தத்தர்
புதிய சூழலுக்கும், புதிய தேவைகளுக்கும் ஏற்ற புதிய சிந்தனை வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினை பழையதும், நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதுமாயினும் அது ஒவ்வொரு காலகட்ட நிலைமைக்கேற்ப புதிய புதிய வடிவங்களைப் பெறுகிறது. ஆதலால் பழைய பிரச்சினையும், புதியவடிவங்களும் என்ற கண்கொண்டு இதனை ஆராயவும், அணுகவும், எதிர்கொள்ளவும் வேண்டும்.
21-ம் நூற்றாண்டின் பூகோள, சர்வதேச புதிய தேவைகளுக்கேற்ப இவ்வினப்பிரச்சினை பொறுத்தும், புதிய கண்ணோட்டமும், புதிய சிந்தனையும் வேண்டும்.
மோட்டுச் சிங்களவரென்று சிங்கள மக்களைப் பற்றி மிகப்பிழையான அபிப்பிராயம் ஒன்று தமிழ்ச் சமூகத்திடம் உண்டு. இப்படிக் கூறுவது அழகற்றது என்பது ஒருபுறமிருக்க, சிங்களத் தலைவர்கள் தமது திறமைகளையும், அரசியல் சாதுரியங்களையும், காலத்திற்கு காலம் வரலாற்றின் பக்கங்களில் நிரூபிக்கத் தவறவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் சிங்கள மக்கள் பற்றிய இத்தகைய குறைமதிப்பீட்டுக்கும், தம்மைப்பற்றிய மிகைமதிப்பீட்டுக்கும் இடையிலுள்ள அந்த மதிப்பீட்டு இடைவெளிக்குள் எமது நீண்டகால வரலாற்றுத் தோல்விகளுக்கான காரணங்கள் புதைந்து கிடக்கின்றன.
மறுக்கப்பட்ட நாட்களும், மறுக்கப்பட்ட வாழ்வுமாய், மறுக்கப்பட்ட நீதியுமாய் எமது மக்கள் துயரத்தில் உழலும் காலம் தொடர்ந்து நீடிக்கின்றது.
’இனித் தமிழ்மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று தந்தை செல்வா 1976-ம் ஆண்டு கூறியது அவரது காலத்து அரசியல் தோல்விகளையும், அவருக்கு முற்பட்ட காலத்து அரசியல் தோல்விகளையும் கூறும் ஒரு வரலாற்று தொகுப்பாக மட்டுமன்றி அவருக்கு பிற்பட்ட காலத்து அரசியல் தோல்விகளுக்கான முன் அறிவித்தலையும் இக்கூற்று தெரிவித்து நிற்கின்றது.
தோல்விகள் ஏற்படுவது இயல்பு. அத்தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதிலிருந்துதான் வளர்ச்சிக்கான அடுத்த கட்டம் ஆரம்பமாக முடியும். நாம் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டுமென்றால் ஒரு புதிய கண்ணோட்டமும், ஒரு புதிய சிந்தனை மாற்றமும், ஒரு புதிய கலாச்சார மனமும் அவசியப்படுகின்றன. எதிரியால் எமது கால்களில் மாட்டப்பட்டுள்ள விலங்குகளை உடைத்தெறிய வேண்டுமென்றால் காலம் காலமாய் எமது மூளையில் படிந்து கிடக்கின்ற தப்புக்களையும், தவறுகளையும் பிழையான பார்வைகளையும் முதலில் அகற்றியாக வேண்டும்.
புரட்சிகரமான சிந்தனையின்றி ஒரு புரட்சிகரமான அமைப்பு இருக்கமுடியாது. புரட்சிகரமான அமைப்பின்றி ஒரு புரட்சி நிகழமுடியாது என்ற வரலாற்றுப் புகழ்மிக்கக் கூற்று இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
புதிய கண்ணோட்டம், புதிய கொள்கை, தெளிவான இலக்கு, பொருத்தமான அணுகுமுறை, பரந்தமனம், குறைவற்ற அர்ப்பணிப்பு ஆகிய அனைத்தையும் முதலீடாய்க் கொண்டு விடுதலைமிக்க புதுவாழ்வை நாம் படைத்தாக வேண்டும்.
