Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ் செய்தி ஊடகங்கள் - காட்சி ஊடகங்களில் புதிய அலை

தமிழ் செய்தி ஊடகங்கள் - காட்சி ஊடகங்களில் புதிய அலை
சந்திர. பிரவீண்குமார்

 

2001ஆம் வருடம் ஜூன் மாதம் தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி கைது செய்யப்பட்டார். அப்போதும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. நள்ளிரவு 3 மணிக்கு கருணாநிதி கைது செய்யப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களில் கருணாநிதி தரதரவென்று காவல் துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டதாக சன் ரி.வி. செய்தி ஒளிபரப்பியது. சன் அடிக்கடி ஒளிபரப்பிய வீடியோ காட்சிகளில் 'ஐயோ கொல்றாங்களே...' என்ற கருணாநிதியின் அலறல் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது. அந்த அலறல் உண்மையிலேயே உலகத் தமிழர்களை பதற வைத்தது. அந்த முதுபெரும் தலைவருக்கு அவமானம் நேர்ந்ததாக அவரைப் பிடிக்காதவர்கள்கூட உண்மையிலேயே பதறிவிட்டார்கள்.

ஆனால் சில மணி நேரத்தில் ஜெயா ரி.வி.யில் ஒரு வீடியோ காட்சி அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது. அதில் 'ஐயோ கொல்றாங்களே....' என்ற அலறல் குரல் உண்மையில் சன் ரி.வி. அதிபர் கலாநிதி மாறனுடையது. காவல்துறை கருணாநிதியை கண்ணியமாகத்தான் நடத்தினார்கள் என்று கூறப்பட்டது. சிரித்தபடியே கருணாநிதி அறையை விட்டு வெளியே வந்த காட்சியையும் ஒளிபரப்பியது ஜெயா ரி.வி. அதைப் பார்த்தவுடன் உலகத் தமிழர்கள் குழப்பம் அடைந்தார்கள். உண்மை, இரண்டு தொலைக்காட்சிகளுக்கு மத்தியிலோ அல்லது அதற்கு அப்பால் வேறொரு காட்சியிலோ இருப்பதாக நம்பினார்கள் நடுநிலைமையாளர்கள். உண்மையைத் தங்கள் விருப்பம்போலக் கற்பனை செய்துகொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இன்று வரை அந்த செய்தியின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள முடியாததுதான் பரிதாபம்.

இந்தச் சம்பவம் என்றில்லை. பல்வேறு சூழல்களிலும் இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கு இடையேயான போட்டியில் பல்வேறு சம்பவங்களில் இந்த நிலைதான் தமிழக அரசியல் களத்தில் நீடித்தது. நியாயம் எப்போதும் இரண்டுக்கும் நடுவில் அல்லது வெளியில் இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால் இதுபோன்ற நிலை இப்போது இல்லை. கடந்த ஓராண்டாகத் தமிழில் பிரத்யேகமான செய்தி ஊடகங்கள் பெருகிவருவதுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம்.

தமிழில் தனியார் தொலைக்காட்சிகள் பெருகிவந்த காலத்தில் சன் ரி.வி.யும், 1990களில் வெளிவந்த ஜெ.ஜெ. ரி.வியும் செய்திகளை வெளியிட்டன. ராஜ் ரி.வி.யும் செய்திகளை வெளியிட்டது. தி.மு.க. ஆதரவு செய்திகளை சன் ரி.வி.யும், அதி.மு.க. ஆதரவு செய்திகளை ஜெ.ஜெ. ரி.வி.யும் வெளியிட்டன. ராஜ் ரி.வி. செய்திகள் ஓரளவு நடுநிலை செய்திகளைத் தந்துகொண்டிருந்தது. அடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெ.ஜெ. ரி.வி. முடக்கப்பட்டதை அடுத்து ஜெ.ஜெ. ரி.வி, ஜெயா ரி.வி.யாக மாறியது. இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் தங்களுக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே வெளியிட்டன. இடையில் ராஜ் ரி.வி. அதிபர் தி.மு.க.வில் சேர்ந்தார். சிறிது காலத்தில் ராஜ் செய்திகள் நிறுத்தப்பட்டது. இடையில் விஜய் ரி.வி.யில் வெளிவந்த செய்திகள் வந்த வேகம் தெரியாமல் நிறுத்தப்பட்டது.

