Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

என்.சரவணனின் இருநூல்கள் - அறிமுகக் கருத்துரைகளின் தொகுப்பு!

என்.சரவணனின் இருநூல்கள் - அறிமுகக் கருத்துரைகளின் தொகுப்பு!
ரூபன் சிவராஜா

 

கடந்த பகுதியில் 'கண்டி கலவரம்' நூல் பற்றியதும் சரவணன் பற்றியதுமான எனது குறிப்புகளைப் பகிர்ந்திருந்தேன். இந்தப்பதிவில் நூல்களின் அறிமுக நிகழ்வில் உரையாற்றியவர்களின் கருத்துரைகளின் சாராம்சத் தொகுப்பினை பகிர்கிறேன்.

நூல் அறிமுகவிழாவில், கலாநிதி சர்வேந்திரா, ஊடகவியலாளர் பர்ஸான் பசீர் ஆகியோர் கண்டிக் கலவரம் நூல் பற்றியும், கவிஞரும் எழுத்தாளருமான கவிதா லட்சுமி, ஊடகவியலாளர் ராஜன் செல்லையா ஆகியோர் 'அறிந்தவர்களும் அறியாதவைகளும்' பற்றிய அறிமுக-விமர்சன உரைகளை ஆற்றியிருந்தனர். அவர்களின் கருத்துரைகளோடு சரவணனின் ஏற்புரையிலிருந்தும் தொகுக்கப்பட்ட கருத்துகள் இந்தப்பதிவில் தொகுக்கப்படுகின்றது.

கலாநிதி சர்வேந்திரா 

தகவல்களும், ஆதாரத்தரவுகளும் இந்நூலின் பலம். நாம் அறியாத, எமக்குத் தெரிந்திராத எங்களுக்குக் கீழ் புதைந்து கிடக்கும் தகவல்களைக் கிண்டியெடுத்து சமூகத்திற்கு கையளிக்கிறார். அவருடைய தமிழ், சிங்களம், ஆங்கிலமாகிய மும்மொழி ஆளுமை இந்தப் பணிக்குப் பெரும் துணைநிற்கிறது என்றார் கலாநிதி சர்வேந்திரா.

அவருடைய கருத்துரையின் சாரம் பின்வருமாறு அமைந்திருந்தது:

1915 - கண்டிக் கலவரம் ஏன் ஏற்பட்டது. அதற்கான அரசியல் பின்னணி, கலவரம் எவ்வாறு அரங்கேறியது, கலவரத்தின் விளைவுகள் எவை என்பதான முழுமையான வரலாற்றுப் பார்வையை இந்நூல் பதிவுசெய்திருக்கின்றது. கிட்டத்தட்ட நூலின் மூன்றில் ஒரு பகுதி நேரடியாகக் கலவரத்திற்குள் செல்லவில்லை. எவ்வாறு பவுத்த சிங்கள பேரினவாதம் வளர்ச்சி பெற்றது, எவ்வாறு ஏனைய இனங்களுக்கு எதிரான வெறுப்புணர்வாக வளர்த்துச் செல்லப்பட்டதென்ற பின்னணி 17 வரையான கட்டுரைகளினூடாகப் பேசப்படுகின்றது. அதாவது கலவரம் நிகழ்வதற்கான வரலாற்று பூர்வமான சூழமைவுப் பின்னணிக்கான தகவல்களைத் தருகின்றது முதற்பகுதி.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வின் மூலங்களில் ஒன்றாக வர்த்தகப் போட்டி இருந்திருக்கிறது. கலவரம் பற்றிய நேரடி விடயங்கள், விபரிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவு. கலவரத்திற்குப் பின்னர் கலவரம் தொடர்பாக நடந்த நிகழ்வுகள் நீண்ட பகுதியில் பதிவாகியிருக்கின்றது.

