Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கசாபுக்கு வழங்கிய தூக்கு தண்டனையே கடைசியானதாக இருக்கட்டும்!

கசாபுக்கு வழங்கிய தூக்கு தண்டனையே கடைசியானதாக இருக்கட்டும்!
எஸ்.கோபாலகிருஷ்ணன் / சந்திர. பிரவீண்குமார்

 

செவ்வி: சுதா ராமலிங்கம் (தேசியத் துணைத் தலைவர்: சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம்) 

சந்திப்பு: எஸ்.கோபாலகிருஷ்ணன்

26.11.2008 அன்று இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் என்று வர்ணிக்கப்படும் மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களுள் அஜ்மல் அமீர் கசாப் என்ற ஒருவரை மட்டுமே உயிருடன் பிடிக்க முடிந்தது. கீழ் நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய பல கட்டங்களைக் கடந்து கசாபுக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. கசாபால் அனுப்பப்பட்ட கருணை மனு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் நவம்பர் 5 அன்று நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் கசாபின் மரண தண்டனை நவம்பர் 21 அன்று புனேவில் உள்ள யெரவாடா சிறையில் நிறைவேற்றப்பட்டது.

கொடிய குற்றங்கள் புரிபவர்களுக்கு மரண தண்டனை தருவதுதான் சரி என்று பலரும், எந்த வகையான குற்றத்தையும் மரண தண்டனை தடுக்காது, மரண தண்டனை என்பது சட்டத்தில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என்று சிலரும் பல ஆண்டுகளாக நடத்திவரும் விவாதம் கசாபுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் வலுப்பெற்றிருக்கிறது.

சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம் (People's Union for Civil Liberties) என்ற அமைப்பின் தேசிய துணைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சுதா ராமலிங்கத்தை இது தொடர்பில் சந்தித்துப் பேசினோம். உரையாடலிலிருந்து:

உங்கள் அமைப்பு மரண தண்டனையைச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று போராடி வருகிறது. ஆனால் பல அப்பாவி மக்களைக் கொல்வது, சிறுவர்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரணதண்டனை கொடுக்காமல் வேறென்ன செய்வது என்று பொதுமக்கள் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் மரணதண்டனை இல்லாவிட்டால் தண்டனை மீதான பயம் விலகிவிடும் என்றும் குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்துவிடும் என்றும் பலர் கருதுகிறார்கள். இவற்றுக்கு உங்கள் பதிலென்ன? 

மரண தண்டனை வழங்கப்படும் தேசங்களில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவோ மரண தண்டனையை நீக்கிவிட்ட தேசங்களில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவோ ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.

பொதுவாக சட்டப்படியான தண்டனைகள் வழங்கப்படுவது மூன்று கோட்பாடுகளின் அடிப்படையில்தான். அவை,

கசாபுக்கு வழங்கிய தூக்கு தண்டனையே கடைசியானதாக இருக்கட்டும்!

1. பழிவாங்குதல் (Retribution). கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்ற அடிப்படையில் தண்டனைகளை வழங்குவது. இது நாகரீக சமுதாயத்துக்குப் பொருந்தாத கோட்பாடு. எனவே இந்த அடிப்படையில் வழங்கப்படும் மரண தண்டனையும் ஏற்கத்தக்கதல்ல

2. தடுத்தல் (Deterrence) ஒரு குற்றத்தைச் செய்தவருக்கு வழங்கப்படும் தண்டனை மூலம் மற்றவர்களை அந்தக் குற்றத்தை செய்யாமல் தடுப்பது. மற்றவர்களைக் குற்றம் புரியாமல் தடுப்பதற்காக ஒருவரைக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது

3. சீர்திருத்தம் (Reformist) குற்றம் செய்தவரை தண்டிப்பதன் மூலம் அவரை திருத்துவது. இதுவே பொருத்தமான (Ideal) கோட்பாடு. மரண தண்டனை வழங்கிவிட்டால் சீர்திருத்தம் என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் பொறுப்பை அரசு எடுத்துக்கொள்கிறது, பாதிக்கப்பட்டவரை சாட்சியாக வைத்துக்கொண்டு அவரது நிலையில் அரசு தன்னைப் பொருத்திக்கொண்டு (getting into the shoes of the victim) குற்றம் செய்தவரைத் தண்டிக்கிறது. தனி நபர்கள் பழிக்குப் பழி வாங்கும் செயலில் ஈடுபடாமல் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. இதை வைத்துப் பார்க்கும்போது மரண தண்டனை வழங்குவது குற்றம் செய்தவரை பாதிக்கப்பட்டவர் சார்பில் பழிக்குப் பழி வாங்கும் செயலை அரசே செய்வதற்குச் சமமானதுதான். அரசுக்கு மட்டும் பழிக்குப் பழி வாங்கும் உரிமை இருக்கிறதா?

