சண்முகவடிவேல்
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய பூகோள, பிராந்திய அரசியலும் சிங்கள- தமிழ் முரண்பாடும்
பனிப்போர்க் காலத்து உலக ஒழுங்கு ஏகாதிபத்திய வர்த்தக உலக ஒழுங்காக இருந்த போதிலும், சோவியத் யூனியன் தலைமையிலான அணியானது இந்த உலக ஒழுங்கின் ஏகபோகத் தன்மைக்குச் சவால் விடக்கூடியதாய் இருந்தது. எனவே இந்த உலக ஒழுங்கு நெருக்கடிக்கும் சுதந்திரமின்மைக்கும் உள்ளாகி இருந்தது. ஆனால் 1970-களின் மத்தியைத் தொடர்ந்து குறிப்பாக- 1970களின் பிற்பகுதியில் சீனா, சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க அணியுடன் பொருளாதார அரசியல் ரீதியில் கூட்டுச் சேர்ந்து கொண்டது. இதனால் உலக வர்த்தக ஏகாதிபத்தியத்தின் பக்கம் தூக்கலானது.
இவ்வாறு சீனா உலகமயமாக்கலில் நேரடியாகத் தன்னை இணைத்துக் கொண்டு 1980 களின் ஆரம்பத்திலிருந்து சர்தேச வர்த்தகத்தில் தன்னையும் ஒரு முக்கிய பங்காளியாக மாற்றத் தொடங்கவே, சுமாராக பத்து ஆண்டுகளுக்குள் அமெரிக்கா – சோவியத் யூனியன் என்பவற்றுக்கு இடையேயான சமநிலை முற்றிலும் மாற்றமடைந்தது. இச்சமநிலை மாற்றமடைந்ததால் சோவியத் யூனியன் வீழ்ச்சியடையவும் ஏகாதிபத்தியதின், வர்த்தக, நிதி மூலதன, தகவல் ஆதிக்க, ஒற்றை மைய அரசியல் உலக ஒழுங்காக ஸ்தாபிதம் அடையவும் முடிந்தது.
அதாவது ஒரு சோசலிச நாடாகவும் உலகின் முதலாவது பெரிய சனத்தொகை மிக்க நாடாகவும் காணப்பட்ட சீனா, ஏகாதிபத்திய வர்த்தக உலக ஒழுங்கிற்கு தலைமை தாங்கிய அணியான அமெரிக்கா தலைமையிலான அணியுடன் அரசியல் பொருளாதாரக் கூட்டை மேற்கொள்ளவே, அந்த அணி தலைமையிலான ஏகாதிபத்திய வர்த்தக நிதிமூலதனக் கொள்கை பெரிதும் மேலோங்கி உலகளாவிய வர்த்தக ஏகபோகத் தனித்துவத்தை ஸ்தாபித்துக் கொண்டது.
எனவே அமெரிக்க, தலைமையிலான ஏகாதிபத்திய, வர்த்தக, நிதிமூலதன, தகவல் ஆதிக்க, ஒற்றைமைய அரசியலானது பெரிய நாடான சீனாவின் அமெரிக்கச் சார்புக் கூட்டின் மூலமே சாத்தியப்பட்டது. இங்கு சீனாவின் நிலைப்பாட்டால் உலக அரசியல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அளவு ரீதியான மாற்றமானது (Quantitative change) உலக ஒழுங்கை முழு அளவிலான ஏகாதிபத்திய பொருளாதாரத்திற்கு மாற்ற உதவியது. ஏகாபத்தியத்திற்கான இயங்கியல் விதியை சீனாவின் நிலைப்பாடு ஒரு பெரியளவிலான அளவு மாற்றத்திற்குத் தள்ளவே அதன் வாயிலாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி துரிதமடைந்தது. அமெரிக்கா தலைமையில் ரஷ்யா உட்பட சீனாவையும் இணைத்து சுதந்திரமான உலக ஏகாதிபத்திய ஒழுங்கை நிலைநாட்ட சீனாவின் நிலைப்பாடு பெரிதும் வழிவகுத்தது.
