சண்முகவடிவேல்
முகவுரை
'தேசிய இனப்பிரச்சினை என்பது எப்போதும் ஒரு சர்வதேசப் பிரச்சினை' என்ற மிக எளிய உண்மையை முதலில் மனதிலிருத்தியாக வேண்டும்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் முற்றிலும் சர்வதேசப் பரிமாணத்தில் நிகழ்ந்துள்ளது. வரப்போகும் ஒரு நூற்றாண்டுக்கான இந்துசமுத்திர அரசியல் வியூகத்தின் தலையாய பகுதியாக இந்த யுத்தம் நிகழ்ந்திருக்கிறது. இதனை வெறுமனே தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையேயான பிரச்சினையாகவோ அன்றி வெறும் உள்நாட்டுப் பிரச்சினையாகவோ மட்டும் பார்ப்பது மிகப்பெரும் தவறு.
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது அடிப்படையில் ஓர் இந்திய உபகண்டப் பிரச்சனை. சிங்கள மக்களிடமும், சிங்கள பௌத்த மகாசங்கத்திடமும், மற்றும் சிங்கள நிறுவனங்களிடமும், சிங்கள அரசிடமும், சிங்கள அறிவியலாளர்களிடமும், மற்றும் சிங்கள ஊடகங்களிடமும் இந்திய எதிர்ப்பு வாதம் வரலாற்று பூர்வமாய் வேரூன்றியுள்ளது. தமிழ் மக்களை இந்தியாவுடன் இணைத்து அடையாளம் காண்பதால் இந்தியாவிற்கு எதிரான தமது எதிர்ப்பை தமிழ் மக்கள் மீது சிங்கள ஆட்சியாளர்களும், மத நிறுவனங்களும், மற்றும் பரந்துபட்ட மக்களும் காட்டுகின்றனர். இந்தியாவை இலங்கைத்தீவிற்கு எதிரான ஓர் ஆக்கிரமிப்புச் சக்தியாக சித்தரிக்கும் சிங்கள மக்கள் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஆயிரக்கணக்காக ஆண்டுகளாக ஈழத் தமிழ் மக்கள் மீது புரிகின்றனர்.
இப்பிரச்சினையை விளங்கிக் கொள்ளும் வெளிநாட்டு அரசுகள் இந்துசமுத்திரம் தழுவிய, உலகளாவிய தமது நலன்களுக்கு இப்பிரச்சினையை ஒரு பகடைக் காயாய்ப் பயன்படுத்துகின்றனர். தற்போது சீன-அமெரிக்க பூகோள வியூகத்திற்குள்ளும், இந்தியா சார்ந்த பிராந்திய வியூகத்திற்குள்ளும், இப்பிரச்சினை அகப்பட்டு திருப்பாற்கடலில் வெண்ணை கடைவது போல் கடையப்படுகிறது.
ஈழத்தமிழரை 'இந்திய விஸ்தரிப்பு வாதத்தின்' கருவியாக எண்ணும் சிங்களவர்கள் இந்திய ஆதிக்கத்தை இலங்கையில் இல்லாது செய்வதற்கு ஈழத்தமிழரை அழிப்பதே ஓர் இலகுவான தீர்வென நினைக்கின்றனர். இது விடயத்தில் தம்முடன் கைகோர்க்கக் கூடிய எல்லா நாடுகளையும் சிங்கள அரசு பயன்படுத்துகிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்னவென்று முன்னாள் இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியிடம் அவரது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சகாவான டாக்டர் டேவிட் சல்போன் 1984-ம் ஆண்டு கேள்வி கேட்டபோது 'தமிழர்களின் தலைகளை நொருக்குவதுதான் (Smash the heads of the Tamils) தீர்வு' என அதிர்ச்சியூட்டும் பதிலை அவர் அளித்தார். சர்வதேச வியூகத்தால் சுற்றிவளைத்து சர்வதேச சம்மட்டியால் தமிழரின் தலைகளை ராஜபக்ஷாக்கள் நொருக்கியிருக்கிறார்கள். இதைக்கண்டு லலித்தின் ஆன்மா சாந்தியடையும் என கருதலாம்.
