த.அகிலன்
சமீபகாலமாகவே சிற்றிதழ்களையும் இணையதளப் பக்கங்களையும் நிரப்பிவரும் யமுனா ராஜேந்திரன் அண்மையில் வடலி வெளியீடாக வெளியான யோ.கர்ணனின் இரண்டு சிறுகதைத் தொகுதிகள் உள்ளடங்கலான கர்ணனின் கதைகள் குறித்த கட்டுரையில் மெய்யென்பது எதுவெனக் கேட்டிருந்தார். ஒளவையாரில் இருந்து வள்ளுவர் வரைக்கும் மெய்யைப் பற்றி நிறையச் சொல்லியிருந்தாலும் விக்கிபீடியாவில் அவை இல்லாவிட்டால் என்ன செய்வது.....
ஒரு விவாதத்திற்காக வடலி வெளியீட்டினால் வெளியிடப்பட்ட கர்ணனுடைய சிறுகதைத் தொகுதிகளில் இடம்பெறாத கதையொன்றினைக் குறித்த கேள்விகள் ஏன் எம்மிடம் எழுப்பப்படுகின்றன? என்று நான் கேட்கலாம். உதாரணத்திற்கு பொங்குதமிழ் இணையத்தளத்தில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார் என்பதற்காக, யமுனா ராஜேந்திரன் வேறொரு இடத்தில் எழுதிய கட்டுரையைக் குறித்து நான் பொங்குதமிழ் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்ப முடியுமா? அதுஒரு புறம் இருக்க.. ’தேவதைகளின் தீட்டுத்துணி’ புத்தகம் வெளிவந்து பலமாதங்களின் பின் கர்ணன் எழுதிய கதையொன்றில் மெய்யிருக்கிறதா என்பதை கர்ணன் கதை எழுதுவற்கு முன்பாகவே கண்டுபிடித்து நான் எழுதியிருக்கவேண்டும் என்று யமுனா ராஜேந்திரன் எப்படித்தான் எதிர்பார்க்கிறாரோ என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எழுத்தாளனின் கதைகளையெல்லாம் அவர் எழுதுவதற்கு முன்பே படித்துவிடும் வரங்கள் எதுவும் எனக்குச் சித்திக்கவில்லையென்பது துயரம்தான்.
சரி இனி மெய்...
புள்ளி விபரங்கள் குருதி சிந்துகிறதோ இல்லையோ, கதைசொல்லிகள் அவற்றை குருதி சிந்த வைக்கிறார்களோ இல்லையோ - எனக்குத் தெரியாது. ஆனால் புள்ளிவிபரங்களின் தானங்களிலொன்று பேசுவதே காலத்தின் குரலென்று நான் நம்புகிறேன். அப்படிப் பார்த்தால் அம்னஸ்டி அறிக்கை, ஐ.நா அறிக்கை போன்ற பல அமைப்புகளின் அறிக்கைகளின் புள்ளிவிபரங்களின் தானங்களில் ஒன்று கர்ணனுடைய தலையும். மேசைகளில் இருந்து கொண்டு புள்ளி விபரங்களை அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போட்டு, நடந்து முடிந்த ஈழப்போரை எழுத்துக்களாகவும், மிஞ்சி மிஞ்சிப்போனால் காட்சிகளாகவும், வதந்திகளாகவும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் கேள்விச் செவியர்கள் கண்டடையும் மெய்யை விடவும் மேலானதாகவே இருக்கும். மேற்குறித்த புள்ளி விபரங்களின் தானங்கள் ஒன்றினது வாக்குமூலத்தில் வெளிப்படும் மெய், புள்ளி விபரங்களின் தானமாயிருப்பதன் சங்கடமும் வலியும் கேள்வி ஞானத்தால் கண்டடைய முடியாதவையே. ஆகவே அவற்றை யமுனா ராஜேந்திரன் கண்டடையவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