பௌத்த மறுமலர்ச்சியின் காலகட்டங்கள், சம்பவங்கள், குறிப்புகள் உள்ளன. பஞ்சமா விவாதங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. (கத்தோலிக்க குருமார்களுக்கும் பௌத்த மதத் தலைவர்களுக்குமிடையில் நடைபெற்ற ஐவகை விவாதங்கள்). மதுஒழிப்பு, மாமிசம் உண்ணாமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பிரச்சார செயற்பாடுகள் பதிவாகியிருக்கின்றன.

என்.சரவணனின் இருநூல்கள் - அறிமுகக் கருத்துரைகளின் தொகுப்பு!

பௌத்த மறுமலர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள் பற்றிய தகவல்கள், மற்றும் அது சார்ந்த வரலாற்று நிகழ்வுகள் விபரிக்கப்பட்டுள்ளன. கேணல் ஒல்கொட்ட, அநாகரிக தர்மபால போன்ற பௌத்த சிங்கள இனவாதத்தை நிறுவனமயப்படுத்திய தலைவர்கள் பற்றிய விரிவான தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

அக்கால அரசியலை மனக்கண்களில் கொண்டுவந்து நிறுத்தும் வகையில் விபரமான, விரிவான தகவல்களை ஆதரங்களோடு சரவணன் பதிவு செய்திருக்கின்றார்.

1915 மே 28 வெசாக் அன்று கலவரம் வெடிக்கிறது. ஜூன் 2ம் திகதி இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. ஓகஸ்ட் 30 வரையான 100 நாள் இராணுவச் சட்ட காலகட்டத்தில் மிக மோசமான கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இதில் பழிவாங்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் சிங்கள பௌத்த தேசியவாதிகள்.

பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியில் அரசியல் நோக்கங்களுக்காக சிங்களத் தலைவர்கள் பலர் மிகக் கொடூரமான முறைகளில் பழிவாங்கப்பட்டனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காக கப்பலில் பிரித்தானியா சென்று வாதாடி அவர்களை விடுவித்தவர் சேர் பொன்.இராமநாதன்.

கலவரம் இடம்பெற்ற காலம், முதலாம் உலகப் போரின் காலகட்டம் என்பதால் இந்தக் கலவரம் பிரிட்டீஸ் கொலனி ஆட்சிக்கு எதிரானது என்றும், இதற்குப் பின்னால் ஜேர்மன் அரசின் சதி இருக்கக்கூடுமென்ற ஆட்சியாளர்களின் கருதுகோள் இந்தப் பழிவாங்கல்களுக்கு காரணமாகின. தவிர அநாகரிக தர்மபால உட்பட்ட பௌத்த சிங்கள தேசியவாதத்தை தூண்டி வளர்த்தவர்கள் அந்நிய ஆட்சிக்கு எதிரான கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தமையும் மற்றொரு காரணமாகும்.

கலவரத்தை வைத்து பௌத்த சிங்கள தேசியவாதிகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் இராணுவச்சட்டம் கொண்டுவரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்டனர். உரிய விசாரணைகளின்றி இராணுவ நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.

'எட்வேட் ஹென்றி பேதிரிஸ்' பற்றிய ஒரு கதை. திரைப்படமாகவோ நாடகமாகவோ ஆக்கக்கூடியது. அந்தக் கதையில் இருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டே அந்த கதையை திரைப்பட அல்லது நாடக முயற்சியைச் செய்யமுடியும். கொலனித்துவ ஆட்சிபீடத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட எட்வேட் ஹென்றி பேதிரிஸ் பற்றிய கதை.

