யமுனா ராஜேந்திரன்
I.
எனது நூல்களைச் சேகரித்து வைத்திருந்ததாகக் கருணாகரன் எழுதுகிறார். எழுதுபவனுக்கு இப்படியான சொற்களைக் கேட்பதனைவிடச் சந்தோஷம் ஏதும் இருக்க முடியாது. நன்றி கருணாகரன். 'வசைகள், புறக்கணிப்புகள், குற்றச்சாட்டுகள், அபத்தங்கள், அறிவொழுக்கமற்றவை, பயனற்ற எதையும் கரைத்துக் குடித்துத் தலையையும் மனதையும் பாழாக்கி வைத்திருப்பவை' என 'நாகரீகமாக' எனது 'இன்றைய' கட்டுரைகளை அணுகியிருக்கும் கருணாகரனுக்கு 'மனவருத்தத்துடன்' பதிலை எழுத வேண்டியவனாக இருக்கிறேன். திரும்பத் திரும்பப் பதிலிறுத்த விஷயங்களில் மீளவும் கருத்துச் சொல்ல நான் விரும்பவில்லை. என்னளவில் அரசியலையும் கருத்தியலையும் இலக்கியப் பிரதி குறித்த அவரது கருத்தாக்கங்களையுமே இங்கு விவாதிக்க நினைக்கிறேன்.
முள்ளிவாய்க்கால் பேரழிவில் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள், ஐ.நா அறிக்கை போன்றவற்றின் நிலை, தனது எதிர்கால அரசியல் நிலைபாடு போன்றவை குறித்துக் கருணாகரன் பேசியிருக்கிறார். முதலாவதாக இலங்கை அரசு (சிங்களத்தரப்பு பிளஸ் மகிந்த அரசு) குறித்த எனது மதிப்பீட்டை அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார். உண்மையில் எனது மதிப்பீட்டை அவர் தெளிவாகவே புரிந்திருக்கிறார். ஆம், மகிந்த ராஜபக்சே மட்டுமல்ல, அதற்கு முன்னருமான சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் இலங்கை அரசு குறித்த எனது மதிப்பீடு இதுதான்: இந்தப் பேரழிவின் தோற்றத்திற்குக் காரணமும் முதல் பொறுப்பும் இலங்கை அரசுக்கு உரியது என்றுதான் நான் திடமாக நம்புகிறேன். அற்கான வலிமையான கோட்பாடு மற்றும் வரலாற்றுப் புரிதல் எனக்கு இருக்கிறது.
II.
இலங்கை நிலைமையில் தமிழர்களுக்கிடையில் இருவிதமான சிந்தனைப் போக்குகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. நடந்த அனர்த்தங்கள் அனைத்துக்கும் காரணமாகத் தமிழ் அரசியலின் தவறுகளையும் பின்னடைவுகளையும் பிரதானப்படுத்தி விவாதிக்கும் போக்கு ஒன்று. தமிழர்களுக்கு நேர்ந்த அழிவுகள் அனைத்துக்கும் இலங்கை அரசே காரணம் என விவாதிக்கும் போக்கு பிறிதொன்று. முள்ளிவாய்க்காலின் பின் முன்னாள் போராளி இயக்கங்களிலுள்ள கணிசமானர்கள் முதலாவது போக்கை முன்வைக்கிறார்கள். ஆயுதப் போராட்டமே தவறான தேர்வு எனும் நிலைபாட்டுக்கும் அவர்கள் வருகிறார்கள். தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்றோ தாம் தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டோம் என்றோ சொல்கிறார்கள். யாரால், எதனால் ஏமாற்றப்பட்டார்கள்;, தவறாக வழிநடத்தப்பட்டார்கள் எனும் பிரச்சினையை அவர்கள் விரிவாக விவாதிப்பதில்லை. தேர்வில் தமக்கு இருந்த கூட்டுப்பொறுப்பையும் அவர்கள் வேகமாகக் கடந்து சென்றுவிடுகிறார்கள். குறிப்பாக எழுபதுகளில் தோன்றிய இளைஞர் இயக்கங்கள் அனைத்தும் ஆயுதவிடுதலைப் போராட்டத்தை 'கடப்பாட்டுடன்' ஏன் தேர்வு செய்தன, அதற்கு 'வெகுமக்களின் ஒப்புதல்' எவ்வாறு அமைந்தன என்பது குறித்த 'வரலாற்றுரீதியான' மெய்மையை அவர்களால் விளக்கவும் முடிவதில்லை. பெரும்பாலுமான மாற்றுக்கருத்தாளர்கள் இந்த நிலைப்பாட்டிலேயே கால்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது போக்கை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் தமிழ் அரசியலின் தோல்விகள், பின்னடைவுகள் போன்றவற்றுக்கான