Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஈழத்தமிழர்கள் வெறுமனே ஒரு சனக்கூட்டமல்ல

ஈழத்தமிழர்கள் வெறுமனே ஒரு சனக்கூட்டமல்ல
மு.திருநாவுக்கரசு

 

அரசியல் யாப்பு டொனமூர் முதல் சிறிசேனா வரை (1931-2016)

ஜனாதிபதி ஜெயவர்த்தன வடக்கு-கிழக்கு இணைப்பை மேற்கொள்ளும்போது தொழில்நுட்ப ரீதியில் இழைத்த ஒரு சட்ட நுணுக்க காரணத்தை காட்டி பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா அந்த வடக்குக்-கிழக்கு இணைப்பை செல்லுபடி அற்றது என்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கிற்குப் பின்னால் அப்போது பிரதமராய் இருந்த மகிந்த ராஜபக்ஷாவும், ஜே.வி.பியினரும் நேரடியாக பங்குவகித்தனர். சிங்கள ஊடகங்களும் அவ்வாறே செயற்பட்டன. வடக்கு – கிழக்கு இணைப்பு செல்லுபடியற்றது என்று அரசியல் உள்நோக்கத்தோடும் அரசியற் பின்புலத்தோடும் சரத் என்.சில்வா தீர்ப்பு வழங்கியதும், அவருக்கு மேற்படி ஜே.வி.பி யினரும் அரசாங்க தரப்பினரும் மாலை அணிவித்து தோளில் சுமந்தமையும், நீதித்துறை வரலாற்றில் ஒரு கறைபடிந்த கட்டமாகும்.

இத்தகைய பின்புலம் கொண்ட அரசியல், நீதி, நிர்வாக துறைகளின் பின்னணியில் நியாயமான தீர்வுகள் உருவாகவோ அல்லது அவை நடைமுறைப்படுத்தப்படவோ வாய்ப்புக்கள் பெரிதும் இல்லை என்றே தெரிகிறது.

இப்பின்னணியில் நடைமுறைச் சாத்தியமான ஒரு தீர்வு உருவாக வேண்டும் என்றால் மேற்கூறப்பட்டவாறு, மத்திய அரசாங்கத்திற்கென குறிப்பிட்ட சில அதிகாரங்களை ஒதுக்கிவிட்டு, மாநில அரசாங்கங்களுக்கு ஏனைய அதிகாரங்கள் உரியவை என்ற வகையிலான சமஷ்டி முறையைப் பற்றிப் பேசுவதே குறைந்த பட்சம் பொருத்தமாக இருக்கும்.

ஆனால் பட்டியல் முறையிலான சமஷ்டி பற்றியே சிந்திக்கத் தயாரில்லாத சிங்கள ஆட்சியாளர்கள், மேற்கூறிய 'மத்திய அரசாங்கத்திற்கு என ஒதுக்கப்பட்ட குறித்த சில அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் மாநில அரசாங்கத்திற்கு உரியது' என்ற தீர்வுக்கு ஒருபோதும் உடன்படப் போவது கிடையாது.

இலங்கையில் முஸ்லிம் மக்களின் மொத்த சனத்தொகையில் சுமாராக அரைவாசிப் பகுதியினர் வடக்கு-கிழக்கிற்கு வெளியே வாழ்கின்றனர். இதன் அடிப்படையில் அவர்களின் பிரச்சனை சற்று வித்தியாசமானது. எனவே பிரிந்து செல்வதை ஆதரிப்பதில் அவர்களுக்கு சிக்கல் உண்டு. கிழக்கில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றனர். 'இலங்கையில் ஒரு கூட்டாட்சியின் கீழ் ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசு அமைய வேண்டுமென' தமிழரசுக் கட்சியின் 1964ஆம் ஆண்டு திருமலைத் தீர்மானம் கூறுகிறது. இன்றைய சூழலில் முஸ்லிம் மக்கள் தமக்கென தனியான தலைமையைக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கான தீர்வை மேற்படி திருமலைத் தீர்மானத்தை கருத்தில் கொண்டு அவர்கள் தீர்மானிப்பதே சரியானது.

