Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அது விருந்து அல்ல. தேநீரும், சமோசாவும் தான்

அது விருந்து அல்ல. தேநீரும், சமோசாவும் தான்
வி.அ.ரங்கநாதன் (இலங்கை)

 

இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைகள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன. இப்பயணம் வெறும் கண்துடைப்பு எனவும் இப்பயணத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை.

இலங்கையில் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் அரசியல் சூழலை இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழு நேரடியாக விஜயம் செய்துதான் அறியவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. இது தொடர்பான உண்மைகளை சர்வதேச ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வந்துள்ளனர். அரைநூற்றாண்டுக்கும் மேலான இன ஒடுக்குமுறை வரலாற்றை பட்டறிவின்  ஊடாகப் புரிந்து கொள்வதே மேலானதும்கூட

போர் முடிவுற்றதன் பின்னர், இதுபோன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட, ரி.ஆர்.பாலு, கனிமொழி, திருமாவளவன் போன்றோரை உள்ளடக்கிய தமிழக நாடாளுமன்றக் குழுவின் பயணமும் எவ்வித பலனுமின்றி கடும் விமர்சனங்களுக்கு ஆளானது நாம் அறிந்ததே. இப்பயணம் குறித்து இதுவரை வெளியாகாத மறைந்திருக்கும் உண்மைகளை வெளிப்படுத்துவது இது போன்ற பயணங்கள் குறித்த மாயைகளை விலக்க உதவும் என்றே நம்புகிறோம்.

ஆசிரியர்

***

மறைந்திருக்கும் உண்மைகள் - தமிழ்நாடு நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம் - 7

நாடு திரும்பிய மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றக் குழுவினரால் உத்தியோகபூர்வ அறிக்கை கருணாநிதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது ஒன்பது பக்கங்களைக் கொண்டிருந்தது. அந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களில் உள்ள தமிழ் மக்களைப் பார்க்கும்போது, வேதனை தாங்க முடியவில்லை. அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

அப்படி இல்லாமல் முகாம்களிலேயே தொடர்ந்தும் இருக்க வேண்டியநிலை ஏற்படுமானால், சில நாட்களில் பெருமழை அந்தப் பகுதியில் பெய்யக் கூடிய நிலைமை இருப்பதனால் ஏற்கெனவே வசதி செய்த இடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் மழையினால் மேலும் துன்பப்படுவார்கள்.

மழையினால் ஏற்படும் சேறு சகதிகளில் குடியிருக்கவும், படுத்துத் தூங்க வேண்டிய நிலை ஏற்படும் போது எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அவற்றை எல்லாம் இலங்கை அரசிற்கு எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை நாங்கள் சந்தித்தபோது இந்த நிலைமைகள் ஒவ்வொன்றாக அவரிடத்தில், தொகுத்துக் கூறி இருக்கின்றோம். இதை மனிதாபிமான உணர்வோடு ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். அந்த மனிதாபிமான உணர்விற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கின்றார்கள் என்பதனை அல்லலுக்கு மத்தியில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை எல்லாம் அங்கிருந்து விடுவித்து அவர்களை சொந்த இடங்களில் கொண்டு போய் சேர்ப்பதில் தான் தெரிந்து கொள்ள முடியும்.

அவர்களை வெளியே அனுப்புவதற்கான ஒரு ஆரம்பத்தினை தொடங்கி, படிப்படியாக அவர்களின் சொந்த இடங்களில் சேர்க்க வேண்டும். அப்போது தான் எங்களிடம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகின்றது என்ற நம்பிக்கை எங்கள் உள்ளங்களில் துளிர்க்க முடியும். இதில் தாமதம் ஏற்பட்டால் ஏற்கெனவே இந்த முகாம்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு மேலும் சொல்லொணாத் துயரத்தினை தான் ஏற்படுத்தும்.