விஜய் ரி.வி. செய்திகள் நடுநிலையானவை என்று மக்களிடையே பெயர் பெற்றிருந்தது. அது நிறுத்தப்பட்டதற்கு தி.மு.க. ஆட்சியின் குடைச்சலே காரணம் என்று கூறப்பட்டது. பிறகு வெளிநாட்டு நிறுவனமான ஸ்டார் டிவியின் வசம் விஜய் ரி.வி போன பிறகு சட்டபூர்வமாகவே விஜய் ரி.வி செய்தி ஒளிபரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. வெளிநாட்டு ஊடகங்கள் (அல்லது வெளிநாட்டு முதலீடு பெரும்பான்மையாக இருக்கும் ஊடகங்கள்) செய்தி ஊடகம் அல்லது பிரிவை நடத்த இந்தியாவில் தடை உள்ளது. மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளில் வந்த நல்ல தமிழுக்கு வரவேற்பு இருந்தாலும் அது பா.ம.க. சார்புள்ளதாகவே கருதப்படுகிறது. மத்திய அரசின் ஊடகமான பொதிகை பாரபட்சமான செய்திகளைத் தராது என்றாலும் அதே மத்திய அரசின் டிடி நேஷனல் சேனலின் தரத்துக்கு இணையாக அதன் தமிழ்ச் சேவை இல்லை என்பதே யதார்த்தம். இந்நிலையில் தமிழகம் குறித்த நடுநிலைச் செய்திகளுக்கு ஆங்கிலச் செய்தி ஊடகங்களையே தமிழர்கள் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான் புதிய அலை ஒன்று வீச ஆரம்பித்தது. சென்னையிலுள்ள பிரபல கல்வி அமைப்பான எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் ஒரு ஆண்டிற்கு முன்னால் 'புதிய தலைமுறை ரி.வி.' என்ற பெயரில் புதிய செய்தி ஊடகம் ஒன்றைத் தொடங்கியது. கழகங்களின் தொலைக்காட்சிச் சண்டையில் குழம்பிப்போயிருந்த தமிழக மக்களுக்கு இந்த ஆரம்பம் ஆறுதலளித்தது. கூடிய விரைவிலேயே மக்கள் புதிய சேனலை ரசிக்கத் தொடங்கினார்கள். விளைவு, ஓரிரு மாதங்களிலேயே சேனல்களுக்கான டி.ஆர்.பி. மதிப்பில் புதிய தலைமுறை முதலிடம் பெற்றது.

இதைத் தொடர்ந்து தமிழில் செய்தி ஊடகங்கள் பெருக ஆரம்பித்துள்ளன. சத்யம் ரி.வி. என்ற புதிய செய்தி தொலைக்காட்சியும் வருகிறது. பாலிமர் ரி.வி என்ற சேனலில் வரும் செய்திகளும் நடுநிலையோடு இருக்கின்றன. இந்த செய்திச் சேனல்களின் நிர்வாகங்கள் ஏதேனும் சிறிய கட்சிகளின் சார்பில் செயல்பட்டாலும் இந்த ஊடகங்கள் ஓரளவாவது நடுநிலையோடு இருக்கின்றன. கட்சி சார்புள்ள செய்தி சேனல்களின் ஆதிக்கத்திலிருந்து தமிழர்களை இந்த செய்தி சேனல்கள் விடுதலை செய்துள்ளன.

