Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கிழக்கின் எழுக தமிழ் கிழக்கைப் பாதுகாப்பதை பிரகடனமாக எடுக்கவேண்டும்

<p>கிழக்கின் எழுக தமிழ் கிழக்கைப் பாதுகாப்பதை பிரகடனமாக எடுக்கவேண்டும்</p>
சி.அ.யோதிலிங்கம்

 

தமிழ் மக்கள் பேரவை கிழக்கின் ‘எழுக தமிழ்’ நிகழ்வை வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்த இருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அரசியற் செயற்பாட்டாளர்கள் கிராமம் கிராமமாக பிரச்சாராம் செய்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருவதுடன் பொதுக்கூட்டங்களையும் நடாத்தி வருகின்றனர். இந்நிகழ்வு தை 21 ஆம் திகதி நடைபெற இருந்தது. கூட்டமைப்பின் நெருக்கடிகளினால் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

'எழுக தமிழ்' இன் நோக்கம் தமிழ் மக்களுக்கு தேசம், இறைமை, சுயநிர்ணயம், சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வை அடைந்துகொள்வது, சிறிலங்கா அரசின் தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்துவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பவையே ஆகும்.

இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள மக்களுக்கு போரில்லா நிலை மட்டும் சமாதானமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு போரில்லா நிலை, இயல்பு நிலையைக் கொண்டுவருதல், அரசியல் தீர்வு ஆகிய மூன்றும் வரும்போதே சமாதானம் உருவாகும். இங்கு மேற்கூறியவற்றில் அரசியல் தீர்வைத் தவிர ஏனைய அனைத்தும் இயல்பு நிலையைக் கொண்டுவருதலுடன் தொடர்புடையவையே.

இந்த விவகாரங்களை எமது மக்கள் மத்தியில் பேசுபொருளாக்குவதன் மூலம் இவை பற்றிய பொதுக்கருத்தை உருவாக்கி சர்வதேச மட்டத்தில் முன்வைப்பதே இன்றைய தேவையாக உள்ளது. போருக்கு பின்னரான ஏழு வருட காலத்தில் இயல்புநிலையைக் கொண்டுவருதல் விடயத்தில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. இராணுவம் அபகரித்த காணிகளில் சில மட்டும் விடப்பட்டுள்ளன. ஏனைய விடயங்களில் சிறிய முன்னேற்றங்கள் கூட காணப்படவில்லை. அதாவது நிலைமாறுகால நீதி தமிழ்மக்களுக்கு கிடைக்கவில்லை. அரசியல்தீர்வு விடயத்தில் இந்த முன்னேற்றங்கள் அறவே இல்லை எனலாம்.

மறுபக்கத்தில் கட்டமைப்பு சார் இனப்படுகொலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. நிலப்பறிப்பு, மொழிப்பறிப்பு, பொருளாதாரத்தை பலவீனப்படுத்தல், கலாச்சாரச் சிதைப்பு தொடர்கின்றன. மிக நுணுக்கமான வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில் அதாவது இயல்பு நிலையும் இல்லை அரசியல் தீர்வும் இல்லை. கட்டமைப்பு சார் இனப்படுகொலை தொடர்கின்ற நிலையில் சர்வதேசப் பாதுகாப்பினை கோரவேண்டிய கட்டாயத்தில் தமிழ் மக்கள் உள்ளனர். சிறிலங்கா அரசுடன் நேரடியாக உறவுகளைப் பேணி எந்தவித முன்னேற்றங்களையும் காணமுடியாத நிலையில் சர்வதேச பாதுகாப்புக் கோர தமிழ்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு முதலில் இவ்விடயத்தை தமிழ்மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கி முன்னரே கூறியதுபோல பொதுக்கருத்தினை உருவாக்கவேண்டும். பின்னர் இப்பொதுக்கருத்தினை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்க வேண்டும். 'எழுக தமிழ்' இது விடயத்தில் பாரிய பங்கினையாற்றக்கூடியதாக இருக்கும். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ இது விடயத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கிழக்கின் ‘எழுக தமிழ்’ அதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியைக் காட்டக்கூடியதாக இருக்கும்.

