வி.அ.ரங்கநாதன் (இலங்கை)
இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைகள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன. இப்பயணம் வெறும் கண்துடைப்பு எனவும் இப்பயணத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை.
இலங்கையில் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் அரசியல் சூழலை இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழு நேரடியாக விஜயம் செய்துதான் அறியவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. இது தொடர்பான உண்மைகளை சர்வதேச ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வந்துள்ளனர். அரைநூற்றாண்டுக்கும் மேலான இன ஒடுக்குமுறை வரலாற்றை பட்டறிவின் ஊடாகப் புரிந்து கொள்வதே மேலானதும்கூட
போர் முடிவுற்றதன் பின்னர், இதுபோன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட, ரி.ஆர்.பாலு, கனிமொழி, திருமாவளவன் போன்றோரை உள்ளடக்கிய தமிழக நாடாளுமன்றக் குழுவின் பயணமும் எவ்வித பலனுமின்றி கடும் விமர்சனங்களுக்கு ஆளானது நாம் அறிந்ததே. இப்பயணம் குறித்து இதுவரை வெளியாகாத மறைந்திருக்கும் உண்மைகளை வெளிப்படுத்துவது இது போன்ற பயணங்கள் குறித்த மாயைகளை விலக்க உதவும் என்றே நம்புகிறோம்.
ஆசிரியர்
***
மறைந்திருக்கும் உண்மைகள் - தமிழ்நாடு நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம் - 6
பயணக் குழுவினரின் ஐந்தாம் நாள்! எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பு.
ஐந்தாம் நாளுக்கான நிகழ்ச்சி நிரலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பே முக்கிய இடத்தினை வகித்தது. நான்கு நாட்களாக ஊடகவியலாளர்களைச் சந்திப்பதை குழுவினர் தவிர்த்தே வந்தனர். ஆனால் ரணிலுடனான சந்திப்பின் போது வசமாக மாட்டிக்கொண்டனர். சந்திப்பு நடக்க இருந்த ரணிலின் இல்லத்தில் ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே முகாமிட்டிருந்தனர். இது ரணிலின் இரகசிய ஏற்பாடாக இருக்கலாம். அவர்கள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். முகாம் நிலைமைகள் திருப்தியாக இருக்கின்றனவா? என்பதே அவர்களின் முக்கியமான கேள்வியாக இருந்தது. இக்குழுவின் தலைவர் பாலு அதற்கு மழுப்பலான பதிலையே வழங்கினார்.
இச்சந்திப்பு முடிந்த பின்னரும் கலைத்து, கலைத்து ஊடகவியலாளர்கள் கேள்விகளைக் கேட்டனர். மழுப்பலான பதில்களைக் கூறிக்கொண்டே தப்பினோம், பிழைத்தோம் என பாலு வாகனத்தில் ஏறினார். ஊடகவியலாளர்களும் வாகனம் வரை கலைத்து வந்தனர். உறுதியான பதில்கள் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பாலுவைத் தப்ப விட்ட ஊடகவியலாளர்கள் கனிமொழியைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அதற்கு கனிமொழி 'எனக்கு கருத்துக்கள் கூற அனுமதி வழங்கப்படவில்லை. பாலுவையே கேட்டுக்கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டார். எனினும், ஊடகவியலாளர்கள், 'நீங்கள் தி.மு.கவின் முக்கிய உறுப்பினர் என்ற அடிப்படையில் கருத்துக்களைக் கூறுங்கள்' எனக் கேட்டனர். அதற்கு 'தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றேன். கருத்துக்களைக் கூற எனக்கு எந்த அனுமதியும் இல்லை' என்று கூறிக்கொண்டே வாகனத்தில் ஏறினார். ஊடகவியலாளர்களும் வாகனம் வரை கலைத்துச் சென்று தனிப்பட்ட வகையிலாவது கருத்துக்களைக் கூறுங்கள் எனக் கேட்டனர். ஆனால் கடைசி வரை கனிமொழி எந்தப் பதிலையும் வழங்கவில்லை.
