Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கடல்வழியே ஆபத்தான ஓர் அவுஸ்திரேலியக் கனவு...

கடல்வழியே ஆபத்தான ஓர் அவுஸ்திரேலியக் கனவு...
கருணாகரன்

 

'ஆறாவடு' என்றொரு தமிழ் நாவல் அண்மையில் வெளிவந்து வாசிப்பு ஆர்வமுள்ளவர்களின் மத்தியில் அறிமுகமாகியுள்ளது. ஈழத்தைச் சேர்ந்த சயந்தன் (தற்போது சுவிற்சர்லாந்தில் வாழ்கிறார்) என்பவரால் இந்த நாவல் எழுதப்பட்டது. இந்த நாவல் சட்டவிரோதமாக அல்லது வெளிநாட்டுக் கனவோடு ஆபத்தான கடல்வழியே படகில் பயணிப்போரின் கதையைச் சொல்கிறது. இது சொல்வது ஏதோ பிறரின் கதை அல்ல. நம்முடைய கதையை. நாங்கள் சந்திக்கின்ற உண்மையை. முற்றுமுழுதான உண்மையை. வெளிநாட்டுக் கனவோடு கடினமான, ஆபத்தான கடல்வழிப் பயணத்தை மேற்கொள்வோரைப் பற்றிய உண்மைக் கதைகளை அப்படியே சொல்கிறது.

ஆனால், இந்த நாவலைப் பலரும் வாசிக்கவில்லை. அதனால், அவர்கள் அவுஸ்ரேலியக் கனவை ஏந்தியபடி ஆபத்துடன் விளையாடுகிறார்கள். (முந்தி இத்தாலிக் கனவோடு படகேறியவர்கள் பலர். கரைசேர்ந்தவர்கள் சிலர். கடலிலே கரைந்தவர்கள் அநேகர்) இப்ப தினமும் இலங்கையின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகளில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கென ஆயிரக்கணக்கானவர்கள் களவாக அல்லது இரகசியமாகப் படகேறுகிறார்கள். இப்படிப் படகேறுவோருடன் இலங்கைக் கடற்படையினரும் பொலிசாரும் விளையாடுகிறார்கள். இலங்கையில் இருந்து தப்பிப் பிழைத்து வெளியேறினால் இவர்களுடன் இயற்கை விளையாடுகிறது. நீண்ட பெரும் கடலில், நீண்ட நாட்கள் தொடரும் சிறு படகுப் பயணத்தில் இயற்கையின் மாற்றங்களைச் சந்திக்காமல் தப்புவதென்பது மிகக் கடினம்.

இதையும் கடந்து போனால், அவுஸ்ரேலிய அரசு இவர்களுடன் விளையாடுகிறது. பாருங்கள் இந்தக் கனவாளிகளுடன் யார் யாரெல்லாம், எது எதுவெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று.

இதைத்தான் சயந்தன் தன்னுடைய 'ஆறாவடு'விலும் மிகத் தெளிவாகச் சொல்கிறார். ஆனால், இப்படிப் படகில் பயணிக்கிறவர்கள் தப்பித் தவறிச் சயந்தனின் 'ஆறாவடு'வை படகிற்குள் வைத்து வாசித்தால் அவ்வளவுதான். அப்படியே கடலிற் குதித்துக் கரைக்குத் திரும்பி விடுவர். அல்லது, படகோட்டியைக் கெஞ்சிக் கூத்தாடிப் படகைத் திருப்பிக் கரைக்கே வந்து விடுவர்.

படகேறுவதற்கு முன், கரையில் நின்று 'ஆறாவடு'வைப் படித்தால், மறுகணத்தில் ஆளை வீட்டிற்தான் காணமுடியும்.

ஆனால், ஒரு கனவு துளிர்த்து அது ஒருவருக்குள் புகுந்து விட்டால், அவரை அது சும்மா இருக்க விடுவதில்லை. அது எதையாவது செய்து கொண்டேயிருக்கும். 'எதையாவது செய்' என்று எப்படியாவது அது அவரைத் தூண்டிக் கொண்டிருக்கும். விடுதலைக் கனவும் அப்படித்தான். வெளிநாட்டுக் கனவும் அப்படித்தான்.  