காரணங்களை முழுமையாக இலங்கை அரசிடமும் உலக அரசியல் சக்திகளிடமும் தேடுகிறார்கள். தவறுகள், அது தந்திரோபாயம்-அரசியல்-ஸ்தாபனம் என எந்த மட்டத்திலும் நிகழவில்லை என்கிற மாதிரியான நோக்கிலிருந்து 'பிரச்சினைகளை எதிர்கொள்வதில்' இருந்து இவர்கள் விலகிச் செல்கிறார்கள். தாம் ஒரு தனியரசுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருகிறோம் எனக் கருதியவர்கள், தாம் எதிர்த்துப் போராடும் கொடுங்கோன்மை அரசுடன் ஒப்பிட விடுதலை அரசொன்று கொண்டிருக்க வேண்டிய வித்தியாசங்களை முற்றிலும் மறுத்தவர்களாக இவர்கள் இருந்தார்கள். சமூக உருவாக்கத்தில் அரசின் பாத்திரம் எனும்போது வெகுமக்களுக்கும் அரசுக்கும் இருக்க வேண்டிய உறவு குறித்தே நாம் பேசுகிறோம். இந்த உறவில் 'அதிகாரம் எனும் நிர்வாக அலகு செலுத்தும் பாத்திரம்' குறித்தே நாம் பேசுகிறோம். இது குறித்த பிரக்ஞை போராடியவர்களுக்கு இல்லை என்பதினாலேயே அவர்கள் இறுதியில் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் எஜமானர்களாக ஆகினார்கள். விடுதலைப் புலிகள் இந்த நிலைபாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மார்க்ஸ், எங்கெல்ஸ், கிராம்சி தொடர்ந்து நோம் சாம்ஸ்க்கி போன்றவர்களை நாம் அரசு, அடித்தளம், மேல்தளம் மற்றும் இணக்கத்தை உற்பத்தி செய்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து ஆழமாகப் பேசிய சிந்தனையாளர்கள் எனலாம். கிராம்சி, மார்க்சியக் கருத்தாக்கமான மேல்தளம் என்பதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறார். 'அரசியல் சமூகம்' எனவும் 'குடிமைச் சமூகம்' எனவும் இதனை அவர் சுட்டுகிறார். ராணுவம், காவல்துறை, நீதியமைப்பு போன்றவற்றை அவர் அரசியல் சமூகம் என்கிறார். நிலவும் அரசியலை அச்சமூகத்தில் வாழும் மக்களினிடையில் 'நிலைநிறுத்தும்' சமூகமாக இது இயங்குகிறது. குடிமைச் சமூகம் என்பதனை 'மேலாண்மைக்கான இணக்கத்தை உற்பத்தி' செய்யும் சமூகம் என அவர் குறிப்பிடுகிறார். மதம், சடங்குகள், நாட்டுப்புற வழக்குகள், அன்றாட மனித உறவுகள் போன்றவற்றை குடிமைச் சமூகக் கூறுகள் என அவர் சொல்கிறார். இலங்கையின் குறிப்பிட்ட சூழலில் அடித்தளத்தில் வர்க்கத்திற்கு இணையான பாத்திரத்தை மட்டுமல்ல, சிவில் சமூக மேலாண்மைக்கான இணக்கத்தை உற்பத்தி செய்யும் பாத்திரத்தையும், அரசியல் சமூகமான ராணுவம், காவல்துறை, நீதித்துறை, கல்வி போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சமூகத்தின் பாத்திரத்தையும் 'இனம்' எடுத்துக் கொள்கிறது. இந்த குறிப்பிட்ட நிலைமையில் இருந்து பார்க்கும்போது இலங்கையில் இன்று வரலாற்றுரீதியில் நிர்ணயமான கூறாக இருப்பது, மேல்கட்டுமானம் (அரசியல் சமூகம், சிவில் சமூகம் என இரண்டும்) அடிக்கட்டுமானம் (உற்பத்தி உறவுகள்-உற்பத்தி சக்திகள்) என அனைத்திலும் விரவியிருக்கிற கூறாக 'இனம்' எனும் பிரச்சினையே இருக்கிறது. இந்நிலைமை முற்றிலும் அல்லது அறுதித் தேர்வில் பொருளாதார நிர்ணயம் மற்றும் வர்க்கம் எனும் பாத்திரங்களை இல்லாது செய்துவிடுகிறதா? நிச்சயமாக இல்லை. இலங்கைச் சூழலில் தமிழர்-சிங்களவர்-இஸ்லாமியர் என அனைத்து சமூகத்தினிடையிலும் வர்க்கம், பொருளாதார அடித்தளப் பகுப்பாய்வு என்பதனைக் கூட, 'இனம் ஊடறுத்துச் செல்வதாகவும் நிர்ணயிக்கத் தக்கதாகவும்' இருப்பதை ஒருவர் காணமுடியும்.
