Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

விமானநிலையங்களின் சாபங்கள்

<p>விமானநிலையங்களின் சாபங்கள்</p>
யூகான் சண்முகரட்ணம் (தமிழில்: ரூபன் சிவராஜா)

 

Klassekampen (வர்க்கப் போராட்டம்) - நோர்வேஜிய இடதுசாரி நாளிதழ். Yohan Shanmugaratnam – ஊடகவியலாளரும் இந்நாளிதளின் வெளிநாட்டுப் பிரிவின் பொறுப்பாசிரியரும் ஆவார்.

பாரபட்சங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் குணவியல்பு தொடர்பாகத் தனது தந்தை பேராசிரியர் .சண்முகரட்ணம் அவர்களிடமிருந்து தனது சிறுவயதில் பெற்றுக்கொண்ட சில அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் Klassekampen நாளிதழில் 03.02.17 எழுதிய பதிவில் நினைவுகூர்ந்திருக்கின்றார். அந்த நினைவு மீட்பினூடாக Donald Trump இன் இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கை பற்றிய சமகால விவகாரங்களையும், வெளிநாட்டவர்களுக்கு எதிராக காலங்காலமாக அமெரிக்கா முன்னெடுத்து வந்த வெறுப்பரசியலின் போக்கினை வரலாற்று நிகழ்வுகள் மூலமும் பதிவுசெய்துள்ளார். இக்கட்டுரை, அதன் பேசுபொருளின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

***

Donald Trump இட்ட கோட்டினால் வாழ்வு முழுவதும் அநீதிக்கு இலக்காகப்போகும் குழந்தைகள்!

நோர்வேயுடனான எனது முதல் சந்திப்பு ஒஸ்லோவின் முன்னைய விமான நிலையமான Fornebuவில் நிகழ்கிறது. பாடகி Sissel Kyrkjebø, கென்சர்வேற்றிவ் கட்சியின் தலைவர் Carl I. Hagen ஆகியோரை அறிவதற்கு முன்னர், 1985இல் ஒரு கோடை நாளில் எங்கள் குடும்பம் வந்து இறங்கிய ஒஸ்லோவின் முன்னைய அந்த விமான நிலையமே நான் வியப்போடு பார்த்து ஆராய்ந்த இடம். இருந்தபோதும் இப்போது ஒரேயொரு நிகழ்வு மட்டுமே Fornebu என்றவுடன் நினைவில் நிற்கிறது. அப்பொழுது எனக்குப் பத்து வயது. பேர்லினில் வசித்த எங்கள் மாமாவிடம் சென்றுவருவதற்காக நாம் அமெரிக்காவின் Pan Am விமான சேவையூடான ஒரு பயணத்தினை மேற்கொண்டோம். Pan Am - 1927 முதல் 1991 வரை அமெரிக்காவின் மிகப்பெரிய சேவை

அதற்கு முந்திய ஆண்டு நடந்த Lockerbie குண்டுவெடிப்புக் காரணமாக அந்த விமானசேவை நிறுவனம் புதிய நடைமுறைகளை விதித்திருந்தது. இரண்டு வரிசைகளில் பயணிகள் நிறுத்தப்பட்டனர். ஒன்று வெள்ளை நிறத்தவர்களுக்கானது. மற்றையது வெள்ளையர்களற்ற வேற்று நிறத்தவர்களுக்கானது.

இரண்டாவது வரிசையின் முடிவில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். இறுதியாக எமது முறை வந்தபோது, எனது தந்தை அங்கு ஒரு காட்சியை அரங்கேற்றுவார் என்பது எனக்குப் புரிந்து விட்டது. ஏன் இரண்டு வெவ்வேறு வரிசையுடனான பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகின்றது என்று கேள்வியெழுப்பினார். 'அமெரிக்கர்களினால்' வழங்கப்பட்ட கட்டளைகள் (வழிகாட்டல்) அவையென பாதுகாப்புக் கண்பாணிப்பாளர்கள் தெரிவித்தனர். ஏன் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று குறுக்குக் கேள்வி கேட்டார் அப்பா.