கிழக்கில் ‘எழுக தமிழுக்கு’ நிறைய ஆதரவு பெருகி வருகின்றது. கிராமங்களில் பிரச்சாரக் குழுவினருடன் இளைஞர்கள் தாமாகவே இணைந்து செயற்படுகின்றனர். தாங்களாகவே வீடுகளுக்கும் அயற்கிராமங்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். பொதுக்கூட்டங்களை தாங்களாகவே ஒழுங்கு செய்கின்றனர். இவை தவிர கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் திரளாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

<p>கிழக்கின் எழுக தமிழ் கிழக்கைப் பாதுகாப்பதை பிரகடனமாக எடுக்கவேண்டும்</p>

உண்மையில் இத்தகைய போக்கினை யாழ்ப்பாணத்தில் காணமுடியவில்லை. அங்கு ‘எழுக தமிழ்’ நிகழ்வில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டனர் என்பது உண்மைதான். ஆனால் கிராமங்களில் தாங்களாகவே திரண்டு வந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதை பெரியளவு காணமுடியவில்லை. கிழக்கில் மக்கள் சமூகமாக வாழ்கின்ற நிலைமையும், அவ்வாறு வாழவேண்டிய நிர்ப்பந்தமும் இவற்றை ஊக்குவித்திருக்கலாம். ஒழுங்கமைப்புக்கள் சீராக இருந்தால் 'எழுக தமிழ்' சிறப்பாக வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பு கிழக்கில் அதிகமாகவே உண்டு. வடக்கினை விட கிழக்கில்தான் ‘எழுக தமிழ்’ அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

வடக்கினை விட கிழக்கு சிறப்பான பிரச்சினைகளைக் சந்தித்து வருகின்றது. உண்மையில் தேசிய இனப்பிரச்சினை கிழக்கில்தான் இருக்கின்றது. அங்கு தமிழ் மக்கள் ஒரே நேரத்தில் சிங்கள ஆக்கிரமிப்புக்கும் முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலையில் உள்ளனர். அம்பாறை மாவட்டமும் திருகோணமலை மாவட்டமும் இது விடயத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. திருக்கோணமலையில் சிங்கள ஆதிக்கமும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் ஆதிக்கமும் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் ஓரளவு சுயாதீனமாகவுள்ளது. இன்று அதுவும் தடுமாறுகின்றது.

தேசிய இன ஒடுக்குமுறையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது நிலப்பறிப்புத்தான். வடக்கில் நிலப்பறிப்புக்களைத் தவிர்த்தால் இந்த நெருக்கடி குறைவு. கிழக்கில் அன்றாட இருப்பே பிரச்சினைக்குரியது. திருகோணமலை மாவட்டம் நிலப்பறிப்பினால் முற்றாகவே சிதைவடைந்து போய்விட்டது. அல்லைத் திட்டம், கந்தளாய் திட்டம், மொறவேவாத் திட்டம், மகாதிவுல்வெவத் திட்டம், பதவியாத் திட்டம் என பல்வேறு குடியேற்றத் திட்டங்களினால் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழ்மக்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று அங்கு எஞ்சியிருப்பவர்களை எப்படிப் பாதுகாப்பது என்பது தான் முக்கியமானது.

ஒரு பிரதேசத்தில் உள்ள மக்களின் வலிமைக்கும் அரசியல் பலத்திற்கும் எப்போதும் தொடர்புள்ளது. திருக்கோணமலை மாவட்டத்தில் சிங்களப் பிரதேச சபைகள் சிங்களக் குடியேற்றங்களைப் பலப்படுத்தியுள்ளன. அதற்கு மேலாக சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பலப்படுத்தியுள்ளது. 1977 இல் சேருவல தேர்தல் தொகுதி உருவாகும் வரை திருக்கோணமலை மாவட்டத்தில் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை. தற்போது சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்துள்ளது. அதேவேளை தமிழ் மக்களுக்கு இருந்த மூதூர் இரட்டை அங்கத்துவத் தொகுதி பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விட்டது. அம்பாறையில் கூட சிங்களக் குடியேற்றத் தொகுதியான அம்பாறைத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டபின் 1960 ஆம் ஆண்டு தான் சிங்கள பிரதிநிதித்துவம் பெறப்பட்டது.

தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் மாவட்டம் தேர்தல் அலகாக உள்ளமையினால் மூதூர் பிரதேச தமிழ்மக்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தேர்தல் தொகுதியைச் சாராத தமிழ் மக்களுக்கும் அரசியல் குரல் உண்டு. மாவட்டம் முழுவதற்கும் பிரதிநிதியாக இருப்பதனாலேயே இக்குரல் வாய்ப்பு ஏற்படுகின்றது. புதிய தேர்தல் முறையில் அதற்கான வாய்ப்பு இல்லாமல்போகும். இது ஏற்கனவே பலவீனமாக இருக்கின்ற இப்பிரதேசங்களை மேலும் பலவீனமாக்கும் 'எழுக தமிழ்' இப்பிரச்சினைகளையெல்லாம் பேசுபொருளாக்க உதவும்.

