Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சர்வதேசப் பயங்கரவாதமும் போர்க் குற்றமும் தமிழீழப் போராட்டமும் - பகுதி 2

சர்வதேசப் பயங்கரவாதமும் போர்க் குற்றமும் தமிழீழப் போராட்டமும் - பகுதி 2
சண்முகவடிவேல்

 

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய பூகோள, பிராந்திய அரசியலும் சிங்கள- தமிழ் முரண்பாடும்.  

இந்த யுத்தத்தின் தாய் சீனா. 2005-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷா வெற்றியடைந்தமைதான் இந்த யுத்தத்தின் குலவெற்றியாகும். யுத்தம் ஜனாதிபதித் தேர்தல் சார்ந்த அரசியலால் நிர்ணயிக்கப்பட்டது. இராணுவ அர்த்தத்தில் புலிகளின் தோல்வி கடலில் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. புலிகளின் 13 ஆயுதக் கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதோடு புலிகள் தரையில் முடமாக்கப்பட்டுவிட்டனர். ஆனாலும் குறிப்பாக இந்திய மத்திய அரசின் பொதுத்தேர்தல் களமும், சர்வதேச ராஜதந்திர சூழலும், புலிகளின் கெட்டியான இராணுவத் திறனும், தரையில் ராஜபக்ஷாக்களுக்கு சவால் விடக்கூடிய யுத்த சூழலை ஏற்படுத்தியிருந்தன.

ஆயினும் ராஜபக்ஷாக்கள் இதனை பின்வரும் வகைகளில் தாண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் இராணுவ இழப்புக்களின் மத்தியில் ஸ்கந்தபுரத்தோடு எல்லையிட்டுத் தம் தாக்குதலை நிறுத்த இராணுவத்தினர் திட்டமிட்டனர். ஆனால் களநிலையில் ஏற்பட்ட சில மாற்றங்களைத் தொடர்ந்து இராணுவம் தொடர்ந்து முன்னேறுவதான முடிவுக்கு வந்தனர்.

ஆயினும் கிளிநொச்சியைக் கைப்பற்றிக் கண்டி வீதியை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதுடன், யுத்தத்தை நிறுத்துவதே அரசியல் ரீதியாக தமக்கு சாதகமானதென பசில் ராஜபக்ஷ கருத்தை முன்வைத்ததாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தி உண்டு. அதாவது கண்டி வீதியைக் கைப்பற்றுவதோடு புலிகளை முடக்கி யுத்தத்தை நிறுத்துவது தமக்கு சாதகமென பசில் கருதினார் போலத் தெரிகிறது. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷாவும், இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவும், புலிகளை அழிக்கும்வரை யுத்தத்தை தொடரவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

சிங்கள அரசு இதுவரை கடைப்பிடித்து வந்த ஓர் அரசியல் இராணுவ மூலோபாயம் இப்போது ராஜபக்ஷ அரசாங்கத்தால் மாற்றப்படும் நிலையேற்பட்டது. அதாவது இலங்கைக்கு எதிரான அம்மை நோய் போல இந்திய ஆதிக்கப் படர்ச்சி இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அந்த அம்மைநோயை எதிர்க்கவல்ல அம்மைப்பாலாக பேணப்படவேண்டியவர்கள் என்ற ஒரு மூலோபாயத்தை பிரேமதாச காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வகுத்திருந்தது.

அதாவது ஐ.தே.க.வின் கொள்கையின்படி புலிகள் பலவீனப்படுத்தப்பட்டு, அதேவேளை பேணப்பட வேண்டியவர்கள் என்பதே நிலைப்பாடாய் இருந்தது. ஆனால் உலக அரங்கிலும் குறிப்பாக ஆசியாவில் சீனா தலையெடுத்து வரும் நிலையில் இந்திய ஆதிக்கத்தை இலங்கையில் பரவவிடாது தடுத்து நிறுத்தவல்ல சீனப்பெரும் சுவரை பாக்கு நீரிணையில் நிறுத்தி விடலாமென ராஜபக்ஷாக்கள் கணக்குப் போட்டனர். 1980 களில் இலங்கைக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்கா பின்வாங்கியது போன்ற சர்வதேச சூழல் தற்போது சீனாவிற்கு இல்லையென்றும், சீனா தமக்கு நிரந்தர உறுதுணையாக இருக்கக்கூடிய பலத்தை பெற்று வருவதாகவும் நம்பிய ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளை அழிக்கும் வரை யுத்தத்தை தொடர்வது என்ற முடிவுக்கு வந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு முடிவு கட்ட விரும்பிய இந்திய ஆட்சியாளரின் பிரதான தேவையைப் பயன்படுத்தி சீன அரசின் உறுதியான ஆதரவுடன் யுத்தத்தை இறுதிவரை நடத்த ராஜபக்ஷாக்கள் சித்தமாகினர். இந்திய தேர்தல் சூழலில் ஏற்பட்ட தளம்பல்களை தமது ராஜதந்திரத் திறனால் ராஜபக்ஷாக்கள் கடந்தார்கள். மக்களை படுகொலை செய்வதன் மூலம் தம் இராணுவ முன்னேற்றத்தை அடையலானார்கள். இங்கு யுத்தம் அப்பாவி மக்களை படுகொலை செய்கின்ற இனப்படுகொலையின் வெற்றியாக அமைந்ததே தவிர இராணுவ வியூகத்தின் வெற்றியல்ல.

