முத்துக்குமார்
அண்மைக்காலமாக சற்றுத் தேக்கநிலையில் இருந்த தமிழ் அரசியல் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி மகிந்தரின் இந்தியப் பயணத்திற்கெதிரான வைகோவின் போராட்டம், இந்திய மத்திய அரசு இந்தியாவிற்கு வருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தமை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலப்பறிப்புக்கு எதிரான முல்லைத்தீவுப் போராட்டம், சம்பந்தன் தலைமைக்கு எதிரான சுரேஷ் பிரமேச்சந்திரனின் நீண்ட அறிக்கை, தமிழர்கள் எவருமற்ற கிழக்கு மாகாண அமைச்சரவை என அடுத்தடுத்த இடம்பெற்ற பல நிகழ்வுகள் இந்த சூட்டைக் கிளப்பியுள்ளன.
இந்த நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது, ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கெதிராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோ நடாத்திய போராட்டமாகும். தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இப்போராட்டத்தில் பங்குபற்றியிருக்கின்றனர். மத்திய பிரதேசத்தின் எல்லையில் மாநில பொலிசாரால் இவரது பயணம் இடைமறிக்கப்பட்டபோது, மூன்று நாட்களாக வீதியில் அமர்ந்து வைகோ போராட்டம் நடாத்தினார். இரவு நேரங்களில் பனிக்குளிரில் வீதியிலேயே தொண்டர்களுடன் வைகோ படுத்துறங்கினார். இந்தி மொழியில் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன.
மத்திய பிரதேச மாநிலத்தின் சில பகுதிகள் ஸ்தம்பித்து போகக்கூடிய வகையில் வைகோவின் போராட்டம் இடம்பெற்றது. இப்பகுதிகளில் ரயில் போக்குவரத்துக்கள் இரத்து செய்யப்பட்டதோடு, சேவையில் ஈடுபட்ட ரயில்களும் பல புகையிரத நிலையங்களில் நிற்காமல் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. வீதிப்போக்குவரத்தும் பல இடங்களில் தடைப்பட்டது.
மத்தியில் ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்திற்கு இரண்டும் கெட்டான நிலை. மகிந்தரின் பயணத்தையும் தடுக்க முடியாது. வைகோவின் போராட்டத்தையும் அடக்கமுடியாது. ஒரு சில நாட்கள் தீர்மானம் எடுக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது. விரைவில் மத்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருப்பதனால் தமிழ்மக்களுக்கு எதிரானவர்கள் என்ற முகத்தைக் காட்ட பாரதிய ஜனதா கட்சி விரும்பவில்லை. இதில் மிகவும் சங்கடப்பட்டு நெளிந்தவர்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள்தான்.
முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின்னர் இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வு என்பது தமிழ்நாட்டின் பொதுக்கருத்தாகவே வளர்ச்சியடைந்துள்ளது. வளர்ச்சியடைந்த தமிழர்களது போராட்டத்தைத் தங்களினால் பாதுகாக்க முடியவில்லையே என தமிழக மக்கள் குற்ற உணர்வின் பால் குமுறிக்கொண்டிருக்கின்றனர். கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட தமிழகத்தின் சிறுபிரிவினர்கூட இதற்கு விதிவிலக்காக இல்லை. முன்னர் புலிகளை காரசாரமாக எதிர்த்தவர்கள் கூட இன்று தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர். தமிழகத்தின் சிறு சஞ்சிகைகளோடு தொடர்புடையவர்களால் இதன் வீச்சத்தை நன்றாகவே தரிசிக்க முடிகிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி தமிழகத்தின் வாக்கு வங்கியிலும் பாதிப்பினைச் செலுத்தத் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா இப்பிரச்சினையை கைவிடாமல் தூக்கிப் பிடிப்பதற்கும், கருணாநிதி அதிக செலவு செய்து ரெசோ மாநாடு நடாத்துவதற்கும் இவ் வளர்ச்சிதான் காரணம். இப் புதிய வளர்ச்சியினால் அதிகம் நெருக்கடிக்குள்ளானது தி.மு.க காரரும், காங்கிரஸ்காரரும்தான்.
