Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்தியாவின் இடத்தை சீனா கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்கிறதா?

இந்தியாவின் இடத்தை சீனா கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்கிறதா?
யதீந்திரா

 

சமீப நாட்களாக சீனாவின் முக்கிய தலைவர்கள் இலங்கை வந்து சென்றிருப்பதானது, பிராந்திய அரசியல் குறித்த அவதானிகள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. சீன அரசாங்கத்தின் இரண்டாம் மட்ட தலைவரான வு-வென்ஹேவ் (Wu Bangguo) சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அண்மைக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த சீனத் தலைவர்களில் இவர் மிக முக்கியமானவராவார். இதுபற்றி அப்போது கருத்துத் தெரிவித்திருந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் வு - இவரது இலங்கைக்கான விஜயம் சீன-இலங்கை உறவில் ஒரு முக்கிய வரலாற்று மைல்கல்லாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது வருகைக்கு முன்னர் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லின்ங் ஹவான்ஜில் (General Liang Guanglie) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். சீனாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 23பேர் அடங்கிய குழுவொன்றுடன், ஐந்துநாட்கள் இலங்கையில் தங்கியிருந்த ஜெனரல் லின்ங், இலங்கையின் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர் உட்பட உயர்மட்டத்தினர் பலரையும் சந்தித்திருந்தார். இவ்வாறு சீனாவின் உயர்மட்ட தலைவர், வரலாற்றில் என்றுமில்லாவாறு இலங்கையுடன் நெருங்கிச் செல்வது, சீனாவின் இராணுவ விரிவாக்கத்தின் ஒரு பகுதியென்றே பல ஆய்வாளர்களும் கணிக்கின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் பலரும் - இது குறித்து இந்தியா அமைதியாக இருக்கக் கூடாது, இலங்கையில் தனக்குரிய இடம் குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டிய நேரமிது என்று எச்சரிக்கின்றனர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையில், சீனாவுக்கும் இலங்கைக்குமான உறவு 1952ல் மேற்கொள்ளப்பட்ட ரப்பர் - அரிசி (Rubber- Rice Agreement of 1952) உடன்பாட்டுடன் ஆரம்பிக்கின்றது. 1957ல் இலங்கைக்கும் - சீனாவுக்குமான ராஜந்திர உறவுகள் ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தத்தமது தூதுவர்களை பரிமாறிக் கொண்டன. சீன-இலங்கை உறவில் பிறிதொரு நகர்வு சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது. இந்த காலத்தில் சீனாவுக்கும் இலங்கைக்குமான கடற்பாதைகளை Maritime Agreements of July 1963 பயன்படுத்துவது தொடர்பான உடன்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1962ல் சீன - இந்திய யுத்தம் இடம்பெற்ற பின்னணியிலேயே சிறிமாவோ பண்டாரநாயக்க இத்தகையதொரு உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருந்தார். சீன-இந்திய யுத்தத்தின்போது சில அணிசேரா நாடுகளுடன் இணைந்து இணக்கப்பாட்டு முயற்சி ஒன்றிலும் சிறிமாவோ ஈடுபட்டிருந்தார்.

இந்த பின்புலத்தில் பார்த்தால் வரலாற்றுரீதியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் சீன-இலங்கை உறவு வலுவடைந்து சென்றிருப்பதை காணலாம். இப்போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொடர்ச்சியாகவும், அதன் சிந்தனைகளை உள்வாங்கியிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலத்தில், சீன-இலங்கை உறவு புதியதொரு அத்தியாயத்திற்குள் பிரவேசித்திருக்கிறது. சமீப ஆண்டுகளில் ஆளும் கூட்டணி சீனாவுடன் இதுவரைக்கும் 119 உடன்பாடுகளில் கைச்சாத்திட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் மகிந்த அரசுக்குமான தீர்மானகரமான யுத்தத்தின்போதுதான் இந்த புதிய அத்தியாயத்திற்கான அடித்தளம் இடப்பட்டது. 2007ல் சீனாவிற்கும் ஆளும் அரசாங்கத்திற்கும் இடையில் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான யுத்தத்தில் சீனா பிரதான பங்கு வகிக்கத் தொடங்கியது. இதே ஆண்டில் வெளிவந்த Jane’s Defence Weekly - விடுதலைப்புலிகளின் தாக்குதல்களில் இலங்கை இராணுவத்தின் பல தாக்குதல் விமானங்கள் அழிக்கப்பட்ட நிலையில், சுமார் 37.6 மில்லின் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களை, இலங்கை இராணுவத்திற்கு விற்கும் உடன்பாடு ஒன்றில் சீனா கைச்சாத்திட்டுள்ளதாக அறிக்கையிட்டுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே சீனா இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளிலும் முன்னணி வகிக்க ஆரம்பித்தது. 2005ல் சில மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட இலங்கைக்கான சீனாவின் உதவித் தொகை, 2008ல் ஒரு பில்லியனாக உயர்ந்தது. அதுவரைக்கும் இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகளில் அதிகூடிய தொகையை வழங்கும் நாடாக ஜப்பானே விளங்கியது. 2008 இன் புள்ளிவிபரங்களின்படி அமெரிக்காவின் கடனுதவி 4.7 மில்லியன் டொலர்களாக இருக்க, பிரித்தானியாவின் உதவி வெறும் 2 மில்லியன்களாகவே இருந்தது. இதன் மூலம் சீனா இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகளில் தலைமை பொறுப்பை (Aid Leadership) தட்டிக் கொண்டது.