மேலும் மலையகத் தமிழரின் பிரச்சனையில், அவர்கள் வாழும் மலையகத்தைச் சார்ந்த புவியியல் பின்னணியில், அவர்களுக்குரிய ஓர் அரசியல் நிர்வாகப் பிரிவைக் கோரும் உரிமை அவர்களுக்கு உண்டு (உதாரணமாக இந்தியாவில் புதுச்சேரி மாநிலம் இருப்பது போன்ற அமைப்பு). அந்த வகையில் அவர்களுக்கான தீர்வு புதிய யாப்பில் உருவாக்கப்பட வேண்டும்.

அதேவேளை மலையகத் தமிழர் விரும்பும் இடத்து ஈழத்தமிழ் மாநிலத்தின் குடிமகனாக குடியேறும் உரிமை உடையவர் என்பதை, ஈழத்தமிழ் மாநிலம் தனது யாப்பில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அவ்வாறு ஈழத்தமிழ் மாநிலத்தில் குடியேற விரும்பும் மலையகத் தமிழர்களுக்கு காணி மற்றும் வீட்டு வசதிகளை ஈழத்தமிழ் மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்பதுடன், அவ்வாறு குடியேறும் குடும்பங்களில் ஒருவருக்காவது வேலைவாய்ப்பை வழங்கவேண்டிய பொறுப்பும் ஈழத்தமிழ் மாநில அரசுக்குரியதாகும்.

ஈழத்தமிழர்கள் வெறுமனே ஒரு சனக்கூட்டமல்ல

இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை சிங்கள இனம் தனித்தும், வெளி அரசுகளின் துணையுடனும் ஈழத்தமிழர் மீது புரிகின்றது. இந்தியாவுடன் பகைமை கொண்ட நாடுகள் இந்திய எதிர்ப்பின் பேரால் ஈழத்தமிழரை ஒடுக்கத் துணைபோவதற்கு உதாரணங்களாக, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் ஈழத்தமிழரை ஒடுக்குவதில் இலங்கைக்கு உறுதுணையாக இருப்பதைக் கூறலாம்.

'உனது அண்டைநாடு உனது நிரந்தர எதிரி, உனது அண்டைநாட்டின் அண்டைநாடு உனது நிரந்தர நண்பன்' என்ற சாணக்கியனின் கூற்றுக்கு இணங்க இலங்கை தனது அண்டைநாடான இந்தியாவை எதிரியாகவும், இந்தியாவின் அண்டைநாடுகளான பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் என்பனவற்றை தனது நிரந்தர நண்பர்களாகவும் கருதுகிறது.

மேற்படி இந்தியாவிற்கு எதிரான இந்நாடுகளின் நிலைப்பாடுகள், இலங்கை விடயத்தில் இயல்பாகவே ஈழத்தமிழருக்கு எதிரானவையாக அமைந்துவிடுகின்றன. எனவே இத்தகைய வெளியுறவுக் கொள்கை சார்ந்த புவிசார் அரசியல் பிரச்சனைகளின் கைதியாக ஈழத்தமிழர் உள்ளனர். இத்தகைய கைதி நிலைக்கு தீர்வு காணாத எந்தவகையான ஒரு தீர்வும், ஒருபோதும் தீர்வாக அமையப் போவதில்லை என்ற வகையில் மேற்கூறப்பட்ட தீர்வுத் திட்டமே குறைந்தபட்ச பரிகாரமாகும். ஆனால் இதனை சிங்கள-பௌத்த அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

இந்த வகையில் ஈழத்தமிழரின் பிரச்சனைக்கான தீர்வு, இந்திய உபகண்டம் சார்ந்த புவிசார் அரசியல் பிரச்சனையுடனும் இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளின் இந்தியா தொடர்பான உறவுகள் பற்றிய பிரச்சனைகளுடனும், மேலும் இந்தியா தொடர்பான பூகோள ரீதியான பிரச்சனைகளுடனும் பின்னிப்பிணைந்து சிக்கல் அடைந்திருக்கும் நிலையில், ஈழத்தமிழர் பிரச்சனையை அதிகம் புத்திபூர்வமாக நடைமுறையுடன் இணைத்து சிந்தித்து தீர்வுகாண வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழர் சார்ந்த தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும் உண்டு.

