சண்முகவடிவேல்
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய பூகோள, பிராந்திய அரசியலும் சிங்கள- தமிழ் முரண்பாடும்.
இலங்கை அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ளுமாறு தமிழகத்தில் எழுந்துள்ள குரல்களுக்கு இந்திய அரசு உடன்படும் நிலையில் இல்லை. அதாவது பொருளாதாரத் தடைகளை இலங்கைக்கு எதிராக இந்தியா மேற்கொண்டால் சீனா இலங்கையில் பலமடைந்து விடுமென சீனா மீதான தமது அச்சத்தை இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் 2011 ஆகஸ்ட் முதல் வாரத்தில் தெரிவித்துள்ளார்.
இன்றைய மிதமான வளர்ச்சிக் கட்டத்தில் சீனாவைக் கையாளத் தவறினால் இன்னும் பலமாக இலங்கையில் சீனா வளர்ச்சியடைந்து உறுதிப்பட்ட பின்பு அதனை சிறிதும் கையாள முடியாத நிலைக்கு இந்தியா ஆளாக நேரும். அதாவது 1980-களின் மத்தியில் இலங்கைத்தீவில் அமெரிக்கா பலமடைவதைத் தடுக்கக்கூடிய பலத்தை அன்றைய சூழலில் இந்தியா கொண்டிருந்தது. ஆனால் 2010களில் இலங்கையில் சீனா பலம் அடைவதைத் தடுப்பதற்கான பலம் இந்தியாவிடம் குறைவாகவே உண்டு. எப்படியோ தலைபோவதை விடவும் தலைப்பாகை போவது மேல் என்ற நிலையில் இலங்கைத்தீவின் மீது அமெரிக்க அனுசரணையுடன் இந்தியா கடும்போக்கை மேற்கொள்ளும் காலம் இன்னும் ஒருசில ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுவிடும்.
இப்பின்னணியில் இந்தியாவில் மாற்றம் ஏற்படும் வரை காத்திருக்க மேற்குலகம் தயாராக இல்லை. ஏனெனில் இலங்கையிலும், அதன் பின்னணியில் இந்துசமுத்திர பிராந்தியத்திலும் சீனாவின் வளர்ச்சி அசுர வேகத்தைக் கொண்டது. சீனா இலங்கையில் தன்னை நிலைநிறுத்திவிட்டால் அதன் பின்பு சீனாவை அகற்றுவது இராணுவ அர்த்தத்தில் கடினமானது என்பது அமெரிக்காவிற்குத் தெரியும். சீனா ஒரு பலம் பொருந்திய நாடென்ற வகையில் யார் களத்தில் முதலில் ஸ்தாபிதம் அடைகிறாரோ, அவரே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது அமெரிக்காவிற்குப் புரியும். அண்டவெளியில் வைத்து உபகோளைத் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தில் சீனா வெற்றி பெற்றுவிட்டது என்பதை 2008 ஜனவரி 11-ம் திகதி சீனா நிரூபித்தது. இது அமெரிக்கா கருதும் நட்சத்திர யுத்த முறைக்குப் போட்டியானது. எனவே சீனாவைப் பொறுத்து அமெரிக்கா அதிக முன்கூட்டிய முன்னெச்சரிக்கையான செயல்களை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
இப்பின்னணியில் வைத்தே இலங்கை தொடர்பான மேற்குலகின் இன்றைய அணுகுமுறையை நோக்க வேண்டும். புலிகளை முடக்க வேண்டிய அளவிற்கு இராணுவ ரீதியாகவும், அரசியல் ராஜதந்திர ரீதியாகவும் ராஜபக்ஷா அரசாங்கத்துடன் அமெரிக்கா போதியளவு ஒத்துழைத்த அதன் முற்பகுதி முடிவடைந்துவிட்டது. ஆனால் புலிகளை முடக்குவதற்குப் பதிலாக அவர்களை பெருமள அழித்துவிட்டு அமெரிக்காவிற்கு சவால்விடும் சர்வதேச அரசியலில் ராஜபக்ஷாக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராகப் பாவிக்கக்கூடிய முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளையும், பேரழிவையும் மேற்குலகம் கையில் எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.