21-ம் நூற்றாண்டின் இந்த நாகரீக உலகில், உலகெங்கும் வாழும் 650 கோடி மக்களின் கண்களும், காதுகளும், உலகின் எந்த மூலைமுடுக்கையும், வேண்டிய எக்கணத்திலும் பார்க்கக்கூடிய, கேட்கக் கூடிய இப்புதிய யுகத்தில் ஈவிரக்கமின்றி இலட்சக்கணக்கில் எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டுள்ளனர். இக்கொடுமை எவ்வாறு நிகழமுடிந்தது என்ற கேள்விக்கு நாம் பதில் காணவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் மடிந்து வீழ்ந்த எமது குழந்தைகளின் காட்சிகள் என் கண்களில் படிந்து கிடக்கின்றன. கதியற்றுக் கதறிய அன்னையர்களின் அழுகுரல்கள் என் செவிகளைக் கிழித்து உடலெங்கும் காந்தமாய் பாய்ந்துள்ளன. தொட்டுத்தூக்கிய அந்த இரத்தம் தோய்ந்த உடல்களின் பரிசங்கள் என் கைகளில் இன்னும் ஈரமாய் உள்ளன. துயர்தோய்ந்த இதயமும், ஆறாத மனமும், தூங்காத கண்ணுமாய் அடிமை நாட்கள் நகர்கின்றன.
உலகெங்கும் வாழ்ந்த மானமிகு ஒவ்வொரு தமிழனும் தன் அன்புக்குரியோரின் மரணவாழ்வும், அவலமும் கண்டு ஏங்கித் தவித்தான். எல்லாவித புள்ளி விபரங்களுக்கும் அப்பால் ஒவ்வொரு தமிழரின் அடிவயிற்றிலும் அந்த மரண நெருப்பு பற்றி எரிந்ததை எப்படி மறுக்கமுடியும். விடுதலை என்ற ஒன்றைத்தவிர வேறு எதனாலும் இந்த நெருப்பைத் தணிக்க முடியாது. இவற்றிலிருந்து விடுபட்டு தலைநிமிர்ந்த மக்களாய் புதுவாழ்வு காண எமக்கொரு புதிய சிந்தனை அவசியமானது.
எமது அனைத்துவகை வளர்ச்சிக்கும் தடையாய் எதிரியிட்ட அடிமை விலங்குள்ளது. நாம் வளர்ச்சிபெற இந்த விலங்கை உடைத்தாக வேண்டும். நாம் வளர்ச்சிபெற எமக்கென்றொரு தாய் நிலம் வேண்டும். எமது மொழி, எமது பண்பாடு, எமது வாழ்க்கைமுறை, அரசியல், விஞ்ஞான- தொழில்நுட்பம், செழிப்பான சமூகக் கட்டுமானம், அரசியல் பொருளாதாரம் மற்றும் அனைத்துவகை வளர்ச்சிகளையும் நாம் அடைய எமக்குத் தடையாக இருக்கும் பேரினவாத அரசியல் விலங்கை உடைத்தாக வேண்டும்.
தாயின் மடியும், தந்தையின் தோளும், ஆசானின் விழியுங்கொண்டு நாம் புதுவாழ்வு படைக்க வேண்டும். சொர்க்கமும், நரகமும் பூமியிலேயே உண்டு. நரகம் என்பது அடிமைத்தனம், சொர்க்கம் என்பது விடுதலை. நரகத்துள் புதைந்து போயுள்ள எமது குழந்தைகளினதும் இளைஞர்களினதும் யுவதிகளினதும் அன்னையரதும், தந்தையரதும், பாட்டனதும், பாட்டியினதும் பொன்னான வாழ்வை மீட்டு சொர்க்கத்திற்கு வழிதிறக்க வேண்டும்.
