Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பங்காளன் அல்ல; பங்கேற்பாளன்

பங்காளன் அல்ல; பங்கேற்பாளன்
யமுனா ராஜேந்திரன்

 

'மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் கடந்த முப்பதாண்டு ஈழவரலாற்றின் பங்கேற்பாளனாக’ எனும் இந்த வரியை மிகுந்த யோசனையின் பின் எழுதினேன். இப்போது நான் இதனை எழுதியதன் அர்த்தத்தில் உறுதியாக இருக்கிறேன். சீமான் போல நான் ஈழ வரலாற்றில் ‘பங்கு’ கோருவதாக அகிலன் எழுதியிருக்கிறார். எனது கட்டுரையை அகிலன் ஒழுங்காக வாசிக்கவில்லை என்பதற்கு இது ஒரு சான்று. பங்காளன் அல்ல அகிலன், பங்கேற்பாளன். அதுவும் ‘மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான’ பங்கேற்பாளன். பங்காளன் இயல்பிலேயே பிரச்சினைக்குள்ளான அமைப்பினுள் இருப்பவன். அவனது விருப்பு-விருப்பமின்மையை மீறி அதனுள் வாழ விதிக்கப்பட்டவன் அவன். உதிரம் சிந்துபவனாக, இடையில் சிக்குப்பட்டு மரிப்பவனாக, அரசபடையின் கையாளாக, வன்பாலுறுவுக்கு உட்படும் பெண்ணாக பாத்திரம் வகித்தே தீரவேண்டியவர் இவர். நான் இப்படிப்பட்ட பங்காளன் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

பங்கேற்பது என்பது சுயவிருப்பில் ஒன்றில் ஈடுபடுத்திக்கொள்வது. இதனை ஆதரவாளனின், தோழனின் பாத்திரம் எனப் புரிந்திருக்கிறேன். நான் பங்காளன் இல்லை. நான் பழகி, அறிந்து, சில பொழுதுகளேனும் என்னோடு வாழ்ந்தவர் என் கண்ணெதிரில் மரிக்கும்போது விடுப்புப் பார்க்கிற பார்வையாளனும் இல்லை நான். பங்கேற்பாளன். இதனை அகிலன் மட்டுமல்ல, ‘அனுபவத்துக்கு ஏகத்துவம் கோருகிற’ எவரும் என்னிடம் இருந்து பறித்துவிட முடியாது. 1983 முதல் எனது சொந்த வாழ்வு ஈழவிடுதலைப் போராட்டத்தின் பகுதியாகத்தான் இருக்கிறது. அது எனது தனிப்பட்ட வாழ்வையும் மாற்றியமைத்திருக்கிறது. இந்தப் பங்கேற்பாளன் பங்கு கேட்பவனாக மாறி, யோ.கர்ணன் அல்லது அகிலன் வைத்திருக்கும் பீடத்தை எடுத்துக் கொள்வதற்காக போட்டி போடுவதாக எவரும் அச்சப்படத்தேவையில்லை.

அகிலனின் முதல் வாக்கியத்தைப் படித்தவுடன் ஒரு ஐந்துவயதுப் பாலகன் தந்தையின் விரல்பிடித்தபடி கைசூப்பிக் கொண்டு தொறான்ரோ நகர மையத்தில் போகவரும் வாகனங்களைப் பராக்குப் பார்க்கும் காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது. நான் பிரதி சார்ந்து தர்க்கபூர்வமாக எழுப்பியிருக்கும் கேள்விகளுக்குப் பதிலாக அனுமானங்களின் அடிப்படையில் என்னைச் சாதுர்யமாகக் குற்றக்கூண்டில் ஏற்றிவிட்டு பெருமிதப்படுகிறார் அகிலன். அவரது வேண்டுகோளின்படி யோ.கர்ணன், நிலாந்தன், கருணாகரன் போன்றவர்களையும் கைபிடித்து அழைத்துக்கொண்டு அகிலன் பொங்குதமிழுக்கு வரவேண்டும். அவரது நண்பர் தன் சொந்த அறைக்குள்ளிருந்து புறுபுறுக்கிற மாதிரி முகநூலில் குய்யோ முறையோ என்று பொங்குதமிழை ‘வாழ்த்தி’ அவதூறுக் கூப்பாடு போடுவதை நிறுத்திக் கொள்ளவும் அவர் கோர வேண்டும். தன் கட்டுரையைப் போடுகிற வரைக்கும் சுதந்திர ஊடகம், தன்னை நியாயமாக விமர்சனத்துக்கு உட்படுத்தினால் அது அவதூறு ஊடகம் என்று பிலாக்கனம் பாடுவது அந்த ‘எள்ளல்’ கடவுளுக்குத்தான் வெளிச்சம் அகிலன்.

