முத்துக்குமார்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் அந்த விவகாரம் சேர்க்கப்பட்டதுமல்லாமல் அது தொடர்பான விசாரணைக்காக தெரிவுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளும் பகிரங்கமாக ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
இரு சொகுசு வீடுகளை வாங்கியமை, சொத்துக்கள் பற்றிய விபரங்களை அறிவிக்காமை, 20 இற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கின்றமை, கணவன் மீதான இலஞ்ச ஊழல் வழக்கின் ஆவணங்களை பார்ப்பதற்காக அதிகார துஸ்பிரயோகம் செய்தமை, தகுதியுள்ளோரை புறக்கணித்து மஞ்சுல திலகரட்னாவிற்கு நியமனம் வழங்கியமை, அரசியல் சாசனத்தை உதாசீனம் செய்து சபாநாயகருக்கு அனுப்பும் தீர்ப்பை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பியமை, பெண் நீதிபதி திருமதி கமகே பொலிஸ் அதிபரிடம் பாதுகாப்பு கோரியமைக்காக அவரை தண்டிக்க எத்தனித்தமை போன்றன இக் குற்றச்சாட்டுகளில் அடங்குகின்றன.
இக் குற்றப்பிரேரணையில் வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, வினாயகமூர்த்தி முரளிதரன் என்போரும் திகாம்பரம், ராதாகிருஷ்ணன் உட்பட மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.
அண்மைக் காலமாக அரசாங்கத்தின் அணுகுமுறையில் உள்ள முக்கிய விடயம் புதிது புதிதாக பல சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிக்கொண்டு வருவதாகும். திகுநெகும சட்டமூலம், 13வது திருத்தநீக்கம், இடம் பெயர்ந்தவர்களை சொந்தக் காணிகளில் குடியேற்றாமை, சிறைக்கைதிகளின் விவகாரம் என பல சர்ச்சைக்குரிய விடயங்களை அடுத்தடுத்து கிளப்பி விட்டிருந்தது. எதிர்ப்புச் சக்திகளை ஒரு விடயத்திலும் முழுமையான கவனத்தை செலுத்தவிடாமல் தடுப்பது என்பதும் இதன் பின்னாலுள்ள ஒரு நோக்கமாகும். எதிர்ப்புச் சக்திகளும் எந்த விவகாரத்தை கையிலெடுப்பது எனத் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை கொண்டுவந்தமைக்கு பிரதான காரணம் திகுநெகும சட்டத்தினை அரசு நினைத்தது போல கொண்டுவர விடாமல் பிரதம நீதியரசர் தடுத்தமைதான். இதன்மூலம் பிரதம நீதியரசர் ஒரு வெளிப்படுத்தலைச் செய்திருந்தார். ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நீதித்துறை செயற்படாது என்பதே அந்த வெளிப்படுத்தல். இதுதான் அரசினைப் பொறுத்தவரையில் ஆபத்தான விடயம். திகுநெகும சட்டமுலம் மாத்திரமல்ல எதிர்காலத்தில் இவ்வாறான எல்லாச் சட்டங்களுக்கும் பிரதம நீதியரசர் எதிராக இருப்பார். இவை தமது நீண்டகால இலக்கிற்கு ஆபத்து. இந்த ஆபத்திலிருந்து விடுபட பிரதம நீதியரசரை அகற்றுவதைத் தவிர வேறு தெரிவு இல்லை எனக் கருதித்தான் குற்றப்பிரேரணையை அரசு கொண்டு வந்திருக்கின்றது.
