சி. சின்னவன்
முள்ளிவாய்க்காலில் இருந்து எழுகின்ற உரையாடல் - பகுதி - 02
ஒரு அமைப்பினுள்ளே ஒருவர் கொண்டு வரப்படும்போது அல்லது அந்த அமைப்பினுள்ளே அவர் வரும்போது அவருடைய சுயம் பெருமளவுக்கும் கட்டுப்படுத்தப்படுகிறது அல்லது அழிக்கப்படுகிறது. இதை நாம் அரசியல் அமைப்புகளிலிருந்து ஆயுதந்தாங்கிய இயக்கங்கள், அரசுகள் என எல்லாவற்றிலும் பார்க்க முடியும். இலக்கிய அமைப்புகள் கூட இதில் விலக்கல்ல. பொதுவாக அமைப்புகளுக்கு அத்தகைய பலமுண்டு. மனிதர்களை அவை உருமாற்றி விடுகின்றன. பொது நீதி என்பது இடைஞ்சலுக்குள்ளாகி அல்லது நிராகரிக்கப்பட்டு, அமைப்பின் விதி அல்லது அரசின் விதி ஒன்று புதிதாக உருவாக்கப்படுகிறது.
பிறகு அவர் அந்த அமைப்பின் பிரதிநிதி. அந்த அமைப்பின் மூளையே பெரும்பாலும் அவரை இயக்குகிறது. தூங்கும்போதும் தூக்கத்திலிருந்து எழும்போதும் அவர் அமைப்பின் பிரதிநிதியாகவே இருக்க வேண்டியேற்படுகிறது. அல்லது அரசின் பிரதிநிதியாக.
இத்தகைய நிலை போரில் ஈடுபடும் படையினருக்கும் ஆயுதந் தூக்கிய பிறருக்கும் கூட ஏற்படுகிறது. எனவேதான் தனிப்பட்ட ரீதியில் மிக அமைதியாக, பவ்வியமாக, அறநிலைப்பாட்டுடன் இயங்கும் பலரும் அமைப்புச் சார்ந்து அல்லது அரசு சார்ந்து 'படை'யாகும்போது – 'அணி'யாகும்போது - கண்மண் தெரியாமல் நடந்து கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், இவர்களை வழிநடத்துகின்ற அமைப்பு அல்லது அரசு நெறிபிறழ்வதே.
எனவேதான் ஈழப்போராட்டத்தில் ஆயுதமேந்திய அமைப்புகள் பலவும் தலையால் நடந்தன. அரசு அதையும் விடக் கேவலமாக நடந்தது. நெறிப் பிறழ்வு எப்போதும் அச்சமடைய வேண்டிய காரணிகளையே உருவாக்கும். அது பகைமைகளை உற்பத்தி செய்தபடியும் மேலும் அதைத் தீவிர நிலைப்படுத்தியபடியும் இருக்கும்.
நெறிப்பிறழ்வைச் சீர்ப்படுத்துவதற்கு மேலும் மேலும் நெறிப்பிறழ்வின் மூலமே –அதிகாரத்தைப் பிரயோகிப்பதன் மூலமே - பல அமைப்புகளும் முயற்சிக்கின்றன. அரசுகள் இதில் முதல் நிலை வகிக்கின்றன.
இதில் பலியிடப்படுவது அமைப்புகளாலும் அரசுகளாலும் பயன்படுத்தப்படும் படைகளும் (அணிகளும்) மக்களுமே. இங்கே படைகள் என்பது ஆயுதமேந்திய அனைத்துத் தரப்பினரையும் சேரும்.
ஆனால், அதிலும் படைகளையும் விட மக்களே அதிக இழப்பையும் காயங்களையும் பாதிப்புகளையும் சந்திக்கின்றனர். சனங்களிடம் ஆயுதங்களில்லை என்பதால் அவர்கள் இலகுவில் பாதிக்கப்படுகிறார்கள். இலகுவில் இலக்கு வைக்கக் கூடியதாக இருக்கிறார்கள். தங்களின் பாதிப்புகளை எதிர்க்க முடியாதிருப்போரும் சனங்களே.
ஆனால், ஒரு கட்டத்தில் எல்லோரும் மக்களையிட்டு அச்சமடைகிறார்கள். ஏனோ மக்களையே சந்தேகிக்கிறார்கள். மக்களையே எதிரிகளாகக் கருதிவிடுகிறார்கள். எனவே சனங்களைக் குறிவைத்து, அவர்களின் மீது நீட்டப்படுகிறது துப்பாக்கிகள்.
பிறகென்ன, கேள்விக்கிடமற்ற பலிதான். இந்தப் பலிக்குப் பலியாவது ஆயுதமற்ற, நிராயுதபாணியான மக்களே.