நீண்டகாலக் கண்ணோட்டத்துடன் இந்துசமுத்திரத்திற்குள் சீனாவின் பிரவேசம், இதைக்கண்டு அமெரிக்கா அடையும் சீற்றம், இந்தியாவின் பிராந்திய நலன் என்பன இலங்கையின் இனப்பிரச்சினையில் மையம் கொண்டுள்ளன. முள்ளிவாய்க்கால் யுத்தம் தொடர்பாக வெளிவராத இரகசியங்கள் ஏராளம் உள்ளன. அதாவது முள்ளிவாய்க்கால் இரத்த சகதிக்குள் அதிர்ச்சி அளிக்கவல்ல சர்வதேச அரசியல் இரகசியங்கள் நிறையவே புதைந்துள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச அரசியற் சூறாவளிக்குள் சிக்குண்டுள்ளதால் அதிலிருந்து தமிழ் மக்கள் மிக நிதானமாகத் தம்மை தற்காத்து மீளவேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் தலையாய பகுதியே சர்வதேசப் பரிமாணம்தான். ஆதலால் சர்வதேச நிலைமைகளை சரிவர அடையாளம் கண்டு, சர்வதேசக் கண்ணோட்டத்துடன் தமிழ் மக்கள் தமக்கான பாதையையும், பயணத்தையும் நிதானமாகவும், அறிவுபூர்வமாகவும் நிர்ணயிக்க வேண்டியுள்ளது.
சர்வதேச வர்த்தக அரசியலானது மக்களின் மனங்களைத் திருடியுள்ளது. அது தனது மனத்தையே மக்களின் மனமாக்கியுள்ளது. அதாவது தனது மனதை எமது மனதாக்கியுள்ளது. சர்வதேச அரசியலில் தலையெடுக்கும் சக்திகள் தங்கள் தீர்மானங்களை எங்கள் தீர்மானங்கள் ஆக்குகின்றன. தங்கள் தேவைகளை எங்கள் தேவைகளாக்குகின்றன. தங்கள் நலன்களுக்காக எங்களை இரத்தம் சிந்தச் செய்கின்றன. முள்ளிவாய்க்காலில் ஓடும் எங்கள் இரத்த ஆற்றில் சர்வதேச சக்திகள் தோணிகள் ஓட்டுகின்றன. இந்தவகையில் சர்வதேச அரசியலையும், அதன் உடற்கூற்றியலையும், கவனமாகப் பரிசீலித்து அதற்கேற்ப தமிழ் மக்கள் தமக்குப் பொருத்தமான, யதார்த்த பூர்வமான ஒரு பாதையை அடையாளம் கண்டு அதன்வழி கரையேற வேண்டும்.
சிங்களத் தலைவர்கள் சர்வதேச அரசியலிலும், அரசியல் ராஜதந்திரத்திலும் கைதேர்ந்தவர்கள். சர்வதேச அரசியல் வியூகத்தால் ஈழத்தமிழரை ராஜபக்ஷாக்கள் தனிமைப்படுத்திச் சுற்றிவளைத்துக் கேட்பாரின்றிக் கொன்று குவித்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் அரசியல் ஆய்வுகூடத்தில் ஈழத்தமிழர் கினி பிக்ஸ் பிராணிகளாய் (Guinea pigs), தவளைக் குஞ்சுகளாய் பரிசோதனைக்கு உள்ளாக்கினர். பரிசோதனையின் வெற்றி அதனை மேற்கொண்டோரின் கழுத்தில் பட்டங்களாய்த் தொங்குகின்றன. ஆனால் தவளைக் குஞ்சுகளோ தோல் வேறு, எலும்பு வேறு, தசைவேறாயின.