ராஜபக்ஷாக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்க அரசு முற்பகுதியில் எடுத்தபோது அமெரிக்காவின் கரங்களைப் ராஜபக்ஷாக்கள் தயங்காது இறுகப் பற்றினார்கள். ஆனால் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மேற்குலகம் கூறும் இன்றைய நிலையில் அது இலங்கையைக் கூறுபோடுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், ஏனைய மேற்குலக நாடுகளினதும் சதியென்று சிங்கள ஆட்சியாளர்கள் கண்டிக்கிறார்கள்.
இனப்படுகொலையாளரும் மனிதப் படுகொலையாளருமான கிட்லருக்கு எதிராக இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஸ்ராலின் தலைமையிலான சோவியத் யூனியனும், மசேதுங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், தம்மால் ஏகாதிபத்திய அரசுகள் என வர்ணிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் மேற்குல நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டமையை வரலாற்று ஆசிரியர்கள் பலதடவை சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த இடத்தில் அதனை நாமும் நினைவு கூறுவது பொருந்தும். இனப்படுகொலைக்கும், சுரண்டலுக்கும் உட்படும் ஒரு மனிதனைப் பார்த்து உனக்கு இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பா, சுரண்டலில் இருந்து பாதுகாப்பா முதலில் வேண்டும் என்று கேட்டால் எந்தொரு ஜீவனும் முதலில் தனக்கு படுகொலையிலிருந்து பாதுகாப்பு வேண்டும் என்றே கூறும். ஏகாதிபத்தியம் என்ற வார்த்தையைக் காட்டி இனப்படுகொலையை நியாயப்படுத்தும் பிடல் கஸ்ரோக்களின் நியாயங்களை யார்தான் ஏற்க முடியும். ஈழத்தமிழர் மீதான சிங்கள அரசின் இனப்படுகொலையை கியூபா ஆதரித்தமை சோசலிச நல்லெண்ணம் கொண்டோரின் மனங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 + 2= 5 என்ற உண்மையை சிறுவன் கூறினால் என்ன, கிழவன் கூறினால் என்ன, எதிரி கூறினால் என்ன, நண்பன் கூறினால் என்ன, உண்மை ஒன்றுதான். எனவே பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்ற உண்மையை யார் வெளிக்கொணர்ந்தாலும் அதை ஆதரித்தே ஆகவேண்டும். குரலற்றிருக்கும் தமிழர்களுக்கு இது ஒரு உடனடி நிவாரணம். இதைப் பயன்படுத்தி சிங்கள அரசை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தி முன்னேற வேண்டியது ஈழத்தமிழர்களின் பொறுப்பு. பனிப்போரின் பின்னான காலத்தில் இருந்து இற்றைவரை 25 புதிய அரசுகளை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து சென்று உருவாக்கியுள்ளன. அதாவது 1990 மே மாதத்திற்கும் 2011 யூலை மாதத்திற்கும் இடையில் 25 புதிய விடுதலை பெற்ற அரசுகள் உலகப்படத்தில் உருவாகியுள்ளன. இந்த 25 அரசுகளுக்குமான ஞானத்தந்தை மேற்குலகம்தான். இது ஒரு யதார்த்தம். தமிழீழ அரசு உருவாவதை இந்தியாவும், மேற்குலகும் அங்கீகரித்து செயற்படப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இலங்கைத்தீவு இரண்டாக உடைவதுதான் இந்தியாவினதும், மேற்குலகினதும் நலனுக்கான ஒரேயொரு தவிர்க்க முடியாத மாற்றுவழியென உணரப்படும் காலம் இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில வருடங்களில் உருவாகும். அப்போது இலங்கை இரண்டாகப் பிளவுபடுவதை யாராலும் தடுக்க முடியாது. இப்போதும்கூட இலங்கை பிளவு பட்டுவிடக்கூடாதென விரும்பும் மேற்குலக, இந்திய அரசுகள் தவிர்க்க முடியாத ஒரு கட்டத்தில் பிரிவுதான் ஒரே தீர்வாக அமையுமென ஏற்கும் நிலை உருவாகும். இது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் தவிர்க்க முடியாத ஒரு விதி.