வைகோவின் போராட்டம் பல வழிகளில் முக்கியத்துவம் உடையது. அதில் முதலாவது, தமிழ்நாடு மாநிலத்துடன் மட்டும் முடங்கியிருந்த, சிலவேளைகளில் மட்டும் புதுடில்லியிலும் எழுச்சிபெறுகின்ற தமிழ்த்தேசிய அரசியலை முதன்முதலாக தமிழகத்திற்கு வெளியே கொண்டுசென்றமையாகும். மத்திய பிரதேசத்திற்கு மட்டுமல்ல ஆந்திரா, மகாராஸ்டிரா எனப்போகும் வழிகளிலெல்லாம் பிரச்சாரம் இடம்பெற்றிருக்கின்றது. அம்மாநில மக்கள் மிகுந்த ஆதரவினைக் கொடுத்திருக்கின்றனர். மத்திய பிரதேச எல்லைப்புறப் போராட்டத்தின் போது உள்ளூர் கிராம மக்களும் திரளாக பங்குபற்றியிருக்கினறனர். உணவு, நீர், போர்வை வசதிகளைத் தாங்களாகவே செய்துகொடுத்திருக்கின்றனர். இலங்கையில் தமிழ்மக்களின் நிலையினை விளக்கியபோது மிகுந்த அனுதாபத்துடன் அதனைச் செவிமடுத்துள்ளனர். தொலைக்காட்சி உட்பட மாநில ஊடகங்கள் அனைத்தும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து போராட்ட செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தமக்கள் ஆதரவு காரணமாகவே கைது செய்த பொலீசார், மாலை அணிவித்து வைகோவினை வழி அனுப்பிவைத்தனர்.
தமிழ்த்தேசிய அரசியலை ஒரு கட்டத்திற்கு மேல் வளரவிடாமல் தடுப்பது இந்திய மத்திய அரசுதான். போரில் தமிழ்மக்கள் அழிவதற்கும் இந்தியாவே பிரதான காரணமாகியிருந்தது. இன்று தமிழ்மக்களுக்கு எதிராகவே இந்தியா செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. சர்வதேச மட்டத்தில் இலங்கையைப் பாதுகாப்பதும் இந்தியாதான். ஜெனிவா தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ததும் இந்தியாதான். இந்த மத்தியஅரசின் தமிழ் இன விரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்தவேண்டும். தமிழ்நாட்டுச் சக்திகளினால் மட்டும் இதனைத் தனித்து மேற்கொள்ள முடியாது. தமிழக மக்கள், தமிழகத்திற்கு வெளியே உள்ள இந்திய மக்கள் என்போரை கொண்டு வலிமையான அழுத்தங்களை மத்தியஅரசிற்கு வழங்கும்போதே இவற்றை சாத்தியமாக்கமுடியும். இந்திய மத்திய அரசாங்கம் என்பது மாநிலக் கட்சிகளையும் இணைத்த அரசாங்கமாக இருப்பதனால் ஏனைய மாநிலங்களிலிருந்தும் அழுத்தங்கள் வரும்போது மத்திய அரசினால் இதனைப் புறக்கணிக்க முடியாது.

இரண்டாவது, இந்திய அரசியலில் மாற்றுச் சக்தியாக இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சிக்கு அழுத்தம் கொடுத்துள்ளமையாகும். வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைவதற்கு பெரிய வாய்ப்புக்கள் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை பெரியண்ணன் பாணியில் நடந்து கொள்வதினால் அதனுடன் இணைந்துள்ள மாநிலக் கட்சிகள் அதிருப்தியுற்றுள்ளன. இந்த அதிருப்தி காரணமாகவே திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, தனது கட்சி அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சியுடன் திருப்தியான உறவு இல்லை. சரியான தருணம் கிடைத்தால் கூட்டணியிலிருந்து கழருவதற்கே கருணாநிதி தயாராக இருக்கின்றார். போருக்கு காங்கிரஸ் அரசாங்கம் துணை நின்றதால் அந்தப் பழி தனக்கு வந்துவிட்டது என்ற கவலை வேறு கருணாநிதிக்கு இருக்கின்றது.
