Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சம்பூரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலும்

சம்பூரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலும்
இலக்குவன்

 

இலங்கையில் மாகாண சபை முறைமையானது தமிழ் மக்களின் தியாகத்தாலும் துயர்நிறைந்த போராட்டத்தாலும் உருவானபோதும் இன்று வரைக்கும் அதன் பலாபலன்களை தமிழ் மக்கள் பெருமளவிற்கு அனுபவிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். மாகாணசபைக்கான அதிகாரங்கள் எந்தளவுக்குப் போதுமானவை என்ற கேள்வி தமிழ் மக்களிடமிருந்து 1987 ஆம் ஆண்டு தொடக்கம் எழுந்து கொண்டிருக்கையில் வடக்கு கிழக்குப் பிரிப்பு நடந்தேறியது. வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கூட பறித்தெடுக்கும் கைங்கரியங்களும் தொடர்ச்சியாக நடக்கின்றன. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் 13வது அரசியற் திருத்தச் சட்டம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதும் அவற்றினை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்னும் அடாவடித்தனங்களும் தொடர்ச்சியாக நடந்தேறுகின்றன. முக்கியமாக வட மாகாண சபைக்கான தேர்தல் இன்னும் இழுபறியாகவே உள்ளது. எந்த வடக்கு கிழக்கு மக்களின் தேவைக்காக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டதோ அம்மக்கள் அச்சபையினால் கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளைக்கூட அனுபவிக்க முடியாத நிலைமையே இன்று வரை காணப்படுகின்றது. 

இந்நிலையில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான இரண்டாவது தேர்தலினை எதிர்கொள்கின்றார்கள். கிழக்கில் யுத்தம் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட போதும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் இழந்துபோன வாழ்க்கையினையும் வாழ்வாதாரங்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் தமிழ் மக்களின் பங்களிப்புடன் இதுவரை எடுக்கப்படவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பாடசாலைகள் மற்றும் ஆலயங்களைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் யுத்த முடிவின்பின்னர் அபிவிருத்தியென்ற போர்வையில் நிலப்பறிப்புக்களும் சிங்களமயமாக்கமும் பௌத்தமயமாக்கமும் தொடர்ச்சியாக இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

மற்றுமொரு தேர்தலினை கிழக்கு மாகாண மக்கள் எதிர் கொண்டுள்ள சூழ்நிலையில் சம்பூர் பிரதேச மக்களின் தற்போதைய அவல நிலைமையினை ஒட்டு மொத்த தமிழ் மக்கள் முன்வைப்பது அவசியமானதாகும். சம்பூர் பிரதேச மக்கள் யுத்தம் முடிவுற்ற பின்னரும் யுத்தகாலத்தில் தாம் அனுபவித்த வாழ்க்கையைக்கூட அனுபவிக்க முடியாத மக்களாக் காணப்படுகின்றார்கள். யுத்தகாலத்தின் போது சம்பூர் பிரதேச தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த போதும் தமது நாளாந்த வாழ்க்கையினை ஓரளவு மகிழ்ச்சியாகவே கழித்தனர். ஆனால் யுத்தத்தின் பின்னர்  சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் கடற்கரைச்சேனை (ஒருபகுதி) ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளடங்கிய சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலம் அப்பிரதேச தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது.

சுமார் 2500 ஏக்க வயல் நிலங்கள் பாழ்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கல்விமான்களை உருவாக்கிய சம்பூர் மகாவித்தியாலயம் கடற்படையினரின் பாரிய பயிற்சி முகாமாக உள்ளது. சம்பூர் சிறிமுருகன் வித்தியாலயம், கூனித்திவு நாவலர் வித்தியாலயம், மற்றும் சூடைக்குடா பாரதி வித்தியாலயம் என்பன செயற்பாடற்றுக் கிடக்கின்றன. சம்பூர் அருள்மிகு பத்திகாளி அம்பாள் ஆலயம் குண்டு வீச்சுக்களால் தரைமட்டமாகியுள்ளது. சம்பூர் நாகதம்பிரான் ஆலயம் புல்டோசரினால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. சம்பூர் சித்திவிநாயகர் ஆலயம், கூனித்திவு விநாயகர் ஆலயம், கூனித்தீவு வடபத்திரகாளி அம்பாள் ஆலயம் மற்றும் சூடைக்குடா முத்துமாரியம்மன் ஆலயம் என்பன பூசை வழிபாடுகளின்றி சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன.

சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் கடற்கரைச்சேனை பிரதேச மக்கள் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைபறிச்சான் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள முகாம்களில் பலவருடங்களாக துன்பப்படுகின்றனர். இம்மக்கள் தாம் தற்போது வாழும் இடங்களிலுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என் வற்புறுத்தப்பட்டு நிர்வாக ரீதியில் சம்பூர் மேற்கு, சம்பூர் கிழக்கு, கூனித்தீவு, மற்றும் நவரட்ணபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகள் நிரந்தரமாக இலங்கையின் நிர்வாகத்திலிருந்து அழிக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் சம்பூர் பிரதேச மக்கள் மட்டுமே கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தல் காலத்திலும் நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபைத்தேர்தல் காலத்திலும் அகதிகளாக தொடர்ந்தும் துன்பப்படுகின்றனர். இம்மக்களைப் பற்றி அக்கறைப்படுவோர் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் தேர்தல் காலங்களிலேயே இம்மக்களை அணுகி உதவுவதாக வாக்களிக்கின்றனர். தேர்தல் முடிந்தவுடன் மாயமாக மறைந்து விடுகின்றனர். இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திருவாளர் சம்மந்தன் அவர்கள் இம்மக்களின் பிரதிநிதிகளை முன்னர் சந்தித்தபோது சம்பூரில் மிகப்பெரிய இராணுவ முகாம் வந்து விடும் என்பதாலேயே இந்தியாவின் உதவியுடன் சம்பூரில் அமையவிருக்கும் அனல்மின் நிலையத்தை தாம் எதிர்க்கவில்லை எனக் கூறினார். அண்மையில் தனது இல்லத்தில் சம்பூர் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது இந்தியா வராவிட்டால் சீனா வந்து விடும் எனக் கூறினார். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஓர் உரையில் அபிவிருத்தித்திட்டமாகிய சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தினைத் தாம் எதிர்க்கவில்லை என்றும் அது நாட்டின் அபிவிருத்திக்கு தேவையானது என்றும் ஆனால் சம்பூர் மக்கள் குடியேற்றப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இக்கூற்றுக்களிலிருந்து இந்தியாவின் நலன்களிலிருந்தே அவர் சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சினைகளை அணுகுவது தெளிவாகின்றது. ஏனெனில் பெரிய இராணுவ முகாம் வந்து விடும் என்பது மக்களை ஏமாற்றும் கதையாகும். தற்போது மிகப்பெரிய கடற்படை முகாம் சம்பூரில் இருப்பதும் அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டால் அதற்குப் பாதுகாப்பளிப்பதற்காக பெரிய முகாம்கள் அமைக்கப்படும் என்பது இவருக்குத் தெரியாதா? இந்தியா வராவிட்டால் சீனா வந்து விடும் என்பது யாருக்குக் கூறும் கதை? சம்பூர் மக்களின் நிலத்தினை சீனா பறித்ததால் என்ன இந்தியா பறித்தால் என்ன சம்பூர் மக்களைப் பொறுத்த வரையில் நிலப்பறிப்பு நிலப்பறிப்புத்தான். அத்துடன் அனல் மின்நிலையத்தினை தான் எதிர்க்கவில்லை என்றும் மக்கள் குடியேற்றப்படவேண்டும் என்று கூறுவதும் ஒன்றுக்கொண்று முரணானது. ஏனெனில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டால் சம்பூர் பிரதேச மக்கள் அங்கு வாழமுடியாமல் போகும் என்பதும் அம்மக்களின் முக்கிய வாழ்வாதாரங்களாகிய விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்பது இவருக்கு தெரியாமல் போனது ஏன்? எப்படி?