அகிலனைக் குழந்தை என்று சொன்னேன். ‘சமீபகாலமாக சிற்றிதழ்களையும் இணையதளப் பக்கங்களையும் நிரப்பிவரும் யமுனா ராஜேந்திரன்’ என்று தனது கட்டுரையைத் துவங்குகிறார் அகிலன். அகிலன் ஒன்று ஐந்து வயதுப் பாலகனாக இருக்க வேண்டும் அல்லது மணிவிழாக் கண்ட குடிமைச் சமூக மூத்த பிரஜையாக இருக்க வேண்டும். ‘சமீபம்’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் அகிலன்? ஒரு நொடி? ஒரு மணிநேரம்? ஒரு நாள்? ஒரு வாரம்? ஒரு மாதம்? ஒரு வருடம்? ஒரு தசாப்தம்? சொற்களைப் பாவிப்பது எவ்வாறு என்பதற்கு முதலில் அகிலன் பயிற்சி பெறவேண்டும். ‘விக்கிபீடியா தலைமுறை’யைச் சார்ந்த அகிலனுக்கு அவரது கடந்த காலமே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் துவங்குகிறது. எழுபதுகளிலான எனது பள்ளிப் பருவத்திலிருந்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். விக்கிபீடியாவின் தோற்றத்துக்கு முன்பானதுதான் எனது பெரும்பாலுமான புத்தகங்கள். சிற்றிதழ்களுக்கு அதனது ஆசிரியர்கள் கேட்கிற அளவு என்னால் எழுதமுடிவதில்லை. ‘சமீப’ காலத்தில்தான் எழுத்துக்கூட்டிப் படிக்கத்துவங்கியிருக்கிற குழந்தைபோலவே எனக்கு அகிலன் தென்படுகிறார். இந்த ஒன்றரை ஆண்டுகளில் இணையத்தில் நான் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் எழுதக் காரணம், எனக்கு எழுத விஷயங்கள் இருக்கின்றன. யதேச்சையாக எனது ஊதியத்துக்குரிய வாழ்வின் பகுதியாகவும் அது அமைந்துவிட்டிருக்கிறது என்பதுதான். சிறுபத்திரிக்கைகள் என்னிடம் கேட்டுத்தான் நான் எழுதுகிறேனேயல்லாது அவை எதனையும் நிரப்ப வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் எழுதுகிற பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் அந்த அவசியம் இல்லை. இன்னும் சில பத்திரிக்கைகளுக்கும் சில மாற்றுக் கருத்து மாணிக்கங்களுக்கும் அவர்கள் கேட்டாலும் நான் எழுதப் போவது இல்லை. அவர்கள் என்னிடம் கேட்கமாட்டார்கள் என்பதுவும் எனக்குத்தெரியும். இதுதான் நிஜம். தனது வாழ்நாளில் ஐந்து கட்டுரைகள்தான் எழுதியிருக்கிற அகிலன் அடக்கமாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம். அடக்கம் அமரருள் உய்க்கும் அகிலன்.

‘அனுபவத்தின் காயங்களைக் கேள்வி ஞானத்தால் கண்டடைய முடியாது‘ என்பதுதான் அகிலனின் கட்டுரையின் பிரதான பேசுபொருள். நான் அப்படி ஏதேனும் எனது கட்டுரையில் கோரிக் கொண்டிருக்கிறேனா என்ன? ‘அனுபவத்தின் காயங்களைக் கேள்வி ஞானத்தால் கண்டடைய முடியாது‘ என்பது ஒரு இருத்தலியல் நிலை. இது யோ.கர்ணனுக்கும், அகிலனுக்கும், யமுனா ராஜேந்திரனுக்கும், கருணாகரனுக்கும், நிலாந்தனுக்கும், இந்தப் பரந்த பூமியில் வாழ்கிற அல்லது நாமறிந்திராத வகையில் இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்கிற எந்த ஜீவராசிக்கும் பொருந்தும். பிரச்சினை இந்த அனுபவம் எவ்வாறு பிரக்ஞையாகவும், பகிர்தலாகவும், மனிதர்களுக்கு இடையிலான ஊடாட்டமாகவும் மாறுகிறது என்பதுதான். இவ்வகையில் ஒரு சமூகத்தின் - ‘இலட்சோப இலட்சம் தன்னிலைகளின்- அனுபவத்திற்குப் பதிலியாக’ எவ்வாறு ஒரு ‘தனித்த தன்னிலையின் அனுபவம் ஆக முடியும்?’ என்பதுதான் எனது கேள்வி. ஒரு தன்னிலையின் அனுபவம் எவ்வாறு இலட்சோப இலட்சம் தன்னிலைகளது அனுபவங்களை தனது ‘ஏகத்துவப் பிரதேசமாக’க் கோரிக்கொள்ள முடியும்? என்பதுதான் எனது கேள்வி. யோ.கர்ணனின் கதைகளை முன்வைத்து கருணாகரன், நிலாந்தன், அகிலன் போன்றவர்கள் அவ்வாறுதான் கோரிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை அங்குதான் துவங்குகிறது.

