Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மாம்பழம் இனிக்குமா?

மாம்பழம் இனிக்குமா?
சுஜி

 

சபா அண்ணை கொழும்பில இருக்கிற மகளிட்டைப் போறதுக்காக நெடுவல் கணபதிப்பிள்ளையிடம் மாம்பழங்களை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். கறுத்தக்கொழும்பான் பழங்கள் ஒரு பதினைஞ்சிருக்கும். விலாட்டிலும் ஒரு பத்திருக்கும். அம்பலவியிலும் பதினைஞ்சிருக்குமா, இருக்கலாம். பிரப்பங் கூடைக்குள் நசிபடாமல் பக்குவமாக பழங்களை வைச்சிருக்கிறார்.

கூடைக்குள்ளே கிடக்கும்போதே வாசம் மூக்கைத்துளைக்குது. அதிலயும் அந்தக்கறுத்தக் கொழும்பான் பழங்களின் வாசத்தை இப்பவும் மறக்க முடியாது. விலாட்டுப்பழங்களின் நிறத்துக்காகவே காசு குடுக்கலாம். ஒரு புள்ளி ஒரு மறுக் கிடையாது. அத்தனையும் சிவப்பும் செம்மஞ்சளும் கலந்த நிறம். அம்பலவியைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. மெல்லிய சுருக்கம் விழுந்தாலும் பழத்துக்குக் குறைவில்லை. ருஸிக்கும் குறையில்லை.

பிள்ளையாரும் முருகனும் ஒரு மாம்பழத்துக்காக அடிபட்டுச் சண்டை பிடித்ததை விட பேசாமல் வந்து சபா அண்ணையிட்ட நாலு பழத்தை வாங்கி வயிறாரச் சாப்பிட்டிருக்கலாம். அவரைவிடத் திறம்பழத்தைத் தெரிஞ்சு எடுக்கிறதுக்கு இந்த உலகத்தில வேறு ஆட்களில்லை.

இந்தக் கோடையில் எப்படித்தான் தேடி இந்தப்பழங்களை வாங்கினாரோ, தெரியாது. பழங்களைப் பார்த்து வாங்கிறதில ஆள் வலு சுழியன். இல்லையெண்டால் இந்தச் சீசனில் இந்த அருந்தலான நிலையுக்குள்ள இப்பிடி முற்றிப்பழுத்த பழங்களை ஆராலும் சாதாரணமாக வாங்கிவிட முடியாது. எல்லாமே நல்ல பழங்கள். பார்க்கவே வாயூற அல்லது நாவூறுப் பண்ணும் பழங்கள்.

இப்ப எங்க தேடினாலும் இப்பிடி நல்ல பழங்களை வாங்கிறது பெருங்கஸ்ரம். எங்க பாத்தாலும் போமலின் அடிச்ச பழங்களைத்தான் திறம் பழங்களெண்டு சொல்லி விக்கிறார்கள். ஒரு வியாபாரியும் தரமற்ற பொருட்களை விக்கிறதேயில்லை. அது என்ன நாசமோ தெரியாது, நாங்கள் வாங்கிக் கொண்டு போனாத்தான் எல்லாம் பழுதாகிப் போகிறது. மீன் நாறுவது கூட அப்படித்தான்.

பொய்யை உண்மையாக்குவதிலேயே ஒரு வியாபாரி வெற்றியடைகிறான் எண்டு ஒரு புத்தகமே எழுதிவிடலாம். பொய்யை உண்மையாக்கும் கலையை எப்படித்தான் இவர்கள் கற்றுக்கொள்கிறார்களோ!

பொய் சொன்னால்தான் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்பது உலக வழமையாகிவிட்டது. அதை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கும் பொதுவாக வளர்ந்து விட்டது. அதன்படி போமலின் போடுவதொன்றும் மகா பாவமில்லை. அதைப் பற்றிப் பேசினாற்தான் பிரச்சினை. அதைப் பற்றி யோசித்தாலும் பிரச்சினை. இதில என்ன வேடிககையெண்டால் போமலின் அடிச்ச பழங்களெல்லாம் ஒரேமாதிரிப் பழுத்திருக்கும்.

