Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்

<p>ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்</p>
மு.திருநாவுக்கரசு

 

2016ஆம் ஆண்டு தோல்விகளால் எழுதப்பட்ட ஆண்டாய் முடிந்திருக்கிறது. 2017ஆம் ஆண்டு நெருக்கடிகளையும், நினைவின்மைகளையும் பிரகடனப்படுத்தியவாறு தோன்றியிருக்கிறது. 

ஆனால் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். தமிழ் மக்களுக்கான வழி எப்படி பிறக்கப்போகின்றன. அவர்களின் நல்வாழ்விற்கான கதவுகள் எப்படி திறக்கப்படப் போகின்றன என்ற கேள்விகளுக்கு ஊடாக இவ்வருடம் ஆரம்பமாகிறது.

ரஷ்ய சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து நொருங்கிவிட்டது. இனிமேலும் அது இராணுவ ரீதியில் தலையெடுக்க முடியாது என்று கால்நூற்றாண்டாக நிலவிவந்த கருத்தை, 2015ஆம் கிரிமியாவிற்குள் ரஷ்யா தனது ஆயுதப்படைகளை அனுப்பி, உலகம் கண்களை மூடி விழிப்பதற்கிடையில் அதனை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டது. ரஷ்யாவின் இராணுவரீதியான மீள் வருகையை மட்டுமல்ல அமைதி, சமாதானம், அரசியல் ஸ்திரம் என்பனவெல்லாம் அறுவை சிகிச்சை வழியேதான் உலக அரங்கில் தொடர்கின்றன என்பதை அது மீண்டும் அடித்துக்கூறியதோடு, 2015ஆம் ஆண்டு முடிவடைந்தது. ரஷ்யாவுடனான கிரிமியாவின் இணைப்பும் ஓர் இனப்பிரச்சனைக்கான தீர்வும் இப்படி அறுவை சிகிச்சையில் முடிவடைந்த ஆண்டாக அவ்வாண்டு வரலாற்றில் பதிவானது.

'சமாதானம், அமைதி, அரசியல் தீர்வு' என்பனவெல்லாம் அறுவைச் சிகிச்சையின் பாதையில் தொடரும் வரலாற்றோடு 2017ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வில் 'அமைதி', 'சமாதானம்', 'அரசியல் தீர்வு' என்பனவெல்லாம் கேள்விக்குறியாய் காட்சியளிக்கின்றன.

இலங்கையில் ஈழத் தமிழர் வாழும் நிலப்பரப்பு முழுவதும் அதுசார்ந்த கடற்பரப்பும் முற்றிலும் இராணுவத்தின் இரும்புப்பிடிக்குள் உள்ளன. முற்றிலும் இராணுவ பிரசன்னத்துள், இராணுவ அச்சுறுத்தலுக்குள், இராணுவ பிடிக்குள் அகப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் அமைதியும், சமாதானமும் காட்சியளிக்கின்றன. அங்கு நிலவுவது அமைதியும் அல்ல, சமாதானமும் அல்ல. அது இராணுவ பிடிக்குள்ளான அச்சுறுத்தலுக்கு உட்பட்ட ஒருவகை மௌனநிலை.

'அரசியல் தீர்வு' கானல்நீராய் காட்சியளிக்கும் நிலையில் அமைதியும், சமாதானமும் தமிழ் மக்களின் வாழ்வில் எட்டாக்கனிகளாக உள்ளன. சமாதானம் என்பது பரஸ்பர நல்லுறவு. அமைதியென்பது அன்புகலந்த நல்வாழ்வு. அதாவது அமைதி என்பது வெறுமனே நிசப்பதம் அல்ல. அது மகிழ்வூட்டவல்ல ஓர் இதமான சமூக சூழலும், வாழ்நிலையுமாகும். இதனை தமிழ் மக்கள் இழந்து முக்கால் நூற்றாண்டாகிவிட்டது.

இலங்கையில் அமைதி, சமாதானம் என்பது ஒருபோதும் அதன் உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளுக்கு உட்பட்டது மட்டுமல்ல, அது பெரிதும் வெளிநாட்டு அரசியலிலும் தங்கியுள்ளது.