என்பதால்தான் ஆயிரக்கணக்கானவர்கள் ஆபத்துடன், அபாயத்துடன் இடையறாது விளையாடிக் கொண்டிருக்கிறரர்கள். என்ன நாசமோ தெரியவில்லை. ஈழத்தமிழர்களுக்கு இப்படி அபாய விளையாட்டுக்களும் இடம்பெயர்தல்களும் அவலப்படுதல்களும் பிடித்துப் போயிருக்கிறது. போர் நடந்தாலும் சரி, அது முடிந்தாலும் சரி இந்தப் பித்து மட்டும் தீரவில்லை.

இதேவேளை இந்த ஆபத்திலிருந்தும் அபாயத்திலிருந்தும் வென்று விட்டால் பிறகு வெற்றிதான். ஆகவே அந்த வெற்றிக் கனியைப் புசிப்பதற்காக அவர்கள் கடினமான வழிகளால் தங்களின் பயணத்தைச் செய்கிறார்கள்.

கடல்வழியே ஆபத்தான ஓர் அவுஸ்திரேலியக் கனவு...

பெரும் போரில் வாழ்ந்து கழித்தவர்களுக்கு இந்தக் கடற் பயண அபாயமெல்லாம் சிறு தூசிக்குச் சமன் என்று சொல்கிறார் ஒரு நண்பர்.

எனவே அவர்கள் கடலிற் போகத்தான் போகிறார்கள். படகில் ஏறத்தான் போகிறார்கள். தங்களுடைய வெற்றிக் கனியைப் பறிப்பதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள். இதை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது என்பதே இதற்கு இறுதிப் பதில். அது அமெரிக்கா எண்டாலும் சரி, அவுஸ்ரேலியா எண்டாலும் சரி, இலங்கை எண்டாலும் சரி....

ஆனால், இதன் விளைவுகள் என்பது சாதாரணமானதல்ல. ஒரு சமூகம் இடம்பெயர்வதோ புலம்பெயர்வதோ என்பது எப்போதும் சாதாரணமாக அமைந்து விடுவதில்லை. அது துயரத்திலும் இழப்பிலும் பாதிப்பிலுமே போய் முடிகிறது.

இலங்கையில் இருந்து வெளியேறுவோர் அல்லது வடக்குக் கிழக்கில் இருந்து இப்படி வெளியேறுவோர் பெரும்பாலும் இளைஞர்களாகவே உள்ளனர். குறைந்தது 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களே இந்த மண்ணின் உழைப்புச் சக்திகள். அடுத்த புதிய தலைமுறை. இன விருத்திக்கும் சரி, பொருளாதார விருத்திக்கும் சரி, அரசியல் நிர்மாணத்துக்கும் சரி, துறைசார் வளர்ச்சிகளுக்கும் சரி இவர்களே ஆணிவேர் அல்லது அச்சாணி. விடுதலைக்காக, அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியவர்களும் இவர்களே.

ஆனால், இவர்கள் இதெல்லாத்தையும் விட்டிட்டு வெளியேறுகிறார்கள். இப்படி வெளியேறிப்போய் வேறொரு நாட்டில் தங்களுடைய உழைப்பையும் ஆற்றலையும் செலவழிக்கப் போகிறார்கள். தங்களின் இளைமைக் காலத்தை அங்கே செலவிடப் போகிறார்கள். தாங்கள் பட்ட கடனுக்காகவும் போவதற்கான வழிப்பயணப் பணத்துக்காகவும் தங்களின் இளைமைக்காலத்தை முழுதாக அர்ப்பணித்து உழைக்கப்போகிறார்கள். மாடாக உழைக்கப்போகிறார்கள். உழைத்து உக்கப்போகிறார்கள்.

தங்கள் தாய் மண்ணில் நிற்கவேண்டியதற்குப் பதிலாக இப்படி வேரைப் பிடிங்கிக் கொண்டு வெளிநாடுகளை நோக்கி ஓடவேண்டும் என அலைக்கழிப்பது எது?

ஏறக்குறைய கடனுக்கு உழைத்து, பிறகு தங்களை ஒழுங்கு படுத்துவதற்கு முறிந்து முடிய இவர்களுக்கு வயதாகி விடும். அதற்குப் பிறகே இவர்களை அவுஸ்ரேலிய நாடு தன்னுடைய செலவில் வைத்துப் பராமரிக்கும் ஒரு நிலை வரும்.