ஒரு தன்னிலையின் அனுபவத்தை பிறிதொரு தன்னிலை ஒரு போதும் கொண்டிருக்க முடியாது. அப்படிப் பாசாங்கு செய்யவும் முடியாது. ஒருவரது அனுபவம் பிறிதொருவருக்கு மனம்சார்ந்த உணர்தலாக, பிரக்ஞையாக, பகிர்தலாக மட்டுமே கடத்தப்பட முடியும். மனம்சார்ந்த உணர்தல் மற்றும் பிரக்ஞை என்பதனை வரலாற்று அனுபவம், அதன்வழி உருவாகும் கூட்டுமனநிலை என நான் இங்கு அர்த்தப்படுத்துகிறேன். இந்தக் கூட்டுப் பிரக்ஞைதான் அரசியல் பிரக்ஞையாகத் தார்மீக மனநிலையாக மக்கள் கூட்டத்தினிடம் செயல்படுகிறது. இரு தனிமனிதருக்கு இடையிலான உறவாக, இந்த அனுபவம் எவ்வாறு உணர்தலாக உருவாகிறது? மகப்பேறு என்பது பெண்ணுக்கு உதிரப்போக்கும் நிணமும் வலியும் கொண்டது. இதனை ஒரு போதும் ஒரு ஆணினால் அனுபவம் கொள்ள முடியாது. இது ஒரு இருத்தலியல் நிலை. இதனை ஒரு ஆண் எவ்வாறு கடந்து போதல் முடியும்? தனது சகஜீவியின் வலியை தன்னுணர்வாக ஒருவர் மாற்றிக்கொள்ள முடியும். அது ஒரு போதும் அனுபவத்திற்கு ஈடானது அல்ல என்றாலும் ‘அடுத்த’ மனிதனுக்கு அதுவே சாத்தியம். இதிலிருந்து அந்த சகஜீவி அந்தப் பெண்ணை எவ்வாறு அணுகுகிறான் என்பதுதான் முக்கியம். தாய்மையை அவன் போற்றுகிறான். அவளோடு அவளது வலியைப் பகிர்ந்துகொள்ள வேறு வேறு வகைகளில் அவன் முனைகிறான். பெண்களின் பாலான ஆண்களின் இந்தத் தன்னிலைப் பகிர்வு ஆண்களின் கூட்டுப் பிரக்ஞையாக ஆகும்போது அது சமூகச்செயல்பாடாக வடிவமெடுக்கிறது. பேருந்தில் ஒரு கர்ப்பணிப் பெண் இருக்கையில்லாமல் நிற்கும்போது தனது இருக்கையைத் தருகிற மனநிலையைப் பொதுச்சமூகத்துக்கு உருவாக்கிய அறம் இவ்வாறுதான் உருவாகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது தமிழக மக்கள் நேரடியாக அந்தக் கொடும் அனுபவத்திற்குள் இருந்திராவிட்டாலும் தமிழகமே அந்தக் கொடுமைக்கு எதிராகப் பொங்கி எழுவது இவ்வாறுதான் நேர்கிறது. இந்தப் பகிர்தல் மட்டுமே மனிதர்களுக்கிடையில் சாத்தியம். இதுதான் அகிலனுக்கும் யோ.கர்ணனுக்கும் எனக்கும் கூடச் சாத்தியம். அனுபவித்தவன் மட்டுமே ஒன்றைக் குறித்துப் பேசமுடியும், எழுதமுடியும் என்றால், ஒரு பெண் போராளியைப் பற்றிப்பேச, ஒரு தற்கொலைப் போராளியைப் பற்றிப்பேச, பிரபாகரனின் மகள் துவாராகாவைப் பற்றிப்பேச ‘இவர்களது வாழ்வை வாழ்ந்திராத’ அகிலனுக்கும், யோ.கர்ணனுக்கும் உள்ள தகைமை என்ன? பிறரை உங்களது அனுபவத்தை முன்னிறுத்தி ஓரம்கட்ட நினைக்கும் நீங்கள், பிறரது அனுபவங்களுக்கு ‘ஏகத்துவம்’ கோருவது எப்படிச் சாத்தியம்? அருளர் முதல் சாந்தன், கோவிந்தன் ஈறாக சயந்தன் வரை எல்லோரும் ஈழ அனுபவத்திலிருந்துதான் எழுதுகிறார்கள். இவர்கள் யாரும் ஈழ அனுபவத்தின் முற்றுண்மைகள் எங்களது எழுத்துக்கள் எனக் கோரிக்கொள்வதில்லை. யோ.கர்ணனின் எழுத்துக்கள் ஒரு மக்கள் கூட்டத்தின் - இலட்சோப இலட்சம் தன்னிலைகளின் - பகுதிதானேயொழிய அதுவே முற்றுண்மை இல்லை.

யோ.கர்ணனைத் தமிழகத்தில் தாங்கிப்பிடிக்கும் தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், புகலிடத்தில் இன்றைய ஈழம் என்றால் யோ.கர்ணன் கதைகள்தான் என்று தூக்கிப்பிடிக்கும் மாற்றுக் கருத்தாளர்களும் யோ.கர்ணன் கதைகள்தான் ‘ஈழம் குறித்த முற்றுண்மை’ என்கிறார்கள். பான்கி மூன் அல்லது இனிவரும் மனித உரிமை அறிக்கையைவிட உண்மையானது, மெய்யானது யோ.கர்ணன் கதைகள்தான் என்கிறார்கள். இதனையே நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன். அகிலன், நீங்கள் குழந்தைத்தனமாக எழுதுகிறீர்கள் என்றேன். தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும் நீங்கள் சித்தரிக்கிற மாதிரி ‘வெறுமனே’ தனிமனிதர்களோ அல்லது ‘எழுதமட்டுமே தெரிந்த’ எழுத்தாளர்கள் மட்டுமோ அல்ல. அவர்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தொழிற்சங்கவாதிகள். தமிழ்ச்செல்வன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். ஈழப் போராட்டமும் அது சார்ந்த வரலாறும் எழுத்துக்களும் நிகழ்கால அரசியலின் பகுதியாக இருப்பவை. தமிழக அளவில் அதனை அரசியல் நீக்கம் செய்துவிட்டு நீங்கள் காட்ட நினைப்பது அறிவுப் பாசாங்குத்தனம் என்பதை உங்களது அந்தராத்மா என ஒன்று இருந்தால் அது உங்களுக்குச் சொல்லும்…

