Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

யுத்தமே சமாதானம் - அடிமைத்தனமே சுதந்திரம் - அறியாமையே பலம்

<p>யுத்தமே சமாதானம் - அடிமைத்தனமே சுதந்திரம் - அறியாமையே பலம்</p>
மு.திருநாவுக்கரசு

 

அரசியல் யாப்பு டொனமூர் முதல் சிறிசேனா வரை (1931-2016)

முடிவுரை:

ஈழத்தமிழரின் வரலாற்றில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான கால போராட்டத்தில் ஏற்பட்ட தொடர் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டியது முதற்கண் அவசியமான பணியாகும்.

புவிசார் அரசியல் பிரச்சினையினதும், சர்வதேச அரசியல் தேவைகளினதும் வெளிப்பாடாய் இலங்கையின் இனப்பிரச்சனை அமைந்து செல்லும் துயரத்தை தமிழ்த் தரப்பினர் பல பத்தாண்டுக் கணக்கான காலமாய் கருத்தில் எடுக்கத் தவறிய அறிவியல் வெற்றிடத்தில் தொடர் தோல்விகளுக்கான களம் அமைந்திருந்தது. இவற்றின் வெளிப்பாடாக இலங்கையின் அரசியல் யாப்புக்கள் உருவாகியமையும் நிகழ்ந்தேறின. இந்நிலையில் கடந்த காலத்தை சரிவர திரும்பிப் பார்த்து புதிய காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பொருத்தமாக சிந்திக்க வேண்டிய அறிவியல் சார்ந்த பக்கம் மிகவும் கவனத்திற்குரியது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குற்றத்துக்குள் சிக்குண்டு, சர்வதேச அரசியலில் மீளமுடியாத நிலையில் காணப்பட்ட இலங்கை அரசை இன்றைய சிங்களத் தலைவர்கள் மீட்டெடுத்திருக்கும் விதமும் அதற்கு யுத்தத்தால் அழிவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ்த் தரப்பையே பயன்படுத்தி வெற்றி பெற்ற சாமர்த்தியமும், போர்க்குற்ற விசாரணையில் இருந்து குற்றம் புரிந்தவர்களையும் கூடவே பாதுகாத்திருக்கும் விதமும் உலகளாவிய இராஜதந்திர வரலாற்றில் தனி முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமாகும்.

சர்வதேச தலைவர்களினதும், தமிழ்த் தரப்பினரதும் கண்ணுக்குள் மண்ணைத்தூவி தாம் தப்பித்துக்கொண்ட விதத்தில் சிங்கள இராஜதந்திரம் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கிறது.

இத்தகைய வெற்றியைத் தொடர்ந்து இன அழிப்பை இலகுவாக நிறைவேற்ற ஏதுவான இனக் கபளீகரக் கொள்கையை (Policy of Assimilination) மிகத் திறமையாகத் திட்டமிட்டு அதை சர்வதேச சமூகத்தினதும், தமிழ்த் தரப்பினரதும் அனுசரணையுடன் நிறைவேற்றும் முயற்சியில் சிங்கள அரசாங்கம் திறமையுடன் செயற்பட்டு வருகிறது.

இந்த இனக்கபளீகரக் கொள்கையை முள்ளிவாய்க்கால் யுத்தம் - 3 என அழைக்கலாம். இராணுவ வழியிலான இன அழிப்பு கண்ணுக்குத் தெரியக்கூடிய, இரத்தம் தோய்ந்த, அபகீர்த்திக்குரிய ஒன்றாய் அமையும் அதேவேளை, இந்த இனக் கபளீகர வழியிலான இன அழிப்பானது தோலிருக்க சுளை பிடுங்கும் அதி நுணுக்கமான வித்தையைக் கொண்டதாய் அமைகிறது.

<p>யுத்தமே சமாதானம் - அடிமைத்தனமே சுதந்திரம் - அறியாமையே பலம்</p>

காலனிய ஆதிக்க ஆரம்ப காலத்திலிருந்தே இலங்கைத் தீவை பிரித்தானியர் தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது இலங்கையில் தாம் பெறத்தக்க பொருளாதார வளங்களுக்காக அல்ல. அதற்கப்பால் இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காகவும், பரந்த இந்து சமுத்திரத்தில் தமது ஆதிக்க நலன்களைப் பேணுவதற்காகவுமான கேந்திரத் தளமாக, இலங்கையை பிரித்தானியர் கருதினர்.

