Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்தியாவிற்கு எதிரான சீனாவின் மூவகை வியூகமும் அதற்குப் பலியாகும் ஈழத் தமிழரும்

இந்தியாவிற்கு எதிரான சீனாவின் மூவகை வியூகமும் அதற்குப் பலியாகும் ஈழத் தமிழரும்
மு.திருநாவுக்கரசு

 

இலங்கையின் உள்நாட்டு அரசியல் என்பது வெளிநாடுகளின் அரசியலாய் உள்ளது. அதாவது வெளிநாடுகளின் அரசியற்தான் இலங்கையின் உள்நாட்டு அரசியலாகும்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா என்பனவற்றின் பூகோளம் தழுவிய அரசியல் பொருளாதார நலன்கள்தான் அந்நாடுகளின் உள்நாட்டு அரசியலாகும். இந்த வகையில் குறிப்பாக சீனா, அமெரிக்கா என்பனவற்றின் பூகோளம் தழுவிய அரசியல் நலன் இலங்கையின் உள்நாட்டு அரசியலாக வடிவம் பெற்றுள்ளதுடன் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனும் இலங்கையின் உள்நாட்டு அரசியலாய் பரிமாணம் பெற்றுள்ளது.

இதனால் உலகளாவிய பூகோள அரசியல், இந்திய உபகண்டம் சார்ந்த புவிசார் அரசியல் ஆகிய அரசியல் அச்சாணியின் மையமாக இலங்கை காணப்படும் நிலையில் அதில் அரசற்ற மக்களாகிய ஈழத் தமிழர்கள் முதன்மையான இலக்குப் பொருளாக உள்ளனர்.

அதேவேளை இலங்கை அரசு இதன் பின்னணியில் தனக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களையும், தனக்கேற்படக்கூடிய ஆபத்துக்களையும், சவால்களையும் ஈழத் தமிழர்களை மூலாதாரமாகக் கொண்டு அரசியல் இராஜதந்திர ரீதியில் கையாள்கிறது. இவற்றை இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் ஆராய்வோம். இதற்கு அடிப்படையாக இன்று காணப்படும் உலகளாவிய நிலவரத்தை நோக்குவோம்.

இன்று உலக அரசியலில் பிரச்சனைக்குரிய 9 பகுதிகளும் ஆசியாவிலேயே உள்ளன. அவை ஆசிய இந்துசமுத்திர பகுதியையும், ஆசிய பசிபிக் சமுத்திர பகுதியையும் உள்ளடக்கிய பகுதிகளாகும். ஒரு கண்டம் இரு சமுத்திரங்கள் பிரச்சனைக்குரிய ஒன்பது பகுதிகளென இவை அமைகின்றன.

தென்னாசியாவில் இலங்கை, காஷ்மீர், குவாதர் என மூன்று பிரச்சனைக்குரிய பகுதிகள் உள்ளன. மத்திய கிழக்கெனப்படும் மேற்காசியாவில் சிரியா, ஈராக், அரபு-இஸ்ரேலிய பகுதிகளென மூன்று பகுதிகள் உள்ளன. கிழக்காசியாவில் வடகொரியா, தாய்வான் என்பனவற்றுடன் கூடவே தென்சீனக்கடல் என பிரச்சனைக்குரிய ஒன்பது பகுதிகள் மொத்தமாக உள்ளன.

இவற்றில் சிரியா, ஈராக், அரபு-இஸ்ரேலிய பகுதியென மேற்காசியாவின் மூன்று பகுதிகளையும் தவிர்ந்த மிகுதி ஆறு பகுதிகளும் சீனாவோடு நேரடியாக சம்பந்தப்படும் பகுதிகளாகும்.

