Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்திய இறையாண்மைக்கு நடுவே பாய்கிறதா காவேரி நதி?

இந்திய இறையாண்மைக்கு நடுவே பாய்கிறதா காவேரி நதி?
பாரதி கார்த்திக்

 

சுதந்திர இந்தியாவில் தண்ணீர் என்ற சொல் மதிப்பு மிகவும் கொண்டவை. அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் ஊழல் மற்றும் அக்கறையின்மையை மக்கள் கண்டு கொள்ளாத வண்ணம் அவ்வப்போது தண்ணீர் அரசியல் செய்வார்கள். இந்தியாவின் ஒரு பக்கம் தண்ணீர் வெள்ளம் என்று வருடத்திற்கு ஒரு முறை வடக்கே எதார்த்தம். தண்ணீர் இல்லாமல் அண்டை மாநில மக்கள் அடித்துக்கொண்டு நிற்பதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தெற்கில் வருடாந்தர எதார்த்தம்.

இன்று இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழர் அடையாள பூமியின் இன்றைய அவலநிலையை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அரசியலுக்கு உலகில் தமிழர்கள் பலிக்கடாக்கள். யானை கட்டிப் போரடித்த தஞ்சை இன்று சகாரா பாலைவனமாய் மாறி வருகிறது. தமிழக விவசாயத்தில் 40 சதவீதம் டெல்டா பகுதிகளை மட்டுமே சார்ந்து உள்ளது. தமிழகம் நெல் உற்பத்தியில் உபரி மாநிலமாக இருந்ததுபோக, இன்று அண்டை மாநிலங்களை நம்பி இருபதற்கு காரணம் என்ன? குருவை, சம்பா, தாளடி என்று மூன்று போகம் விளைந்த பூமி இன்று ஒரு போகத்திற்கு கூட கண்ணீர் சிந்துவதன் காரணம் என்ன? இந்தியா என்ற தேசம் தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளையாக நினைக்கும் காரணம் ஒன்று என்றால், அது மட்டுமே காரணம் ஆகி விட முடியாது.

அண்ணல் அம்பேத்கர், வாஜ்பாய் போன்ற தலைவர்கள் நதிகளை தேசிய உடமையாக்க வேண்டுமெனக் குரல்கொடுத்தும் அதற்கான வாய்ப்பு கிட்டாமல் போனது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தைக் கடக்கும் சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் என்று மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தொடர்வண்டி பாதைகளையும் அப்படித்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்குப் பாயும் நதிகளை மாநில சொத்தாக கருதும் நோக்கம் என்ன? காங்கிரஸ் அரசு மட்டுமல்ல, எந்த அரசு நாளை ஆட்சிக்கு வந்தாலும் மற்ற மாநிலங்களை கேள்வி கேட்க மாட்டார்கள். நமக்காகக் குரல் கொடுக்கவும் மாட்டார்கள். அப்படிக் குரல் கொடுத்தால் அவர்கள் ஆட்சி அந்த மாநிலத்தில் இனி வராது. ஒருவேளை ஆட்சியில் இருந்தால் கலைக்கப்படும் அபாயம் கூட நேரலாம்.

கூடங்குளம் இந்தியாவில் இருக்கிறது. நெய்வேலி இந்தியாவில் இருக்கிறது. ஆனால் காவேரி கர்நாடகாவில் இருக்கிறது. முல்லைப் பெரியார் கேரளாவில் இருக்கிறது. கிருஷ்ணா நதி ஆந்திராவில் இருக்கிறது என்று இந்தியா அரசு கருதிக்கொண்டுள்ளது. இதே எண்ணம் தொடர்ந்து, இந்திய அரசு தன் கடமையைச் செய்யாமல் அடுத்த தேர்தல் பற்றிய எண்ணத்தில் இருந்தால் அது இந்திய இறையாண்மையைக் காக்கும் செயலா?

கர்நாடகா தனது மாநிலத்தில் இருந்த 14 இலட்சம் ஏக்கர் விவசாய நிலத்தை 20 இலட்சம்; ஏக்கருக்கு மேலாக மாற்றி வரும் நிலையில், டெல்டாவில் 25 இலட்சம் ஏக்கராக இருந்த நிலம் தனது விவசாய பரப்பளவை தொடர்ந்து சுருக்கிக்கொண்டே வருகிறது. இதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்வது என்ற விவசாயிகளின் மனச்சோர்வை தொடர்ந்து பிரதிபலித்தால் இனி எதிர்காலத்தில் இங்கு விவசாய நிலம் இருந்தது வரலாற்று புத்தகங்களில் மட்டுமே காணப்படும்.

