யமுனா ராஜேந்திரன்
ஹேபர்ட் மார்க்யூஸ் கூறுவது போல 'புள்ளிவிபரங்கள் ஒருபோதும் குருதி சிந்துவதில்லை'. கதை சொல்லிகளே புள்ளிவிபரங்களை குருதிசிந்த வைக்கிறார்கள். ஆவணங்கள் அறிக்கைகளில் வரும் புள்ளிவிபரங்களை விடவும் கதைசொல்லிகளால் ரத்தம் சிந்த வைக்கப்படும் உண்மைகள் அதிகம் கூரானவை, உயிருள்ளவை. - நிலாந்தன்
***
நிலவிய சோசலிசம் குறித்து, பின் புரட்சிகர சமூகங்கள் குறித்து, சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் அடியொற்றிச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எந்தப் பிரமைகளும் இல்லாதது போலவே ஈழப் போராட்டம் குறித்தும், விடுதலைப் புலிகள் அதனோடு பிற இயக்கங்கள் குறித்தும் விடுதலை அரசியலில் நாட்டமுள்ள எவருக்கும் இன்று எந்தப் பிரமைகளும் இருக்கமுடியாது. உலக அரசியலின் இந்தப் புறநிலை யதார்த்தம் குறித்த புரிதலுடன், இந்த மனநிலையில் இருந்து யோ. கர்ணன் கதைகளை அணுகுகிறபோது எனக்கு அதனது கலை சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த முக்கியத்துவத்தினை உணர்வதில் எந்தத் தயக்கங்களுமில்லை. முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் குறித்த இலக்கிய ஆவணம் யோ. கர்ணன் கதைகள் என்பதனை மிகதெளிவாக நான் பதிவு செய்கிறேன்.
தேவதைகளின் தீட்டுத்துணி (வடலி பதிப்பகம் : ஆகஸ்ட் 2010) மற்றும் சே குவேரா இருந்த வீடு (வடலி பதிப்பகம் : பிப்ரவரி 2012) என யோ. கர்ணனின் இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளியாகி இருக்கின்றன. முதல் தொகுதியில் 10 சிறுகதைகளும் இரண்டாம் தொகுதியில் 13 சிறுகதைகளும் இருக்கின்றன. தொகுக்கப்படாமல் உதிரிகளாக 5 கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. மொத்தமாக, யோ.கர்ணனின் 28 கதைகள் எனக்கு வாசிக்கக் கிடைத்தன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலுமுள்ள பெரும்பாலுமான கதைகள் முள்ளிவாய்க்கால் பேரழிவின் போதான நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. அந்த வகையில் யோ.கர்ணனின் இரு தொகுப்புக் கதைகளையும் நாம் முள்ளிவாய்க்கால் பேரழிவுக் கதைகள் எனக் குறிப்பிட வேண்டும்.
2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தின் புதுவிசை இதழில் வெளியாகி பரவலாகத் தமிழகத்தில் விமர்சனத்துக்கு உள்ளான துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் எனும் பிரச்சினைக் கதை, 2012 பிப்ரவரியில் கதை வெளியாகி 7 மாதம் கழித்து வெளியான சே குவேரா இருந்த வீடு எனும் தொகுதியில் உள்ளிடப்படவில்லை என்பதனை இங்கு பதிய விரும்புகிறேன்.
இரு கதைத் தொகுதிகளுக்குமான முன்னுரை, பின்னட்டைக் குறிப்பு என்பதோடு மிகவிரிவான அரசியல் விமர்சனங்களையும் வழங்கியிருப்பவர்கள் ஈழத்தின் இலக்கிய ஆளுமைகளும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பில் செயல்பட்டவர்களுமான கருணாகரன் மற்றும் நிலாந்தன் ஆகியோர். இதில் கருணாகரன் விடுதலைப்புலிகளின் இலக்கிய இதழான வெளிச்சம் ஆசிரியராகவும் இருந்தவர் என்பதனையும் நினைவுறுத்திக்கொள்ள வேண்டும். நிலாந்தன், கருணாகரன் போன்றவர்களது கருத்துக்கள், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் கருத்துக்கள், துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் கதை தொடர்பான விவாதங்கள், அக்கதையை வெளியிட்ட ஆதவன் தீட்சண்யா தொடர்பான சிக்கலில் அவருக்கு அதிகாரபூர்வ ஆதரவளித்த தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்க அறிக்கை, என்பவற்றோடுதான் எனக்கு யோ.கர்ணன் கதைகள் அறிமுகமாகின.
அரசியல் ரீதியிலான யோ.கர்ணனின் கதைகள் நான் மேலே குறிப்பிட்ட கலாச்சார-அரசியல்வாதிகளின் மதிப்பீடுகளுடன்தான் பரவலான வாசிப்புக்கு வந்தன. இச்சூழலில் அரசியலை விட்டுவிட்டு யோ.கர்ணன் கதைகளை இலக்கிய வாசிப்பு மட்டும் செய்யுங்கள் எனச் ‘சுத்த’ இலக்கியவாதிகள் கோராமாட்டார்கள் என நம்புகிறேன்.
சே குவேரா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இலங்கையின் ஹொரானா பிரதேசத்திலுள்ள ஹகல கெலா இரப்பர் தோட்டத்துக்கு விஜயம் செய்தார். இரப்பர் மர வளர்ப்பு பற்றி அறிந்து கொள்வது அவரது திட்டம். அந்த ஆண்டு அவர் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் புதுதில்லியில் சந்தித்தார். மூன்றாம் உலக நாடுகளின் காதலராக சே குவேரா தென் ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது அன்று அவரது இயல்பு. காலத்தின் கோலம் மகிந்த ராஜபக்சேவும் கியூபா சென்று சே குவேராவின் மனைவி அலீடா மார்ச்சையும் குவேராவின் புதல்வர் கொமிலாவையும் சந்தித்து வந்திருக்கிறார். இலங்கையில் சே குவேரா இயக்கம் என அறியப்பட்ட ரோகண விஜேவீராவின் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகத்தீவிர சிங்கள இனவாதக் கட்சியாக இருந்துகொண்டிருக்கிறது. மலையகத் தமிழர் வடகிழக்குத் தமிழர் என அனைவரும் ஜேவிபிக்கு இந்திய விரிவாக்கத்தின் பிரதிநிதிகள். இவையனைத்தையும் எப்படிப் புரிந்து கொண்டு, எப்படித் தொடர்புபடுத்துவது?

இது போலத்தான் 2005 ஆம் ஆண்டு கிறிஸ்தொபரின் வீடு எனும் பெயரில் இருந்த யோ.கர்ணனின் கதை, எப்படி 2012 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சே குவேரா இருந்த வீடாகவும் ஆகிப்போகிறது என்று புரிந்துகொள்வதும், தொடர்புபடுத்துவதும் சிக்கலாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் நிதானமாக யோசிக்க சிக்கல்கள் படபடவென அவிழ்கின்றன. சே குவேராவின் அரசியலுக்கும் அவர் பேசிய புரட்சிகர அறத்துக்கும் அவரது சர்வதேசீய அரசியலுக்கும் அவர் உருவாக்க விரும்பிய விடுதலைபெற்ற சோசலிச மனிதன் எனும் கருத்தாக்கத்திற்கும் இலங்கைக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை எனும் புரிதல்தான் என்னளவில் அந்த சிக்கலின் முடிச்சு அவிழ்ந்து வீழ்ந்ததற்கான காரணம்.
சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள் என இரண்டுமே சே குவேராவின் புரட்சிகர ஆன்மாவைத் தீண்டவே முடியாது. இதுவே மெய். பிறகு எதற்காக யோ.கர்ணன் தனது சிறுகதைத் தொகுப்பை கிறிஸ்தொபரின் வீடு என்பதற்கு மாற்றாக சே குவேரா இருந்த வீடு எனக் குறிப்பிடுகிறார்? வீடு என்பது விடுதலை. வீடு என்பது நினைவுகள் வாழும் இடம். வீடு என்பது அங்கு வாழ்பவரின் முதுசம். சே குவேரா ஒரு போதும் அவரது அரசியல் நோக்கில் புரட்சிகர ஆன்ம நோக்கில் இலங்கையில் நுழைந்திருக்கவேயில்லை. நுழைந்தேயிராத ஒருவர் எவ்வாறு அந்த வீட்டில் குடியிருக்க முடியும்? சே குவேரா இன்று ஒரு விளம்பரப் பொருளாகவும் விற்பனைப் பொருளாகவும் ஒரு மோஸ்தராகவும் ஆகமுடியும் என்பதற்கான சான்றுபோலத்தான் யோ.கர்ணன் சிறுகதைத் தொகுதியின் தலைப்பாகவும் அவர் ஆகியிருக்கிறார். 2006 இல் கிறிஸ்தொபர் வீடாக இருந்த தலைப்பு 2009 மே 18 முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் சே குவேரா குடியிருந்த வீடாக ஆன குறியீட்டின் கதை இப்படித்தான் இருக்க முடியும். தலைப்பின் அரசியல் குறித்தே நிறையப் பேசமுடியும் என்றாலும் கட்டுரையின் விரிவஞ்சி அதனைத் தவிர்க்கிறேன்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேரத் தொழிற்சங்கவாதியும் அதனது கலை இலக்கியப் பிரிவான முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளருமான ச.தமிழ்ச்செல்வன் யோ.கர்ணன் கதைகள் குறித்துக் குறிப்பிடும்போது, பான்கீ மூன் அனுப்பிய மூவர் குழு அறிக்கை அல்லது இனி நடக்கப்போகும் விசாரணைகள் எல்லாவற்றையும் பார்க்க இக்கதைகளே உண்மையான முழுமையான யுத்த சாட்சியமாக ஒரு கலைஞனின் அசலான பொய்களற்ற வாழ்க்கைப் பதிவுகளாக நம் கைவந்து சேர்ந்துள்ளன. தவிர இவை ஈழத்து வாழ்வைப் பற்றிய கதைகளாக மட்டுமில்லை. மனித குல வரலாற்றின் மீது வைக்கப்படும் கேள்விகளாகவும் இக்கதைகள் வெடிக்கின்றன என்கிறார். இந்த அரசியலோடுதான் ஈழப் போராட்டம் பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான, இருண்ட பிரச்சாரத்துக்கு உகந்ததாக யோ. கர்ணனின் கதைகள் தமிழகத்தில் முன் வைக்கப்பட்டன.
யோ. கர்ணன் கதைகளுக்கு நேர்ந்த ஒரு துரதிருஷ்டம் என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும். யோ. கர்ணன் கதைகளுக்கு நேர்ந்த இன்னொரு துரதிரஷ்டம், ஈழத்தில் இனக்கொலை நடக்கவில்லை எனச் செப்பிய நேர்முகத்தை தனது புதுவிசையில் வெளியிட்ட, மலையகத் தமிழர்கள், தலித்துகள் போன்றோரைக் கண்டுகொள்ளாத ஈழத்தமிழரை அவர்கள்படும் துயரங்களை நான் ஏன் கண்டுகொள்ள வேண்டும்? எனக் குரூரமாகப் பேசிய ஆதவன் தீட்சண்யா, யோ.கர்ணன் கதைகளைக் கொண்டாடிக் கொண்டு திரியும் அவலம். இந்த மதிப்பீடுகளினோடு யோ. கர்ணன் கதைகளை எதிர்கொள்வது என்பது அரசியல் கடப்பாடு கொண்டவர்களுக்குத் தவிர்க்கவியலாமல் ஆகிறது.
யோ. கர்ணனது கதைகளை முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பான இலக்கிய ஆவணம் என்று நான் சொல்லும்போது, அதனது ‘பகுதித் தன்மையை’ நான் வலியுறுத்த விரும்புகிறேன். ‘அசலான, பொய்களற்ற’ ஆவணம் யோ. கர்ணனது கதைகள் என்றால், முள்ளிவாய்க்கால் பேரவலம் தொடர்பான ஐநா அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை, நோர்வே அறிக்கை, சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை போன்றவற்றின் தகைமை இங்கு என்ன? அவைகள் ‘அசலற்றவை, பொய்கள்’ என்பதுவா? தமிழ்ச்செல்வன் சார்ந்திருக்கிற மாரக்சிஸ்ட் கட்சித்தலைவர் ரங்கராஜன் இலங்கையில் சர்வதேச விசாரணைக்கும் ஒப்புக் கொள்ள மாட்டாராம், ஈழத் தமிழர்களே விரும்பினாலும் வெகுசன வாக்கெடுப்புக்கு அவரது கட்சி ஒப்பாதாம். மகிந்த ராஜபக்சேவைக் காப்பாற்ற இதைவிடவும் தெளிவான ஒரு அரசியல் திட்டம் இருக்க முடியுமா?
முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினைகளில் மட்டுமல்ல, ஈழத்தமிழர் பிரச்சினையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்பது தமிழர் விரோதமான இந்தியப் பெருந்தேசிய நிலைப்பாடுதான். இன்று ஈழவிடுதலைக்காகவும் ஈழத்தமிழ் உடன்பிறப்புகளுக்காகவும், யோ.கர்ணனுக்காகவும் உணர்ச்சிகரமாகக் கண்ணீர் விடுகிற தமிழச்செல்வனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈழ விடுதலை அமைப்புக்களைச் சார்ந்த இளைஞர்கள் இந்தியா வந்தபோது அவர்களை அரவணைக்கவும் இல்லை, குறைந்தபட்சம் அங்கீகரிக்கவும் இல்லை, அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவும் இல்லை. இவர்களோடுதான் யோ.கர்ணனின் அரசியல் கூட்டு என்றால், அவரது அரசியலை அப்படி வைத்துத்தான் எவரும் இன்று அணுகமுடியும்.
ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையைப் புறந்தள்ள தமிழ்ச்செல்வன் யோ. கர்ணனைத் தூக்கிப் பிடிக்கிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவு குறித்த குறிப்பிட்ட அனுபவங்களைப் பேசுகிற யோ.கர்ணனின் கதைகளின் அரசியல் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. பகுதி உண்மைகளை மட்டுமே முன்வைப்பது. யோ.கர்ணனது அனுபவங்களைக் காட்டிலும் விரிந்தது, சிக்கலானது முள்ளிவாய்க்கால் யதார்த்தம். சேனல் நான்கின் இலங்கைக் கொலைக்களம் குறித்த இரு ஆவணப்படங்கள், அல்ஜஜீராவின் ஆவணப்படம் முன்வைக்கும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் யோ.கர்ணனின் படைப்புலகத்தினுள்ளும் இல்லை, அவரது அனுபவங்களாகவும் இல்லை. அதிகமும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த அனுபவங்களே யோ.கர்ணனின் படைப்புலகமாக இருக்கிறது. அது அப்படித்தான் இருக்கவும் முடியும்.
இன்று புலி எதிர்ப்பு என்பது ஒரு மிகப்பெரும் இதழியல், இலக்கியத் தொழிற்சாலையாக இருக்கிறது. தமிழக-இந்திய-சர்வதேச ஊடகப் பரப்பில் புலியெதிர்ப்பு என்பது மிகப்பெரும் வியாபாரமாக இருக்கிறது. மிகவும் ஆதாரமான அனுபவங்களின் அடிப்படையில் யோ.கர்ணன் புலிகள் அமைப்பு சார்ந்து முன்வைக்கும் படைப்புக்களைத் ‘தந்திரோபாய ரீதியாக’ உடனடியாகவே தமிழக-புகலிட ‘இலங்கை அரசு ஆதரவாளர்கள்’ தமது அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாகச் சுவீகரித்துக் கொள்கிறார்கள். புதுவிசை-ஆதவன் தீட்சண்யா-தமிழ்ச்செல்வன்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-புகலிட ஜனநாயகவாதிகள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் போன்றவர்களின் அணி அப்படித்தான் யோ.கர்ணனைச் சுவீகரிக்கிறது.