எமது முற்றம் இனியது. எமது வீட்டோரப் புற்பூண்டுகளும் இனியவை, எமது வானில் பறக்கும் பறவைகளும், மண்ணில் ஊரும் புழுக்களும் தத்தித் கரையும் காக்கைகளும், காதைப் பிளக்க இசைக்கும் சில்வண்டுகளும் எமக்கு இனியவை.
கூழும் இனியது, குழம்புக் கறியும் இனியது. காய்கறி, மச்சம், மாமிசம் அனைத்தும் இனியவை. கடும் புளியேயாயினும் எமது வீட்டு மாங்காய் என்பதால் அது தேனிலும் இனியது. ஓர் இனியவாழ்வை விடுதலையின்றி வேறு எதனாலும் தரமுடியாது.
உன்னையே நீ அறிவாயாக என்று இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க ஞானி ஒளிபொருந்திய ஒரு வாக்கியத்தை இந்த உலகிற்குத் தந்தார். ஒன்றுக்கு ஆசைப்படமுன் முதலில் உன்னை அதற்குத் தகுதியாக்கிக் கொள் (First deserve then desire) என்றுள்ள ஆங்கிலப் பழமொழியும் கவனிக்கத்தக்கது. அதாவது முதலில் நாம் எம்மை சரியாக மதிப்பீடு செய்யவேண்டும்.
முதலில் எம்மைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். எம்மைப்பற்றி சரியான மதிப்பீட்டை செய்ய வேண்டும். எம்மிடமுள்ள நல்லவற்றையும், கெட்டவற்றையும், சரிகளையும், பிழைகளையும், உன்னதங்களையும், தப்புத்தவறுகளையும் சரிவரப் பிரித்து அடையாளம் காணவேண்டும். இவ்வாறு பார்ப்பதற்கென கூர்மதி மட்டும் இருந்தால் போதாது, திறந்த மனமும் வேண்டும்.
கண்களைத் திறந்து, செவிகளைக் கூர்மையாக்கி, மூளையை விரிவாக்கி, இதயத்தைத் திறந்து உண்மைகளைப் பார்க்க வேண்டும். அதாவது கண்களால் மட்டுமன்றி, கூடவே செவிகளால் மட்டுமன்றி, மேலும் கூடவே மூளையால் மட்டுமன்றி அவை அனைத்துடனும் கூடவே அனைத்திற்கும் முத்தாய்ப்பான பரந்த இதயத்தின் துணைகொண்டும் நாம் அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும்.
அதாவது சரியோ, பிழையோ, நல்லதோ, கெட்டதோ சொந்த விருப்புக்களுக்கு வெறுப்பிற்கு அப்பால் ஒரு பிரச்சினையை அதன் வடிவில் நாம் கண்திறந்து பார்க்க வேண்டும். எமது விருப்பு வெறுப்பிற்கு அப்பால் அபிப்பிராயங்களுக்கும், மாறுபட்ட கருத்துக்களுக்கும் செவிமடுக்க வேண்டும். தனிப்பட்ட உணர்ச்சிவசங்களுக்கும், சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கும் அப்பால் ஒரு பிரச்சினையை ஆழமாகவும், புத்திபூர்வமாகவும் பார்க்க வேண்டும். இவை அனைத்துடனும் கூடவே மக்கள் மீதான உயர்ந்த நல்நோக்கமும், அன்பும் கொண்டு ஒரு பிரச்சினையைப் பார்க்க வேண்டும். மொத்தத்தில் ஒரு மருத்துவன் போல முதலில் நோயை அதற்குரிய வழியில் அடையாளம் காணவேண்டும். அவ்வாறு அடையாளம் காணாமல் பரிகாரம் தேடமுடியாது.
