சண்முகவடிவேல்
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய பூகோள, பிராந்திய அரசியலும் சிங்கள- தமிழ் முரண்பாடும்
ஒவ்வொரு பெரும்போக்கான காலகட்டத்திலும் காணப்படுகின்ற பூகோள, சர்வதேச, தேசிய - உள்நாட்டு நிலைமைகளை அரசியல் பொருளாதார கலாச்சார அர்த்தத்தில் சரிவர மதிப்பீடு செய்ய வேண்டும். அதன்கீழ் தான் ஏனைய மனித நடத்தைகளை நாம் புரிந்து கொள்ளவும், மதீப்பீடு செய்யவும் முடியும்.
உலகில் பல்வேறு அரசியல், சமூக, மத, கலாச்சார தத்துவங்கள் தோன்றியுள்ள போதிலும், குறைந்தபட்சம் கடந்த 500 ஆண்டுகளாக இம் முழு உலகமும் ஒரேயொரு வலதுசாரி அரசியல் பொருளாதார ஒழுங்கு முறைக்குள்தான் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதன் அர்த்தம் ஏனைய தத்துவங்கள் செயலற்று அழிந்து போய்விட்டன என்பதல்ல. மாறாக பூகோள அளவில் வலதுசாரி அரசியல் பொருளாதார ஒழுங்கானது அதிகாரத்தை தொடர்ந்து தன் கையில் வைத்துள்ளதுடன் ஏனைய தத்துவங்களின் தாக்கத்தை அது தன் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கக்கூடிய வகையில் உள்வாங்கிக் கைக்கொண்டும் வருகிறது.
சோசலிச சர்வதேச அரசியல் பொருளாதார ஒழுங்கு என்பது ஒருபோதும் பூமியில் நிலவவில்லையாயினும் சோசலிசக் கருத்துக்களின் தாக்கத்திற்கு முதலாளித்துவ அரசுகள் நெகிழ்ந்து கொடுத்து, தமக்கான அதிகாரத்தை இழந்திடா வண்ணம் தம்மை நிலையாகப் பதவியில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு ஏற்றவகையில் சமூக நலன்பேண் அரச அமைப்புக்கள் போன்ற பல மாற்றங்களைச் செய்து வருகின்றன. எப்படியோ கடந்த 500 ஆண்டுகால உலக ஒழுங்கு வலதுசாரி அரசியல் பொருளாதார ஒழுங்குதான். சோசலிச அரசுகள் பூமியின் பலபகுதிகளிலும் ஆங்காங்கே இடைக்காலங்களில் இருந்தாலும் அவ்வரசுகள் மேற்கொள்ளும் சர்வதேச உறவுமுறைகள்கூட வலதுசாரி ஒழுங்கு முறைக்கு உட்பட்டவையாகவே அமைந்தன.
ஒற்றை மைய - ஏகாதிபத்திய - வர்த்தக நிதிமூலதன - தகவல் ஆதிக்க அரசியல் ஒழுங்கே இன்று காணப்படும் உலக அரசியல் ஒழுங்காகும். சோசலிச அரசுகள் என்றும், முதலாளித்துவ அரசுகள் என்றும் இதில் வேறுபாடுகள் இல்லை. இங்கு அனைத்துவகை அரசுகளும் மேற்கூறப்பட்ட ஓர் ஒழுங்கிற்கு மட்டுமே உட்பட்டுச் செயற்பட்டு வருகின்றன.
இந்த வலதுசாரி உலக ஒழுங்கு முறையானது எப்போதும் காலதேசவர்த்தமானத்திற்கு அமைய தன்னை புதுவடிவப்படுத்தி நிலைநிறுத்திக் கொள்கிறது. இங்கு நாம் அவதானிக்க வேண்டியது இன்றைய காலகட்டத்திற்குரிய அந்த புதுவடிவம் என்ன என்பதே.