யோ. கர்ணனின் கதைகள் அவரது அனுபவங்களின் இயல்பினால் விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களைத்தான் ஆதாரபூர்வமாக இரத்தமும் சதையுமாக முன்வைக்கிறது. இலங்கை அரசின் திட்டமிட்ட போர்க்குற்றங்கள், பாலியல் வல்லுறவுகள், போர்க் கைதிகளின் படுகொலைகள், சரணடைந்தவர்களைக் கொல்தல், நோயாளிகளைப் பட்டினியிட்டுக் கொல்தல் போன்றவற்றை யோ.கர்ணனின் 28 கதைகள் எதிலும் நீங்கள் காணமுடியாது. சேனல் நான்கு, ஐநா அறிக்கை, நோர்வே அறிக்கை போன்றன இதனை ஆவணப்படுத்தியிருக்கின்றன.
முள்ளிவாய்க்காலின் இந்தப் பிறிதொரு யதார்த்தமும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களும் குறித்து யோ.கர்ணனது கதைகளை உயர்த்திப் பிடிக்கிற எவரும் இதுவரை பேசியதில்லை. இதுதான் யோ.கர்ணன் கதைகளை தூக்கிப்பிடிப்பவர்களின் அரசியல். சங்கம் நாவலை எழுதிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதி கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முடித்துவிட்டு இலங்கை அரசு ஆதரவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்ததையும் இதனோடு சேர்த்துக் கொண்டுதான் யோ. கர்ணனது கதைகள் குறித்த தமிழ்ச் செல்வனின் விதந்தோதல்களையும் எவரும் அணுகவேண்டும்.
பிரதிக்குள் நின்றுமட்டும் இன்று ஒரு பிரதி சமூகத்தில் பெறும் இடத்தை மதிப்பிடமுடியாது. பிரதி குறித்து உருவாக்கப்படும் துணைப்பிரதிகள், அதனைத் தொடரும் அரசியல், அதனைத் தொடரும் படைப்பாளியின் அரசியல் நகர்வுகள் என அனைத்தும் கொண்டுதான் இன்று ஒரு இலக்கியப் பிரதியை மதிப்பிட முடியும். யோ.கர்ணனின் சிறுகதைகளை அணுகுகிறபோது அதன் பின்னணியில் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த ஞாபகமனமும் இலக்கிய வாசிப்பும் இருக்கிறது. குறிப்பாக ஷோபா சக்தியின் சிறுகதைகள், போராளிகளின் வாழ்வும் அனுபவமும் பற்றிய கோவிந்தன் முதல் சயந்தன் வரையிலான நாவல்கள் இருக்கின்றன. யோ.கர்ணனின் கதைகளை ஒப்பிடுகிறபோது மேற்குறிப்பிட்டவை பிறிதொரு காலத்தையும் அல்லது முன்னொரு காலத்தையும் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பநாட்கள் பற்றியவையும், குறைந்தபட்சம் இரு தசாப்தங்களுக்கு முந்திய அனுபவங்களையும் அதனது புகலிட நீட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டவை என வரையறுக்க முடியும்.
யோ. கர்ணன் முள்ளிவாய்க்கால் இறுதி நாட்கள் வரை அவர் பேசும் நிலத்தில் வாழ்ந்தவர். அந்த அனுபவங்கள் கொண்டவர். இன்னும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இயங்கிய ஒருவரின் புனைவுகள், யோ.கர்ணன் போல ஒப்பிட்டுச் சொல்ல ஒருவருடையதும் வெளியுலகினால் அறியப்படவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பதும் அதனது அனுபவங்களும், அதில் விடுதலைப் புலிகளின் பாத்திரம் என்பதும் உலக மற்றும் இலங்கை அரசுசார் நிறுவனங்களதும் அறிக்கைகளில்தான் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதேயொழிய புனைவிலைக்கியத்தில் அது பதிவுபெறவில்லை. யோ. கர்ணனனின் சிறுகதைகள் அந்த இடைவெளியை நிறைக்கிறது அல்லது அந்த இல்லையை மறுக்கிறது. ஈழ இலக்கியப் பரப்பில் யோ.கர்ணன் சிறுகதைகள் பெறும் முக்கியத்துவம் இதுவே என நினைக்கிறேன்.
யோ. கர்ணனின் சிறுகதைகள் அதன் இயல்பாகக் கொண்டிருக்கிற இந்த அரசியல் முக்கியத்துவமே அவர் கதைகள் குறித்த வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவிக்கிறது.
யோ. கர்ணனின் இருபத்தெட்டு கதைகளையும் விமர்சன சௌகரியத்திற்காகச் சில பொதுப் பண்புகளின் அடிப்படைகளுக்குள் கொண்டுவர விளைகிறேன். தனித்தனிக் கதைகளுக்கிடையில் உள்ள நுட்பமான வேறுபாடுகளால் பொதுப்பண்புகளை இக்கதைகள் மீறிச் செல்லும் என்பதனை உணர்ந்த அளவிலேயே இதனைச் செய்ய விரும்புகிறேன். ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும், பாவமன்னிப்பு என இரு கதைகளும் விடுதலைப்புலிப் போராளிகளின் வாழ்வும் மரணமும் அர்ப்பணிப்பும் குறித்துப்பேசும் கதைகள். நொடிகளுக்கு இடையில் வாழ்வும் மரணமும் தொங்கிக் கொண்டிருப்பதைப் பேசும் கதைகள். போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் ரஸ்ய-சீன-வியட்நாமியக் கதைகளைப் போல வீரசாகசமும் தியாகமும் குறித்த கதைகளாகக் கொண்டாடப்படக் கூடிய இக்கதைகள் போராட்டத்தின் வீழச்சியினால் அபத்தமும் அர்த்தமற்றதுமான மரணங்கள் குறித்ததாக உள்வாங்கப்படும். போராட்டத்தின் வெற்றி தோல்வி மனிதர்களின் அர்ப்பணிப்பை எப்போதும் தீர்மானிக்கும் கருவிகளாக இருக்கமுடியாது.
மன்னிக்கப்படாதவனின் தொலைபேசி, திரும்பி வந்தவன், ஐயனின் எஸ்.எல்,ஆர், வசனம், சே குவேரா இருந்த வீடு போன்ற கதைகள் இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகள், இயக்கங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள், கடத்தல்கள், கொலைகள், பிற இயக்கத்தவர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள், பாலியல் தொழிலாளர் படுகொலைகள் போன்றன குறித்துப் பேசும் கதைகள். இயக்கங்களின் அடிப்படைவாதமும் அராஜகமும் குறித்தவை இக்கதைகள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் உள்ளார்ந்த பிரச்சினைகளை, அமைப்பினுள் புரையோடியிருந்த போலித்தனங்களை, புலிகள் அமைப்பு மறைத்துச் செய்த அரசியல் பேரங்களை, அபத்தங்களைப் பேசும் கதைகள் பெயர், சுதந்திரம், சடகோபனின் விசாரணைக் குறிப்பு, திரும்பி வந்தவன், சீட்டாட்டம் போன்ற கதைகள். நேரடியிலான புலத்தின் அரசியல் சாராத கதைகள் என நான் கருதுகிற தஸ்யுக்குகளின் பாடல், எல்லோருக்கும் இருக்கும் வானம், இஸ்தான்புல் இளவரசி, தமிழ்க் கதை எனும் மூன்று கதைகள் தவிர பிற அனைத்துக் கதைகளையும் விடுதலைப் புலிகள் ஈழமக்கள் மீது செலுத்திய ஆதிக்கமும் வன்முறையும் குறித்த கதைகள், அதனோடு யுத்தத்தின் இறுதி நாட்களில் புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் எனப் புதிது புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்களை, குறுகிக் கொண்டிருந்த நிலப்பரப்புக்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்த மக்களுக்கு நேர்ந்த பேரழிவு குறித்த கதைகள்.
விடுதலைப் புலிகள் பேசமறுக்கிற, அங்கீகரிக்கத் தயங்குகிற, கண்டுகொள்ளாமல் விலக்க நினைக்கிற, ஈழத்தின் வெகுமக்களுக்கு நேர்ந்த துயரமும் கோரமும் கொண்ட அனுபவங்கள் இவைகள். இவைகளை முதன் முதலில் ஆவணப்படுத்தியிருக்கிற இலக்கியப் பதிவு யோ.கர்ணனின் இந்தக் கதைகள். பாதுகாப்பு வலயம், திருவிளையாடல், றூட், தேவதைகளின் தீட்டுத் துணி, கதை கதையாம் காரணமாம், அரிசி, வேதாளத்துக்குச் சொன்ன கதை, சோசலிசம் போன்றன இக்கதைகள்.