வன்னியில் நடந்ததும் இதுதான். இதோ இந்த மணல் வெளியில் அநாதரவாக இறந்து போன, கொல்லப்பட்ட, பலியான, கொலையுண்ட அத்தனை சனங்களும் இப்படித்தான் விதியேற்றனர்.
வெற்றிக் களிப்புக்காகப் பலியேற்ற பிறவிகள். சனங்களைக் கொல்கிறோம் என்று எந்த ஆயததாரியும் பிரக்ஞைபூர்வமாக உணர்கின்றானா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். இதையே நான் முன்னரே குறிப்பிட்டது. சனங்களையே சந்தேகிக்கின்ற, அவர்களைக் கண்டு அச்சடைகின்ற நிலையில், அவர்களைக் கொன்றே வெற்றியைப் பெறவேண்டும் என்ற நிலையில், அதையே தமக்கான நியாய அரணாக்கிக் கொண்டு சனங்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் பெறுகின்ற வெற்றியே தமது இருப்பு என்ற நிலையில் அதற்கு யார்தான் பின்னிற்பர்?
ஆகவே வெற்றிக் களிப்பைநோக்கி, வெறியோடு நடத்தப்படுகின்றன கொலைகள்.... இந்தக் கொலைகளைக் குறித்து எழும் பதற்றத்தை துப்பாக்கி மனிதர்கள் காட்டிக் கொள்வதில்லை. அவர்கள் அந்தக் கணத்தில் தாம் மனிதர்கள் என்ற நிலையைக் கடந்து, தாம் சார்ந்திருக்கின்ற தரப்பின் சார்பாகவே சிந்திக்கின்றனர், அப்படியே இயங்குகின்றனர்.
எனவே கொலைகளும் வெற்றிக் களிப்புக்கான ஒன்றாகி விடுகிறது. இது எவ்வளவு கொடுமையான காரியம்? மனித ஆற்றலின், அறத்தின், சமூக விழுமியங்களின், நீதியின், மனிதாபிமானத்தின், அறிவின் வீழ்ச்சியன்றி இந்த நிலையை வேறு எப்படிச் சொல்லது?
ஆனால், அவர்கள் கணநேர வெற்றிக் களிப்பில் இருக்கிறார்கள். அந்த வெற்றிக் களிப்பானது முன்னரே குறிப்பிட்டதைப் போல, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டதாலும் தங்களுடைய உயிருக்கு எச்சரிக்கையாக – ஆபத்தை உருவாக்குவதாக – இருந்த எதிரியின் தோல்வியினாலும் ஏற்பட்டது.
ஆனால், எதிர்த்தரப்பின் தோல்வியானது நிரந்தரத் தோல்வியாக, முழுதாகவே தோற்கடித்த பிறகு, வெற்றி கொண்டவர்களின் மனதில் அது எப்படி உருவெழும்? இது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
ஏனென்றால், இனி எதிரியைக் குறித்த அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையில், இந்த வெற்றிக்காகவா இத்தனை வெறியாட்டங்களும்? இத்தனை குரூரங்களும்? இத்தனை அறவீழ்ச்சியும் என்று வெற்றி பெற்றவர்களின் மனம் கழிவிரக்கம் கொள்ளுமல்லவா!
கொலை செய்யும்போதிருக்கும் மனநிலைக்கும் கொலை முடிந்த பிறகு இருக்கின்ற மன நிலைக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கும். இதை உளவியலாளர்களே கூறியிருக்கிறார்கள்.
ஆனால், இந்த வெளியில் அந்த மாற்றத்தை – வேறுபாட்டை என்னாற் காண முடியவில்லை. இது ஏமாற்றந்தரும் ஒன்றா? அல்லது இதுதான் உண்மையா?
அல்லது அப்படிக் குரூரத்தை வளர்த்து, வெறியோடு செயற்பட்டுத் தோற்கடிப்பைச் செய்ததால்தான் இப்படி அச்சமின்றி இருக்க முடிகிறதா?
அபாயங்களைக் கடந்து, உத்தரவாதப்படுத்தப்பட்ட வாழ்க்கையொன்றை அப்போதுதான் வாழ முடிகிறதா? அல்லது அந்த வாழ்க்கைக்காக, உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இப்படிக் கொலைவெறியோடு நடக்க வேண்டியிருந்ததா?
இந்தக் கொலைவெறியும் கொலைகளுந்தான் இன்றைய இந்த வாழ்க்கையை – அபாயங்கள் குறைந்த ஒரு நிலையைத் தங்களுக்குத் தந்ததாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?
அவரவர் தளங்களில் நின்று சிந்திப்பதே இந்த உலகத்தின் இயல்பெனில் எது பொது விதி? எது அறம்? எது நீதி? எது, எது?
இந்த நிலத்திலிருந்து கடைசியாக வெளியேறிய போது அங்கே இருந்த நிலைமை....?