மேல்கட்டுமானத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கூறு ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் தீர்மானிக்கும் 'மேல் நிர்ணயக் கூறாக இருக்கலாம்' என அல்த்தூஸர் வலியுறுத்துவதனை இலங்கைக்கு நாம் பொருத்திப் பார்க்கலாம். மதம், சாதி, ராணுவம், காவல்துறை, நீதித்துறை, கல்வி, போன்ற மேல்கட்டுமான அரசியல்-சிவில் சமூகக் கூறுகள், பொருளாதார வாய்ப்புகள், உற்பத்திக் கட்டுமானங்கள், தொழில்துறை வளர்ச்சி, மூலதனம் மற்றும் உற்பத்தி போன்றவை யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன, எவரது அதிகாரத்தின் கீழ் உள்ளன எனப் பகுப்பாய்வு செய்யும்போது 'இனம்' என்பதுவே இங்கு மேல் நிர்ணயக்கூறாக இருக்கிறது. வர்க்கப் பிரச்சினை கூட இங்கு இனப்பிரச்சினையால் மேல்நிர்ணயம் செய்யப்படுவதாக இருக்கிறது. இந்த வகையில்தான் மார்க்சிய மொழியில் இலங்கையில் 'இனம் என்பது பிரதான முரண்பாடாக இருக்கிறது' என நாம் குறிப்பிடுகிறோம். இதனை ஈழத்தமிழ் மார்க்சியர்கள் ஏற்று, அதற்கான செயல்பாட்டுத் தந்திரத்துடன் செயல்படுகிறார்கள் எனச் சொல்ல முடியாது.

அரசியல் சமூகம், சிவில் சமூகத்தைத் தனது ஆளுகைக்குள் வைத்துக் கொள்வதற்கு வன்முறைத் திணிப்பை மட்டுமல்ல அவர்களது 'இணக்கத்தையும் ஆயுதமாகக் கொள்கிறது'. காலனித்துவத்திற்குப் பின்னான காலத்தில், தகவல் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் நம் காலத்தில், இந்த இணக்கத்தை வன்முறைத் திணிப்பின் மூலம் செய்வதனை விடவும், 'இணக்கத்தை உற்பத்தி செய்வது' எனும் வடிவில் அதனை அரசியல் சமூகம் மேற்கொள்கிறது. அதனை கருத்து யுத்தம் என, பிரச்சார யுத்தம் என நாம் குறிப்பிடுகிறோம். தொலைக்காட்சிகளும் அதிகம் விநியோகமாகும் வெகுஜனப் பத்திரிக்கைகளும் இந்த இணக்கத்தை உற்பத்தி செய்யும் பணியைக் கச்சிதமாகச் செய்கின்றன. எந்தப் பிரச்சினையை முன்னிலைப்படுத்துவது, எதனைப் பின்னுக்குத் தள்ளுவது எனும் தேர்வின் அடிப்படையில் வெகுமக்களினிடையில் கருத்திணக்கத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். சிவில் சமூகத்தினுள் கருத்திணக்கத்தை உருவாக்குதல் எனும் கிராம்சியக் கருத்தாக்கத்தின் நீட்சியாகவே நாம் நோம் சாம்ஸ்க்கி பேசுகிற இணக்கத்தை உற்பத்தி செய்வது எனும் கருத்தாக்கத்தையும் காணலாம். தென்னிலங்கையின் ஊடகங்கள் வடக்கில் அரசினது மீறல்களை தென்னிலங்கை மக்களுக்குத் தெரிவிப்பதில்லை என மனோ கணேசன் சொல்வதை இங்கு நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றுக் கருத்தாளர்கள், விடுதலைப் புலிகள் என இருதரப்பிலுமுள்ள 'வரலாற்றுக் கேள்விகளைப் புறக்கணிக்கும்' நிலைபாடுகளை நாம் அவதானிக்கிறோம். அடித்தளம், மேல்தளம், மேல்தளத்திலுள்ள அரசியல் சமூகம்-சிவில் சமூகம் என அனைத்திலும் விரவியிருக்கிற இனம் எனும் நிர்ணயவாதக் கூறையும் நாம் இனம் கண்டிருக்கிறோம். தமிழ் சமூகத்தினுள் நடந்தேறவேண்டியவை என நாம் இன்று எதனை முன்னிறுத்த முடியும்? தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட தவறுகள் என எதனை நாம் இன்று முன்னிறுத்த முடியும்? அதற்கான பொறுப்பை எவர் ஏற்பது? அல்லது அவ்வாறான பொறுப்பை ஏற்காதவர்கள் முன்னிறுத்தும் அரசியல் எத்தகையது?
