Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இன்றைய தேவை ஒருமித்த குரலா அன்றி ஒரேயொரு கட்சியா?

இன்றைய தேவை ஒருமித்த குரலா அன்றி ஒரேயொரு கட்சியா?
மாறவர்மன்

 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பதிவு விவகாரம் - சில கசப்பான உண்மைகள்!

நீண்ட நாட்களாகவே இழுபறி நிலையிலிருந்து வந்த கூட்டமைப்பு பதிவு விடயம் இப்போது சந்தைக்கு வந்துள்ளது. தனித்ததொரு கட்சியாகப் பதிவு செய்யப்பட வேண்டுமா அன்றேல் தொடர்ந்தும் கூட்டுக் கட்சியாகச் செயற்படுவதா என்பதில் பலரும் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கையில் ஒரு சிலர் மௌன மொழியில் பதிலிறுத்து வருகின்றனர். கூட்டமைப்பு ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கருதுவோர் யாவருமே ஒரேவிதமான நோக்கங் கொண்டவர்கள் அல்ல என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு, பதிவை விரும்பாதோரிடையிலும் பல்வேறு சுழியோட்டங்கள் உள்ளன என்பதும் உண்மையே.

கூட்டமைப்பு உருவான விதம் குறித்துப் பல்வேறு தரப்பினரும் தத்தமக்கு வசதியான வகையில் விளக்கம் கொடுத்து வருகின்றனர். தர்க்க நியாயப்படி பார்ப்பின் கூட்டமைப்பின் உருவாக்கத்தை எதிர்த்த பலரும் இன்று அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை உள்ளக முரண்பாட்டின் உச்சத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

உண்மையில், விடுதலைப் புலிகளின் விருப்பத்துக்கு இணங்கவே 'கூட்டமைப்பு' கருக்கொண்டது என்பதை மறுக்க முடியாது. இந்த விருப்பத்தைச் செயற்படுத்துவதில் முன்னின்று உழைத்த சிவராம் (தராகி) உட்பட்ட சில ஊடகவியலாளர்கள் இன்று உயிரோடில்லை. ஆனால் அவர்களுக்கு இந்த விடயத்தில் புலிகளின் சார்பில் மதியுரை வழங்கிய சிலர் இன்னும் மௌனம் காக்கின்றனர். குறிப்பாக, கூட்டமைப்பு உருவாக்கத்தை ஆரம்பத்தில் அவ்வளவாக விரும்பியிராத மட்டக்களப்பு மாவட்ட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற ஜோசப் பரராஜசிங்கம் போன்றோர் ஊடகவியலாளருடன் முரண்டுபிடித்த நேரத்தில், அவர்களைச் சமாதானப்படுத்தி விடுதலைப் புலிகளின் வழிக்குக் கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்தோர் விரும்பியோ விரும்பாமலோ தற்போதும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தமிழரசுப் பாசறையில் வந்தவர் என்ற வகையில், கலாநிதி நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டதன் பின்னர் அவர் விடுதலைப் புலிகளை ஆதரிக்கத் தயாராக இருந்திருக்கவில்லை. எனினும் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியை தமது ஆயுத பலத்தால் அடக்குவதை விட தமது அரசியல் முகமாக அவர்களைப் பயன்படுத்துவதே உசிதமானது என்ற ஆலோசனையை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விடுதலைப் புலிகள் அப்போது இருந்தார்கள். 

ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியும் தமிழீழ விடுதலைக் கழகமும் இராணுவ ரீதியில் அஸ்தமனத்தை நெருங்கிக் கொண்டிருந்தமையால், தமது அரசியல் எதிர்காலம் பற்றி அக்கறை கொண்டிருந்த இவ்விரு இயக்கங்களையும் சேர்ந்த சிலர் ஊடகவியலாளர்களினூடாக தூதனுப்பி கூட்டமைக்கத் தயாராகினர். இந்தப் பின்னணியில், யாப்பொன்றை வரைந்து கூட்டமைப்பை உருவாக்குவதில் விடுதலைப் புலிகளின் அரசியற்துறைத் தலைவர் தமிழ்ச்செல்வன் அக்கறை காட்டினார். ஆயினும் பின்னர்; அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனஞ் செலுத்த வேண்டியும் அதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியும் இருந்ததால் தமிழ்ச்செல்வன் கூட்டமைப்புக்கான யாப்பு விடயத்தை ஆறப்போட்டுவிட்டார். அரசியல் முகத்தின் அவசியம் பேச்சுவார்த்தைக் காலத்தில் பின்தள்ளப்பட்டிருந்தது.