கர்ணனிடம் இருக்கும் மெய் என்பது அவருடைய அனுபவம். உயிரும் சதையுமாய், ரணமும் தழும்புகளுமாய், தூக்கமற்ற இரவுகளையும், வியர்த்து விழிக்கப் பண்ணுகிற கனவுகளையும், அந்தரத்தில் மிதக்கும் ஒரு காலையும் கொண்டிருக்கும் குருதி சிந்திய மெய் நினைவுகளில் என்றைக்கும் பிசுபிசுத்தபடியிருக்கும் சொந்த உடலின் பசிய குருதியின் நெடிலென்பதே கர்ணனிடம் இருக்கும் மெய். யமுனா, இன்றைக்கு நீங்கள் எல்லாரும் பெரிதாக எதிர்த்துக் கிழிப்பதாய் சொல்லிக் கொள்கிற சிங்கள அரசாங்கத்துக்கெதிராக, அதன் இனவாத ஒடுக்குமுறைக்கெதிராக, ஊர் முழுதும் மேய வந்த இராணுவத்துக்கெதிராக சொற்களை மட்டுமல்ல சன்னங்களையும் தொடுத்தவர்களே நாங்கள். அதன் விளைவுகளையும் சுமந்தவர்கள் நாங்களே. விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு மட்டுமல்ல விடுதலைப் புலிகளாகவே இருந்தவர்கள். அதனால்தான் விடுதலைப்புலிகளின் அகவயப்பட்டும் புறவயப்பட்டும் அனுபவங்களைப் பதிவு செய்ய முடிகிறது கர்ணனால். விடுப்புப் பார்த்தவர்கள் எழுதுகின்ற 'உள்ளிருந்த பார்வைகள்' போன்றதல்ல கர்ணன் போன்றவர்களுடைய எழுத்து. மெய்யைப் பேசுவதற்கான தகுதியும், அறமும், தார்ப்பரியமும், கடமையும் கூடக் கர்ணனைப் போன்றவர்களுக்குண்டு. அதைத்தான் அவர் செய்துவருகிறார் என்று நான் நம்புகிறேன். கர்ணனின் கதைகளில் வெளிப்படுவது மெய்தான் என்று இந்த வரியை எழுதிக்கொண்டிருக்கும் போதும் நான் நம்புகிறேன்.
கொஞ்ச காலமாகவே தொப்புள்கொடி உறவுகள் என்று சொல்லிக்கொள்கிற இந்தியத் தமிழர்கள் மேய்ப்பராகும் கனவுகளோடு ஈழத் தமிழர்களைக் குறிவைத்து அலைந்து திரிகிறார்கள். தமிழ்த் தேசியத்தின் பல்வேறு தளங்களிலும் சீமான் முதல் யமுனா ராஜேந்திரன் வரைக்கும் அந்தப் பட்டியல் பெரிது. அதுவும் புலிகளின் ஆயுதப் போராட்டம் அழிந்துவிட்டது என்பது ராஜபக்சவுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ நிறையப் பேருக்கு திண்ணை காலியாகிருச்சு அண்ணன் இடம் நமக்குத்தான் என்கிற மகிழ்ச்சி தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. புலிகள் தம் ஆயுத பலத்தை இழந்ததன் பின்னர் திசைக்கொன்றாய் முளைத்து தமிழர் நலம்காக்கும் இணையத் தளங்களின் எண்ணிக்கையும், தமிழர் அமைப்புக்களுமே அதற்குச் சாட்சி. அவர்களுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கலாம், அதையெல்லாம் ஈழத்தமிழர்களின் தலையிலா கட்டுவது. அதோடு மட்டும் நில்லாமல் என்ன பேச வேண்டும், எப்படிப் பேசவேண்டும், இதைத் தான் பேசவேண்டும் என்று உத்தரவு போடுகிறார்கள். சீமான் எப்படி விடுதலைப்புலிகளின் நிதி ஆதாரங்கள் அனைத்தையும் எனக்கே தரவேண்டும், நான் வாயால வண்டில் தமிழீழத்துக்கு விடுவேன் என்று சொல்கிறாரோ, அதைப் போலவே யமுனா ராஜேந்திரனும் நானும் ஈழப்போராட்டத்தின் பங்காளனே என்று குத்துவிளக்கில் பெயரைப் பொறிக்கும் உபயகாரராய் லைனில் நிக்கிறார். நிண்டதும் பத்தாமல் இலங்கையில் இருந்து கொண்டு வரும் குரல்களை நசுக்க நினைக்கிறார்.