மேற்காசியாவில் மேற்படி மூன்று பிரச்சனைக்குரிய பகுதிகளிலும் சீனாவிற்கு குறைந்தபட்ச பங்கே உண்டு. இதில் அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடியாக சம்பந்தப்படுகின்றன. இங்கு சிரியா, ஈராக் ஆகிய இரு பகுதிகள் தற்போது கொதிநிலை யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பகுதிகளாகும். இவற்றில் சிரியா பிரச்சனைக்கு ஊடாக ரஷ்யா டாட்டஸ் (Tartus) துறைமுகத்தை தன்வசப்படுத்திவிட்டது. இங்கு ரஷ்யா நிரந்தர கடற்படைத்தளத்தை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் ஏக ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக மேற்காசியா மாறுவதை ரஷ்யாவால் தடுக்க முடிந்துள்ளது. இது உலக அரசியலில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரை அதைப்பற்றி விபரிப்பதையோ அன்றி ஆராய்வதையோ தவிர்க்கிறது. ஆனால் அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ பல ஏகத்துவத்திற்கு ஆப்பு வைத்திருக்கும் நிகழ்வாக சிரியாவின் டாட்டஸ் துறைமுகத்தில் ரஷ்யா நிலைகொண்டுள்ள சம்பவம் அமைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் சீற்றம் ஏனைய பகுதிகளை நோக்கி முன்னெச்சரிக்கையுடன் வீறுகொண்டெழ இடமுண்டு.

இந்தியாவிற்கு எதிரான சீனாவின் மூவகை வியூகமும் அதற்குப் பலியாகும் ஈழத் தமிழரும்

ஆனால் மேற்படி ஏனைய ஆறு பகுதிகளும் நேரடியாக சீனாவுடன் சம்பந்தப்படுகின்றன. இதில் சீனாவோடு இந்தியா தென்னாசியாவில் நேரடியாக மூன்று இடங்களில் சம்பந்தப்படுகின்றது. கிழக்காசியா மற்றும் தென் சீனக்கடல் பகுதியில் சீனாவுடன் அமெரிக்கா சம்பந்தப்படுகின்றது.

தென்னாசியாவில் பாகிஸ்தானின் குவாதர், காஷ்மீர் ஆகிய இருபகுதிகளும் இந்தியாவுடன் நேரடியாக பிரச்சனைக்குரிய பகுதிகளாக உள்ளன. இத்துடன் இலங்கையும் அதில் ஒன்றாக அமைகிறது. இந்த மூன்றில் குவாதர், இலங்கை ஆகிய இரண்டு இடங்களும் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நெருக்கடி மிகுந்த பகுதிகளாக உருவெடுக்கின்றன. இதில் அமெரிக்காவின் செயற்பாடு இந்தியாவுடன் இணைந்ததாகவே அமையமுடியும்.

மேற்காசியாவில் அதாவது சிரியாவின் டாட்டஸ் துறைமுகத்தில் ரஷ்யா தளம் அமைத்ததன் மூலம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நீண்டகால தோல்வியானது அமெரிக்காவை தென்னாசியா நோக்கி அதிகம் அக்கறை கொள்ளச் செய்யும். தென்னாசியாவில் சீனா தலையெடுத்தால் ஒருபுறம் மேற்காசியாவில் ரஷ்யாவுடனும் அதேவேளை தென்னாசியாவில் சீனாவுடனும் இருபெரும் வல்லரசுகளுடன் அமெரிக்கா ஒரே நேரத்தில் மோத நேரும். ஆதலால் இதுவிடயத்தில் இந்தியாவிற்கு துணையாக நிற்பதன் மூலம் சீனாவை புறந்தள்ளுவதற்கான தெரிவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்கும்.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான சீனாவின் தென்னாசிய மூவகை வியூகத்திற்கு மையப்புள்ளியாக இலங்கை அமைகிறது. ஆதலால் தென்னாசியாவுக்கான சீனாவின் இந்திய எதிர்ப்பு வியூகத்தை தகர்க்க இலங்கையின் மீது சீனா மேற்கொள்ளும் நிலையெடுப்புக்களை தகர்த்தாக வேண்டும். இந்நிலையில் இலங்கை உலகளாவிய வல்லரச ஆதிக்க வியூகத்தில் ஒரு பகுதியாகிறது.