பதிலாக இங்கே இவர்களில்லாத ஒரு வெற்றிடம் இப்போதே ஏற்படுகிறது. இந்த வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்புவது? ஏற்கனவே வாக்காளர் இடாப்புகள் நலிந்து போயுள்ளன. போதாக்குறைக்குப் பல காணிகள் வெறுமையாகக் கிடக்கின்றன. சாதாரணமான வேலைகளைச் செய்வதற்கே பொருத்தமானவர்கள் இல்லை. எல்லாவற்றுக்கும் தென்னிலங்கையிலிருந்து ஆட்கள் வருகிறார்கள். அல்லது மலைநாட்டிலிருந்து வரவேண்டியிருக்கு. மேசன் வேலைக்கு, தச்சு வேலைக்கு, றோட்டுப் போடுவதற்கு, கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு, வயறிங் வேலைக்கு, பிளம்பிங் செய்வதற்கு, மருத்துவம் பார்க்க... என. போகிற போக்கில் ஆசிரியர்களாகப் படிப்பிப்பதற்கும் இனிச் சிங்களவர்கள்தான் வரவேணும்!

இருக்கின்ற பெரும்பாலான வீடுகளிலும் வயதாளிகளே – முதியோரே உள்ளனர்.

இவர்களுடைய பிள்ளைகளைப் போர் தின்றது. அல்லது புலப்பெயர்வு கொண்டு போனது. ஆகவே வாக்காளர் இடாப்புகளிலும் மிஞ்சியிருக்கிற வீடுகளிலும் முதியோர்களே எஞ்சியிருக்கின்றனர். 

இந்த நிலையில் இப்ப அவுஸ்ரேலியக் கனவு பலரையும் பித்துப்போலப் பிடித்தாட்டுகிறது. இந்தக் கனவினால் செய்த தொழிலை விட்டே பலர் படகேறுகிறார்கள். அதற்காகக் கடன்படுகிறார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இப்படிப் பலர் தொழிலையும் குடும்பத்தையும் விட்டு விட்டுப் படகேறியிருக்கிறார்கள்.

இந்தப்படகுப் பயணத்தில் அரசாங்கத்தின் பெரிய கைகளே சம்மந்தப்பட்டிருப்பதாக ஊரெல்லாம் பகிரங்கமாகவே பேசுகிறார்கள். ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவே இதற்கான ஏற்பாடுகளின் பின்னணி என்று சிலர் மிகப் பகிரங்கமாகவே சொல்கிறார்கள். வெளிநாடுகளிலும் இப்படித்தான் பேசப்படுகிறது.

ஆனாலும் படகேறும்பொழுது பலர் பிடிபடுகின்றனர். இந்தா, இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது 17.08.2012 புல்மோட்டைப் பகுதியில் 57 பேரைச் சிறிலங்காக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது.

இதைப்போலத் தினமும் 20 பேர் கைது. 30 பேர் கைது. 60 பேர் கைது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது பயணம் போவதற்கு முன் நடக்கும் கைதுகள். அல்லது கடலில் வழி மறித்து நடக்கும் கைதுகள். இந்தக் கைதுகள் உயிராபத்துகளைத் தவிர்த்து விடுகின்றன. பொருளாதார இழப்போடு முடிந்து விடுகின்றன.

இதைக் கடந்து நடுக்கடலில் படகு கவிழ்ந்தோ உடைந்தோ சாகிறவர்களின் இழப்பு....? அதை யார்தான் சரியாகக் கணக்கெடுத்தார்? அப்படித்தான் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என்று செத்தாலும் ஒரு பத்து நாள் அந்தத் துக்கத்தில், அது ஏற்படுத்திய பயத்தில் இந்தப் பயண ஆசை தணிந்திருக்கும். பிறகு அது துள்ளி எழுத்து கொண்டு மீண்டும் உலுப்பத் தொடங்கி விடும். பிறகென்ன? அவனைப் பிடித்து, இவனைப் பிடித்து, வழிதேடி, ஓட்டியைப் பிடித்து, படகில் ஏற வேண்டியதுதான்.

சிலர் லீஸிங்கில் வாகனம் எடுத்தவர்கள். அவர்கள் அதை அப்படியே விட்டு விட்டுப்போக, லீஸிங் கொம்பனிகள் வந்து அவற்றை எடுத்துப்போகின்றன. கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் வங்கிகளால் இப்படிச் சீல் வைக்கப்பட்டிருக்கும் கடைகள் ஆறுக்கு மேல் உண்டு. பதினெட்டு வாகனங்கள் படகுப் பயணிகளால், கைவிடப்பட்ட நிலையில் அவற்றை வந்து எடுத்துப் போயிருக்கிறார்கள்.

