Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நேரடி அந்நிய முதலீடும் மறைமுக தந்திரங்களும்

நேரடி அந்நிய முதலீடும் மறைமுக தந்திரங்களும்
பிரவீண் குமார்

 

நவம்பர் 22ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்திய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் செயல்படாமல் முடங்கியுள்ளது. எல்லா சமயங்களிலும் எதிரும் புதிருமாக இருக்கும் பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பதில் கைகோர்த்துச் செயல்படுகிறார்கள். அன்னிய முதலீடு குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தொடக்கத்தில் வெறும் விவாதம் மட்டுமே நடத்தப்படும் என்றும் வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று மத்திய அரசு பிடிவாதம் பிடித்தது. ஆனால் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்கள் தரப்பு ஆதரவுகளை உறுதிசெய்த பிறகு காங்கிரஸ் அரசு வாக்கெடுப்பு நடத்த முன்வந்துள்ளது. டிசம்பர் 4, 5 தேதிகளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிக்கு உத்தரவாதம் கிடைத்த பிறகுதான் வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் வாக்கெடுப்பின் விளைவு பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. என்றாலும் வாக்கெடுப்புக் காரணமான விவகாரம் அவ்வளவு எளிதில் விட்டுவிடக்கூடியதல்ல. இந்த விவகாரத்தின் விளைவுகளை அலசுமுன் அதன் பின்னணியைப் பார்த்துவிடுவோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பகிரங்கமாக ஒரு அழைப்பை விடுத்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர ஐம்பது எம்.பி.க்களாவது வேண்டும் என்ற நிலையில் வெறும் 18 எம்.பி.க்களை மட்டுமே கைவசம் கொண்ட மம்தா பானர்ஜி, யாரையும் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை எடுத்தது எதிர்க்கட்சிகளிடையே எரிச்சலைக் கிளப்பியது. மம்தாவுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்பது தெரிந்த விஷயம். எனவே இடதுசாரிகள் மம்தாவை ஆதரிப்பதில் ஆர்வம் காட்டாததில் வியப்பில்லை. ஆனால் மம்தாவை இந்த விவகாரத்தில் ஆதரிக்க காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் எதிரியான பா.ஜ.க.வும் தயங்கியது.

மம்தா இறங்கி வந்தார். வேறு யாராவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிக்கத் தயார் என்று அறிவித்தார். அப்போதும் மயான அமைதியே நிலவியது. கடைசியில் திருணமூல் காங்கிரஸ் பின்வாங்க நேர்ந்தது.

அந்த நேரத்தில் கம்யூனிஸ்டுகள் கூறிய ஒரு யோசனை தற்போது வடிவம் பெற்றுள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தால் ஆறு மாதங்களுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீண்டும் கொண்டுவர முடியாது. அதற்கு பதிலாக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு சம்மந்தமாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்தி அதை வெற்றிபெறச் செய்தால் மத்திய அரசு ஆட்சியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். மேலும் காங்கிரசை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள்கூட இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டிக்க முன்வரும் என்று இடதுசாரிக் கட்சிகள் எதிபார்த்தன.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பதில் ஒவ்வொரு எதிர்க்கட்சிக்கும் ஒரு காரணம் உள்ளது. இந்த முதலீட்டால் பாரம்பரியமாக இருந்து வரும் தொழில்கள் நசுக்கப்படும் என்று பா.ஜ.க. கருதுகிறது. இந்த முதலீட்டால் முதலாளித்துவத்தின் ஆதிக்கம் தலைதூக்கும் என்று இடதுசாரிகள் நம்புகிறார்கள். இந்த முதலீட்டை ஆதரித்தால் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற எண்ணத்தில் பிற கட்சிகள் எதிர்க்கின்றன. இப்படி வௌ;வேறு காரணங்கள் இருந்தாலும் அனைத்துக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் காங்கிரசை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்திருக்கின்றன.