அடுத்த முக்கியமான விடயம் முஸ்லிம் - தமிழ் முரண்பாடு. முஸ்லிம்கள் தங்களைத் தமிழ்த் தேசிய இனத்திற்குள் அடக்க விரும்பவில்லை. அவர்கள் தங்களை தனியான தேசிய இனமாகவே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். அவர்களுடைய விருப்பத்திற்குள் தமிழ் மக்கள் தலையிடமுடியாது. குறைந்தது ஒரே நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் என்ற வகையில் தமிழ் மக்களுடன் இணைந்து போராட்டம் நடாத்தவும் அவர்கள் தயாராகவில்லை. தென்னிலங்கை முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கின்றது. இதனால் தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்த அரசியலை முன்னெடுப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை. இது விடயத்தில் தந்தை செல்வா காலத்திலிருந்து பின்பற்றப்பட்டுவந்த 'தமிழ்பேசும் மக்கள்' என்ற கோட்பாடு படுதோல்வியடைந்துவிட்டது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கும் முஸ்லிம்கள் எதிராக உள்ளனர்.

ஆனால் தமிழ்மக்களுக்கு தங்கள் கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும் கூட்டடையாளத்தையும் பேணுவதற்கு வடக்கு – கிழக்கு இணைப்பு அவசியம். இதில் எந்த விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ள முடியாது. முஸ்லிம்கள் சம்மதிக்காத நிலையில் வட – கிழக்கில் உள்ள தமிழ்பிரதேசங்களை நிலத்தொடர்சியற்றவகையில் இணைத்தாவது இணைந்த அதிகார அலகினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவைபற்றியெல்லாம் ஆய்வுகளைச் செய்வதற்கு இந்த 'எழுக தமிழ்' உதவியாக இருக்கும்.

உண்மையில் முன்னரே கூறியது போல தேசிய இனப்பிரச்சினை கிழக்கில் தான் அதிகம் இருக்கின்றது. இதனால் தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையும் கிழக்கிலிருந்தே உதித்திருக்கவேண்டும். ஆனால் வரலாற்றுக் காரணிகள் காரணமாக வடக்கிலிருந்தே தலைமை தோன்றியது. வடக்குத் தலைமை கிழக்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக வலுவான போராட்டங்களை நடாத்தின எனக் கூறமுடியாது. மொழிப் புறக்கணிப்புக்கு எதிராக காலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம், அரச செயலகங்களின் முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் என தமிழரசுக்கட்சிக் காலத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் கிழக்கு எதிர்நோக்கிய சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக எந்தவித போராட்டமும் நடக்கவில்லை. அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் முஸ்லிம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழ் அரசியல் தலைமை வாயே திறப்பதில்லை.

மொத்தத்தில் கிழக்கினைக் காப்பாற்றக் கூடிய வகையில் கிழக்கில் வலுவான தலைமை உருவாக்கப்படல் வேண்டும். ‘எழுக தமிழ்’ நிச்சயம் இதற்கு உதவக்கூடியதாக இருக்கும்.

கிழக்கின் ‘எழுக தமிழில்’ அரசியற் கட்சிகளின் பங்களிப்பு மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. தமிழரசுக் கட்சி எதிர்ப்பு பிரச்சாரத்தில் இறங்கியதுமல்லாமல் ‘எழுக தமிழுக்கு’ எதிராக பொங்கல் விழாவினையும் நடாத்தியது. அதுவும் 'எழுக தமிழ்' தை 21 ஆம் திகதி நடைபெற இருக்க, அது 19 ஆம் திகதி பொங்கல் விழாவினை ஊர்வலத்துடன் நடாத்தியது. எல்லாவற்றையும் தேர்தலை இலக்காகக் கொண்ட கட்சி அரசியலுக்கு ஊடாக பார்ப்பதன் விளைவு அது. இது கண்டிக்கப்படல் வேண்டும். இவ்வளவிற்கும் ஏற்பாட்டாளர்கள் தமிழரசுக் கட்சிக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதேநேரம் 21 ஆம் திகதியை பாடசாலை தினமாகவும் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண அமைச்சர் தண்டாயுதபாணி பிறப்பித்திருந்தார்.

ஏனைய கட்சிகள் ஆதரவு கொடுப்பது உண்மைதான். ஆனால் களத்தில் இறங்கி பிரச்சாரங்களை பெரிதாகச் செய்யவில்லை. ஒரு கட்சி மட்டும் தான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல. சிவில் நிறுவனங்கள் சிறியளவில் பங்கேற்கின்றன. போதியளவிற்கு செய்கின்றார்கள் எனக் கூறிவிடமுயாது.