பங்காளன் அல்ல; பங்கேற்பாளன்

அகிலனது கட்டுரையினுள் மீதம் விரவியிருக்கும் நக்கல், நையாண்டிகளை நான் உதாசீனப்படுத்திவிட்டு மேற்செல்கிறேன். எனது அனுபவத்தில் இவைகளை எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்த எனது தேர்வு அது. அதுபோலவே யோ.கர்ணனுக்கும், கருணாகரனுக்கும், நிலாந்தனுக்கும் ‘பதிலியாக இருந்து’ அகிலன் பேசுகிற விஷயங்களும் நான் விரும்புகிற உரையாடலுக்குப் பயனற்றது என்பதால் அதனையும் கடந்துசெல்கிறேன். அவரவர் தமது சொந்தக்குரலில் பேசும்போது அதற்குத்தகப் பேசுவதுதான் உரையாடலின் அறப்பண்பு என கருதுவதால் இம்முறையை நான் கடைப்பிடிக்கிறேன்.

கட்டுரையை அகிலன் நிதானமாகப் படித்திருக்கவில்லை என்றேன். அவசரத்தில் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் என்று சொல்கிறேன். கட்டுரை எதைப் பேசுகிறது? ஈழ வரலாற்றுப் போக்கில் யோ.கர்ணன் கதைகளின் முக்கியத்துவத்தை அது உறுதி செய்கிறது. விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வரலாறு எழுதுதலுக்கு மாற்றாக அவர்களால் சொல்லப்படாத ஈழவரலாற்றின் பக்கங்களைச் சொல்லியிருக்கிறது என்பதை உறுதிசெய்கிறது. தமிழக மார்க்சிஸ்ட் கட்சியினரும் புகலிட மாற்றுக் கருத்தாளர்களும் கோரிக்கொள்கிற மாதிரி யோ.கர்ணன் கதைகள் ஈழநிலைமை குறித்த முற்றுண்மை அல்ல, உண்மையின் ஒரு பகுதியே எனக் கட்டுரை வலியுறுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், புகலிட மாற்றுக் கருத்தாளர்களும் யோ.கர்ணன் கதைகளை தமது இருண்மைப் பிரச்சாரத்திற்குப் பாவித்தது யோ.கர்ணன் கதைகளுக்கு நேர்ந்த துரதிருஷ்டம் என்கிறது கட்டுரை. எங்கேயுமே நான் யோ.கர்ணன் கதைகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மறுக்கவில்லை.

யோ.கர்ணன் கதைகளில் அது குறித்த கருணாகரன், நிலாந்தன் மற்றும் அகிலனது மதிப்பீட்டில் எனக்குள்ள பிரச்சினை என்ன? யோ.கர்ணன் கதைகள் ஈழத்து மெய்மை என்று இவர்கள் சொல்கிறார்கள். மெய்மையை இரு வகைகளில் அணுகவேண்டும் என நான் சொல்கிறேன். முதலாவதாக, ஒற்றை மெய்மை என்றோ ஏகத்துவ மெய்மை என்றோ ஒன்று இல்லை என்கிறேன் நான். இரண்டாவதாக, மெய்மைக்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்கிறேன். யோ.கர்ணன் கதைகளில் வெளிப்படும் மெய்மை ஈழ மெய்மையின் பகுதி மெய்மைதான் என்கிறேன் நான். யுத்தக் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட போராளிகள் குறித்த மெய்மை யோ.கர்ணன் கதைகளில் இல்லை. பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்ட்டுக் கொல்லப்பட்ட பெண் போராளிகள் குறித்த மெய்மை யோ. கர்ணன் கதைகளில் இல்லை. இலங்கை அரசினால் மருந்துகள் தராது, பட்டினிபோட்டுக் கொல்லப்பட்ட 40,000 வெகு மக்கள் குறித்த மெய்மை யோ.கர்ணன் கதைகளில் இல்லை என்கிறேன் நான். இந்த மெய்மை குறித்து யோ.கர்ணன் கதைகளைத் தூக்கிப் பிடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புகலிட மாற்றுக்கருத்தாளர்களும் பேசவில்லை என்கிறேன் நான்.

துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் கதை வெறும் அதிர்ச்சி மதிப்புக்காக எழுதப்பட்ட மெய்மைக்கான எந்த ஆதாரமும் கொண்டிராத கதை என்கிறேன் நான். இது யோ.கர்ணனைத் தமிழகத்தில் பிரபலப்படுத்திய மிகமுக்கியமான கதை. யோ.கர்ணன் கதையில் பிரபாகரன் அகதியாக அவுஸ்திரேலியா போகிறார். துவாரகா இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகிறார். புதல்வன் சிறுவன் என்பதால் விடுவிக்கப்படுகிறான். இது யோ.கர்ணனின் வரலாற்று அபத்தம் என்கிறேன் நான். இது முற்றிலும் அபத்தக் கற்பனை என்கிறேன் நான். பிரபாகரனது குடும்பத்தினரது மரணம் குறித்த வேறுபட்ட சாத்தியங்களையும், வேறுபட்ட மெய்மைகளையும் ஆதாரங்களாக நான் முன்வைக்கிறேன். மெய்மை குறித்துக் ‘குத்துமதிப்பாக’ப் பேசாமல், யோ.கர்ணன் கதைகளின் மெய்மை குறித்த உங்களது கோரல் ‘பம்மாத்து’ என்று சொல்கிறேன். அகிலனின் எனக்கான பதில் கட்டுரையில் தேடித்தேடிப் பார்க்கிறேன். இது குறித்து ஒரு சொல்லையும் காணோம். பொத்தாம் பொதுவாக மெய்மையைப்பற்றி எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் அகிலன். தான் பதிப்பித்த இரு தொகுப்புக்களில் இல்லாத கதையின் மெய்மைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும் எனச் சாதுரியமாகக் கேட்கும் அகிலன், மறுபடியும் பொத்தாம் பொதுவாக யோ.கர்ணன் கதைகளின் மெய்மை குறித்து வலியுறுத்தத் துவங்கிவிடுகிறார். மெய்மையைக் கற்பனைகளில் அல்ல ஆதாரங்களில் முன்வைக்க அகிலன் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