எனவே கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கான அன்றைய தேவை இன்று இல்லை என்பதை முதலில் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். தமிழர் தரப்பில் பேரம் பேசுவதற்கான ஆயுதத் தரப்பு இல்லாத நிலையில் தனியொரு கட்சியாகப் பேசுதல் என்றும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லுதல் என்றும் குரல்கள் எழுகின்றன. தனியொரு கட்சி என்பதற்கும் ஒரே குரல் என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை சிறுபான்மையினர் அரசியலில் விளங்கிக் கொள்வது கொள்கைசார் விடயமாக அன்றி கருத்தியல் விடயமாகவே அமைந்துள்ளது. ஜனநாயகச் செயற்பாட்டை முன்னிறுத்தியும் அடக்குமுறைக்கு எதிராகவும் உரிமைக் கோரிக்கைகளை முன்வைக்கும் இனமொன்று ஒரே கட்சி அரசியலில் ஈடுபடலாமா அல்லது பந்தயங் கட்டலாமா என்ற வினாவுக்கு விடை காணல் சற்றுக் கடினமானதே. இதுவே இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையாகும். 

ஒரே குரல் என்பது பலமா அல்லது ஒரே கட்சி என்பதுதான் பலமா என்ற விடயத்தில் பலரும் குழம்பிப் போயுள்ளனர். ஆளப்படும் இனம் என்ற வகையிலும் இனத்தின் இருப்புக்காக எதிர்ப்பு அரசியலை நடாத்தியேயாக வேண்டும் என்ற நிலையிலும் ஒரே குரலினைப் பல்வேறு மட்டங்களில் எதிரொலிக்க வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு உள்ளது. ஆனால், இதனை ஒரே கட்சியினூடாகத் தான் செய்ய வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இன்றைய தேவை ஒருமித்த குரலா அன்றி ஒரேயொரு கட்சியா?

இதனை இன்னும் இலகுவாக்கிக் கூறுவதானால், ஒரே குரல் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் என்றும் அவர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பை வைத்துக் குரல் பலப்படும் என்பதுமான தர்க்க நியாயம் பெறப்படும். புலிகள் கூட்டமைப்பை உருவாக்கியபோது காட்ட விரும்பியது, தாங்கள் விரும்புவதை விடுத்து வேறு எதனையும் தமிழ் மக்கள் கேட்க மாட்டார்கள் என்பதையே. அங்கே ஒரே குரல் என்பது அவர்களின் குரல் மட்டுமே என்பதல்ல அவர்களின் கோரிக்கை மட்டுமே என்பதாகும்.

பல குரல்கள் ஒலித்தால் அது அடக்குமுறையாளனுக்குச் சாதகமாகப் போய்விடும் என்பது யதார்த்தமே. ஒன்றைக் காட்டி இன்னொன்றைத் தட்டிக் கழிப்பதற்கு ஆட்சியாளன் பின்னிற்கப் போவதில்லை. புலிகளுக்கு இந்தப் பயம் கூடுதலாக இருந்தது. அதற்கான வலிதான காரணங்களும் இருந்தன. எனவேதான் அவர்கள் ஒரே குரல் என்பதை தமது அமைப்பினூடாக மட்டுமே வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போதைய நிலை வேறு.