அதாவது இனப்படுகொலை வியூகத்தால் வெற்றி பெற்றார்களே தவிர இராணுவ வியூகத்தால் வெற்றி பெறவில்லை. இங்கு முழு அளவில் மக்களை பாரிய படுகொலைக்கு உள்ளாக்கியமையாலும், உணவு, மருந்து விநியோகங்களை முற்றிலும் இல்லாமல் செய்தமையாலும், மக்களை நடமாட்டமின்றி சிறுபகுதிக்குள் அடைத்து சமூகச் செயற்பாட்டையும், மனித நடமாட்டத்தையும் முற்றிலும் முடமாக்கவிட்டு அந்த மக்கள் மீது, கேட்பாரின்றி வான்வழி, கடல்வழி, தரைவழிகளால் குண்டுமாரி பொழிந்தமையாலும், பாரிய தமிழின அழிப்பு அரங்கேறவே புலிகள் செயலற்று வீழ்ந்தனர். இதைத்தான் அவர்கள் இராணுவ வெற்றி என்று கூறுகிறார்கள். அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு வீரமும், இராணுவத்திறனும் தேவையில்லை. மக்களை கொல்வதென்று முடிவு எடுக்கவல்ல கோழைத்தன மனம் போதுமானது. எனவே இங்கு சிங்கள பெற்ற வெற்றி புலிகளுக்கு எதிரான அவர்கள் கூறும் இராணுவ வியூக வெற்றியல்ல. அது மக்களை கொன்றுகுவித்த அவமானகரமான ஓர் இனப்படுகொலை வெற்றியாகும். இந்த இனப்படுகொலை வியூகத்திற்குள் புலிகள் முடமாகினர் என்பது வேறுகதை.

சர்வதேசப் பயங்கரவாதமும் போர்க் குற்றமும் தமிழீழப் போராட்டமும் - பகுதி 2

புலிகளை முடக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் கொள்கையே தவிர புலிகளை அழிக்க வேண்டும் என்பதல்ல. புலிகள் சவால்விட முடியாத அளவிற்கு முள்ளிவாய்க்காலுடன் முடக்கப்பட்டுவிட்டதாக நம்பிய மேற்குலகம் பெரும் தொகையில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் மனிதாபிமான படையிறக்கலின் மூலம் ராஜபக்ஷா அரசாங்கத்தையும், புலிகளையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தி விடலாமென நம்பியது போல் தெரிகிறது. ஆனால் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்படும் வரை யுத்தம் தொடரப்படர வேண்டுமென்ற இந்திய அரசின் விருப்பத்தை மேற்குலகால் தாண்ட முடியவில்லை.

அமெரிக்கப் படை இறுதி நேரத்தில் பாதுகாப்பிற்கு வரும் என்ற ஒரு தகவல் புலிகளிடம் காணப்பட்டது. அதேவேளை யுத்த நிறுத்தம் கோரி புலிகள் இறுதி நாட்களில் ஒரு சீன வெளிநாட்டுத் தூதரகத்திற்கு ஊடாக சீனாவை அணுகியிருந்தனர். இரண்டு நாள் அவகாசம் கோரிய குறிப்பிட்ட அந்த சீனத் தூதரகம் இறுதியில் கைவிரித்தது. எப்படியோ 1,40,000 ற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் பிரேத எண்ணிக்கையில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தத்தம் அரசியல் இலக்குகளைக் கணக்குப் பார்த்தனர். அனைத்து வகை உள்நாட்டு, வெளிநாட்டு சர்வதேச அரசியல் சக்திகளின் தேவைகளுக்குமான அரசியல் இராணுவ பரிசோதனைப் பிராணிகளாய் (Guinea pigs) அப்பாவித் தமிழ் மக்கள் ஆக்கப்பட்டனர்.

