய்ய நம்மால் முடியும்' என்ற தோல்வி மனப்பான்மையில் எழுதப்படவில்லை என நாம் ஆரம்பத்திலேயே பதிவு செய்திருந்தோம்.

நமது தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து அந்தப் பட்டறிவின் ஒளியில் அடுத்த காலடியினை எடுத்து வைப்பதற்குத் துணைபுரியும் ஒரு முயற்சியாகவே இத் தொடர் எழுதப்படுகிறது.

இத் தொடரில் குறிப்பிடப்படும் விடயங்கள் ஏதோ ஒரு வகையில் நம்மை நாமே திரும்பிப் பார்க்கும் முயற்சிதான்.

நமது சரிகளை தவறுகளை அடையாளம் கண்டு அடுத்த கட்டம் குறித்த சரியான திசையினைக் கண்டறிவதற்கு நாம் சில விடயங்களை மனம் திறந்து பேசித்தான் ஆக வேண்டும்.

இதனால் இவ் அங்கத்திலும் நாம் ஒரு முக்கியமான விடயத்தைப்பற்றிப் பேசத்தான் போகிறோம்.

தைத்திங்களன்று (14.01.2010) பொங்குதமிழ் ஆரம்பிக்கப்பட்டபோது ஆரம்பித்திருந்த இக் கட்டுரைத் தொடரின் முதலாவது நுழைவாயில் பகுதியில் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் சில குறிப்புக்களை நாம் பதிவு செய்திருந்தோம்.

காலத்தின் தேவை கருதி இவ் அங்கமும் அக் குறிப்பிட்ட பகுதிகளை மீளக் குறித்துக் கொள்கிறது.

அந்தப் பகுதிகளைப் பாருங்கள். 

Tamil Nation இணையத்தின்* ஆசிரியரும் அறிஞருமான திரு நடேசன் சத்தியேந்திரா அவர்கள் பிரபாகரனின் மறைவுக்கு மரியாதை செலுத்தி தனது இணையத்தளத்தை 30 நாட்கள் மூடி வைத்திருந்தார். இது குறித்து தனது இணையத்தில் அவர் 18.06.2009 அன்று பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

Tamilnation.org கடந்த ஒரு மாத காலமாக – வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மறைந்த 17.05.2009 க்கு அடுத்த தினத்திலிருந்து 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தது. இது இனிவரும் தலைமுறைத் தமிழர் நெஞ்சமெல்லாம் அந்நிய ஆட்சிக்கு எதிரான தமிழர் போராட்டத்தின் குறியீடாக, காலத்தால் சாவடையாது நிறைந்து வாழப் போகும் ஒரு தேசியவீரனின் மறைவுக்கு மரியாதை செலுத்துதற்கான காலமாகும். இத்தகைய மரியாதைக் காலங்கள் துயர்பகிர்தலுக்கு உரியவை மட்டுமல்ல. நாமெல்லாம் நம்மை நாமே உள்ளுணர்ந்து கொள்வதற்கானவையுமே...' (http://www.tamilnation.org/comments.htm - மொழிபெயர்ப்பு கட்டுரையாளருடையது)

இக் கட்டுரையின் மையமாக ஈழத் தமிழர் தேசத்தின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் அமைகிறது. இதனால் கட்டுரையின் முக்கிய பேசுபொருளாக விடுதலைப்புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் அவரது அரசியலும் அணுகுமுறையும் அமையப் போகிறது. பிரபாகரன் அவர்களது வீரச்சாவினை ஏற்று - ஒரு போராளியாக - ஈழத்தமிழர் தேசத்தின் தலைவராக - தனது சரிகளோடும் தவறுகளோடும் அவர் வாழ்ந்த ஏறத்தாழ 4 தசாப்த கால போராட்ட வாழ்வுக்கு இக் கட்டுரை மதிப்பளிக்கிறது.'

இக் கட்டுரைத் தொடரைப் பொறுத்த வரையில் இவ் வாரம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், ஒரு வருடத்துக்கு முன்னர் இக் காலப்பகுதியில் தமது உயிர்களை ஈகம் செய்த தளபதிகள், போராளிகள் மக்கள் அனைவருக்கும் உலகத் தமிழினம் தலைவணங்கி மரியாதை வணக்கம் செலுத்த வேண்டிய வாரமாகும்.

இக் கட்டுரைத்தொடர் இவர்களுக்குத் தனது மரியாதை வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறது.