‘புலியெதிர்ப்பு இலக்கியம் என்பது விற்றுத் தீர்கிறது. பெரிய தொழிற்சாலை. கோடியில் புரளும் வர்த்தகம் என்கிற ரீதியில்’ நான் எழுதியிருப்பதாக வருத்தமுற்று நிரம்பவும் ஆவேசப்பட்டு எழுதியிருக்கிறார் அகிலன். நான் எழுதியது இவ்வாறு : ‘இன்று புலி எதிர்ப்பு என்பது ஒரு மிகப்பெரும் இதழியல், இலக்கியத் தொழிற்சாலையாக இருக்கிறது. தமிழக-இந்திய-சர்வதேச ஊடகப் பரப்பில் புலியெதிர்ப்பு என்பது மிகப்பெரும் வியாபாரமாக இருக்கிறது‘. வியாபாரம் என்பதனை வெறுமனே பொருள்சார்ந்த அர்த்தத்தில் மட்டுமே புரிந்து கொள்வதால் வரும் ஆவேசம் அகிலனுடையது. பொருளாதார ரீதியில் பதிப்பாளனாக அவரது ஆவேசத்திற்கு நியாயமும் இருக்கிறது. நான் எழுதியது பொருளதார சந்தை எனும் அர்த்தத்தில் மட்டும் இல்லை. உலகெங்கிலும் இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான எழுத்து, விடுதலை இயக்கங்களின் இருண்மை குறித்த எழுத்து என்பது இதழியல்-இலக்கியத் தொழிற்சாலையாகத்தான் இருக்கிறது. இது கருத்தியல் மேலாண்மைக்கான உற்பத்தித் தொழிற்சாலை. இன்று இவ்வகை எழுத்துக்களுக்கு கருத்தியல் சந்தை மதிப்பும் விற்பனை மதிப்பும் இருக்கிறது. இதைப்போலத்தான் தமிழக-இந்தியச் சூழலில் கருத்தியல் மேலாண்மைக்கான தொழிற்சாலையாகத்தான் தமிழக-இந்திய ஊடகங்கள் செயல்படுகின்றன. இன்று விடுதலைப் புலிகள் குறித்தும், ஈழ விடுதலையின் இருண்மை குறித்து எழுதுவதற்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்கவே செய்கிறது. இது குறித்த எழுத்துக்களைப் பதிப்பிப்பதில் இன்று இந்திய-இலங்கை ஊடகங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதனை அவை இரு கைகூப்பி வரவேற்கும். ஏனெனில் அவர்களைப் பொறுத்து அனைத்துப் போராட்டங்களுமே பயங்கரவாதம்தான். இது வெறுமனே பொருளாதார ரீதியிலாக மட்டும் மதிப்பிடக்கூடியதல்ல, மாறாக அரசியல் ரீதியிலும் மதிப்பிடக்கூடியதாகும்.

பிறிதொரு பிரச்சினை சே குவேராவுக்கும் சிங்கள-தமிழ் ஆயுத விடுதலை இயக்கங்களுக்கும் உள்ள உறவு தொடர்பான எனது அவதானம் குறித்த அகிலனது புரிதல். அகிலன், எதனையும் நீங்கள் அதனது ஆரம்பநிலைப்பட்ட அடிப்படையில்தான் புரிந்துகொள்வீர்களா? இலங்கை நிலைமையில் ராஜபக்சேவுக்கும் சே குவேராவுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவரை இதற்குள் கொண்டு வந்து குழப்பிக் கொள்கிறீர்கள்? ரோகண விஜேவீராவின் ஜேவிபி சேகுவேரா இயக்கம் எனவே அழைக்கப்பட்டது. தமிழ் ஆயுதப் போராட்டத் தலைமைகள் அனைத்தும் சே குவேரா குறித்து நூல்கள் வெளியிட்டன. தமது இதழ்களில் சே குவேரா குறித்துக் கட்டுரைகளை வெளியிட்டன. சே குவேராவின் சோசலிச மனிதன் குறித்த கட்டுரையை வாசியுங்கள். நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்குப் புரியவரும். நான் தமிழ்த் தலைமைகள் என்று சொல்கிறேனேயல்லாது விடுதலைப் புலிகள் என்றோ, பிரபாகரன் என்றோ தனித்துக் குறிப்பிடவேயில்லை. அகிலன், எதற்கும் எதிர்வினை செய்வதற்கு முன்னால் தயவுசெய்து பிரதியை நிதானமாக வாசிக்கப் பழகுங்கள். பிற்பாடு எழுதத் துவங்குங்கள்.

