Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இணைய வெளி : பொய்களுக்கு முதல் மரியாதை

இணைய வெளி : பொய்களுக்கு முதல் மரியாதை
மதியழகன்

 

'உண்மை ஒரு தடவை உலகத்தைச் சுற்றி வருவதற்கிடையில் பொய் நூறு தடவை சுற்றிவந்துவிடும்' என்று சொல்வார்கள். 'கவரிங்' நகையைப் போல மினுக்கம் நிறைந்தது பொய். இந்த 'மினுக்கத்தின் கவர்ச்சி'யில் மெஞ்ஞானம் கூடத் தடுமாற்றமடைந்து விடுவதுண்டு. இல்லையென்றால் தமிழ் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இணைய வெளியும் இத்தனை பொய்களையும் கூச்ச நாச்சமில்லாமல் தினமும் உற்பத்தி செய்து, விற்றுகொண்டிருக்க முடியுமா?

'சர்வதேச சமூகம் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகத் திரும்பி விட்டது', 'சர்வதேச சமூகத்துக்குத் தமிழரின் அரசியற் பலத்தை மீண்டும் (தயவு செய்து இந்த மீண்டும் என்பதை எத்தனையாவது தடவை என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்) ஒரு தடவை நிரூபித்துக் காட்ட வேண்டும்', 'ஈழத்தமிழருக்கான அரசியற் தீர்வில் இந்தியா உறுதியாக நிற்கிறது', 'புலிகள் இன்னும் பலத்தோடிருக்கின்றனர்', 'வன்னிப் பகுதியில் இன்னும் யுத்த கால நிலவரமே உள்ளது' என்றமாதிரியான செய்திகளையும் அறிக்கைகளையும் அதிகமான இணையத்தளங்களும் சில தரப்பு அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் தொடர்ச்சியாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றன.

இப்படித் தங்களின் விற்கவே முடியாத பண்டங்களை என்னென்ன மாதிரியெல்லாம் அலங்காரம் பண்ணி விற்று விடுகிறார்கள் இவர்கள்? அலங்காரத்தோடு வந்தால் எந்தக் குப்பைக்கும் தானாகவே மவுசு ஏறிவிடும். இதனால்தான் பொய் எப்போதும் அலங்காரங்களோடு ஊர்வலம் வருகிறது போலும். இல்லையென்றால் நடக்கவே முடியாத காரியங்களை நடப்பதாகவும் – நம்பவே முடியாத விசயங்களை நம்பக் கூடிய மாதிரியும் எப்படிக் காட்ட முடிகிறது?

முதலில் இந்த மாதிரிச் சொல்லப்படும் வாக்குகளிலுள்ள உண்மைத்தன்மையை – அவற்றின் நேர்மையைப் பற்றிப் பார்க்க வேண்டும். 'சர்வதேச சமூகம் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகத் திரும்பி விட்டது' என்று சொல்கிற அரசியல்வாதி எத்தகைய அடிப்படையில் இதைச் சொல்கிறார்? எப்பொழுது தொடக்கம் சர்வதேச சமூகம் ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் திரும்பியிருக்கிறது? அப்படித் திரும்பியதற்கான ஆதாரங்கள் என்ன? அவர் சொல்கிறபடி சர்வதேச சமூகம் ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் திரும்பியிருந்தால் அது என்ன நன்மைகளையெல்லாம் செய்திருக்கிறது? அல்லது எத்தகைய நன்மைகளைச் செய்யத் தயாராக இருக்கிறது?

இதைப் பற்றியெல்லாம் அவரும் சொல்லப்போவதில்லை. அவர் திருவாய் மலரும்போது அதை ஏந்துகிற எந்த ஊடகக்காரனும் இதைப் பற்றிக் கேள்வி கேட்கப்போவதில்லை. குறைந்த பட்சம் சிறிய கேள்விகள் கூட அவர்களுடைய தலைக்குள் உதிப்பதில்லை.

ஆகவே, அப்படியே இந்த அறிவிப்பு சனங்களின் தலைக்குள் இறக்கப்படுகிறது. சனங்களும் புதிதாகச் சிந்திக்காமல், பழகிய பாதையிலேயே பயணிப்பது சுலபம் என்கிற மாதிரி, எந்தக் கேள்விகளும் இல்லாமலே அப்படியே தங்களுடைய தலையைக் கொடுத்து இதையெல்லாம் வாங்கி நிரப்பிக் கொள்கிறார்கள்.