அரசின் நீண்டகால இலக்குகள் இரண்டு. ஒன்று பேரினவாத வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக நகர்த்துவது. அதிகாரங்களை ராஜபக்ச குடும்பத்திடம் குவிப்பது. இரண்டும்தான் ஜனாதிபதியைப் பாதுகாக்கும். எனவே இரண்டையும் நோக்கி அரசின் செயற்பாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
அரசினை அரசியல் ரீதியாக பாதுகாப்பது அதன் பேரினவாத நிலைப்பாடுதான். இதனை தொடர்ச்சியாக மேற்கொள்வதனால்தான் சிங்கள மக்களின் ஆதரவினைத் தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ள மகிந்தரினால் முடிகின்றது. போர் வெற்றி சரிக்க முடியாத ஆதரவினை ஜனாதிபதிக்கு பெற்றுக்கொடுத்தது. தொடர்ச்சியான பேரினவாத வேலைத்திட்டங்கள் அவற்றை தொடர்ச்சியாக தக்கவைப்பதற்கு உதவுகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் சிங்கள மக்கள் மத்தியில் அசைக்க முடியாத பெருவெற்றியைப் பெறுவதற்கு காரணம் இந்த பேரினவாத நிலைப்பாடுதான். கடந்த மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சி பெற்றதன் அரைவாசி வாக்குகளைக் கூட ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. பேரினவாத அரசியல் தளம் ஜே.வி.பி யினரின் கைகளிலிருந்து மகிந்தரின் கைகளுக்கு மாறியுள்ளதால் ஜே.வி.பி யினால் ஒரு சிறிது கூட மேலெழும்ப முடியவில்லை. மக்கள் இன ரீதியாக பிளவுண்டிருக்கும்போது வர்க்க ரீதியாக அணிதிரளல் சாத்தியமில்லை என்பதால் ஜே.வி.பி யினரின் வர்க்க அரசியலும் பெரியளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் எடுபடவில்லை. ஜே.வி.பி யின் நிலை இன்று ஒரு இலட்சியக் குழு என்பது மட்டும்தான்.
அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களிலிருந்து காப்பாற்றுவது இந்த பேரினவாத நிலைப்பாடுதான். சிங்கள மக்களின் ஆதரவு பலமாக இருப்பதனால் அரசாங்கத்திற்கு வலிமையான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு சர்வதேச சக்திகள் தயங்குகின்றன. சீனா பக்கம் முழுமையாக இலங்கை சரிந்து விடும் என்ற அச்சம் ஒருபுறம் தயக்கத்திற்கு காரணமாக இருந்தாலும் மறுபுறம் சிங்கள மக்களின் ஆதரவும் ஒரு காரணம்தான்.
இவற்றைவிட தமிழ்த்தேசிய அரசியல் மீள எழுப்புவதை தடுப்பதற்கும் அரசிற்குள்ள ஒரேயொரு கருவி பேரினவாத வேலைத்திட்டம் தான். 13வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களைப் பறித்தல், வட - கிழக்கில் சிங்களக் குடியேற்றம், காணிப்பறிப்பு, பௌத்தமயமாக்கல், இராணுவஆட்சி போன்ற பேரினவாத வேலைத்திட்டங்கள் இதனால்தான் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வட மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசிற்கு உண்டு. அதற்கு முன்னர் மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்க முற்படுகின்றது. ஏற்கெனவே மாகாண சபையின் அதிகாரங்கள் கொள்கை உருவாக்கம் என்ற பெயரிலும், சுற்றுநிரூபங்கள் மூலமும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்குள்ளாலும் தப்பியிருக்கின்ற அதிகாரங்களை ஆளுநர் தன் வசம் வைத்திருக்கின்றாரே தவிர மாகாண சபைகளிடம் விடவில்லை என்பது வேறுகதை.
வட மாகாணசபை அதிகாரப் பகிர்வு விடயத்தில் எந்த முன்னேற்றத்தையும் காட்டப்போவதில்லை. ஆனாலும் தமிழர்களுக்கு ஓர் அரசியல் களம் கிடைத்துவிடும் என அரசு அஞ்சுகின்றது. இந்த அரசியல் களத்தினை இந்திய – மேற்குலக சக்திகள் தங்கள் நலன்களுக்கான ஆடுகளமாக மாற்றுவர்கள் என்ற அச்சமும் அரசிற்கு உண்டு. இவற்றினால் இயன்றவரை வட மாகாண சபைத் தேர்தலை பிற்போட அரசு முயற்சிக்கின்றது.