நெருப்பை நெருப்பென்றும், நீரை நீரென்றும் இனங்காணத்தவறி எமது விரும்பங்களை அதில் ஏற்றி பிழையாக அதனை உருவகிப்போமானால் அப்பிழையான உருவகிப்பிற்கு நாம் பலியாகி விடுவோம். ஒரு விடயத்திலுள்ள தப்புத் தவறு, சரிபிழை என்பவற்றை கண்டுகொள்ளாமல் எனது உனது என்ற கண்ணோட்டத்தில் அல்லது கண்மூடித்தனமான முறையில் பார்ப்போமானால் தொடர் தோல்விகளைத் தவிர வேறெதுவும் மிஞ்சப் போவதில்லை. பிரச்சினையை காணப்படும் அதன் வடிவில் அப்படியே நாம் பிரச்சினையாகப் பார்வையிடும் செழிப்பான கலாச்சாரத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இதுவே வெற்றிக்கான முன் நிபந்தனையாகும்.
சிங்கள இனத்தின் மத்தியில் சிங்கள- பௌத்த மேலாதிக்க சிந்தனையை நவீன காலத்திற்கேற்ப உருவாக்குவதற்கான ஒரு நவீன இனவாத சிந்தனையாளனாயும், வழிகாட்டியாகவும் அநகாரிக தர்மபால என்ற ஒரு முன்னணிச் சிந்தனையாளன் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றினான். அவரைத் தொடர்ந்து ஒரு நவீன சிந்தனையாளர் குழாம் சிங்கள இனத்திற்கு உருவானது. ஆனால் இதற்கு இனமேலாதிக்க சிந்தனையை வெறுக்கிறோம். ஆனால் இதற்குச் சவாலாகவும், இதற்கு நிகராகவும் இதனை எதிர்கொள்ளத்தக்க நவீன தமிழீழத் தேசிய சிந்தனையோ ஒரு சிந்தனையாளர் குழாமோ முழு வடிவில் இதுவரை உருப்பெறத் தவறியுள்ளது. சில உதிரி உதாரணங்களைத் தவிர இப்போக்கு கவலைக்குரிய வகையில் எம்மிடம் நீடிக்கிறது. எமது தற்போதைய உடனடித்தேவை 21-ம் நூற்றாண்டின் 2-ம் தசாப்தத்திற்குரியதும் வரப்போகும் மூன்றாம், நான்காம் தசாப்தங்களை எதிர்கொள்ளத் தக்கதுமான ஒரு நவீன தமிழீழ தேசிய வடிவத்திற்கான சிந்தனையை அவசர அவசரமாக நாம் உருத்திரட்டியாக வேண்டும்.
2-ம் உலக மகா யுத்தத்தின் துயரங்கள், வெற்றிகள், தோல்விகள், கொடூரங்கள் என்பன 65 ஆண்டுகளைக் கடந்தும் உலகலாவிய கலை, இலக்கியம், சிந்தனைப்போக்கு என்பவற்றுக்கான கருவூலங்களாய் இற்றைவரை விளங்குகின்றன. அவற்றிலிருந்து ஒரு புதிய உலகக் கண்ணோட்டம் உருத்திரண்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும், பெரும் துயரமும் இனிவரப்போகும் பல தசாப்தங்களுக்கான கலை, இலக்கிய சிந்தனை என்பவற்றுக்கான கருவூலமாய் அமையவல்லது. எமது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான துயரகரமான அனுபவங்களிலும், முள்ளிவாய்க்கால் படிப்பினைகளிலிருந்தும் நாம் ஒரு புதிய தமிழீழ தேசிய சிந்தனையை வடிவமைக்க வேண்டும். வரலாறு இரத்தமும், தசையுமாய் எமது பிடரியில் அடித்து யதார்த்தத்தைக் கண்திறந்து பார்க்குமாறு முள்ளிவாய்க்கால் மணற்பரப்பில் வைத்து ஆணையிட்டுள்ளது. இந்த ஆணைக்குப் பணிந்து வரலாறு எமக்குத் தந்திருக்கும் அனுபவத்தை ஏற்று நாம் ஒரு புதிய தமிழீழத் தேசிய உருவாக்கத்திற்கு தயாராக வேண்டும். இதற்கான பொறுப்பு இப்போது எம் அனைவரது தலைகளிலும், தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது.