காங்கிரஸிற்கு ஏற்பட்ட இக்கட்டான சூழலில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதக் கட்சி, காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு தருவதாகக் கூறினாலும், அக் கட்சியை நம்பிக்கையான கூட்டாளியாக காங்கிரஸ் தலைமை பார்க்கவில்லை. மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பெரும் போட்டியும் காங்கிரஸிற்கு அதனுடன் இருக்கின்றது.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மேலும் சிதைவடைவதற்கே வாய்ப்புக்கள் உண்டு. அது சிதைவடையாவிட்டாலும்கூட காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் இல்லை. பாரதிய ஜனதா கட்சி அல்லது மூன்றாவது அணியே ஆட்சி அமைக்கலாம். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தாலும் அது அக் கட்சியின் தனித்த ஆட்சியாக இருக்கப்போவதில்லை. கூட்டரசாங்கமாகவே இருக்கப் போகின்றது. மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் அது முழுக்க முழுக்க கூட்டணி அரசாங்கம் தான்.
எந்தக் கூட்டணி ஆட்சியினை அமைத்தாலும், தமிழ்நாடு கூட்டணி அரசாங்கத்தில் முக்கிய இடத்தை வகிக்கும். இதனால் தமிழ் நாட்டில் பொதுக்கருத்தாக எழுச்சியடைந்திருக்கின்ற ஈழத்தமிழர் விவகாரத்தை ஆட்சியமைப்பவர்கள் எவரும் இலகுவில் புறக்கணித்து விட முடியாது. வைகோவின் போராட்டம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சித் தலைமை சங்கடப்பட்டமைக்கு பிரதான காரணம் இதுதான். எதிர்வரும் தேர்தலில் 'நாற்பதும் நமதே' என்ற உறுதியில் ஜெயலலிதா இருக்கின்றார். வரப்போகும் அரசாங்கத்தில் ஜெயலலிதா முக்கிய இடத்தை வகிப்பார் என்பதை எவரும் நிராகரிக்க முடியாது. ஒரு மாற்றுக்கட்சி என்ற வகையில் பாரதிய ஜனதா கட்சிக்கு வைகோவின் போராட்டம் வலிமையான அழுத்தத்தினைக் கொடுத்துள்ளது.
இலங்கையில் சில பத்தி எழுத்தாளர்களும், சில ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களும் வைகோ, சீமான் போன்றவர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்த முயல்கின்றனர். இது மிகத் தவறானதாகும். வைகோ, சீமான், நெடுமாறன் போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவர்கள். தமது சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல அரசியல் வாழ்க்கையிலும் பல இழப்புக்களை சந்தித்தவர்கள். அவர்களைக் கொச்சைப்படுத்துவது சமூக அறமல்ல. வைகோ மத்தியப் பிரதேசத்தின் எல்லையில் நடுவீதியில் பனிக்குளிரின் மத்தியில் 3 நாட்கள் தொண்டர்களுடன் படுத்துறங்கினார். சம்பந்தன் இவ்வாறு படுப்பாரா?
ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு ஏற்றவகையில்தான் தமிழக அரசியல் சக்திகள் செயற்பட வேண்டும் என ஆலோசனை கூறுகின்றார். அதன் அர்த்தம், சம்பந்தன் தலைமையின் செயற்பாடுகளுக்கு ஏற்று நடக்க வேண்டும் என்பதே. சம்பந்தன் சிங்கக்கொடி ஏற்றினார். தமிழக சக்திகளையும் சிங்கக்கொடியேற்றும்படி கூறுகின்றாரா? சம்பந்தன் தமிழ்த்தேசிய அரசியலை மாகாணசபை அரசியலாக கீழிறக்கினார். சர்வதேச இந்திய அழுத்தங்கள் மகிந்தர் மீது வரக்கூடாது என்பதற்காக ஜெனிவா மாநாட்டின் போதும், மகிந்தரின் இந்தியப் பயணத்திற்கு முன்னரும் தனியாகச் சென்று மகிந்தருடன் உரையாடுகின்றார். இவற்றை தமிழக சக்திகளும் மேற்கொள்ளவேண்டும் எனக் கூறுகின்றார்களா?
இங்கு இரண்டு விடயங்களை கவனிப்பது அவசியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டுக்கோப்பான அமைப்பல்ல. அதற்கு இலக்கோ, கொள்கையோ, வேலைத்திட்டங்களோ, அமைப்பு வடிவங்களோ எதுவும் இல்லை. முடிவுகள் கூட்டாக எடுக்கப்படுவதும் இல்லை. சம்பந்தன் தனித்தே முடிவுகளை எடுக்கின்றார். ஏனைய உறுப்பினர்களுடன் எந்தவித கலந்தாலோசனையும் இல்லாமலேயே சம்பந்தன் ஜனாதிபதியுடன் பேசச் செல்கின்றார். அமெரிக்கா ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தபோது, தீர்மானம் நிறைவேறும் மட்டும் ஜனாதிபதியைச் சந்திக்கவேண்டாம் என ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தனிடம் வேண்டுகோள் விடுத்தனர். சம்பந்தன் அதனை நிராகரித்து 'தான் ஜனாதிபதியை சந்திப்பேன். நீங்கள் எதுவும் செய்யமுடியாது' எனக்குறிப்பிட்டார்.
இவையெல்லாம் ஏதோ கற்பனையில் சோடித்துச் சொல்பவையல்ல. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனால் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டவை. இந்நிலையில் சம்பந்தன் தலைமையின் செயற்பாட்டிற்கு ஏற்ப ஏனைய சக்திகள் செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு தூரம் பொருத்தமானது.
இரண்டாவது இலங்கையில் தமிழ்த்தரப்பு செயற்படக்கூடிய ஜனநாயக வெளி மிகக்குறைவு. அந்த வெளியைகூட பயன்படுத்த சம்பந்தன் தலைமை தயாராக இல்லையென்பது வேறுகதை. முல்லைத்தீவு மாவட்ட கோப்பாபுலவு மக்கள் குடியேற அனுமதிக்காத போது, அதை எதிர்த்து ஒரு பத்திரிகை அறிக்கையைக்கூட சம்பந்தன் தலைமை வெளியிடவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மட்டும் இடைக்கிடை சம்பந்தன் தலைமைக்கு வெள்ளைப் பூச்சடிக்க முற்படுகின்றார்.
ஒப்பீட்டு ரீதியில் இலங்கையைவிட தமிழ்நாட்டிலும், புலம்பெயர்நாடுகளிலும் ஜனநாயகவெளி அதிகம். அதனைப் பயன்படுத்தி அங்குள்ளவர்கள் போராடுகின்றனர். அதனை ஆதரிக்கவேண்டுமே தவிர பலவீனப்படுத்த முற்படக்கூடாது. எல்லாவற்றையும் சம்பந்தனின் பொட்டலத்திற்குள் அடக்கமுடியாது.
தமிழக அரசியல் சக்திகள் ஏதாவது தவறு இழைத்தால் அதனை அரசியல் ரீதியாக சுட்டிக்காட்டவேண்டுமே தவிர கொச்சைபடுத்தி இழிவுபடுத்துவது அழகல்ல.
தமிழக அரசியல் சக்திகள் தொடர்பாக என்னதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் வைகோவின் போராட்டம் ஒரு மைல்கல் என்பதை நிராகரிக்கமுடியாது.