தமிழ் செய்தி ஊடகங்கள் - காட்சி ஊடகங்களில் புதிய அலை

இந்தச் செய்தி ஊடகங்கள் வெறுமனே செய்தி தருவதோடு நின்றுவிடாமல் நிகழ்வுகள் குறித்த பல்வேறு விதமான பதிவுகளையும் தருவது சுவையாகவும் மக்களுக்குப் பயன்படும் விதத்திலும் இருக்கிறது. உதாரணமாக, புதிய தலைமுறை செய்தியில் காலை நேரத்தில் வெளியாகும் புதுப்புது அர்த்தங்கள் என்ற நிகழ்ச்சி செய்தியை வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகுகிறது. காலையில் தினசரியை படித்துவிட்ட திருப்தியை நேயர்களுக்குத் தருகிறது. வெறும் செய்தியாக அல்லாமல் அலசலாக, அதுவும் பல தரப்புக் குரல்கள் எதிரொலிக்கும் அலசலாக இந்த நிகழ்ச்சி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் வரும் விவாதங்களில் தி.மு.க, அதி.மு.க உட்பட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்து இயக்கங்கள், இடதுசாரிகள், முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகள் என்று எல்லா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்குபெறுகிறார்கள்.

புதிய தலைமுறை ரி.வி, வார இறுதி நாட்களில் மூத்த பத்திரிகையாளர்களைப் பேட்டி கண்டு அவர்களின் அனுபவங்களை ஒளிபரப்புகிறது. பொதுவான அம்சங்களையும், தற்போதைய நடப்புகளையும் இணைக்கும் விதத்தில் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட அரசியல்வாதிகளின் கலந்துரையாடலும் இரவு நேரங்களில் ஒளிபரப்பப்படுகின்றன.

இவ்வளவு சாதகமான விஷயங்கள் நெருடல் இல்லாமல் நடந்துவிடுமா? பல பகுதிகளில் புதிய தலைமுறை ரி.வி. தெரிவதில்லை என்று சொல்லப்படுகிறது. காரணம் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் சுமங்கலி கேபிள் விஷனுடைய இணைப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்த இணைப்பு சன் ரி.வி.க்குச் சொந்தமானது. தனது எஸ்.சி.வி. இணைப்புக்கு எதிரான இணைப்புகளை சன் ரி.வி. அமுக்கப் பார்க்கிறது என்னும் குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்த ரி.வி.யின் ஒளிபரப்பை தனது கேபிள் இணைப்பில் எஸ்.சி.வி. தருவதில்லை. நடுநிலை செய்திகளை விரும்பும் நேயர்கள், 'கைக்கு எட்டியது கண்ணுக்கு எட்டவில்லையே' என்று வருந்துகிறார்கள்.

கட்சி சார்பற்ற செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பும் அத்தனை செய்திகளும் நடுநிலையாக இருப்பதில்லை என்றும் சில நேயர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 'ஆங்கில செய்திச் சேனல்களுக்கு இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களும் இந்த தொலைக்காட்சிகளுக்கும் உள்ளன. இந்த வசதிகளை வைத்து இன்னும் எவ்வளவோ செய்ய முடியும். ஆனால் தங்களை ஆங்கில செய்தியாளர்களுக்கு இணையாக நினைத்துக் கொள்ளும் சில பத்திரிகையாளர்களால் இவற்றின் நடுநிலைமை சந்தேகத்துக்கு உள்ளாகிறது. சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் ரயில் விபத்து நடந்தது. விபத்து நடந்த இடம் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால் உடனுக்குடன் முதலுதவி செய்யப்பட்டது. விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களை அடுத்த ரயிலிலேயே சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள். ஆனால் புதிய தலைமுறை ரி.வி. நிருபர்கள் அங்கிருந்த மக்களிடம், 'உங்களுக்கு அரசு நிர்வாகம் எதுவும் செய்யவில்லைதானே?' என்றுத் துருவித் துருவி கேள்வி கேட்டார்கள். அதற்கு அங்கிருந்த மக்கள், 'அப்படியெல்லாம் இல்லை' என்கிறார்கள். ஏதாவது எதிர்மறையான பதிலை வாங்க வேண்டும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. ஏன் உண்மைக்குப் புறம்பான இந்த நிலை?' என்று கேட்கிறார் சென்னையில் சுயதொழில் செய்துவரும் ஸ்ரீனிவாசன்.