இலங்கையிலுள்ள தமிழர்களை மீண்டும் குடியமர்த்த கண்ணி வெடிகளைக் கண்டுபிடிப்பதற்கான உதவிகளை தற்பொழுது செய்து கொண்டிருப்பதனைவிட மேலும் அதிகமாக இந்திய அரசு செய்ய வேண்டும் என்றும், அந்தப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கலந்து பேசப்பட்டது. தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அந்த வேண்டுகோள் விடவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தோம்.

அடிப்படைத் தேவைகளான உணவு, விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள், வீடு கட்டுவதற்கான உதவிகள், கல்வி வசதி அளித்தல் போன்றவற்றை இந்திய அரசிடமிருந்து உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என்றும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. அதையும் முதல்வர் கருணாநிதி மூலம் மத்திய அரசிடம் வலியுறுத்துவதாகத் தெரிவித்தோம்.

தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையையும் விளக்கிக் கூறினோம். அந்தப் பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத்துடைய அணியினருடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஸ்ரீகாந்தா, பத்மினி, சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், முகமது இமாம், பிரேமச்சந்திரன், பொன்னம்பலம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினோம்.

பின்னர் ஆனந்தசங்கரி தலைமையிலான டி.டி.என்.ஏ. அமைப்பைச் சேர்ந்த சித்தார்தன், ஸ்ரீதரன் ஆகியோரைச் சந்தித்தோம். முகாம்களில் உள்ளவர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். போர் முடிந்த பிறகு சகஜ நிலைமை திரும்பிட இந்தியாவின் முயற்சிதான் ஒரே நம்பிக்கை  என்றும் அவர்கள் கூறினார்கள்.

வவுனியாவில் மெனிக்பாம் என்ற இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த எட்டு முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை சந்தித்தோம். அந்தப் பண்ணை ஏறத்தாழ 2,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை எட்டு முகாம்களாகப் பிரித்து ஒவ்வொரு முகாமையும் முட்கம்பி வேலிகளால் தடுத்து வீதிகளின் இரு புறமும் கழிவு நீர் சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே குழாய்கள் மூலமாக குடிநீர் வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். சில இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த மக்களை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம். ஒவ்வொரு முகாமிலும் நாங்கள் சென்ற போது ஏராளமான மக்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு தங்கள் குறைகளைச் சொன்னார்கள். உணவு சரியாக வழங்கப்படவில்லை என்றும், தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்கள். எங்களை எப்படியாவது முகாம்களிலிருந்து அனுப்பி வையுங்கள் என்று அவர்கள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர்.

பொதுவாக அவர்களில் பல பேர் மாற்று உடை இல்லாமல் ஒரே உடையைப் பல நாட்களாக அணிந்திருந்தது தெரிய வந்தது. தண்ணீர் இல்லாமல் குளிக்கவும், மலம் கழிக்கவும் அவர்கள் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு எதிராக மிக நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாத்திரங்களை வழியெங்கும் நாங்கள் பார்த்தோம். மேலும் ஓரிரு மாதங்கள் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மிக மோசமான நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

சதுப்பு நிலக்காடுகள் என்பதால் பருவ மழை தொடங்கிவிட்டால் அவர்கள் பாடு மிகவும் கொடுமையாக இருக்கும். அமருவதற்கு கூட வசதிகள் இல்லாமல் போய் விடும். தொற்று நோய்த் தாக்குதல் பரவக் கூடிய நிலை ஏற்படும். குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உயிரிழக்க நேரிடும். அரசு சில கட்டமைப்பு வழிகளைச் செய்து தந்திருந்தாலும் இது போன்ற முகாம்கள் மிகக் குறைந்த காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாதக் கணக்கில் இலட்சக்கணக்கான மக்கள் அங்கு தங்குவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.

இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்து அவரிடம் வன்னித் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் படும் கொடுமைகளை விபரித்தோம். பருவ மழை தொடங்கும் முன்பாக அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

அதுபோல தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் நிலைமையை விளக்கிக் கூறினோம். அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கைகளுக்கு அவர் மிக விளக்கமாக பதிலளித்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆனால் ஆங்காங்கே கண்ணிவெடிகள் புதைத்து இருப்பதனால் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் இலங்கை அரசின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஸாத் பதியுதீனைச் சந்தித்துப் பேசினோம். மாலை மூன்று மணிக்கு இலங்கை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முகாம்களில் நிவாரணப் பணிகளையும், மீள் குடியமர்த்தும் பணிகளையும் மேற்கொள்ளும் சிறப்புக் குழுவின் தலைவருமான பசில் ராஜபக்சவை சந்தித்து முகாம்களிலுள்ள மக்கள் தங்கள் ஊருக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.

தற்பொழுது முகாம்களில் உள்ள மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை ஏறத்தாழ 1,57,000 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் எல்லைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைகளில் இருதரப்பினரும் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பதாகவும், அவற்றை நீக்கும் பணியில் இலங்கை இராணுவம், இந்தியா, டென்மார்க், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் இராணுவத்தினரின் உதவியோடு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்தப் போவதாகவும், அதனால் சிங்களவர்களையோ, ஏனையவர்களையோ குடியமர்த்தும் வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆவணங்கள், படங்கள் மூலம் விளக்கிய பசில், ஓரிரு நாட்களில் மீளக்குடியமர்த்தும் பணிகளைத் தொடங்கி அவர்களது வீடுகளுக்கு அனுப்ப இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை ஜனாதிபதியை சந்தித்து முகாம்களில் உள்ள தமிழர்களை மீளக் குடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். தொடர்ந்து அவர்கள் முகாம்களிலேயே இருக்க நேர்ந்தால் ஏற்படக் கூடிய விளைவுகளை எடுத்துரைத்தோம். அவர்களுடைய கோரிக்கைகளை விரிவாகக் கேட்டு உரிய விளக்கங்களைத் தந்தார்.

மொத்தத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளைச் சந்தித்து வந்த போதிலும், இலங்கை அரசு அவர்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இலங்கை அரசு இன்னும் இரு வாரங்களில் ஏற்படுத்தும் என்று தோன்றுகின்றது. கடைசியாக இலங்கைப் பிரதமருடன் சில விடயங்களை விவாதித்தோம். இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது அவர் இலங்கை- இந்திய கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதாகக் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேசினோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாடாளுமன்றக் குழுவின் உத்தியோகபூர்வ அறிக்கை ஓரளவிற்கு அகதி முகாம்களின் உண்மை நிலையை வெளிப்படுத்திய போதிலும், குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்மாறான கருத்துக்களையே வெளியிட்டிருந்தனர். கடலூர் தொகுதி உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தினமலர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் இவ்வறிக்கைக்கு முரணான விடயங்கள் காணப்பட்டன. அப்பேட்டியின் விடயங்களை கீழே காணலாம்.

கேள்வி: இலங்கை முகாம்களின் நிலைமையைப் பார்வையிட்டு திரும்பிய தி.மு.க- காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவினரின் உண்மையான நோக்கம் வெற்றி பெற்றதாகக் கருதுகின்றீர்களா?

பதில்: இலங்கைத் தமிழர்களுக்கு பாரிய கொடுமை நடக்கின்றது என்று ஒரு தரப்பில் கூறப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முனைந்தன. இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் நல்ல முகாம்களை தான் எங்களுக்கு காட்டுவர். சிரமம் உள்ள முகாம்களை காட்ட மாட்டார்கள் என்ற அச்சம் எங்களுக்கும் ஏற்பட்டது. அப்படி ஏதும் நடக்கவில்லை. வவுனியா காட்டில் 25,000 ஏக்கர் நிலத்தில் எட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் எங்களை இஷ்டம் போல பார்வையிட அனுமதித்தனர்.