'யமுனா ராஜேந்திரனை குறை சொல்வது ஒரு புறமிருக்க அவரை எதையாவது எழுதிக் கொடுங்கள் சன்மானம் தருகிறோம் என ஆசை காட்டி, அவரை சன்மானத்திற்காக எதையாவது எழுத வைக்கும் இணைய வியாபாரிகள் ஊடகங்களில் அவதூறையும் அசிங்கத்தையுமே வாரி வழங்கும் ஈழப் பிழைப்பாளர்களின் நடவடிக்கைகளே முதலில் கண்டிக்கப் பட வேண்டும். 30 வருடங்களாக கட்டியமைக்கப்பட்ட பிம்பங்களில் தாம் குளிர் காய்வதை (புலத்தில் மிக costlyயான விஷயம்) தொடர்ந்து பிழைப்பு நடத்துவதை கர்ணன் சிதிலமாக்கி விடுவாரோ என்ற பயத்தில் அலறுகிறார்கள். அவர் கதைகளில் குறை கண்டுபிடிப்பதுடன் நின்று விடாமல் வழக்கமாக அவர்கள் செய்யும் அரசாங்கத்தின் ஆள் பிரச்சாரத்தையும் தமது இணையங்களிலும் பத்திரிகைகளிலும் முடுக்கி விடுகிறார்கள். ’துவாரகாவின் தந்தை பிரபாகரன்’ என்ற கதையை விட அதன் தலைப்பே அவர்களை இன்னும் பைத்தியம் மித மிஞ்சி அலற வைக்கிறது. கர்ணன் மீது எப்படியும் வஞ்சம் தீர்க்க முனையும் வெறி அவர்களுடைய 30 வருடப் பிழைப்பு முறை தொடர்பானது. முள்ளிவாய்க்காலின் எதிர்பாராத சடுதியான முடிவு இவர்களின் பிழைப்பில் ஏற்படுத்திய திடீர் தாக்கத்தை சரி செய்வதற்கான மாற்று வழிகளை காண முடியாமல் மூச்சுத் திணறுவதன் வெளிப்பாடாக வருமானத்தை தொடர்ந்து நிலை நிறுத்த பெரும் கம்பனிகள் பின்பற்றும் உத்தியையே இவர்களும் கையாள்கிறார்கள். ஒரு சிறு தொகையை யமுனாவுக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் அவர்கள் கிள்ளித் தெளிப்பதன் மூலம் இது சாத்தியப்படுமா என மூளையைக் கசக்குகிறார்கள்“.

இதை எழுதியவர் இன்றும் எனது ‘நம்பிக்கைக்குரிய’ நண்பராக ‘நான்’ கருதிக்கொண்டிருப்பவர். இந்தப் பின்னூட்டம் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது எனக்குக் கோபமோ ஆத்திரமோ வரவில்லை. சுய ஆற்றாமையே என்னைச் சூழ்ந்தது. எனது நண்பரிடமிருந்து இதனை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னைச் சுற்றிய உலகம் சுக்கல் சுக்கலாகிச் சரிவது போல இருந்தது. அதன் காரணங்களை அவர் அறிவார் என்பதால் அதனை இங்கு எனது விவாதத்தின் அங்கமாக நான் கருதவில்லை.

அகிலன், இந்தப் பின்னூட்டம் இப்போது பொங்குதமிழில் நீங்கள் எனக்குப் பதிலாக எழுதிய கட்டுரைக்கான பின்னூட்டம். உங்களது கட்டுரையை யோ.கர்ணன் தனது முகப்புத்தகத்தில் மறுபிரசுரம் செய்தபோது அவர் அனுமதித்த பின்னூட்டம் இது. இந்தப் பின்னூட்டம் குறித்து நீங்களும், யோ.கர்ணனுக்காக அவரது கதைகளின் மெய்மைக்காக அது முன்வைக்கும் மதிப்பீடுகளுக்காக வாதிடும் நீங்கள் அனைவருமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இதே பொங்குதமிழில் நீங்கள் இப்போது எழுதியிருக்கிறீர்கள். யோ.கர்ணன் எழுதியிருக்கிறார். கருணாகரன் எழுதியிருக்கிறார். நிலாந்தன் எழுதியிருக்கிறார். உங்களது நண்பர் யோ.கர்ணனின் கருத்து ஒப்புதலின்படி இந்தக் கருத்து குறித்த ‘மெய்மையை’ நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் அனைவரும் பொங்குதமிழ் ‘கிள்ளிப்போட்ட தொகைக்காகத்தான்’ எழுதினீர்களா? அல்லது பொங்குதமிழ் ‘கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து’ உங்களது கட்டுரையையும் யோ.கர்ணனதும் பிற இருவரதும் கட்டுரையை வெளியிட்டதா? மனசாட்சியுடன் நீங்கள் அனைவருமே பதில் சொல்ல வேண்டிய கேள்வி இது.

