Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சர்வதேச அழுத்தத்தின் எதிர்காலம்? 

சர்வதேச அழுத்தத்தின் எதிர்காலம்? 
யதீந்திரா

 

2009இல் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தமிழர் தரப்பின் நம்பிக்கையாக இருந்தது மேற்படி சர்வதேச அழுத்தம் ஒன்றுதான். இந்த இடத்தில் முதலில் சர்வதேச அழுத்தம் என்பதால் விளங்கிக்கொள்ளப்படுவது என்ன என்பதை பார்ப்போம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுற்றதும் அதுவரை போருக்கு முண்டுகொடுத்த அமெரிக்கா மற்றும் அதன் மேற்குலக நேசசக்திகள் அனைத்தும் மனித உரிமைகள் என்னும் பெயரில் ராஜபக்ச அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியது.

இவ்வாறான அழுத்தங்களை உற்றுநோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். அதாவது, ஆரம்பத்தில் ராஜபக்ச அரசு மீது மேற்படி சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகித்திருக்கவில்லை. 2009இல் யுத்தம் முடிவுற்றதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ராஜபக்ச அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்று சில நாடுகள் வலியுறுத்திய போதிலும், பேரவையின் பெரும்பான்மையான நாடுகள் அதற்கு எதிராகவே வாக்களித்திருந்தன. 29 நாடுகள் அப்போது அதற்கு எதிராக வாக்களித்திருந்தன. ஆனால் ஐக்கிய ராச்சியம், கனடா உட்பட்ட 17 நாடுகள் மனித உரிமைகள் தொடர்பிலான கரிசனையை வெளிப்படுத்தியிருந்தன.

2009இல்தான் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது. புஷ் தலைமையிலான குடியரசு கட்சியினது ஆட்சியின் போது மனித உரிமைகள் பேரவை தொடர்பான அமெரிக்க நிலைப்பாடு வேறு விதமாக இருந்தது. இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் வகையிலேயே ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சி மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படும் முடிவை எடுத்திருந்தது. இந்த காலப்பகுதியில்தான் இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான விவகாரமும் சர்வதேச மயப்படுத்தப்பட்டது. 2009இல் ராஜபக்ச அரசிற்கு சாதகமாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பின்னால் அப்போது ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக இருந்த கலாநிதி தயான் ஜெயதிலகவின் பங்கு அளப்பரியது. இது பற்றி கோடன் வைஸ் எழுதிய ‘கூண்டு’ நூலில், தயான் தனது வாதத்திறமையால் மேற்குலக ராஜதந்திரிகளை தோற்கடித்ததாக குறிப்பிடுகின்றார். 2009உடன் தயானின் பதவிக் காலமும் முடிந்தது. முடிந்தது என்பதை விடவும் ராஜபக்ச தயானின் பதவிக் காலத்தை நீடிக்கவில்லை.

இதன் பின்னரான சூழலை மதிப்பிட்டால், இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் தமிழ் புலம்பெயர் சமூகம் பெருமளவில் பிரச்சாரங்களை முன்னெடுத்தது. இதற்கு சமாந்தரமாக உலகளாவிய மனித உரிமை அமைப்புக்களும் இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பில் தொடர்ச்சியாக கேள்விகளை தொடுத்துக் கொண்டிருந்தன. சனல் - 4 இன் ஆவணப்படங்களும் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்தச் சூழலில்தான், அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2011இல் உறுப்பினராக இணைந்து கொள்கிறது. அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையில் இணைந்து கொண்ட அடுத்த ஆண்டுதான் இலங்கை மீதான பிரேரணை ஒன்றை கொண்டுவருகிறது. அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் சார்ந்த ஒரு நிகழ்ச்சிநிரலை புகுத்தியதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தியவர், அப்போது அமெரிக்காவின் இராஜாங்கச் செயலராக இருந்த கிலாரி கிளின்ரன் ஆவார். அதேபோன்று அமெரிக்காவின் ஆசியாவை நோக்கி அதிக கவனத்தை குவிப்பதற்கு காரணமான ஆசிய மையக் கொள்கையின் சூத்திரதாரிகளிலும் கிலாரியே முதன்மையானவர். இவர் 2011இல் பொறின்பொலிசி சஞ்சிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில், அமெரிக்காவின் தலைமைத்துவத்திற்காக ஆசியா ஏங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அமெரிக்கா ஆசியாவை நோக்கி திரும்பியிருந்த சூழலில்தான் இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணையும் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து யுத்தத்திற்கு பின்னரான இலங்கை அரசியல் ஒரு சர்வதேச மயப்படுத்தப்பட்ட அரசியலாக உருமாறியது. அனைவரது பேச்சும் செயலும் மேற்படி பிரேரணை மூலமான சர்வதேச அழுத்தத்தின் வாயிலாகவே புரிந்துகொள்ளப்பட்டது. ராஜபக்சேக்களின் தலைமையிலான கொழும்பின் அரசியல் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியோம் என்பதாகவும், தமிழர் தரப்பின் அரசியல் சர்வதேச அழுத்தம் ஒன்றே தமிழ் மக்களுக்கிருக்கின்ற ஒரேயொரு நம்பிக்கை என்பதாகவுமே வெளித்தெரிந்தது. இவ்வாறானதொரு சூழலில், ராஜபக்சேக்கள் அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிய அல்லது அதனை பரிசீலிப்பதற்கு மறுத்ததன் பின்னணியில்தான் அமெரிக்காவின் பிரேரணைகளும் வளர்ந்துசென்றன. இவ்வாறு நீண்டுசென்ற பிரேரணைகள், இறுதி யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை கோரும் நிலமை வரை நீண்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இலங்கையின் அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிய மறுத்த ராஜபக்சேக்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டனர்.

