அர்ச்சுனா
புரட்சி, போராட்டம், பொதுவுடமை
ஏகாதிபத்தியம்
இன்னும் இன்னும்
பேசிய சொற்களின் பொருள்புரியா வயதிலும்
பிடல்
உன்னை எனக்கு ஞாபகமிருக்கிறது
கியூபா என்னும் குட்டித் தீவும்
கரீபியனும் ஹவானாவும்
சேகுவேரா என்றோர் தோழமையின்
நட்பும்
அதன் பின்னான கதைகளும்
அலைக்கழித்த ஒரு நாளில் தான்
பிடல்
உன்னை நான் அடையாளம் கண்டேன்
வேர்வையில் நனைந்திருந்தது உன்
இராணுவச் சீருடை
சவரம் செய்படா கருநிற தாடியை
மேவிப் படர்ந்து
புன்னகையை மறைத்தது சுருட்டின் புகை
கனவுகளில் நீ வந்தாய்
புரட்சியின் வேர்கள் கிளைவிட்டு விரிந்த
ஹவானாவின் அறியாத தொலைதூரத் தெருக்களில்
உனைத் தேடியலைந்தேன்
கோலியாத்தின் நெற்றிப்பொட்டை குறிவைத்தபடி
டேவிட்டுகள்
ஹவானாவின் தெருக்களில் திரிந்தனர்.
இப்படித்தான்
உலக வல்லரசுக் கனவொன்றும்
டேவிட்டுகளின் ஏவுகணை நிழல்பட்டுக் கலைந்தது.
வாழும் நூற்றாண்டின் கடைசிப் பேராளுமை
மரணம் விரித்த பொறிகளை வென்றது.
முடிவில்
அது முதுமையிடம் தோற்றது.
வர்க்கங்கள் அற்ற வாழ்வை
சாவு தந்தது.
இன்று
மாவீரர் நினைவில் ஏற்றிய தீபத்தின் அருகே
உனக்கெனவும்
ஓர் ஒளிச்சுடர் ஏற்றினேன், பிடல்
விடைபெறும் நேரத்திற் சொல்வதற்கென
வைத்திருந்த வார்த்தைகள் அனைத்தும்
சொல்லியாயிற்று
இறுதிச் சொற்களென ஏதுமில்லை.
வரலாறு எம்மை விடுவிக்கும் என்ற
உன்
ஒற்றை வார்த்தையைத் தவிர..