தன் மயிர் துவாரத்திற்கூட வியர்வைபடியா பெரு வெற்றியை சீனா இந்த யுத்தத்தில் அடைந்தது. தமிழர்கள் பேரழிவிற்கு உள்ளாகினர். புலிகள் களநிலை அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டனர்.

 இந்தியா புலிகளை அகற்றும் விடயத்தில் வெற்றி பெற்றாலும் சீனாவிடமும், மற்றும் அந்நிய சக்திகளிடமும் இலங்கையை பெருமளவு பறிகொடுத்து விட்டது. இந்தியா மலையை இழந்து கைமண் பெற்றது. இதனால் கடல்வழி இந்தியாவின் பாதுகாப்பும், வளர்ச்சியும் கேள்விக்கு உள்ளாகிவிட்டன. ராஜபக்ஷாக்கள் தம் பரம்பரைக்கான வெற்றியைத் தேடினர். ஆயினும் இலங்கை அரசு, தான் பிளவுண்டு நீண்ட காலத்தில் தோல்வியடைவதற்கான ஆழமான மூலக்கூறுகளைப் பெற்றுவிட்டது.

இலங்கையில் நிகழ்ந்த யுத்தத்தின் முடிவு தமிழ் மக்கள் பேரழிவுக்கு உள்ளாவதில் முடிந்தது. யுத்தம் முடிந்ததும் ராஜபக்ஷாக்கள் வெற்றிப் பெருமிதம் அடைந்தனர். தமது குடும்ப ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான காரணியாய் அந்த வெற்றியைப் பயன்படுத்தி எல்லா வகையிலும் மூர்க்கமாகச் செயற்படத் தொடங்கினர். ஐ.தே.க ஆதரவுடன் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராகிய பின்னணியில், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீனசார்பு நிலைப்பாட்டைக் கொண்ட ராஜபக்ஷாவைத் தோற்கடிக்கலாம் என மேற்குலகம் நம்பிய நிலையில் அதற்கான எத்தனத்தில் மேற்குலகம் ஈடுபட்டது. யுத்த வெற்றி வீரனாகச் சரத் பொன்சேகா காட்சியளித்த நிலையில் ஐ.தே.க ஆதரவு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு, இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு கூடவே ஜே.வி.பி யின் ஆதரவு என்பவற்றுடன் பொன்சேகாவல் ராஜபக்ஷாவை வீழ்த்த முடியும் என மேற்குலகம் கணக்குப் போட்டிருக்க முடியும்.

ஆனால் பொன்சேகாவை மேற்குலகினதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் ஆதரவாளனாகக் காட்டி யுத்தத்தின் வெற்றியை அவர் அமெரிக்கவிடமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடமும் விற்கப்போகிறார் என்ற மலினமான தீவிர சிங்கள பௌத்த இனவாத பிரச்சாரத்தை ராஜபக்ஷாக்கள் மேற்கொண்டனர். இதனால் அவர்களே எதிர்பார்த்திராத வெற்றியை ஈட்டினார்.

இவ்வாறு வெற்றிபெற்ற ராஜபக்ஷா தானே யுத்தவீரன் என்ற மகுடத்தைச் சூடிக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் சுமாராக 2/3 பங்கு பெரும்பான்மைப் பலத்துடனான வெற்றியைப் பெற்றார். விகிதாசாரப் பிரதிநித்துவ முறையிலான தேர்தலில் 2/3 பங்கு பெரும்பான்மைப் பலத்தை எந்தவொரு கட்சியும் அடைய முடியாது என்பது அரசியல் கணிப்பாளர்களின் நம்பிக்கை. ஆனால் இராணுவ வெற்றியின் பெயராலான தீவிர இனவாதத்தின் மூலம், தானே சிங்கள இனவாதத்திற்குத் தலைமை தாங்கக் கூடிய தூய இனவாதத் தலைவன் என்பதை ராஜபக்ஷா முன்னிறுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ, அன்றி மேற்குலகின் அழுத்தத்திற்கோ பணியமுடியாத, தமிழர்களுக்கு எவ்வித உரிமைகளையும் வழங்காதிருக்கக் கூடிய தலைவன் தான் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் நிறுவுவதன் மூலம் தன்னை ஆயுட்காலத் தலைவனாக மட்டுமல்ல, தன் குடும்பத்தையே அரசியல் ஆதிக்கத்திற்குரிய தனிப்பெரும் சக்தியாக்கிக் கொண்டார். இந்நிலையில் அவர் சீனாவின் ஆதரவுடன் உலக அரங்கில் நின்று நிலைக்க முடியும் என நம்பலானார். அதேவேளை ராஜபக்ஷாக்களின் மனப்பூர்வமான சீன சார்பு நிலையையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தேவையையும் பயன்படுத்தி தன்னை இலங்கைத் தீவில் முற்றிலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடலாயிற்று.