முள்ளிவாய்க்கால் என்பது ஒன்றின் முடிவு பிறிதொன்றின் தொடக்கம் எனக் கொள்வோமானால், ஈழ வாழ்விலும் அரசியலிலும் அதனது தொடர்ச்சிகள் இருக்கின்றன. இயக்க முரண்பாடுகளின் எச்ச சொச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆயுதக் குழுக்கள் இன்றும் இருக்கின்றன. முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் இருத்தலியல் பிரச்சினைகள் இருக்கின்றன. பேச்சுவார்த்தை பயனில்லை ஆயுதம் ஒன்றுதான் தீர்வு என நினைத்தவர்களும், விடுதலைப் புலிகளே அரசியல் தீர்வுக்கான தடை, அவர்கள் அழிந்தால் அரசியல் தீர்வு சாத்தியம் எனச் சொன்னவர்களும் அவரவர் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க வேண்டும். யோ.கர்ணனின் கதைகள் இந்த பின்-முள்ளிவாய்க்கால் அரசியலையும் பேசுகின்றன. துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன், வசனம், இரண்டாவது தலைவர் போன்றன இத்தகைய சிறுகதைகள்.
யோ.கர்ணன் கதைகளில் அவர் சார்ந்த, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சார்ந்த பெயர்கள் புனைவாக்கம் பெறவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதல், சூசை, புதுவை ரத்தினதுரை வரை கதைகளின் ‘மெய்மைக்கு’ ஆதாரமாக இருக்கிறார்கள். இதனால்தான் யோ.கர்ணனின் கதைகளின் ஆன்மாவாய் இயங்குவது ‘மெய்’ என்கிறார் பதிப்பாளரான த.அகிலன். இந்தக் காரணத்தினால்தான் ‘பிக்சன்’ என்பதற்கு மாறாக ‘பேக்சன்’ என, புனைகதைகள் என்பதற்கு மாறாகச் சம்பவக்கதைகள் என யோ.கர்ணன் கதைகளைக் குறிப்பிடுகிறார் நிலாந்தன்.
வாழ்வைப் புனைவாகவும் புனைவை வாழ்வாகவும் எழுதுகிற போஸ்ட்மாடர்னிசக் கதைகள் அல்ல இக்கதைகள். அறியவராத, பதியப்படாத வரலாற்று சம்பவங்களை, அந்த மனிதர்களின் இரத்தமும் சதையுமான வாழ்வை ஆக்கஇலக்கிய மொழியில் முன்வைப்பது யோ.கர்ணனின் கதைகள். ஐ.நா.அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை போன்றவை முன்வைத்ததும், முன்வைக்கத் தவறியதுமான முள்ளிவாய்க்கால் யதார்த்தம் பற்றிய ‘குருதிசிந்தும் புள்ளிவரங்கள்’ என யோ.கர்ணன் கதைகளை நாம் அடையாளப்படுத்தலாம். என்றாலும் கூட யோ.கர்ணன் கதைகள் முன்வைக்கும் முள்ளிவாய்க்கால் யதார்த்தமும் அது குறித்த அரசியலும் 'பகுதியானதுதான்'.
இந்தப் புரிதலில் இருந்துதான் யோ.கர்ணன் கதைகள் குறித்த கருணாகரன், நிலாந்தன் மற்றும் தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் கருத்துக்கள் அணுகப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
கருணாகரன், தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பிற்கான தனது முன்னுரையில் யோ.கர்ணனின் கதைகளை ஒரு புறம் ஸ்டாலினுக்கு எதிராக உண்மைகளைப் பேசிய அன்ன அக்மதோவா, பிறிதொருபுறம் சியோனிஸ்ட்டுகளுக்கு எதிராக உண்மைகளைப் பேசிய அதோனிஸ், நிஸ்ஸர் கப்போனி போன்றவர்களின் பின்னணியோடு புரிந்து கொள்ளக் கோருகிறார். பாலஸ்தீன-சியோனிஸ்ட் பிரச்சினையை இலங்கைச் சூழலில் எவ்வாறு பொருத்துவது? தமிழர்கள் பாலஸ்தீனர்கள். சிங்கள ஆட்சியாளர்கள் சியோனிஸ்ட்டுகள். சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக யோ.கர்ணன் என கருணாகரன் கோரிக் கொள்கிற மாதிரியான பண்பு யோ.கர்ணன் கதைகளில் மிகக் கொஞ்சமாகவே இருக்கின்றன. அவ்வாறு கர்ணன் கதைகளைக் கோரமுடியாது.
ஸ்டாலினுக்கு எதிராக அக்மதோவா. இலங்கைச் சூழலில், ஈழச் சூழலில் இதனை மூன்றுவிதமாக வியாக்யானப்படுத்தலாம். ஸ்டாலினிஸ்ட்டான பிரபாகரனுக்கு எதிராக யோ. கர்ணன் கதைகள் அல்லது ஸ்டாலினிஸ்ட்டான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக யோ.கர்ணன் கதைகள் அல்லது ஸ்டாலினிஸ்டான மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக யோ.கர்ணன் கதைகள். யோ. கர்ணன் கதைகள் பெரும்பாலுமானவை விடுதலைப்புலிகளை விமர்சிப்பவை. இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் புலிகள் அதிகாரத்தில் இல்லை. புலித்தலைமை தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுவிட்டது. கர்ணனது தனித்தன்மை என்று சொல்லப்படுகிற எள்ளல் விடுதலைப் புலித்தலைவர்களும் அவர்களது நடத்தைகளும் குறித்ததாகத்தான் இருக்கிறது. இலங்கை அரசு குறித்த அதனது அரசத் தலைவர்கள் குறித்த எள்ளல்கள் ஏதும் கதைகளில் இல்லை.
பிரபாகரன், துவாரகா குறித்த எள்ளல் போன்று சீமாட்டி சிராந்தி மற்றும் நடிகை அசின் குறித்த எள்ளல் யோ.கர்ணன் கதைகளில் இல்லை. ஐயனின் எஸ்.எல்.ஆர் கதை தவிர இன்று யாழ்ப்பாணத்தை ஆளும் அரசு ஆதரவுத் தமிழ் தரப்பினர் குறித்த எள்ளலும் யோ.கர்ணன் கதைகளில் இல்லை.
இன்று யோ. கர்ணன் கதைகளை விதந்தோதுபவர்கள் அல்லது வெளிப்படையாகத் தூக்கிப் பிடிப்பவர்கள் ஒன்று அரச ஆதரவாளர்கள் எனப்படும் மாற்றுக் கருத்தாளர்கள் மற்றவர்கள் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். விடுதலைப் புலிகள் எதிர்ப்பு அல்லது ஈழவிடுதலையை முற்றாக மறுப்பது, இந்தியப் பெருந்தேசியக் கண்ணோட்டம், போராட்டம் பற்றிய முற்றிலுமான இருண்மைக் கண்ணோட்டத்தை முன்வைப்பது எனும் காரணங்களுக்காகவே யோ.கர்ணன் கதைகளை ஆதவன் தீட்சண்யாவும் தமிழ்ச்செல்வனும் பாவிக்கிறார்கள். அந்த வகையில் யோ.கர்ணன் கதைகள் குறித்த கருணாகரனின் கோருதல்கள் அதீதமானவை.