வரலாற்றில் தியாகிகளும், முன்னுதாரணம் மிக்கோரும், அர்ப்பணிப்பு உள்ளோரும் உன்னதமானவர்களும் இருப்பது போலவே சந்தர்ப்பவாதிகளும், வாய்ப்பு வசதிகளுக்கு பின்னால் ஓடுவோரும் வெல்லும் பக்கம் போவோருமென ஒரு கூட்டம் எப்போதும் இருக்கவே செய்யும். ஒரு சந்தர்ப்பவாதி வயிறு கழுவுவதைப் பார்த்து இன்னொரு சந்தர்ப்பவாதிக்கு வயிறு எரியலாமே தவிர உன்னதமானவர்களுக்கு ஒருபோதும் வயிறு எரியாது. மாறாக உன்னதமானவர்கள் தமது உன்னதமான செயல்களினால் சந்தர்ப்பவாதிகளைக் கடந்து சென்றுவிடுவார்கள். இப்போது நாம் உன்னமானவற்றை முன்னிறுத்த வேண்டும். அர்ப்பத்தனங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை விட்டு அழியா வரம்பெற்ற வரலாற்றின் முதுகெலும்பை நிறுத்திப்பிடிக்க வேண்டும். குழுவாதம், சிறுவட்டவாதம், என்பவற்றையெல்லாம் கடந்து ஒரு பரந்த மனிதநேய அடிப்படையிலான தமிழீழத் தேசியத்தை முதன்மைப்படுத்த வேண்டும். முள்ளிவாய்க்காலில் மாண்டுபோன மக்களின் பெயரால் அவர்களது கண்ணீரதும், செந்நீரதும் பெயரால் அவர் தம் உறவினர்களின் வெந்துபோன இதயங்களினதும் பெயரால் தமிழீழத் தேசியத்திற்கு முதன்மை கொடுக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட குரோத உணர்வுகளுக்கல்ல. குறுகியவட்ட எண்ணங்களுக்கல்ல.
எதிரியுடன் கைகோர்ப்பதும் நண்பனைத் துதிபாடுவதும் ஆகிய இரண்டும் செயல்பூர்வ அர்த்தத்தில் ஒரு பொருளைத்தான் கொண்டது. அதாவது எதிரியுடன் கைகோர்ப்பவனும் உண்மைக்குப் புறம்பாக நிற்கின்றான். துதிபாடுவோனும் உண்மைக்குப் புறம்பாகத்தான் நிற்கின்றான். எதிரியுடன் கைகோர்ப்பவன் எதிரிக்கு சேவைசெய்வது போலவே துதிபாடுவோனின் செயலும் இறுதி அர்த்தத்தில் எதிரிக்கான சேவையாகவே அமைந்துவிடும். இதனாற்தான் வள்ளுவர்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா றிலானுங் கெடும் என்று கூறியுள்ளார்.
அதாவது மன்னன் தவறு இழைக்கும் போது அதனைச் சுட்டிக்காட்டி உண்மைகளை இடித்துரைக்கவல்ல ஒருவன் இல்லாதவிடத்து அவனைக் கெடுப்பதற்கான எதிரியின்றியே அவன் கெட்டுப்போய்விடுவான் என்று மட்டும்தான் வள்ளுவர் கூறுகிறார். ஆனால் துதிபாடுபவனோ இதனைவிடவும் மேலான கெடுதி விளைவிக்க வல்லவன். துதிபாடல் கண்ணை மறைத்து மன்னனை விரைவாகவே தீமைக்குள் வீழ்த்திவிடும். இவ்வகையில் துதிபாடுவோன் எதிரியின் கையாளுக்கு சமனானவன்.