முந்தி, ஒரு வாழைக்குலையைப் பார்த்தால் அது மேலையிருந்துதான் பழுக்கும். அதுமட்டுமில்லை, ஒருபோதும் குலையில இருக்கிற முழுப்பழமும் பழுக்காது. ஆனால் இப்ப முழுக்குலையும் அப்படியே மஞ்சள் நிறத்தில ஒரேயடியாக, ஒரே மாதிரிப் பழுத்திருக்கு. கண்ணைக் கூசும் மஞ்சள் நிறத்தில் அத்தனை பழங்களுமிருக்கும். நீங்கள் ஆரும் இந்தக் குலைகளைப்பார்த்தீங்களெண்டால் ஏதோ மஞ்சள் பெயின்ரை அடிச்சுத் தொங்க விட்டிருக்கிறார்கள் என்றே நினைப்பீங்கள்.

மாம்பழம் இனிக்குமா?

அதுமாதிரித்தான் மாம்பழத்தையும் பழுக்க வைக்கிறார்கள். முந்திப் புகை அடிச்ச பழத்தை வாங்கிறதுக்கே எத்தனை விதமாக மூக்கைச் சுழிப்போம். இப்ப போமலின் போட்ட பழத்தையே வேற வழியில்லாமல் வாங்கிக் கொண்டுபோறம். காலம் மாறிப்போச்சுதோ அல்லது சனங்கள்தான் மாறிவிட்டுதுகளோ.

சபா அண்ணை சந்தையில பழங்கள் வாங்கிறதை நல்லாக்குறைச்சுப் போட்டார். காசைக்குடுத்து ஏன் தரமில்லாத பொருளை வாங்கவேணும்? பழங்களுக்கு மருந்தடிக்கக்கூடாதென்று கட்டாயச்சட்டம் இருக்குத்தான். ஆனால் அந்தச்சட்டத்தையும் மீறி எப்பிடியோ போமலினை அடிச்சுப்பழுக்க வைக்கிறார்கள். சட்டத்தில் ஓட்டை போடுறது மனிதனுக்கென்ன பெரிய பிரச்சினையா?

நெடுவல் கணபதிப்பிள்ளையிடம் எப்பவும் நல்ல மாம்பழங்கள் இருக்கும். அவர் ஒருநாளும் புகை அடிச்சுப் பழங்களைப் பழுக்க வைக்க மாட்டார். புகை அடிக்காத ஆள் போமலினையும் போடமாட்டார். அவரிட்டைத்தான் சபா அண்ணை இப்ப இந்தப்பழங்களை வாங்கிக்கொண்டு வாறார். சபா அண்ணையின்ரை வாடிக்கை கணபதிப்பிள்ளை கடைதான்.

நெடுவல் கணபதிப்பிள்ளை மாம்பழத்துக்கென்றே பேர்பெற்ற ஆள். வளவுக்குள்ள நிக்கிற பத்துப்பன்னிரண்டு மரங்களிலும் அந்தாள் எப்பிடியும் வருசத்துக்கு ஒண்டு ஒண்டரை லட்சம் ரூபாவுக்கு உழைச்சுப்போடுவார். இவ்வளவுக்கும் விட்டுக்கும் தேவையான பழங்களை வேண்டிய அளவுக்கு எடுத்துப்போடுவார்.

மற்ற ஆட்களெல்லாம் மாங்காயை மாம்பழ வியாபாரிகளுக்கு மொத்தமாகத் தீர்த்துக் கொடுக்கும்பொழுது நெடுவல் அவ்வளவையும் கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கிப் பழுக்க வைப்பார்.

நெடுவலின்ர கையாள் சிவலைத் தருமுவின்ர வசந்தன். அவன் எந்த உச்சிக் கொப்பில இருக்கிற மாங்காயையும் பிடுங்காமல் விடமாட்டான். தடியில சாக்கைக் கோலிக்கட்டி ஒவ்வொரு காயையும் பக்குவமாக அதுக்குள் பிடுங்கிப் போடுவான். ஒரு காய் நிலத்தில விழாது.

அவனை அணில் எண்டுதான் நெடுவல் கூப்பிடுவார். ஆரும் ஏறமுடியாத உச்சிக் கொப்புகளில் எல்லாம் மிகச்சாதாரணமாக ஏறிவிடுவான். இந்தா முறிஞ்சு விழப்போகுது எண்டு கீழே நிற்கிறவர்கள் பதைபதைச்சுக் கொண்டிருக்க அவன் எந்தக் கவலையுமில்லாமல் அடுத்த கொப்புக்குத் தாவுவான். 