தற்போதைய நடப்பாண்டில் மேற்காசியாவில் சிரியா, ஈராக் என்பனவற்றை சூழ்ந்து எரிநிலை யுத்தம் மையம் கொண்டுள்ளது. இது விரைவில் சுமூக நிலையை அடையக்கூடிய ஒன்றல்ல. அதேவேளை தென்னாசியா சார்ந்த பிரச்சனை மற்றும் வடகொரியா சார்ந்த பிரச்சனை என்பன பொறுமை காக்கப்படக்கூடிய விடயங்களும் அல்ல.

சீனா தற்போது தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸை தன்பக்கம் வென்றெடுப்பதில் கணிசமான அளவு முன்னேறியுள்ளது. உத்தியோகபூர்வமாக இன்றைய பிலிப்பைன்ஸ் அரசாங்கம் சீன சார்பு நிலையை எடுத்துள்ளது. இது அமெரிக்காவிற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மத்தியில் புதிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

இத்தகைய பின்னணியில் வரப்போகும் ஆண்டில் தென்னாசியா அதிகம் முன்னரங்க பிரச்சனைக்குரிய பகுதியாக மாறுவதற்குரிய சூழல்கள் உள்ளன. இதில் இலங்கை மையப் புள்ளியாகும். இந்தய – சீன - பாகிஸ்தானிய நெருக்கடி அமெரிக்காவிற்கு ஏனைய பிராந்தியங்களில் சற்று நெருக்கடித் தளர்வை ஏற்படுத்தவல்லது. இவ்வகையில் இந்தியா களத்தில் இறங்குவதும் அதற்கு அமெரிக்கா துணையாக இருப்பதும் தவிர்க்கமுடியாதவாறு நிகழ்ந்தேறும்.

அநேகமாக வரக்கூடிய 2017ஆம் ஆண்டு தென்னாசியப் பிரதேசம் ஒரு பெரும் பதட்டப் பிராந்தியமாக அமைய அதிக ஏதுக்கள் உள்ளன. இதில் சிக்குண்ணப்போகும் முக்கிய புள்ளியாக இலங்கைத் தீவு அமையும். அது ஈழத் தமிழரை மையமாகக் கொண்ட பிரச்சனைக்கு ஊடாகவே உருவெடுக்கும்.

இந்நிலையில் ஈழத்தமிழர்கள் அதிகம் முன்னறிவுடன் செயற்பட வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை சீனாவின் இந்தியாவிற்கு எதிரான மேற்படி மூவகை வியூகம் நிர்ணயிக்கவுள்ளது.

இதில் சீனா நிரந்தரமாக இலங்கை அரசின் நண்பன். அதேவேளை நிரந்தரமாக ஈழத்தமிழரின் எதிரி. இலங்கை அரசுக்கு நண்பனாக இருப்பதன் மூலமே தனக்கான பிராந்திய நலனை உறுதிப்படுத்தலாம் என்பதால் அது தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது தவிர்க்க முடியாது. இது மிக எளிமையான ஒரு சூத்திரமாகும்.

இந்தியாவை வெற்றிகொள்ளாமல் இந்து சமுத்திரத்தை வெற்றி கொள்ளமுடியாது என்பது ஓர் அடிப்படை உண்மையாகும். ஆதலால் இந்து சமுத்திரத்தை வெற்றிகொள்ள விரும்பும் சீனாவின் முதற்தரக் கவனம் இந்தியாவை வெற்றி கொள்ள வேண்டியதாக அமைகிறது.

இதன்படி இந்தியாவை வெற்றிகொள்ள அது மூவகை வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. அதை 3 'EN' களைக் கொண்ட வியூகமென அழைக்கலாம்.  அதாவது Encirclement, Envelopment and Entanglement என்பனவே அந்த மூன்று 'EN' களுமாகும்.