சரியையும் பிழையையும் சீர்தூக்கிப் பார்த்து சமூக நன்நோக்குடன் சிந்திக்கவல்ல அறிஞர்களுக்காக இந்த சமூகம் காத்திருக்கிறது. இத்தகைய எண்ண உணர்வுகளுடன் நாம் தமிழீழத் தேசியத்திற்கான சிந்தனையை வடிவமைக்க வேண்டும்.
கிருதயுகம் எழுக மாதோ என்றார் பாரதியார். இன்றைய நிலையில் ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு புதிய சிந்தனை யுகம் எழுக என நாம் வேண்டி நிற்க வேண்டி உள்ளது.
21-ம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் இந்த உலகை ஆளும் மூவேந்தர்களாக சர்வதேச வர்த்தகம், நிதி மூலதனம், தகவல் ஆதிக்கம் என்னும் மூன்றும் உள்ளன. இந்த மூவேந்தர்கள் தான் இன்றைய உள்நாட்டு, வெளிநாட்டு, பூகோள அரசியலை நிர்ணயிக்கிறார்கள். மக்களின் உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்நிலையையும், தலைவிதியையும் நிர்ணயிக்கிறார்கள். இதுதான் உலக அரசியலின் உள்ளடக்கம். ஒடுக்கப்படும் தமிழீழ மக்கள் இந்த உள்ளடக்க போக்கிற்கு உட்பட்டிருக்கும் ஓர் அலகினர்தான். ஆதலால் இந்த மூவேந்தர்களினது செங்கோல்களையும் நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதில் கற்பனைகளுக்கு இடமிருக்கக் கூடாது. இந்த உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்வதிலிருந்து நடைமுறைச் சாத்தியமான வகையில் தமிழீழச் சிந்தனையையும், தமிழீழ விடுதலையையும் நாம் வடிவமைக்க வேண்டும். இதற்கு நீண்டகாலக் கண்கொண்ட தீர்க்கதரிசனம் மிக்க அரசியற் பார்வை அவசியமானது.
இவ்வாறு உலக அரசியலின் உள்ளடக்கம் எமது சிந்தனை புலத்திற்கான முதலாவது தளமாய் அமையும்போது இரண்டாவது தளமாக இனவொடுக்குமுறை அமைகிறது. எனவே எமது இரண்டாவது கேள்வி இனவொடுக்குமுறையின் உள்ளடக்கம் என்னவென்பதுதான்.
இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையானது உள்ளடக்கத்தில் வெறுமனே தமிழருக்கும், சிங்களவருக்கும் இடையேயான பிரச்சினையாக இல்லாமல் அது வரலாற்று ரீதியாக சிங்கள-பௌத்தர்களிடம் காணப்படும் இந்திய ஆதிக்கம் பற்றிச் சிங்களவரிடம் காணப்படும் அச்சத்தின் வெளிப்பாடாக விளங்குகிறது. அதாவது சிங்களவரிடம் காணப்படும் இந்திய எதிர்ப்பு வாதமானது தமிழின எதிர்ப்புவாதமாக பரிணமித்துள்ளது. இதனால் சிங்கள இனத்தவர் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத்தமிழர் மீது புரிகின்றனர்.