உண்மையில் இலங்கையில் இருப்பவர்களைப் பேசவிடுவதென்பது தங்களது பிழைப்புக்கு ஆபத்தானதென்று யமுனா ராஜேந்திரனுக்குப் பயமிருக்கலாம். இலங்கையின் நிலவியலையும், மக்களின் வாழ்வியலைப் பற்றியும் எதுவும் அறியாது அவர்களைப் பற்றியும் அவர்களது அரசியல் பொருளாதார, வாழ்வியல் அணுகுமுறைகள் குறித்து, வண்டை வண்டையாய் இணையதளப் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அங்கிருந்து எழும் மாறுபட்ட குரல்கள் அச்சத்தையே தரும். மாறாக மேற்குறித்த தொப்புள் கொடிகளிடமிருந்து அங்கீகாரங்கள் வேண்டி நிற்கும் ஓமணக் குட்டிகளாய் நிற்பவர்களின் குரல்களே அவர்களிற்குப் பிடித்தவையாய் இருக்கின்றன. அங்கேயிருந்து கொண்டே யாரேனும் எழுதினால், அதுவும் தங்களுடைய கேள்வி ஞானத்தினால் தாங்கள் கண்டடைந்து வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் பொழிப்புரைகளுக்கு பாதகமாக யாரேனும் எதையாவது சொன்னால், அவர்களால் தாங்கிக் கொள்ளமுடிவதில்லை. அய்யய்யோ அவன் அரசாங்கத்தின் ஆள் என்று அலறுகிறார்கள். அங்கேயிருப்பவர்கள் பேசவும் எழுதவும் வந்தால் இந்தக் கேள்விஞானிகள் கணிணிக்கு முன்னால் குந்தியிருந்து அடுத்தது என்ன? தமிழீழத்துக்கான புதிய பாதை. முப்பத்து வருடம் கழித்து புதியதோர் உலகத்துக்கு விமர்சனம் என்று நாடுநாடாகப் பறந்து பிழைக்க முடியாதே! என்ன செய்வது அவரவருக்கு அவரவர் பிரச்சினை.
உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 'சேகுவேரா இருந்த வீடு' சிறுகதைத் தொகுதி யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டபோது ஒரு மூத்த எழுத்தாளரை வழிமறித்து இராணுவத்தினர் புத்தகத்தை பறித்துச் சென்றிருக்கின்றனர். கூட்டத்தின் இடையிலும், கூட்டம் முடிந்த பின்னரும் கர்ணன் விசாரிக்கப்பட்டார். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை கர்ணன் மீது வைக்கப்படுகின்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவது, அரசு ஆதரவு அணியில் சேர்வது என்று இதைத்தான் குறிப்பிடுகிறீர்களா என்று எனக்கொரு சந்தேகம். இத்தகைய சவால்களையும் எதிர்கொண்டுதான் ஒருவர் இலங்கையிலிருந்து எழுதவேண்டியிருக்கிறது. இதனைப் பெரிதாக விளம்பரப்படுத்தி தமிழ்த்தேசியத்தின் தியாகச் சொருபமாக கர்ணனை மாற்றும் மார்க்கெட்டிங் எமக்கு வாய்க்காததால் கர்ணன் தமிழ்த்தேசிய விரோதியாகவே வாழ்ந்து தொலைக்கவேண்டியிருக்கிறது.