இலங்கையின் உள்நாட்டு நிலவரத்தையும் அதற்காக இலங்கையில் நடந்த கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் சர்வதேச சமூகம் அறியாததல்ல. இந்தப் போராட்டங்களில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட சனங்கள் கொல்லப்பட்ட அல்லது பலியாகியதை அது தெரியாமல் இருக்கின்றதா? எத்தகைய தீர்வுகளும் முன்வைக்கப்படாமலே இந்தப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டது கூடச் சர்வதேச சமூகத்துக்குத் தெரியாதா?

இதை விளங்கிக் கொள்வதற்கு அதிக விளக்கங்கள் தேவையில்லை.

இணைய வெளி : பொய்களுக்கு முதல் மரியாதை

இன்னும் புலிகளின் மீதான தடைகளையும் விதிமுறைகளையும் சர்வதேச சமூகம் விலக்கிக் கொள்ளவில்லை. ஆனால், புலிகளை ஒடுக்கியதும், அது எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டது என்று தெரிந்து வைத்திருப்பதும் இதே சர்வதேச சமூகம்தான். புலிகளை ஒடுக்க வேண்டும் என்ற போரில் இலங்கையுடன் இணைந்து நின்று தமிழர்களின் மீது போரைத் தொடுத்ததும் சனங்களின் மீது யுத்தத்தை இறக்கியதும் இதே சர்வதேசமே.

மட்டுமல்ல, தங்களின் நாடுகளில் உள்ள ஈழத்தமிழரின் அரசியற் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித்து, அங்கே இருந்து அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான குற்றச்சாட்டுகளையும் காரணங்களையும் இதே சர்வதேச சமூகமே உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

கனடா, பிரிட்டன், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இருந்து திருப்பி அனுப்பட்டு, கொழும்பில் வந்திறங்கிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் இதற்குச் சாட்சி.

அடுத்தது, 'சர்வதேச சமூகத்துக்குத் தமிழரின் அரசியற் பலத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துக் காட்ட வேண்டும்' என்பது. அப்படியென்றால், இதற்கு முன்னர் தமிழர்கள் செய்து காட்டியதெல்லாம் என்ன?

1977 இல் தமிழீழத்துக்கான ஆணை என்றபோது தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாக நின்று பலத்தைக் காட்டவில்லையா? பிறகு ஆயுதப்போராட்டத்துக்கென ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அதன்மூலம் ஒரு சேதியை உணர்த்தவில்லையா?

பிறகு பெங்களுர் மற்றம் திம்புப் பேச்சுவார்த்தைகளின் போதெல்லாம் ஒற்றுமையாக –ஒன்றாக நின்று தங்கள் நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தவில்லையா?

அதற்குப் பிறகு 'பொங்குதமிழ்' என்றும் 'மக்கள் எழுச்சி'யென்றும் வடக்குக் கிழக்கிலும் புலம் பெயர் நாடுகளிலும் ஒன்றுதிரண்டு அடையாளப்படுத்தவில்லையா?

இவற்றை விட, அரசியல் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நீண்ட போராட்டத்தை – மாபெரும் இழப்புகளின் மத்தியில் தமிழர்கள் நடத்தியதை அது இன்னும் புரிந்து கொள்ளவேயில்லையா?

2004 இல் நடந்த தேர்தலின்போது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து இந்த ஒற்றுமையை– ஒரே நிலைப்பாட்டை நிரூபிக்கவில்லையா?

இறுதிப்போரின்போது மீண்டும் புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் எல்லாம் அணிதிரண்டு குளிரிலும் பனியிலும் நின்றுருகி நெஞ்சத்தைக் கரைக்க முயற்சிக்கவில்லையா?

இதையெல்லாம் சர்வதேச சமூகம் எப்படி விளங்கிக் கொண்டது? அல்லது இவற்றை அது விளங்கிக் கொள்வதற்குப் பின்னிற்பது எதற்காக? அல்லது இதுவரையில் நடந்ததெல்லாமே – தமிழ் பேசும் மக்கள் காட்டிய வெளிப்பாடுகள் எல்லாமே பொய்யானவையா? அப்படியென்றால் அப்பொழுதும் இப்படித்தானே சர்வதேச சமூகத்துக்கு தமிழர்கள் - சிறுபான்மை மக்கள் தங்கள் ஒற்றுமை உணர்வையும் அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும் என்று அன்றைய அரசியற் தலைமைகள், இன்றைய தலைமைகளின் முன்னோடிகள் சொன்னார்கள்?

