சந்திர. பிரவீண்குமார்
டிசம்பர் 18ஆம் தேதி சென்னை மாநகர பேருந்து ஒன்றில் கேட்ட உரையாடல் இது:
''நரேந்திர மோடி குஜராத்துல திரும்பவும் வந்துட்டாராமே? அந்த ஊருல கரண்ட் கட்டே இல்லையாமே?'' என்றார் ஒருவர்.
''அங்க இலவசமே இல்லையாமே'' என்றார் மற்றவர்.
''இந்த முன்னேற்றமெல்லாம் பதினஞ்சு வருடத்துல வந்ததுதானாமே? எந்த கட்சிக்காரனா இருந்தாலும் நல்லது பண்ணா மக்கள் ஓட்டு போட்டுடுவாங்கப்பா'' என்றார் இன்னொருவர்.
இந்த உரையாடலை பேருந்தில் மட்டுமல்ல, குஜராத் தேர்தல் முடிவு வந்ததும் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பல இடங்களில் இதே பேச்சுதான். சமீப காலத்தில் இந்திய மக்களால் அதிகம் பேசப்பட்ட மாநில முதல்வர் நரேந்திர மோடியாகத்தான் இருப்பார். அதிகம் பேசப்பட்ட மாநிலத் தேர்தலும் குஜராத் தேர்தலாகவே இருக்கும்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 2002இல் குஜராத்தில் நடந்த கலவரத்தைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் எதிர்வினையாக குஜராத் முழுவதும் வன்முறை கோர தாண்டவம் ஆடியது. அப்போதுதான் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த நரேந்திர மோடி இந்தத் தாக்குதலை முஸ்லிம்களின் தவறுகளுக்கான இந்துக்களின் பதிலடியாக வர்ணித்தார். வினை - எதிர்வினை சார்ந்த நியூட்டனின் தத்துவத்தைத் துணைக்கு அழைத்து வன்முறைக்கு நியாயம் கற்பித்தார். இந்தப் பேச்சுக்கு ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
அடுத்த குஜராத் தேர்தலில் மோடி வரலாறு காணாத வெற்றியை அடைந்தாலும் உலகம் குஜராத் கலவரத்தை மன்னிக்கத் தயாராக இல்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் மோடி தங்கள் நாட்டுக்கு வருவதை தடை செய்தன. குஜராத் கலவரம் குறித்த விசாரணைக் கமிஷன்கள் மோடியின் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டின. நீதிமன்றம் அரசையும் முதல்வரையும் கடுமையாக விமர்சித்தது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றிக் கூட்டணிக் கட்சிகளும்கூட மோடியை விமர்சித்துவருகின்றன.
ஆனால் மோடி தன்மீதான தாக்குதல்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இதுநாள் வரையிலும் குஜராத் கலவரத்திற்கு மன்னிப்புக் கேட்கவில்லை. மாறாக குஜராத்தின் வளர்ச்சி என்னும் அஸ்திரத்தைக் கையில் எடுத்தார். முதலீடுகளையும் உற்பத்தியையும் பெருக்குவது, உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, நிர்வாகத்தைச் சீரமைப்பது என்று பல விதங்களில் தன் வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தினார். குஜராத்தின் பொருளாதாரம் வளர்ந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
குஜராத்தின் குக்கிராமங்களில்கூட மின்சாரம் கிடைக்குமாறு செய்தார். அரசு அலுவலகங்களில் ஊழலை ஒழிக்காவிட்டாலும் பெருமளவுக்கு குறைத்திருக்கிறார். குஜராத்தின் பல்வேறு நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார். இதுபோன்ற நடவடிக்கைகள் அவர் மீதான மதிப்பை குஜராத் மக்களிடம் உயர்த்தியிருக்கின்றன.