கூட்டமைப்பில் தற்போதுள்ள கட்சிகளில் தமிழரசுக் கட்சிக்கு தார்மீக பலமொன்றுள்ளது. கட்சியின் இன்றைய தலைமையுட்படப் பலரும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஆதரித்தவர்களில்லை. ஆனால் அதேவேளை அவர்களுக்கு எதிராக ஆயுதந் தூக்கவுமில்லை. எவ்விதக் காட்டிக்கொடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கவுமில்லை. 'தம்பிமார்' என்ற குழைவான அழைப்பையே கவசமாகப் பாவித்துத் தாக்குதல்களைத் தவிர்த்து வந்ததே இவர்களின் வரலாறாகும். வடக்குக் கிழக்கை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன் பின்னர் இவர்களில் பலரையும் உண்மையில் புலிகள் ஒருபொருட்டாகக் கணக்கெடுக்கவேயில்லை. மாறாகக் கணக்கிலெடுக்கப்பட்டோர் 'களையெடுக்கப் பட்டனர்'. மறுபுறத்தில், குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரஸ் 

விடுதலைப் புலிகளை வெளிப்படையாகவே ஆதரித்துக் குரல்கொடுத்து வந்தது. காங்கிரஸ் பின்னர் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுவதற்கு இதுவே பிரதான காரணமாயிற்று என்பது வேறு விடயம். 

கஜேந்திரகுமாரின் வயது, அனுபவ முதிர்ச்சியின்மை என்பன காரணமாகவே கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தனைப் புலிகள் ஏற்றுக் கொண்டனர். தனது தலைமைப் பதவி காரணமாகப் பல விடயங்களில் புலிகளுடன் அனுசரித்துப் போகும் நிர்ப்பந்தம் சம்பந்தனுக்கு ஏற்பட்டது. தமிழ் மக்களைப் பொறுத்தளவில் விடுதலைப் புலிகள் மீதான முக்கிய குற்றச்சாட்டாக இருந்து வந்தது, அவர்கள் ஜனநாயகக் குரல்களுக்கு இடமளிக்கின்றார்களில்லை என்பதேயாகும். கூட்டமைப்பை உருவாக்கியதன் மூலம் அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க அவர்கள் முயற்சித்தார்கள். இதன் ஓரம்சமாகவே சுரேஸ் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் தமிழீழ விடுதலைக் இயக்கமும் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்படும் சூழ்நிலை உருவாகிற்று.

அரசியல் முகத்தின் அவசிய தேவைக்காக இப்படியான சில செயற்பாடுகளைப் புலிகள் மேற்கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியின் அடிப்படையிலேயே கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாட்டினை நாம் விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். 

புலிகள் இல்லாத தமிழர் அரசியல் களத்தில் தற்போது ஒவ்வொரு கட்சியினரும் தத்தமது சொந்தப் பலத்தை நிரூபித்துப் பார்க்க முனைகின்றார்கள். இந்தச் சொந்தப் பலம் என்பது கொள்கையளவிலும் செயற்பாட்டிலும் விடுதலைப் புலிகளை அடியோடு விலக்கிய விதத்தில் பரீட்சித்துப் பார்க்கப்படுவதை கூட்டமைப்பிலுள்ள நான்கு பிரதான கட்சிகளில் எதுவுமே விரும்பவில்லை. ஏதோவொரு விதத்தில் அவர்களை வைத்து அரசியல் செய்யும் கட்டாயத்தில் நான்கு கட்சிகளுமே உள்ளன. ஆயினும் இதிலும் தமிழரசுக் கட்சிக்குள்ள சாதக நிலைமை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டேன்.

இதனை இன்னொரு கோணத்திலிருந்தும் நோக்கலாம். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள் பலர் உள்ளனர். அங்ஙனமே, புலிகளுக்கு எதிராக ஆயுதமேந்திச் செயற்பட்டவர்களினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களும் உள்ளன. குறிப்பாக, இந்திய அமைதிகாக்கும் படை வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்தபோதே இத்தகைய பாதிப்புக்கள் ஏற்பட்டன. ஆனால் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்று எவையேனும் உள்ளதாகக் கூறமுடியாது. அந்தளவுக்கு அக்கட்சி ஆயுத அரசியலில் ஈடுபட்டிருக்கவில்லை, அதற்கான பலம் அதனிடமிருந்ததுமில்லை. வாக்களிப்பு என்று வரும்போது மக்கள் இதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொள்;கின்றமையைத் தவறெனக் கூறமுடியாது. 