தொடர்ந்தும் தமிழர்கள் தவளைக் குஞ்சுகளாய், கினி பிக்ஸ் பிராணிகளாய் வாழ முடியாது. முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொலைக்களத்திற்கான தூக்கு மரங்கள் முள்ளிவாய்க்காலில் நாட்டப்பட்டிருந்தாலும், தூக்குக் கயிறுகள் சர்வதேச அரங்கிலிருந்தே தருவிக்கப்பட்டன. ஆதலால் மிக ஆழமாக சர்வதேச கண்ணோட்டத்துடன் ஈழத்தமிழர் பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது. இச்சிறு கட்டுரை முள்ளிவாய்க்காலை நீண்ட சர்வதேச கண்ணோட்டத்தில் நிறுத்துகிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கான சர்வதேசப் பரிமாணத்தின் ஒருசில முனைகளை இக்கட்டுரை அடையாளம் காட்ட முனைகிறது.
ஜனநாயக அணுகுமுறை, சர்வதேசக் கண்ணோட்டம், இராஜதந்திர நுணுக்கம் ஆகிய இவை மூன்றும் தமிழீழ விடுதலைக்கான தலையாய அடிப்படைகளாகும். இவை மூன்றுமின்றி ஈழத்தமிழர் ஒருபோதும் விடுதலையை அடையமுடியாது.
'ஜனநாயகம்' என்று ஒரு வெறும் பசப்பு வார்த்தையால் ஜனநாயத்தை அடையமுடியாது. முதலில் ஒரு ஜனநாயகக் கலாச்சாரம் வேண்டும். ஜனநாயகம் என்பது ஒரு கலாச்சாரமும், வாழ்க்கை முறையுமாகும். அரசியலிலும், அரசியல் அதிகாரத்திலும் மக்களைப் பங்காளிகள் ஆக்கும் ஒரு முறைமைக்குப் பெயரே ஜனநாயகம் என்பதாகும். அதாவது மன்னர்களினதும், தனிமனிதர்களினதும், தீர்மானங்களுக்குப் பதிலாக அரசியல் அதிகாரத்திலும், தீர்மானம் எடுத்தல் முறையிலும் மக்களைப் பங்காளிகள் ஆக்குவதுதான் ஜனநாயகத்தின் தலையாய பொறுப்பு. ஜனநாயகமானது முதலில் செவிமடுத்தலிலும், மற்றையோர் கருத்தை மதிப்பதிலும் ஆரம்பமாகிறது. அதாவது செவிமடுத்தல், கலந்தாலோசித்தல், பொறுப்புக் கூறல், பொது அபிப்பிராயத்திற்கு கட்டுப்படுதல், தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு அப்பாலான அறிவார்ந்த அணுகுமுறை என்பன ஜனநாயகத்திற்கான முக்கிய ஒழுக்க விதிகளாகும்.
'நாம் ஓர் அரசிற்குள் மட்டும் வாழவில்லை, கூடவே அரசுகள் எனப்படும் அமைப்பிற்குள்ளும் வாழ்கிறோம்' என்ற சர்வதேச விதிபற்றிய புகழ்மிக்க கூற்றை கருத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச விதியை எழுமாத்திரத்தில் யாரும் மீறமுடியாது. காணப்படும் விதிக்குள் எமக்கான இலக்கை எவ்வாறு தேடுவது என்பதே எமது பணி. சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைவது ஒரு விதி. சூரியனை வடக்கே தோன்றுமாறு ஆணையிட்டுவிட்டு நாம் செயற்படலாம் என்றில்லை. கிழக்கே தோன்றி மேற்கே மறைகின்ற விதியை உணர்ந்து அதில் எமக்குப் பொருத்தமான செயற்பாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும்.