தனது வாழ்க்கையின் ஏறத்தாழ 4 தசாப்தங்களை போராட்ட வாழ்க்கைக்காக அர்ப்பணித்தவருக்கு, தனது மனைவி 3 பிள்ளைகள் உட்பட தனது முழுக் குடும்பத்தையே தமிழீழ விடுதலை இலட்சியத்துக்காக ஈகம் செய்தவருக்கு, ஈழத் தமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன? அதன் அரசியல் விளைவுகள்தான் எவை?

இதுவே கட்டுரைத்தொடரின் இவ் அங்கத்தின் பேசுபொருளாகும்.

முதலில் இக் கேள்வியுடனேயே ஆரம்பிப்போம். தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்கு உங்களால் எப்படிப் போக முடியும்? இதற்கான ஆதாரங்கள்தான் எவை?

எங்கிருந்து தொடங்குவது? நம்பிக்கைகளில் இருந்தா அல்லது விசாரணைகளில் இருந்தா? லெனினின் பிரபல்யமான வாதங்களில் ஒன்று இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

இக் கட்டுரைத் தொடர் நம்பிக்கைகளில் இருந்து தொடங்கவில்லை. மாறாக விசாரணைகளில் இருந்துதான் தொடங்குகிறது.

நாம் வெறும் நம்பிக்கைகளிலிருந்து உலகினையும் விடயங்களையும் பார்க்கவில்லை. எமது பார்வை விசாரணைகளில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு குறித்த விடயத்திலும் நாம் விசரணைகளில் இருந்துதான் தொடங்குகிறோம்.

இந்த விசாரணைகள், முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்கள் வரை தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தமைக்கான ஆதாரபூர்வமான தகவல்கள், சிறிலங்கா அரசபடைகள் முள்ளிவாய்க்கால் பகுதியினை முற்றுகை செய்து வைத்திருந்த விதம், தலைவர் பிரபாகரனின் உடலம் குறித்த விவாதங்கள், இவ் விடயம் தொடர்பாக எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினரிடையே இருந்த கருத்துக்கள், அவர்களது செயற்பாடுகள், உலக நாடுகளின் அரச இயந்திரங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்த ஆய்வாளர்கள் இவ்விடயம் குறித்து வகுத்துக் கொண்ட முடிவுகள், சிறிலங்கா அரசும் இராணுவ இயந்திரமும் ஆசுவாசமாக தற்பொழுது  இயங்கிக் கொள்ளும் முறைமை உட்பட்ட பல விடயங்களை ஆய்வு செய்தே தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்கு இக் கட்டுரைத் தொடர் வருகிறது.

இக் கட்டுரைத் தொடரைப் பொறுத்தவரையில் விசாரணைகளில் இருந்து விடயங்களை ஆரம்பிப்பவர்கள், தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புவதற்கு எந்தவித அடிப்படைகளும் இல்லை.

இதனால், தமது விசாரணைகளின் அடிப்படைகளில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்த விட்டார் என்ற முடிவுக்கு வந்தவர்கள், நாம் மேலே குறிப்பிட்ட அறிஞர் சத்தியேந்திரா செய்தமையினைப்போல அவருக்குரிய மரியாதையினைச் செலுத்துவதற்கு முன்வரவேண்டும் என இக் கட்டுரைத்தொடர் கருதுகிறது.

தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை மனதளவில் ஏற்றுக் கொண்ட கணிசமான மக்கள் அவருக்கு மரியாதை வணக்கம் செய்ய வேண்டும் என மனதார விரும்புகிறார்கள்.

ஆனால் அதற்குரிய சூழல் இல்லாமையால் தமது உணர்வுகளையெல்லாம் தமக்குள் அடக்கிக் கொண்டு, தாம் நம்புபவர்களுடன் மட்டும் இதைப் பற்றிப் பேசிக் கொண்டு இவர்கள் இருக்கிறார்கள்.

இதேவேளை, தமது நம்பிக்கைகள் காரணமாக, தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இன்னும் உண்மையுடன் நம்பிக்கையுடன் இருப்பவர்களும் கணிசமான அளவு இருக்கிறார்கள். இக் கட்டுரைத்தொடர் இவர்களை அன்புடனும் அரவணைப்புடன்தான் அணுகுகிறது.