இந்தியாவின் மீது பல்வேறு முறைகளில் போர்புரிந்த இந்தியாவின் எதிரி நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஓடும் சிந்து நதியைக் கூட இருவரும் பிரச்சனைக்கு உரிய நதியாக கருதவில்லை. ஆனால் இறையாண்மை மிக்க இந்திய தேசத்தில் சக குடிமகன் ஒருவன் இன்னொரு குடிமகனுக்கு தண்ணீர் தர மறுக்கிறான். உண்மையில் காவேரி இந்தியாவின் இறையாண்மைக்கு நடுவே பாய்கிறது என்றே கருதலாம்.

சம்பாவை நட்டுவிட்டு உச்ச நீதிமன்ற வாசலிலே காத்துக்கிடக்கும் டெல்டா விவசாயிகளின் வாழ்வை எந்த வழக்கு பசியாற்ற போகிறது? மண்ணில் உயிரை விதைத்துவிட்டு வடக்கே தண்ணீர் வரும் சத்தம் கேட்கிறதா என்று காவேரிக் கரையில் படுத்து உறங்கும் விவசாயிக்கு என்ன பதில் தரபோகிறது இந்த தேசம்? ஊருக்கே உணவு போட்ட விவசாயி இன்று விதை நெல்லைக்கூட வீட்டில் வைக்க முடியாத ஒரு நிலை. நெல்லை விதைத்துவிட்டு தண்ணீருக்காக காத்திருப்பது மட்டும் போதாமல் சரியான விலை கிடைக்குமா என அரசின் பதிலுக்காகவும் காத்துக்கொண்டு இருக்கிறான். உலகில் தான் தயாரிக்கும் பொருட்களுக்கு தானே விலை நிர்ணயம் செய்யும்போது சொந்த உழைப்பில் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு அடுத்தவரை எதிர்பார்ப்பது வேதனையின் உச்சம். ஒரு காலத்தில் தஞ்சைக்கு பஞ்சம் பிழைக்க மக்கள் தஞ்சம் அடைவார்கள். இன்று அந்த சூழல் மாறி தஞ்சை மக்கள் திருப்பூர் சாய பட்டறைகளுக்கும் கட்டிட கூலி தொழிலாளிகளாகவும் போய்விட்டார்கள். போனது இவர்களா இந்த சோழ தேசத்தின் வளமா?

எல்லா பிரச்சனைக்கும் காவேரி தண்ணீர் வராததும் அதை தடுத்து நிறுத்தும் கர்நாடக அரசும் மட்டுமே காரணம் எனச் சொல்லி, ஒவ்வொரு முறையும் ஆட்சியிலிருக்கும் தமிழக அரசுகள் தம் பொறுப்பை தட்டிக்கழித்து வருகின்றன. இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது காவேரி டெல்டா பகுதிகளில் மழை வரத்தினால் வெள்ளம் வருகிறது. வரும் தண்ணீரை கொள்ளிடத்தின் வழியாக பத்திரமாக கடலில் கலக்க வைத்துவிட்டு அடுத்த வருடம் மீண்டும் சிண்டு பிடி சண்டை கர்நாடகாவோடு.

ஏன் ஒரு சரியான நீர்த்தேக்கத்தை கட்டி மழைத் தண்ணீரை சேகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடாது? மேட்டூரில் இருந்து கல்லணை வரும் ஆறு, டெல்டா பகுதிகளில் சுமார் 100 கிலோ மீட்டர் மேல் பயணம் செய்கிறது. கல்லணைக்குப் பிறகு எந்த பெரிய நீர்த்தேக்கமும் இல்லை. 2000 வருடத்திற்கு முன்னால் கட்டிய கல்லணையை வைத்தே தமிழகம் இன்னும் சாகுபடி செய்வது வேதனை. மணல் அணிந்து அழகாய் தெரிந்த காவேரி ஆறு இப்போதெல்லாம் மணல் கொள்ளையர்களிடம் சிக்கி நிர்வாணமாய் கிடக்கிறது. தண்ணீரின் வேகத்தை குறைத்து அளவுகளையும் குறைக்கும் இந்த மணல் திருட்டுக்கு மாநில அரசு பொறுப்பேற்குமா இல்லை புறந்தள்ளுமா? வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுத்து சொந்த நாட்டு விவசாயிகளுக்கு இலவச அரிசி கொடுக்கும் அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளுமா?

எத்தனை தலைமுறைக்கு இந்த சண்டை தொடரும் என தெரியாத நிலை. நீதிமன்ற தீர்ப்புகள், ஆணைய தீர்ப்புகள் அனைத்தையும் கண்டு கொள்ளாத கர்நாடக அரசு, வெள்ளத்தின் வடிகாலாய் மட்டும் தமிழகத்தை பார்க்காமல் எங்கள் வயிற்றின் சத்தத்தை புரிந்து கொள்ளுமா பார்க்கலாம்...

12/14/2012 5:36:10 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்