சேர்.பொன் இராமநாதன் முஸ்லிம்களின் இனத்துவ அடையாளத்தை நிராகரித்தவர். ஆனால் கண்டினக் கலவர சம்பவங்களிலும் அதற்குப் பின்னரும் அவர் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சான்றுகளும் இல்லை, எனவே அத்தகைய குற்றச்சாட்டுக்கு அவரை உள்ளாக்குவது ஏற்புடையதில்லை என்பதைப் பதிவு செய்திருக்கின்றார். சில இடங்களில் ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். சிங்களத் தலைவர்களுக்கு நடந்த கொடூரங்களை உள்ளபடி பதிவுசெய்துள்ளார். இதன் மூலம் சரவணனின் அறிவியல் நேர்மை வெளிப்படுகிறது. கலவரம் தொடர்பான ஒரு முழுமையான பார்வைப் பரிமாணத்தை இந்நூல் நூல் தருகிறது.

இந்நூலின் மற்றுமொரு சிறப்பு தகவல்களை ஒழுங்கு படுத்திக் கொடுக்கும் முறை.

அதேவேளை தகவல்களைச் சுருக்குதலும் (Data Reduction) இத்தகைய நூல்களுக்கு முக்கியமானது. விபரணநூலுக்குரிய தன்மை அதிகமுள்ளது. நிலைமைகளை அலசுகின்ற அணுகுமுறை குறைவாகவுள்ளது. ஆய்வுசெய்கிற அணுகுமுறை இன்னும் கூடுதலாக அமைந்திருப்பின் மேலும் சிறப்பாக இந்நூல் வந்திருக்கும்.

இக்கட்டுரைகளை நூலாகத் தொகுக்கும் போது, கோட்பாட்டு ரீதியான விடயங்களை இன்னும் ஆழமாக விவாதித்திருக்கலாம். உதாரணமாக 'கலவரம்', 'இனவாதம்', 'தேசியவாதம்', 'பாசிசம்' போன்றவற்றின் வரையறை, வரைவிலக்கணம் பற்றிய கோட்பாட்டு விளக்கங்கள், விவாதங்களை மேற்கொண்டிருக்கலாம்.

ஊடகவியலாளர் பர்ஸான் பசீர் 

இது ஒரு முக்கிய வரலாற்றுத் தொகுப்பு. வாசகர் மத்தியில் புதிய சிந்தனைக்கும் அறிதலுக்கும் தேடலுக்கும் வழிகோலும் நூலாக அமைந்துள்ளது.

ஓலைச்சுவடிகளிலிருந்து பழைய பத்திரிகைகள், தகவல்களை, அதிலும் குறிப்பாகச் சிங்களம் சார்ந்த தகவல்களைத் தமிழர் ஒருவர் தேட முற்படும்போது எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள், சவால்களை ஒரு ஊடகவியலாளனாக நான் அறிவேன். அதிலும் தகவல்கள் உரியமுறையில் கணினி மயப்படுத்தப்படாத இலங்கை போன்ற நாடுகளில் தகவல் திரட்டும் முயற்சியில் ஏற்படும் சிரமங்கள் அதிகம். பௌத்த மதம் நிறுவனமயமாக்கப்பட்ட நிலை தோற்றுவிக்கப்பட்ட பின்னணியை இந்நூலின் முதற்பகுதி நேர்த்தியாகச் சித்தரிக்கின்றது.

சித்தாந்தத்திற்குள் மறைந்துள்ள அதிகாரம் பௌத்த மயப்பட்ட சித்தாந்த உருவாக்கத்தின் உள்ளார்ந்த பரிமாணத்தை இந்நூல் ஆழமாக வெளிப்படுத்துகின்றது. கொலனித்துவத்திற்கு எதிராகவோ, எந்தவொரு போராட்டத்தை உருவாக்கவோ அதற்கான ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி வைத்துள்ளது சிங்கள பெருந்தேசியவாதம். பலநூறு வருடங்களுக்கு முன்னரிருந்தே அத்தகையை நிறுவனமயப்படுத்தலை அது கொண்டிருப்பதை சிறுபான்மையினத்தவராகிய நாம் கண்டுகொள்ளவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

கலவரம் பற்றிய பகுதி, நேரடிச் சம்பவங்களுக்கான பகுதி சுருக்கமாக இடம்பெற்றுள்ளது. கலவரத்திற்கு முன்னான பின்னணியும், கலவரத்திற்குப் பின்னான விசாரணை, இராணுவச் சட்டம், அது சார்ந்த நிகழ்வுகள் கூடுதல் விபரிப்புகளுடன் இடம்பெற்றுள்ளன.