சுமார் மூன்று மாதங்களுக்கு முன் சம்பூருக்கு தனியாக இராணுவப் பாதுகாப்புடன் சென்ற திருவாளர் சம்மந்தன் அவர்கள் சம்பூர் மகாவித்தியாலயத்தில் மிகப்பெரிய கடற்படை முகாம் இருப்பது பற்றியோ சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயம் குண்டுத் தாக்குதல்களினால் சின்னாபின்னமாகக் கிடப்பது பற்றியோ சுமார் முன்நூறு வீடுகள் அனல்மின்நிலையம் அமைப்பதற்காக தரைமட்டமாக்கப்பட்டு மக்கள் வாழ்ந்தமைக்கக்கான அடையாளம் அழிக்கப்பட்டமை பற்றியோ முழுக்கிராமமும் பாலைவனம் போல ஆக்கப்பட்டுள்ளமை பற்றியோ இன்றுவரை பாராளுமன்றத்திலும் வெளியிலும் மூச்சுவிடாமல் இருப்பதற்கான காரணங்கள் எவை? வெறுமனே பாராளுமன்றத்தில் ஆற்றும் உரைகளால் மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிடலாம் என்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்றோ தீர்ந்திருக்குமல்லவா?

சம்பூரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலும்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக போராட்டம்; நடத்தி மக்களின் பிரச்சினைகளை துணிச்சலுடன் வெளிப்படுத்தி வருகின்றனர். வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிவசக்தி ஆனந்தனும் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியுள்ளனர். கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தின் மூலம் சாந்தபுரம் மக்கள் அவர்களது சொந்த இடத்தில் குடியேற்றப்பட்டமை யாவரும் அறிந்ததே. அண்மையில் மன்னாரில் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் மக்களுக்கான போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். வடக்கில் அரசியல் தலைவர்கள் தமது மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கையில் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தினை பறிகொடுத்து விட்டு உலக உணவுத் திட்டத்தின் நிவாரணமும் இன்றித் தவிக்கும் சம்பூர் பிரதேச மக்களின் விடிவுக்காக இதுவரை ஒரு போராட்டத்தையேனும் அவர்கள் வாழும் அகதிமுகாம்களுக்கு முன்னால் திருவாளர் சம்பந்தன் அவர்கள் நடத்தாமல் இருப்பதற்குரிய காரணங்கள் எவை?

மேற்கூறிய விமர்சனங்கள் யாவும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டவையல்ல. குளத்தினைக் கலக்கி பிராந்திடம் கொடுக்க யாரும் தயாராக இல்லை. தமிழ் மக்களுக்கு யாரும் அரசியல் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. ஏழு வருடங்களுக்கும் மேலாக முகாம்களில் அல்லலுறும் சம்பூர் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை தமிழ்த் தேசியக் கூட்டமமைப்பு (தமிழரசுக் கட்சி) சரியான முறையில் அணுகி நிரந்தரமான தீர்வுக்கு வழிசெய்ய வேண்டும் என்பதே சம்பூர் மக்களின் வேண்டுதலாகும். சம்பூர் மக்கள் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமமைப்பு (தமிழரசுக் கட்சி) தேர்தல் மேடைகளில் பேசும் தேர்தல் காலப் பேச்சுக்கள் மீது கவனம் செலுத்தும் நிலையில் இல்லை. அவர்களுக்குத் தேவையானது ஒன்றே ஒன்றுதான். அதுவே அவர்களின் மீள்குடியேற்றமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமமைப்பு (தமிழரசுக் கட்சி) தலைமை தமிழ் மக்கள் ஊடாக இந்திய நலனை அணுக வேண்டுமேயொழிய இந்திய நலன் ஊடாக தமிழ் மக்களை அணுகக் கூடாது. சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சனையினை சரியாக அணுக வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மனோ கணேசன் மற்றும் விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற ஏனைய கட்சித் தலைவர்களும் சம்பூர் மக்களின் பிரதிநிதிகளை ஒரே மேடையில் சந்தித்து அவர்களின் கருத்தைக் கேட்டறிய வேண்டும். என்ன நடந்தது என்ன நடக்கின்றது என்பதை மக்களிடம் கேட்டறிய வேண்டும். அதன்பின்பே இவ்வரசியல் கட்சித் தலைவர்களால் ஒரு சரியான முடிவிற்கு வந்து சம்பூர் பிரச்சினையினை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய தெளிவான கொள்கை முடிவிற்கு வரமுடியும். தேர்தல்களுக்கு அப்பால் சம்பூர் பிரதேச மக்களின் பத்தாயிரம் ஏக்கர் வளமான நிலமும் சுமார் பத்தாயிரம் மக்களின் எதிர்கால வாழ்வும் முக்கியம் எனக் கருதினால் அவர்கள் இப்பணியினை காலந்தாழ்த்தாது செய்வார்கள் என நம்புவோமாக.

9/1/2012 2:20:52 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்