சனங்களின் ஓலமும் பீதியடைந்த கண்களில் நிரம்பியிருந்த மரண பயமும் இரத்த நெடிலும் பிணக்காடும் தீயும் புகையும் வெடியும் போக்கிடமெங்கே என்று தெரியாத தத்தளிப்பும் அடுத்தது என்ன என்று தெரியவே தெரியாத நிலையும் பிடித்து ஆட்டிய பித்து நிலை...
கையறு நிலை....
என் உடல்தளர்ந்தது. கண்கள் நிரம்பித் தொண்டை வரண்டது. என்ன செய்வது என்றே தெரியாத நிலை. ஒரு சொல்லைக்கூட வெளியே பேச முடியாத அளவுக்குத் துக்கம் பெருகித் தொண்டைக்குழியில் நிரம்பியிருந்தது.
அந்த நேரத்தில் நல்லவேளையாக ஒரு படையினன் கூட என்னிடம் எதையும் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் துக்கம் உடைந்து கேவலாக மாறியிருக்கும். அல்லது கடுமையான வசை ஒன்றை அவனை நோக்கி எறிய வேண்டியிருக்கும். அது தாங்க முடியாத துக்கம் உருமாறித் தீயாக வெளியேறும் நிலை. அந்த அளவுக்குத் துக்கத்தின் கனதியும் வெம்மையும் இருந்தது.
சனங்கள் அன்று சாவிலிருந்து தப்புவதற்காக வழிதேடினார்கள். மரணத்திலிருந்து தப்பி விடுவதே அன்றைய மிகப் பெரும் போராட்டம். ஆனால், எப்படித் தப்புவது என்று தெரியாத நிலை. சாவரங்கிலிருந்து தப்பிவிடுவதொன்றும் அத்தனை சுலபமானதல்ல. சுற்றிவளைக்கப்பட்ட சாவு தன்னுடைய பென்னாம் பெரிய வாயைத் திறந்து கொண்டு வா வா என்று அழைத்துக் கொண்டிருந்தது. குழந்தைகளின் மீதும் கருணையற்றிருந்தது அந்தச் சாவு.
மாபெரும் மரண நாடகம் முடிந்தது. ஆனால், மரணம் கூத்தாடிய சாவரங்கின் எச்சங்கள் மறையவில்லை. துருவேறாத பச்சிளம் மனித எலும்புகள் இதோ என்முன்னே... என் முன் மட்டுமல்ல இங்கே இருக்கின்ற படையினரின் முன்னும். மட்டுமல்ல, வரலாற்றின் முன்னும், மனச்சாட்சியின் முன்னும்.
குற்றவுணர்வுகளை உணராத படையினர் ஒரு புறமும் சாவு தின்ற சனங்களை மனதில் ஏந்தி வேதனையில் தவிக்கின்ற நான் இன்னொரு புறமுமாக...
மனித குலம் எத்தகைய கொடிய முரண்களை இன்னும் தன்னுடைய மடியிற் கட்டி வைத்திருக்கிறது?
முரண்களின் விளைச்சலில் அது விளைவிக்கின்ற அவலத்தை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த நாகரீக உலகம் அனுமதிக்கப்போகிறது?
நாங்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்டும் திரும்பியபோது அதே பதற்றத்தோடேயே இருந்தேன். அதாவது, போர்க்காலத்தில் நிலவிய அதே பதற்றத்தோடு. ஆனால், போர் முடிந்து இப்போது மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டிருக்கின்றன.
பகுதி 03
குவிக்கப்பட்டிருக்கும் வாகன எச்சங்கள், கைவிடப்பட்ட பொருட்களின் சிதைவுகள், எரிந்த பிறகும் மிச்சமாக இருக்கும் உடமைகள்....
படையினரால் பிடுங்கியவை, கழற்றியவை, எடுத்துச் செல்லப்பட்டவை போக எஞ்சியவற்றை எடுத்துக் கொள்வதற்காக முண்டியடிக்கும் சனங்கள் அந்த மணல் வெளியில் அந்தரித்துக் கொண்டிருந்தனர்.
பத்திரங்களோடு பொருட்களையும் உடமைகளையும் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்காக அரசாங்க அதிகாரிகள் சிறு கூடாரமடித்திருக்கிறார்கள்.
துருவேறி உக்கிக் கொண்டிருக்கும் அந்தப் பொருட்களுக்காகவும் கைவிடப்பட்டுச் சிதைந்துபோன உடமைகளுக்காகவும் வந்திருக்கும் சனங்கள் அவற்றைப் பெறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது துக்கமே வந்தது.
ஏறக்குறையக் கழிவு நிலைக்கு வந்துவிட்ட அந்தப் பொருட்களுக்காகவே இப்படி அலைகின்ற –அவதிப்படுகின்ற ஒரு விதியில், இந்த சிதைவெளியில் இந்தச் சனங்கள் வந்திருக்கிறார்களே என்று.
வாழ்வின் கடைசித் தருணங்களில் நான் நின்றேன் மீண்டும்.