நெடுவலுக்கு அவன் தோதாக வாய்த்தான். அவரும் அவனை நல்லாத்தான் பார்த்தார். இல்லையெண்டால் பதினைஞஞ்சு வருசத்துக்கும் மேலாக அவருக்கு அவன் இப்படித் துணையாக நிற்பானா?

வசந்தனுக்கு முதல் ஜேசுதாஸ் நெடுவலுக்கு உதவியாக நின்றான். அவனும் அவருக்குத் தோதான ஆள்தான். அவன் நெடுவலோடு சேர்ந்து வைச்ச மாமரங்கள் இப்ப நல்லாய்க் காய்க்குது. அதுவும் அவன் வைச்ச விலாட்டு மாமரங்கள் இரண்டு போகம் காய்க்குது. அவன்தான் நெடுவலின் காணியில் நிற்கிற நாலு அம்பலவிகளில் இரண்டை நட்டவன்.

அம்பலவி மூன்று போகம் காய்க்கிற மரம். 'பத்து அம்பலவிக்கண்டு நிண்டால் போதும். பேசாமல் வீட்டை இருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம்' எண்டு இரத்தினசிங்கண்ணை சொல்லுவார்.

அது உண்மைதான். அம்பலவி மூன்று போகமும் காய்த்துக் கொண்டிருக்கும். சிலவேளை அது எத்தினை போகம் காய்க்கிறது என்று தெரியாமலே எப்ப பார்த்தாலும் காயோடுதான் நிற்கும்.

ஆறு அம்பலவி மரங்களை வைச்சுத்தான் மதவடி ரத்தினத்தாற்றை தனபால் வடக்குத் தெருவில் பத்துப்பரப்புக்காணியை வாங்கி வீடு கட்டினவன் எண்டுதான் ஊர் நம்புது. அந்த ஆறு அம்பலவியும் தனபாலுக்காக காயத்துத்தள்ளிக் கொண்டே இருந்தன.

ஏன், நெடுவலின்ர நாலு அம்பலவியும் என்ன குறைவாகவா காய்க்கின்றன? கொப்புத் தெரியாத காயாக போன சீசனுக்கிருந்தது. அவர் அதில பிடுங்கிய பழங்களில் நூறு பழத்துக்கு மேல் சபா அண்ணை மட்டும் வாங்கியிருப்பார்.

நெடுவல் மாம்பழங்களைப் பழுக்கவைக்கிறதில் வலு விண்ணன். பழத்தில் ஒரு சிறு காயம், கண்டல், மறு ஏதமில்லாமல் காயைப்பிடுங்கிறதுக்கு வசந்தன் இருக்கிறான். பிடுங்கும்போது மாங்காய் கீழே நிலத்தில் விழுந்தால் அந்தக்காய் பழுக்கும்போது எப்பிடியும் அழுகினமாதிரியும் வெம்பின மாதிரியும் இருக்கும். அப்பிடியொரு பழத்தை விற்கிறதில அவருக்கு விருப்பமில்ல.

அதுக்காக அவர் ஒரு காயையும் கீழே விழ விடமாட்டார். பிடுங்கிய காய்களை இளவெயிலில் காயவைச்சு பிறகு எடுத்து அதை வைக்கல் அடைஞ்ச பெரிய பெட்டிக்குள்ளே வைச்சு மூடிவிடுவார். இரண்டு அல்லது மூண்டு நாளைக்குப்பிறகு எடுத்தால் பழத்தைப்பற்றிச் சொல்லவா வேணும். வாசமும் ருசியும் வாழ்க்கை முழுதுக்கும் மறக்கேலாமல் இருக்கும். பழத்தைப் பார்க்கவும் சோக்கா இருக்கும். சில காலத்தில வேப்பம் குழை அடைஞ்ச பெட்டிக்குள்ளயும் பழுக்க வைப்பார். வேப்பங்குழைக்குள் பழுக்க வைச்சால் பூச்சி பிடிக்காது.