இந்தக் கதைகளை வாசிக்கும் பெரும்பாலான தமிழ் வாசகர்கள் சனங்களின் துயரங்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் விட அதிகாரத்தரப்புகளைப் பற்றியே அதிகமும் சிந்திக்கிறார்கள். அதிலும் தாம் விரும்புகின்ற அதிகாரத்தரப்புகளைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கிறார்கள். ஆகவேதான் கர்ணனுடைய கதைகளையிட்ட அக்கறைகள் இவர்களுக்கு வரவில்லை. கர்ணனுடைய கதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் நிச்சயமாக அதிகாரத்தரப்புகளான விடுதலைப் புலிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் நிச்சயமாகப் பேசியே தீரவேணும். அப்படிப் பேசும்போது நிச்சயமாக இந்த இரண்டு தரப்பினாலும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும். அப்படிப் பேச இவர்களுடைய நாக்குக் கூசுகிறது. மனம் தயங்குகிறது. ஏனெனில் தமிழ்ச்சூழலில் பெரும்பாலானவர்கள் நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல ‘கட்சி மனோபாவத்துடன் இருப்பதால் தமது தரப்பைப் பற்றிய விமர்சனங்களை ஏற்கவேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் கர்ணன் கண்டு கொள்ளப்படாதிருக்கிறார். கர்ணனின் கதைகள் ‘கண்டும் காணாமல்’ விடப்படுகின்றன என்கிறார் கருணாகரன்.
யோ.கர்ணன் கதைகளைக் குறித்துப் பேசும்போது சமகாலத்தில் வெளியான உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை நாவல் பெற்ற கவனம் யோ.கர்ணன் கதைகள் பெறவில்லை என்கிறார் கருணாகரன். ஈழத்தில் நிலைமை என்னவென எனக்குத் தெரியாது. புகலிடத்திலும் தமிழகத்திலும் யோ. கர்ணன் கதைகள் பெற்ற கவனமும் விவாதத்தளமும் உமா வரதராஜனின் நாவலுக்குக் கிட்டவில்லை. மக்களைப் பற்றி நினைக்காமல் அதிகாரத்தரப்புக்களைப் பற்றியே நினைக்கிறாரகள், கறுப்பு வெள்ளையாகப் பார்க்கிற அவர்களே கர்ணன் கதைகளை நிராகரிக்கிறார்கள் என்று கருணாகரன் மதிப்பிடுவதில் உண்மை இல்லை.
முள்ளிவாய்க்கால் பேரழிவின்போதும் அதன் பின்னும் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை முன்வைத்துத்தான் உலக அமைப்புக்களின் அறிக்கைகள் வெளியானது. தமிழகத்தில் மிகப்பெரும் இயக்கங்கள் அதற்கான நீதி கேட்டுத்தான் எழுந்தன. இங்கு மக்களுக்கான நீதி என்பது இரண்டு பண்புகள் கொண்டன. முதலாவதாக, இலங்கை அரசினால் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பிரதானமானது. குறிப்பாக 40,000 வெகுமக்கள் கொல்லப்பட்ட பிரச்சினை. இரண்டாவது, விடுதலைப் புலிகளால் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகள்.
விடுதலைப் புலிகளால் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தூக்கிப் பிடிக்கிறவர்கள், இலங்கை அரசினால் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி எதுவுமே பேசியதில்லை. 40,000 வெகுமக்கள் கொல்லப்பட்டமை, போர்க்கைதிகள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை, பெண்போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை, வெகுமக்கள் மருந்தின்றி பட்டினி போட்டுக் கொல்லப்பட்டமை, மருத்துவமனைகள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டமை, ஆயுதக் குழுக்களின் வெள்ளை வான் கடத்தல்கள், ஊடகவியலாளர்கள் மீதான அரச அடக்குமுறை என இவை குறித்து சதா விடுதலைப் புலிகளை மட்டுமே விமர்சித்துக் கொண்டேயிருப்பவர்கள் வாய் திறந்து பேசியதில்லை. இத்தகையவர்கள்தான் புகலிடத்திலும் தமிழகத்திலும் யோ.கர்ணனைத் தூக்கிப் பிடித்தவர்கள்.
கறுப்பு வெள்ளை அரசியலைக் காவித் திரிந்தவர்கள் இவர்கள்தான். தமது கறுப்பு வெள்ளை அரசியலுக்கு யோ.கர்ணனைப் பாவித்தவர்களும் இவர்கள்தான். இன்று கருணாகரனைச் சுற்றியிருப்பவர்களும், யோ.கர்ணனைச் சுற்றியிருப்பவர்களும் இவர்கள்தான். கறுப்பு வெள்ளை அரசியலைக் கடைப்பிடித்துக் கொண்டே கறுப்புவெள்ளை அரசியலையும் மக்கள் நல அரசியலையும் குறித்துப் பேசுகிற அவலமாகவே கருணாகரன் அவர்களது அவதானம் இருக்கிறது.
நிலாந்தன் யோ.கர்ணன் கதைகளை விமர்சிப்பவர்களை அவரது பகைவர்கள் எனக் கருதிக் கொள்வாரானால் அது துரதிருஷ்டம். கறுப்பு வெள்ளை அரசியல் குறித்தும் சாம்பல் அரசியல் குறித்தும் பேசுகிற அவரே, இருதுருவ அரசியலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்றே இந்த மதிப்பீடு. யோ.கர்ணன் கதைகள் முக்கியத்துவத்தை ஏற்றபடியே அதனை விமர்சனத்துக்கும் உட்படுத்த முடியும்.
ஒரு வீரயுகத்தின் எந்தப் புனிதங்களும் விழுமியங்களும் திருச்சொரூபங்களும் தனது எள்ளற் பரப்புக்கு வெளியில் இல்லை என்று கூறமுற்படும் அவர் தேவதைகளுக்கும் தீட்டுவரும், அந்தத்தீட்டுத்துணியும் நாற்றமெடுக்கும் என்று கூறும்போது ஒரு வீரயுகத்தின் புனிதபடிமங்கள் எள்ளலுக்குள்ளாகின்றன. இது அந்தத் தேவதைகளைத் துதிப்போர், ரசிப்போர், விசுவாசிப்போருக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. இங்கேதான் கர்ணனின் எள்ளல் பகையைச் சம்பாதிக்கிறது. அவருடய பலமே அவருடய எள்ளல்தான். ஆனால் அதுதான் அவருக்குப் பகைவர்களைப் பெற்றுக்கொடுக்கிறது என்கிறார் நிலாந்தன்.
எள்ளல் எனும் சுவை குறித்து முதலில் நாம் பேசியாக வேண்டும். எள்ளல்கள் எப்போதும் ஒருபடித்தானவை இல்லை. அதிகாரம் கொண்டிருப்பவரை நோக்கி அதிகாரம் இல்லாதவர் செய்யும் எள்ளலுக்கும், அதிகாரம் கொண்டிருப்பவன் அதிகாரமற்றவரை நோக்கிச் செய்யும் எள்ளலுக்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. அலி, திக்குவாய், ஊனம் போன்றவற்றை முன்வைத்து எவரும் இன்று எள்ளலை மேற்கொள்ள முடியாது. ஒரு பார்ப்பனர் தலித் ஒருவரைப் பார்த்து எள்ளல் செய்வதற்கும், ஒரு தலித் தன்னைக் கீழ்மைப்படுத்தும் பார்ப்பனியச் சடங்குகளை முன்வைத்து எள்ளல் செய்வதற்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஊடல் ஊனமுற்றவர், தலித்துகள், கறுப்பு நிறத்தவர் போன்றவர்களைப் படுகேவலமாக எள்ளலுக்கு உள்ளாக்கும் கவுண்டமணி-செந்தில் எள்ளலுக்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் எள்ளலுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
எள்ளல் எங்கு மேட்டிமைத்தனமும் அதிகாரமும் வக்கிரமும் கொண்டிருக்கிறது எனக் கண்டடைவதும் ஒருவருக்கு முக்கியம்.
புனைவிலாயினும் சரி, உரைநடையிலாயினும் சரி எள்ளலை எல்லாச் சமயத்திலும் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. முகமது நபி குறித்த டேனிஷ் கார்ட்டூன் பிரச்சினையும், பாடப் புத்தகத்தில் அம்பேத்கர் குறித்த கார்ட்டூனும் இப்படித்தான் விவாதங்களுக்கு உள்ளாகிறது. எம்.ஜி.ஆரது திக்குவாய் பற்றி எழுதி ஜெயமோகன் வாங்கிக் கட்டிக் கொண்டதும், பிற்பாடு அந்தப் பதிவையே தனது தளத்தைவிட்டுத் தூக்கியதும் இப்படித்தான். ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் குறியீடுகளாக இந்தப் பிம்பங்களைக் கொண்டிருப்பவர்கள் கொந்தளிப்புக்கு ஆளாவதும் இப்படித்தான் நிகழ்கிறது.