இலங்கையில் அரசியல் தீர்வு ஒருபோதும் அமைதி வழியில், உள்நாட்டுப் பரிமாணத்தில் நிகழப்போவதில்லை. அது நிச்சயமாக வெளிநாட்டு பரிமாணத்தின் மூலமே நிகழமுடியும் என்பதை 2 ஆண்டுகால நல்லாட்சி அரசாங்கத்தின் தீர்வுக்கான நடவடிக்கைகள் நிரூபித்துள்ளன.

<p>ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்</p>

இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய பெருவல்லரசுகளுக்கிடையேயான போட்டியில் ஏற்படப்போகின்ற ஒரு மையப் புள்ளியிற்தான் இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு பெரிதும் தங்கியுள்ளதெனத் தெரிகிறது.

கிரிமிய இனப்பிரச்சனைக்கு அங்கு ரஷ்யப் படைகளின் பிரவேசத்தை அமெரிக்காவால் தடுக்கமுடியாது போனது. ஆனால் இலங்கைப் பிரச்சனையில் மூன்று பெரும் வல்லரசுகள் களத்தில் உள்ளன. இது ஒரு இலகுவான காரியமல்ல.

ஒருநாள் பொழுதுவிடியும் போது தாய்வான் மக்கள் சீன இராணுவத்தில் கண்முழிப்பார்கள். அதாவது பனிப் போரின் பின்பின்னான காலத்தில் 2015ஆம் ஆண்டு கிரிமிய மக்கள் ரஷ்ய இராணுவத்தில் கண்முழித்தது போல. அப்படியே பனிப்போர்க் காலத்தில் துருக்கிய சைப்ரஸ் மக்கள் துருக்கிய படையில் 1974ஆம் ஆண்டு கண்முழித்தது போல.

இத்தகைய பின்னணியில் 'முள்ளிவாய்க்கால்' என்ன படிப்பினையை இதுவரை வெளிக்காட்டியுள்ளது? அது நீதியை நிலைநாட்டுவதற்கான படிப்பினையாக அமைந்ததா என்ற இமாலய கேள்வியோடு இப்பிரச்சனையை ஆராயவேண்டியது அவசியம்.

முள்ளிவாய்க்காலின் பின்னான காலம் தமிழ் மக்களுக்கு என்ன செய்தியைச் சொல்லுகிறது. முள்ளிவாய்க்கால் அழிவும், துயரமும் தமிழ் மக்களுக்கான நீதி வழங்கப்படாமையின் இமாலய வெளிப்பாடுகளாய் உள்ளன. முள்ளிவாய்க்கால் அழிவின் பின்பு நீதி பேசியவாறு அநீதி நிலைப்படும் விசித்திரத்தை படிப்பினையாக காட்டியுள்ள முதலாவது அரசாக உலக அரங்கில் இலங்கை விளங்குகிறது.

நீதி பேசி, நீதியின் குரலாய் காட்சியளித்து, முள்ளிவாய்க்கால் அநீதியையும் தமிழ் மக்களுக்கான முக்கால் நூற்றாண்டுகால அநீதிகளையும் அரசில் இயல்புகளாய் நிலைநாட்டப்பட்டுவிட்ட காலமாய் இலங்கையின் கடந்த 2 ஆண்டுகால அரசியல் காட்சியளிக்கிறது. இதனை புரிந்து கொள்ள கட்சி அரசியல் பற்றிய அகரவரிசையை திறந்து பார்ப்போம்.

ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என்ற இரண்டு கட்சிகளுமே மாறி மாறி தொடர்ந்து இலங்கையில் பதவிக்கு வந்துள்ளன. இதில் தமிழ் மக்களுக்கான உரிமையை ஒரு கட்சி ஆதரித்தால் மறுகட்சி எதிர்க்கிறது என்ற சமன்பாட்டின் கீழ் இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வின்மை பற்றி விளக்கம் அளிப்பது ஒரு மேம்போக்கான அரசியல் அணுகுமுறையாக உள்ளது. இது பிழையான எடைபோடல்களுக்கும், தவறான அரசியல் அணுகுமுறைகளுக்குமே இட்டுச் செல்கிறது.