கண்காணிப்பாளர் எரிச்சலடைந்தார். என்னை உடற்பரிசோதனை செய்த அந்தக் கண்காணிப்பாளர், 'காற்சட்டைப் பொக்கற்றுக்குள் என்ன வைத்திருக்கிறாய், அதனை வெளியில் எடு' என்றார் அவர். நான் பதில் கூறுவதற்குள் முந்திக் கொண்ட அப்பா, 'என்னவென்று நினைக்கிறீர்கள்? வேறொன்றுமில்லை. அது ஒரு வெடிகுண்டு. அவன் விமானத்தை வெடிக்கவைக்கப் போகின்றான்' என்றார். விமானப்பயணம் முழுவதும் அப்பாவை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் எனக்கு துளியும் வரவில்லை எனலாம். அவர் மிகவும் சீற்றத்துடன் இருந்தார்.

<p>விமானநிலையங்களின் சாபங்கள்</p>

நோர்வேஜியக் கடவுச்சீட்டு கிடைக்கும் வரை, "நிர்ப்பந்திக்கப்பட்ட மூன்றாம் உலக நாட்டுக் கடவுச்சீட்டு" என்று சொல்லியவாறு (Frantz Fanon எழுதிய ‘The Wretched of the Earth ' நூலுக்கு ஒரு தலையசைப்போடு)இலங்கைக் கடவுச்சீட்டினை நீண்டகாலங்கள் அவர் இறுகப்பற்றி வைத்திருந்தார்.

உலகின் பாரபட்சத்தை தனக்கும், பிள்ளைகளாகிய எமக்கும் நினைவூட்டும் நோக்கம் அதற்குள் இருந்தது.

'ABBA பொப்பிசைக் குழுவினரின் விசிறி நான்' என்று சொல்வதன் மூலமே பிள்ளைகளை வெட்கப்பட வைக்கும் தந்தையர்களுக்கு மத்தியில் எங்கள் அப்பா ஒவ்வொரு பயணத்தின் போதும் விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணுவதை சம்பிரதாயமாக நிகழ்த்துபவராக இருந்திருக்கின்றார்.

இன்றைய நாட்களில் விமான நிலையங்களில் பெரும் கெடுபிடிகளை  அமெரிக்கா உருவாக்கி வருகின்றது. கடந்த வெள்ளி (ஜனவரி இறுதியில்) 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 90 நாட்களுக்கான பயணத்தடை தொடர்பான உத்தரவு ஜனாதிபதி Donald Trump இனால் பிறப்பிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நியூயோர்க், சிக்காக்கோ, சன் பிரான்சிஸ்கோ, போஸ்ரன் மற்றும் ஏனைய அமெரிக்க நகரங்களின் விமான நிலையங்களில் திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிக்காக்கோ விமான நிலைய ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படமொன்றில் மொட்டாக்கு அணிந்த சிறுமியும் தொப்பி அணிந்த சிறுவனும் தமது அப்பாக்களின் தோள்களில் அமர்ந்திருக்கின்றார்கள். அந்த யூதத் தந்தை கைகளில் ஒரு பதாகையைத் தாங்கியிருக்கின்றார். 'இது முதற்தடவை அல்ல! இனிமேல் ஒருபோதும் இதுபோல் வேண்டாம்' என அப்பதாகையின் வாசகம் அமைந்திருந்தது.

ஒடுக்குமுறை சார்ந்த வரலாற்று அனுபவமுள்ள ஏனைய மக்கள் குழுக்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளனர். 1924இல் ஆசியாவின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்வோரின் வருகையைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட Johnson-Reed நடவடிக்கையை ஒத்ததாக பலராலும் இது பார்க்கப்படுகின்றது.  தார்மீகச் சந்தேகத்திற்குரிய அல்லது பெரும்பாலும் ஆபத்திற்குரிய, அத்தோடு அமெரிக்கக் கலாச்சார வாழ்விற்குள் கரைந்து போக வைக்க முடியாதவர்களாக ஆசிய மக்கள் சித்தரிக்கப்பட்டதாக ஜப்பானிய-அமெரிக்கரான Tom Ikeda, NBC  செய்தி நிறுவனத்திற்குக் கருத்துத் தெரிவிக்கும் போது இதுபற்றிக் கூறியிருக்கின்றார். அந்த அணுகுமுறையானது, இன்றைய நாட்களில் முஸ்லிம்கள் சித்தரிக்கப்படுவதிலிருந்து பெரிதும் வேறுபடவில்லை.