தவிர புலியெதிர்ப்பிலக்கியம் என்பது விற்றுத் தீர்கிறது, பெரிய தொழிற்சாலை, கோடிகள் புரளும் வர்த்தகம் என்கிற ரீதியில் எழுதுகிறீர்களே யமுனா, உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியேல்லயா? 'மாண்ட வீரர் கனவு பலிக்கும். மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்' எண்டு போட்டாத்தான் இண்டைக்கு தமிழ்ச் சூழலில் கொத்துரொட்டியே விற்கமுடியும் (கனடா வந்தனீங்க தானே). நிலைமை அப்படியிருக்க புலியெதிர்ப்பிற்கு வியாபாரம் கோடிகளில் என்று மஞ்சளும் சிவப்புமாய் புழுகுகிறீர்களே இது அடுக்குமா? உண்மையில் புலியெதிர்ப்பாளர்கள் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு பாதியாகக் குறைந்து விட்டார்கள். அவர்களில் கொஞ்சப்பேர் உங்களைப்போல வரலாற்றை சமநிலையுடன் பழகப் போய் விட்டார்கள். மிச்சப் பேர் அண்ணையின்ர கதிரையைக் குறிவைச்சு புலிக்காவடி எடுக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதே உண்மை. இன்னும் கொஞ்சப் பேர் புத்திசாலிகள், இவ்வளவு நாளும் மாற்றுக் கருத்தாளர்களாக அடையாளம் காட்டிக்கொண்டிருந்துவிட்டு இப்ப சேம்சைட் கோல் போட்டு, நீங்க என்ன செய்தீர்கள் என்று அவர்களையே கேட்கிறார்கள். கேள்வி கேட்கிற இடத்தில் இருப்பதுதான் எப்பவும் பாதுகாப்பானது என்றறிந்த அறிஞர்கள். இன்னும் கொஞ்சப்பேர் 2009ம் ஆண்டு வரையிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கொழும்பெல்லாம் போய் வந்து அமைச்சர்மாரோட கைலாகு கொடுத்துக் கொண்டு, அரச தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்துக் கொண்டு திரிஞ்ச புத்திசீவிகள், திடீரென்று என்ன மாயமோ மந்திரமோ அரசாங்கத்தின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்று விட்டார்கள்.
உங்களை வரலாற்றை சமநிலையுடன் பயில நினைப்பவன் என்கிறீர்கள். எனக்கு உங்களிடம் ஒரு கேள்வியொன்றுண்டு யமுனா. பயில நினைப்பதோடு சரியா அல்லது அதை நடைமுறைப்படுத்துவதும் உண்டா? அப்படி நடைமுறைப்படுத்துவதென்றால் எப்போதிருந்து அதைத் தொடங்கினீர்கள்? நினைப்பதோடு நிறுத்திக் கொள்கிறீர்கள் என்றால் அதையாவது எப்போதிருந்து தொடங்கினீர்கள். சமீபத்தில்தானா? சமீபம் என்றால் நீங்கள் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் பணியாற்றிய ஐ.பி.சி நிறுவனத்திலிருந்து விலகிய பிறகா? அப்படியென்றாலும் உங்களுடைய பிரச்சினை என்னால் விளங்கிக் கொள்ளக்கூடியதுதான். நாங்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும்போது வெளிப்படையாக எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. அதற்கான காரணங்கள் வெளிப்படையானவையே. அதே மாதிரியான ஏதாவதொரு காரணம் உங்களுக்கும் இருக்கக் கூடும்தான். சரி பரவாயில்லை.
உங்களுடைய கட்டுரையின் ஆரம்பத்தில் 'சேகுவேராவின் ஆன்மாவை தமிழ் சிங்கள தலைமைகள் தீண்டக்கூட முடியாது' என்ற வாக்கியத்தினூடு பூடகமாக நீங்கள் சொல்லவருவது எதை? ராஜபக்சேவாக இருந்தாலும் சரி பிரபாகரனாக இருந்தாலும் சரி சேகுவேராவுக்கு கிட்டவாக வரமுடியாது என்பதுதானே? பிரபாகரனை கர்ணனை விடவும் அதிகமாக விமர்சிக்கிறவராக நீங்கள் இருக்கிறீர்களே? இது வரலாற்றை சமநிலையுடன் பழகத் தொடங்கிய ஐ.பி.சிக்கு பிந்தியகாலத்தைய விமர்சனம் தானா? மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் அரச ஆதரவாளர்கள் என்ற ஒரே கூட்டுக்குள் அடைத்துக்கொள்கிற நீங்கள், விடுதலைப்புலிகளைப் பார்த்து 'ம்' என்கிறவர்களைக் கூட கூட்டுக்குள் போட்டு, கூட்டில் இடநெருக்கடி மிகுந்து கிடக்கிறது. இதில் நீங்கள் வேறு பிரபாகரனை இவ்வளவு காட்டமாக விமர்சிக்கிறீர்கள். நீங்களாகவே கூட்டைத் திறந்து உள்ளே வருகிறீர்களா?