கேள்வி: இலங்கை இராணுவத்தினரின் துன்புறுத்தல்கள் குறித்து நீங்கள் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் புகார் தெரிவித்தனரா?

பதில்: உண்மையைக் கண்டறியும் குழுவாக நாங்கள் சென்றிருந்ததால் உண்மையை அறிய விரும்பினோம். இலங்கை அரசு தமிழர்களை உதாசீனப்படுத்தவில்லை. துன்புறுத்தவும் இல்லை. அவர்கள் வசிக்கும் கூடாரம் ஐ.நா அமைப்புகளினால் தான் கட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசு கட்டிக் கொடுக்கவில்லை. பொருட்களை வாங்குவதிலும், வாகனங்களைச் செலுத்துவதிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐ.நா குழுவினர் தான் பணியாளர்களாக ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் விநியோகம் சரியாக இல்லை என்ற குறை இருக்கின்றது. நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு பத்து லீற்றர் குடிநீர் வழங்கப்படுகின்றது. நிறைவும் இருக்கின்றது. குறைவும் இருக்கின்றது.

கேள்வி: முள்வேலியில் இலங்கைத் தமிழர்கள் சிக்கித் தவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி?

பதில்: 2500 ஏக்கர் நிலத்திற்கு பாதுகாப்பு தேவை என்ற அடிப்படையில் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சம் மக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்ற உணர்வு உள்ளது. முதல் கட்டமாக 58,000 பேரை ஐந்தாயிரம் பேர் வீதம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்கின்றனர்  மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்தப் பணி முடிய வேண்டும். மாவட்ட நிர்வாகம் வீடுகள் கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. உலக நாடுகள் அதற்கான உதவிகளைச் செய்து வருகின்றன. இலங்கை அரசும் உதவி செய்யும். நாங்கள் பார்த்த எட்டு முகாம்களில் துன்புறுத்தல் இல்லை. ஆனால் சிரமங்கள் உள்ளன.

கேள்வி: ராஜபக்ச அளித்த விருந்து தேவைதானா என எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பதைப் பற்றி?

பதில்: அது விருந்து அல்ல. தேநீரும், சமோசாவும் தான்

கேள்வி: எம்.பிக்கள் குழு வருகைக்கு இலங்கைத் தமிழ் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றதே?

பதில்: யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அந்த நாட்டின் ஜனாதிபதி, அமைச்சர்கள், தமிழ் அமைப்புத் தமிழர்கள், நிருபர்கள், தமிழக அரசியல்வாதிகளில் ஒருவர் கூட முகாம்களுக்குச் சென்று பார்க்கவில்லை. இராணுவத்தினர், அரச அதிபர், ஐ.நா அமைப்பினர் தான் அங்கு செல்கின்றனர். நாங்கள் வருகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் ஓடோடி வந்து பார்த்தனர். தங்களை சொந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் தந்தனர். திருமாவளவன் சில முகாம்களுக்கு சென்று பார்க்க வேண்டும் என்றார். அவர் விரும்பிய முகாம்களுக்கு சென்று பார்த்தோம். சாப்பாட்டிற்கும், மருத்துவத்திற்கும் குறைவில்லை. எட்டு முகாம்களில் 121 டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். மாணவ, மாணவியர் 58 ஆயிரம் பேர் கல்வி பயில்கின்றனர். ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளனர்.

கேள்வி: அனைத்துக் கட்சி எம்.பிக்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குறை கூறியிருப்பது பற்றி?

பதில்: அந்தந்த கட்சிகளின் சொந்த செலவில் தான் நாங்கள் சென்று வந்தோம். வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகளும் தங்களது சொந்தச் செலவில் சென்று பார்க்க வேண்டியது தானே? படகில் செல்வோம் என பரபரப்பாகப் பேசினர். இப்போது விமானத்தில் பறந்து சென்று பார்க்க வேண்டியது தானே.

5/14/2012 4:59:51 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்