சில காலத்தில் நெல்லுச்சாக்குக்குள்ளையும் நெடுவல் பழுக்க வைப்பார். குரக்கன் வெட்டிற சீசனில அந்த வைக்கலுக்குள்ளும் வைப்பார். ஆனால் அது குறைவு. மாம்பழம் பழுக்க வைக்கிறதுக்கென்றே தியாகுவிட்டைச் சொல்லி தனியாக நாலு பெட்டி செய்வித்து வைச்சிருக்கிறார் நெடுவல்.

வேறு சில காலத்தில் குரக்கனை அடியில் பரவிவிட்டு அதற்கு மேல் வைக்கலைப் பரப்பி அதற்குள் மாம்பழத்தைப் பழுக்கவும் வைப்பார். இதெல்லாம் அந்தந்தப் போகத்தைப் பொறுத்திருக்கு. எப்பிடியோ நெடுவல் மாம்பழத்தில் ஒரு எக்ஸ்போட்தான்.

சபா அண்ணை அநேகமாக நெடுவலிட்டைத்தான் வாடிக்கையாகப் பழங்களை வாங்குவார். சில சமயம் சோலிக் கந்தசாமியிட்டையும் வாங்கியிருக்கிறார். ஆனால் சோலிக் கந்தசாமி எந்த நேரத்தில என்ன மாதிரி நடப்பான் எண்டு சொல்ல ஏலாது. நம்பி ஒரு பொருளை மறிச்சு வைக்க முடியாது. ஆராவது கொஞ்சம் காசு கூடத்தரலாம் என்றால் மறிச்சு வைச்ச பழத்தையே சொன்ன சொல்லு மாறக்கூடாது, வாக்கைக் காப்பாற்ற வேணும், நாணயமாக நடக்க வேணும்,   நம்பி வருவார்களல்லா, அப்பிடி வரும்போது என்ன பதிலைச் சொல்லுறது எண்டெல்லாம் பார்க்க மாட்டான். அவர்கள் அவனிடம் வரும்போது ஏதாவது பதிலைச் சொல்லிச் சமாளித்து விடுவான். அந்தப் பதில் பொருத்தமோ இல்லையோ நியாயமோ எண்டு அவன் முன்பின் யோசிக்க மாட்டான். அப்பிடி ஒரு பிறவி.

ஆனால் அவன்ர பழமும் தரந்தான். நம்ப வண் என்று சொல்லலாம். அதில் பிழைவிட மாட்டான்.

சபா அண்ணையும் ஊரில இருக்கும்போது மாம்பழத் தோட்டத்துக்குள்ளதான் வளர்ந்தவர். 14 பரப்பு வளவு. பெரிய தோட்டக்கிணறு. பத்து மாமரங்கள். கொய்யா, அன்னமுன்னா, பப்பாசி எண்டு வளவு முழக்க ஏதுவோ பச்சையாகப் பழ மரமாக நிற்கும். சபா அண்ணையின்ரை அப்புவுக்கு பழங்கள் எண்டால் அலாதிப் பிரியம்.

சபா அண்ணை பள்ளிக்கூடத்துக்குப் போகிற காலத்தில சேனாதியற்றை காணிக்குள்ள கள்ள மாங்காய் பிடுங்குவார். முத்தையா அண்ணையின்ர தோட்ட வளவுக்குள்ள நிண்ட சேலம் மாங்காயில் பாதிக்கும் மேல் சபா அண்ணையும் கூடப்படிச்ச பெடியளும்தான் பிடுங்கித்தின்றார்கள். முத்தையா அண்ணை அந்த மரத்தில ஒருக்காலும் முழுக்காயையும் பிடுங்கேல்ல.

சேலம் மாம்பழத்தை விடவும் மாங்காய்தான் நல்ல ருஸி. அதுவும் அந்தக்காயை வெட்டிச் சாப்பிடுறதையும் விட அதைக் குத்தி உடைச்சுச் சாப்பிடுகிறது  இன்னும் படு ருஷியாயிருக்கும்.