இந்த வியூகத்தின் முதலாவது அங்கம் இந்தியாவை கேந்திர ரீதியில் சுற்றிவளைப்பது (Encirclement) என்பதாகும். அதாவது இந்தியாவை புவியியல் ரீதியாக சூழவுள்ள இலங்கை, பாகிஸ்தான் சீனாவின் தீபெத்தியப் பகுதி, நேபாளம், பங்களாதேஷ், மியான்மார் என்பவற்றில் சீனா கேந்திர ரீதியாக நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் இந்தியாவை கழுத்துப் பிடியில் பிடிப்பது சீனாவின் முதலாவது வியூகமாகும். சீனாவின் 'முத்துமாலை' வியூகமும் இதனை உள்ளடக்கியதாகும்.

இரண்டாவதாகிய 'அடைத்து மூடுதல்' (Envelopment) என்ற அம்சத்தின்படி மேற்படி இந்தியாவின் அயல்நாடுகளை சீனப் பொருளாதாரத்தோடு ஒன்றிணைத்து ஒட்டிவிடுவதாகும்.

மூன்றாவதாகிய 'கிடுக்குப்பிடிக்குள் சிக்குண்ணச் செய்வது' (Entanglement) என்ற அம்சத்தின்படி மேற்படி இந்தியாவின் உள்நாட்டு முரண்பாடுகளை பயன்படுத்தி இந்தியாவை உள்நாட்டு ரீதியாக பாதுகாப்பற்ற நெருக்கடிக்குள் தள்ளுவது.

மேற்படி மும்முனை கூர்களைக் கொண்ட இந்த வியூகத்தை செயல்படுத்துவதற்கான மையப் புள்ளியாக இலங்கையை தன்வசப்படுத்துவது என்பதே சீனாவின் முதன்மையான திட்டமாகும். அதில் தமிழரின் இனப்பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்தி இலங்கை அரசிடம் தனக்கு சாதகமான நிலையை தோற்றுவிப்பது என்பதே சீனாவின் இலங்கை சார்ந்த பிரதான மூலோபாயமாகும்.

சீனா பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் தலையெடுப்பது, இலங்கையில் தலையெடுப்பது என்பதுடன் கூடவே காஷ்மீர் பிரச்சனை என்னும் மூன்றும் தென்னாசியாவின் இந்திய அரசு எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனைகளாகும். இதில் முதல் இரண்டுடனும் இந்தியா நேரடியாக சீனாவுடனும், இலங்கையில் நேரடியாக சீனாவுடனும், மற்றும் குவாதர், காஷ்மீர் விவகாரங்களில் கூடவே பாகிஸ்தானுடனும் சம்பந்தப்படுகின்றது. இங்கு சீனா – பாகிஸ்தான்- இலங்கை ஆகிய மூன்று அரசுகளுடனும் இந்தியா மோதுண்ணாமல் இப்பிரச்சனைகளை அதனால் கையாள முடியாது. இதில் இந்தியாவிற்குத் துணையாக அமெரிக்காவும், ஏனைய மேற்குலக நாடுகளும் இந்துசமுத்திரத்தில் உள்ள ஒரு மேற்குலக நாடான ஆஸ்திரேலியாவும் இந்தியாவுடன் கைகோர்க்கக்கூடியவை என்பதுடன் ஜப்பானும் இதில் மேற்குல நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்தியாவிற்கு அனுசரணையாக முடியும்.