ஏகாதிபத்திய வர்த்தக நிதிமூலதன தகவல் ஆதிக்க ஒற்றை மைய உலக அரசியல் ஒழுங்கானது சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இதுவரை தடையாக சோவியத் யூனியன் விளங்கியது. எனவே அவ்வாறான சோவியத் யூனியன் வீழ்ச்சி அடையவே அமெரிக்கா தலைமைதாங்கிய சுதந்திர வர்த்தகத்திற்கான பிரதான தடை அகன்றது. ஆனால் அதன் பின்பு மேற்காசியப் பிராந்தியத்தின் அரச பலத்துடன் சில இஸ்லாமிய நாடுகள் இதற்கு இடையூறாக இருந்தன. அந்த இடையூறும் ஈராக் வீழ்த்தப்பட்டதோடு அடங்கியது.
ஆனால் ஆப்கான் எனும் ஒரு இஸ்லாமிய அரசைத் தளமாகக் கொண்டு அல்கொய்தா போன்ற இயக்கங்கள் இதன் பின்பு முனைப்புப் பெற்றன. சவால்விட்ட ஈராக் தோற்கடிப்பட்டதோடு ஈரானிய அரசும் முடக்கப்பட்டது. இவ்வாறு அரசுபற்றிய சவால் ஓயும்போது, ஒரு அரசைத் துணையாகக் கொண்டு அரசற்ற ஆயுதம் தாங்கிய இயக்கம் அதன் அடுத்த தொடர் படிமுறை வளர்ச்சியாக நீட்சி பெற்றது. அதுவே ஆப்கானிய அரசை ஆதாரமாகக் கொண்டு அல்-கொய்தா இயக்கம் எழுச்சி பெற்றமையாகும்.
எனவே இப்போது அந்த அரசையும் அந்த அரசைத் தளமாகக் கொண்ட அல்-கொய்தா இயக்கத்தையும் அழிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. இங்கு அரசுகள் தோற்கடிக்கப்பட அதற்குப் பதிலாக இயக்கங்கள் எழுச்சி பெறுவதானது இயங்கியல் போக்கில் இன்னொரு வளர்ச்சிக் கட்டமாகும். அதேவேளை அந்த இயக்கங்களை அழிக்க வேண்டியது ஏகாதிபத்திய அரசியலுக்கும் அவசியமானதாக இருந்தது. வெட்டொன்று துண்டு இரண்டாக அரசுகள் தோற்க, இயக்கங்கள் எழுந்ததென்று இல்லை. பெரும் சவாலான சோவியத் யூனியன் தோற்க முனைப்புள்ள சிறிய அரசுகள் சவாலுக்கு வந்தமை இயங்கியல் வளர்ச்சிப் போக்கில் இன்னொரு கட்டமாகும். முனைப்பான சிறிய அரசுகள் தோல்வி அடைய அல்லது அடக்கப்பட அதைவிட சிறிய இன்னொரு முனைப்பான அரசைக் கருப்பையாகக் கொண்டு அல்-கொய்தா போன்ற இயக்கங்கள் அடுத்த கட்டத்திற்கு நீண்டன.

எனவே அல்கொய்தாவை அழிக்க அதன் கருப்பையாக இருந்த ஆப்கான் அரசையும் வீழ்த்த வேண்டியிருந்தது. இங்கு ஓர் அணிக்கு தலைமை தாங்கிய சோவியத் யூனியன் என்ற பெரிய அரசில் இருந்து பின்பு ஈரான், ஈராக் என்ற முனைப்புள்ள அரசுகளை தோற்கடித்தல் என்ற அடுத்த கட்டத்திற்கு மாறி, அதன் பின்பு ஆப்கான் என்கின்ற அரசின் துணையிலிருந்த அல்-கொய்தாவை அழிப்பதென்ற அதன் படிமுறைப் போக்கை நாம் தெளிவாகக் காணலாம். எனவே மூன்று அரசுகளைத் தாண்டி இயக்கங்களை அழித்தல் என்ற பரிணாம வளர்ச்சி ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டுள்ளமையைக் காணலாம்;.
இஸ்லாமிய இயக்கங்கள்தான் சர்வதேச பரிமாணத்துடனும், மிக இறுக்கமான அரசியலுடன் பின்னிப்பிணைந்த பலம் பொருந்திய மத-தத்துவத்துடனும், தொடர்ச்சியான மூன்று கண்டங்களைத் தழுவிய நிலப்பரப்புடனும் காணப்படுகின்றன. இந்நிலையில் சர்வதேச பயங்கரவாதம் என்ற கோட்பாடு - அடிப்படையிலும், உள்ளடக்கத்திலும் ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிரான கோட்பாடாகவே பிறப்பெடுத்தது. ஆனால் அது பொதுமைப்படுத்தப்படும் நிலையிலும், இந்துசமுத்திரம்சார் இலங்கைத்தீவின் அரசியல் சூழலிலும், சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் வரிசையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் இணைத்துக் கொண்டது.