இலங்கை விவகாரத்தில் இந்திய – மேற்குலக சக்திகளுக்கு அடுத்தடுத்து தோல்வியே ஏற்பட்டது. சரத் பொன்சேகாவை ஆட்சிக்கு கொண்டுவர அவர்கள் முயற்சித்தனர். அது வெற்றியளிக்கவில்லை. பின்னர் கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து மாகாண நிர்வாகத்தை கைப்பற்றச் செய்வதற்கு முயற்சித்தனர். அதுவும் வெற்றியளிக்கவில்லை. தேசிய நிர்வாகக் கோரிக்கையும் எடுபடவில்லை. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டம் களத்தில் மாற்றங்களை கொண்டுவரும் எனக் கருதினர். அதுவும் தோல்வியில் முடிந்திருக்கின்றது. இந்த நிலையில் அவர்களுக்கு வெற்றியைத் தரக்கூடிய களம் வட மாகாண சபைத் தேர்தல் தான். அதனால்தான் வட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்தும்படி அழுத்தங்களைக் கொடுக்கின்றன.
இந்திய – மேற்குலக சக்திகளின் இந்த நகர்வு அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். இது விடயத்தில் எந்த ஒரு பிடியையும் கொடுக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கின்றது. மேற்குலக அழுத்தத்திலும் பார்க்க தன்னை அசைக்கக்கூடிய அழுத்தம் கொடுக்கும் பலம் இந்தியாவிற்கு இருப்பதனால் இந்திய அழுத்தம் அதிகரிக்கக்கூடாது என்பதில் தீவிர கவனத்துடன் உள்ளது. இந்தியப் பலவீனங்கள் மகிந்தருக்கு அத்துப்படியாக உள்ளதால் அதற்கு ஊடாகப் புகுந்து ஓடுகின்றார். இறுதியாக நடைபெற்ற ஜெனிவா மாநாட்டில் பல கேள்விகளைக் கேட்ட இந்தியா அறிக்கை தயாரிக்கும்போது அதில் மூச்சுக் கூட விடவில்லை. இங்கு மகிந்தரின் இராஜதந்திரம் வெற்றியடைந்திருக்கின்றது. இனவிவகாரத்தில் இந்தியாவிற்கு பின்னாலேயே மேற்குலகம் செல்ல விரும்புவதால் ஜனாதிபதியின் இராஜதந்திரம் வெற்றியளிக்கின்றது.
அண்மையில் பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திலிருந்து வந்த பிரதிநிதிகளிடம் இலங்கை தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சியுங்கள் எனக் கூறியமை இங்கு கவனிக்கத்தக்கது. இதன் அர்த்தம் இந்தியாவை மீறி மேற்குலகினால் செயற்படமுடியாது என்பதே! துரதிஸ்டவசமாக இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் உள்ளுர் பொறிமுறைகள் போதியளவிற்கு வினைத்திறனுடன் செயற்படவில்லை. இது விடயத்தில் தமிழ்நாடே அதிகளவு பங்களிப்பினை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். வைகோவின் மத்தியப் பிரதேசப் போராட்டம் இப்போக்கில் சில அடிகளை எடுத்து வைத்திருக்கின்றது என்பது உண்மையே! ஆனால் அது போதுமானதல்ல. தாயகத்தில் செயற்படும் சக்கிகளும் இவ்விடயத்தில் கவனத்தை செலுத்த முன்வர வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் இவ்விடயத்தில் மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்களும் கணிசமானளவு தாக்கத்தினை அண்மைக்காலமாக ஏற்படுத்தி வருகின்றன. எனவே தமிழ்நாடு முயற்சி செய்தால் வெற்றிகள் கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு. ஸ்டாலினின் ஜெனிவாப் பயணமும் இவ் அணுகுமுறையில் கிடைத்த ஒரு வெற்றியே! இது போல பல வெற்றிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கவேண்டும்.
