Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மரணத்தைத் தேடி

மரணத்தைத் தேடி
ஆழ்வாப்பிள்ளை

 

மனநிலை பாதிக்கப்பட்ட தனது 18 வயது மகனை கருணைக் கொலை செய்யக் கோரி தாயே தமிழ்நாட்டுக் காவல் நிலையத்தில் மனு அளித்த செய்தி ஒன்றை வாசித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. அதேவேளை மனதில் ஒரு சுமையும் சேர்ந்து கொண்டது. மக்களின் மேல் அதிக அக்கறை இல்லாத அரசாங்கங்களின் செயற்பாடுகளின் விளைவுகளே இவை. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு, பராமரிப்புகள், அவர்களுக்கான தேவைகள் என செய்யவேண்டிய அனைத்துப் பொறுப்புகளும் சமூக சேவை நிறுவனங்களுக்கு மேலாக அரசாங்கங்களுக்கே இருக்கின்றது. ஆனால் இங்கே மக்கள் புறந்தள்ளப்பட்டு அரசியல்வாதிகள் தங்களை முன்னிறுத்தியே செல்கின்றனர். பக்கத்து நாட்டில் தமிழர்கள் அவலமாகச் செத்துக்கொண்டிருக்கும் பொழுது, கடற்கரையில் காலையில் காலாற நடந்து செல்கையில் சட்டென்று அந்தத் தமிழர்கள் நினைவுக்கு வர, நாற்காலியை வரவழைத்து உடனேயே உண்ணாவிரதம் இருந்து ஊடகங்களுக்குச் சொல்லி அனுப்பிய தலைவர்கள் இருக்கும் நாட்டில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

இங்கே கீழே நான் சொல்ல வருவதற்கும் மேலே உள்ள தாயின் நிலைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. கருணைக்கொலை என்ற ஒற்றை வார்த்தை ஒன்றே பொருந்தியிருக்கிறது. அந்தத் தாயின் செய்தியை வாசித்த பொழுது சமீபத்தில் நான் வாசித்த ஒரு செய்தியே நினைவில் வந்தது. ஏனோ இந்தச் செய்தியும் என்னுள் சிலகாலமாக நிலை கொண்டிருக்கிறது. கொஞ்சம் இறக்கி வைத்து விடலாம் என்று பார்க்கிறேன்.

'ஆயிரம் கிலோ மீற்றர் தாண்டி மரணத்தைக் காண வந்திருக்கிறேன். 28ந் திகதி ஒக்ரோபர், திங்கட்கிழமை காலை 11 மணிக்கு இறந்து விடுவேன்' அமைதியாகச் சொன்னார் கேர்னோ. அவரது வார்த்தைகள் தெளிவில்லாமல் இருந்தாலும், அவரது மரணத்தில் அவர் தெளிவாகவே இருந்தார்.

69 வயதான கேர்னோவை லிம்ப்கோம் என்ற நோய் தாக்கியிருந்தது. அவரது முதுகெலும்புகள் வலுவிழந்து சிதைந்துவிட்டிருந்தன. முதுகெலும்புகள் விழுந்து விடாது இருக்க ஆணிகள் கொண்டு பொருத்தப்பட்டிருந்தன. இனி வாழமுடியாது, உடல் வலிகளைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபொழுது தனது மரணத்தை வரவேற்க கேர்னோ ஆயத்தமானார்.

தன்னை அழித்துக் கொள்ள, கேர்னோ தனது நண்பரான அன்ரியாஸிடம் ஒரு துப்பாக்கி கேட்டிருந்தார். அவர் தர மறுத்துவிட்டார். வைத்தியசாலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத நிலையில், தனது மரணத்திற்கான வழி என்ன என்று தெரியாமல் தவித்தவருக்கு இப்பொழுது விடை தெரிந்துவிட்டது. அது - கருணைக் கொலை. யேர்மனியில் அது சாத்தியம் இல்லை. சட்டம் அதை முற்றாக மறுக்கிறது. ஆனால் அயல்நாடானா சுவிற்சலாந்தில் அது சாத்தியமாகிறது. அதனால்தான் கேர்னோ சுவிற்சலாந்து வந்திருக்கிறார். இவரது வைத்தியச் செலவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம். இவரது மரணத்திற்கான செலவைத் தரமாட்டோம் என்று மருத்துவக் காப்புறுதி மறுத்துவிட சொந்தச் செலவில் சாவதற்காக தனது நண்பன் அன்ரியாஸின் உதவியுடன் ஆயிரம் கிலோமீற்றர் தூரம் காரில் பயணித்து வந்திருக்கிறார்.

புத்தகங்களோ, படங்களோ, மலர்க் கொத்துக்களோ எதுவுமே இல்லாமல் இவரது அறை வெறிச்சோடி இருக்கிறது. அவை எதுவுமே இவருக்குத் தேவைப்படவில்லை. ஒரே ஒரு பெட்டி மட்டும் இவரது படுக்கையின் பக்கத்தில் இருந்தது. அந்தப் பெட்டி ஒன்றுதான் அவரது சொத்து. அந்தப் பெட்டிக்குள் பதினெட்டுப் புகைப்பட அல்பங்கள் இருந்தன. அவை எல்லாம், வலிமை இருந்த பொழுது இவர் செய்த சாதனைகளின் சாட்சிகள்.