துதிப்போர், ரசிப்போர், விசுவாசிப்போர் என்று அல்லாது வரலாற்று ரீதியில் பிரச்சினைகளையும் மெய்மையைக் காண்பவர்களும் கூட எள்ளலின் குணரூபத்தினை வரையறுக்கத்தான் வேண்டியிருக்கிறது.
எள்ளலில் இருக்கிற இத்தனைச் சிக்கல்களையும் மறந்துவிட்டு அதுதான் யோ.கர்ணனின் இயல்பு என்றால், 'இருக்கட்டும், அதற்கான பதில்களையும் அவர் கொண்டிருக்க வேண்டும்' என்பதுதான் அதற்கான நேர்மையான எதிர்வினையாக இருக்க முடியும்.
ஒரு பிரளயத்தை அதன் உயிர்ப்பரிமாணங்களோடு வாழ்ந்து கடந்தவர்களுக்கும் அதை முப்பரிமாணக் காட்சியாகக் கண்டவர்களுக்கும் இடையில் அனுபவ வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கும். வன்னியால் வந்தவர்கள் எதையாவது சொல்லமுற்படும்போது அதை வன்னிக்கு வெளியே இருந்தவர்கள் எதிர்கொள்வதில் இந்த அனுபவ வேறுபாடுகளுக்கும் ஒரு பங்கிருக்கும். நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின்னரும் நாடு வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையே இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது. கொழும்பில் முன்னெப்பொழுதையும் விட பலமாகக் காணப்படும் கறுப்பு வெள்ளை அரசியலின் விளைவே இது எனலாம். கொழும்பில் அதிகாரத்தில் இருப்பவர்கள் கறுப்பு வெள்ளையாகச் சிந்திக்கும் ஒரு நிலை உள்ளவரை அதன் விளைவாக உருவான யுத்தவெற்றி வாதம் தென்னிலங்கையில் வெகுசனமயப்பட்ட ஒரு நிலை உள்ளவரை நந்திக்கடல்த் தோல்விக்குப் பின்னரான தமிழ்மக்களின் கொந்தளிப்பான உளவியலில் மாற்றமேற்பட வாய்ப்பில்லை. இத்தகைய ஒரு கொந்தளிப்பான உளவியலோடு கர்ணனின் எள்ளலை எதிர்கொள்வதே இங்குள்ள பிரச்சினை.
கர்ணனுடைய இரண்டாவது தொகுப்பாகிய சே குவேரா இருந்த வீடு அவர்மீதான விமர்சனங்களுக்கு ஓரளவுக்குப் பதிலாக வந்திருக்கிறது. மொத்தம் பதின்மூன்று கதைகள் இதிலுண்டு. ஏறக்குறைய ஏழுகதைகள். அவரை அதிகாரத்தின் ஒரு அடுக்கை மட்டுமல்ல. எல்லா அடுக்குகளையும் எள்ளிநகையாடுபவராக நிறுவி இருக்கின்றன. இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் வன்னியிற் தோற்கடிக்கப்பட்ட அதிகாரத்தின் ஓர் அடுக்கை மட்டுமல்ல, இலங்கைத்தீவின் அதிகாரத்தின் ஏனைய அடுக்குகளின் மீதும் கர்ணனின் விமர்சனம் பாய்கிறது. இப்படிப்பார்த்தால் இந்தத் தொகுப்பின் மூலம் கர்ணன் அதிகாரத்தின் எல்லா அடுக்குகளையும் எள்ளி நகையாடும் ஒருவராகத் தன்னை வெளிப்படுத்த முற்படுவதன் மூலம் தான் எந்த அணிகளுக்குள்ளும் சிக்காத ஒரு சுயாதீனமான கதை சொல்லியாக நிறுவ முற்படுகிறார் என்கிறார் நிலாந்தன்.
நிலாந்தனது எழுத்தைத் தொடர்வதிலுள்ள மிகப்பெரும் சிக்கல் அவரது குறிப்பானதல்லாத, பொதுமைப்படுத்தப்பட்ட, அருவமான, கூடார்த்தமான மொழிநடை. உண்மையில் விவாதங்களுக்கு இத்தகைய மொழிநடை பொருத்தமானது இல்லை. நான் எவரதும் ரசிகனோ, பதிப்பாளனோ, விசுவாசியோ இல்லை. வரலாற்றைச் சமநிலையுடன் பயில நினைப்பவன் மட்டுமே. மட்டுப்படுத்தபட்ட அளவிலேனும் கடந்த முப்பதாண்டு கால ஈழ வரலாற்றின் பங்கேற்பாளனாக, ஈழ இலக்கியத்தின் வாசகனாக யோ. கர்ணன் கதைகள் எழுதப்பட்ட விதத்திலும் அது தமிழகத்திலும் புகலிடத்திலும் முன்னிறுத்தப்பட்ட வித்திலும் பல்வேறு சமநிலையின்மைகளை என்னால் அவதானிக்க முடிகிறது. குறிப்பிட்ட சில கதைகளில் யோ.கர்ணனின் கறுப்பு வெள்ளை அரசியலைப் பார்க்க முடிகிறது.
தேவதைகளின் தீட்டுத்துணி கதையிலோ, போராளிகளுக்கு முன்பாக இலங்கைப் படையினரிடம் சரணடைந்த புலிப்பொறுப்பாளர்களின் போலித்தனம் குறித்த கதைகளிலோ, பெண் குழந்தைகளையும், சிறார்களையும் பிள்ளைபிடிப்பாளர்கள் போல் விடுதலைப் புலிகள் யுத்தத்தின் இறுதி நாட்களில் படையில் பலவந்தமாக இணைத்த அனுபவங்கள் குறித்த கதைகளிலோ, பாதுகாப்பு வலயத்தினுள் மக்கள் தமது அன்றாடத் துன்பங்களோடு வாழ்ந்த நிலைமையிலும் புலிகள் அவர்கள் மீது செலுத்திய அதிகாரம் குறித்துப் பேசும் கதைகளிலோ முரண்படவோ, ஆத்திரப்படவோ ஏதுமில்லை. குருதிசிந்தும் புள்ளிவரங்களைத்தான் யோ. கர்ணன் படைத்திருக்கிறார் என்பதிலும் சந்தேகமில்லை.
ஈழ இலக்கிய வரலாற்றில் தேவதைகளின் தீட்டுத்துணி வகைக்கதைகளும், ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும் வகைக்கதைகளும் யோ.கர்ணனின் முக்கியத்துவத்தை நிறுவும் கதைகள். ஐநா அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை அரசியலில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டவையோ அந்த அளவு இலக்கியத்தில் முக்கியத்துவம் கொண்ட கதைகள் இவை. இந்தக் கதைகளுக்காக உண்மையில் கர்ணன் புகலிடத்திலும் தமிழகத்திலும் எதிர்ப்பைச் சம்பாதிக்கவில்லை என நினைக்கிறேன்.
அவர் சொல்லும் சில கதைகளோடு எனக்கும் உடன்பாடில்லை. இத்தொகுப்பில் உள்ள தமிழ்க்கதையை தவிர்க்குமாறு அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் சம்மதித்திருந்தார். ஆனால் தொடர்பாடற்தடைகள் காரணமாக அந்தக் கதை பிரசுரத்துக்கு வந்துவிட்டதாக அவர் பின்னர் கூறினார். அவர் கூறும் சிலவற்றோடு நான் உடன்படவில்லைத்தான். ஆனால் அவற்றைச் சொல்ல அவருக்குள்ள உரிமைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்தக் கதைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதை எழுதட்டும். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்கிறார் நிலாந்தன்.