இன்று இடதுசாரிகள் மட்டுமன்றி வலதுசாரித் தலைவர்களும், வலதுசாரி ஆய்வாளர்களுங்கூட பொருண்மியம் சார்ந்த வகையிலேயே ஆய்வுகளையும், அணுகுமுறைகளையும் மேற்கொள்கிறனர். எனவே இடதுசாரி ஆய்வாளர்களாயினும் சரி, வலதுசாரி ஆய்வாளர்களாயினும் சரி, தலைவர்களாயினும் சரி பெருமளவிற்கு பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தையே நடைமுறையில் கொண்டவர்களாய் உள்ளனர். பொருள்முதல்வாதத்துடன் கூடவே அதன் இன்னொரு முக்கிய பகுதியாக இயங்கியல் வாதம் உள்ளது. 'Realpolitik ' என்ற கண்ணோட்டத்திற்கு ஊடாக வலதுசாரிகளிடம் நடைமுறையில் ஓர் இயங்கியல் அணுகுமுறை இருக்கிறது. அந்த இயங்கியல் அணுகுமுறை வலதுசாரி நலன்சார் கண்ணோட்டத்தைக் கொண்டது.
மேற்குலகத்திற்கும், இஸ்லாமிய உலகத்திற்கும் இடையில் ஒரு யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பனிப்போரின் பின்னான யுகம் இந்த இரு பிரிவினருக்கும் இடையேயான யுத்த யுகமாய் அமைந்தது. பனிப்போர் முடிந்ததும் மேற்குலகின் கவனம் முற்றிலும் மேற்காசிய களத்தை நோக்கித் திரும்பியது. அதன் முதற்கட்டம் 1990 ஆம் ஆண்டு வெடித்த வளைகுடா யுத்தமாக அமைந்தது. அந்த யுத்தம் ஈராக்கை மையம் கொண்டெழுந்தது. ஆயினும் அது முழு மேற்காசியாவையும் தழுவிய பரிமாணம் கொண்டதாக மட்டுமன்றி உலகளாவிய வியூகம் கொண்டதாகவும் அமைந்தது. இதில் மைய நாயகனாக இருந்தவர் சதாம் ஹுசையின். இதனை பனிப்போரின் பின்னான காலம் என அழைப்பர்.
அடுத்த கட்டம் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டெழுந்தது. இதுவும் முழு உலகளாவிய வியூகத்தைக் கொண்டது. இதன் மைய நாயகன் பின்-லாடன் ஆவார். இரட்டை கோபுரம் மீதான பின்-லாடனின் தாக்குதல்தான் இதன் இரண்டாம் கட்டமாகும். இதனை பனிப்போரின் பின்-பின்னான காலம் என்று கூறுவர். இந்த இரண்டாவது காலகட்டம் முதலாவது காலகட்டத்தை விடவும் உலகளாவிய அர்த்தத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாகும். அத்துடன் நீண்ட வரலாற்று நோக்கிலும், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டமாகும். இக்காலகட்டத்தைப் பற்றி நாம் மிகத்துல்லியமாக எடைபோட வேண்டும். இதற்கு இருக்கும் தர்க்கபூர்வ அரசியல் பரிமாணத்தையும், அதன் வளர்ச்சிப் போக்கையும் நாம் சரிவர அடையாளம் காணவேண்டும். அப்போதுதான் நடப்பு அரசியலில் சரியான நிலைப்பாடுகளை கைக்கொள்ள முடியும்.
பொருளாதார மற்றும் அனைத்து வகையான ஆதிக்கத்திற்கும் அரசியல் இராணுவ ஆதிக்கம் அவசியம். அரசியல் ஆதிக்கத்திற்கு இராணுவ மேலாண்மை அவசியம். அரசு என்பதே இராணுவம், சிறைச்சாலை என்பனவற்றை தலையாய அம்சங்களாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும். எனவே இராணுவ மேலாண்மை இல்லையேல் பொருளாதார மேலாண்மை இருக்க முடியாது. பனிப்போர் முடிந்ததன் பின்னான கால உலகளாவிய பொருளாதார ஆதிக்கத்திற்கு மேற்காசிய பிராந்தியத்தில் இராணுவம் மேலாண்மை பெறவேண்டியது அவசியமாகும். அந்தளவிற்கு உலகளாவிய இராணுவம்சார் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை அமைவிட ரீதியாக மேற்காசிய பிராந்தியம் கொண்டுள்ளது. ஆதலால் பனிப்போர் முடிந்ததின் பின்னான மேற்குலகின் கவனம் மேற்காசியாவை நோக்கித் திரும்பியது.
பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் உட்பட, ஈரான், ஈராக் ஈறாக மொறோக்கோ வரை தொடர்ச்சியான நிலப்பரப்பில் இஸ்லாமிய அரசுகளே உள்ளன. அராபியர்கள், பாரசீயர்கள், கறுப்பர்கள் என இன வேறுபாட்டுப் பிரிவுகள் இருப்பினும் இஸ்லாம் என்ற வகையில் எல்லோரும் அடிப்படையில் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரே மதம், வரலாற்றில் பேரரசுகளை கொண்டிருந்த பிராந்தியம், அதுவும் உலக வரலாற்றில் அகாட் என்ற முதலாவது பேரரசு தோன்றியது போன்ற பிராந்திய முக்கியத்துவங்களை மத்திய கிழக்கு எனப்படும் மேற்காசியா கொண்டுள்ளது. அத்துடன் ஓர் உறுதியான அரசியல் மதத் தத்துவத்தை அதாவது மதத்திலிருந்து அரசியலைச் சிறிதும் பிரித்திட முடியாத பலம் பொருந்திய இஸ்லாத்தை கொண்டுள்ள பிராந்தியமும்கூட. ஆதலால் இப்பிராந்தியத்தின் குறியீடே இஸ்லாம்தான். இந்த வகையில் இப்பிராந்தியத்தை அச்சத்துடனும், தமது ஆதிக்கத்திற்கான தடைக்கல்லாகவுமே மேற்குலகம் பார்க்கிறது. ஆதலால் பனிப்போர் முடிந்ததும் மேற்குலகின் கவனம் தன்னியல்பில் மேற்காசியா நோக்கித் திரும்பியது.
இங்கு மேற்குலகின் உண்மையான நீண்டகாலப் பிரதான எதிரி ஈரான் ஆகும். இதில் கேந்திர அமைவிட நிலப்பரப்பு என்ற வகையில் ஈராக் முக்கியமானது. ஈரானை கட்டுப்படுத்துவதற்கான வியூகத்தில் ஈராக் மையப்புள்ளியாய் உள்ளதால், ஈராக்கை வெற்றிகொள்ள வேண்டிய அவசியம் மேற்குலகிற்கு எழுந்தது. இதுவே ஈராக் மீதான மேற்குலகின் வளைகுடா யுத்தமாகும். சதாம் ஹுசையின் தன் சொந்த மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியவராகவும், குர்திஷ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்தவராகவும், தெளிவான ஜனநாயக விரோதியாகவும் காணப்பட்டதினால் இஸ்லாமிய மக்கள் பிரிவுகளிடமும், இஸ்லாமிய அரசுகளிடமும் இருந்து அவரைத் தனிமைப்படுத்தி தாக்குவது சாத்தியம் ஆயிற்று. அவரது அரசின் மீதான தாக்குதல் இலகுவாக இருந்தது. இந்த வகையில் ஈராக் மீதான யுத்தத்துடன் பனிப்போரின் பின்னான காலத் தேவை பூர்த்தி அடையக்கூடியதாய் இருந்தது.
ஆனால் பின்-லாடனின் எழுச்சி ஒரு புதிய பரிமாணத்தையும், ஒரு புதிய தேவையையும் ஏற்படுத்தியது. பின்-லாடன் ஆப்கானிஸ்தான் என்னும் ஓர் அரசில் உறைவிடத்தையும், ஆதரவையும் பெற்றிருந்ததுடன், அதற்கும் அப்பால் மேற்கூறிய இஸ்லாமிய பிராந்தியத்தின் அனைத்து நாடுகளிலும் தனது அல்-கொய்தா இயக்கத்தை விரிவாக்கி வந்தார். உலகில் உள்ள 81 நாடுகளில் இருந்து தனது பரந்த இஸ்லாமியப் பேரரச ஆதிக்கத்திற்கான ஆட்திரட்டல்களையும் மேற்கொண்டிருந்தார். எனவே அரசு மட்டுமல்ல பிரச்சினை, அரசற்ற ஆயுதந்தாங்கிய அல்-கொய்தா, முஜாகிதீன் போன்ற பல அமைப்புக்களும் பிரச்சினை என்கின்ற நிலை மேற்கிற்கு தோன்றியது.