இதற்குப் பின்னரும், மீண்டும் சர்வதேச சமூகத்துக்கு தமிழர்கள் அல்லது சிறுபான்மைச் சமூகத்தினர் தங்களின் ஒற்றுமையையும் அரசியல் உணர்வையும் எப்படி வெளிப்படுத்துவது? அப்படி வெளிப்படுத்தினால் அதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக ஏதாவது நன்மைகள் கிட்டிவிடுமா? அப்படியெனில் அதை உறுதிப்படுத்துவது யார்? அதற்கான உத்தரவாதம் என்ன?

இதற்கெல்லாம் பதிலே இல்லை. இதைப் பற்றிச் சனங்கள் கேள்வி கேட்டாற்தானே பதிலைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் சொல்வோருக்கு ஏற்படும்? சனங்களோ இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதேயில்லை. அவர்கள் அரசியல் ரீதியாக மிகப் பாமரத்தனமான அறிவுடனேயே உள்ளனர். இதில் படித்தவர்கள், புத்திஜீவிகள் என்போரே மிகப் பேதமையுடனுள்ளனர். அவர்கள் கூறும் விளக்கங்களைக் கேட்டால் சிரிப்புத்தான் வரும்.

சனங்களை விடுவோம், சமூக சிற்பிகள், புத்திஜீவிகள் அமைப்பினர் என இருக்கும் யாருடைய மண்டையிலும் கூட எந்தப் புல்லும் முளைப்பதேயில்லை.

அடுத்தது, 'ஈழத்தமிழருக்கான அரசியற் தீர்வில் இந்தியா உறுதியாக நிற்கிறது' என்பது. இந்தியா இப்படிச் சொல்வதை விட்டு எப்போதுதான் மாறி நின்றது? அது இந்திரா காந்தி காலத்திலிருந்தே சொல்லி வருகிறது, 'ஈழத்தமிழருக்கு அரசியல் தீர்வு வைக்கப்பட வேணும். பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காணப்படவேண்டும்' என்று.

ஆனால் என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது? இந்தியா கூட நேரடியாக இந்த விசயத்தில் ஈடுபட்டது. மத்தியஸ்தம் வகித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியது. பிறகு தானே தலையிட்டு 1987 இல் ஒரு உடன்படிக்கையை (இலங்கை இந்திய உடன்படிக்கை –ராஜீவ் ஜே.ஆர் உடன்படிக்கை) செய்தும் பார்த்தது. எல்லாம் என்ன பயனைத்தந்தன?

இறுதியில் 'புலிகளுக்கு எதிரான யுத்தம்' என்ற பேரில் ஈழத்தமிழர்களுக்கெதிரான யுத்தத்தில் இந்தியாவே பங்கெடுத்தது.

யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன. அமைதிக்கும் சமாதானத்துக்கும் தடையாக இருந்த சக்தி எனச் சொல்லப்பட்ட புலிகளும் இன்று களத்தில் இல்லை. ஆனால், அதற்குப் பிறகு என்னதான் நடந்து கொண்டிருக்கின்றன?

அப்படியெனில் இதுவரையில் இந்தியாவோ, சர்வதேச சமூகமோ தலையிட்டு ஏன் ஒரு தீர்வு முயற்சியைச் சாத்தியமாக்கவில்லை?

பதிலாக இன்னும் பொய்வாக்குறுதிகள், காலங்கடத்தல் நடவடிக்கைகளைத்தானே இவை செய்கின்றன?

இன்னொன்று, 'புலிகள் இன்னும் பலத்தோடிருக்கின்றனர்' என்பது. இதை அநேகமான ஈழத்தமிழ் ஊடகங்களும் இணையத்தளங்களும் அரசியல்வாதிகளும் இப்போது சொல்வது குறைவு. அவர்களுக்கு ஓரளவு யதார்த்தம் விளங்கிவிட்டது. உண்மை புரியும்.

ஆனால், இந்தியத் தமிழ் ஊடகங்களும் தமிழகத்திலிருக்கிற 'ஈழ ஆதரவாளர்' என்று தம்மை அடையாளப்படுத்த முனைகின்ற தலைவர்களும் 'பிரபாகரன்' என்ற பிம்பத்துக்கு உயிரூட்டவே முயற்சிக்கின்றனர்.