உங்களுக்கும் புலிகள் மீது சில விமர்சனங்கள் இருப்பதாக, அல்லது வைக்கப்படும் விமர்சனங்களில் உடன்பாடிருப்பதாக, கட்டுரை வாசிக்கிறவனாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படியானால் உங்களுக்கிருக்கிற கருத்துக்களுக்கு என்ன பெயர்? அதற்குப் பெயர் மாற்றுக் கருத்தென்றால், நீங்கள் அரச ஆதரவாளரா? இப்படியிருக்க, நீங்கள் கர்ணன் குறித்து வைக்கின்ற விமர்சனம் எப்படியிருக்கின்றதெனில், 'புலிகள் மீது எனக்கும் விமர்சனம் உண்டு. ஆனாலும் யோ.கர்ணன் புலிகளை விமர்சிக்க முடியாது.' ஏன் முடியாது? 'ஆதவன் தீட்சண்யாவும், தமிழ்ச்செல்வனும் யோ.கர்ணனை வாசித்திருக்கின்றனர். அவர்களோடு எனக்கு பரம்பரைப் பகை. அதனால் யோ.கர்ணன் தமிழர்களின் எதிரி.' இப்படித்தான் உங்கள் கட்டுரையை விளங்கிக் கொள்ள முடிகிறது யமுனா. நீங்கள் விமர்சிக்கலாம், உங்களுக்கு மாற்றுக் கருத்திருக்கலாம். ஆனால் யார் யாருடைய புத்தகத்தையெல்லாம் ஆதவன் தீட்சண்யாவும், தமிழ்ச்செல்வனும் வாசித்திருக்கிறார்களோ அல்லது யார் யாருடைய புத்தகத்திற்கெல்லாம் அவர்கள் விமர்சனம் எழுதியிருக்கிறார்களோ, அந்த எழுத்தாளர்கள் பிரபாகரனையோ அல்லது புலிகளையோ விமர்சிக்க முடியாது. அப்படித்தானா யமுனா ராஜேந்திரன்?
பகுதி உண்மைகள் தொடர்பில் நீங்கள் நிறையக் கவலைப்படுகிறீர்கள். ஏன் கர்ணன் பகுதி உண்மைகளை எழுதுகிறார், மிகுதி உண்மையையும் எழுத வேண்டியதுதானே என்று சர்வசாதாரணமாக கேட்கிறீர்கள். வரலாற்றை சமநிலையுடன் பயில நினைக்கும் நீங்கள், கர்ணன் சொல்லாததாக நீங்கள் சொல்லும் மிகுதி உண்மைகளை (அரச தரப்பு பிழைகளை மட்டும்) பேசுவோரிடம் என்றைக்காவது அவர்கள் சொல்லாமல் விட்ட மிகுதி உண்மைகள் தொடர்பில் கேள்வியெழுப்பியதுண்டா? அல்லது வரலாற்றை சமநிலையுடன் பயில்வதென்பதை நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் பாவித்துக்கொண்டிருக்கிறீர்களா? உண்மையில், கர்ணன் விடுதலைப் புலிகளின் இருண்ட பக்கத்தை மட்டும் பேசுபவரல்ல என்பதை கர்ணனுடைய கதைகள் குறித்த உங்களுடைய வகைப்பாடுகளின் வழியே நிறுவ முடியும். புலிகளின் பெயர்களை வெளிப்படையாகச் சொன்ன மாதிரி, ஏன் தாடிக்காரர்களின் பெயர்களை பகிரங்கமாகச் சொல்லவில்லை? கர்ணன் புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது எப்படி அவர்களின் பெயர்களைச் சொல்ல முடியாதோ, அதே போலத்தான் இப்போதும் அவர் இருப்பது தாடிக்காரர்களின் ஆளுகைப் பகுதிக்குள்.