கூட்டமைப்பின் பதிவைத் தாமதப்படுத்தும் தமிழரசுக் கட்சி, தான் தனித்து நிற்கும் ஒரு காலகட்டத்துக்காகக் காத்திருக்கின்றது. ஆனால், அது கொள்கையில் விட்டுக்கொடுப்பைச் செய்து காலங்கடத்துவதாக கூட்டமைப்புக்குள் உள்ள மற்றைய கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

'நீங்கள் முன்னாள் ஆயுததாரிகள்' என்பதாக தமிழரசுக் கட்சி மற்றையவர்களை நோக்கி விரல் நீட்ட, 'நீங்கள் கொள்கைளைக் கோட்டைவிடுபவர்கள்' என்று மற்றையவர்களின் விரல்கள் அதனை நோக்கி நீள்கின்றன. இதுதான் உள்வீட்டு யுத்தம்.

தமிழரசுக் கட்சி கொள்கையில் சமரசம் செய்வதாக இருந்தால் இன்று பதிவை வலியுறுத்துவபவர்கள் அன்றே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் சேர்ந்து தேர்தல் களத்தில் குதித்திருக்க வேண்டும். ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை என்ற வினாவின் பின்னால் பல்வேறு 'இரகசியங்கள்' உள்ளதாக தமிழரசுக் கட்சி நம்புகின்றது. தமக்குத் தேவைப்படாத புதிய முகமொன்று கூட்டமைப்புக்குள் உள்ள பங்காளிக் கட்சிகளுக்குத் தேவைப்படுகின்றதென்றால் அகற்றப்பட முடியாத சில கறைகள் பற்றிய கவலையே அதற்குக் காரணம் என்பது தமிழரசுக் கட்சியின் வாதமாகும். சிலவேளை, கஜேந்திரகுமார் தலைமையிலான அணி ஓர் ஆசனத்தையாவது வென்றிருந்தால் கூட்டமைப்பிலிருந்து சுரேஸூம் செல்வமும் 'நைசாக' நழுவியிருப்பார்கள் என்று பரவலான ஓர் அபிப்பிராயம் பொதுமக்கள் மத்தியில் தற்போதும் இருந்து வருகின்றது. ஆகவே, உண்மையில் இதுவெல்லாம் கொள்கை மோதலல்ல, பதவி மோதல் தான் என்பதை ஊகிப்பதில் பெரும் சிரமமிருக்காது.

ஆயினும் தற்போதைய அரசியற் சூழ்நிலையில், ஆட்சியாளரின் வன்முறை அரசியலுக்கு மத்தியில் தாக்குப் பிடிக்க, தமிழரசுக் கட்சியின் வெண்சட்டை ஆதரவாளர்களால் முடியாது என்பதும் உண்மையே. எனவே முன்னாள் இயக்கக்காரர்கள் ஒரு தடுப்பரண் (buffer zone) ஆகப் பாவிக்கப்படுகின்றார்கள் என்று பங்காளிக் கட்சியினர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இல்லாமலில்லை.

இப்போதுள்ள விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கூட்டமைத்துப் போட்டியிடுவதன் மூலம் ஆசனங்களை அதிகரிக்கலாம் என்பது யதார்த்தமானதே. ஆனால், அத்தகைய கூட்டானது தேர்தல் கூட்டா அல்லது கொள்கைக் கூட்டா என்பதிலேயே கூட்டமைப்பு இரண்டுங் கெட்டான் நிலையிலுள்ளது. கூட்டமைப்புத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் பலரும் அதனோடு வந்து ஒட்டிக் கொண்டார்கள். இதில் கூடுதலாக, தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்வதிலேயே பலரும் முண்டியடிக்கின்றார்கள். ஏதாவதொரு தேர்தல் களம் அவர்களின் கனவுகளில் தோன்றியபடியிருக்கலாம். கொம்புகள் வ(ளர்)ந்து செவிகளை மறைக்கும் துர்ப்பாக்கியக் காட்சி பங்காளிக் கட்சிகளில் பெரிதாகத் தென்படுவதாக இல்லை. இது பங்காளிக் கட்சிகளை எரிச்சலடைய வைக்கும் மற்றொரு விடயமாகும்.