ஒருவரைக் கொன்றதற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்ட பின் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் இருப்பதாகத் தெரியவந்த நிகழ்வுகள் இருக்கின்றன,

'அரிதினும் அரிதான் சம்பவங்களுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கவேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் 'அரிதினும் அரிதான' என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்ற சரியான வரையறை இல்லை. தீர்ப்பு வழங்கும் நீதிபதி மரண தண்டனைக்கெதிரானவராக இருந்தால் அவர் எப்பேர்ப்பட்ட குற்றத்திற்கும் மரண தண்டனை வழங்குவதைத் தவிர்த்து விடுகிறார். மரண தண்டனையை ஆதரிக்கும் நீதிபதி, மரண தண்டனை வழங்குவதுதான் சரி என்று தான் நினைக்கும் குற்றங்களுக்கெல்லாம் மரண தண்டனை வழங்கிவிடுகிறார்.' என்று, நேற்றைய நாளிதழ்களில் வெளியான உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது சட்ட அமைப்பு 100% பாதுகாப்பானது அல்ல என்பதையே இது வலியுறுத்துகிறது.

சரி. ஆனால் கசாப் போல் வெளிநாடுகளில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த குற்றவாளிகளை சிறையில் வைத்துப் பாதுகாத்து வந்தால், அவரை விடுவிக்கக் கோரி நம் நாட்டின் முக்கியமான நபர்களையோ, அல்லது பயணிகள் விமானங்களையோ கடத்திவைத்துக்கொள்ளும் சம்பவங்கள் முன்பு நடந்திருக்கின்றனவே, அந்தப் பின்னணியில் மரண தண்டனை வழங்கிவிடுவது சரிதான் என்று சிலர் வாதிடுகிறார்களே?

ஐயங்களும் அனுமானங்களும் (ifs and buts) அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இருக்கத்தான் செய்யும். அவற்றை விவாதித்துதான் தீர்வுகாண வேண்டும்.

தீவிரவாதம் ஒழிந்துவிட்டால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இடமில்லை. எனவே தீவிரவாதத்தை ஒழிப்பது பற்றித்தான் நாம் விவாதிக்க வேண்டும். தீவிரவாதித்தை ஒழிப்பது என்பது தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அனைவரையும் கொல்வது அல்ல. தீவிரவாதத்தின் வேர்களைக் களைவது.

அரசின் மீதும் நாட்டின் மீதும் நம்பிக்கை இழந்தவர்கள் இவற்றால் வஞ்சிக்கப்பட்டதாகக் கருதுபவர்கள் தீவிரவாதத்தின் பால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும், பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. முறையான பேச்சுவார்த்தைதான் தீவிரவாதிகள் உருவாகாமல் இருப்பதைத் தடுக்க முடியும்.

கசாபுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில் வழக்கத்துக்கு மாறான அவசர நிலை இருந்திருக்கிறது, பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர சில கட்சிகள் முயற்சித்துவரும் வேளையில், மரண தண்டனையை ஆதரிக்கும் கட்சிகளையும், பெரும்பான்மை மக்களையும் உணர்ச்சிபூர்வமாகக் கவரும் முயற்சியே இது என்று சிலர் கருதுகிறார்கள். இதைப் பற்றிய உங்கள் கருத்து?

இந்த முடிவிக்கு அரசியல் பின்னணி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஊகங்களின் அடிப்படையில் பேசக் கூடாது.

ஆனால் பகத் சிங்குக்குத் தூக்கு அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பின் இவ்வளவு விரைவாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது இப்போதுதான். இதன் மூலம் கசாபை பகத் சிங்குக்கு இணையாகப் பேசக்கூடிய நிலை வந்துவிடுமோ என்ற கவலைதான் மிஞ்சுகிறது.