ஆயுதப் போராட்டம் தொடர்பான தேர்வு, நடைமுறை, ஸ்தாபனப் பிரச்சினைகள், மக்களை இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்தியமை, இயக்க உள் முரண்பாடுகளை ஆயுத முனையில் தீர்த்தமை, இயக்கத்தினுள் பாலியல் வல்லுறவு, பிரதான அரசியல் முரண்பாடுகளை ஆயுதமுனையில் தீர்க்கவிளைந்தமை என அனைத்துக்கும் விடுதலைப் புலிகளை 'மட்டுமே' சுட்டிக்காட்டி, அவர்கள் 'மட்டுமே' தமிழ் அரசியலின் அழிவுக்குக் காரணம் எனச் சொல்லிவிடமுடியுமா? சிங்களபௌத்த இனவாத அரசியலுக்கும் தமிழின அரசியலுக்கும் உள்ள பிரதான அரசியல் முரண்பாட்டினை மட்டுமல்ல, சர்வதேச அரசியல் முரண்பாடுகளையும் கொலைகளினால் தீர்க்க முற்பட்ட பிரதான அரசியல் தவறொன்றினைத் தவிர, பிற பிரச்சினைகளில் தவறுகள் அனைத்தையும் விடுதலைப் புலிகளின் மீது மட்டும் எவரும் சுமத்திவிட முடியாது.
தேசிய, சர்வதேசிய அரசியல் சமூகத்தைக் கையாள்வதில் விடுதலைப் புலிகள் விட்ட தவறுகளே விடுதலைப் புலிகள் விட்ட மிகப்பெரும் தவறு. பின்னாளில் அதீதமாக விடுதலைப் புலிகள் விட்ட பிற தவறுகள் அனைத்தின் நடைமுறையிலும் பிற இயக்கங்களுக்கும் பொறுப்பு உண்டு. அது குறித்த மனம் திறந்த விமர்சனங்களை விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அல்லாதவர்களும், மாற்றுக் கருத்தாளர்களும் முன்வைக்க வேண்டும். அடுத்த தமிழ் தலைமை என்பது இதனால் மட்டுமே ஆரோக்கியமாக உருவாக முடியும்.
ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் சமூகம் தன்னை ஒன்றுதிரட்டிக்கொள்வது என்பது தன்னைத்தானே அது ஜனநாயகப்படுத்திக் கொள்வது என்பதன் மூலமே சாத்தியம். சோவியத் யூனியனின் உடைவு, பின்புரட்சிகர சமூகங்களின் அனுபவம், இரு தசாப்தங்களில் தமிழில் முனைப்புப் பெற்றிருக்கும் தலித்தியம், பெண்ணுரிமை அரசியல், பல்மத-கலாச்சார இணக்கம் போன்ற பின்நவீனத்துவ-பல்கலாச்சார கருத்துப்போக்குகள் என்பதனை தமிழ் அரசியல் சமூகம் சுவீகரித்துக் கொள்ளவேண்டும். அரசியல்-ஸ்தாபன-நடைமுறைப் பிரச்சினைகள் எனும் அரசியல் சமூகத்தின் பண்புகளுக்கு இணையாகக் கவனம் குவிக்க வேண்டிய சிவில் சமூகத்தின் கருத்திணக்கம் தொடர்பான இப்பிரச்சினைகளை ஓரிரவில் தீர்க்க முடியாது என்பது உண்மை. ஜனநாயப்படுத்துதலின் மூலம் கருத்திணக்கத்தை உருவாக்குதல், அதன் வழியில் அரசியல் சமூகத்தை உருவாக்குதல் எனும் முக்கியத்துவத்தையேனும் தமிழ் அரசியல் தலைமைகள் உணர்ந்து அதற்கெனச் செயல்படவேணடும்.