யோ.கர்ணன், கருணாகரன் போலவே அரசு சார்பாளர்களை நோக்கி நகரத் துவங்கிவிட்டார் என நான் எழுதுவது ஒரு அரசியல் மதிப்பீடு. இலங்கை அரசில் அமைச்சர்களாக இருக்கிறவர்களுடன் தொடர்பு கொண்ட, அவர்களுக்காக வெளிப்படையாகச் செயல்டுபவர்கள்தான் புகலிட நாடுகளில் கருணாகரனதும் யோ.கர்ணனதும் எழுத்துக்களை ‘ஈழத்தின் இன்றைய முற்றுண்மை’ என உயர்த்திப் பிடிப்பவர்கள். முள்ளிவாய்க்காலுக்கு முன்புவரை இலங்கை ஜனநாயகத்திற்கெனவே அமைப்பைக் கொண்டிருந்து, முள்ளிவாய்க்கால் முடிவுடன் இலங்கையில் ஜனநாயகம் வந்துவிட்டது எனச் சொல்பவர்கள் இவர்கள்தான். கடந்த முப்பதாண்டுகளாக ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை மறுத்துவந்தவர்கள்தான் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். அதனது எழுத்துப் பிரதிநிதிகள்தான் ஆதவன் தீட்சண்யாவும் தமிழ்ச்செல்வனும். சிங்கள இனவாதிகளான ஜேவியின் நண்பர்கள் இவர்கள். இடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக்கு அவர்களை அனுமதிக்க மறுத்தவர்கள், இப்போது தமது இளைஞர் அமைப்பு மாநாட்டில் அவர்களைக் கலந்துகொள்ளச் செய்திருக்கிறார்கள். இவை எனது மதிப்பீடுகளுக்கான நடைமுறை அரசியல் ஆதாரங்கள். இவை எனது அரசியல் மதிப்பீடுகள். இதனை நீங்கள் மறுப்பதானால் எதிர் ஆதாரங்களை முன்வைத்து அது அப்படி இல்லை என மறுக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு யோ. கர்ணன் இதனை எப்படி அணுகுகிறார் : ‘இதற்கு எள்ளலாகவும் பதில் சொல்ல மாட்டேன்; அறிவார்ந்தும் பதில் சொல்ல மாட்டேன்; மூன்றாவது வழியில் பதில் சொல்வேன்’ எனும் பின்னூட்டத்தைத் தனது முகப்புத்தகத்தில் அனுமதிக்கிறார். அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிராகப் போராடுவதாகவும், மெய்மைக்கும் மனிதஉரிமைக்கும் போராடுவதாகவும் நீங்கள் அனைவருமே கோரிக்கொள்கிறீர்கள். மேலே குறிப்பிட்ட யோ.கர்ணனது முகப்புத்தகத்திலுள்ள இந்த இரு பின்னூட்டங்களும் அவதூறு மற்றும் அச்சுறுத்தல் அல்லாமல் வேறென்ன?

இறுதியாக, அனுமானங்களை மறுத்து தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டேயிருப்பது சோர்வாக இருக்கிறது. யோ.கர்ணன் போலவோ அல்லது அகிலன் தன்னைக் கோரிக் கொள்வது போலவோ நான் எந்த ஈழவிடுதலை இயக்கத்தினுள்ளும் இருக்கவில்லை. அதனது உறுப்பாகவும் இருக்கவில்லை. நான் நம்பிய அரசியலில் இருந்து சார்புநிலைகளையே நான் எடுத்திருக்கிறேன். எழுதுபவன் எனும் அளவில் என்னைக் குறித்து நான் சொல்பவற்றுக்கு எனது எழுத்துக்களே ஆதாரம். அகிலன், யோ.கர்ணன், நிலாந்தன். கருணாகரன் குறித்து நான் முன்வைக்கும் கேள்விகளுக்கு ஆதாரமும் அவர்களது எழுத்துக்கள்தான். நான் பிரதி ஆதாரத்தை முன்வைத்து எழுதுகிறேனேயல்லாது அனுமானங்களை முன்வைத்து அல்ல. நான் ஒரு போதும் இயக்கப் பிரச்சார நோக்கில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அல்லது எதிராக என இருதுருவ நிலைபாட்டிலிருந்து எழுதியது இல்லை. உலக விடுதலைப் போராட்ட அனுபவங்களின் பின்னணியில் இருந்துதான் நான் ஈழ விடுதலைப் போராட்டப் பிரச்சினைகளை அணுகிவருகிறேன்.

சிலருக்கு தமது அனுமானங்களின் அடிப்படையில் எனக்கு முத்திரை குத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஐபிசி, நிருபம், குளோபல் தமிழ் நியூஸ் என வேறுபட்ட தளங்களில் நான் ஊதியத்திற்கென வேலை செய்தாலும் எனது சுயாதீன நிலைபாட்டிலேயே நான் இருந்து வந்திருக்கிறேன். இந்த மூன்று இடங்களிலும் இதனைச் செய் என எவரும் என்னை நிர்ப்பந்தித்தது இல்லை. அதற்கு நான் அடிபணிந்ததும் இல்லை. அகிலனோ அல்லது என் மீது இயக்க முத்திரை குத்துபவர்களோ எனது எழுத்துக்களில் இருந்து அதற்கான ஆதாரங்களை முன்வையுங்கள் எனத் திரும்பத் திரும்பக் கோரி வருகிறேன். எவராலும் அதனை முன்வைக்க முடிவதில்லை. அதனை எவராலும் முன்வைக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். ஐபிசியில் நான் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரச்சார வேலையைச் செய்து கொண்டிருக்கவில்லை. இந்திய-தமிழக-ஈழ-உலகத் திரைப்படங்கள் குறித்த நிகழ்ச்சிகளை நான் செய்தேன். தமிழக-ஈழக் கலைஞர்களை, ஆளுமைகளை நேர்காணல் செய்தேன். நிருபம், குளோபல் தமிழ் நியூஸ் போன்றவற்றில் எனது நிலைபாட்டிலிருந்து நான் சுயாதீனமாகக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். வேறுபட்ட அரசியல் நம்பிக்கைகள் கொண்ட சிவரஞ்ஜித், நகுலேந்திரன் எனும் கீரன், நடராஜா குருபரன் போன்றோருக்கு இதற்காக நான் நன்றி சொல்ல வேண்டும். விடுதலைப் புலிகள் இருந்த வரைக்கும் அவர்கள் குறித்துப் பேசஇயலாமல் இருந்ததற்கான காரணங்களை அகிலன் சொல்லும்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. புலிகள் வீழ்ந்த பின்னால் முழுமையாக எதிர்மறையாகப் பேசுவதனைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறேன் நான். இது சமநிலை பிறழ்ந்த செயல்பாடு என்கிறேன் நான். இதே ஆபத்து இன்றைய நிலை குறித்த உங்களது மௌனத்திலும் இருக்கிறது என்கிறேன் நான்.

இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. மனித உரிமைப் பிரச்சினை இல்லை. இலங்கை சுதந்திர பூமி என உலகுக்கு அறிவிக்கவே நாங்கள் கொழும்பில் எழுத்தாளர் மாநாடு நடத்தி ஊர்வலம் போனோம் என்கிறார் ஒரு எழுத்தாளர். இலங்கை ராணுவம் கைசூப்பும் குழந்தைப் பிள்ளைகள் போன்றது, இலங்கையின் இரண்டு நரகாசுரர்கள் பிரபாகரனும் ரோகண விஜே வீராவும் என்கிறார் பிறிதொரு தமிழ் எழுத்தாளர். இவர்கள் இருவரும் ஆதரித்துப் பங்குபெறும் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவாகக் கையொப்பம் இடுகிறார் அகிலன். இந்த எழுத்தாளர் மாநாட்டை ஆதரிக்கும் இன்னொரு எழுத்தாளர், பசில் ராஜபக்சே அவர்கள் கா.சிவத்தம்பி மரணவீட்டிற்கு வந்தார், அவராலும் புதுவை இரத்தினதுரையை விடுவிக்க முடியவில்லை என்கிறார். இதனை இவர் எழுதுகிற சமகாலத்தில் தமிழ்ச் சிறைக் கைதிகள் சிறையினுள்ளேயே அடித்துக் கொல்லப்படுகிறார்கள். இதுபற்றி இவர் எழுதுவது இல்லை. இவர்களது செயல்பாடுகளை தனிநபர்களின் செயல்பாடுகள் என்று பார்ப்பதா அல்லது நல்லெண்ண வகையிலான அப்பாவிகள் இவர்கள் எனப் பார்ப்பதா? இவர்களது செயல்பாடுகளுக்கு எதுவும் அரசியல் பரிமாணம் இல்லை என்றா அகிலன் கருதுகிறார்? இவர்கள் சந்திக்கும் வெளி யதேச்சையாகவா உருவாகிறது? இதனை நான் சுட்டிக்காட்டினால் யோ. கர்ணனுக்குக் கோபம் வருகிறது. இவர்களைக் கூட்டிவைத்து வசவு மழையில் நனைந்து ஆனந்தக் கும்மியடிக்கிறார் அவர். இதுவெல்லாம் யதேச்சையானது என்று அகிலன் எனக்குச் சொல்கிறாரா?

***

'சேகுவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின் வீடு' கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு விடயம் குறித்து கட்டுரையாசிரியரினால் அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பு இது. பொருத்தம் கருதி தற்போது வெளியிடுகின்றோம் – ஆசிரியர்

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயல்பட்டவர்களுமான கருணாகரன், நிலாந்தன்‘ எனும் வாக்கியம் பொருள்மயக்கத்தைக் கொண்டிருப்பதாக பொங்குதமிழ் ஆசிரியர் குழுவுக்குக் கருத்துக்கள் வருவதாக அவர்கள் அறிவுறுத்தியதையடுத்து பின்வரும் விளக்கத்தை முன்வைக்கிறேன்:

இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கவில்லை என்பது எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கருணாகரன் தனது நேர்முகம் ஒன்றிலும் அதனை ஏலவே தெரிவித்திருக்கிறார். கருணாகரனைப் பொறுத்து அந்த அர்த்தத்தில் நான் அந்தச் சொல்லைப் பாவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக் கழகத்தின் அதிகாரபூர்வ இலக்கிய ஏடாகவே வெளிச்சம் இருந்தது எனக் கருதுகிறேன். அதனது ஆசிரியராக அவர் இருந்தார் என்பதனையே நான் அவ்வாறு குறிப்பிட விரும்பினேன். விடுதலைப் புலிகளின் தேசியத்தை ஏற்காமல் கருணாகரன் வெளிச்சத்திற்கு ஆசிரியராக இருந்திருக்க இயலாது எனும் அடிப்படையிலேயே அந்த வாக்கியம் அமைகிறது.

நிலாந்தனைப் பொறுத்து விடுதலைப் புலிகள் முன்வைத்த தமிழ் தேசியத்தை அவர் ஏற்றிருந்தார் எனும் அளவிலேயே அந்த வாக்கியத்தினுள் அவரை அடையாளப்படுத்தியிருந்தேன். இருவரையும் ‘ஒரே பொதுமைக்குள் கொணர்ந்தது’ பொருள்மயக்கத்திற்கான காரணமாக அமைந்துவிட்டதற்காக எனது வருத்தத்தைப்; பதிவுசெய்கிறேன். சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு எனது நன்றி. 

- யமுனா ராஜேந்திரன்.

9/30/2012 1:44:06 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்