எனவே, சமரசம் செய்யக் கடினமான அளவிற்கு இனப்பகைமையை மேலும் வளர்த்துவிட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னணியில், தமிழ் மக்களுக்கான தீர்வானது வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் 'பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையின்' அடிப்படையில், தமிழ் மக்கள் மத்தியில் எடுக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் அமைய வேண்டியதே சரியானதாகும். ஆனால் இது இலகுவான வழியில் நிறைவேறும் என்று எதிர்ப்பார்ப்பதற்கில்லை.

மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றோர் கடைப்பிடித்ததைப் போன்ற வெளிப்படையான, நேர்மையான, அர்ப்பணிப்பு நிறைந்த, சாத்வீக வழியிலான முழுநீள ஜனநாயக வழிப் போராட்டங்களை மேற்கொள்வதன் மூலமே சரியான தீர்வு சாத்தியமாக முடியும்.

முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஈழத்தமிழர்கள் தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் உள்ளாகியிருக்கும் அதேவேளை தமிழ் மக்கள் கேந்திர ரீதியான அமைவிடத்தை தமக்கான பெரும் சொத்தாகக் கொண்டவர்கள் என்பதும் கவனத்திற்குரியது. இந்த கேந்திர முக்கியத்துவத்தின் நலன் முதலாவதாக இந்தியா சார்ந்தது. இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் பயன்பொருத்தமான நல்லுறவு உருவாகவேண்டியது அவசியம்.

முதலில் ஈழத்தமிழ் மண்ணில் கால் வைத்த மகாத்மா காந்தியையும், நேருவையும் அடுத்து இந்தியப் பிரதமர் ஒருவரின் முதலாவது வருகையாக பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வருகை அமைந்திருந்தது. தமிழ் மக்களும் வடமாகாண முதல்வர் திரு.சி.வி.விக்னேஸ்வரனும் அவருக்கு பெரும் வரவேற்பு அளித்ததுடன் தமது எதிர்ப்பார்கையையும் வெளிப்படுத்தினர்.

இலங்கையின் இனப்பிரச்சனை முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிக சர்வதேசமயப்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், 'காய்ந்த பெருங் காட்டில் ஒரு தீப்பொறி பட்டு காட்டுத் தீ பரவுவது போல' ஈழத் தமிழரின் ஒரு சிறிய சாத்வீகப் போராட்டங்கூட இலங்கையின் அரசியலில் காட்டுத் தீயாய் பரவக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு கொதிநிலை மேலோங்கியுள்ள நிலையில், அர்ப்பணிப்பான, உறுதியான, வலுவான சாத்வீகப் போராட்டங்கள் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி அவர்களைச் செலுத்தும்.

ஈழத்தமிழினம் நூற்றாண்டுக் கணக்கான தொடர் தோல்விகளின் சுமையால் முதுகு வளைந்து கேள்விக்குறியாய் கூனிக்குறுகி நிற்கின்றது. இன்று ஈழத்தமிழினம் தோல்விகளின் உச்சக்கட்டமாய் எதிரிகளின் காலடியில் வீழ்ந்துகிடப்பதுடன் அந்நியர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டும் இருக்கின்றது. தோற்கடிக்கப்பட்டவனை எப்படியும் நடத்தலாம் என்று எதிரி நினைக்கும் நிலையுள்ளது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை, நீதி உரைக்க எவரும் இல்லை. இன்று ஈழத்தமிழன் மதிப்பிழந்து வெறும் நடைபிணமாய் நடமாடுகிறான்.