அதேவேளை அமெரிக்கா சம்பந்தப்பட்ட விடயத்தில் ரஷ்யா அமெரிக்க எதிர்நிலை எடுக்க விரும்புவது இயல்பானதே. ஆனாலும் உலகம் தழுவிய ரஷ்யாவின் பூகோள பொருளாதார நலன் என்பது அதற்கு பிரதானமாக உற்பத்திப் பண்ட (Commodity) வர்த்தகத்தில் தங்கியதாயில்லை. மாறாக எரிவாயு உட்பட்ட இயற்கை மூலவள வர்த்தகத்திலும் ஆயுத விற்பனை வர்த்தகத்திலும் உயர்தொழில்நுட்ப வர்த்தகத்திலும் தங்கியுள்ளது. இதில் ஆயுதம் மற்றும் தொழில்நுட்ப விற்பனைக்கான ரஷ்யாவின் பெரிய சந்தையாக இருப்பது இந்தியாவாகும். அத்துடன் இந்துசமுத்திரத்தின் பிரதான நாடாக இருப்பதும் இந்தியாவாகும். எனவே இந்தியாவை பகைக்க ரஷ்யா ஒருபோதும் முற்படாது. அதேவேளை அதற்கு அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாடும் இருக்கும். இந்நிலையில் இந்தியா பொருட்டு ரஷ்யா நடுநிலை வகிப்பதைத்தவிர அதற்கு வேறு மாற்றுவழி இருக்காது. நடுநிலையென்பது வெல்லும் பக்கத்திற்குச் சார்பானது என்பதே நடுநிலைப்பற்றிய கோட்பாட்டு விளக்கமாகும்.

எப்படியோ இங்கு பிரச்சனை ஏற்படும் போது தென்னாசியா பொறுத்து சீனா-பாகிஸ்தான்-இலங்கை என்பன தெளிவான ஓர் அணிக்குள் அமையும். இந்தியாவிற்கு அனுசரணையாக அமெரிக்காவும், அமெரிக்காவிற்கு அனுசரணையாக இந்தியாவும் செயற்படக்கூடிய நிலையில் அமெரிக்க சார்பு நாடுகள் இந்திய சாய்வு நிலைப்பாட்டை எடுக்கும்.

இத்தகைய ஒரு பின்னணியிற்தான் 2017ஆம் ஆண்டின் பெரும் போக்கானது இந்துசமுத்திரம் சார்ந்த தென்னாசியப் பிராந்தியத்தில் நிகழவுள்ளது. இங்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் ஆசிய-பசிபிக் பிராந்தியம், இந்துசமுத்திர மேற்காசிய பிராந்தியம் என்பனவற்றின் கூட்டுவிளைவாகவே வடிவம் பெறும் அல்லது அவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகும்.

இதன் பின்னணியில் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கும் 2020ஆம் ஆண்டிற்கும் இடையில் தென்னாசியா இன்றைய மேற்காசியாவைப் போன்ற அல்லது அதைவிட சற்று அதிகமான ஒரு யுத்த பூமியாக அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனால் இந்த நவீன உலகில் யுத்தம் எரிநிலையில் நீண்டகாலம் நீடிக்க முடியாது. ஒரு யுத்தம் வெடித்தால் அதுவும் ஓரிரு ஆண்டுகள் மட்டும்தான் நீடிப்பதற்கான ஏதுக்கள் உண்டு.

பலுசிஸ்தான், காஷ்மீர், இலங்கை அதுவும்; தமிழீழப் பிரச்சனை என்பன இங்கு கொடிவிட்டு நகர்வதற்கான ஏதுக்கள் அதிகமுண்டு. எப்படியோ இதில் இலங்கையும், ஈழம் பிரச்சனையும் தலையாய இடத்தை வகிக்கும்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல இலங்கையின் உள்நாட்டு அரசியல் என்பது வெளிநாடுகளின் அரசியலாகும். அப்படியே பெருவல்லரசுகளின் உள்நாட்டு அரசியல் என்பது பூகேளாம் தழுவிய அரசியல் நலன்களாகும். இந்த வகையில் பெருவல்லரசுகளின் பூகோள மற்றும் புவிசார் அரசியல் ஆதிக்கத்திற்குள் இலங்கைத் தீவும் ஈழத் தமிழர் பிரச்சனையும் உள்ளது.

இலங்கையின் உள்நாட்டு அரசியல் என்பது வெளிநாடுகளின் அரசியலாக இருக்கும் அதேவேளை வல்லரசுகளின் உள்நாட்டு அரசியல் என்பது அதாவது அவற்றின் தேசிய நலன் என்பது பூகோளம் சார்ந்த அரசியலாக உள்ளது.