மரண தண்டனை ஒரு சட்டபூர்வமான கட்டளை (Legal mandate) என்ற வாதம் ஒருபுறம். ஆனால் கசாபுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சில மக்கள் தண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்துக்கே சென்று இனிப்பு வழங்கி, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது மிகவும் கேவலமான காட்டுமிராண்டித்தனமான செயல் என்றுதான் சொல்வேன்.

கோயம்புத்தூரில் சிறுமிகளை வன்புணர்ச்சி செய்து கொன்றவரை போலிசார் தீபாவளி முடிந்து சில நாட்களில் என்கவுண்டர் செய்தனர். 'இன்றுதான் எஙகளுக்கு உண்மையான தீபாவளி' என்று அந்தப் பகுதியில் வாழும் சிலர் தெரிவித்தார்கள்,

இதுபோன்ற சிந்தனைகளை வளர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஒருவர் மரணத்தைக் கொண்டாடுவதை எக்காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது.

கசாப் செய்த தவறுக்காக அவரைக் கொல்வதும் தவறுதான். இதற்காக நாம் வருந்த முடியாவிட்டாலும் மகிழ்ச்சி அடைவதையாவது தவிர்க்க வேண்டும்.

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீகளா?

கசாபுக்கு வழங்கப்பட்ட தண்டனை இந்தியாவில் நிறைவேற்றப்பட கடைசி மரண தண்டனையாக இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

***

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த தண்டனை தரப்பட வேண்டும்!

நா.சடகோபன் (ஆர்.எஸ்.எஸ். தமிழக மாநில செயற்குழு உறுப்பினர் வட தமிழ்நாடு)

சந்திப்பு: சந்திர. பிரவீண்குமார்

மரண தண்டனை குறித்து தங்களது கருத்து?

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை தருவது நமது நாட்டில் பாரம்பரியமாக நடைபெறுவதுதான். அதை இலக்கியங்களும்கூட ஆதரித்திருக்கின்றன.

'கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர்'

என்று சொல்கிறார் திருவள்ளுவர். இதிகாசங்களில்கூட கொடுங்குற்றம் செய்தவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மரணதண்டனை மட்டுமல்ல, அனைத்துத் தவறுகளுக்கும் அதற்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களிடம் சமுதாயத்தில் தங்களுக்குரிய பாதுகாப்பு குறித்த நம்பிக்கை ஏற்படும்.

ஆனால் தற்போதைய நவீன காலத்தில் இது தேவைதானா என்று கேட்கிறார்களே?

சில நாடுகளில் சாதாரண குற்றங்களுக்குக்கூட கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. அதனால் அங்கு தவறு செய்யத் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும் நமது நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் நீதித்துறையில் நிலவும் ஊழல்களால் தவறு செய்தவர்கள் தப்பித்துவிடும் போக்குகள் காணப்படுகின்றன. அப்படியும் ஒரு சில பேருக்கே தண்டனை தரப்படுகிறது. அதையும் நீக்கிவிட்டால் எளிய மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிடும்.

சமீபத்தில் ஐ.நா. சபையில் நடந்த மரண தண்டனைக்கு எதிரான ஓட்டெடுப்பில் 110 நாடுகள் மரண தண்டனை வேண்டாம் என்று வாக்களித்திருக்கின்றன. அந்த நாடுகள் சட்டத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்று சொல்கிறீர்களா?

அந்த நாடுகளில் மரணதண்டனை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தவறு செய்பவர்களை அவர்கள் தண்டிக்கும் முறை கடுமையாக இருக்கின்றன. அதனால் அங்குள்ள மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் நமது நாடு ஜனநாயக நாடு. அதைப் போன்ற தண்டனைகளை இங்கே தர முடியாது. அப்படியிருக்க, மரண தண்டனையும் வேண்டாம் என்றால் இன்னும் குற்றங்கள் அதிகமாகிவிடும்.

சமீபத்தில் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை விதித்தால் கசாப் போன்றவர்கள் உருவாகுவது குறைந்துவிடுமா?

கசாப் போன்ற மனிதர்கள் எல்லாக் காலத்திலும் உருவாகவே செய்வார்கள். அது தவிர்க்க முடியாதது. மரண தண்டனைகள் மக்களிடையே பாதுகாப்புக் குறித்த அச்சத்தை நீக்குகின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை தரப்பட்டுவிட்டது என்ற நிம்மதி அவர்களுக்கு ஏற்படும்.