கால்களால் மிதித்துச் செலுத்தும் படகில் ரூமேனியாவைச் சுற்றி வந்திருக்கிறார். சிறிய கார் ஒன்றை மட்டும் பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் எல்லைவரை பயணித்திருக்கிறார். ஒற்றைத் திமில் கொண்ட ஒட்டகத்தில் சகாராவைக் கடந்திருக்கிறார். இன்னும் எத்தனையோ விடயங்களைச் செய்ய நினைத்தவரை லிம்ப்கோம் எனும் முதகெலும்பைத் தாக்கும்  புற்றுநோய் இடைநிறுத்தி விட்டது. அதிக காலங்கள் இல்லை, மிஞ்சிப் போனால் பத்து வருடங்கள்தான் என வைத்தியர்கள் 1994இல் சொன்ன பொழுது, கேர்னோ பயந்து விடவில்லை. அந்தப் பத்து வருடங்களைப் பயனுள்ளதாக்க வேண்டும். அத்தோடு தனக்கு வந்திருக்கும் நோய்க்கு எதிராகப் போராட வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

முதலில் உலகநாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்தியாவில் இமயம் ஏற வேண்டும் என்ற முடிவோடு பயணங்களை ஆரம்பித்தார். இந்தியா, இலங்கை, தாய்லாந்து, கனடா  எனப் பல்வேறு நாடுகளுக்குப் பறந்தார். கனடாவில் யூகோன் நதியில் படகு வலித்துப் பயணிக்கையில் துடுப்பு உடைந்து விட, தனது பயணங்களையும் முடித்துக் கொண்டார்.

28ந் திகதி ஆயிற்று. காலை பதினொரு மணி. மரணத்துக்கான தனது விருப்பத்தை தெரிவிக்கும் பத்திரத்திலும் ஏற்கெனவே கேர்னோ கையெழுத்துப் போட்டுவிட்டார். இனி மருந்து தருவார்கள். குடித்துவிட்டு நிரந்தரமாக உறங்கி விடலாம். வாழ்ந்த வாழ்க்கையை மட்டுமல்ல, தனது சாவையும் நிச்சயிக்கும் உரிமை தனது கையில் இருக்கின்றதென்ற உறுதி அவரின் முகத்தில் இருந்தது.

மரணத்திற்கான மருந்தை மருத்துவர் அவரிடம் நீட்டினார். அதை வாங்கிப் பற்றிக் கொள்ளும் பலத்தை அவரது கைகள் இழந்து விட்டிருந்தன. உறிஞ்சிக் குடிப்பதற்கு ஸ்ரோவை மருந்துள்ள கலவையில் வைத்துக் கொடுத்தார்கள். ஆர்வமாக அதை உள்ளிழுக்க முற்பட்ட பொழுதுதான் தெரிந்தது கேர்னோ உறிஞ்சும் சக்தியையும் இழந்து விட்டிருந்தார் என்று.

'தனக்குப் பருக்கி விடு' என்ற பாணியில் கேர்னோ தனது நண்பர் அன்ரியாஸைப் பார்த்தார். அது சாத்தியம் இல்லை என்று அன்ரியாஸ் தலையாட்டினார். அங்குதான் சட்டம் கேர்னோவுக்கு இடையூறாக நின்றது. அவரது மரணத்திற்கான மருந்தை அவராகவே அருந்த வேண்டும். யாராவது ஊட்டி விட்டாலோ, உதவி செய்தாலோ அது கொலைக்குற்றம் ஆகிவிடும். கைக்கு எட்டியது வாய்க்கு வந்தது. வாய்க்கு வந்தது வயிற்றுக்குள் இறங்க முடியாமல் போனது. உடல் தளர்ந்தது போல் கேர்னோ உள்ளம் தளர்ந்து போனார். இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என வைத்தியர் அறிவித்து விட்டார்.

மீண்டும் மரணம் எப்பொழுது என்று தெரியாத தவிப்பு, உடலில் தாங்க முடியாத வலி, உணவோ, தண்ணீரோ அருந்த முடியாத நிலை. கேர்னோ ஏக்கத்துடன் படுத்திருந்தார். அவரது உடல் வலியை அவர் உணராமல் இருக்க மருத்துவர் ஊசி மருந்து செலுத்தியிருந்தார்.

'நீண்ட நாட்களுக்கு அவரது உடல் தாங்கிக் கொள்ளாது. சில தினங்கள்தான். அவரது வலியில் இருந்து அவர் விடுதலை அடைந்து விடுவார்' என அன்ரியாஸிடம் வைத்தியர் சொன்னார். வைத்தியர் சொன்னதைக் கேட்கும் சக்தியையும் கேர்னோ தற்பொழுது இழந்திருந்தார்.

நவம்பர் இரண்டாம் திகதி. வலிகள் தெரியாமல் கேர்னோ படுத்திருந்தார். அவரது உடல் வெள்ளைத் துணியால் மூடி இருந்தது. கேர்னோவிற்கான  இறுதி வேலைகளை அன்ரியாஸ் செய்து கொண்டிருந்தார்.

1/6/2014 1:19:10 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்