இங்கு மேற்படி இரண்டு கட்சிகளும் தமிழர் பொறுத்து ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக கணிக்கப்படுவது மிகவும் தவறானது. இரண்டு கட்சிகளும் தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். ஓர் இனவாதத்தை இலக்காகக் கொண்ட ஒன்றின் இரண்டு பகுதிகளே தவிர அவை இரண்டும் வேறுவேறானவையல்ல, ஒன்றுக்கொன்று துணையானவை.

இதற்கான அரசியல் மரபணு வரைபடத்தை நாம் தெளிவாக வரைய முடியும். அதனை முதலில் வரைந்து பார்ப்போம்.

1943ஆம் ஆண்டு தனிச்சிங்களத் தீர்மானத்தை அரசாங்க சபையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்மொழிந்தார்.

1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்தை நாடாளுமன்றத்தில் எஸ.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க நிறைவேற்றினார்.

1958ஆம் ஆண்டு தமிழருக்கு எதிரான இனப்படுகொலை கலகம் பண்டாரநாயக்க அரசாங்கத்தின் கீழ் பூதாகரமாக நாடுதழுவிய வகையில் தலையெடுத்தது.

1974ஆம் ஆண்டு ஸ்ரீமா பண்டாரநாயக்க அரசாங்கத்தின் கீழ் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாண முற்றவெளியில் படுகொலையில் முடிந்தது.

1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அதே முற்றவெளியின் முன் யாழ் பொதுநூலகம் ஐதேக மூத்த அமைச்சர் ஒருவரின் தலைமையின் கீழ் சிவில் உடை தரித்த ஆயுதம் தாங்கியோரால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலை கலகம் வரலாறு காணாத உச்சத்தை ஜே.ஆர்.ஜெவர்த்தனவின் ஆட்சியில் நிகழ்ந்தது.

1949ஆம் ஆண்டு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை கிழக்கு மாகாணத்தில் டி.எஸ்.செனநாயக்க பெருமெடுப்பில் ஆரம்பித்தார். இந்த 1949ஆண்டு குடியேற்றத் திட்டமும் 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டமும் இனப்படுகொலை கலகங்களும் ஏற்படுத்திய இராணுவ வன்முறைக்கான தர்க்கபூர்வ வளர்ச்சியின் தேவையாக 1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிறைவேற்றி தமிழ் மக்கள் மீதான இராணுவ ஆட்சியை 1979, அக்டோபர் 31ஆம் தேதி பிரகடனப்படுத்தினார். அந்த இராணுவ ஆட்சிப் பிரகடனத்தின் தொடர்ச்சியும் உச்சமுமாக இன்றும் தமிழ் மண்ணும், தமிழ் மக்களும் இராணுவ ஆட்சியின் கீழ் உள்ளனர்.

1987ஆம் ஆண்டு யூலை மாதம் ஜே.ஆர்.ஜெவர்த்தனாவின் ஆட்சியின் கீழ் லலித் அதுலத்முதலி ‘ஆப்ரேஷன் லிபரேஷன்’ என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தார். அது வடமராட்சியில் தமிழ் மக்களின் இரத்த ஆற்றை ஓடச்செய்ததுடன் வடமராட்சி பகுதி முழுவதும் இடப்பெயர்வுக்கு உள்ளானது. இது இந்திய அரசின் தலையிட்டால் அப்போது தடுத்து நிறுத்தப்பட்டாலும் பின்பு இதுவே ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் கோத்தபாயாவால் முள்ளிவாய்க்கால் யுத்தமாக 2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இராணுவ நடவடிக்கையாலும், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவினாலும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கை அரசே சர்வதேச அரங்கில் நெருக்கடிகளுக்கும், அவமானத்திற்கும் உள்ளானது. இந்நிலையில் ஒரு புதிய அத்தியாயம் இலங்கை வரலாற்றில் ஆரம்பமானது. அதாவது சிக்கலுக்குள் அகப்பட்டுவிட்ட இலங்கை அரசை சர்வதேச அரங்கில் இருந்து மீட்டெடுப்பதற்கு இரண்டு கட்சிகளும் ஒன்று சேரவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அதாவது யுத்தத்தால் ஏற்பட்ட போர்க்குற்ற விசாரணை, மனிதகுலத்திற்கு எதிரான அநீதி, 20000க்கும் மேல் காணாமல் ஆக்கப்பட்டோர், படுகொலைக்கு உள்ளான பெருந்தொகையான தமிழ் மக்கள் என்ற பிரச்சனைகளின் பின்னணியில் இலங்கை அரசையும், அதற்குப் பொறுப்பான ஆட்சியாளர்களையும், இராணுவ அதிகாரிகளையும் விசாரணைகளில் இருந்தும், சர்வதேச விசாரணைகளில் இருந்தும் காப்பாற்றுவதற்காக இரு கட்சிகளும் கூட்டுச் சேரவேண்டிய வரலாற்று அவசியத்தின் பேரில் அவர்கள் கூட்டுச் சேர்ந்தார்கள். அதில் அவர்கள் பெரும்பாகம் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