மற்றையது குடும்பத்திடம் அதிகாரங்களை குவிக்கும் விடயம். ஜனநாயகத்தை மறுக்கும் எந்தவொரு அரசாங்கமும் அதிகாரங்களை சிலரிடம் மட்டும் குவிப்பது வழக்கமானதே! அதுதான் இலங்கையிலும் நi;டபெறுகின்றது. ஜனநாயகத்தை மறுப்பவர்களுக்கு எந்த ஒரு ஜனநாயக நிறுவனமும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கும். அதனைக் கொண்டு செல்கின்ற மனிதர்களும் அச்சுறுத்தல்களாகவே இருப்பர். இதனால் மேலும் அதிகாரங்களை ஓரிடத்தில் குவிக்கவே முற்படுவர். இந்த ஒன்று திரண்ட அதிகாரங்களை வைத்துக்கொண்டு தான் ஆட்களையும் விலைக்கு வாங்க முடியும். சலுகைகளை வழங்கியும், பயமுறுத்தியும் பணிய வைக்கமுடியும். எனவே அதிகாரக்குவிப்பை அரசாங்கம் ஒருபோதும் கைவிடுவதில்லை.
தன்னுடன் இருப்பவர்களை கூட ஜனாதிபதி முழுமையாக நம்பத் தயாரில்லை. அதிகாரம் தன்னிடம் இருப்பதனால்தான் தன்னுடன் நிற்கின்றனர் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதிகாரம் இல்லை என்றால் அவர்களும் பாய்ந்தோட முற்படுவர்.
ஜனநாயக நிறுவனங்கள் தொடர்ச்சியாக சிதைவடைந்து வருதல் தொடர்பாக சிங்கள மத்தியதர வர்க்கத்திடம் பாரிய அதிருப்தியுண்டு. நாடாளுமன்றம், நீதித்துறை, கல்வித்துறை, ஊடகத்துறை என ஜனநாயக நிறுவனங்கள் ஒவ்வொன்றாக சிதைந்து வருகின்றன. விக்ரர் ஐவன் போன்ற சிங்கள பத்திரிகையாளர்கள் ஏற்கனவே அதிருப்திகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். எனினும் அதிருப்தி சிங்கள வெகுஜனக் கருத்தாக இன்னமும் மாறவில்லை. சிங்கள இனவாதம் அதனைத் தடுக்கின்றது.
பிரதம நிதியரசர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தனது சட்டத்தரணி மூலம் மறுத்திருக்கின்றார். எனினும் குற்றப் பிரேரணைக்கு எதிராக போராட்டங்கள் வலுவானதாக இல்லை. ஜே.வி.பி மட்டும் ஒரு காத்திரமான போராட்டத்தை நடாத்தியிருக்கின்றது. ஐக்கிய தேசியக்கட்சி அறிக்கைiயுடன் மட்டும் நின்றுவிட்டது. போராட்டம் என்ற கட்டத்திற்கு பெரியளவிற்கு நகரவில்லை. கரு ஜெயசூரியா பௌத்த மதபீடத் தலைவர்களை அறிக்கை வெளியிடவைத்தது சில முயற்சிகளைச் செய்திருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க இதில் பெரியளவு முனைப்புக் காட்டவில்லை. உட்கட்சிப் பிரச்சினையில் தனது கரம் மேல்நிலையில் நிற்பதற்கு ஜனாதிபதியின் ஆதரவு தேவை என அவர் நினைத்திருக்கலாம். சரத் பொன்சேகாவும் அறிக்கைக்கு அப்பால் நகரவில்லை. இறுதியாக நடைபெற்ற அவரது பொதுக்கூட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்காததினால் அவர் மனமுடைந்து போயிருக்கின்றார். இப்போதுதான் அவரது உயரம் அவருக்கு தெரியத் தொடங்கியுள்ளது. எல்லோரும் ஜனாதிபதியின் சாணக்கியத்திற்கு முன்னால் தோற்றுத்தான் விடுகின்றார்கள்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி யாருடைய தலைமையில் உருவாக்குவது என்பது தொடர்பாக ரணிலுக்கும், சரத் பொன்சேகாவிற்குமிடையில் ஒரு பனிப்போரே நடக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக்குழுவினர் சரத் பொன்சேகாவினை