சாந்திக்கு அந்த மாங்காயுடன் உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்துச் சாப்பிடுகிறது நல்ல விருப்பம். தேவியக்காவுக்கு விலாட்டு முத்தல்க் காய் பிடிக்கும். செல்லத்துரை அண்ணை வீட்டு புளி மாங்காய்க்கே போட்டிபோட்டுக் கொண்டு அதுக்காகவே அடிபட்டிருக்கிறோம். அது மரந்தாங்க முடியாத அளவுக்கு காய்த்துக் கொட்டும். மா காய்த்தால் மங்குங்காலம். புளி காய்த்தால் பொங்குங்காலம் என்று பூபாலண்ணை சொல்லுவார். பொங்குங்காலமோ மங்குங்காலமோ செல்லத்துரை அண்ணை வீட்டு புளி மா காய்த்துக் கொட்டிக்கொண்டேயிருந்தது.

பள்ளியில் படிக்கிற காலத்திலும் அந்த வயதிலும் யார்தான் கள்ள மாங்காய பிடுங்காமல் பள்ளிக்கூடம் போய்த் திரும்பியிருக்கிறார்கள். கள்ள மாங்காய் பிடுங்கிறதுக்கு பேணாட் பக்கா ஆள். அவனுக்கு எந்த வீட்டில் அல்லது எந்தக் காணியில் என்ன மரம் காய்ச்சிருக்கு எண்டு தெரியும். அவனுக்கு ஒரு அபூர்வ நாக்கும் மூக்கும்.

றீற்றா அக்கா வீட்டை கிளிச்சொண்டன் மரம் நிண்டது. அங்க கடிநாயும் நிண்டது. கடிநாய் கவனம் எண்டு கேற்றில எழுதிய போர்ட் தொங்கும். ஆனால் பேணாட் எப்பிடியோ பத்துப்பன்னிரண்டு கிளிச் சொண்டனோடு வருவான். கடிநாயாவது மண்ணாங்கட்டியாவது, அந்தக் கிளிச்சொண்டனுக்கு முன்னால்.

பள்ளிக்கூடம் விட்டு வாற நேரம் றீற்றா அக்காவின் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு பகல்தூக்கத்தில் இருப்பார்கள். அங்க வேலைக்கு நின்ற தேவராசாவை பேணாட் பழக்கம் பிடிச்சிருந்தான். தேவராசாவை பாதுகாப்பாக வைச்சு பேணாட் காரியத்தைச் சாதித்தான்.

இவ்வளவுக்கும் றீற்றாக்காவின் தாய் கடுங்கோவக்காரி. ஆரும் மாங்காயோ தேங்காயோ பிடுங்கிறதைக்கண்டால் மனுசி துரத்திப் பிடிச்சுப்போடும். ஓடித் தப்பலாம் எண்டு நினைக்க முடியாது. மனுசி ஆறடி வேலியையே தட்டாமல் முட்டாமற் பாயக்கூடிய ஆள். முந்தி இந்த மரத்தில் மாங்காய் பிடுங்கிய முயல் இந்திரனை மடக்கிப் பிடிச்சிருந்தா. முயல் இந்திரன் ஓட்டத்திலும் உயரம் பாய்தலிலும் வருசம் தப்பாமல் செம்பியன் எடுத்தவன். ஆனால் றீற்றா அக்காவின் தாய் பிலோமினா மாமியிடம் மாட்டித் தோற்று விட்டான்.

இராசவெளித் தோட்டத்தில் பாண்டி மாங்காயும் வெள்ளைக் கொழும்பானும் தெருவோரத்தில் காய்த்து நின்றன. கந்தையற்ற மோகன் எந்தக் கோட்டைக்குள்ளும் இறங்கி வேண்டிய காய்களைப் பிடுங்கிக் கொண்டு வரக்கூடிய ஆள். ஆனால் அவனுக்கு ஒரு ஆள் துணை வேணும். துணை இல்லை என்றால் தனியே தோட்டத்துக்குள் இறங்கவே மாட்டான். ஒரு மாங்காயையும் பிடுங்க மாட்டான். துணை இருக்குமாக இருந்தால் ஒரு சாக்கு மாங்காய் வேணுமெண்டாலும் கொண்டு வருவான்.

மாங்காயை பல்லுக் கூசாமல் கடித்துத்தின்னுவதற்கென்று ஒரு வயதிருக்குது. பள்ளிக்காலத்தில் எதைக் கடித்தாலும் கரும்பாகவே இருக்கிறது. அப்போது இரும்பையும் கடித்துத் தின்றுவிடலாம். அதைப்போல எதைப்பிடித்தாலும் இரும்பாகவே இருக்கும். எல்லாமே சுகமாகவும் சுலபமாகவும் இருக்கிறது.