இந்நாடாளுமன்றக் குழுவினரில் தமிழ்த் தேசிய அரசியலில் அக்கறைக் கொண்ட தி.மு.க உறுப்பினர்களுக்கும், திருமாவளவனுக்கும் மட்டுமே வாய்க்கட்டு போடப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர்கள் அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவித்தே வந்தனர். அக்கருத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சார்பாக தமிழ் மக்களின் அவலங்களுக்கு வெள்ளை பூசுவனவாக இருந்தன.
ரணிலுடனான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றன. ரணில், மனோ கணேசன், லக்ஸ்மன் கிரியெல்ல, ஜயலத் ஜயவர்தன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். ஊடகவியலாளர்களும் குழுமியிருந்ததால் நாடாளுமன்றக் குழுவினர் விரைவில் சந்திப்பினை முடித்துக்கொண்டனர்.
இச்சந்திப்பு பற்றி கருத்துத் தெரிவித்த ரணில் பின்வருமாறு குறிப்பிட்டார். 'இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும், வன்னியில் அகதி முகாம்களின் நிலைமையையும் நேரில் கண்டறிய வந்த தமிழ்நாட்டு நாடாளுமன்றக் குழுவில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அடங்கியிருந்தனர். இது அதிருப்தியைத் தந்துள்ளது. அவர்களது பயணத்தின் போது இறுதிச் சந்திப்பாகவே எம்முடனான சந்திப்பு இடம்பெற்றது. தமது விஜயம் தொடர்பாக ஏதாவது கூறுவார்கள் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்களிடமிருந்து ஆரோக்கியமான தகவல்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.
அதேநேரம் எமது நிலைப்பாட்டினை உறுதியாகத் தெரிவித்திருந்தோம். தற்பொழுது வன்னி அகதி முகாம்களின் நிலை தொடர்பாக விளக்கிக் கூறினோம். இந்தியாவிலிருந்து அனைத்து நாடாளுமன்றக் குழு வரவில்லை. அரச தரப்புக் குழுவே வந்துள்ளது. இதை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் வந்துள்ளதனால் நடுநிலையாக அறிக்கை இந்தியாவிற்கு சமர்ப்பிக்கப்படுமா என்பதில் சந்தேகமே நிலவுகின்றது. எனினும் டில்லிக்கும், சென்னைக்கும் சமர்ப்பிக்கப்போகும் அறிக்கை எவ்வாறு இருக்கும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இலங்கையில் எதிர்க்கட்சிகளினால் அகதிமுகாம்களைப் பார்க்க முடியவில்லை. அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. அதுவும் அரசின் பாதுகாப்புடனேயே அவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். உங்களால் விரும்பிய முகாம்களுக்கு செல்ல முடிந்திருக்காது. அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட முகாம்களுக்கும் சென்ற அதேவேளை அவர்கள் விரும்பிய மக்களை மட்டுமே உங்களால் சந்தித்திருக்க முடியும். இந்நிலையில் உங்களால் உண்மையான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க முடியுமா? என்ற சந்தேகத்தினையும் நான் அவர்கள் மத்தியில் எழுப்பினேன்' எனத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தமிழக நாடாளுமன்றக் குழுவிடம் ஒரு அறிக்கையினை கையளித்திருந்தார். அந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
'இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மனிதாபிமான நிலைப்பாட்டினை பார்வையிட இங்கு வந்துள்ள உங்களை வரவேற்பதுடன் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உலகின் பெரிய ஜனநாயக நாடாகவே நாம் இந்தியாவை பார்க்கின்றோம். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களினாலேயே தெரிவு செய்யப்படுகின்றனர் என்ற வகையில் அவ்வுறுப்பினர் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என எதில் இருப்பினும் மக்களிடம் நேரடியாகச் செல்ல உரிமையும், கடமையும் உடையவர்கள் என்ற எனது கருத்தினை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். எனவே அம்மக்களைப் பாதுகாப்பதற்காக அவர்களிடம் சென்று அவர்களைச் சந்திக்கும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளது.