அதாவது ஈராக் என்னும் அரசையோ அல்லது ஈரான் என்னும் அரசையோ மட்டும் அடக்கினால் போதாது. அதற்கும் அப்பால் மேற்படி ஆயுதந் தாங்கிய இயக்கங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற தேவை மேற்கிற்கு எழுந்தது. இது மேற்கிற்கு மட்டும் உரிய தேவையல்ல. வெளிப்படையாகப் பார்த்தால் மேற்கிற்கு மட்டும் உரிய தேவை போல தோன்றினாலும், உலகளாவிய வர்த்தக பொருளாதார ஆதிக்கத் தேவையைக் கொண்ட சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் ஓர் எல்லைவரை தேவையாகும். அதேவேளை இந்தியாவிற்கும் அவ்வாறே இது தேவையாகும். ஜப்பானும் அவ்வாறுதான். ஆதலாற்தான் வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களின் போது ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தமது ரத்து (Veto) அதிகாரத்தைப் பிரயோகிக்கவில்லை.
இதில் தொடர் வண்டியிழுக்கும் இயந்திரம் (Engine) என்ற பாத்திரத்தை அமெரிக்கா வகிக்கும் அதேவேளையில், மேற்படி உலகளாவிய வர்த்தக ஆதிக்கப் போட்டியின் அங்கங்களான அனைத்து நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கப்பட்ட தொடர்வண்டிப் பெட்டிகளாய் ஆயின. சில பெட்டிகளின் தேவை இடையிடையே உள்ள சில தொடர்வண்டிச் சந்திகளில் களரவேண்டியிருக்கலாம். அதாவது மேற்படி அனைத்து நாடுகளுமே ஒரே தொடர் வண்டியின் பல்வேறு பெட்டிகளேயாகும். இப்பெட்டிகளில் தரவேறுபாடுகள், இருக்கை, படுக்கை வேறுபாடுகள் என உண்டேயாயினும், அனைத்தும் ஒரே தண்டவாளத்தில் ஓடும் ஒரே தொடர் வண்டிதான். இத்தகைய உலகளாவிய வரலாற்றுப் பின்னணி நிலவிவந்த சூழலிற்தான் இரட்டைக் கோபுரம் மீதான பின்-லாடனின் தாக்குதல் நிகழ்ந்தது.
பனிப்போர்க் காலத்திலும் அரசற்ற பல்வேறு இயக்கங்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. அக்காலகட்டத்தில் ஓர் அமைப்பின் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஓர் அணி நாடுகள் ஆதரித்தால், மறு அணி நாடுகள் அந்த அமைப்பைப் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரையிடும். அதாவது நேட்டோ அணி ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆதரிக்கும் போது, வார்சோ அணி அதனை பயங்கரவாதம் என்று வர்ணிக்கும். அதேபோல வார்சோ அணி ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பை ஆதரிக்கும் போது, நேட்டோ அணி அதனைப் பயங்கரவாதம் என்று வர்ணிக்கும்.
ஆனால் இங்குள்ள முக்கிய விடயம் என்னவெனில் ஓர் அணியினால் ஓர் ஆயுதந் தாங்கிய அமைப்பு பயங்கரவாத அமைப்பு என எதிர்க்கப்படும்போது அந்த அமைப்பு இன்னொரு அணியினால் புரட்சி அல்லது விடுதலை அமைப்பு என்று கூறி ஆதரிக்கப்பட்டது. இப்பின்னணியில் ஆயுதம் தாங்கிய அமைப்புகள் அழியாது உயிர்வாழ்வது பனிப்போர்க் காலத்தில் சாத்தியப்பட்டது. இதற்கு நல்ல சிறந்த உதாரணமாக தென்சூடானியப் போராட்டத்தைக் குறிப்பிடலாம்.