குஜராத்தின் வளர்ச்சி அவரைப் பிடிக்காதவர்களையும் மோடியின் பக்கம் சாய வைத்துள்ளது. மோடியின் மதவாத அரசியலை விமர்சிக்கும் ஊடகங்கள்கூட அவரது மாநிலத்தின் வளர்ச்சியை மெச்சின. அவுட்லுக் போன்ற இந்துத்துவ எதிர்ப்பு ஊடகங்களும் மோடியின் வளர்ச்சி அரசியலைப் பாராட்டின. அவர் மீதான கோபம் முஸ்லிம்களிடையே குறையவில்லை என்றாலும் அவரால் முன்னேற்றமடைந்த பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் அவரது நிர்வாகம் பயனுள்ளதாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இதனால் மோடி மந்திரத்தை விரும்பும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலகமயமாதல் சூழலில் ஏற்படும் வளர்ச்சியால் அதிகப் பலன் பெற்ற நடுத்தர வர்க்கம் மோடியின் ஆட்சியை வலுவாக ஆதரித்தது. நாடு முழுவதிலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் மோடியின் மீதான பாராட்டுணர்வை வெளிப்படுத்திவருகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் மோடி ஸ்துதி ஓங்கியே ஒலிக்கிறது. மோடியை ஆதரிப்பவர்களில் இளைஞர்கள் அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து மூன்று முறை முதல்வராக நீடிப்பது மக்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை. அது மோடிக்குக் கிடைத்திருப்பதற்கு அவரது நிர்வாகத் திறனே காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் மோடியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
தன் மீதான தாக்குதல்களை முறியடிக்கும் விதத்திலும் மோடி தேறியுள்ளார். நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு பால் ஊட்டும் நோஞ்சான் தாயின் புகைப்படத்தைக் காட்டி 'குஜராத்தில் பெண்களின் அவல நிலை' என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால் அந்த புகைப்படம் இலங்கை தமிழ் அகதியின் படம் என்றும் அதை தவறாகப் பயன்படுத்தியதன் காரணமாக காங்கிரஸ் முஸ்லிம்களுக்கும், பா.ஜ.க.வுக்கும் அவமானம் செய்தது மட்டுமல்லாது ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக மாற்றியதாக மோடி குற்றம் சுமத்தினார். சோனியா, ராகுல் ஆகியோரின் பிரச்சாரமும் குஜராத்தில் எடுபடவில்லை.
ஆனால் நரேந்திர மோடியின் வளர்ச்சி அஸ்திரம் எல்லோரையும் கவர்ந்துவிடவில்லை. அவரது நல்லாட்சி என்பது வெறும் பிம்பமே என்கிறார் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு. ''குஜராத் மாநிலம் கல்வியில் பத்தாம் இடத்தில் உள்ளது. மோடி உருவாக்கிய தொழிற்சாலைகளும், அதிநவீன சாலைகளும் குழந்தைகளுக்குக் கல்வியைத் தந்துவிடுமா? மேலும் குஜராத்தில் ஊட்டச்சத்து அளவு சோமாலியாவைவிட மோசமாக உள்ளது'' என்று குற்றம் சாட்டுகிறார் அவர்.
மோடியின் ஆட்சியில் கிராமப்புற மக்கள் வளர்ச்சிப் பெறவில்லை என்று பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் கூறுகிறார். 'வடக்கு குஜராத் மற்றும் சௌராஷ்ட்ரா பகுதிகளில் நிலவும் தண்ணீர் பிரச்சினை கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தீரவில்லை' என்கிறார் படேல்.
இந்தத் தேர்தலில் எங்கள் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது (1 சதவீதம்) என்றும் போன தேர்தலை விட இரு தொகுதிகளில் கூடுதலாக வென்றுள்ளோம் என்றும் கூறும் நிதியமைச்சர் ப. சிதம்பரம், 'குஜராத்திலும் எங்களுக்கு வெற்றிதான்' என்கிறார். வெற்றி பெற்ற கட்சிகள் தாங்கள் பெற்ற இடத்தையும் தோற்ற கட்சிகள் வாக்கு சதவீதத்தைதையும் முன்னிறுத்திப் பேசுவது இந்தியாவில் வழக்கம்தான். ஆனால் பா.ஜ.க.வுக்கு கடந்த 2007ஆம் ஆண்டின் தேர்தலைவிட இரண்டு இடங்கள் குறைந்திருக்கின்றன. அந்த 2 இடங்களும் மோடியை எதிர்த்து புதிய கட்சியைத் துவங்கிய கேசுபாய் படேலுக்குக் கிடைத்துள்ளன. வாக்கு சதவீத குறைந்ததற்கும் படேலின் கட்சியே காரணம் என்றும் அனுமானிக்கலாம்.