பின்-லேடன் 'சர்வதேச பயங்கவாதம் என்பதன் குறியீடானார்'. பின்-லேடனுக்கு எதிரான யுத்தம் முழு உலகமும் தழுவிய ஒழுங்குக்கும், சட்டவரண் முறைகளுக்கும் உள்ளானது. சோதனைகள், புலனாய்வுகள், கைதுகள், விசாரணைகள் என எல்லாம் சர்வதேச மயப்படுத்தப்பட்டன. ஒரு வகையில் முழு உலகமும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது போல் காட்சியளித்தது.
பொதுவாக ஊடகங்கள் அனைத்தும் உலகளாவிய ரீதியில் சர்வதேச பயங்கரவாதம் என்ற ஒரு திசையில் செயற்பட்டன. உலகளாவிய மக்களின் மனங்களும், கருத்து உருவாக்கங்களும் இதன்வழியே நிகழ்ந்தன. குறிப்பாக மேற்குலக மக்கள் 'சர்வதேச பயங்கரவாதம்' என்ற ஒருவகைக் கிலிக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன்மூலம் விமர்சனத்திற்கு இடமற்ற வகையில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற மனவுருவாக்கத்திற்கு மக்கள் இலகுவில் உள்ளாக்கப்பட்டனர். ஒருவகையில் உலகின் வளங்கள் அனைத்தும் சர்வதேசப் பயங்கரவாதம் என்பதற்கு எதிராகத் திருப்பப்பட்டன. அவ்வாறு திருப்புவதற்கு மக்கள் மனமுவந்து ஆதரவளித்தனர். அதாவது 'சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு' என்ற ஒரு சமூக மனப்பாங்கு முழு அளவில் கட்டி வளர்க்கப்பட்டது.
சர்வதேச பயங்கரவாதம் என்ற சுலோகத்தின் கீழ் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடானது உள்நாட்டில் இராணுவ ஒடுக்குமுறைகளைச் செய்யும் அரசுகளுக்கு மிகவும் சாதகமான விடயமாய் அமைந்துவிட்டது. அதாவது ஆயுதப் போராட்டங்கள் என்பது சமூக அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒரு வெளிப்பாடே தவிர, அது ஒரு மனநோயின் வெளிப்பாடல்ல என்ற உண்மை மறைக்கப்பட்டு பயங்கரவாதமாக உருக்கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்த வகையில் ஆயுதப் போராட்டங்களை அமெரிக்கா பயங்கரவாத முத்திரையின் கீழ் எதிர்ப்பதானது, அரச பயங்கரவாதங்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்து கொண்டது. எனவே ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஒடுக்கப்படுமிடத்து ஏற்படும் சமூக பிரச்சினையின் வெற்றிடத்தை நிரப்பிச் சமன் செய்வதற்கு ஒரு வழி வரலாற்று அரங்கில் அமெரிக்காவிற்குத் தேவைப்பட்டது. அதாவது பனிப்போர்க் காலத்தில் ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பு ஓர் அணி நாடுகளால் எதிர்க்கப்படும் போது, மற்றைய அணிநாடுகளால் அது ஆதரிக்கப்படும். இதனால் அங்கு ஒரு சமநிலை நிலவும். ஆனால் ஒற்றை மைய உலக அரசியலில் இரு அணிகள் இல்லாததினால் சர்வதேச பயங்கரவாத முத்திரையின் கீழ் ஓர் அமைப்பு அழிக்கப்படும் போது, அங்கு அரச பயங்கரவாதம் மட்டும் தலையெடுப்பதற்கு சாதகமான சூழல் தோன்றுகிறது. எனவே அதனை எதிர்கொள்ள வேண்டிய தேவையின் நிமித்தம் முன்னிறுத்தப்படும் கோட்பாடே போர்க்குற்றம், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், மனித உரிமை மீறல் என்பனவாகும்.