பெரியமாமாவுக்கு மாம்பழத்தோடு பிட்டுச் சாப்பிடுவது பிடிக்கும். மாமிக்கு சாப்பிட்டதுக்குப் பிறகு பழத்தைச் சாப்பிடுவதுதான் பிடிக்கும். மாமாவுக்கும் மாமிக்குமிடையில் பன்னிரண்டு வருசம் இடைவிலகல் வந்ததுக்குக் காரணம் இந்த மாம்பழ விவகாரம்தான் காரணம். அது ஒரு சாட்டு என்று அம்மம்மா சொல்லுவா. மாம்பழம்போல இருந்த மாமியைப் பிரிந்து எப்படித்தான் மாமா அந்தப் பன்னிரண்டு வருசமும் இருந்தார் எண்டு பெரியண்ணா ஒருக்கால் அவரின்ரை நண்பர்களிடம் கேட்டதை நான் விளங்கிக் கொள்ளிறதுக்கு எனக்கு ஆறு வருசம் தேவைப்பட்டது. பிறகு பெரியமச்சாளின் கல்யாணத்தோடுதான் இருவரும் சேர்ந்தார்கள். அன்றிரவு மாமி கூடுதலாக வெட்கப்பட்டிருப்பா.

மாம்பழத்தைச் சீவி அதைப் பீஸ் பீஸாக வெட்டி தேவி வைப்பாள். அவளுக்கு அப்படி வெட்டிச் சாப்பிடுவதே விருப்பம். ஆனால் பழத்தை வெட்டிச் சாப்பிட்டாலென்ன தோலை உரித்துச் சாப்பிட்டாலென்ன குமாருக்கு மாம்பழத்தின் கொட்டையைச் சூப்பிச் சாப்பிடவே ஆசை.

சாந்திக்கும் கமலா அக்காவுக்கும் விலாட் பிடிக்கும். ராணிச் சித்திக்கு பாண்டி மாம்பழம்தான் வேணும். பாலுச்சித்தப்பாவுக்கு செம்பாட்டான் விருப்பம். அம்மாவுக்கு அம்பலவி பிடிக்கும்.

அப்பாவுக்கும் தவராசா அண்ணைக்கும் சூட்டிக்கும் தம்பிக்கும் கறுத்தக் கொழும்பன்தான் விருப்பம். மகிழுக்கு வெள்ளைக் கொழும்பான். இந்திராவுக்கு விலாட்டும் பிடிக்கும் கறுத்தக்கொழும்பானும் பிடிக்கும். தயாளனுக்கும் செல்வனுக்கும் பச்சைதின்னி விருப்பம். எனக்கு எல்லாம் பிடிக்கும். எது கிடைக்குமோ அதைச் சாப்பிட்டிட்டுப் போயிடுவன்.

ஆனால் அப்பிடியிருப்பது பிழை என்று தேவுச்சித்தப்பா சொல்கிறார். மனுசனென்றால் விருப்பங்கள் தெரிவுகள் இருக்கும். அப்பிடியில்லையென்றால் பிறகென்ன வாழ்க்கை என்று அவர் கேட்பார். ஆனால் நான்தான் பரதேசிபோல அலைந்து திரிகிறேனே.

எந்த மாம்பழமென்றாலும் புகை அடிக்காமல் இருக்கோணும். அப்படியென்றால்தான் பழத்தின் சுவையும் வாசமும் தெரியும். இல்லையென்றால் ஏதோ மாம்பழத்தைச் சாப்பிட்டோம் என்று இருக்குமே தவிர பழத்துக்குத்தக்க வேறுபாட்டையும் சுவையையும் தெரியவே முடியாது.

மாம்பழச்சீசனில் மாங்காய் வியாபாரிகளைப் பார்க்க வேணும். மாங்காய் பிடுங்குகிற அந்த நீட்டுத்தடியோடும் சாக்குக் கோணியோடும் அவர்கள் பெட்டிகளைக் கொண்டு வருவார்கள். மாம்பால் படிந்து கறுத்த சாறத்தைக்கட்டிக்கொண்டு அவர்கள் மரங்களில் ஏறியும் இறங்கியும் திரிவார்கள்.