உலக ஒழுங்கை தன் இஷ்டப்படி மாற்றி அமைக்க ஹிட்லர் புறப்பட்டார். பெரும் இராணுவ பலத்துடனும், ஆசிய ஐரோப்பிய நாடுகள் தழுவிய கூட்டணியுடனும் ஹிட்லர் ஓரு புதிய உலக ஓழுங்கை உருவாக்கப் புறப்பட்டார். ஆனால் அவர் தொடங்கிய இடத்திற்கு வெகுதூரம் பின்நோக்கி ஜேர்மனியைத் தள்ளினார். இது உலக ஒழுங்கின் மீது செயற்படுவது பற்றிய சிறந்த வரலாற்றுப் படிப்பினையை பெருவல்லரசுகளுக்கும், புத்தி ஜீவிகளுக்கும் கொடுத்துள்ளது. 'தக்கன பிழைக்கும்' ((‘Survival of the fittest’) என்ற டார்வின் கோட்பாட்டை நிட்ஷே 'தக்கனதான் பிழைக்க வேண்டும்' (’Fittest to survive’) என மாற்றினார். நிட்ஷேயின் இக்கோட்பாட்டைப் பின்பற்றியே தன் அரசியல், வெளி உறவுக்கொள்கையை வகுத்துக்கொண்ட ஹிட்லர் யதார்த்தத்திற்கு மாறாக எழுமாத்திரத்தில் தன் விருப்பப்படி உலக ஒழுங்கை உருவாக்க முற்பட்டார். இத்தோல்வியில் இருந்து பெருவல்லரசுகள் பல பாடம் கற்றுள்ளன என்பது உண்மை. அதாவது உலக ஒழுங்கு விதியின் பலத்தை உணர்த்த இது ஒரு போதுமான உதாரணமாகும்.
காணப்படும் உலக ஒழுங்கை சரிவரக் கற்றறிந்து, இதில் எமக்குச் சாதகமான புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அந்தப் புள்ளிகளை இணைப்பதிற்தான் எமது அரசியல் இலக்கும், எதிர்காலமும் தங்கியுள்ளது.
தமிழீழ விடுதலை முற்றிலும் சாத்தியமானது. குறிப்பாகச் சர்வதேச சூழலை சரிவரக் கையாள்வதிலேயே அது அதிகம் தங்கியுள்ளது. விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் யதார்த்தத்தை அதற்கே உரிய அளவில் எடைபோட்டு அதில் எமது பாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்ப செயற்படுவதன் மூலம் எமக்குரிய இலக்கை அடைவது சாத்தியம். யுத்தத்தில் ஈழத்தமிழர் தோல்வியடைந்து மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன. ஏற்பட்டுள்ள சாதக பாதகத்தை எடைபோட போதிய வரலாற்று அனுபவமும் கிடைத்துள்ளது. ஆதலால் ஏற்பட்ட நன்மை தீமைகளைப் பொறுப்புணர்வுடனும், நன்நோக்கத்துடனும் நிதானமாக எடைபோட்டாக வேண்டும்.
இனப்படுகொலையில் இருந்து தப்பிப் பிழைக்கவும், இன ஒடுக்குமுறையிலிருந்து விடுபடவும், உரிமையுள்ள மனிதர்களாக இப்பூமியில் வாழவும், ஜீவாதாரத்தின் பெயராலும், பண்பாட்டு வாழ்வின் பெயராலும், ஜனநாயகத்தின் பெயராலும், பிரிந்து சென்று சுதந்திர அரசினை அமைப்பதைத் தவிர வேறுறொரு மாற்றுவழியையும் வரலாறு ஈழத்தமிழருக்கு விட்டுவைக்கவில்லை. அத்துடன் ஈழத்தமிழரின் விடுதலைதான் இந்திய உபகண்டத்தின் பாதுகாப்பிற்கும், இப்பிராந்திய அமைதிக்கும் அடிப்படையாய் அமையும் என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. நாம் யதார்த்ததைக் கணக்கில் எடுத்து நாம் வரலாற்றோடு இருந்தால் வரலாறு எம்மோடு இருக்கும். நாம் வரலாற்றுகுப் புறம்பாக நடந்தால் வரலாறு எம்மை விட்டு விலகி ஓடி எதிரியின் கையில் அகப்பட்டுவிடும்.