இந்தவகையில் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு - அரச பயங்கரவாதம் என்னும் இரண்டிற்கும் கருத்தரித்த பிள்ளைதான் நாம் இன்று காணுகின்ற மேற்படி போர்க்குற்றம், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், மனித உரிமை மீறல் என்பவற்றிற்கான சர்வதேச விசாரணை என்பதாகும். இவை இதற்கு முன்பு காணப்பட்ட பதங்களே ஆயினும், பனிப்போரின் பின்தான் இங்கு குறிப்பிடப்படும் பரிமாணத்தில் முதன்மை ஏற்றி ஓர் ஆயுதமாக முன் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தவகையில் கிழக்கு ஐரோப்பாவில் மிலோசவிச்சுக்கள் மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள், ருவாண்டா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச நீதிமன்ற விசாரணைகளை உதாரணங்களாகக் கூறலாம். மேலும் ஆப்பிரிக்க நாடுகளின் ஆட்சியாளர்களை நோக்கியும், ராஜபக்ஷாக்களை நோக்கியும், சர்வதேச விசாரணைகளைக் கோரி எழுந்துள்ள சர்வதேசக் குரல்கள் இத்தகைய பரிமாணத்தைச் சார்ந்தவை.
இந்த வகையில் 'சர்வதேச பயங்கரவாதம்' என்ற கோட்பாட்டின் தவிர்க்க முடியாத விளைவே இன்று காணப்படும் புதிய 'மனித உரிமைக்' கோட்பாடு பற்றிய பரிமாணமாகும். இந்த வகையில் போர்க்குற்றம், இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான செயல், மனித உரிமை மீறல்கள் ஆகிய நான்கையும் உள்ளடக்கிய ஒரு புதிய பதமாக புதிய மனித உரிமைகள் என்ற பதம் இனி இக்கட்டுரையில் பயன்படுத்தப்படும்.
சுமாராக 2000-ஆம் ஆண்டின் முதல் தசாப்தத்தின் நடுப்பகுதிக்குப் பின் பின்-லேடன் தலையெடுக்க முடியாதளவு தோற்கடிக்கப்பட்டார். பின்-லேடன் உயிருடன் இருக்கும்போதே மேற்கிற்குச் சவாலான பயங்கரவாதம் என்பதன் முனை முறிக்கப்பட்டுவிட்டது. 2000–ம் ஆண்டு முதல் தசாப்தத்தின் மத்தியின் பின்பு ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய இயக்கங்களின் தாக்குதல்கள் குறிப்பாக இஸ்லாமியர் மத்தியிலேயே பெரிதும் நிகழ்ந்தன. அத்துடன் இந்தியாவிலும், தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதில் குறிப்பிடக்கூடியது 2008-ம் ஆண்டு மும்பைத் தாக்குதல். அதாவது மேற்குலகம் தனக்கான சவாலை பெரிதும் கட்டுப்படுத்திவிட்டது என்பதுதான் உண்மை. இந்தவகையில் மேற்குலகம் எதிர்நோக்கிய ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய இயக்கங்களின் சவால் பெருமளவு அருகிச்செல்லும் சூழலில், மேற்குலகின் கவலை சீனா பொறுத்ததாக அமையவே சீனா பக்கம் தனது கவனத்தை அது திருப்பத் தொடங்கியது.
இரட்டைக்கோபுரத் தாக்குதலால் உருவான கருத்துலக உருவாக்கம் அடைந்து பின்-லேடன் கொல்லப்பட்டதுடன் அது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு தசாப்தகால இடைவெளி தேவைப்பட்டுள்ளது. அந்த உறுதிப்படுத்தப்பட்ட கருத்துலகம் தனக்கான நேர்க்கணியப் பாதையில் தொடர்ந்து பயணிக்கின்றது. இரட்டைக் கோபுரம் தோற்றுவித்த கருத்துலகம் தமிழீழப் போராட்டத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. அக்கருத்துலகம் ஒரு சர்வதேச யதார்த்தமாய் உருத்திரண்டுவிட்டது. இக்கருத்துலகிற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் இடையிலான இடைவெளி இரட்டைவாய்க்காலில் ஓடிய இரத்த ஆற்றால் இணைக்கப்பட்டுவிட்டது.
பின்-லேடனின் மரணத்திற்குப் பழிவாங்கும் முகமாக பாகிஸ்தானிய இராணுவ முகாம் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி. இங்கு பின்-லேடனின் மரணம் தொடர்ந்து முஸ்லிங்களுக்குள் தொடர் மரணத்தை உருவாக்கும் ஓர் ஏதுவாய் அமைந்துள்ளதையும் நாம் காணலாம். அதேவேளை பின்-லேடனின் மரணத்தின் பின் சீன அமைச்சர் ஒருவர் அமெரிக்காவிற்கு எதிராகத் தெரிவித்துள்ள கருத்து ஆழ்ந்த கவனத்திற்குரியது. இது எதிர்கால உலக அரசியல் போக்கைக் கோடிகாட்ட வல்லதாய் அமைந்துள்ளது.
