Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புதுக்குடியிருப்பில் தனது வீட்டையும் காணியையும் மீட்கப் போராடும் செல்லம்மா

<p>புதுக்குடியிருப்பில் தனது வீட்டையும் காணியையும் மீட்கப் போராடும் செல்லம்மா</p>
Ruki Fernando (தமிழில்: ரூபன் சிவராஜா)

 

செல்லம்மாவுக்கு 83 வயது. முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு கிழக்கு, 7ம் வட்டாரத்தில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேலாக சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இரவுகளின் குளிருக்கும் முகம் கொடுத்து தனது வீட்டுக்கு முன்பாகப் போராடி வருகிறார். ஏனெனில் அவரது வீடும் காணியும் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வெளிச்சம் மங்கிக்கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் இராணுவக் காவலரணுக்கு அப்பாலுள்ள தன் வீட்டை அவர் எனக்குக் காண்பிக்கின்றார். வீட்டின் உரிமையாளரான அவரது அனுமதி உள்ளதால் வீட்டினைப் படமெடுக்க ஆவலிருந்தும் பின்விளைவுகளைக் கருத்திற்கொண்டு அதனைத் தவிர்த்துக்கொண்டேன்.

செல்லம்மாவின் மகனும் மருமகனும் 1985இல் ஒரு திட்டமிட்ட படுகொலை நடவடிக்கையில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுவிட்டனர். மொத்தமாக அன்று கொல்லப்பட்ட 24 பேரில் இவர்கள் இருவர். செல்லம்மாவின் கணவர் 2014 இல் இறந்து போனார். தன் சொந்த வீட்டிலும் வளவிலும் கணவனின் இறுதிநிகழ்வினை நடாத்துவதற்கு உடலை வைத்துக் கொண்டு காத்திருந்தார். ஆனபோதும் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் அது சாத்தியப்படாமல் போயிற்று. தன்னைத் தானே தீயிட்டுக் கொழுத்தி எதிர்ப்பைக் காட்ட முனைந்தபோது, சுற்றத்தாரால் அந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

செல்லம்மா இப்போது தளர்ந்துபோயுள்ளார். தனது சாவுக்கு முன்பு ஒரேயொரு பெருவிருப்பு அவருக்கு உண்டு. 'என்ர சொந்த வீட்டிலயும் காணியிலயும் வாழ்ந்து சாக வேணும்' என்கிறார் செல்லம்மா.

'என்ர வீட்டுத் தோப்பில எக்கச்சக்கமான தேங்காய் விளைஞ்சது. ஆனா இப்ப எல்லாத்தையும் ஆமிக்காரர் பொறுக்கிறாங்கள். நான் விலை குடுத்து தேங்காய் வாங்குறன். ஆமி என்ர வீட்டில இருக்குது. நான் மாதம் 8000 ரூபாய் குடுத்து வாடகை வீட்டில இருக்கிறன்' என்கிறார் அவர்.

தனது காணியில் 42 தென்னை மரங்கள் இருந்தது என்கிறார் 68 வயதுடைய மார்கிரேட் கருணானந்தன். இவர் செல்லம்மாவின் அதே கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய கணவரும் 1985ஆம் ஆண்டு திட்டமிட்ட படுகொலை நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.

<p>புதுக்குடியிருப்பில் தனது வீட்டையும் காணியையும் மீட்கப் போராடும் செல்லம்மா</p>

இவர்கள் இருவரும் இவர்களுடைய முழு கிராமமும் அந்த மாவட்டமும் 2009 இல் இடப்பெயர்வுக்கு முகம்கொடுத்தவர்கள். பாரிய அவலங்களை எதிர்கொண்டனர். பின்னர் மெனிக் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். சில காலத்தின் பின்னர் அவர்கள் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும், அவர்களது சொந்த வீடுகளுக்கும் காணிகளுக்கும் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. மக்கள் இடப்பெயர்விலும், தடுப்பிலும் இருந்த காலங்களிலிருந்து இன்றுவரை இந்தக் கிராமத்தின் 49 குடும்பங்களின் 19 ஏக்கர் பரப்பளவுள்ள காணிகளை இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. பல கிராம மக்களிடம் காணிகளுக்கான உறுதிகள், சட்ட ஆவணங்கள் மற்றும் காணிகளைத் திரும்பப்பெறுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் உள்ளதாக நான் அறிந்தேன்.