இவர்கள் உரியமுறையில் விசாரணைகளில் இருந்து விடயங்களை அணுகாவிட்டாலும்கூட, தமது நம்பிக்கைகளில், விருப்பங்களில் இருந்து முடிவுக்கு வந்தாலும்கூட, தமது நம்பிக்கைகளுக்கு உண்மையாக, விசுவாசமாக இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குத்தாமே மனதறிந்த பொய்யர்கள் அல்லாமல் இருக்கிறார்கள்.

இவர்களை விட இன்னொரு தொகுதி மக்கள் இவ் விடயத்தில் தமது அறிவுக்கும் மனதுக்குமிடையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது அறிவு தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் எனக் கூறினாலும் மனம் அதனை ஏற்க மறுக்கிறது.

அதனால் இவர்களில் சிலர் மனதுக்கு ஆறுதலாக இருக்கக்கூடிய ஒரு நிலைப்பாட்டுடன் தமது அறிவின் பாற்பட்ட தேடுதலை இவர்கள் தாமாகவே விரும்பி நிறுத்தி விடுகிறார்கள். வேறு சிலர் தொடர்ந்தும் அறிவுக்கும் மனதுக்குமிடையே அலைக்கழிந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களையும் இக் கட்டுரைத் தொடர் அனுதாபத்துடன்தான் அணுகுகிறது.

இக் கட்டுரைத்தொடரின் கோபம், ஆவேசம் எல்லாம் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்கு தாமே வந்து விட்டு, அதேவேளை தலைவர் உயிருடன் இருக்கிறார் உரிய நேரத்தில் வருவார் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பொய்யுரைத்து இயங்கிக் கொண்டிருக்கும் பொறுப்பானவர்கள் மீதுதான்.

தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழினம் செய்திருக்கவேண்டிய மரியாதையை இல்லாமற் செய்தவர்களும் செய்து கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான்.

இதனை இவர்கள் போராட்டத்தின் பெயரில்தான் செய்கிறார்கள்.

'பாவம் இவர்கள். அறியாமையால் செய்கிறார்கள். ஆதலால் இவர்களை மன்னித்து விடுங்கள்' என்று ஆண்டவனிடம் கேட்கலாம். ஆனால் வரலாற்றிடம் கேட்க முடியாது.

வரலாறு மிகவும் கண்டிப்பானது. சமகாலத்து நிகழ்வுகளையெல்லாம் தொகுத்தெடுத்து, காலத்தட்டில் வைத்து நிறுத்து வகுத்து இவர்களை ஒரு நாள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியே ஆகும்.

உண்மையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருந்தவர்களுக்கு பிரபாகரன் வீரச்சாவு அடைந்துவிட்டாரா இல்லையா என்பதில் குழப்பங்கள் இருக்கவில்லை.

இவர்களுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள், முரண்பாடுகள் எல்லாம் இவ் வீரச்சாவுச் செய்தியினை ஏற்றுக் கொண்டு மக்களுக்கு அறிவிப்பதா இல்லையா என்பது தொடர்பாகத்தான் இருந்தன.

இரண்டு தடவைகள் தலைவரின் வீரச்சாவு செய்தியினை அறிவிப்பது தொடர்பாக எஞ்சியிருந்த புலிகள் இயக்கத்தினருக்கிடையே உடன்பாடு ஏற்பட்டிருந்தது.

முதற்தடவை கே.பிக்கும் கஸ்ரோவின் மறைவுக்குப் பின் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகளின் பொறுப்பாளராக இயங்கியவருக்கும் இடையே இது தொடர்பான ஒரு உடன்பாடு 2009 ஆம் ஆண்டு மே மாதம் 20 திகதியளவில் ஏற்பட்டது.

இவ் உடன்பாட்டின் அடிப்படையில் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவுச் செய்தியினை இப்பொறுப்பாளர் ஒரிரு நாடுகளின் செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துமிருந்தார்.

இவ் உடன்பாட்டை இப் பொறுப்பாளருடன் செயற்பாட்டில் இருந்த சிலர் ஏற்றுக் கொள்ள மறுக்கவே இவர் தனது உடன்பாட்டிலிருந்து பின்வாங்கி கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து கே.பி தனித்தே தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு செய்தியினை மக்களுக்கு அறிவிக்கிறார். இதனை விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுக்கிளை கட்டமைப்புக்கள் ஏற்க மறுத்து கே.பியைத் துரோகியாகச் சித்தரித்தன.

தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழினம் செய்திருக்கக்கூடிய மரியாதை வணக்கம் தவறிப் போனது.