யுத்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்று திரிந்து சுகபோகம் பெற்றவர்கள் பலரும் தற்போது தமிழ்த் தேசியத்தில் குளிர் காய்வதற்குத் தமிழரசுக் கட்சி இடங்கொடுத்தமைக்கு அதன் இரண்டாம் மட்டத் தலைமைகளே காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கட்சித் தலைவர் சம்பந்தனை விடுத்தால் வேறு யாரும் அந்த இடத்தை நிரப்பும் நிலையில் இல்லை என்பது மேலும் இதனால் நிரூபணமாயிற்று. இந்தக் கசப்பான உண்மைதான் தமிழரசுக் கட்சியைத் தற்காப்பு விதத்தில் செயற்பட வைக்கின்றது.

நியாயமான இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி, முதன்மைக் கட்சியின் முக்கியத்துவத்தைப் பின்தள்ளி, மிக விரைவிலேயே தான் தலைவராகலாம் என்ற நம்பிக்கை சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவரது கட்சி அடையாளத்துடன அவர் தலைவராக முடியாது என்பதால் கூட்டமைப்பு முகம் அவருக்கு அவசியமாகின்றது. சம்பந்தன் தான் கூட்டமைப்பின் தலைவர் என்று பங்காளிக் கட்சிகள் ஏகமனதாகக் கூறுவதிலுள்ள சூக்குமம் 'சம்பந்தனுக்குப் பின்னால் யார்' என்பதைத் தீர்மானிக்கும் சக்தி தங்களிடம் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்பிக்கையில் பொதிந்துள்ளது.   

இதற்கு அணைபோடும் விதத்திலேயே தமிழரசுக் கட்சி சட்டத்தரணி சுமந்திரனைக் களமிறக்கியுள்ளது. புதுமுகம் என்ற நிலையிலிருந்து படிப்படியாக அவரை தமிழ்ப் பிரதேசங்களில் 'அறிமுகஞ் செய்யும்' முயற்சியில் கட்சித் தலைமை வெகுவாக அக்கறை காட்டி வருகின்றது. இது பங்காளிக் கட்சிகளை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. பல்வேறு இணையத் தளங்களினூடாக இந்தக் கொதிப்புக்கு வடிகால் தேடப்படுகின்றது. பங்காளிக் கட்சிகளின் இணையத் தளங்களின் ஒரே இலக்காக சுமந்திரன் இருப்பதை இதனால் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியும்.;  

பாராளுமன்றத் தேர்தலை விட மாகாணசபைத் தேர்தலே மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்றளவில், தலைவர் பதவி என்பது முதலமைச்சர் பதவியுடனும் தொடர்புபட்டது என்றளவில், அப்பதவிக்குக் குறிவைத்திருக்கும் சுரேஸூக்குத் தற்போது சிம்மசொப்பனமாக உள்ளது கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சியே முதலமைச்சர் வேட்பாளரை நியமிக்கும் தகுதி கொண்டுள்ளமையேயாகும். வீட்டுச் சின்னத்தில் மீண்டும் களமிறங்க வேண்டும். இது தடுக்கப்பட வேண்டுமானால் கூட்டமைப்பு பதியப்பட வேண்டும். தலைவராக சம்பந்தன் இருக்கையில் செயலாளராகக் பங்காளிக் கட்சிகளின் சார்பில் சுரேஸ் நியமிக்கப்பட வேண்டும். என்னதான் சுத்திவளைத்துச் சொன்னாலும் அவர்கள் விரும்புவது இது மட்டுமே.

இதெல்லாம் கொள்கைசார் பிரச்சனை என்று யாரும் நினைத்தால் அவர்கள் அப்பாவிகளை விட மோசமானவர்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதில் இந்தக் கொள்கை மற்றும் ஒரேகுரல் விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தன. கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக என்றே தேர்தலில் போட்டியிட்டு மண்கவ்வியவர்கள் பலரும் தற்போது கூட்டமைப்பில் சங்கமித்துள்ளார்கள். ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். வெல்லும் குதிரையில் பந்தயங் கட்டுவதில் நம்மவர்கள் சளைத்தவர்களல்ல. ஆகவேதான் இப்போது குதிரைக்கு உயில் எழுதுவதில் பலரும் முண்டியடிக்கின்றார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்காளிக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சி நிறுத்திய வேட்பாளர்களை விட ஒப்பீட்டளவில் கூடுதலாக வாக்குப் பெற்றுள்ளார்கள் என்ற உற்சாகத்தில் பதிவுக் கோரிக்கை முழுமூச்சாக முன்வைக்கப்படுகின்றது. அங்கு வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட முறுகல் நிலையும் தற்போதைய வெற்றியும் இரு தரப்பினருக்கும் மேலும் பரஸ்பர நம்பிக்கையின்மையை ஊட்டுவதாகவே உள்ளதால், பதிவுக் கோரிக்கையில் கடும்போக்கு கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிகின்றது.