ஆரம்பத்தில் பிரித்தானியர் தமிழர்களை அரவணைத்து இலங்கையை ஆளவும், அதன் மூலம் இலங்கையைக் கேந்திரமாகக் கொண்டு இந்தியாவின் மீது ஆதிக்கம் புரிவதற்குமான கொள்கையைக் கொண்டிருந்தனர். ஆனால் 1920களிலிருந்து ஈழத் தமிழர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவும், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தம்மை இணைத்துக் கொண்டும் செயல்பட்டதனால், இலங்கைக்கான பிரித்தானியரின் காலனிய ஆதிக்கக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக சிங்களவர்களை அரவணைத்து தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான அரசியல் நிலைப்பாட்டை மேற்கொண்டனர். இக்கொள்கை மாற்றத்தின் விளைவாக சிங்களவர்களை அரவணைப்பதற்காக தமிழர்களுக்கு எதிரான அரசியல் யாப்புக்களை உருவாக்கும் மரபு 1931ஆம் ஆண்டு இலங்கையில் டொனமூர் யாப்புடன் தெளிவாகத் தோற்றம் பெற்றது.

இந்தப் புவிசார் அரசியல் சார்ந்த நிலைப்பாடுதான் தமிழர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறாய் விழுந்தது. இதன் தொடர்ச்சியாக ஈழத் தமிழரை இந்தியாவுடன் தொடர்புபடுத்தியே அனைத்து உலக நாடுகளும் சிந்திக்கும் நிலை உருவானது. ஆதலால் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நாட்டினது நிலைப்பாடும் ஈழத்தமிழருக்கும் எதிரான நிலைப்பாடாக வடிவம் பெற்றது. இந்த யதார்த்தத்தை சிங்களத் தலைவர்கள் சரிவரப் புரிந்து, வரலாற்று ரீதியான இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான தமது அரசியலை ஈழத்தமிழருக்கு எதிரான அரசியல் யாப்புகள் மூலம் முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.

இதன்படி இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் நிலைப்பாட்டோடு சிங்களத் தலைவர்கள் தமது நலன்களையும் இணைத்து தமிழருக்கு எதிரான அரசியலை உலக அளவில் முன்னெடுத்து வருகின்றனர். இது காலம் காலமாய் இலங்கையின் அனைத்து யாப்புகளிலும் பிரதிபலிக்கிறது.

21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய உபகண்டத்தில் சீனா நுழையத் தொடங்கியபோது, அதனையும் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்கும் எதிரான சக்தியாக பயன்படுத்திக் கொண்டனர். அக்காலக் கட்டத்தில் சீனாவின் பிரவேசம் மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் பாதகமாக அமைந்ததால் இருவருக்கும் சீனா பொது எதிரியாக அமைந்தது.

2009, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் சிங்கள அரசுக்கு சீனா பக்கபலமாக இருந்ததன் விளைவாக, யுத்த வெற்றியின் பின்பு சீனா இலங்கையில் மேலும் பலமடையத் தொடங்கியது. அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து, ஈழத் தமிழரைப் பயன்படுத்தி இலங்கையில் ராஜபக்ஷவை அகற்றி ஆட்சி மாற்றத்தைச் செய்ததன் மூலம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பாதகமான சீனாவை இலங்கையிலிருந்து பின் தள்ளுவது குறிப்பிடத்தக்க அளவு சாத்தியப்பட்டுள்ளது. இந்த சாத்தியப்பாட்டை தொடர்ந்து பேணுவதற்கு ஏற்பவும் இன்றைய சிங்கள அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கும் தேவையான அளவே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வைப் பற்றி மேற்குலகம் பேசும்.

இச்சூழலில் மேற்குலகின் பூகோள நலனும், இந்தியாவின் பிராந்திய நலனும் ஒன்றிணையும் ஒரு தற்காலிகப் புள்ளி காணப்படுகிறது. அந்தப் புள்ளியை பாதுகாக்கும் அளவுக்கே புதிய அரசியல் யாப்பில் தமிழருக்கான தீர்வு முன் வைக்கப்படும். பதவியிலிருக்கும் சிங்களத் தலைவர்களுக்கு, பூகோளம் தழுவிய இந்தப் பிராந்தியம் சார்ந்த புவிசார் அரசியல் யதார்த்தம் நன்கு புரியும் என்பதால், தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைப்பதில் தமது ஆட்சிக்கு நெருக்கடி இருக்கின்றது என்பதைப் பெரிதுபடுத்திக் காட்டி அதன் மூலம் மேற்படி அரசுகளின் ஆதரவுடன் தமிழ் மக்களுக்கான தீர்வை அற்பமாகச் சுருக்கி தம் இலக்கை அடைந்திடுவர்.

ஈழத் தமிழரின் பாதுகாப்பிலேயே இந்தியாவின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது என்கிற உண்மையை இந்தியா உணரும் முன்பே ஈழத்தமிழர் இலங்கைத் தீவிலிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு விடுவார்களோ என்கிற அச்சமும் மனதில் எழுகிறது.