விடுதலைப்புலிகள் வெளியாட்களான உங்களுக்குத் தான் போராடும் அமைப்பு (புலம் பெயர் தமிழர்களையும் சேர்த்தே சொல்கிறேன்). ஆனால் எங்களுக்கு அவர்கள்தான் அரசு. அதாவது அதிகார மையம். தமக்கெதிராக எதையும் பேசவிடாத, இயங்கவிடாத ஒரு அரசு. நிதி, நீதி, நிர்வாகம், அரசியல் இப்படி அரசு கொண்டிருக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு, சோலை வரி தொடக்கம் சுங்க வரி வரைக்குமான அத்தனை வரிகளையும் எங்களிடமிருந்து வசூலித்த அரசு அது. இன்னும் சொல்லப் போனால், அரைமணிநேரம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் நேர வித்தியாசம் கூட இருந்தது. உண்மையில் எல்லா மக்களையும் விட அதிகச் சுமையுடைய மக்களாய் நாமிருந்தோம். இரண்டு அரசுகளுக்கு நாங்கள் வரி செலுத்திக் கொண்டிருந்தோம். ஒரு அரசுக்கெதிராய் விடுதலைப்புலிகளோடு நின்று தீர்க்கமாய் போராடியிருக்கிறோம். அதே சமயத்தில் அவர்களுடைய அதிகாரபோதையின் ஆட்டங்களை தேசத்தின் பெயரால் சகித்திருக்கிறோம். களத்தில் குருதி சிந்தியிருக்கிறோம். மரணம் துரத்தத் துரத்த ஓடியிருக்கிறோம்.
எங்களிடம் யாராலும் புறந்தள்ள முடியாத கடந்த காலம் ஒன்றுண்டு. அந்தக் கடந்தகாலத்தின் அனுபவங்களை எங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்த பொழுதில் வெளிக்கொண்டு வருகிறோம். எல்லா உண்மைகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு, வன்னிக்கு வெளியில் நின்று, உங்களைப் போன்றவர்கள் சனங்களுக்குச் சொன்ன 'பகுதி உண்மை'களைப் போலல்ல எங்களிடமிருந்து வரும் 'பகுதி உண்மைகள்'. ஒரு காலத்தில் நீங்கள் சொல்லி வந்த பகுதி உண்மைகளே முழுமையானவை என்று நாங்கள் தீவிரமாக நம்பிக்கொண்டுமிருந்தோம். ஆனால் வரலாறு ஒரு மாயக்கண்ணாடியல்ல, வனப்பும் எழிலுமாய் சூனியக்காரர்களை எந்நேரமும் பிரதிபலிப்பதற்கு. எங்களிடமிருக்கும் மெய்யை வரலாற்றின் கண்ணாடியில் பிரதிபலிப்பதற்காக எங்களுடைய குருதியே சிந்தப்பட்டிருக்கிறது. நாங்களே அதற்காய் விலைகொடுத்தோம்.