இந்தப் பிம்ப உயிரூட்டலுக்குத் தோதாக பல ஊடகங்களும் செயற்படுகின்றன. ஆனால், யதார்த்தம் இதற்கு மிகத் தொலைவில் எவ்வாறிருக்கிறது என்பதை எவரும் எளிதிற் புரிந்து கொள்வர்.

ஆனாலும் சனங்கள் தங்களின் தலையில் சம்பல் அரைப்பதற்கு இடங்கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

மற்றது, 'வன்னிப் பகுதியில் இன்னும் யுத்த கால நிலரவமே உள்ளது' என்பது.

வன்னியில் ஏராளம் பிரச்சினைகள் உள்ளன. மிகச் சிக்கலான, கடினமான பிரச்சினைகள் பலவுண்டு. விடுவிக்கப்படாத அரசியற் கைதிகள், தடுப்பிலுள்ள போராளிகள், விதவைகள், உடல் உறுப்புகளை இழந்தோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், வீடற்றோர், தொழிலற்றோர், உதவிகள் அற்றோர், உளநிலை பாதிக்கப்பட்டோர்... படையினர் உள்ள ஊர்கள், வீதிகள் எனப்பல பிரச்சினைகள்.

மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கம் சரியாக நடத்தவில்லை. அவர்களுடைய உணர்வைப் புரிந்து கொள்ளவும் இல்லை. அதை மதிக்கவும் இல்லை. அவர்களுடைய அடிப்படை உரிமைகளைக் கூட முறையாகப் பேணவில்லை. இன்னும் அகதி நிலையிலும் மீள்குடியேறி என்ற நிலையிலும் தழும்புகளோடு உள்ளனர் பலர்.

ஆனால், இதெல்லாம் யுத்தகால நிலரத்தைப் போன்றதல்ல. யுத்தகால நிலவரம் என்பது மூச்சுவிடவே கடினமானது. கணமும் நிதமும் உயிராபத்துகள் நிறைந்தது. மரணமும் அவலமும் என்ற நிலையை உடையது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்பது. 'எது நடந்தாலும் எதுவும் செய்ய முடியாது' என்ற நிலைமையை உடையது. அது இரும்புத்திரைகளின் யுகம்.

இது யுத்தத்துக்குப் பிந்திய நிலவரம். யுத்தத்திற்குப் பிந்திய நிலவரத்தை விளங்கிக் கொள்வதற்கு எந்தத் தரப்பும் இன்னும் முயற்சிக்கவில்லை என்பதே இந்தத் தவறான புரிதலுக்குக் காரணமாகும்.

யுத்தத்துக்குப் பிந்திய நிலவரத்தில், குறிப்பிட்ட காலம்வரையில் கெடுபிடிகள் முற்றாக நீங்காமல் தொடர்ந்தபடியே இருக்கும். அதிலும் வெற்றியடைந்த படைகள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டே திரியும். இதேவேளை பாதிக்கப்பட்ட சனங்களும் சமூகமும் தம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்கு கடுமையான சிரமங்களைப் பட்டுக் கொண்டிருக்கும்.

ஆனால், இந்த இடத்தில் மேலும் கண்கட்டு வித்தையைப் போல தந்திரம் செய்து அரசியல் லாபங்களைச் சம்பாதித்துக் கொள்ளவே பல தரப்பும் முயற்சிக்கின்றன. சனங்களின் அவல நிலையைப் போக்குவதற்குப் பதிலாக அவற்றை வைத்துப் பராமரித்து, அரசியல் ஆதாயங்களைப் பெற முயற்சிக்கின்றன. இதற்காக அவை புனைகின்ற அலங்காரங்களே மேற்படியானவை. 

ஆகவேதான் இந்த மாதிரிப் பல விசயங்கள் பொய்களின் ஊர்வலமாக – அடிப்படைகளை மறைக்கின்ற நிலையில் பிரச்சாரப்படுத்தப்படுகின்றன.

இவ்வளவும் யார் மீது நடத்தப்படுகிறது என்பதே இங்கே கவனித்துக் கொள்ள வேண்டியது. இது முக்கியம். இவ்வளவும் சொந்த மக்களின் மீதே நடத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீது, அவலங்களோடுள்ள சனங்களின் மீது. சொந்த மக்களை மந்தைக் கூட்டமாக, எதையும் சொன்னால் நம்பிவிடக்கூடிய அளவுக்கு அரசியற் பேதமைகளாக வைத்திருக்கவே இந்தத் தரப்புகள் முயற்சிக்கின்றன.