கிராமத்தவர்கள் முன்னரும் பலதடவைகள் தமது காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தற்போது இந்த ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதியிலிருந்து புதிய போராட்டத்தினைத் தொடங்கியுள்ளனர். இம்முறை, தமது காணிகளுக்குத் திரும்பச் செல்வதற்கு அனுமதிக்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிடுவதில்லை என்ற உறுதியான தீர்மானத்துடன் உள்ளனர். வீதியோரத்தில் சமைக்கின்றனர். பகல் முழுவதும் அங்கு இருக்கின்றனர். இரவுகளில் அங்கு உறங்குகின்றனர். வீதிக்கு அப்பாலுள்ள தமது காணிகளையும் வீடுகளையும் உற்றுப் பார்த்தபடி வீதியோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாம் அங்கு சென்றபோது என்னைச் சந்தேகத்துடன் பார்த்தனர். நானும் இராணுவத்தைச் சேர்ந்த ஆளா எனக் கேட்டனர். போகப்போக நட்போடு பழகத் தொடங்கினர். போராட்ட இடத்திற்குச் சென்று விசாரிக்கும் எம்போன்றவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியும் தமது கதைகளைக் கூறியும் அவர்கள் களைப்புற்றிருந்தனர். ஆனபோதும் தொடர்ந்தும் சலிக்காமல் தமது கதைகளைச் சொல்லத் தவறவில்லை.

பெப்ரவரி 9, அவர்களில் சிலர் கொழும்புவரை நீண்ட பயணம் மேற்கொண்டு பிரதமரைச் சந்தித்தனர். தமது குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்தவர்கள், தமது நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் என்றபோதிலும் அருகில் வேறொரு பகுதியில் இராணுவத்தினர் தங்கியிருப்பதற்குரிய பரிந்துரையை பிரதமருக்கு அம்மக்கள் வழங்கியிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் பிரதமர் தொடர்பு கொண்டதாகவும், தனது அவுஸ்ரேலியப் பயணத்தின் பின்னர் இந்த விவகாரம் பற்றி கவனத்திலெடுப்பதாகவும் தெரிவித்ததாக அம்மக்கள் கூறினர்.

எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு, தமது காணிகளுக்குச் செல்ல தாம் அனுமதிக்கப்படும்போது போராட்டத்தைக் கைவிடுவதாக கூறியுள்ளனர். பிரதமரிடம் இதற்கான வெளிப்படையான பதில் ஏதும் இருக்கவில்லை. ஆனால் எதுவித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடரலாம் என பிரதமரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தமது சொந்தக் காணிகளுக்கும் வீடுகளுக்கும் மக்கள் செல்வதைத் தடுக்க வேண்டாமென ஏன் பிரதமரால் இராணுவத்திற்கு உத்தரவிட முடியவில்லை என்பது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

மக்கள் போராடத் தொடங்கி மூன்று வாரங்களைக் கடந்து விட்ட நிலையிலும், பிரதமரைச் சந்தித்து பத்து நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் அதிகார மையத்திடமிருந்து எதுவித சாதகமான பதில்களும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் மக்கள் தமது எதிர்ப்புப் போராட்டத்தை உண்ணாநிலைப் போராட்டமாகத் தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்கள் சலுகைகள் எதனையும் கேட்கவில்லை. ஒரு தவறைச் சரிசெய்யக் கேட்கிறார்கள். தமது சொந்த வீடுகளுக்கும் காணிகளுக்கும் செல்வதற்கு அனுமதி கேட்கின்றார்கள்.

இவர்களுடைய இந்தப் போராட்டமென்பது இடம்பெயர்ந்த மக்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்புவதில் எதிர்கொள்ளும் பல்வேறு போராட்டங்களில் ஒன்று. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சில நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பல பத்தாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் சொந்த நிலங்களுக்கு அனுமதிக்கப்படாமல் காத்திருக்கின்றனர். பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்கள், அரசாங்கத்திற்கு இடைவிடாத கோரிக்கைகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தல் எனப் பல்வேறு முனைப்புகளில் மக்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனபோதும் இன்றும் காத்திருக்கின்றனர்.

செல்லம்மாவுக்கும் இந்த மக்களுக்கும் நல்லிணக்கமென்பது அவர்களுடைய காணிகளுக்கும் வீடுகளுக்கும் அனுமதிக்கப்படுவது தான். இந்த மக்கள் எப்பொழுது தமது காணிகளைத் திரும்பப் பெறுகின்றனரோ அது சிறிலங்காவின் நல்லிணக்கத்திலும் இடைமாறு கால நீதி நடைமுறையிலும் பாரிய விடயமாக கணிக்கப்படக்கூடியது. அரசாங்கமும் ஏனைய சிலரும் காணி மீளளிப்புச் செயற்பாடு நீண்ட காலங்களை எடுக்குமெனச் சொல்கின்றனர். ஆனால் செல்லம்மாவுக்கு காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. தன் சாவுக்கு முன்னர் தனது சொந்த வீட்டுக்கும் காணிக்கும் செல்லவேண்மென்பது அவரது விருப்பு!

நன்றி:Groundviews.org 

http://groundviews.org/2017/02/20/sellamma-her-struggle-to-reclaim-her-house-and-land-in-puthukudiyiruppu/

2/24/2017 1:49:41 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்