உண்மையில் ‘எழுக தமிழுக்கு’ ஒரு கட்சியோ, ஒரு நிறுவனமோ ஒரு சில நபர்களோ மட்டும் உரிமை கோரக்கூடாது. அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எழுச்சியாக இருக்க வேண்டும். உலகத்தின் காதுகள் அதிரத்தக்கதாக மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சிக்கு ‘எழுக தமிழினால்’ இரண்டு நெருக்கடிகள். ஒன்று இணக்க அரசியலுக்கு நெருக்கடி வரப்போகின்றது என்ற கவலை. இரண்டாவது தங்களது தனி ஆதிக்கம் பலவீனமடைகின்றது என்ற கவலை. தமிழரசுக் கட்சி நடாத்தும் இணக்க அரசியல் என்பது இந்தியாவினதும் அமெரிக்காவினதும் கட்டளை. சம்பந்தனும் சுமந்திரனும் விரும்பினாலும் இணக்க அரசியலை முறிக்க முடியாது. இந்தியாவும் அமெரிக்காவும் தாங்கள் உருவாக்கிய ஆட்சியை எப்பாடுபட்டாவது பாதுகாக்கவே முயற்சிக்கும். மகிந்தர் ஆட்சி மீண்டும் வருமாயின் அவை தமிழரசுக்கட்சிக்கு எதிர்ப்பு அரசியலை நடாத்துமாறு கட்டளையிடலாம். இதைவிட இணக்க அரசியலைக் கை விடுவதாயின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைவிடவேண்டும். சம்பந்தன் அதற்கு தயாராக இல்லை.

இரண்டாவது விடயத்தைப் பொறுத்தவரை தமிழரசுக்கட்சி தமிழ் அரசியலில் தனி ஆதிக்கம் செலுத்தவே விரும்புகின்றது. ‘எழுக தமிழ்’ நிகழ்வு தன்னை பலவீனப்படுத்தும் என கருதுகின்றது. ஏற்கனவே 2016 இல் தீர்வு எனக் கூறி இன்று பதில் கூற முடியாமல் தடுமாறுகின்றது. சம்பந்தனுக்கு தீர்வு வரப்போவதில்லை என்பது நன்றாகத் தெரியும். ஆனால் இந்திய – அமெரிக்க கட்டளையை மறைப்பதற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவி, பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் பதவி என்பவற்றை நியாயப்படுத்துவதற்காகவும் தற்போது 2017 இல் தீர்வு என்கின்றார்.

தற்போது 'எழுக தமிழ்' பலவீனப்படுத்திவிடும் எனப் பயந்து தாமும் தமிழ்த் தேசியத்துடன் நிற்கின்றோம் என்பதை வலிந்து காட்டுவதற்காக பொங்கல் விழாவை நடாத்தியது.

ஆனால் தமிழ் மக்கள் மூடர்களல்லர். அவர்கள் வரலாற்று ரீதியாகவே உறுதியான கொள்கையின் பின்னாலேயே நின்றிருக்கின்றனர். எந்தப் பெரிய கனவானாக இருந்தாலும் கொள்கை நிலையில் நின்று வழுவும் போது தூக்கி எறிந்துள்ளனர். அருணாசலம் மகாதேவாவிலிருந்து கருணா வரை இதற்கு சான்றுகள் அதிகம். அதிலும் அவர்கள் சரியான தருணத்தில் சரியான முடிவுகளை எடுப்பார்கள்.

கிழக்கின் 'எழுக தமிழ்' சிறப்பாக நடைபெறுவதற்கு பல முக்கிய விடயங்களில் ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்துவது அவசியம். தமிழ்த் தேசிய அரசியலில் பொதுவான விடயங்கள் 'எழுக தமிழில்' பேசுபொருளாக இருந்தாலும் கிழக்கின் பிரச்சினைகளே முதன்மையான பிரச்சனையாக இருக்கவேண்டும். அதில் பிரதானமானது கிழக்கின் பாதுகாப்பு பிரச்சினையாகும். தேசிய இன ஒடுக்குமுறை என்பது தேசிய இனத்தை தாங்கும் தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் கூட்டம் என்பன அழிக்கப்படுவதே. இந்த அழிப்பு நடவடிக்கைகள் கிழக்கிலே அதிகம் இடம்பெறுகின்றது. எனவே கிழக்கின் 'எழுக தமிழ்' கிழக்கைப் பாதுகாப்போம் என்பதை ஒரு பிரகடனமாக வெளிப்படுத்தவேண்டும். அந்தப் பிரகடனத்தில் கிழக்கை பாதுகாப்பதற்கான முன்மொழிவுகளையும் முன்வைக்கவேண்டும்.

தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் கிழக்கின் 'எழுக தமிழை' மிகப்பெரிய எழுச்சியாக கொண்டுவரலாம். தமிழ் மக்கள் இதற்கு தயாரா?

2/4/2017 1:44:48 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்