இந்த மாதிரி தமிழ்த் தரப்பின் 'பொய்களின் ஊர்வலம்' நடக்கிறது என்றால், இன்னொரு தரப்பான அரசாங்கத்தின் விளையாட்டுகளுக்கும் குறைவில்லை.

'ஒரே நாடு, ஒரே குரல், ஒரே தேசியம்' என்ற மாதிரியான அறிவிப்புகள்... 'ஜனநாயகமும் அமைதியும் செழித்துத் தளைக்கின்றன' என்ற கதைகள்.... 'மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர்'என்ற சத்தியப்படுத்தல்கள்... 'இன ஐக்கியமும் சமாதானமும் ஏற்பட்டு வருகின்றன 'என்ற நம்பிக்கையூட்டல்கள்... 'இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்ற உண்மைக்குப் புறம்பான அறிக்கையிடல்கள்.... 'அச்சமற்ற சூழலொன்றை மக்கள் அனுபவிக்கிறார்கள்'என்ற திரை மறைப்புகள்...

இப்படிப் பல 'புலுடாக்கள்' சொந்த மக்களின் மீதே நடத்தப்படுகின்றன. ஆகவே அரசும் சரி, எதிர்த்தரப்பிலுள்ள தமிழ் இயங்கு சக்திகளும் சரி தங்களின் சொந்த மக்களின் மீதே பொய்களின் விற்பனையைச் செய்கின்றன. அதைத் தாராளமாகச் செய்கின்றன. கூசாமற் செய்கின்றன. குற்றவுணர்வின்றிச் செய்கின்றன.

இதில் துயரம் தரும் வேடிக்கையான விசயம் என்னவென்றால் இந்தப் பொய்களின் விற்பனையில் அதிகம் விலைபோவது படித்த மத்திய தர, மற்றும் மேற்தர வர்க்கத்தினரே. இவர்களே பின்னர் அபிப்பிராய உருவாக்கிகளாகவும் தொழிற்படுகின்றனர். இலங்கையின் சீரழிவுக்கு இந்த மத்திய தர, மேற்தர வர்க்கத்தினரே பொறுப்பேற்க வேண்டும்.

இவர்களுடைய கண்களை மறைத்து ஒரு பிசாசு கூடாரமிட்டுள்ளது. அது இனவாதம் என்ற பிசாசு. அது வார்த்துக் கொண்டிருக்கிற போதையில் எதுவுமே கண்களுக்குத் தெரியாது. அறிவுக்குப் புலப்படாது.

ஆனால், கூர்மையாக அவதானிக்கும் எவருக்கும் இதெல்லாம் பொய்களின் 'வாய்பாடு' என்றே தெரியும். பிறருடைய தலைக்குள் என்னதான் இருக்கிறது என்று இவர்கள் சிந்திப்பதில்லை. தங்களுடைய தலைக்குள் என்ன இருக்கிறது என்று இவற்றை வாசிப்போரும் கேட்போரும் கூடக் கேட்டுக்கொள்வது இல்லை. மந்தைகளாக இருக்கும்வரையில் மேய்ப்பர்களும் இருந்து கொண்டேயிருப்பர்.

ஆகவே, 'உண்மை ஒரு தடவை உலகத்தைச் சுற்றி வருவதற்கிடையில் பொய் நூறு தடவை சுற்றிவிடுகிறது'. 'கவரிங்' நகையைப் போல மினுக்கம் நிறைந்தது பொய்யில் மயங்கித்தான் விடுகிறார்கள் இலங்கையர்கள்.

இந்த மினுக்கத்தின் கவர்ச்சியில் மெஞ்ஞானம் கூடத் தடுமாற்றமடைந்து விடுகிறது. இல்லையென்றால் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இணைய வெளியும் இத்தனை பொய்களையும் கூச்ச நாச்சமில்லாமல் தினமும் உற்பத்தி செய்து, விற்றுகொண்டிருக்க முடியுமா?

தமிழர்கள் பொய்களுக்குக் கொடுக்கின்ற 'முதல் மரியாதை'யைக் குறித்து எனக்கு எப்போதுமே விடை கிடைக்காத கேள்வியே உண்டு. தமிழர்கள் மட்டுமல்ல 'பொய்களுக்கான முதல் மரியாதை'யை அதிகமாக அளிப்பவர்கள் இலங்கையர்கள் என்று சொல்வதும் பொருத்தமானதே.

8/11/2012 3:28:59 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்