ஆதலால் இலங்கையின் இனயுத்தத்தில் பயங்கரவாதம் என்ற தலைப்பின் கீழ் மேற்குலகம் புலிகளுக்கு எதிராகப் பங்காற்றிய கட்டம் முடிவடைந்து தற்போது மனித உரிமை, யுத்தக் குற்றம் என்ற வடிவில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் கட்டம் தோன்றியுள்ளது. அமெரிக்கா தமக்கு கை கொடுத்த முதற் கட்டத்தைச் சிங்களவர்கள் மிகச் சாதகமாகப் பயன்படுத்தித் தமிழின அழிப்பை மேற்கொண்டார்கள். ஆனால் இப்போது மேற்குலகம் அவர்களுக்கு எதிராகக் கையோங்கும் இரண்டாவது கட்டத்தை ஈழத்தமிழர்கள் எப்படிச் சரிவரப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதிலேயே ஈழத்தமிழரின் எதிர்காலத்திற்கான தொடக்கப்புள்ளி காணப்படுகிறது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் முன்மொழியப்பட்டு தமிழக சட்ட மன்றத்தில் ராஜபக்ஷாவின் படுகொலைக்கெதிராக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், சனல் 4 தொலைக் காட்சி தயாரித்து வெளியிட்டுள்ள 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படம் என்பவற்றின் வாயிலாக தற்போது குறிப்பாகத் தமிழகத்திலும், பொதுவாக இந்தியாவிலும் எழுந்திருக்கும் ஈழத்தமிழருக்கான அனுதாப அலை பெருவளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. இதில் தமிழக சட்டசபையின் தீர்மானம் ஓரு மைல்கல் என்பது வெளிப்படை. இவற்றை ஈழத்தமிழ்த் தலைமைகள் எவ்வாறு கையாளப் போகின்றன என்பதிலேயே எதிர்கால வளர்ச்சிக்கான வேகமும், அளவும் அடங்கியுள்ளன.
எப்படியோ 2010 -களின் மத்தியை அண்டி இலங்கைதீவு இரண்டாய் உடையும் என்பதில் சந்தேகமில்லை என்பதை வரலாற்று வளர்ச்சி விதி உணர்த்துகிறது.
அமெரிக்காவின் பரந்த பூகோள நலன், இந்தியாவின் பிராந்திய நலன், ஈழத்தமிழரின் குறைந்தபட்ச உயிர் வாழும் நலன் எனும் மூன்று நலன்களும் ஒன்றுசேரும் ஒரு நேர்கோட்டில் இலங்கைத்தீவு இரண்டாய் உடையும். இது விருப்பு வெறுப்புக்கு அப்பாலான வரலாற்று நியதி.
சிங்கள ராஜதந்திரம் பற்றி ஒரு குறிப்பு
சர்வதேச உறவுகளைக் கையாள்வதில் சிங்களத் தலைவர்கள் முதிர்ச்சியும், பயிற்சியும், பட்டறிவும், மதிநுட்ப வியூகமும் கொண்டவர்கள். இலங்கைத் தீவை விடவும், 50 மடங்கிற்கு மேல் பெரிய நாடு இந்தியா. ஆனால் அந்த பிரமாண்டமான இந்தியாவிற்கு அருகே சுமாராக 20 மைல் அகலமான பாக்கு நீரிணையால் பிரிக்கப்படும் சிறுதொலைவில் அமைந்துள்ள இலங்கையை ஏடறிந்த 2300 ஆண்டுகளுக்கு மேலாய் இந்தியாவால் வெற்றி கொள்ள முடியாது இருக்கின்றது என்பது சிங்கள ராஜதந்திரத்தின் திறமையைக் காட்ட போதியதோர் உதாரணமாகும். அயர்லாந்தை கி.பி 12-ம் நூற்றாண்டில் சிறிய இங்கிலாந்து இதைவிடவும், தொலைவான இடத்திலிருந்து தன்னுடன் இணைத்துக் கொண்டதை ஒப்பிடும் போது இதன் முக்கியத்துவம் இன்னும் இலகுவாகப் புரியும். நசியவேண்டிய இடத்தில் நசிந்தும், குனிய வேண்டிய இடத்தில் குனிந்தும், நிமிரவேண்டிய இடத்தில் நிமிர்ந்தும், பாயவேண்டிய இடத்தில் பாய்ந்தும் தாடையைப் பிடித்து பிடரியைக் கடிக்கக்கூடிய ராஜதந்திர வல்லமை சிங்கள ராஜதந்திரிகளிடம் உண்டு.