கூட்டமைப்புக்கு வெளியில் போய் தேர்தலை எதிர்கொள்ளும் துணிவு பங்காளிக் கட்சிகளுக்கு இல்லை. கஜேந்திரகுமாருக்கு ஏற்பட்ட கதியை நல்ல பாடமாக இவர்கள் கருத்தில் எடுத்திருக்கின்றார்கள். கூட்டமைப்பு ஒரு தேர்தல் கூட்டாக இருப்பதே தமக்கு நல்லதெனத் தமிழரசுக் கட்சி விரும்புகின்றது. வேட்பாளர்களையாவது தாங்கள் தீர்மானிக்கலாம் என்ற நிம்மதி அவர்களுக்கு. அத்தகைய நிலையிருக்கும் வரை பலரும் தமிழரசுக் கட்சியில் சேர முன்வருவார்கள், முன்வந்து கொண்டிருக்கின்றார்கள். இதுவே கட்சியை மீண்டும் எழுச்சிபெறச் செய்ய உரிய வாய்ப்பாகும் என்பதும் கட்சியினரின் கருத்து.

தேர்தலும் பதவிகளும் இல்லாமல் போனால் கட்சிகள் தேய்ந்து போய்விடும். கட்சிகள் இருந்தே பிரயோசனமில்லை என்ற நிலைக்கு இது இட்டுச் செல்லும் என்பதில் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து உள்ளது. ஒருவரையொருவர் வெட்டியோடி, மக்களுக்காகக் கட்சி என்பதன்றி கட்சிக்காகவே மக்கள் என்ற சித்தாந்தத்தில் திளைத்திருக்கும் கூட்டமைப்புக்குக் கொள்கை பற்றிய பேச்செல்லாம் இரண்டாம் விடயமே. இதில் தாங்கள் மட்டுமே பரிசுத்தவான்கள் என்றவாறாகப் பங்காளிக் கட்சிகள் காட்ட முனைவது  ஏமாற்றுத் தனமானது என்பது தேர்தல்கள் அண்மிக்கையில் தானாகவே வெளிப்பட்டுவிடும்.

தமிழரசுக் கட்சி தான் விரும்பும் (மூவரில்) ஒருவரை வடக்கில் முதலமைச்சர் வேட்பாளராக  நியமிக்கையில் அதாவது, சுரேஸ் பிரேமச்சந்திரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படாதபோது, அவர் அணியினர் நிச்சயம் பிரிந்துபோய் பலப்பரீட்சையில் இறங்கத் துணிவர் என்பது முடிவான விடயமே. பலத்தைப் பரீட்சித்த பின்னர் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்பது அவர்களது கணிப்பாகும். பாராளுமன்றத் தேர்தலைப் போலல்லாமல் தனிப்பட்ட செல்வாக்கினால் வாக்குகள் பெற்றும் சில உறுப்பினர்கள் தேறலாம் என்றவாறான வாய்ப்பு மாகாண சபைத் தேர்தலில் அதிகமாகவே காணப்படும். இது தமிழரசுக் கட்சியினருக்கும் நன்கு தெரிந்திருந்தாலும் பிரிந்து போகின்றவர்கள் தாங்களாகவே போகட்டும் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சி உள்ளது.

எனவேதான் பதிவு விடயத்தை மிக முக்கியமான ஒரு கொள்கைசார் விடயமாகக் காட்டி வெளியேறுவதை பங்காளிக் கட்சிகள் விரும்புகின்றனர். தமிழரசுக் கட்சி நன்கு பலப்படும் வரை அதாவது, மாகாண சபைத் தேர்தல் முடியும் வரையாவது இந்தப் பிரச்சனையை இழுத்தடிப்பதே உசிதமென்பது கூட்டமைப்புத் தலைவரின் நிலைப்பாடாக உள்ளது.