ஐ.நா சபையின் பாகப்பிரிவினை எல்லைக் கோட்டைத் தாண்டி யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இருப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. அதேவேளை யூதர்களிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு படிப்பினையும் இருக்கிறது. அதாவது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் மத்திவரை பரந்தளவில் ஐரோப்பிய நாடுகள் எங்கும் யூதர்கள் நையப்புடைக்கப்பட்டார்கள், கொன்றொழிக்கப்பட்டார்கள், அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆனால் பின்பு இஸ்ரேல் என்ற ஒரு தேசத்தை அமைத்ததைத் தொடர்ந்து யூதன் இந்த உலகின் எந்த மூலைமுடுக்குக்குப் போனாலும் அங்கு அவன் பாதுகாப்பும், மதிப்பும் உள்ளவனாக இருக்கிறான். அவன் உலகின் எந்தொரு நாட்டின் குடிமகனாக இருந்தாலும் அந்த நாட்டில் அவன் பாதுகாப்புடன் இருக்க முடிவதுடன் அவனுக்கென்று ஓர் அங்கிகாரமும், மதிப்பும் இருக்கிறது. அதற்கு அவர்களுடைய கையில் இஸ்ரேல் என்னும் ஓர் அரசு அந்த இனத்துக்குரியதாக இருப்பதுதான் காரணம்.

ஒரு யூதன் எந்த நாட்டில் குடிமகனாக வாழ்ந்தாலும் அவன் இஸ்ரேலின் குடியுரிமைக்கு தகுதியுடையவன் என்று இஸ்ரேலிய அரசியல் சாசனம் கூறுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்து இந்தியாவில் பல டசன் கணக்கான யூத குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவர்களுடைய மரபணு பரிசோதிக்கப்பட்டு யூதர்கள் என நிருபிக்கப்படும் இடத்து அவர்களுக்கு யூத குடியுரிமை வழங்குவதற்கான அறிவிப்பை இஸ்ரேலிய அரசு கடந்த ஆண்டு அறிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு யூதனுக்குமான பாதுகாப்பையும் மதிப்பையும் அங்கீகாரத்தையும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.

ஈழத்தமிழரின் முதலாவது பிரச்சனை பாதுகாப்பும், மதிப்பும் ஆகும். ஈழத்தமிழர்கள் வெறுமனே ஒரு சனக்கூட்டமல்ல. அவர்கள் தனித்துவமான மக்கள். அரசியல் அகராதியில் 'மக்கள்' என்ற சொல்லின் பொருள் ஒரு மனிதத்திரளைக் குறிக்கும் சொல்லல்ல. 'மக்கள்' என்றால் அது தேசிய இனத்தைக் குறிக்கும் பதமாகும். இதன்படி மக்கள் என்பது அவர்களுடைய நிலப்பகுதி, அவர்களுக்குரிய கடல் மற்றும் நீர்பரப்புக்கள், இயற்கைவளம், மொழி, பண்பாடு, பாரம்பரியம், கலை-இலக்கியம் என அனைத்தையும் கூட்டிணைத்த ஒரு பதமே மக்கள் என்பதாகும். அதாவது மக்கள் என்னும் பதத்தில் இருந்து நிலத்தையோ, இயற்கை வளங்களையோ, மனித வளங்களையோ பிரிக்க முடியாது. இவை அனைத்திற்குமான மதிப்பையும், அங்கீகாரத்தையும் கொண்ட ஒரு வாழ்வுக்குப் பெயரே தேசிய வாழ்வாகும். எனவே இத்தகைய தேசிய வாழ்விற்கான மதிப்பையும், அதிகாரத்தையும் தமிழ் மக்கள் பெறும்போதுதான் அவர்கள் அரசியல் அர்த்தத்தில் வளர்ச்சிக்குரியவர்களாவும், உலக நாகரீக வளர்ச்சியில் ஒரு சங்கிலிக் கொழுக்கியாகவும் அமைய முடியும்.

தொடரும்.. 

10/15/2016 6:53:19 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்