ஆயுதம் தாங்கிய அரசற்ற இயக்கங்களை அரச இராணுவத்தின் மூலம் ஒடுக்குவது, அதேவேளை மூர்க்கமான அரசுகளை புதிய மனிதவுரிமை மற்றும் போர்க்குற்ற விசாரணைகள், அதற்கான தண்டனைகள் என்பவற்றின் மூலம் கையாள்வது என்ற உபாயத்தை இலங்கை விடயத்தில் மேற்குலகம் பின்பற்றத் தொடங்கியது. மேற்குலகிற்குச் சவால்விடும் நிலையை ராஜபக்ஷா அடைந்தது மட்டுமன்றி, சீனா இலங்கையில் காலூன்றி இந்து சமுத்திரத்தில் தன்னைச் ஸ்தாபிப்பதற்கு ராஜபக்ஷா பெரும் உறுதுணையானார். இந்நிலையில் பொன்சேகாவின் தேர்தல் வெற்றியால் ராஜபக்ஷாவைத் தோற்கடிக்கலாமென நம்பிய மேற்குலகின் எண்ணம் நிறைவேறத் தவறியது. ராஜபக்ஷா இனவாத அடிப்படையிலான, யுத்த வெற்றியின் அடிப்படையிலான தேர்தல் வெற்றிகள் மூலம் மேலும் அதிகம் மமதை அடைந்தார். இந்நிலையிற்தான் மனிதவுரிமை மீறல், போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற ஆயுதத்தை ராஜபக்ஷாவிற்கு எதிராக மேற்குலகம் ஏந்தத் தொடங்கியது. இந்த ஆயுதத்தைப் பனிப்போரின் பின்பு மேற்குலகம் தீட்டத் தொடங்கியது. இது ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கங்கள் அழிக்கப்படும் வெற்றிடத்தில் முரட்டரசுகள் தலையெடுப்பதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாக மேற்குலகால் முன்வைக்கப்பட்டது.

உண்மையில் இயங்கியல் விதியின்படி ஆயுதப் போராட்டங்களானவை தவிர்க்க முடியாத சமூக வரலாற்றுத் தேவையின் மீது எழுகின்றன. எனவே அந்த எழுச்சி நசுக்கப்படும்போது அதற்கான வடிகால் உலக ஆதிக்க சக்திகளால் தேவைப்படுகிறது. அது இரண்டு வகைகளில் அமைகிறது. ஒன்று முரட்டுத்தனமான அரச ஒடுக்கு முறையாளர்களைக் கட்டுப்படுத்துவது. இரண்டு போராட்டத்திற்குக் காரணமாய் இருந்த குறைபாடுகளுக்கு குறைந்த பட்சம் சமரசம் செய்வதற்கான தீர்வுகளைக் காண்பது. இந்த இரண்டிற்கும் ஒரே திறவுகோல்தான் உண்டு. அதுவே புதிய மனிதவுரிமைக் கோட்பாடு, யுத்தக் குற்றம், குற்றத்திற்கான தண்டனை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் என்பன.

இலங்கையில் நிகழ்ந்திருக்கும் பாரிய இனப்படுகொலைக்கான விடயத்திலும் 'யுத்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி' என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