அதாவது 'மத்திய கிழக்கில் எழும் ஜனநாயக எழுச்சிப் போராட்டங்களுக்கு எதிராக சீனா மேற்கொள்ளும் நிலைப்பாடானது வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளும் முட்டாள்த்தனமான செயல்களாக அமைந்துள்ளன' என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிளாரி கிளிண்டன் கூறியதற்கு சீன அமைச்சர் பின்வருமாறு காட்டமாகப் பதிலளித்துள்ளார். அதாவது 'பின்-லேடன் கொல்லப்பட்டதுடன் இஸ்லாமிய உலகிற்கெதிரான அமெரிக்க யுத்தம் ஒரு முடிவிற்கு வந்துவிட்ட நிலையில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தன் யுத்தத்தை ஆரம்பிக்கின்றது' என்ற பொருளில் கூறியுள்ளார்.
இங்கு கவனிக்க வேண்டிய விசித்திரமான உண்மை என்னவென்றால் வரலாற்றில் ஏற்படும் மாற்றங்களோ வளர்ச்சிகளோ ஒரு கீறப்பட்ட கோட்டில் தெளிவாக ஆரம்பித்து இன்னொரு கீறப்பட்ட கோட்டில் தெளிவாக முடிவடைவதில்லை. முன்னுக்குப்பின் அந்த இரு கோடுகளும் கரையும். ஆனாலும் வரலாற்றின் வளர்ச்சிப்போக்குப் பாதை அதில் தெளிவாகத் தெரியும். பின்-லேடன் கொல்லப்பட முன்னமே பின்-லேடனின் பாதையும் பயணமும் வரலாற்றில் ஓரம் கட்டப்பட்டுவிட்டன. இனிமேலும் பின்-லேடனின் ஆதரவாளர்களால் ஆங்காங்கே தாக்குதல்கள் நடத்தப்படக்கூடியதாக இருந்தாலும், பின்-லேடனின் பாதை வரலாற்று வீரியத்தை இழந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை.
ஆதலால் பின்-லேடன் கொல்லப்பட முன்னமே பின்-லேடனின் பாதை தோற்கடிக்கப்பட்ட நிலையில் அதன் அடுத்த கட்டமாக இந்துசமுத்திரப் பிராந்தியம் தழுவிய உலக ஆதிக்கத்திற்கான சீன-அமெரிக்க அரசியல் இராணுவ வியூகங்கள் ஆரம்பமாகிவிட்டன. அந்த வியூகத்தில் ஒன்றுதான் இரட்டைவாய்க்கால் பேரழிவின் முடிவாகும். உண்மையாகப் பார்த்தால் இரட்டைவாய்க்காற் பேரழிவென்பது சர்வதேச வல்லரசு ஆதிக்கப் போட்டியின் ஒரு முக்கிய தொடக்கப் புள்ளி எனலாம்.
இந்துசமுத்திர அரசியற் சூறாவளியில் சிக்குண்ட ஈழத்தமிழர் போராட்டம் இரட்டை வாய்க்காலில் பிணங்களாய் மிதந்தன. பொருளாதார ஆதிக்கப் போட்டியில் வளர்ந்து வரும் சீன அரசானது இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கப் போட்டிக்கான ஒரு மையப் புள்ளியாக இலங்கைத்தீவை வியூகம் அமைத்துள்ளது. இவ்வியூக அரசியல் இரட்டைவாய்க்காலை இரத்தவாய்க்கால் ஆக்கியது. இரட்டைக்கோபுர அரசியல் முடிவு பின்-லேடனின் மரணத்துடன் ஒரு தெளிவான புள்ளியைக் கோடிட்டாலும் அதற்கு முன்பே இரட்டைவாய்க்காலில் உலக அரசியல் ஒழுங்கின் அடுத்தகட்டம் ஆரம்பமாகிவிட்டது. ஆதலால் இரட்டைவாய்க்கால் ஒரு புதிய அரசியல் ஒழுங்கின் இன்னொரு தொடக்கப் புள்ளி எனலாம்.
தொடரும்..