இப்பிரச்சினையில் மூன்று விதமான சக்திகள் தமிழ் சமூகத்தினுள் முரண்பட்டு நிற்கின்றன. இனப்பிரச்சினையின் நிர்ணயவாதத் தன்மையினை ஒப்பி, தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும் எனும் நிபந்தனையை முற்றிலும் புறந்தள்ளிய, எந்தவிதமான அரசியல் கருத்தியல் தெரிவுகளுமற்ற இணக்க-அபிவிருத்தி அரசியல் தலைமை முதலானது. இனப்பிரச்சினை நிர்ணயத்தை ஒப்பி, அதேவேளை தமிழ் சமூகத்தினுள் எந்தவிதமான ஜனநாயகப்படுத்துதலையும் குறித்த அக்கறையற்ற தமிழ்தேசியத் தலைமை பிறிதொருபுறம். இனப்பிரச்சினையின் நிர்ணயவாதத்தன்மையினை மறுத்து, தமிழ் சமூகத்தினுள் ஜனநாயகப்படுத்துதலை மட்டுமே முன்னிறுத்தியபடி எந்தவிதமான கருத்தியல்-அரசியல் தேர்வுகளையும் முன்னிலைப்படுத்தாது 'மிதக்கும் அல்லது அலையும் பின்நவீனத்துவ' அரசியல் கொண்ட மாற்றுக்கருத்து எனும் சிறுபான்மைப் போக்கு. இந்தப் போக்கு துரதிருஷ்டவசமாக அதனது மிதக்கும் அல்லது அலையும் தன்மையினால் அதிகமும் கருத்தியலற்ற-அரசியல் அற்ற இணக்க-அபிவிருத்தி அரசியலை நோக்கியே நகர்கிறது. இதை உணர்ந்திருப்பவர்கள், இதைப் பற்றின விமர்சனங்கள் கொண்டவர்கள் மிகமிகச் சிறுபான்மையினர். இவர்களே இன்றும் ஈழத்தமிழர் விடுதலை அரசியலை அவாவி நிற்பவர்கள். இதுவே இன்றைய புலத்தினதும் புகலிடத்தினதும் அரசியல் யதார்த்தமாக இருக்கிறது.
மாற்றுக் கருத்தாளர்களிடம் தொடர்ந்து கறுப்பு-வெள்ளை அரசியல் குறித்த சலிப்புணர்வும் சுட்டல்களும் இருந்து கொண்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக தமிழர் அரசியலைப் பொறுத்து அதனது கடந்த காலத்தை முழுமையாகக் கறுப்பாகப் பார்ப்பவர்கள் இவர்கள்தான். தமிழர் அரசியலை முழுமையாகக் கறுப்பாகப் பார்க்கிற இவர்கள்தான் பிறிதொருபுறத்தை மறந்த நிறக்குருடர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அதனை வெள்ளை எனவும் சாதித்து மௌனம் காக்கிறார்கள். விடுதலைப் புலிகள் தமது கடந்த காலத்தை வெள்ளை என்கிறார்கள். விடுதலைப் புலி எதிர்ப்பாளர்கள் தமது கடந்த காலத்தை வெள்ளை என்கிறார்கள். தமது கடந்த கால புலிஆதரவு மற்றும் எதிர்ப்பை மறுக்கும் அல்லது மறைக்கும் மாற்றுக்கருத்தாளர்கள் தமது கடந்த காலம் இருண்டது என்றும் நிகழ்காலம் வெள்ளை என்றும், இன்றைய தமிழ் அரசியல் கறுப்பு என்றும், இணக்க அரசியல் வெள்ளை என்றும் சொல்கிறார்கள். இவ்வாறு கறுப்பு-வெள்ளை அரசியலைக் கடுமையாகச் சாடிக்கொண்டே அதீதமான கறுப்பு வெள்ளை அரசியலில் இவர்கள் சிக்குண்டிருக்கிறார்கள். இதனால் இவர்கள் தமிழ் அரசியல் சமூகத்திலிருந்து விலகிப் போவது மட்டுமல்ல, இனவாத சமூகத்தின் கருத்துருவ இணக்க உற்பத்தியின் பகுதியாகவும் ஆகிப்போகிறார்கள்.
இந்த இடத்தில்தான் நாம் கருத்து இணக்க உற்பத்தி எனும் இடத்தில் மாற்றுக்கருத்தாளர்கள் வகிக்கும் பாத்திரத்தை மதிப்பிடுகிறோம்.
விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறல் புரிந்தவர்கள், பயங்கரவாதிகள் எனும் நிலைபாட்டை உலக நாடுகள் கொண்டிருக்கின்றன. சம அளவில் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என உலக நாடுகள் சொல்லி வருகின்றன. இனப்பிரச்சினையை இலங்கை அரசியல்ரீதியில் தீர்க்க முனையவில்லை எனும் நிலைபாட்டையும் உலக நாடுகள் கொண்டிருக்கின்றன. இனப்பிரச்சினையே இலங்கை உள்நாட்டு யத்தத்தின் தோற்றுவாய் என்பதனையும் உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன. உலக நாடுகள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும், மனித உரிமை மேம்பாட்டையும், போர்க்குற்றத்திற்கான அதனது பொறுப்புக் கூறலையும் வலியுறுத்தி வருகின்றன. இவையனைத்தும் மிக வெளிப்படையாக இருக்கிற மெய்மைகள்.
விடுதலைப் புலிகள் தமது மனித உரிமை மீறல்களையோ மக்களைப் பிணைகைதிகளாக வைத்தமை, அவர்களைத் தாக்கியமை போன்றவற்றையோ இதுவரையிலும் ஒப்புக்கொள்ளவில்லை. இலங்கை அரசு மக்களைத் திட்டமிட்டுக் கொன்றதையோ தம் மீதான போர்க்குற்றங்களையோ, போர்க்கைதிகளை சித்திரவதை செய்துகொன்றதையோ ஒப்புக்கொள்ளவில்லை. கிடைக்கும் வெகுமக்கள் சாட்சியங்கள், உலக அமைப்புக்களின் சாட்சியங்கள் இருதரப்பும் குற்றங்கள் இழைத்தனர் என்பதனை தெளிவுடன் முன்வைக்கின்றன.
இவற்றில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளையும், இலங்கை அரசின் நடவடிக்கைகளையும் எவ்வாறு மதிப்பிடுவது? நிகழ்வும் விளைவும் எனும் அடிப்படையில் இதற்கான பொறுப்புக்களை, முதன்மையான பொறுப்புக்களைக் குறித்த பகுப்பாய்வை நாம் எங்கிருந்து துவங்குவது? இலங்கை அரசிலிருந்து, அதனது அடித்தளம், மேல்தளம், மேல்தளத்தின் பகுதிகளான அரசியல் சமூகம்-சிவில் சமூகம், அதில் ஆதிக்கம் செலுத்தும் சிங்களபௌத்த இனவாதம், கருத்து இணக்க உருவாக்கம் என்று துவங்குவதா அல்லது தமிழ் சமூகத்தின் அடித்தளம், மேல்தளம், தமிழ் சமூக மேல்தளத்தின் அரசியல் சமூகம், சிவில் சமூகம், தமிழ் சமூகத்தின் கருத்து இணக்க உருவாக்கம் எனத் துவங்குவதா?
இனப்பிரச்சினைதான் பிரதான முரண்பாடு எனில், அதனைச் செலுத்துகிற பெரும்பான்மையினர் சமூகத்திலிருந்து இதனைத் துவங்குவதா அல்லது செலுத்துதலுக்கு ஆளாகும் தமிழ் சிறுபான்மைச் சமூகத்திலிருந்து அதனைத் துவங்குவதா? இலங்கைத் தீவின் மேல்தளம்-அடித்தள உறவுகள், அரசியல் சமூக-சிவில் சமூக உறவுகள், அதில் கருத்து இணக்க உருவாக்கம் என அனைத்திலும் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனம் மேல்நிர்ணயமாகச் செயல்படுகையில் அதற்கு எதிராக அல்லவா சிறுபான்மையினம் உருவாக்கம் பெறமுடியும்? இதில் மனித உரிமைகளை, அரசியல் உரிமைகளைப் பேணுவதில் எவருக்கு முதன்மைப் பொறுப்பு இருக்கிறது? இலங்கையின் அரைநூற்றாண்டு வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் அதிகாரம் கொண்டிருக்கும் சிங்களபௌத்த அரசிற்கே இதில் முதன்மைப் பொறுப்பு இருக்கிறது.
ஓரு வரலாற்று நிகழ்வின் விளைவாகவே தமிழர்களின் வன்முறையிலான ஆயுதவிடுதலைப் போராட்ட அரசியல் தோன்றியது. அதனது தொடர்விளைவுகள் தமிழ்மக்களின் மீதே திரும்பியதை நாம் விமர்சிக்கிறபோது, ஆதாரமான நிகழ்வின் வன்முறையை, அது தர்க்கபூர்வமாக பைசாசமாக இன்றும் வளர்ந்துசெல்வதை மறுதலிப்பது என்னவகையிலான பகுப்பாய்வில் சேரும்?