ராஜதந்திர அரங்கில் தமிழ்த் தலைவர்களை சிங்களத் தலைவர்கள் ஒரு பொருட்டாய் கருதியது கிடையாது. தமிழ்த் தலைவர்களை டி.எஸ். சேனநாயக்கா பந்தாடி Corner kick அடித்து Goal போட்ட ஒவ்வொரு கட்டமும், ராஜதந்திர பாடப்புத்தகத்தில் செழுமை மிகுந்த அத்தியாயங்களாய் உள்ளன. தமிழ்த் தலைவர்களால் தூக்கித் தமிழருக்கு அடிக்கவும், தமிழ்த் தலைவர்களைத் தம்கையால் தம் தலையில் குட்டவைக்கவும், டி.எஸ். செனநாயக்காவால் முடிந்தமை உள்ளுர் அரசியல் ராஜதந்திரத்தில் மிக விநோதமான காட்சிகளாய் உள்ளன.
அதேவேளை தமிழக தலைவர்களைச் சிங்களத் தலைவர்கள் ஒரு பொருட்டாய் மதிப்பதில்லை. ஆனால் இந்தியாவின் புயபல பராக்கிரமத்தைக் கண்டு சிங்களத் தலைவர்கள் அச்சம் கொள்வதுண்டு. ஆனால் அந்த பராக்கிரமத்தைக்கூட தமது ராஜதந்திர மதிநுட்பத்தால் கையாள முடியும் என்கின்ற மனத்திண்ணம் சிங்களத் தலைவர்களிடம் உண்டு. யானை பலம் மிக்கதே ஆயினும், யானையின் மூக்கினுள் தேள் நுழைந்து விட்டால் அந்த யானையின் பலம் அதற்கே எதிரியாகிவிடும்.
1980-களின் பிற்பகுதியில் தமக்கு அச்சுறுத்தலாக இராணுவபலம் காட்ட முற்பட்ட இந்தியாவை அணைத்துப் புலிகளுடன் மோதவிட்டு பின்பு புலிகளை அணைத்து இந்திய இராணுவத்தை இலங்கையைவிட்டு துரத்திய சிங்கள ராஜதந்திரத்தின் மதிநுட்பத்தை வியக்காதிருக்க முடியாது. பாரம்பரிய நண்பர்களாக விளங்கிய இந்தியாவையும், ஈழத்தமிழர்களையும் பகை நிலைக்குத் தள்ளி இருபகுதியினரும் இற்றைவரை அனுபவிக்கும் பெரும் துயரங்களுக்கும், தோல்விகளுக்கும் இந்த சிங்கள ராஜதந்திர நகர்வே அடிகோலியது. வீழ்ந்தது ஈழத்தமிழரும் இந்தியாவும், எழுந்தது சிங்களமும் சீனாவும். ராஜதந்திரரீதியில் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் மேற்கொண்ட மேற்படி ராஜதந்திர நகர்வுதான் இற்றைவரையான இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கான ஒரு முதுசமாக அமைந்துள்ளது. இந்த முதுசத்தை முதலீடாகக் கொண்டுதான் ராஜபக்ஷாக்கள் தமது சர்வதேச ராஜதந்திர வியூகத்தில் தொடர் வெற்றி பெற்று வருகிறார்கள்.
உணர்ச்சிவசங்களாலும், கோபாவேசங்களினாலும், சிங்களத் தலைவர்கள் பற்றிக் குறைவான மதிப்பீடுகளினாலும், எம்மைப்பற்றி மிகை மதிப்பீடுகளினாலும், மனோரம்மியக் கற்பனைகளினாலும், சிங்களத் தலைவர்களை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது. மாறாக தமது காலகட்டத் தேவைக்குப் பொருத்தமான அளவு ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்களத் தலைவர்கள் தொடர் வெற்றிகளைப் பெற்று வருவதைச் சரிவரப்புரிந்து கொண்டு அவற்றை எதிர்கொள்ளவல்ல மதிநுட்பம் மிகுந்த வியூகங்களை சர்வதேச அரசியலிலும், உள்நாட்டு அரசியலிலும், ஈழத்தமிழர்கள் வகுத்தாக வேண்டும். இக்கட்டுரை அந்நோக்கத்தின் அடிப்படையில் முற்றிலும் வரலாற்று உண்மைகளுக்கு ஊடாக எழுதப்பட்டுள்ளது.
கசப்பே ஆயினும், யதார்த்திற்கும், யதார்த்த உண்மைக்கும் மிக அருகில் நின்றால் அது மருந்து போல் சுகத்தையும், வெற்றியையும் தரும்.