சூடானிய அரசை அமெரிக்கா ஆதரித்தபோது தென்சூடானிய விடுதலைப் போராட்டத்தை சோவியத் யூனியன் ஆதரித்தது. அதேவேளை சூடானிய அரசை சோவியத் யூனியன் ஆதரித்தபோது தென் சூடானிய விடுதலைப் போராட்டத்தை அமெரிக்கா ஆதரித்தது. அதாவது ஓர் அணிக்குப் பயங்கரவாதி மற்றைய அணிக்கு விடுதலை வீரன்! தென்சூடானியரின் துயர் தோய்ந்த விநோத அனுபவம் என்னவெனில் அவர்களுக்கு அமெரிக்க விமானங்களது குண்டுகளின் ருசியும் தெரியும், சோவியத் விமானங்களது குண்டுகளின் ருசியும் தெரியும், கூடவே சீன விமானங்களது குண்டுகளின் ருசியும் தெரியும். இன்று வரலாற்று வெற்றி அவர்களின் கையில் என்பது ஒரு மனநிறைவு.
விடுதலை அவர்களுக்குத் தங்கத் தாம்பாளத்தில் நீட்டப்படவில்லை ஆனால் அந்த விடுதலையை தங்கத் தாம்பாளத்தில் வைத்து ஏந்த வேண்டியது தென்சூடானியரின் பொறுப்பு. இரத்தம் தோய்ந்த, துயர் நிறைந்த போராட்டத்தை விடவும், தென்சூடானிய மக்கள் தமக்கிடையே காணப்படுகின்ற இனக்குழு பேதங்களைக் கடந்து ஒரு தேசிய சமூகமாக தம்மை வளர்த்தெடுக்க வேண்டியதற்கான பணி மிகப்பெரியது.
ஆனால் பனிப்போரின் பின் இந்த அணி நிலைப்பாடு இல்லாமற் போனது. இத்தகைய பின்னணியிற்தான் சோவியத்தின் முன்னாள் எதிரியும், அமெரிக்காவின் நேற்றைய நண்பனுமான பின்-லாடன் அமெரிக்காவின் இந்நாள் எதிரியாய் மாறி அமெரிக்க வரலாறு முன் எப்பொழுதும் கண்டிராத தாக்குதலை அமெரிக்க மண்ணில் அமெரிக்காவின் இருதயமான இரட்டைக் கோபுரத்தின் மீது மேற்கொண்டார்.
பனிப்போர் முடிந்த காலத்தில் அமெரிக்காவின் போக்கிற்கு இடையூறாக ஈராக்கிய அரசு காணப்பட்டது. இங்கு அரச வடிவுடன் கூடிய ஈராக் மீது அமெரிக்கா யுத்த வெற்றியை ஈட்டிவந்தது. இச் சூழலில் அந்த இஸ்லாமிய பிராந்தியம் முழுவதையும் தழுவிய வகையில் வளர்ந்த ஓர் அமைப்பைக் கொண்ட பின்-லாடன் அமெரிக்காவிற்கான மிகப்பெரும் சவாலானார். அரசை அடக்குவது மட்டுமல்ல பிரச்சினை, ஆயுதம் தாங்கிய எந்தொரு அமைப்பையும் அடக்க வேண்டும் என்ற பிரச்சினை அமெரிக்காவிற்கு எழுந்தது. 81 நாடுகளில் பரவியிருந்த அல்-கொய்தா இயக்கம் மட்டுமன்றி, உலகளாவி பல நாடுகளிலும் பரவியிருந்த ஆயுதம் தாங்கிய பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் மேற்குலகம் இந்த ஒரே வகைப்பாட்டுக்குள் பார்க்கத் தொடங்கியது. இதுவே 'சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு' என்ற கோட்பாடு உருவானதற்கான தளமாகும்.
பனிப்போரின் பின்-பின்னான இக் கோட்பாடுதான் - பனிப்போரின் பின்-பின்னான கால உலகளாவிய அரசியலின் முதுகெலும்பாய் அமைந்தது. இதன் வளர்ச்சி விதிக்கான வரலாற்றுத் தொடர்ச்சியை விளங்குவதற்கு சிறிது பின்நோக்கிச் செல்வோம்.
தொடரும்..