நாம் இலங்கை அரசுக்கு உள்ள பொறுப்பை அதிகமும் வலியுறுத்துகிறோம். பிரச்சினையில் எதிர்ப்பு இயக்கத்தை விடவும் ஒரு அரசுக்கே அதிகமும் பொறுப்பு உண்டு. அரசு, இறையாண்மை, குடிமக்கள் தொடர்பான சர்வதேச விதிகள் பல நூற்றாண்டுகளாக உருவாக்கம் பெற்று வந்திருக்கின்றன. தமது குடிமக்களை ஒரு அரசு காக்க வேண்டும் என்பதுதான் எல்லாச் சர்வதேசச் சட்டங்களினதும் ஒப்பந்தங்களினதும் உள்ளுறை. ஐ.நா.சாசனத்தின் உள்ளடக்கமும் அதுதான். அரசு வெகுமக்களைக் காக்கத் தவறுகிறபோதுதான் கிளர்ச்சிகள், போராட்டங்கள் எழுச்சி பெறுகின்றன. எந்த நாட்டையும் போலவே இலங்கைத் தீவுக்கும் இது பொருந்தும். அரசு திரட்டிக் கொள்ளப்பட்ட அறங்களுக்கும் நியதிக்குள்ளும் இயங்க வேண்டிய ஒரு நிர்வாக வடிவம். அதனை அது செய்யாதபோதே அதனை சர்வாதிகாரம்-பாசிசம் என வரையறுக்கிறோம். ஒரு எதிர்ப்பு அமைப்பு என்பது அராஜக நிலையிலிருந்துதான் தோன்றுகிறது. அரசுக்கு உரிய திரட்டிக்கொள்ளப்பட்ட அறம் மற்றும் நியதிகள் அதற்கு அதனது தோற்றத்தின்போது இல்லை. மக்களை நேசிக்கும் ஒரு விடுதலை இயக்கம் அதனைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என புரட்சியாளர்கள் வலியுறுத்துவார்கள். பிடலும் சேவும் அப்படிச் செயல்பட்டார்கள். துரதிரஷ்டவமாக விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஈழ விடுதலை இயக்கங்கள், ஒரு சில சிறுபான்மை இயக்கங்கள் தவிர அதனைப் பயிலவேயில்லை. பயங்கரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் இருக்க வேண்டிய வித்தியாசத்தை விடுதலைப் புலிகள் இல்லாமல் செய்தார்கள். என்றாலும் கூட, அரசுக்கு இருக்கவேண்டிய பொறுப்பை இது இல்லாமல் செய்துவிட முடியாது. அரசு ஒரு நிகழ்வு. விடுதலைப் புலிகள் அதனது கடுமையான விளைவு. அரசுக்கு உள்ள பொறுப்பை நிலைநாட்டவே விடுதலையாளர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள், சர்வதேசச் சட்டங்கள் அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுகின்றன.
அரசுக்கு உள்ள பிரதான பொறுப்பை இதனால்தான் மனித உரிமை அமைப்புக்கள், ஐ.நா.போன்ற அமைப்புக்கள், உலக அரசுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனை மதிக்காத அரசுகள் உலகில் இருக்கின்றன. அது குறித்த விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதற்கு அது பதிலிறுக்க வேண்டும். இதனை மறுப்பதும், மறப்பதும், அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பது போல பாவனை செய்வதும், மௌனம் காப்பதும் என்னவிதான ஜனநாயக அரசியல்? அது என்னவிதமான மாற்று அரசியல்? இலங்கை அரசு தமிழ்மக்களுக்குத் தான் இழைக்கிற தீமைகள் குறித்து தென்னிலங்கை மக்களுக்கு அறிவிக்காமல், தமிழ்மக்களின் மீதான தொடர்ந்த ஒடுக்குமுறைக்கான இணக்க அரசியலை உற்பத்தி செய்கிறபோது, அரசின் மனித உரிமை மீறல்கள், கொலைகள் போன்றவற்றைக் கண்டு கொள்ளாமல், அதே விதமான இணக்க அரசியலை தமிழ் மக்களுக்கிடையிலும் உருவாக்குவது அல்லாமல் மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது இணக்க-அபிவிருத்தி அரசியல்காரர்கள் கொண்டிருக்கும் மௌனத்தின் நோக்கம் அரச ஆதரவு அன்றி வேறென்ன?