சித்தாந்த மயப்பட்ட போக்கும் சிந்தனையும் மக்களைக் கலவரங்களுக்குத் தூண்டுகிறது. மதவாதத்தை உசுப்பிவிடும் போக்கினை இன்றும் காண்கிறோம். அதே போல் கண்டிக் கல-வரத்திற்குப் பின்னரான இராணுவச் சட்டம் மற்றும் விசாரணை அணுகுமுறையின் தொடர்ச்சியை, அதே போக்கினை சமகால விசாரணை அணுகுமுறை மற்றும் பரிகார நீதி சார்ந்த அணுகுமுறைகளிலும் அவதானிக்க முடிகிறது.

அறிந்தவர்களும் அறியாதவைகளும் - கொலனித்துவ இலங்கையில் செல்வாக்குச் செலுத்திய ஆளுமைகள் பற்றிய வரலாற்றுப்பதிவு!

ராஜன் செல்லையா

25 ஆளுமைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், சுவாரஸ்யமான தகவல்களோடு விபரிக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள 24 பேர் மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டும் இலங்கையைச் சேர்ந்தவர். கொலனித்துவ நாடுகளிலிருந்து சென்று இலங்கையில் தங்கியிருந்தவர்கள், கொலனித்துவ இலங்கையில் அதிகாரத்தில் இருந்தவர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இதில் அடங்குகின்றனர்.

சரவணன், இலங்கை வரலாறு பற்றிய ஆழமான வாசிப்பு அனுபவமுள்ளவர். முழு இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பான ஈடுபாடுடையவர். சிங்களப் பகுதிகளின் வரலாற்றுக்கூறுகளை அறிந்திருப்பவர். சமூகக் கட்டமைப்புகள் பற்றிய புடம்போடப்பட்ட அறிவு அவருக்கு இருக்கின்றது. இந்நூலில் 25 ஆளுமைகள் பற்றிய தனித்தனிப் பதிவுகள் இருப்பினும் சிறியதும் பெரியதுமாக 200க்கு மேற்பட்டவர்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுப் படிப்பினை என்பது, மனித வாழ்வின் மேம்பாட்டிற்கானது. கற்றுக் கொண்ட பாடங்கள் எங்களை வழிநடத்துகின்றன. அனுபவங்களும் பாடுகளும் நாம் கடந்துவந்த பாதைகளும் எம்முன்னுள்ள பாதையைச் செப்பனிட உறுதுணையாக உள்ளன.

கொலனித்துவ ஆட்சிக்காலத்தில் செல்வாக்குச் செலுத்திய நபர்களின் வரலாற்றினை அருகில் சென்று பார்த்தல், வரலாற்று நபர்களை நெருங்கிச் சென்று அணுகுதல், அதனூடாக மூலங்களை பின்னணிகளை அறிவதன் மூலம் வரலாறு பற்றிய வேறொரு பரிமாணம் கிட்டும். முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அந்த வகையில் அறிந்தவர்களும் அறியாதவைகளும் முக்கியத்துவம் பெறுகினறது.

இதற்குள் மனிதாபிமானம் கொண்ட ஐரோப்பியர்கள், தமது கொலனித்துவத் தலைமைக்கு எதிராகப் போராடத் துணிந்த மனித ஆளுமைகள், காதல் வயப்பட்டு அதிகாரத்தை இழந்த பேராளுமைகள், சமூக அடக்குமுறைகளின் பல்வேறு கூறுகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவர்கள், அறிவியல் தளத்தில், ஆய்வுத்தளத்தில் இலங்கை மக்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் எனப் பன்முக ஆளுமைகளை இந்நூலில் தரிசிக்கக் கிடைக்கிறது. பல காலங்களுக்கு முந்திய இலங்கைச் சமூகங்களையும் அவற்றின் வாழ்வியல், அரசியல் கூறுகள் பற்றிய புரிதல்களுக்கும் வழிவகுக்கிறது.