சிக்கல் என்னவென்றால், தமிழ்க் கதை எனும் சிறுகதையை நிலாந்தன் கேட்டுக் கொண்டதற்கிணங்க யோ.கர்ணன் அவரது தேவதைகளின் தீட்டுத்துணி எனும் அவரது முதல் தொகுதியில் சேர்க்காது விட ஒப்பினார் என்றும், தொடர்பாடல் பிரச்சினையினால் அது இயலாது போனது எனவும் நிலாந்தன் பதிவு செய்கிறார். துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் சிறுகதையையும் இவ்வாறு சே குவேரா இருந்த வீடு தொகுப்பில் சேர்க்க வேண்டாம் என நிலாந்தன் யோ.கர்ணனிடம் சொல்லியிருக்கவும் கூடும். அக்கதை சே குவேரா இருந்த வீடு தொகுப்பில் இடம்பெறவில்லை.
நிலாந்தன், யோ. கர்ணன் குறித்த தனது மதிப்பீட்டில் ஒரு விடயத்தில் திட்டமிட்டு மௌனம் காக்கிறார். யோ.கர்ணனின் முக்கியத்துவத்தினையும் அவர் கதைகள் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் வருந்தி வருந்தி எழுதுகிற அவர், ஏன் தமிழ்க் கதையைத் தொகுப்பில் சேர்க்க வேண்டாம் என்று சொன்னார் எனும் காரணத்தையோ, அவர் பொதுவாகச் சொல்கிற தனக்குப் பிடிக்காத கதைகள் எவை என்பதனையோ நிலாந்தன் பதிவு செய்யவில்லை. அதற்கான காரணத்தையும் அவர் சொல்லவில்லை. அவரது மௌனத்தில் யோ.கர்ணன் கதைகள் எதிர்கொள்ளும் விமர்சனங்களுக்கான பதில் பொதிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
தமிழ்க் கதை புகலிட இலக்கியச் சூழலையும் பெண்நிலைவாதிகளையும் சாடும் ஒரு கதை. உண்மையில் புகலிட சிறுபத்திரிக்கைச் சூழல் யோ.கர்ணனுக்குத் தெரியவில்லை என்றுதான் அதனை வாசிப்போர் உணர்வர். புகலிட சிறுபத்திரிக்கைச் சூழலும் பெண்ணிலைவாதச் சூழலும் கர்ணன் சித்திரிக்கிற மாதிரி அந்தக் கதையில் வரும் சிறுகதையாசிரியனையோ, குறிப்பிட்ட சிறுகதை சித்தரிக்கும் விஷயங்களை மறுக்கும் சூழலாக இங்கு இல்லை. புகலிடத்தை புலத்திற்கு எதிரில் நிறுத்தும் காரணத்திற்காக அல்லது புகலிட ’மெய்மையை’ அறியாமல் எழுதப்பட்ட காரணத்திற்காக நிலாந்தனுக்கு அந்தக் கதை பொருத்தமில்லாததாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
யோ. கர்ணன் குறித்த காரசாரமான விவாதத்தைத் தூண்டிய கதை துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் எனும் சிறுகதை. இந்தச் சிறுகதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கவாதியும் முற்போக்கு எழுத்தாளர் சங்க முக்கியஸ்தருமான ஆதவன் தீட்சண்யா நெறிப்படுத்தும் புதுவிசை (ஜூன் 2011) இதழில் வெளியானது. இதில் பிரபாகரன் பொரிக்கடை வைத்திருப்பவர். முள்ளிவாய்கால் பேரழிவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெற்றவர். மகள் துவாரகா பொரிக்கடைக்காரர் மகள். துவாரகாவை கைது செய்யும் இலங்கைப் படையினர் சிறுவன் என்பதற்காக அவரது தம்பியை விட்டுவிடுகிறார்கள். பிரபாகரன் துவாரகாவை ஆஸ்திரேலியா கூப்பிட, அவர் மகள் நாட்டைக் காட்டி மறுக்க, பிரபாகரன் நாடாவது மசிராவது, என்பதோடு அந்தக் கதை முடிகிறது.
பிரபாகரனோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரதும் பெயர்கள் ‘நிகழ்ந்த சம்பவங்களுடன் சேர்த்து’ யோ.கர்ணனின் கதைகளில் இடம்பெறுகிறது. தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பின் பதிப்பாளர் அகிலன், யோ.கர்ணன் கதைகள் மெய்மையை, உண்மையைப் பேசுகிறது என்கிறார். நிலாந்தன் யோ. கர்ணன் கதைகள் ‘பிக்சன்’ அல்ல ‘பேக்சன்’ என்கிறார். உண்மைகளோடு அல்லது உண்மையின் வகைமாதிரிகளின் மீதான புனைவுகளோடு கர்ணன் கதைகள் வருகின்றன என்கிறார் நிலாந்தன்.
பிரபாகரன், துவாரகா தொடர்பான மெய்மை-உண்மை என்ன? அல்லது நிலாந்தன் பேசுகிற உண்மையின் வகைமாதிரிகளின் மீதான புனைவு என்ன?
பிரபாகரன் மற்றும் அவரது மூத்த புதல்வரான சார்லஸ் ஆன்டனி மற்றும் அவரது இளைய மகனான சிறுவன் பாலச்சந்திரன் போன்ற அனைவரதும் கொல்லப்பட்ட உடல்கள் புகைப்படங்களாக இருக்கின்றன. அவரது துணைவியார் மதிவதினி கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அமைச்சர் கருணா அம்மான் குறிப்பிட்டிருக்கிறார். பிரபாகரனது பெற்றோர் மரணித்துவிட்டனர். பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கை அரசு, சரத் பொன்சேகா எல்லோரும் சொல்வது இதுதான்.
நோர்வே அறிக்கை, அமெரிக்கா-நோர்வே-இந்தியா கூட்டாக முன்னெடுத்த திட்டத்தை மறுத்து, பிரபாகரன் சரணடைய மறுத்து இறுதிவரை போராடி மடிந்தார் எனப் பதிவு செய்கிறது. யாழ் பல்கலைக் கழக மனித உரிமை அறிக்கை பிரபாகரன் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது. பிரபாகரன் மிக அருகாமையில் இருந்து நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது சேனல் நான்கு ஆவணப்படம். இலங்கைப் படையினரால் அவரது உடல் கேவலமாக அவமானப்படுத்தப்பட்டது. அவரது இளைய புதல்வன் பாலச்சந்திரன் மிருகத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான் என்கிறார் சேனல் நான்கு தடயவியலாளர். அவரது முழுக் குடும்பமும் போர்முனையில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் மெய்மை. உண்மை. இதில் என்னவகையில் உண்மையின் வகைமாதிரிகளின் மீதான புனைவை உருவாக்க முடியும் என்பதனை நிலாந்தன் விளக்க வேண்டும். யோ.கர்ணனின் இக்கதையைப் புரிந்து கொள்ள அது எல்லோருக்கும் நிச்சயமாக உதவும்.
எந்த மெய்மையை, உண்மையைப் பேசுவதற்காக நிலாந்தனும் கருணாகரணும் அகிலனும் யோ.கர்ணனின் முக்கியத்துவத்தினை உயர்த்திப் பிடிக்கிறார்களோ அதே மெய்மையின்-உண்மையின் அடிப்படையில்தான் இக்கேள்வியை நான் முன்வைக்கிறேன். எனது விசுவாசம் இங்கு மெய்மை சார்ந்ததேயல்லாது தனிநபர் விசுவாசமோ அல்லது ரசிகமனப்பான்மையோ சார்ந்தது இல்லை.
எந்த விடுதலைப் போராட்டத்திலும் பல்வேறு வகையான சமூக சக்திகள் எப்போதுமே ஈடுபாடு செலுத்தும். அந்த ஈடுபாடு தத்தமது வர்க்க, சாதீய நலன்களின் பொருட்டும் செயல்படும். சந்தர்ப்பவாதிகளும் பிழைப்புவாதிகளும் எந்த இயக்கத்திலும் உண்டு. கம்யூனிஸ்ட் கட்சிகள் சோசலிச நாடுகளில் மூன்றாம் வர்க்கமாகப் பரிமாணம் பெற்றதையும் ஊழலில் திளைத்ததையும் அறிந்தவர்க்கு, யுத்தத்தின் இறுதிநாட்களில் தமது போலிமுகங்களைக் காட்டிய விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்களைப் புரிந்து கொள்வதில் பிரச்சினையில்லை. பிரபாகரனையும் பிரபாகரனது மரணத்தையும் அவரது புதல்வர்கள் புதல்வியையும் அப்படி மதிப்பிட முடியாது.