மனிதஉரிமைகள் மீறலின் பேரால் இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ரத்துச் செய்திருந்தது. ஆனால் அது இப்போது நீக்கப்பட்டுவிட்டது. இரத்தம் தோய்ந்த அநீதிக்கு வெள்ளை மை பூசப்பட்டதற்கான வெற்றிக் கேடயமாக இலங்கை அரசுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளது.

இங்கு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி காணவேண்டும் என்பதற்கான துணிச்சலையோ, அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்கான மனஉறுதியையோ நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த எந்தொரு தலைவரும் கொண்டிருக்கவில்லை. நல்லூர் முருகன் கோவிலில் வெறும் மேலுடன் பூசைத் தட்டுக்களை ஏந்துவதன்மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்று சிங்களத் தலைவர்கள் தம்மைக் காட்சிப்படுத்தினார்களே தவிர, தீர்வுத்திட்டங்களை அவர்கள் தலையில் சுமக்கவும் இல்லை, அதனை சிங்கள மக்களிடம் முன்னெடுத்துச் செல்லவும் இல்லை.

இரண்டு கட்சிகளும் எதிர் எதிரே நின்றும் தமிழருக்கு எதிராக ஒன்றே செய்தன. அதேவேளை கடந்த காலங்களில் இரண்டு கட்சிகளும் இழைத்த அநீதிகளுக்கும் முள்ளிவாய்க்கால் அழிப்பால் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட பெருங்காயங்களுக்கு மருந்துகட்ட இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்தன. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இங்கு இரண்டு கட்சிகளுக்கும் இடையே இருக்கக்கூடிய வேறுபாடுகள் தொழில்நுட்பம் சார்ந்தவையும், அணுகுமுறை சார்ந்தவையும்தான். உதாரணமாக சுதந்திரக் கட்சி தமது கட்சிக்காரரை நேரடியாக தமிழ் மக்கள் மீது திணிக்கும். அதாவது ஆல்பிரட் துரையப்பா, குமாரசூரியர், லஷ்மன் கதிர்காமர் என தமிழரில் தனது கட்சிக்காரரை தமிழ் மக்கள் மத்தியில் கையாளும்.