மேலெழுந்தவாரியாக இலங்கை வரலாற்றை அணுகுகின்ற போக்கு நம்மில் பலரிடம் உள்ளது. அது ஒரு தட்டையான அணுகுமுறை. வரலாற்றை ஆழமான பரிமாணத்துடன் நோக்கவேண்டிய தேவையுள்ளது. அந்தவகையில் சரவணனின் இந்நூல்மேலதிக தேடலுக்கும் வாசிப்பிற்கும், குறிப்பாக கொலனித்துவ காலம் பற்றிய மேலதிக அறிதலுக்கு உந்துதலாக அமைகின்றது.

கவிஞர், எழுத்தாளர் கவிதா

உலக ரீதியிலும் சரி தமிழர்களின் போராட்டமெனினும் சரி, இனி ஆயுதமென்பது அறிவுதான். அது தகவல்களை அடிப்படையாகக் கொண்ட அறிவு. எவர் ஒருவர் ஒரு விடயம் தொடர்பாக தகவல்களையும் அதுசார்ந்த அறிவையும் கொண்டிருக்கின்றாரோ, அவரே அந்த இடத்தின் ஆளுமையாக உருவெடுக்கிறார். இதில் சந்தேகம் அவசியமற்து. ஏனெனில் இது தகவல் யுகம். சரவணனின் நூல் வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ளது.

இந்நூலில் இலங்கைத் தீவு பற்றி எழுதிய ஆளுமைகள் இடம்பெற்றிருக்கின்றனர். தமிழர்களுக்குச் சாதகமான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன.

இந்நூல் புறப்பொருளைப் பேசுகின்றது. எனினும் சரவணனின் அகச்சீற்றத்தை, அகத்தின் ஏக்கத்தை, அகத்தின் வேண்டுதலை அகத்தின் ஏக்கத்தின் வெளிப்பாடாக இந்த நூலைப் பார்க்கிறேன். இந்த ஏக்கம்தான் இந்த நூலை எழுதத்தூண்டிய உந்துசக்தி என எனக்குத் தோன்றுகிறது.

வெறும் உணர்வுகளை மட்டும் வைத்து நாம் எந்த இடத்தையும் அடையமுடியாத காலம் இது. இவ்வாறான எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் உரிய மதிப்போடு நடாத்தவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது. சமூகமாகச் சிந்திப்பதும் இவ்வகை முயற்சிகளை உற்சாகப்படுத்துவதும் இன்றியமையாதது.

அறியப்படவேண்டிய தனிநபர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அறியப்படவேண்டியவர்கள் எழுதிய மூலநூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டியவை. தகவல்களும் வரலாறும் எமது சமூகம் கொண்டிருக்கப்போகும் அறிவைத் தீர்மானிக்கும் அம்சங்கள். சமகால, எதிர்கால அரசியல் பொருளாதார விடயங்களை விளங்கிக் கொள்வதற்கும் அவைசார்ந்து செயலாற்றவும் இம்மாதிரியான ஆய்வெழுத்தாக்கங்கள் உபயோகப்படுகின்றன.

சரவணனின் எழுத்துநடை எளிமையானது. சீராகக் கதை சொல்லும் ஆற்றல் அவரிடம் உள்ளது. அது அவருடைய அனுபவத்தின் சான்றாகக் கொள்ளக்கூடியது.