சர்வதேச ஏகபோக வர்த்தகப்போட்டியில் எந்த அரசு ஈடுபடுகிறதோ அந்த அரசு ஏகாதிபத்திய அரசே ஆகும். ஏகாதிபத்தியம் என்ற கோட்பாட்டை ஏகபோகத்திற்குள்ளாற்தான் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது எது ஏகபோகமோ அதுவே ஏகாதிபத்தியமாகும். சர்வதேச உறவுமுறையைப் பொறுத்தவரையில் உலகில் சோசலிச அரசுகள் என்று எதுவுமில்லை. உள்நாட்டில் ஓர் அரசு சோசலிச முறையைக் கொண்டிருக்கின்றதா இல்லையா என்பதல்ல எமது வாதம். ஆவை சர்வதேச உறவுமுறையில் சோசலிச உறவுமுறையைக் கொண்டுள்ளனவா என்பதே கேள்வி? பதில் இலகுவானது. வர்த்தக ஆதிக்கப்போட்டியின் மூலம் சுரண்டலில் ஈடுபடும் எந்தவொரு அரசும் சோசலிச அரசல்ல. இந்தவகையில் இன்று உலகில் உள்ள வல்லரசுகள், பெருவல்லரசுகள் எல்லாமே ஏகாதிபத்திய அரசுகள்தான். அவை தத்தம் தேவைகளுக்கும், நலன்களுக்கும் ஏற்ப ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களை அணுகுகின்றன. இந்தவகையிலான ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையே காணப்படும் முரண்பாடுகளை சூழலுக்கு ஏற்ப கையாண்டு தமக்கான விடுதலையை ஈட்டுவதைத்தவிர வேறுவழி ஒடுக்கப்படும் இனங்களுக்கோ, மக்களுக்கோ இல்லை.
பனிப்போர் முடிந்ததன் பின்பான காலத்தில் மே 1990 இல் இருந்து யூலை 2011 வரை பிரிந்து சென்று தோன்றிய சுதந்திர அரசுகளின் தொகை பூமியில் 25 ஆகும். இந்த உலக ஒழுங்கு விதிக்கு ஈழத்தமிழர் எதிரிடையாக நடைபோட முடியாது. எனவே நிதர்சனமான உலக ஒழுங்கில் பிரிந்து சென்று சுதந்திர அரசுகளை உருவாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாத்தியமான நடைமுறையாகவே உள்ளது.
இவ்வாறு பிரிந்து சென்று உருவாகிய சுதந்திர அரசுகளை நோக்கினால், அவைகள் நடைமுறைச் சாத்தியமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றி உள்ளமை தெரியவரும். அவற்றைப்பற்றி எல்லாம் நாம் ஆழமாகக் கற்றறிய வேண்டும். அந்த 25 அரசுகளினதும் வெற்றி தோல்விகளில் இருந்தும், பின்னடைவுகளில் இருந்தும், அவை பின்பற்றிய நடைமுறைகளில் இருந்தும், வெறியுறவுக் கொள்கை சம்மந்தமான சிறந்த படிப்பினைகளை நாம் பெற்றாக வேண்டும்.
மனோரம்மிய கற்பனைகளினாலும், தூய்மை வாதங்களினாலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களினாலும், அதீத எண்ணங்களினாலும் யதார்த்த உண்மைகளுக்கு புறம்பான அணுகுமுறைகளினாலும், நாம் எதனையும் சாதித்துவிட முடியாது. 'எம்மிடம் என்ன இருக்கிறதோ அதைக்கொண்டுதான் எதையாவது செய்தாக வேண்டும்' என்ற கூற்றும், 'நாம் எங்கு நிற்கின்றோமோ அங்கிருந்துதான் பயணத்தை தொடர முடியும்' என்ற கூற்றும் எமக்கான நடைமுறைத் திட்டங்களை வகுப்பதற்கு மிகவும் அவசியமானவை. இத்தகைய தேவைகளுடனும், இதற்கான மன உணர்வுடனும் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. சுதந்திர விரும்பிகள் இதனை சுதந்திரமாகப் பரிசீலிப்பார்களாக.
தொடரும்...