அமைவிட ரீதியாக இந்தியாவிற்கு அருகே இலங்கை காணப்படுவதால் அது இந்தியாவுடன் தொடர்புடைய புவிசார் அரசியல் சர்ச்சைக்குரிய புள்ளியாக உள்ளது. மேலும் இந்துசமுத்திரத்தின் மத்தியில் இராணுவ ரீதியான கேந்திரம் மற்றும் உலக வர்த்தக ரீதியான மையமாக இலங்கை அமைந்துள்ளதால் அது ஏனைய உலக நாடுகளின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்த வகையில் இலங்கை புவிசார் ரீதியிலும், உலகம் தழுவிய பூகோள ரீதியிலும் உலகின் பல்வேறு நாடுகளோடும் தொடர்புறுவதால் அது வெளிநாடுகளின் அரசியல் ஆடுகளமாய் காட்சியளிக்கிறது.

இதன் பின்னணியில் புவிசார் அரசியல் ரீதியிலும், பரந்த பூகோள அரசியல் ரீதியிலும் இலங்கைக்கு வாய்ப்புக்களும் உள்ளன, ஆபத்துக்களும் உள்ளன. சவால்களும் உள்ளன.

இதன்படி இலங்கையின் ஆட்சியாளர்கள் இவ்வாறு காணப்படும் வாய்ப்புக்களை கனகச்சிதமாக தமதாக்கிக் கொள்வற்கு தமிழ் மக்களின் பிரச்சனையை ஏதுவாக்கி விடுகின்றனர்.

அதேவேளை தமக்கு ஏற்படவல்ல ஆபத்துக்களையும், சவால்களையும் சமாளிப்பதற்கு ஈழத் தமிழர் பிரச்சனையை அடியாதாரமாக கையாள்கின்றனர்.

எப்படியோ இலங்கை அரசு புவிசார் ரீதியிலும், பூகோள ரீதியிலும் தனக்குச் சாதகமாக காணப்படுகின்ற வாய்ப்புக்களைப் பெறுவதற்கு தமிழர் பிரச்சனையை ஆதாரமாக்குவதுடன் தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கும் தமிழர் பிரச்சனையை கருவியாக்கிவிடுகிறது.

இலங்கை அரசிடமிருந்து நலன்களை அடைய விரும்பும் எந்தொரு அரசும் இதில் இலங்கை அரசுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கவே முயலும். ஆனால் தமிழ் மக்களின் பக்கம் தமக்கு நலன்கள் இருக்கின்றன என்பதை உணரும் நாடுகள் இதில் தமிழ் மக்கள் பக்கம் சாய வாய்ப்புண்டு.

வாய்ப்புக்களை பெறுவதற்காகவும் சவால்களை எதிர்கொள்வதற்காகவும் ஈழத் தமிழர் பிரச்சனையை கையாள்வதில் இலங்கை அரசியல் தலைவர்கள் கைதேர்ந்தவர்கள். இதில் மேற்படி யதார்த்தத்தை சரிவர புரிந்து கொண்டு காணப்படும் நிலைமையில் சாதகமானவற்றை ஒன்று திரட்டி முன்னெடுக்கக்கூடிய வியூகங்களை தமிழ்த் தரப்பு வகுக்கத் தவறினால் வரப்போகும் சில ஆண்டுகள் தமிழருக்கு மிகவம் துரதிருஷ்டவசமானவை.

ஆனால் இவற்றின் அரசியல் உடற்கூற்றியலை சரிவர புரிந்து நடைமுறைசார்ந்து கையாள முற்பட்டால் அது ஈழத்தமிழரின் வாழ்வில் வரப்போகும் ஆண்டுகள் அதிர்ஷ்டவசமானவையாக அமைய முடியும். இதில் எது தெரிவு என்பதற்கான வாய்ப்புக்கள் ஈழத் தமிழர் கையில் உண்டு.

11/5/2016 2:16:45 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்