அதாவது தமிழரை இந்தியாவுடன் இணைத்துப்பார்த்து இந்திய ஆதிக்கத்திற்கு தமிழர்கள் கருவியாக விளங்குவர் என்ற தமது முற்கற்பிதத்தின் அடிப்படையில் தமிழரை அழிப்பதன் மூலம் இலங்கைத்தீவில் இந்திய ஆதிக்கத்திற்கான வாய்ப்பினை இல்லாது பண்ணிவிடலாம் என சிங்கள இனத்தவர் நம்புவதன் விளைவே இக்கொரூரம் மிக்க இன அழிப்பிற்கான அடிப்படையாய் உள்ளது. எமது வாழ்விலிருந்து பிரித்துப்பார்க்க முடியாத ஒருபோதும் பிரிக்க முடியாத புவிசார் அரசியல் பின்னணியை நாம் சிரத்தையுடன் கருத்திற்கொள்ள வேண்டும். தக்கன பிழைக்கும் என்பதே உயிரியல் விதி. எமது சூழலில் எது எமக்குப் பொருத்தமானதோ அதுவே எமக்குத் தக்கதாக அமைய முடியும். எமது விடுதலையை இந்தத் தக்கனக் கோட்பாட்டினதும், புவிசார் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையிலும் சாத்தியமான வகையில் வடிவமைக்க வேண்டியுள்ளது. இது ஒரு மிகக்கடினமான பணி. இதில் விடப்படும் ஒரு சிறிதளவு தவறும் பெரிதளவு இழப்பிற்கு வழிவகுத்துவிடும். ஆதலால் இந்த உள்ளடக்கத்தை மிக நுணுக்கமாகப் புரிந்து நடைமுறைச் சாத்தியத்திற்கு பொருத்தமான வகையில் சர்வதேச பூகோள விதிகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் எம் தமிழீழத் தேசியத் தலைவிதியை வடிவமைக்க வேண்டும்.
சர்வதேச அரங்கில் எம்மை முற்றிலும் தனிமைப்படுத்துவதில் எதிரி வெற்றி பெற்றான். சர்வதேச அரங்கில் மட்டுமன்றி தமிழ் மக்கள் மத்தியிலும் கூட எமது போராட்டம் குறிப்பிடக்கூடிய அளவு அந்நியப்பட்டுக் காணப்பட்டது. இத்தகைய அந்நியப்பட்ட நிலையைக்கூட எதிரி தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவதில் வெற்றிபெற்றான். சர்வதேச அரங்கில் போராட்டம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்து. அதேவேளை எதிரியோ சர்வதேச அரங்கில் முழு ஆதரவையும் தனதாக்கிக் கொண்டான். எதிரி தனது நண்பர்களை தன்னுடன் இறுக்க அரவணைத்தமை மட்டுமன்றி எதிரி தனது நீண்டகால உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளையும், நாளைய உள்நாட்டு எதிரிகளையுங்கூட தனது இன்றைய உடனடி நண்பர்கள் ஆக்குவதில் வெற்றிபெற்றான்.
சர்வதேச அரங்கில் ஈழப்போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் போராட்டம் குறிப்பிடக்கூடியளவு அந்நியப்பட்டிருந்தமை, எதிரி சர்வதேச ஆதரவை முற்றிலும் தனதாக்கிக் கொண்டமை, தனது நீண்டகால எதிரிகளைக்கூட உடனடி நண்பர்களாக்கிக் கொண்டமை போன்ற அனைத்தும் இணைந்து எதிரியின் வெற்றிக்கான செம்கம்பளங்களாய் அமைந்தன.
இவற்றிலிருந்து நாம் நிறையவே பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். எமது ஆசான்களிடமிருந்து மட்டுமல்ல எதிரிகளிடமிருந்தும் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வேற்றுமை இது உலக இயக்கத்தின் அடிப்படைக்கூறு. வளர்ச்சி விதியானது முரண்பாட்டிற்தான் மையம் கொள்கிறது. முரண்பாடு இல்லையேல் வளர்ச்சியில்லை. ஆதலால் முதலில் நாம் வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். ஐந்து விரல்களுக்கு இடையில் உள்ள வேற்றுமைதான் கையின் செயல்திறனை நிர்ணயிக்கிறது. எனவே ஒருமைவாதம் எமக்கு ஒருபோதும் வேண்டாம். அது இயற்கைக்கு முரணானது. பல்வேறு மனிதர்கள், பல்வேறு எண்ணங்கள், பல்வேறு கருத்துக்கள், பல்வேறு அமைப்புக்கள் என்ற இந்தப் பல்வேறு தன்மைதான் வளர்ச்சிக்கான தளமாக உள்ளது. எனவே இந்த வேறுபாடுகளுக்கு எதிரான ஒருமைவாதமானது ஒரு மனிதனின் தலைவிதியை நாடாப்புளு வாழ்க்கைக்குத்தான் கொண்டு செல்லுமே தவிர வேறல்ல. அதாவது ஒருமைவாதந்தான் மேலானது எனின் உலகின் கற்புக்கரசியும் நாடாப்புளுத்தான். உலகின் தூயஜீவனும் நாடாப்புளுதான். அப்படியாயின் ஒருமை வாதத்தின் பெயரால் மனிதனை விடவும் நாடாப்புளுவே உயர்ந்தது.
வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு வேற்றுமைகளுக்குள் காணப்படும் குறைந்தபட்ச ஒற்றுமையை முன்னெடுப்பதற்குப் பெயர்தான் தலைமைத்துவம். அதாவது வேற்றுமைகள் ஒரு நாணயத்தின் ஒருபக்கமாய் அமைய அந்த வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு அந்த வேற்றுமைகளுக்கு இடையே காணப்படும் குறைந்தபட்ச பொதுமையான ஒற்றுமையை முன்னெடுப்பது அந்த நாணயத்தின் மறுபக்கமாய் அமைகின்றது. இந்தவகையில் வேற்றுமைகள் நாணயத்தின் ஒருபக்கமெனவும், முன்னெடுக்கப்படும் ஒற்றுமைகள் நாணயத்தின் மறுபக்கமாயும் அமைகின்ற ஒரு தொடர் செயற்போக்கைத்தான் வளர்ச்சிக்கான விதியென்றும், சிறப்பான தலைமைத்துவம் என்றும் அழைக்கின்றோம்.
உறைப்பு, இனிப்பு, புளிப்பு, கைப்பு, கசப்பு, துவர்ப்பு போன்ற பல்வேறு முரண்நிலை கொண்ட சரக்குகளை ஒன்றிணைத்து இவை அனைத்திற்கும் இடையே அமைதி காணும் ஒரு புள்ளியில் ஒரு சுவை பிறக்கிறது. அதாவது வேற்றுமைகளுக்குள் அமைதி காணும் ஒரு புள்ளியே சுவைமிகு சிறப்பான சமையலாக அமைந்துவிடுகிறது. இது சமையலுக்கு மட்டுமல்ல சமூக அரசியல் நடத்தைகளுக்கும் பொருந்தும். இத்தகைய இயற்கையிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொண்டு எமக்கான அரசியல் வளர்ச்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களாய், கைவிடப்பட்டவர்களாய், கேட்பாரின்றி மிகவும் பரிதாபகரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டவர்களாய் உள்ள எமது அப்பாவிக் குழந்தைகளினதும், தாய்மார்களினதும், பெண்களினதும், இளைஞர் யுவதிகளினதும். முதியோர்களினதும் பெயரால் விடுதலைக்காகத் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்களின் பெயரால், காயமுற்றோர்-அங்கவீனமுற்றோர்களின் பெயரால், சிறைசென்றோர்களின் பெயரால், சித்திரவதைக்கு உள்ளானோர்களின் பெயரால், விதவைகளாக்கப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்களின் பெயரால், புவிப்பரப்பின் நாலாபுறங்களிலும் ஏதிலிகளாய் தஞ்சம் கோரிகளாய் அலையும் எமது மக்களின் பெயரால், தடுக்கப்பட்ட வாழ்வினதும் மறுக்கப்பட்ட நீதி நியாயங்களினதும் பெயரால் புதிய நிலைமைக்கு ஏற்ற தமிழீழத் தேசிய உருவாக்கத்திற்கும், தமிழீழ விடுதலைக்கும் முதன்மை கொடுத்து மற்றெல்லாவற்றையும் இரண்டாம் பட்சமாக்கி நாம் முன்னேறத் தயாராக வேண்டும்.