இவ்வாறு டொனமூர் காலத்திலிருந்து சிறிசேன காலம் வரையிலும் காணப்படும் பூகோள-பிராந்திய புவிசார் நலன்களின் பின்னணியில் தமிழரின் நலன்கள் பலியிடப்பட்டு அதற்கேற்ப அரசியல் யாப்புக்கள் உருவாக்கப்படும் மரபு இனியும் தொடரும் என்பதைத் தமிழ் மக்கள் பெரிதும் கருத்தில் கொள்ளவேண்டும்.

தன்னை ஒரு 'Pragmatist ' என்றும், தேவை ஏற்படும்போது, தான் 'பிசாசுடன் கூட' கூட்டுச் சேருவேன் என்றும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்பு குறிப்பிட்டிருந்தார். இது இன்றுவரை அனைத்து சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இதையே இன்றைய ஆட்சியாளர்களும் சர்வதேச உறவைக் கையாள்வதில் பின்பற்றுகின்றனர். இதில் அவ்வப்போதைய நடைமுறைக்கேற்ப தமது நீண்டகால எதிரியை தற்காலிக நண்பனாகக் கையாளவும், தற்காலிக நெருக்கடிகளைக் கடந்த பின்பு, தற்காலிக நண்பர்களின் காலை வாரிவிட்டு தங்களது நீண்டகால நோக்கினை அடையவும் அவர்களால் முடியும். தற்காலிக அணைப்பிலும் கூட தமது நீண்டகால நலன்களைப் பலியிடாத சாமர்த்தியம் அவர்களிடம் உண்டு.

ஈழத் தமிழரை ஒடுக்க தற்காலிகமாக இந்தியாவைத் திருப்திப்படுத்துவது, தமிழரை நிரந்தரமாக ஒழித்து இந்தியாவுக்கு இலங்கையில் காலூன்ற இடமின்றிச் செய்வது என்கிற மூலோபாயத்துடன் சிங்களத் தலைவர்கள் செயற்படுகின்றனர்.

சிங்களத் தலைவர்கள் இத்தகைய திறனுடன் தற்போது காணப்படும் புவிசார் அரசியல் எதார்த்துக்குப் பொருத்தமானதும், தமக்குச் சாதகமானதுமான சர்வதேச சக்திகளைக் கையாள்வதன் மூலம் தமிழர்களுக்கான தீர்வை மேலும் குறுகத் தறிக்கப் போகிறார்கள் எனத் தெரிகிறது.

ராணுவ பலத்தால் ஒரு நாட்டைக் கைப்பற்ற முடியுமேயானாலும் அந்த மக்களின் ஆதரவின்றி ஒரு நிமிடமும் அங்கு ஆட்சியை நிலைநிறுத்த முடியாது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் தனக்கு அருகிலிருக்கும் கியூபாவை பலம் வாய்ந்த அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது இருந்தமை இதற்கு நல்ல உதாரணமாகும். இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டால் இந்தியாவின் நிலைமையும் இதுவேயாகும்.

புவிசார் அரசியல் பிரச்சனையின் வெளிப்பாடே இலங்கையின் இனப்பிரச்சனை என்பதால் புவிசார் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது. ஆதலால் புவிசார் அரசியல் பிரச்சனையின் தீர்வுடன் இணைக்கப்பட்டதாகவே ஈழத் தமிழருக்கான தீர்வு இந்நூலில் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெவர்த்தன பிரகடனப்படுத்திய 'தார்மீக அரசாங்கம்'  (தர்மிஷ்ட-தர்மம் நிறைந்த அரசாங்கம்) என்ற கொள்கையும், 1995 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் முன்வைத்த 'சமாதானத்திற்கான யுத்தம்' (War for Peace) என்ற கொள்கையும், இன்றைய சிறிசேன-ரணில் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கும் 'நல்லாட்சி அரசாங்கம்', 'இன நல்லிணக்கம்' என்ற கொள்கைகளும், 1947ஆம் ஆண்டு ஜோர்ஜ் ஓவல் (George Orwell) எழுதிய Nineteen Eighty-Four – Or 1984 என்ற நவீனத்தில் வரும் பின்வரும் தீர்க்க தரிசனம் மிக்க வரிகளை, இலங்கையின் தற்கால அரசியலில் மெய்ப்பித்து நிற்கின்றது.

யுத்தமே சமாதானம் - War is Peace

அடிமைத்தனமே சுதந்திரம் - Freedom is Slavery

அறியாமையே பலம் - Ignorance is strength

ஜோர்ஜ் ஓவலுக்கு நன்றி.

***

(கட்டுரைத் தொடர் நிறைவடைந்தது)

10/28/2016 12:30:09 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்