எமக்கு பிரபாகரனது வழிமுறையிலும், அவர் விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு செலுத்தியதிலும் எத்தனைதான் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவர் போராடித்தான் மரணமுற்றார், சரணடையாது மரணமுற்றார் என்பதனை எவரும் கொச்சைப்படுத்தமுடியாது. விடுதலைப் புலிகளுக்குள் இருந்த பிழைப்புவாதிகளோடு அவரது நிலையைச் சமப்படுத்தி எள்ளலுக்கு உள்ளாக்குவதற்கான எந்த அடிப்படைகளும் இல்லை.
பிரபாகரனது மரணம் நேர்ந்தவிதமும் அவரது இளைய புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதமும், பெண் போராளிகள் பாலியல் வல்லுறவின் பின் கொல்லப்பட்டார்கள் எனும் குற்றச்சாட்டின் பின் துவாரகாவின் மரணமும் இலங்கை அரசின் மீது மிகப்பெரும் சர்வதேச நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழலில் யோ. கர்ணன் இந்தக் கதையின் மூலம் என்ன உண்மையை அல்லது மெய்மையைச் சொல்ல முனைகிறார்? விடுதலைப் போராட்டத்தையும் அதனது விளைவுகளையும் கருணாகரனதும் ஷோபா சக்தியினதும் எழுத்துக்கள் கறுப்பாகப் பார்க்கிறது எனும் நிலாந்தனின் மதிப்பீட்டில் உடன்பாடு தெரிவிக்காத யோ. கர்ணன் எங்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்?
முதலில் யோ. கர்ணனின் இயல்பு எள்ளல் என்பதே ஒரு பொய்யான கட்டமைப்பு. முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான இரண்டு ஆண்டுகளின் நிலைமை குறித்த அவரது அரசியல் கட்டுரையில் எள்ளல் இல்லை. கொழும்பு எழுத்தாளர் சங்க நிகழ்வுகள் தொடர்பான அவரது கட்டுரையில் சகட்டுமேனிக்கு எல்லோரையும், எல்லாவற்றையும் எள்ளலுக்கு உட்படுத்துகிறார். இக்கட்டுரையில் வெளிப்படுவது யோ.கர்ணனின் கறுப்பு மனநிலை.
யோ. கர்ணனின் இக்கதை குறித்த தமிழக விவாதம் அதனது அழகியல் அரசியல் மதிப்பு குறித்த விவாதமாக ஆகாமல், ஆதவன் தீட்சண்யா மீதான கொலைமிரட்டல் தொடர்பான பிரச்சினை ஆகியதும், ஆதவன் தீட்சண்யா பாதிக்கப்பட்ட ஒருவர் போல அனுதாபத்தைத் தேடியதும் உண்மையில் ஒரு அபத்த நாடகம். சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைக்கு ஆவேசமாக எதிர்வினையாற்றிய ஆதவன் தீட்சண்யா, அதே அளவு ஆவேசமான எதிர்வினைக்கு உரியது துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் கதை எனும் உணர்வையும் தாண்டி, அவரை அக்கதையைப் பிரசுரிக்கச் செய்த மனநிலை, அவரது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈழப்போராட்ட எதிர்ப்பு அரசியல் மனநிலைதான்.
இக்கதையில் பிரபாகரன் பெயர்போல, ஐயனின் எஸ்.எல்.ஆர் கதையில் பாலியல் வல்லுறவு புரிந்த தாடிக்காரர்களின் இயக்கத்தின் தலைவரின் பெயர் குறிப்பிட்டு யோ.கர்ணன் எழுதாமையின் அரசியலையும் பின் முள்ளிவாய்க்கால் யதார்த்தத்தில் வைத்து நான் புரிந்து கொள்ள முயல்கிறேன். நிலாந்தன் இவ்வாறு சொல்கிறார் : கர்ணன் சொல்லும் கதைகளையும் அதை எதிர்கொள்ளும் தோல்விக்குப் பின்னரான உளவியலையும் எதிரெதிர் நிலைகளில் வைத்துப் பார்ப்பதுதான இங்குள்ள பிரச்சினை. உண்மையில் அவை இருவேறு எதிரெதிர் யதார்த்தங்களல்ல. மாறாக அவை ஒரு முழுமையான யதார்த்தத்தின் இருவேறு கூறுகளே. அவற்றை எதிரெதிராக வைத்துப் பார்ப்பது என்பதே ஒருவகைக் கறுப்பு வெள்ளை நோக்குநிலைதான். கர்ணன் சொல்லும் கதைகள் ஒரு யதார்த்தம். அதை எதிர்கொள்ளும் உளவியல் மற்றொரு யதார்த்தம். இரண்டுமே ஒரு முழுமையை உருவாக்கும் இருவேறு யதார்த்த மூலக்கூறுகள்தான்.
நிலாந்தனது சாம்பல் அரசியலைப் புரிந்து கொள்வது ஈழநிலைமையில் மிகவும் சிக்கலானது. ஈழவிடுதலைப் போராட்டத்தினை கறுப்பாகப் பார்க்கிற கருணாகரன், சமவேளையில் பிறரின் கறுப்புவெள்ளைப் பார்வை குறித்துப் பேசுகிறார். யோ.கர்ணன் புகலிட கறுப்பு மற்றும் தமிழகக் கறுப்பு மனநிலை கொண்டவர்களுடன் தன்னை இனம் காண்கிறார். அது குறித்த விமர்சன உணர்வு கொண்டவர்களை வெகு சாதாரணமாக வெள்ளை அணியில் அவர் தள்ளிவிட்டு நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார். நிலாந்தன் அரசியலிலும் இலக்கியத்திலும் முன்வைக்கும் சாம்பல் அரசியல் யோ.கர்ணனுக்கு உடன்பாடானது இல்லை.
யோ. கர்ணனது புனைவுகளும் புனைவல்லா கட்டுரைகளும் குறித்த வாசிப்பென்பது பின்வரும் மனநிலையையே எனக்குத் தருகிறது : முள்ளிவாய்க்கால் யதார்த்தங்களைக் கணிசமான அளவில் கதைகளில் முன்வைத்த யோ.கர்ணன், விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்து அதனது மேன்மைகளையும் கீழ்மைகளையும் மக்களின் சார்பு நிலையில் நின்று பதிவு செய்த யோ.கர்ணன், அதனது அரசியல் நீட்சியை நிதானமாகச் சமநிலையுடன் பேணியிருக்க முடியும். நிலாந்தனிடம் அந்த அரசியல் மற்றும் அழகியல் தேடலைக் காணமுடிகிறது. துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் கதையோடு யோ. கர்ணன், கருணாகரன் போலவே புகலிட-தமிழகப் புலி எதிர்ப்பாளர்களின், ஈழவிடுதலை எதிர்ப்பாளர்களின், இலங்கை அரச ஆதரவாளர்களின், இந்த அரசியலைப் பிரதிநிதிதுவப்படுத்துபவர்களின் அணிகளை நோக்கி நகர்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது. இலக்கியம் பற்றிய விவாதத்தில் அரசியல் முடிவுக்கு வருவது சரியா எனும் கேள்வி எழுந்தாலும், துரதிருஷ்டவசமாக யோ. கர்ணன் கதைகளின் பேசு பொருளும் அவை குறித்த விவாதங்களும் அரசியல் விவாதங்களாக இருக்கும்போது நான் மட்டும் எவ்வாறு அதிலிருந்து மீள முடியும்? தஸ்யுக்குகளின் பாடல் யோ.கர்ணனது படைப்பாற்றலின் உச்சம் என்பதோடு நிறைவு செய்கிறேன்.
***
குறிப்பு : கட்டுரையில் இடம்பெறும் அனைத்து மேற்கோள்களும் யோ.கர்ணனது இரு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்தும், யோ.கர்ணனது வலைத்தளத்திலிருந்தும், எடுத்தாளப்பட்டிருக்கிறது. பதிப்பாளர் அகிலனுக்கும் யோ. கர்ணனுக்கும் எமது நன்றி.