இரண்டாவது தடவை, எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் போராளிகள் தமக்கிடையிலான நீண்ட விவாதங்கள், கலந்துரையாடலின் பின் கே.பியின் வழிநடத்தலில் இயங்குவது என்ற முடிவுக்கு வந்த போது தலைவர் விடயம் தொடர்பாகவும் ஒரு முடிவை எடுக்கிறார்கள்.

அது 2009 ஆம் ஆண்டு யூலை மாத முற்பகுதியில் எட்டப்பட்ட உடன்பாடு.

இவ் உடன்பாட்டின் அடிப்படையில் தலைவரின் வீரச்சாவினை இயக்கத்துக்குள்ளே உடனடியாக ஏற்றுக் கொள்வதாகவும் 2009 ஆம் ஆண்டு மாவீரர் நாள் அன்று தலைவருக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதாகவும் இவர்கள் தீர்மானித்துக் கொள்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் வாரம் கே.பி மலேசியாவில் வைத்து மலேசிய இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட பின்னர் இவர்கள் அமைத்த நிறைவேற்றுக்குழுவும் உடனடியாக நிலைகுலைந்துபோக உடன்பாடும் காணாமல் போய்விட்டது.

தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செலுத்தக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவர்களில் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுக் கிளைக் கட்டமைப்பினரும் தமிழகத் தலைவர்களில் சிலரும் முக்கியமானவர்கள்.

ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள்? தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதான தோற்றத்தை ஏன் ஏற்படுத்துகிறார்கள்?

இதற்கான பதிலை நான்கு வகைக்குள் அடக்க முடியும்.

முதலாவது, தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என ஏற்றுக்கொண்டால் தமிழ்த் தேசியம் தோல்வியடைந்ததாக ஆகிவிடும். சிங்கள பௌத்த இனவாதம் ஈழத் தமிழர் தேசத்தினை வெற்றி கொண்டு விட்டது என்பதனை நாமே ஏற்றுக் கொண்டதாக அமைந்து விடும். 

இது மக்களை போராட்டத்தின்மீது நம்பிக்கை இழக்கச் செய்துவிடும். போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்காது. எனவே தலைவர் பாதுகாப்புக் காரணங்களுக்காக தன்னை வெளிப்படுத்த விரும்பாது மறைவிடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார். உரிய நேரத்தில் வருவார் என்ற தோற்றத்தை வெளிப்படுத்தியவாறு செயற்பாடுகளைத் தொடர வேண்டும். 

இந்த வாதம் புலத்திலும் தமிழகத்திலும் வலுவாக இருக்கிறது.

இக் கட்டுரைத் தொடரைப் பொறுத்தவரை இது மிக அபத்தமான வாதம். நமது அடுத்த கட்டப் போராட்டத்தின் திசையையும் அதை நோக்கிய பயணத்தையும் தெளிவாக வரையறுத்து முன்னோக்கிச் செல்வதற்கு இடையூறு விளைவிக்கும் அணுகுமுறை.

இரண்டாவது, பிரபாகரனை உயிர்ப்போடு வைத்திருப்பதன் ஊடாக தமது கட்டமைப்பையும், அதிகாரத்தினையும் அரசியல் வாழ்க்கையினையும் பேண முயலும் ஒரு போக்கு.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுக்கிளைக் கட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கு தமது கட்டமைப்பைப் பேணிக் கொள்வதற்கு இது அவசியமானதாக இருக்கிறது.

தாயகத்தில் இருந்த வந்த சூரிய ஒளியில் இருந்து வெளிச்சம் பெறுபவர்களாக, அதிகாரம் பெறுபவர்களாக இவர்கள் இருந்து வந்தவர்கள்.

திடீரென அவ் ஒளி மறைந்து விட்டது என்பதனை ஏற்றுக்கொண்டால் தாம் தம்மைச் சுற்றி வரைந்துள்ள ஒளிவட்டம் மறைந்து விடும் என்ற அச்சம் இவர்களுக்கு உண்டு.

இதனால் வெவ்வேறு வகையான காரணங்களைக் கூறித் தலைவர் பிரபாகனை உயிர்ப்பாக வைத்திருப்பதற்கு இவர்கள் முயல்கிறார்கள்.

மூன்றாவது, தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு எப்போது எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து மிகத் தெளிவான பதிலை எவரும் உறுதியாகக் கூறமுடியாத நிலை இருப்பது.