இந்த இடத்தில் விடயங்களை புரிந்துகொள்வது மிகவும் சுலபமானது. அதுவரை ராஜபக்ச அரசு எவற்றை நிராகரித்ததோ அவை அனைத்தையும் புதிய மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இறுதியாக 2015 இல் கொண்டுவரப்பட்ட அமெரிக்க பிரேரணைக்கு இணையனுசரணை வழங்கியதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் கொழும்பிற்கும் இடையில் நிலவிய இழுபறியை புதிய அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்தது. இதனைத் தொடர்ந்து அதுவரை மேற்குலகத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் நிலவிவந்த அரசியல் போரும் முடிவுக்கு வந்தது. இவற்றுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒத்துப்போகும் முடிவை எடுத்தது. கூட்டமைப்பின் முன்னால் வேறு தெரிவுகள் எதுவும் இந்த சந்தர்ப்பத்தில் இருந்திருக்கவில்லை என்பதும் உண்மை.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் ஆட்சி மாற்றத்துடன் சர்வதேச அழுத்தம் என்பதும் பெருமளவிற்கு ஒரு முடிவுக்கு வந்துவிட்ட விடயமாகவே இருந்தது. சில விடயங்களில் தாம் அழுத்துவதான ஒரு தோற்றத்தை மேற்குலகு காண்பித்துக் கொண்டாலும் கூட, தாம் விரும்பும் ஒரு அரசாங்கம் என்னும் வகையிலேயே அவர்களின் அணுகுமுறை இருந்தது. அப்படித்தான் இருக்கவும் முடியும். கூட்டமைப்பு, ஆட்சி மாற்றத்துடன் நிபந்தனையற்ற வகையில் இணைந்து போனதன் காரணத்தினால், அதன் பின்னரான அனைத்து முன்னெடுப்புக்களுடன் நிபந்தனையற்ற வகையில் இணங்கிச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளானது. உண்மையில் இதன் பின்னரான சூழல் என்பது கூட்டமைப்பிற்கான ஒரு இராஜதந்திர பொறியாகும். இந்தப் பொறிக்குள்ளிருந்து கூட்டமைப்பால் வெளியேற முடியுமென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்த நிலமை அடுத்த ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் 2020 வரையில் தொடரும்.

இப்படியானதொரு சூழலில்தான் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீளவும் வழங்குவதற்கான தீர்மானத்தை அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் இந்தப் பத்தியாளருடன் பேசிய முன்னணி புலம்பெயர் அமைப்பொன்றின் பிரதிநிதி, இந்த நிலமைகள் இலங்கையின் மீதான ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டை சடுதியாக மாற்றிவிடும் என்று கவலையுடன் தெரிவித்தார். புலம்பெயர் சமூகம் கவலைப்படுகிறது என்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு மாறிவிடப் போவதில்லை. உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்படி நிலைப்பாடு இதுவரை மனித உரிமைகள் தொடர்பிலான விமர்சனங்கள் அனைத்தையும் புறம்தள்ளக் கூடியது. மீளவும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதென்பதன் பொருள் நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்கின்றது என்பதாகும். எனவே முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் ஒரு நாட்டின் மீது அழுத்தங்களை ஏன் தொடர வேண்டும் என்னும் கேள்வியே மேற்குலகில் மேலெழும். தர்க்கரீதியில் பார்த்தால் அது சரியானதும் கூட. தவிர, அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தை பொறுத்தவரையில் புதிய அரசாங்கத்தை பொருளாதார ரீதியில் தூக்கிவிட வேண்டிய பொறுப்பையும் உணர்கின்றனர். புதிய அரசாங்கம் பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை சந்தித்தால் கொழும்பின் முன்னால் சீனா ஒன்றே ஒரேயொரு தெரிவாக இருக்கும். இதுவும் பிரதானமாக நோக்கப்படுகிறது.