பதிவுக்கான அவசியமென்பது மாகாண சபைத் தேர்தலைச் சுற்றியதாகவே வலம் வருகின்றமை தான் நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது. அரசியற் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் களைகட்டும் நேரத்தில் பலமான ஒரு கட்சியின் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அங்ஙனமில்லையெனில், ஆளுந் தரப்பினர் சர்வகட்சி மாநாட்டை தமிழ்க் கட்சிகளுக்கிடையில் மட்டுமாக நடாத்த வேண்டியிருக்கும். இதன் விளைவு என்னவாகும் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வடக்கு –கிழக்கு இணைந்த தாயகம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை என்பதில் கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளுக்கிடையில் வேறுபாடு உள்ளதாகத் தெரியவில்லை. தலைமைத்துவப் போட்டியினால், ஒரு பிரிவினரை மிதவாதிகளாகக் காட்டி மறுபிரிவினர் வாக்கு வேட்டையாடுகின்ற சிறுபான்மை இனங்களுக்கே பொதுவான சாதாரண அரசியல் சுயநலந்தான் தற்போது கூட்டமைப்பையும் ஆட்டிப் படைக்கின்றது. பதிவை வலியுறுத்துவதால் பங்காளிக் கட்சிகள் கொள்கைப் பிடிப்பாளர்களாகவும் பதிவை இழுத்தடிப்பதால் தமிழரசுக் கட்சியினர் மிதவாதிகளாகவும் மாறிவிடப் போவதில்லை.

அண்மையில்கூட பங்காளிக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் தனித்தனியாகவே தேர்தல் நிதி சேகரித்துக் களங்மிறங்கியுள்ளன. எல்லா விதத்திலும் தனித்தனியாகவே இயங்கினாலும் தேர்தல் வரும்போது மட்டுமே சேர்ந்து நிற்க வேண்டியுள்ளது. இந்த எரிச்சலைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரு பொதுவான வேலைத் திட்டத்தின் கீழ் கூட்டமைப்பு இயங்குதற்கு முடிவெடுக்கலாம். ஆனால் அதற்குப் பதிவு அவசியம் தேவைப்படும் என்பதை தர்க்க ரீதியில் ஏற்க முடியாது. பொதுவான வேலைத் திட்டத்தில் கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டால் போதுமானது.

தனித் தனிக் கட்சிகள் இருக்கையில் கூட்டமைப்பு ஒரு கட்சியாகப் பதிவுசெய்யப்படுவதற்கான தேவை என்பது தேர்தலை விட்டால் வேறு எதற்கும் உதவாது. தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தேர்தல் உடன்படிக்கையாகவே கூட்டமைப்புச் செயற்பட்டு வருகின்றது. இதனை முறைசார் ரீதியில் இயங்க வைப்பதானால் அது ஒரு கட்சியின் உருவாக்கத்தில் போய் முடியும்.

ஆனால் நமக்கு இன்று அவசியமாகப்படுவது ஒரு கட்சியல்ல. ஒருமித்த குரலேயாகும். அதை எங்கிருந்தும் எவரும் கொடுக்கலாம். சந்தர்ப்பவசத்தால் உருவான கூட்டமைப்பினை சூழ்நிலைகள் மாறிவிட்ட நிலையிலும் நிரந்தர அமைப்பாக மாற்றுவதில் நன்மையை விடத் தீமையே பெரிதும் விளையலாம்.

இதையும் மீறிப் பதிவை வலியுறுத்துவோர் எவராயினும் இருந்தால் அவர்கள் தாங்கள் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை, ஏற்கவும் மாட்டோம் என்று பொதுமக்களுக்கு எழுத்துமூல உத்தரவாதம் கொடுப்பார்கள் என்றால் ஒரே கட்சி என்ற நிலைப்பாட்டிலான தீமைகளைக் குறைக்க வழிபிறக்கலாம். அத்தகைய தியாகிகள் யாரேனும் தமிழர் அரசியலில் தற்போது உள்ளனரா? வெறுமனே பதவிப் பங்கீட்டு யுத்தத்தில் ஆளை ஆள் மிஞ்சும் விதத்தில் அறிக்கைப் போர் நடாத்துவோருக்கு இது சமர்ப்பணம்.

11/4/2012 9:07:19 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்