தலைவர் வீரச்சாவு அடைந்த திகதி தொடர்பாகவே மாறுபட்ட தகவல்கள் வந்திருக்கின்றன. இது தொடர்பாக வெளிவந்த வெவ்வேறு தகவல்கள் மே 17, 18, 19 ஆகிய மூன்று திகதிகளையும் தலைவர் வீரச்சாவடைந்த திகதியாக வெளிப்படுத்துகின்றன.

தலைவரின் இறுதிக் கணங்களில் என்ன நடந்தது என்பதனை சந்தேகத்துக்கிடமற்ற முறையில் எடுத்துக் கூறத் தலைவருடன் இறுதிக் கணம் வரை ஒன்றாக நின்றவர்கள் எவரும் மீண்டு வரவில்லை.

இதனால் இத் தகவல் சிறிலங்கா அரசதரப்பிடம்தான் புதைந்து கிடக்கிறது. சிறிலங்கா அரசும் இது தொடர்பாக வேண்டுமென்றே மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு ஒரு குழப்பத்தைப் பேண விரும்பியது.

இத்தகைய சூழலில் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது தொடர்பாக சரியான தகவல்கள் இல்லாத நிலையும் வீரச்சாவினை மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளும் தயக்கத்தை இவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

நான்காவதாக, தலைவருக்கு மரியாதை வணக்கம் செய்வதனை மக்கள், குறிப்பாகத் தீவிர ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற அச்சம் இவர்களிடம் நிலவுகிறது.

தாமே மறுத்த ஒரு விடயத்தை மீண்டும் தாமே மக்களிடம் எப்படிக் கூறமுடியும் என்பது இவர்களிடம் உள்ள முக்கியமான ஒரு கேள்வி.

தலைமைத்துவப்பண்புக் குறைபாடுகளும் இவர்களது இவ் அச்சத்துக்கு வலுச்சேர்க்கின்றன.   

இதனால், நாளடைவில் மக்கள் தாங்களாக தலைவரின் வீரச்சாவினை தமக்குள் ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுவார்கள். நாம் ஏன் எமது தலையில் நாமாக மண்ணை அள்ளிப் போடவேண்டும் என்ற சிந்தனையும் இவர்களிடம் தோன்றி விட்டது.

தமிழ்த் தேசியம் பேசும், தலைவர் பிரபாகரனின் வீரச்சாவினை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழகத் தலைவர்களைப் பொறுத்தவரை தலைவர் பிரபாகரன் தமிழ்த்தேசிய எழுச்சியின் ஒரு உச்சமான குறியீடு.

பிரபாகரனின் வீரச்சாவினை ஏற்றுக்கொண்டால், அது தமிழகத்தில் தமிழ்த் தேசிய எழுச்சியின் தோல்வியாகக் கருதப்பட்டு, தேசிய எழுச்சி வீழ்ச்சியடைந்துவிடும் என்ற அச்சம் இவர்களுக்கு உண்டு.

இவர்கள் தமது தமிழ்த் தேசிய அரசியலைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நிலைப்பாட்டைப் பேண விரும்புகிறார்கள்.

இத்தகைய காரணங்களின் கலவையே தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செலுத்த முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

வரலாற்றில் வாழ்வு ஒரு செய்தியினைச் சொல்வது போல சாவும் ஒரு செய்தியினைச் சொல்லக் கூடியது.

சிலவேளைகளில் சாவு கூறும் செய்தி வாழ்வு கூறும் செய்தியினை விட ஆழமானதாக, தாக்கம் மிக்கதாக இருக்கும்.

தலைவர் பிரபாகரனின் விடயத்தில் வாழ்வு மட்டுமல்ல அவரது வீரச்சாவும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

அவரது வாழ்வு மட்டுமல்ல சாவும் ஒரு அரசியல்தான்.

அந்த அரசியலை மறைப்பது, மறுப்பது ஈழத் தமிழர் தேசத்துக்கும் தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதியாகும்.

இவ்வாறு மறைப்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் எந்த வகையிலும் உதவப்போதில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி நகர்த்தப்படுவதற்கு இது இடையூறாகவே அமையக் கூடியது.

இது மட்டுமன்றி தலைவர் பிரபாகரனுக்கே இது அவமரியாதை தரக்கூடியது.

தலைவர் பிரபாகரன் தான் சரியென நம்பிய தனது இலக்குக்காக இறுதிவரை போராடி தனது உயிரைக் கொடுத்தவர்.