எங்களை ஆண்ட அதிகாரத்திற்கெதிராகவே அல்லது அதைக்குறித்த விமர்சனமாய் வருகிற எள்ளலே கர்ணனிடமிருப்பது. நீங்கள் சொல்வது போல அது பேரினவாதத்தின் பக்கமிருந்து அதிகாரத்திலிருந்து வீழ்ந்தவரை நோக்கிச் செய்யப்படுகின்ற எள்ளலல்ல. இயலாமையின், ஏமாற்றத்தின், வீணாகச் சிந்தப்பட்ட அல்லது சிந்த வைக்கப்பட்ட குருதியின், இழந்துபோன கடந்த காலத்தின் மீது வைக்கப்படுகின்ற எள்ளல். நீங்கள் சொல்வது போன்ற அதிகாரம் மீதான எள்ளலல்ல. கர்ணனிடமிருந்திருப்பின் அவர் இரண்டாவது தலைவர் கதையையோ, ஆதிரையின் நாற்பது ஆமிக்காரர்களும் கதையையோ எழுதியிருக்கவே மாட்டார். உங்கள் கேள்விஞானத்தால் கண்டடைய முடியாதவற்றை எதிர்த் தரப்பிற்குத் தள்ளிவிட்டு உங்களுடைய நடுநிலை பயிலும் பாத்திரத்திற்குக் குந்தகம் வராத வகையில் தப்பிக்க நினைக்கிறீர்கள்.
எந்தக் குற்றவுணர்முமின்றி நீங்கள் கையில் கற்களோடு நிற்கிறீர்கள். எந்த சங்கடமுமின்றி உங்களை நீங்களே நீதிபதியாக நியமித்துக் கொள்கிறீர்கள். இன விடுதலைக்காக உண்டியலில் காசு போடுகிறவர்கள் காசு போடலாம், தோசை சுட்டுக் கொடுக்கிறவர்கள் தோசை சுட்டுக் கொடுக்கலாம். உதிரம் சிந்துகிறவர்கள் உதிரம் சிந்தலாம் என்று வந்தபோது, உண்டியலுக்குக் கிட்டச் சில்லைறைகளோடும். தோசைக்கரண்டியோடும் ஓடிப்போய் முண்டியடித்தபடி நின்ற மிகப்பெரிய கூட்டம், (இதில் நான் சாகசத்தை வேடிக்கை பார்க்கக் காத்திருந்த தொப்புள் கொடிகளைச் சேர்க்கவில்லை) உதிரம் சிந்தியவர்களை எந்தச் கூச்சமும் இன்றி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் தங்கள் குற்றவுணர்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான வழியாகவே இதனைப் பின்பற்றுகிறார்கள் என்பதே உண்மை.
நிலாந்தன் மற்றும் கருணாகரன் குறித்து யமுனா ராஜேந்திரன் வைத்திருக்கின்ற விமர்சனங்களும் அபத்தமானவையே. ஆனால் யமுனா ராஜேந்திரன் வைத்திருக்கிற விமர்சனங்கள் மீதான தத்தமது அபிப்பிராயங்களை சமூக அசைவியக்கத்தில் அக்கறை கொண்டவர்கள் என்ற வகையிலும், தங்களுடைய மௌனத்தின் விலையை ஏற்கனவே கொடுத்தவர்கள் என்ற வகையிலும் நிச்சயமாக நிலாந்தனும் கருணாகரனும் பதிவு செய்யவேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கிறேன்.
யமுனா ராஜேந்திரன், நீங்கள் வாசிப்பினாலும், கேள்விப்பட்டமையினாலும், பார்த்தவைகளினாலும் உங்களுக்கிருக்கின்ற கேள்வி ஞானத்தை வைத்துக்கொண்டு, அனுபவத்திலிருந்து வரும் சொற்களை மறுக்கிறீர்கள். உங்களுடைய கேள்வி ஞானம் தன் உடலோடு குண்டைக் கட்டி வெடிக்க வைக்கிற போராளி ஒருவன், அதற்கு முன்பாக குப்பியைக் கடித்து, பின் குண்டை உடலோடு கட்டி வெடிக்க வைத்தான் என்கிற இன்னுமொரு கேள்விஞானியிடமிருந்து வரும் புழுகு வார்த்தைகளை இருண்மையிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் சத்திய வசனமாகப் பிரகடனம் செய்ய உதவுமேயன்றி, மெய்யான அனுபவத்தின் காயங்களை, அதன் வலியையும் உங்களுடைய கேள்விஞானத்தால் கண்டடைய முடியாது என்பதே மெய்.