ராஜபக்ஷாக்கள் கூட்டுச் சேர்ந்திருப்பது பலவீனமான ஒரு சிறிய நாட்டுடன் அல்ல. அசுரவேகத்தில் பலம்பொருந்திய உலக வல்லரசாக வளர்ந்துவரும் புதிய சீனாவுடன். ஓவ்வொரு நிமிடமும் சீன-இலங்கை உறவு வேகமாக வளர்ந்து செல்கிறது. எவ்வளவிற்கெவ்வளவு காலம் தாமதமாகிறதோ, அவ்வளவிற்கவ்வளவு சீனா இலங்கையில் உறுதியடைந்துவிடும். இலங்கையில் ஏற்படும் சீனாவிற்கான வளர்ச்சி சீனாவை இந்து சமுத்திரத்தில் விரைவாக எஜமானாக்கிவிடும் என்ற கண்ணோட்டம் மேற்குலகிடம் உண்டு. எனவே தாமதமாகும் ஒவ்வொரு கணமும் இலங்கைக்கூடாக இந்து சமுத்திரத்தில் சீனா தன்னைச் சக்கரவர்த்தியாக்க உதவும். ஆதலால் பனிப்போரின் பின் பின்னான கூரிய ஆயுதமாகக் காணப்படும் மனிதவுரிமை மீறல், யுத்தக் குற்றம் போன்றவற்றிற்கான விசாரணையை முதன்மைப் படுத்துவதன் மூலம்தான் இலங்கையில் ராஜபக்ஷாக்களைக் கட்டுப்படுத்துவதற்கான முதல்நிலை வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த ஆயுதம் பனிப்போரின் பின்புதான் முதன்மைப் படுத்தப்படுகிறதாயினும், பனிப்போர்க் காலத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய இது போன்ற குற்றச் செயல்களுக்கும் அது பொருத்தம் ஆக்கப்பட்டுள்ளது. ஆதலாற்தான் பனிப்போர்க் கால போல்பொட்டுக்களின் கம்போடியப் படுகொலையிலிருந்து லிபிய அதிபர் கேணல் கடாபியின் இன்றைய மக்கள் படுகொலைவரை இவ்வகைச் சர்வதேச விசாரணைகளுக்கான குற்றப் பட்டியல் நீள்கிறது. கேணல் கடாபி மீது இத்தகைய குற்றச்சாட்டின் மீதான பிடியாணை இன்று (யூலை 2011) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரண்முறைக்குள் அகப்படுத்தப்படக்கூடிய ஒரு புள்ளியே ராஜபக்ஷாக்கள்.

மேற்குலகின் இந்நிலைப்பாட்டை சிங்கள ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்தின் தலையீடு என்று குற்றஞ்சாட்டுகின்றனர். தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிரான அமெரிக்காவினதும் ஏனைய மேற்குலக நாடுகளினதும் குற்றச்சாட்டை ஏகாதிபத்தியத்தின் தலையீடு என்று கூறினால், புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு அதே ஏகாதிபத்திய அமெரிக்காவிடம் இருந்து சிங்கள அரசு பெற்ற உதவியை எவ்வாறு வர்ணிப்பது? அமெரிக்காவிடம் இருந்து போராட்டத்திற்கு எதிரான உதவிகளைத் தாம் பெறும்போது அமெரிக்காவை ஏகாதிபத்தியம் என்று வர்ணிக்காதவர்கள் தமிழ் மக்களுக்கான நீதி நியாயங்களையும், உரிமைகளையும் பற்றி அமெரிக்கா பேசும்போது அது ஏகாதிபத்தியத்தின் தலையீடு என்று குற்றஞ் சாட்டுகிறார்கள்.

இந்துசமுத்திர பிரந்தியத்திலும், சர்வதேச அரங்கிலும் நீண்ட கால அடிப்படையிலான பெரும் பின்னடைவை அமெரிக்கா இந்த யுத்தத்தில் சந்தித்துள்ளது. தனது பின்னடைவிற்கு  இந்தியாவின் நெகிழ்வின்மையே காரணமென அமெரிக்கா கருதுகிறது. அதாவது பூகோள அரசியலில் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துப்போவதென்றும் பிராந்திய அரசியலில் இந்தியாவுடன் அமெரிக்கா ஒத்துப்போவதென்றும் இருந்த புரிந்துணர்வு இங்கு தனக்குப் பாதகமாய் முடிந்துவிட்டதாக அமெரிக்கா கருதுகிறது. இந்நிலையில் பிராந்திய அரசியலிலும், அமெரிக்கா முனைப்பான தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற ஒரு நிலைக்கு வந்துள்ளது. அடிப்படையில் இந்தியாவுடன் அமெரிக்கா முரண்படாது விட்டாலும், சீனாவிடமிருந்து இலங்கையை மீட்டெடுக்க வேண்டிய குறைந்தபட்ச கையாளல்களில் அமெரிக்கா அதிக முனைப்புடன் செயற்படுவதாய்த் தெரிகிறது.

தொடரும்

9/2/2012 1:44:40 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்