எதிரியிடம் மண்டியிடுதல் என்ற தெரிவினைத் தவிர்க்க இதனை விட வேறு மார்க்கங்கள் அவருக்கு சரியானதாகத் தெரியவில்லை.

தனது சாவின் ஊடாக ஒரு அரசியல் செய்தியினைச் சொல்லியிருக்கிறார்.

நாம் வீழ்ந்தாலும் வீழ்வோமே தவிர, அழிந்தாலும் அழிவோமே தவிர எதிரியிடம் மண்டியிடமாட்டோம் என்பதே அவரது சாவு வெளிப்படுத்தும் அரசியல்.

இந்த அரசியலை தமிழ்த் தேசியர்கள் பெருமையுடன் கையில் எடுத்திருந்திருக்க வேண்டும்.

இவரது வீரச்சாவினை ஏற்றுக்கொண்டு, அவருக்கு உரிய மரியாதை வணக்கம் செலுத்தி, அதிலிருந்து கிடைக்கும் உறுதிப்பாட்டுடன் அடுத்த கட்டம் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும்.

ஒரு போராட்டத் தலைவனின் வீழ்ச்சியுடன் விடுதலைப் போராட்டங்களின் வரலாறு நின்று போனதாக உலக வரலாறு எமக்குக் கூறவில்லை.

1930 களில் நிக்கரகுவாவின் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும் அமெரிக்க கூலிப்படைகளையும் எதிர்த்துப் போராடி வீழ்ந்துபோன 'சன்டினோ' வினை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான குறியீடாகக் கொண்டே, அவரது பெயரைக் கொண்டே 1950களின் பிற்பகுதியில் சன்டினிஸ்டா விடுதலை இயக்கம் தோன்றியது.             

உண்மைகளை மறைத்து, மறுத்து வரலாறு முன்னோக்கி நகருவதற்கு தடையாக இருப்பது உண்மையில் போராட்டத்துக்கு எதிரான ஒரு செயலாகும்.

இப்போது தோன்றியுள்ள நிலைமை எவ்வளவு தூரம் தலைவர் பிரபாகரனைச் சிறுமைப்படுத்துகிறது என்பதனைச் சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம்.

தலைவர் மறைந்திருந்து, படைதிரட்டி உரிய நேரத்தில் வெளிப்பட்டு ஈழம் மீட்பார் எனக்கூறும் புலத்துத் தளபதிகளும் தமிழகத் தலைவர்களும் இன்றும் உள்ளனர். இது தொடர்பாக பாடல்களும் வெளியிடுகின்றனர்.

அதனை நம்பிக் காத்திருக்கும் நம் மக்களின் நிலைதான் என்ன? இலவு காத்த கிளி போன்றதுதானா?

அல்லது நாளடைவில் தலைவர் இயல்பாக இயற்கை எய்திவிட்டார் என்று என்றுகூறி அவரது வரலாற்றை இழிவுபடுத்தத்தான் போகிறீர்களா?  

இது மட்டுமல்ல.

தற்போதய விடுதலைப்புலிகள் இயக்கம் தனது நடவடிக்கைகளை தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்திவாறு மேற்கொள்வது இவர்களது நடவடிக்ககைளுக்கு அவரையும் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளியாக்கும் வகையானது.

இது தார்மீகரீதியாக மிகப் பெரிய ஒரு தவறு.

எந்த ஒரு விடுதலை அரசியலையும் நாம் பொய்மையிலிருந்து கட்டியெழுப்ப முடியாது.

இது சேற்று நிலத்தில் கட்டப்படும் கட்டிடம் போலத்தான் தான் அமையும்.

முள்ளிவாய்க்கால் நெருப்பில் இருந்து எழுகின்ற தீ இப் பொய்மைகளையெல்லாம் சுட்டெரிக்கட்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு முன்னோக்கி நகரட்டும்.

 

(அடுத்த வாரம் தொடரும்)

(*அறிஞர் சத்தியேந்திரா அவர்கள் தனது இணையத்தளத்தை 25.01.2010 முதல் நிறுத்தி விட்டார். இக் கட்டுரைத்தொடரின் முதலாவது நுழைவாயில் பகுதி எழுதப்பட்டபோது tamilnation.org இணையத்தளம் இயக்கத்தில் இருந்தது.)  

5/16/2010 4:56:36 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்