இந்த வெற்றியால் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை பா.ஜ.க. முன்னிறுத்தும் என்று கூறப்படுக்கிறது. ஆனால் அதற்கு இன்னமும் வெகு தூரம் அவர் போக வேண்டும். அவரைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள பா.ஜ.க.விலேயே பலர் தயாராக இல்லை. அவருடன் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்த சுஷ்மா ஸ்வராஜும், அருண் ஜெட்லியும் ''மோடிதான் அடுத்த பிரதமர்'' என்று புகழாரம் சூட்டினாலும் இன்னும் போட்டியாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, பா.ஜ.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிடம் மோடி பிரதமராவாரா என்று ஒரு நிருபர் கேட்டப்போது, ''ஏன்? பிரதமராவதற்கு எனக்குத் தகுதி இல்லையா?''என்று பதிலுக்கு கேட்டார். பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரிக்கும் மோடிக்கும் ஆகாது என்பது ஊரறிந்த ரகசியம்.
மோடி பிரதமராக வருவதற்கு முன்னால் இதுபோன்ற எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டும். மேலும் பா.ஜ.க.வின் தலைமையை ஏற்பவர்கள் அனைவரும் மோடியை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறிவிட முடியாது. உதாரணமாக, பல ஆண்டுகளாக பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்துவரும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார் மோடியைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். அவருக்குப் பிரதமர் பதவியில் ஆசையில்லை என்றாலும் மோடி பிரதமராக வரக் கூடாது என்று அவர் பிடிவாதம் காட்டுகிறார். பா.ஜ.க. தனது பிரதமர் வேட்பாளரைத் தற்போதே அறிவிக்க வேண்டும் என்கிறார்.
தற்போது நரேந்திர மோடியின் மூன்றாவது வெற்றி காரணமாக பா.ஜ.க.வில் வேண்டுமானால் அவருக்கு ஆதரவு பெருகலாம். ஆனால் அதைக் கூட்டணிக் கட்சிகள் ஏற்குமா என்பதைச் சொல்ல முடியாது. மோடியின் தலைமையை ஏற்று அவர் பிரதமராக வருவதற்கு ஜெயலலிதா போன்ற மிகச் சிலரே தயாராக உள்ளார்கள். பிரதமராக வர வேண்டுமானால் மக்களின் ஆதரவைப் பெற்றால் மட்டும் போதாது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும் என்ற யதார்த்த நிலையை மோடி அறியாதவரல்ல.
மோடி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்றாலும் இதுவரை அதைப் பயன்படுத்தவில்லை. ஒருவேளை அவர் பிரதமராக வர வேண்டுமானால் உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் அதைப் பிரச்சாரம் செய்தால்தான் அவருக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று இந்தியா டுடே கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.
நரேந்திர மோடி பிரதமராக வருவதை மக்கள் விரும்பலாம். ஆனால் அது வாக்குகளாக மாறிவிடும் என்று கூற முடியாது என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். ''என்னைப் பொறுத்தவரை மோடி பிரதமராக வர வேண்டும் என்றே விரும்புகிறேன். அவர் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் மூன்றாவது முறையாக வெற்றிபெற முடியாது. ஆனால் அவர் பிரதமராக வருவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். அவருக்கு குஜராத்தைத் தாண்டி எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கும் என்பது சந்தேகமே. ஒருவேளை வெற்றிக்குப் பிறகு அவர் வந்தால் கூட்டணிக் கட்சிகள் ஒப்புக் கொள்வது கடினம். ஏதாவது ஒரு நாடு தழுவிய உணர்ச்சி வேகத்தை பா.ஜ.க. கிளப்பினால்தான் அவர் பிரதமராக வர வாய்ப்புள்ளது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த கணிப்பொறி வல்லுநர் அருண்குமார் (30).
மோடி பிரதமராக வருவதற்கு இதுபோலப் பல சவால்களைக் கடந்தாக வேண்டியுள்ளது. அவர் எப்படி இவற்றைச் சமாளிப்பார் என்பதைப் பொறுத்தே அவரது எதிர்காலமும் இந்தியாவின் எதிர்காலமும் இருக்கும்.