துரதிருஸ்டவசமாக இங்குள்ள அகதி முகாம்களுக்கு செல்ல இந்நாட்டு எதிர்க்கட்சியினருக்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் மறுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கும், பிரித்தானிய எம்.பிக்களுக்கும் இம்முகாம்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டபோதிலும் நாம் மீண்டும் மீண்டும் கோரிக்கை முன்வைத்தும் எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே இவ்விடயம் தொடர்பாக நீங்கள் ஆழ்ந்த கவனம் செலுத்துவதுடன் இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.
இம்முகாம்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக அரசும், மத்திய அரசும் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
மேலும் முகாம்களிலுள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கு செல்ல அனுமதி அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் சட்ட மா அதிபருக்கும் செய்யவேண்டி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் என்னாலும் வேறு இரு எதிர்க்கட்சி உறுப்பினர்களாலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்னமும் நீதிமன்றத்திலேயே உள்ளது. இதற்கான ஆவணங்களின் பிரதியையும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுடனான சந்திப்பு!
தமிழக நாடாளுமன்றக் குழுவினர் கடைசிச் சந்திப்பாக வெளிநாட்டமைச்சருடனான சந்திப்பினை மேற்கொண்டனர். இச்சந்திப்பு ஐந்தாம் நாள் மாலை வெளிநாட்டமைச்சில் நடைப்பெற்றது.
இச்சந்திப்பு பற்றி ஊடகவியலாளர்களுக்கு வெளிநாட்டமைச்சர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
'இது ஒரு முழுமையான விஜயம். இடம்பெயர்ந்தோர் தொடர்பாக இலங்கை அரசிடம் மூடி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பது இந்த விஜயத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சகல இடங்களுக்கு செல்லவும், சந்திப்புகளை நடாத்தவும் இந்த தூதுக்குழுவினருக்கு இடமளிக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு அமைய இந்த தூதுக்குழுவினர் கண்ட உண்மைகளை தமிழ்நாட்டிலும் தெரிவிப்பார்களென நம்புகின்றேன். இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாட்டிற்கு தெளிவுப்படுத்த வேண்டியிருந்த தேவை இதில் நிறைவேறியது என நினைக்கின்றேன்.
இதேநேரம் எதிர்க்கட்சியினர் எப்போதும் ஏதாவது ஒன்றைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். முன்னர் தமிழ்நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினர்களை இங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட ஏன் அழைக்கவில்லை எனக் கூறியவர்கள், தற்போது அவர்களை அழைத்ததும் இவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகின்றது, எமக்கு அளிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
அங்கு எவரும் சென்று வரமுடியும். எனினும் அதற்கென சில வரையறைகளும் நடைமுறைகளும் உள்ளன. அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் முகாம்களுக்கு சென்று வருகின்றார்கள் என்றால் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் கிஷோர் என்ன அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரா? என்று கேள்வி எழுப்பினர்.
தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு.
நாடாளுமன்றக் குழுவின் கடைசிக் கட்ட நாடகம் சென்னை விமான நிலையத்திலேயே அரங்கேறியது. ஊடகவியலாளர்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி 40 நிமிடங்களுக்கு முன்னரே வந்து காத்திருந்தார்.
நாடாளுமன்றக் குழுவினர் வந்திறங்கியதும் கருணாநிதியிடம் தற்காலிக அறிக்கை ஒன்றைக் கையளித்தனர். அறிக்கையை கையளித்ததன் பின்னர் கருணாநிதி ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது, முதற் கட்டமாக நாளை வியாழன் முதல் அடுத்த வாரக் காலப்பகுதிக்குள் 58,000 தமிழர்கள் மீளக்குடியமர்த்தப்படுவதோடு, தொடர்ந்து படிப்படியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இப்பயணத்தினை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஊடகவியலாளர்களுடன் பேச கருணாநிதி விடவில்லை. இதனையடுத்து, ஈழ அகதிகளை விடுவித்த கலைஞர் வாழ்க என தமிழகமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 58,000 பேர் விடுவிப்பது பற்றி கொழும்பில் ஊடகத்துறை அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அவர் தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டார்.
தொடரும்..