சில்லறை வர்த்தக விவகாரத்தில் அரசியல் சட்டப்பிரிவு 184இன் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மத்திய அரசு அதை ஏற்க மறுத்த்து. பிரதமரும், மத்திய அமைச்சர்களும் இது குறித்த விவாதத்திற்குத் தயார் என்றாலும் கொள்கை விஷயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இது வெறும் கொள்கை முடிவல்ல என்றும், இருபது கோடி மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட பிரச்சினை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

நேரடி அந்நிய முதலீடும் மறைமுக தந்திரங்களும்

நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்தன. வாக்கெடுப்பு நடக்கும்வரை அவையை நடத்த விடமாட்டோம் என்று பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் தெரிவித்தார்கள்.

இந்த விஷயத்தில் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நடந்தது. பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்ட சுஷ்மா ஸ்வராஜும், அருண் ஜெட்லியும் இந்தக் கடிதத்தைக் காட்டி விளக்கம் கேட்டார்கள். அதற்கு ஒரு மத்திய அமைச்சர், ''கடிதம் எழுதியது உண்மைதான். ஆனால் நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கலந்தாலோசிப்போம் என்று சொல்லவே இல்லையே'' என்று 'சாமர்த்தியமாக' பதில் கூறினார். உடன் இருந்த எல்.கே.அத்வானி, பிரதமரிடம், 'இந்த அமைச்சர் சீரியஸாகத்தான் பேசுகிறாரா?' என்று கேட்டிருக்கிறார். பிரதமர் அமைச்சரின் 'சாமர்த்தியமான' பதிலை அங்கீகரிக்கவில்லை.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்தன. தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'சில்லறை வர்த்தக விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தால் தி.மு.க. அதை ஆதரிக்கும்' என்றுக் கூறி காங்கிரசை அதிர்ச்சியடைய வைத்தார்.

ஆனால் காங்கிரஸ் அப்போதும் தைரியமாக இருந்தது. சில்லறை வர்த்தக விவகாரத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க முடியாது என்று அது நம்பியது. கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியது.

முதல் கட்டமாக அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் சோனியா காந்தி விருந்தளித்தார். அடுத்ததாக தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை மத்திய அமைச்சர் சந்தித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார். அப்போது சில்லறை வர்த்தக விவகாரத்தில் மத்திய அரசை ஆதரித்தால் தி.மு.க.வுக்குத் தமிழ்நாட்டில் ஏற்படும் இழப்புகளை கருணாநிதி எடுத்துரைத்ததாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் மாநில அரசுகளை மத்திய அரசு வற்புறுத்தாது என்று ஆசாத் உறுதியளித்தார். இறுதியில் மத்திய அமைச்சரின் சமாதானத்தை ஏற்றுக்கொண்ட கருணாநிதி, சில்லறை வர்த்தக விவகாரத்தில் வாக்கெடுப்பு நடந்தால் மத்திய அரசை தி.மு.க. ஆதரித்து வாக்களிக்கும் என்று அறிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை உறுதிசெய்த பிறகு காங்கிரஸ் தெம்புடன் வாக்கெடுப்பு நடத்த முன்வந்தது. டிசம்பர் 4,5 தேதிகளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தது.

மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரித்துவரும் முலாயம் சிங் யாதவ் இரண்டு அவைகளிலும் இருவேறு நிலைகளை எடுத்துள்ளார். மத்திய அரசை ஆதரிப்பதால் மக்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவான நிலையை சமாஜ்வாதி கட்சி எடுத்துள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களவையில் அரசை எதிர்த்து வாக்களிப்போம் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது. சில்லறை விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் செப்டம்பர் 20ஆம் தேதி நடத்திய ஒருநாள் கடையடைப்பை சமாஜ்வாதி கட்சி ஆதரித்த மறுநாளே மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் முடிவை அது எடுத்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்கெடுப்பில் தனது நிலை என்ன என்பதை திருணாமூல் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. மானிய விலையில் சமயல் எரிவாயு தருவதை நிறுத்தியது, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அறிவித்தது ஆகிய விவகாரங்களால் மத்திய அரசிலிருந்து அது விலகியது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவராததை அது குறைகூறுகிறது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று அரசை எதிர்ப்பதா அல்லது புறக்கணிப்பதா என்பதை அது இனிமேல்தான் முடிவு செய்ய போகிறது.

இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் தோற்கும் என்ற சூழ்நிலையே நிலவுகிறது. ''இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் வெற்றியடையுமா அல்லது தோல்வியடையுமா என்பது பிரச்சினையல்ல. முக்கியமானதொரு அறிவிப்பை மக்களுக்குத் தெரியாமல் வெளியிட்டதை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்துவதற்கு இதுவே நேரம்'' என்கிறார் வழக்கறிஞர் சிவமூர்த்தி (35). இந்த வாக்கெடுப்பு வெற்றிபெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளைப் பெற்றால் அடுத்தமுறை முக்கியமான விஷயங்களில் மத்திய அரசு அலட்சியமாக செயல்பட யோசிக்கும் என்று அவர் கருதுகிறார்.

வாக்கெடுப்பு குறித்த காங்கிரஸின் தந்திர அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டில் காங்கிரஸ் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஏன் என்பதைப் பார்க்க வேண்டும். பிரதமர் அழைத்த விருந்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்துகொண்டிருந்தார். நாடு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும் அதைப் போக்க இதுபோன்ற சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் அவர் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளிடம் கூறியிருக்கிறார். இதுதான் அரசின் அதிகாரபூர்வமான நிலைப்பாடு. ஆனால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குவிந்தால் நாட்டின் நிதி நெருக்கடி தீர்ந்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சில்லறை வர்த்தகம் என்பது உள்நாட்டில் சிறிய முதலீட்டுடன் சிறு முதலீட்டாளர்கள் பெரும்பாலான அளவில் செயல்பட்டுவரும் துறை. இதில் புழங்கும் பணம் அதிகம். இது அன்னிய நிறுவனங்களின் கையில் போனால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள். 'இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் 4 கோடி சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்' என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினால் நுகர்வோருக்குத் தொடக்கத்தில் சில நன்மைகள் கிடைக்கும். ஆனால் மெல்ல மெல்ல, சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களும் சேவைகளும் அன்னிய நிறுவனங்களின் பிடிக்குள் சென்றுவிடும். அதன் பிறகு அந்த நிறுவனங்கள் வைத்ததே சட்டம் என்று ஆகிவிடும்.

இது ஒரு புறம் இருக்க, அன்னிய முதலீடு உள்ளே வருவதால் நிதி நெருக்கடி தீருவது என்பது தொலைநோக்கில் சாத்தியமில்லை. அன்னிய நிறுவனங்கள் கன ரகத் தொழில்களிலோ மின்சாரம் போன்ற பெரிய விஷயங்களிலோ பெருமளவில் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. உள்நாட்டுத் தொழில்களும் உள்நாட்டு மொத்த உற்பத்தியும் பெருகுவதே, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் உண்மையான பலமாக இருக்க முடியும். விவசாயம் போன்ற ஆதாரமான துறைகளில் அக்கறை செலுத்தாமல் அன்னிய முதலீட்டையே காயகல்பமாக எண்ணிச் செயல்படுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து பல முடிவுகளை எடுத்திருக்கிறது. அணு ஒப்பந்தம் முதல் அன்னிய முதலீடுவரை இந்தியா அமெரிக்காவின் காலனி நாடுபோலவே செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அமெரிக்காவின் நிர்ப்பந்தமே காங்கிரஸின் முடிவுக்குக் காரணம் என்று காரத் கூறுகிறார். உள்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அமெரிக்காவுக்கு சில்லறை வர்த்தகத்தில் இந்தியாவின் பரந்து விரிந்த சந்தை என்பது பணம் காய்ச்சி மரம். எனவே அதில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதனால் உள்நாட்டில் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை யோசிக்க வேண்டியது இங்குள்ள அரசின் கடமை. அதை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அன்னிய முதலீடு கொண்டுவரப்படலாம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மதிப்பில்லாமல் போகலாம். ஆனால் மக்கள் மன்றத்தில் அது உரக்க ஒலிப்பதைத் தடுத்து நிறுத்த முடியாது.

12/4/2012 5:07:44 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்