ஐ.நா. தீர்மானத்தை 39 நாடுகள் ஆதரித்திருக்கின்றன. அவற்றுள் பல நாடுகள் ஆதிக்க மனப்பான்மை கொண்ட நாடுகள். அந்த பட்டியலில் இந்தியாவும் சேர வேண்டுமா?

ஒவ்வொரு நாடும் அந்த நாட்டின் போக்கை மனதில் வைத்து முடிவு எடுத்திருக்கின்றன. நமது நாடு இங்குள்ள போக்கை முன்வைத்து முடிவெடுத்திருக்கிறது. ஈரான் போன்ற நாடுகளில் மரண தண்டனை கடுமையான முறையில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் நாம் பல்வேறு விசாரணைக்குப் பிறகே மரண தண்டனை தருகிறோம். அதற்குப் பிறகும்கூட பல மேல்முறையீடுகளை வைத்திருக்கிறோம். அதனால் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட முடியாது.

என்னதான் விசாரணை நடந்தாலும் தீர்ப்பைத் தரும் நேரத்தில் நீதிபதிக்கு ஏற்படும் மனநிலையே மரண தண்டனையை முடிவு செய்வதாக ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளாரே? தனிப்பட்ட மனிதரின் எண்ணத்தை அரசாங்கம் பிரதிபலிக்க வேண்டுமா?

தீர்ப்பைத் தனிப்பட்ட மனநிலையில் தரக்கூடாது. உணர்ச்சிவசப்படக் கூடாது. தவறைப் பொறுத்துதான் தண்டனை வழங்கப்பட வேண்டும். தண்டனை வழங்கப்படுவதில் ஆண், பெண் பாகுபாடு கூடாது. அதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். அப்படியும் தவறான தண்டனை வழங்கப்பட்டுவிட்டால் அதை மேல்முறையீடு செய்ய முடியும். ஜனாதிபதியிடம் கருணை மனு தர முடியும். அப்படி பல மரண தண்டனைகள் நம் நாட்டில் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தனிப்பட்டவரின் கருத்து நிறைவேற்றப்பட்டுவிடும் என்று கூறிவிட முடியாது. நன்கு ஆராய்ந்த பிறகே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

அரிதினும் அரிதான (Rare of the rarest) சூழ்நிலையில்தான் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து குறித்து?

ஒரு சில நாடுகளைப் போல நமது நாட்டில் அடிக்கடி மரணதண்டனை தரப்படுவதில்லை. இப்போதே நம் நாட்டில் எப்போதாவது ஒருமுறைதான் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. அதிலும் தண்டனையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றனவே.

கசாப்புக்கு மரண தண்டனை தந்து அதை நிறைவேற்ற இவ்வளவு காலம் தேவைதானா? குற்றவாளியை நீண்ட காலத்திற்குச் சிறையில் வைத்திருப்பதால் ஏற்படும் செலவையாவது குறைக்கலாமே?

ஒரு விஷயத்தை நினைவுப்படுத்துகிறேன். இது ஜனநாயக நாடு. இங்கு தண்டனை தந்தவுடன் அதை நிறைவேற்றுவதற்கு காலம் வீணடிக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்த காலத்தில்தான் மேல் முறையீடு, ஜனாதிபதிக்கு கருணை மனு போன்ற விஷயங்களால் அந்த காலதாமதம் ஏற்படுகிறது. இங்கே உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்றிவிட முடியாது.

கசாப்பைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் சீக்கிரமாக விசாரணை முடித்து தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதை வைத்து காங்கிரஸ் ஏதாவது ஆதாயம் அடையுமா?

நிச்சயமாக ஆதாயம் அடைய முயற்சிக்கும். ஆனால் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு இன்னும் அப்சல் குருவை தூக்கிலிடவில்லை. இத்தனைக்கும் அப்சல் குரு கைது செய்யப்பட்டு எட்டு வருடங்கள் கழித்துதான் கசாப் கைது செய்யப்பட்டார். கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். அவரைக் கைது செய்தால் ஆர்ப்பாட்டம் நடத்த இந்தியாவில் பாகிஸ்தானியர் யாரும் இல்லை. ஆனால் அப்சல் குருவைத் தூக்கில் போட்டால் குறிப்பிட்ட பிரிவினருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று நினைக்கிறது. கசாப்பைத் தூக்கில் போட்டதால் பயங்கரவாதத்தை நசுக்கிவிட்டதாகத் தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்.

11/24/2012 2:42:45 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்