1941இல் ஜப்பான் நடாத்திய Pearl Harbor தாக்குதல் மற்றும் 2ம் உலகப்போரில் அமெரிக்கத் தலையீட்டிற்குப் பின்னர் 122 000 ஜப்பானிய அமெரிக்கர்கள் ஜனாதிபதி Franklin D. Roosevelt இன் அங்கீகாரம் பெற்று, தடுப்புச் சிறைமுகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். இதனையொத்த நிலையிலேயே அமெரிக்காவில் சீனர்களின் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக 1882ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘Chinese Exclusion Act- 1882' அமெரிக்கர்களால் நினைவுகொள்ளப்படக்கூடியது. அதாவது அமெரிக்க உட்கட்டுமானத்தைக் கட்டியெழுப்புவதில், கணிசமான பங்களிப்புச் செய்த சீனர்கள் மீது அமெரிக்காவின் வேலையில்லாத் திண்டாட்டம் உட்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்குக் காரணமானவர்களாகப் பழி சுமத்தப்பட்டது.

1892 இல் கொண்டுவரப்பட்ட Geary Act, அமெரிக்காவில் வசித்த சீனர்களை உருவப்படத்துடனான அடையாள அட்டையை எந்தநேரமும் எடுத்துச் செல்லவேண்டி வற்புறுத்தியது. அவ்வாறு அடையாள ஆவணங்களை உடன் வைத்திருக்காதவர்கள் நாட்டைவிட்டு அனுப்பப்படும் ஆபத்தினை எதிர்கொண்டனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் அவ்வாறு பதிவுசெய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக வரலாற்று ஆய்வாளர் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு கருத்துக் கூறியுள்ளார்.

இன்று முஸ்லிம்களுக்கான தனித் தகவல் பதிவுத்திட்டமொன்றினை Trump நிர்வாகம் தீவிரமாக முன்னெடுக்குமாயின் முஸ்லிம்கள் அல்லாத பலர் தம்மைப் பதிவுசெய்ய உறுதியாகவுள்ளனர். ஜனவரி மாதம் இடம்பெற்ற Trumpஇற்கு எதிரான பெண்கள் பேரணியில் (Women’s March against Trump) எடுக்கப்பட்ட ஒளிப்படத்தில் 'முஸ்லிம்கள் பதிவுசெய்யப்படுவதற்கு எதிரான ஜப்பானிய அமெரிக்கர்கள்' எனும் பதாகையை இளைஞர் ஒருவர் ஏந்திச் சென்றதைக் காண முடிந்தது.

இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் ஒரு அர்த்தமுள்ளது. Fornebu விமான நிலையத்தில் அப்பாவின் எதிர்ப்புக்குரல் இருந்திருக்காவிட்டால் இந்தவகைப் பாகுபாட்டு அணுகுமுறைகளை இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கப் பழகியிருப்பேன். முஸ்லிம் பின்னணியையும் வேறு பின்னணிகளையும் கொண்ட குழந்தைகளையும் ஜனாதிபதியின் இந்த தான்தோன்றித்தனமான நடவடிக்கையால் வாழ்க்கையில் பாகுபாட்டு முத்திரை குத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பதில் வீதிகளையும் விமான நிலையங்களையும் நிறைத்துவரும் மக்களின் இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு நிறைந்த பங்குள்ளது. இந்தக் குழந்தைகள் இவற்றை நினைவில் வைத்திருப்பார்கள்!

2/18/2017 11:30:44 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்