பெட்டி பெட்டியாக மாங்காய்களை ஆய்ந்து வான்களில் எல்லாத்தையும் ஏற்றிக் கொண்டு போவார்கள். அப்படிக் கொண்டு போகிற காய்களை அவர்கள் நெடுவலைப்போல பக்குவமாகப் பழுக்க வைப்பார்களா. அல்லது போமலின்தான் அடிக்காமலிருப்பார்களா.

சபா அண்ணை முந்திக் கொழும்பில இருக்கும்போது பாக்கியம்மாமி அவருக்கு இப்பிடித்தான் நல்ல பழங்களாக வாங்கி அனுப்புவா. அப்ப சாவகச்சேரிச் சந்தையில நல்ல பழங்கள் வரும். வலிகாமத்தில இருந்தும் வடமராட்சியில் இருந்தும்கூட சாவகச்சேரிச் சந்தைக்குத்தான் மாம்பழம், பலாப்பழம் வாங்க ஆட்கள் வருவார்கள். பாக்கியம் மாமியும் தோதாக வசதிப்பட்டால் வருவா. இல்லையெண்டால் சந்தைக்கு வாற ஆட்களிட்டை சொலலிவிட்டு நல்ல பழங்களாக வாங்குவிப்பா. அப்பவெல்லாம் போமலின் அடிக்கிறதேயில்லை.

மாரிப்பழம் கொஞ்சம் இனிப்புக் குறைவுதான். ஆனால் கோடைப்பழம் நல்ல இனிப்பு. அப்ப றெயினில பார்சலைக் குடுத்துப்போட்டு தபாற்கந்தோரில போய் போனெடுத்து தகவலைச் சொல்லிவிட்டாற்போதும். அவர் றெயில்வே ஸ்ரேசனில போய்ப் பார்சலை எடுப்பார். மாம்பழத்தைக் கொழும்புக்கு அனுப்பிறது ஒண்டும் கஸ்ரமாக இருக்கவும் இல்லை. அப்ப போனுக்கு தாற்கந்தோருக்குத்தான் போகவேணும். இப்ப கையில போன் இருக்கு. ஆனால் றெயினும் இல்லை. தண்டவாளமும் இல்லை. பொதிச் சேவையம் இல்லை.

இந்தியாவில இருந்து வந்து புதிசாகத் தண்டவாளங்களைப் போடுறதுக்கு ஆயத்தப்படுத்துகினம். ஆனால், அது இப்போதைக்கு நடக்கும்போலத் தெரியேல்ல.

சபா அண்ணை வாங்கின பழங்களை கொண்டு போறதுக்கும் பாதை இல்லை. பஸ்ஸில்தான் குடுத்து விடவேணும். ஏ.ஸி பஸ்ஸில் கொண்டு போற பழங்கள் அவ்வளவு ருஸிக்காது. எப்படித்தான் பக்குவமாகக் கொண்டு போனாலும் அது தோதுப்படாது. ஆனால், வேற வழியில்லை. இதையும் விட்டால் இப்போதைக்கு வேற வழியில்லை. நாள்போனால் எந்த நல்ல பழமும் அழுகியே போகும்.

அவருக்கு ஏனோ தன்ர தாயின்ர நினைவுதான் வந்துது. மாம்பழ வாசனை எங்கும் பரவிய காலம் அது. அதைப்பொல இனியொருகாலம் வருமா.

தனக்காக என்ற அவருடைய தகப்பன் நட்ட மூன்று மாமரங்களில் ஒன்றைக்கூட அவர் கண்ணாலும் காண முடியாமற்போய்விட்டது. எல்லாம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கிவிட்டன. அப்பு மாமரத்தை வைச்சபோது அதுக்குப் பாதுகாப்பில்லாமல் தம்பிராசாவின்ர ஆடுகள் ஒருக்கா குருத்தைக் கடிச்சுப்போட்டுதுகள் எண்டு அழுதவர். ஆனால் இப்ப அந்தப் பகுதியெல்லாம் உயர்பாது காப்பு வலயம் எண்டு சொல்கிறார்கள். அங்க மாமரமே நிக்காது. நிண்டாலும் யாரும் போக ஏலாது.

7/7/2012 4:55:58 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:



உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்