அப்போது இது பற்றி கருத்துத் தெரிவித்திருந்த வெளிவகாரச் செயலர் பாலித்த கோகன்ன – இலங்கைக்கு உதவி வழங்குவதில் பல வளர்ச்சியடைந்த நாடுகளை, வளர்ச்சிடைந்துவரும் ஒரு கிழக்காசிய நாடான சீனா மேவிச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். சீனா இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முதல் இடத்தை எடுத்துக் கொண்டதன் மூலம் ஒரு தெளிவான செய்தியை பதிவு செய்தது - அது சீனா முன்னர் எப்போதும் இல்லாதளவிற்கு இலங்கையில் ஒரு தீர்மானகரமான இடத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் அக்கறை கொண்டுள்ளது என்பதாகும். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரகடனத்தை இந்தியா ஆதரித்த நிலையில் - சீனா எதிர்த்து வாக்களித்தது. இது சீனா மேலும் இலங்கை அரசுடன் நெருங்கி வருவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தியது. இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டுதான், அண்மைக்காலமாக சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்துச் செல்வதை நோக்க வேண்டும்.

பொதுவில் சீனா, இந்து சமூத்திர பிராந்தியத்தில் குறிப்பாக இந்தியா பாரம்பரியமாக செல்வாக்குச் செலுத்திவரும் இடங்களில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது என்பதே உண்மை. குறித்த நாட்டின் பொருளாதார ஏற்ற இறக்கங்களை கணித்து அதற்கேற்ப அந்த நாடுகளுடன் பொருளாதார உறவுகளை அதிகரிப்பதன் ஊடாக, தனது விரிவாக்திற்கான அடித்தளத்தை உருவாக்க்கிக் கொள்வதே சீனாவின் மூலோபாயம் ஆகும். இதன் ஒரு பகுதிதான் இலங்கை மீதான ஈடுபாடு. சீனா ஏலவே பாக்கிஸ்தானில் ஒரு வர்த்தக துறைமுகத்தை நிறுவியுள்ளது. அது பாகிஸ்தானின் கடற்படைத்தளமாக மாறலாம் என்னும் எதிர்பார்ப்பும் உண்டு. அதேவேளை பங்களாதேஸின் சிற்றகோங் துறைமுகத்தையும், பர்மாவில் உள்ள சிட்வே துறைமுகத்தையும் (Chittagong in Bangladesh and Sittwe in Burma) புனரமைப்பதற்கான நிதியுதவியையும் சீனா ஏற்கனவே வழங்கியுள்ளது. சீனாவின் இத்தகைய நகர்வுகள் - அதன் கடற்படை விரிவாக்கதிற்கான ஒரு தந்திரோபாயம் என்று குறிப்பிடுகின்றார் பென்டகனைச் சேர்ந்த இராணுவ நிபுணர் கேணல் கிறிஸ்தோப்பர் பெகர்ஸன் (Colonel Christopher J. Pehrson). இதே கருத்தேயே பல்வேறு இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் இடத்தை சீனா கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்கிறதா?

சீPனா, தனது செயற்பாடுகள் எந்தவொரு மேலாதிக்க நோக்கம் கொண்டதுமல்ல என்று கூறிக்கொண்டாலும்கூட, சீனா ஒரு மென்மையான அதிகாரத்தை (Soft Power) விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. சீனா இலங்கையின் மீதான இந்தியச் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்கின்ற சூழலில் இந்தியாவால் தொடர்ந்தும் அமைதி காக்க முடியுமா? எவ்வாறிருந்தபோதும் இலங்கையின் மீதான சீன அதிகார விரிவாக்கத்தை இந்தியா எவ்வாறு பார்க்கப் போகிறது என்பதைக் கொண்டே, இலங்கைக்கும் இந்தியாவிற்குமான எதிர்கால உறவு அமையும்.

அமெரிக்கா மூலோபாய ரீதியாக ஆசியா நோக்கி திரும்பியிருக்கின்ற சூழலில்தான், சீனா தனது கடற்படை விரிவாக்கத்தின் மீது தீவிரம் காட்டிவருகின்றது. எனவே இது எதிர்காலத்தில் முக்கிய பிரச்சனையாக மாறலாம். சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்து வரும் சூழலிலேயே அமெரிக்காவின் பார்வையும் இலங்கையின் மீது அதிகரித்து செல்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் மூலோபாய ரீதியாக ஒரு நேர்கோட்டில் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்துச் செல்லும் சூழலில், இலங்கையானது - இந்திய அமெரிக்க மற்றும் சீனா ஆகிய முத்தரப்பின் ஆடுகளமாகவே மாறுவது தவிர்க்க முடியாமல் போகலாம். இந்த ஆடுகளத்தில் தமிழர் பிரச்சனை ஒரு துருப்புச் சீட்டாக அமையலாம்.

10/5/2012 10:58:17 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்