பேரினவாதத்தைப் பேசும்போது நான் தடக்குவதில்லை: நூலாசிரியர் சரவணன் ஏற்புரை

லண்டன், அவுஸ்ரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வுகளிலும், சமூக ஊடகங்கள் வழியாகவும் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை உள்வாங்கியுள்ளதாகத் தனது ஏற்புரையைத் தொடங்கிய சரவணன் அந்தக் கருத்துகளையும் சேர்த்து அதற்குரிய தனது அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அரசியல் செயற்பாடுகளுக்கான ஆயுதமாக எழுத்துத்துறையைத் தெரிவுசெய்தேன். இந்த இரண்டு நூல்களும்கூட வருமான எதிர்பார்ப்புகளுக்காக எழுதப்படவில்லை. பேசாப்பொருளைப் பேசுபொருளாக்குவதென்பதை எனது எழுத்துகளுக்கான தாரகமந்திரமாகக் கொண்டிருக்கிறேன். பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விடயத்திற்காக எனது நேரத்தை உழைப்பினை விரயமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

இலங்கையின் மையப்பிரச்சினை இனப்பிரச்சினை என்பது யதார்த்தம். எழுதத்தொடங்கிய காலத்திலேயே இதன் மூலம் பௌத்த சிங்கள பேரினவாதம் என்பதை அடையாளம் கண்டுகொண்டேன்.

சிங்களச் சூழலில் தமிழர்களின் பிரச்சினை சார்ந்து எப்படிச் சிந்திக்கிறார்கள், இயங்குகின்றார்கள், அவர்களின் உளவியல் எத்தகையது எப்படி சிங்கள உளவியலைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள் போன்ற விடயங்களை அவர்களது மொழியில் சென்று பார்த்தால் மாத்திரமே தேடி அடையாளம் காணமுடியும். ஆனால் அதனை நோக்கித் தொடர்ச்சியாகச் செயற்படாமல், எம்முடைய மூலங்களாக நாம் வேறு விடயங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.

இந்த அடிப்படையில் முக்கிய பத்திரிகையில் (சரிநிகர்) இனப்பிரச்சினை சார்ந்து எழுதுவதற்கான வாய்ப்பு அமைந்த போது அதனைச் சரியான முறையில் பயன்படுத்தவேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது. அந்த மொழியில் தேடி பேசாப்பொருளைப் பேச முனைந்தேன். அதற்காக வலுக்கட்டாயமாக சிங்கள மொழியைக் கற்க நேர்ந்தது

இனவாதப் போக்கினைத் தொடர்ந்து அவதானித்தல், அதனை அம்பலப்படுத்தல் என்பது என் கட்டுரைகள், கட்டுரைத்தொடர்களின் அடிப்படையாக வரித்துக்கொண்டிருக்கிறேன்.

சிங்கள உளவியலைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அதுவொரு நிறுவனமயப்பட்ட கட்டமைப்பு. அதன் சகல கூறுகளையும் ஆணித்தரமாக அம்பலப்படுத்திக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதனைச் செய்யும்போது பல்வேறு விமர்சனங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. தமிழ்த் தேசியவாதி எனவும் இன்னும் வேறு பல பேர்களிலும் என்னை நோக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அடிப்படையில் நான் ஒரு மார்க்சியவாதி. மார்க்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டவன். வர்க்க மாற்றமே அடிப்படையான பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று நம்புபவன். அதே நேரத்தில் அதனைத்தாண்டி, சமகாலத்தில் நிலவுகின்ற கூர்மையான மற்றப் பிரச்சினைகளை நிராகரித்துவிட்டு, வர்க்கப்பிரச்சினையைக் கதைக்க முடியாது என்பதிலும் நம்பிக்கை கொண்டவன்.

பேரினவாதத்தைப் பேசும்போது நான் தடக்குவதில்லை. அதில் ஒரு தெளிவான வர்க்கப்பார்வை, பெண்ணியப் பார்வை, ஒரு தலித் பார்வை இழைந்திருக்கும். இந்த இருநூல்களிலும் அதனைக் கூர்மையாக அவதானிக்கமுடியும்.

5/20/2018 3:04:43 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்