வெளிநாட்டுக்கனவு இன்னும் இளைத்துப்போகவில்லை. அதற்கு மேலும் மேலும் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அது ஒரு விலைமதிப்பற்ற கனவே இன்னும் ஈழத்தமிழருக்கு.

ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்ரேலிய நாடுகள் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி 'ஓப்பின்' விசாவைக் குடுத்தால் ஒரு பயல் ஊருக்குள் நிற்கமாட்டார்கள் என்று சில நாட்களுக்கு முன்னர் பகடியாக ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது உண்மை என்பதை  நிலவரங்கள் தாராளமாகக் காட்டுகின்றன.

முன்னர் நாட்டுப் பிரச்சினை, பொலிஸ், இராணுவக்கெடுபிடி உச்சம், இடப்பெயர்வுகள், போர் போன்ற காரணங்களால் வெளியேற்றம் என்ற காரணங்கள் இருந்தன.

இப்போதும் நெருக்கடிகள் உள்ளனதான். ஆனால், முன்னரைப்போல நேரடியான நெருக்கடிகள் அல்ல. இன்றைய வடிவங்கள் எல்லாவற்றையும் வெற்றிடமாக்கும் இயல்பைக் கொண்டவையல்ல. ஆகவே, இதற்கு நின்று இயங்க வேண்டியுள்ளது. இதையே பலரும் சொல்கிறார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரனும் இதைத்தான் சொல்கிறார். சந்திரகுமாரும் இதையே சொல்கிறார். வீரகேசரியும் இதையே சொல்கிறது. துணைவேந்தர் வசந்தி அரசரத்தினமும் இதைத்தான் சொல்கிறார். விசயங்களை ஆழமாகப் பார்க்கும் எவரும் இதை மறுக்க மாட்டினம்.

அநீதியை எதிர்த்து நிற்பது, போராடுவது, இருப்பை உறுதி செய்வது என்பதெல்லாம் தப்பித்தலின் மூலம் சாத்தியமாகுவதில்லை. ஆகவே ஆயரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து பரதேச போவதென்பது இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான். அல்லது இந்த நாட்டின் தொப்புள்கொடி உறவையே துண்டித்துவிடத்தான் போகிறோமா? ஒரு சீசனுக்குச் சுற்றுலாப்பயணிகளைப் போல வந்து போவதற்குத்தான் இந்த மண் பொருத்தமானதா? அல்லது இணைய வெளியிலோ றிமோட் கொன்றோலின் மூலமோ இந்த நாட்டின் இயங்கு விசையைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையின் பாற்பட்ட செயலாகத்தான் இந்த வெளிப்பயணங்கள் அமைகின்றனவா?

தாய் நாட்டை விட்டுப் பெயர்வதென்பது எளிதான ஒன்றல்ல. அதையும் கடந்து இந்த மனிதர்கள் கடினவழியே போகிறார்கள் என்றால், அதற்கான காரணங்கள் எளிதானவையல்ல. பொருளாதாரக் காரணமும் உத்தரவாதமற்ற அரசியல் நிலவரமுமே அதற்கானவை.

இல்லையென்றால் மீண்டும் உயிராபத்துகளின் மத்தியில் எதற்காக இந்தப் பயணங்களுக்காக இரவும் பகலும் கள்வர்களைப் போல இந்த மனிதர்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள்?

இரண்டு கரைகளுக்கிடையில் ஆடிக்கொண்டிருக்கும் படகுகளில், விளையாடிக்கொண்டிருக்கும் மரணத்திற்கிடையில் இலங்கைத்தீவின் நினைவுகள் எப்படியிருக்கும்? இலங்கைத்தீவின் மதிப்பீடு எவ்வாறிருக்கும்?

தாய் நாட்டை விட்டுப் பிற நாடு நோக்கிக் களவாகப் பயணிக்கும் நிலையில்தான் சுதந்திர இலங்கை இருக்கிறது. இதை மறுவளமாக ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்.

1500 களில் இதே மாதிரிப் பாதுகாப்பற்ற படகுகளில் தொலைதூர நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தனர் ஒரு சாரார். இன்று இங்கிருந்து தொலைதூர நாடுகளை நோக்கிப் போகின்றனர் இலங்கையர்கள். ஆனால், ஒரு வித்தியாசம், அவர்கள் ஆள வந்தனர். நாமோ அகதிகளாகப் போகிறோம்.

8/19/2012 2:43:51 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்