அதுபோலவே களத்தில் இருந்து நேரடியாகச் செய்திகளைத் தரும் நிருபர்கள் சிலரால் சரளமாகப் பேச முடியவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது. இவ்விஷயத்தில் நிருபர்களுக்கு மேலும் பயிற்சி தேவை. இல்லையேல் இந்த முயற்சி கேலிக்கூத்தாகிவிடும் என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

'நடுநிலை என்பதே வியாபாரத்திற்கான ஒரு உத்திதான்'' என்கிறார் இன்றைய தமிழகம் இணைய இதழின் ஆசிரியர் என். ரமேஷ் குமார். 'புதிய தலைமுறையின் உரிமையாளர் ஒரு சிறிய கட்சியின் தலைவரும்கூட. அவர்களது கட்சிக்குத் தனியாக ஒரு சேனலை ஒளிபரப்புவோம் என்கிறார்கள். அப்போதும் இந்த சேனல் நடுநிலைமையோடு இருக்குமாம். இங்குதான் சந்தேகம் வருகிறது' என்கிறார். மேலும், இதுபோன்ற செய்தி சேனல்கள் அதிக நாட்கள் இருந்ததில்லை என்ற வரலாற்றை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

நடுநிலை ஊடகங்களின் பலமே வியாபாரம்தான் என்பதை கவனிக்க வேண்டும். அரசியல்வாதிகளைப் பகைத்துக்கொண்டால் அரசு விளம்பரங்கள் அந்த ஊடகங்களுக்குக் கிடைக்காது. அதன் காரணமாக கொஞ்சமாவது 'அடக்கி வாசிக்க' வேண்டியிருக்கும். அதிரடியான அம்பலங்கள பலவற்றை வெளியிட்ட பல ஆங்கில சேனல்களுக்கு இந்த கதி நேரிட்டதை மறந்துவிட முடியாது.

இப்படிச் சில நெருடல்கள் இருந்தாலும் புதிதாக வந்திருக்கும் செய்தி ஊடகங்கள் நடுநிலையோடு செயல்படுவதால் மக்களுக்கு உண்மையான செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு கூடியிருக்கிறது. இதுபோன்ற சூழலில் செய்தி ஊடகங்களுக்குக் கிடைத்துவரும் ஆதரவு மற்றவர்களை ஈர்க்கின்றன. கடந்த வாரத்தில் கூட, 'லோட்டஸ் ரி.வி' என்ற செய்தி ஊடகம் தொடங்கப்பட்டது. இன்னும் ஏராளமான சேனல்கள் வரும் காலத்தில் உருவாகும் என்று தெரிகிறது.

இந்த ஊடகங்கள் தொடர்ந்து நிலைக்குமா அல்லது அரசியல் சகதியில் சிக்கிச் சீரழியுமா என்பதற்குப் பதில் சொல்லும் பொறுப்பு காலத்திடம்தான் இருக்கிறது. ஆனால் இன்று நடுநிலையாக இருக்கும் ஒரு ஊடகம் நாளை நிர்ப்பந்தங்களால் நீர்த்துப்போனாலும் இந்த ஊடகங்கள் இப்போது ஏற்படுத்தியிருக்கும் சுதந்திர வெளி முக்கியமானது. மக்கள் கட்சி சார்பற்ற செய்திகளை ஆதரிக்கிறார்கள் என்பது உறுதியாகிவிட்டதால் இந்தச் சுதந்திர வெளியில் வெற்றிடம் ஏற்படும் சமயத்தில் அதை வேறொரு ஊடகம் நிரப்ப வாய்ப்பிருக்கிறது. இந்த நடுநிலையும் செய்திச் சுதந்திரமும் ஏற்படுத்தியிருக்கும் மதிப்பும் வணிக வாய்ப்புகளும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு வலுவானவை.

10/29/2012 7:18:30 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்