சர்வதேச அழுத்தத்தின் எதிர்காலம்? 

இந்த இடத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு எவ்வாறு உருமாறும் என்பதிலும் குழப்பங்கள் உண்டு. 2006இல் மனித உரிமைகள் பேரவை ஸ்தாபிக்கப்பட்ட போது அதனுடன் இணைந்துகொள்வதை நிராகரித்திருந்த குடியரசு கட்சியே மீளவும் அமெரிக்காவை தீர்மானிக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையை ஒரு ‘கிளப்’ போன்றது என்று கிண்டல் அடித்திருக்கின்ற டொனால் ரம்ப், எதிர்வரும் 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச்சில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்குமென்பதும் கேள்விக்குறியே! ரம்ப், ஐ.நாவின் வினைத்திறன் தொடர்பில் கேள்வியெழுப்பியிருக்கின்றார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற சிந்தனைக் குழாம்களில் ஒன்றான, புறுக்கிங் நிலையத்தின் கட்டுரையொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயம் மிகவும் முக்கியமானது. ஒருவேளை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறுமாக இருந்தால், மனித உரிமைகள் பேரவை அதனது செல்வாக்கை இழந்துபோகும். முன்னோக்கிச் செல்வதற்கான ஆற்றல், வளங்கள் அனைத்தும் இழந்து போகும். இந்த படத்தை நாங்கள் முன்னரே பார்த்தவர்கள். இவ்வாறு வாதிடும் மேற்படி நிலையம், அமெரிக்கா மேசையில் இல்லாவிட்டால், மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் பின்நோக்கி தள்ளப்படும் என்றும் குறிப்பிடுகிறது. இதில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுமென்று எவரும் அறியார். ஊகங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும் ஆனாலும் அமெரிக்காவின் நிலைப்பாடு விரைவில் வெளிவரும். ஆனால் இந்த நிலமைகளை தொகுத்து நோக்கினால் தமிழர்களுக்கு சாதகம் என்று சொல்லப்பட்ட சர்வதேச அழுத்தம் தற்போது தமிழர்களுக்கு சாதகமாக இல்லை என்பது மட்டும் உண்மை.

இவ்வாறானதொரு சூழலில்தான் கிழக்கில் ஒரு ‘எழுக தமிழ்’ தொடர்பில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கூட்டமைப்பின் இரண்டு கட்சிகளும் இதில் இணைந்து பணியாற்றுகின்றன. சம்பந்தனும் இதனை எதிர்க்கவில்லை. இந்த நிகழ்வு பெரிய மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாது விட்டாலும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கியும் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தை நோக்கியும் சில கருத்துக்களை முன்வைப்பதற்கான களமாக இந்த நிகழ்வை ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் உரையாற்றவுள்ள வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனதுரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு தொடர்பில் பேசலாம். அதேபோன்று அமெரிக்க அழுத்தங்களை தொடர வேண்டிய தேவை தற்போதும் உண்டு என்பதை அவர் வலியுறுத்தலாம். அமெரிக்காவின் புதிய அதிபர் ரம்ப்பிற்கு ஒரு செய்தியை சொல்லுவது போன்று தனதுரையை வடவடிமைக்கலாம். ஏனெனில் ரம்ப் பதவியேற்பின் பின்னர் வரும் முதல் நாளான 21ம் திகதியே எழுக தமிழ் இடம்பெறவுள்ளது. பேரவையினரும் தமது பிரகடனத்தில் மேற்படி விடயங்களை உள்ளடக்கலாம். இதேபோன்று புதிய அரசியல் யாப்பில் மோடி இந்தியாவின் கரிசனையையும் பேரவை கோரலாம். இந்தியா இல்லாமல் தமிழர்களுக்கு ஒரு சர்வதேச அரசியல் எக்காலத்திலும் இருக்கப் போவதில்லை. இப்பிராந்தியத்தின் சர்வதேச அரசியல் என்பதே முதலில் இந்தியாதான். பின்னர்தான் எவராகவும் இருக்கலாம். 

1/14/2017 2:32:04 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்