ஆனால் ஐதேக அப்படியல்ல. அது தமிழ்க் கட்சிகளையும், தமிழ்த் தலைவர்களையும் தனது ஆட்களாக மாற்றிவிடும். டி.எஸ்.செனநாயக்கா, டட்லி செனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல போன்ற ஐதேக பிரதமர்களின் அரசாங்கங்களிலும், மந்திரிசபைகளிலும் தமிழ்க் கட்சிகளையும், தமிழ்த் தலைவர்களையும் காணலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் அதிகம் பிரித்தானிய கட்சிமுறை அரசியலின் இராஜதந்திரங்களைப் பின்பற்றுவதில் கைதேர்ந்தவர்கள். யுத்த காலத்தில் பிரித்தானிய கான்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில் பொதுத் தேர்தலில் பெருந்தோல்வியடைந்தார். அப்போது தொழிற்கட்சி பெருவெற்றியீட்டியது. அப்போது தொழிற்கட்சியில் 3 முக்கியத் தலைவர்கள் இருந்தனர். தேர்தலின் போது தொழிற்கட்சிக்கு கிளெமண்ட் அட்லி தலைவராக இருந்தார். ஆனால் இவர் ஒரு மென்போக்காளர். அக்கட்சியின் தேர்தல் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் அதிகம் வீரியம் நிறைந்த தலைவர்களான ஆதர் கிரீண்வூட் என்பவரும், ஏனேஸ் பெவின் என்பருமாவர். ஏற்கனவே கெவின் போர்க்கால மந்திரிசபையில் வின்சன்ட் சர்ச்சிலோடு முரண்பட்டுக் கொண்டு பதவி விலகியவர். இவர் அதிகம் துணிச்சலானவர். அதேவேளை கிரீண்வூட் மிகவும் வீரியம் மிக்க தலைவராகவும், சமூகநலன் பேண் அரச அமைப்புக் கொள்கையின் மீது தீவிர நாட்டம் கொண்டவராகவும் காணப்பட்டார். இந்த இருவரில் ஒருவரே தேர்தல் வெற்றியின் பின்பு தொழிற் கட்சிக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டு பிரதமராக பதவியேற்பதற்கான நிலை காணப்பட்டது.

இந்நிலையில் சர்ச்சில் தோல்வியின் மத்தியிலும் வேறுவிதமாக வியூகம் அமைத்தார். அதாவது மேற்படி தொழிற்கட்சியிலுள்ள மூவரில் அட்லியே மென்மையான போக்கையும், மிதவாத போக்கையும் கொண்டவர். எனவே கடும்போக்காளர்களான மற்றும் இருவரில் ஒருவர் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்படும் முன்பு அட்லியை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

தொழில் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் ஒருபுறம் ஆரம்பமாகியிருந்தது. மறுபுறம் மன்னன் VI ம் ஜார்ஜை சந்தித்து மேற்படி தொழில் கட்சி ஒரு நாடாளுமன்றக் குழுத் தலைவரை தெரிவு செய்யும் முன்பு அவசர அவசரமாக அட்லியை பிரதமராக அறிவிக்குமாறு கேட்டார். அப்படியே மன்னர் செய்தார்.

நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஆரம்பமாகும் வேளை அட்லி பிரதமர் பதவியுடன் கூட்டத்துள் நுழைந்தார். கூட்டம் கலைந்தது. இப்படியாக மிதவாத மென்போக்காளர் அட்லி பிரதமராக்கப்பட்டார். அதாவது எதிர்க்கட்சியில் தமக்கு ஏற்படக்கூடிய பாதகமான ஒருவரின் வருகையைவிட அங்கு காணப்படும் தனக்குச் சாதகமானவரை சர்ச்சில் பிரதமராக்கினார்.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழ்க் கட்சிகளையே தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதும், அக்கட்சிகளில் இருக்கும் தமக்குச் சாதகமானவர்களை தமதாக்கிக் கொள்வதும் அல்லது தமக்கு வேண்டியவர்களை அக்கட்சியில் தலையெடுக்கச் செய்வதும் ஐதேகவின் வழிமுறைகளாகும்.

நல்லூர் முருகன் கோவிலில் வெறும் மேலோடு தட்டெடுப்பதும், துப்பாக்கிகளுக்கு எண்ணெய் போடுவதும் ஒரே நோக்கின் இரு செயல்களாகும். நல்லூரில் பூசைத் தட்டு ஏந்தும் நாடகத்திற்குப் பதிலாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும் சுலோக அட்டைகளை ஏந்தும் சிஙகளத் தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் உருவாகுவதற்கான வாய்ப்பு இதுவரை தெரியவில்லை.

மேற்படி இப்பின்னணியில் 2017ஆம் ஆண்டு தமிழ் மக்களிடம் சவால்களை முன்வைத்து விடிந்திருக்கறது. இதற்கு தமிழ்மக்கள் தம்மை எப்படி தகுதியாக்கப் போகிறார்கள்?

போராடாதவை அழியும், தக்கன பிழைக்கும்!

1/14/2017 11:05:34 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்