முன்னிலைப்படுத்தவே விரும்புகின்றனர். ஆனால் சரத் பொன்சேகாவின் பிரவேசம் தன்னுடைய இருப்பைப் பாதித்துவிடும் என்பதால் ரணில் எதிர்ப்புக் காட்டுகிறார். சரத் பொன்சேகாவின் போர் முகத்தினால் மனோ கணேசன், விக்கிரமபாகு போன்றோர் இதுவிடயத்தில் தயக்கம் காட்டுகின்றனர். சரத் பொன்சேகாவினை முன்னிலைப்படுத்தி நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்ற ஜே.வி.பியும் சரத் பொன்சேகாவினை முன்னிலைப்படுத்துவதில் அண்மைக்காலமாக பெரிய அக்கறையினைக் காட்டுவதில்லை.
போர்வெற்றியை மகிந்தர் மூலதனமாகக் கொண்டிருப்பதனால் அதில் பங்கெடுக்கக்கூடிய ஒருவரை முன்னிலைப்படுத்துவதன் மூலமே அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியும் என்பது சரத் பொன்சேகாவினை முன்னிலைப்படுத்துபவர்களின் வாதம். இதில் ஓரளவு உண்மையும் இருக்கின்றது. ஆனால் அவருக்கு இருக்கின்ற அமெரிக்க முகம் சிங்களமக்கள் மத்தியில் அவரைப் பலவீனப்படுத்தி விடுகின்றது. பேரினவாத கருத்துருவாக்கம் தமிழின எதிர்ப்பு, மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பவற்றினைக் காட்டி எழுப்பப்பட்டுள்ளதனால் சரத் பொன்சேகாவின் அமெரிக்கமுகம் சிங்கள மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவினைப் பெற்றுக்கொடுக்காது.
எது எப்படியோ வலிமையான எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்றிணைந்து உருவாகுவதைத் தடுப்பதில் ஜனாதிபதி வெற்றிகண்டு வருகின்றார் என்ற கூறவேண்டும். இக்கூட்டணியை உருவாக்காமல் அரசாங்கத்தை அசைப்பது பற்றி நினைத்துப்பார்க்க முடியாது. எனினும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டம், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை, குடும்பத்திடம் அதிகாரத்தை குவித்தல் போன்றன சிங்கள மத்தியதரவர்க்க மேற்பிரிவின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப்பிரேரணை விடயத்தில் தமிழ்த்தரப்பு என்ன நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. இது ஒரு ஜனநாயகப் பிரச்சினை என்பதால் இதனை எதிர்க்கவேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நாடு இனரீதியாக பிளவுபட்டிருக்கின்ற நிலையில் ஆர்ப்பாட்டமான எதிர்ப்புக்களைக் காட்டின் பேரினவாதிகள் அதனை தமக்கு சார்பாக பயன்படுத்தவே முற்படுவர். இது சிங்கள தரப்பின் போராடும் சக்திகளை வெகுவாகப் பலவீனப்படுத்திவிடும். எனவே ஆர்ப்பாட்டமற்ற பெயரளவு எதிர்ப்புகளைக் காட்டுவதே இவ்விடயத்தில் பொருத்தமானதாக இருக்கும். ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறினை இது விடயத்தில் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
குற்றப்பிரேரணை விவகாரத்தில் அரசாங்கம் வெற்றியடையும் போலவே தெரிகின்றது. அரசாங்கத்தின் இருப்பிற்கு இது அவசியமாக இருப்பதனால் என்னவிலை கொடுத்தாவது நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கும்.