தா.பாலகணேசன்
கரிக்கோடு தூய்மையின்மையின் அடையாளமாயிருந்தது
துயரத்தின் குறியீடாயிருந்தது
பிரிவின் எல்லையாகியிருந்தது
அதற்குள் அவள் பிரிக்கப்பட்டிருந்தாள்
கனவுலகத்தின் இளம் கன்னியாக அவள் இருந்தாள்
ஆசைகளின்
கதாநாயகியாக பேசப்பட்டாள்
அழகிய ஒரு பொம்மையைப் போலவும் அவள் இருந்தாள்
அடக்கப்பட்ட உணர்வுகளின் உடலைச் சுமந்துகொண்டு
பாலை நிலங்களில் வீழும் மழைத் துளியைப் போன்றவள்
பாலும் தேனும் பொழியும் பாற்கடலைப் பெருகச்செய்பவள்
தேன்போலும் சொற்களால் காதலை நெய்பவள்
அடங்காப்பிடாரி
ஆழமறியாமல் இறங்கியவர்களை அவள் அடித்து வீழ்த்துவாள்
அவள் கைகளில் இருக்கும் மாய வலைகளில் வீழ்பவர்கள் மீள்வதில்லை
அவள் விழிகளுக்குள் வீழ்ந்து
காதல் பெருநதியில் நீச்சலடித்துக்கொண்டிருப்பவர்களை
அவள் சுகப்படுத்துவாள்
காமப் பரவசத்தைப் பரவச்செய்பவள்
அவள் காமுகி
மலர்ந்திருக்கும் பூக்களை போன்றவள்
அவளிலிருந்து கிளம்பும் வாசனைகளாலும்
நறுமணங்களாலும் ஈர்க்கப்படுபவர்கள் அலைக்கப்படுகிறார்கள்
தீராத ஆசைகளும் தீராத மோகங்களும்
அவர்களைக் கீறிக் காயப்படுத்தும்
காய்ந்த கொம்புகளிலிருந்து
காதலை வெளிப்படுத்தும்
குரலில் பாடச்செய்வாள்
சந்துகளாலும் பொந்துகளாலும்
நுளைந்து வரச்செய்வாள்
அவள் ஒரு வேசியாக
நோய்வாய்ப்பட்டவனின் கண்களில் தெரிவாள்
இரவுகளினதும்,சாமங்களினதும்
ராட்சியத்தை அவளிடமிருந்து பறித்தார்கள்
அவளை இரகசியத்தினதும் வேட்கையினதும்
புலியாக அவளை கூண்டில் அடைத்தார்கள்
இன்பங்களினதும் கிளர்ச்சியினதும் கவர்ச்சியினதும்
நரம்பு கொண்ட உடலை
அவள் நதிக் கரைகளில முழுக்காட்டினாள்
அடர்ந்த காடுகளில் நறுமணம் வீசும்
பூமர நிழல்களின் கீழ்
அவள் ஆண் சிங்கங்களை வேட்டையாடினாள்
அவளை கறுப்பு கயிறுகளால் கட்டிப் போட்டார்கள்
அவள் அதை அறுத்தாள்
சலங்கையாக அதை மாட்டினாள்
சிணுங்கும் ஒலியோடு மாடங்களில்
உலவும் ஓசைக்குள்
அடங்காதொளிக்கும் அவளது வேட்கை குரல்
இருளை அவள் புணர்ந்தாள்
இருளை அவள் மணந்தாள்
இருளுள் அவள் உறைந்தாள்
காலத்தை அவள் தன் காலடியுள் இருத்தினாள்
அவள் நிமிடக் கம்பியையும்
நேரக் கம்பியையும் முறித்துப்போட்டாள்
ராசகுமாரர்களை மந்திரிமார்களை
அரச பிரதானிகளை அவள் வீழ்த்தினாள்
முகத்தில கரி பூசியவர்களை அவள்
வேட்டையாடினாள்
பூவுக்குள் உறங்கிய புயல் அவள்
புறப்பட்டுச் சென்ற பாதையில்
குருதியும் பெருக்கெடுத்தோடிற்று
அவளை இடுப்பில் கட்டிப்போட்டார்கள்
அவள் அதை அறுத்தாள்
வீரப்பதக்கம்போலும் அதை அணிந்தாள்
குதிரைச்சவாரிக்காரியைப்போல
சைக்கிள்களில் வலம் வந்தாள்
செம்மண்புழுதியைக் கிழப்பிச்செல்லும்
நீலக்கடல் அலைகளைக் கிழித்துச்செல்லும்
இயந்திரங்களை முடுக்கினாள்
அவளுக்கு அற்புதமான ஒளிரும் சிறகுகள் இருந்தன
அவள் நிலவின் ஒளியில் குரல்
அசைத்துப் பாடினாள்
பனந்தோப்புகளில் நுரைக்கும்
கள்ளின் வாசனையோடு
அவள் பாடல் ஒலித்தது
கரிய அலைகளின் மடிப்பில்
அவள் துயில் கொண்டிருக்கிறாள்
எங்கும் எழும்பும் அலைகளுக்குள்
அவள் இருப்பாள்