இலங்கை இனப் பிரச்சினையின் தோற்றத்துக்கும், அது தீராமல் தொடர்வதற்கும் இலங்கையின் மேல்தளம், அடித்தளம், அரசியல் சமூகம், சிவில் சமூகம் என நீக்கமற இருக்கும் இனவாத மேல்நிர்ணயம்தான் காரணம். அதனை இன்றளவிலும் ஒரு நிறுவனமாக முன்னெடுக்கும் அரசை இதனால்தான் நாம் கடுமையாக விமர்சிக்கிறோம். தமிழர் பிரச்சினையின் தோற்றுவாய்களை இவ்வாறு இலங்கை அரசையும் அதனது விளைவான கருத்தியல் நிறுவனங்களையும் புரிந்துகொள்வதன் மூலமும், விமர்சிப்பதன் மூலமும், அம்பலப்படுதுவதன் மூலமுமே நாம் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். இதனை முற்றிலுமாக மறுத்துவிட்டு தமிழ் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவது என்பது சாத்தியமில்லை. முள்ளிவாய்க்கால் பேரழின்போது தமிழ் சமூகம் ஜனநாயகப்படுவது அல்லது விடுவது என்கிற தேர்வுகளுக்கு அப்பால்தான், அதனுள்ளில் இருந்த வேறுபாடுகளற்று தமிழ்மக்களைக் கொன்றொழித்தது. அதீதப்படுத்தப்பட்ட மனநிலையில் தமிழ் சமூகத்தினுள்ளேயே பிரதான எதிரிகளைக் கண்டடைவதும், உருவாக்குவதும் அதனை அரசியலாக முன்னெடுப்பதும் இனவாதத்தினால் பீடிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில் விடுதலை அரசியலாக ஆகமுடியாது.
III.
முள்ளிவாய்க்கால் பேரழிவில் உலக அரசியல் சக்திகளின் பாத்திரம் என்ன என்பது குறித்த அறிவே எனக்கு இல்லை எனும் கருணாகரன் அதனை இவ்வாறு முன்வைக்கிறார்:
'சர்வதேச அரசியலைப் பேசும் அவர், இடதுசாரிய அரசியலின் வழியில் வந்ததாகக் காட்டும் அவர், இந்த யுத்தத்தில் பிற ஆதிக்கச் சக்திகளான இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, கியூபா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், யப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகள் வகித்த பாத்திரங்களைப் பற்றி அறியாதிருக்கிறார். இந்தச் சக்திகள் தங்களின் அதிகாரப் போட்டிக்காகவும் நலன்களுக்காகவும் எப்படித் தொழிற்பட்டன என்பதை உணராதிருக்கிறார். ஈழ யுத்தம் என்பது ஒரு கூட்டு யுத்தம் என்பதையும் கூட்டுப்படைகளில்லாத ஒரு கூட்டு நடவடிக்கையாகவே அது நடந்தது என்பதையும் ராஜேந்திரன் அறியவில்லை',
நான்கு ஆண்டுகளின் முன்பு, முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து அடுத்த மாதம் வெளியான 2009 உயிர்மை ஜூன் இதழில் உலக நாடுகளும், புதிய உலக நிலைமையும், ஈழ விடுதலைப் பேராட்டமும் குறித்து எனது உடனடியான கட்டுரை எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் வெளியானது. அதன் பின்பு பல பத்துக் கட்டுரைகள் இது தொடர்பாக நான் எழுதியிருக்கிறேன். 2009 ஜூன் மாத உயிர்மை கட்டுரை இவ்வாறு முடிவுக்கு வந்திருந்தது
'அக்டோபர் புரட்சி தோற்றுவித்த புரட்சிகர இயக்கங்கள் இன்று இல்லை. அதனது தந்திரோபாயங்களும் இன்று காலாவதியாகிவிட்டன. அரசுகள் போலவே போராடும் இயக்கங்களும் இன்று மூன்று யதார்த்தங்களுக்கு முகம் கொடுத்தே தீர வேண்டும். பின்சோவியத் அனுபவங்கள், பின் செப்டம்பர் அனுபவங்கள் மற்றும் உலகவயமாதல் என்பன தான் அந்த மூன்று யதார்த்தங்கள். இந்த யதார்த்தங்கள் மனித உரிமைகள், வெகுமக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயகம் குறித்த அவர்களது அவாக்களை உலகெங்கிலும் விதைத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, சகலவிதமான எதிர்ப்பு அரசியல் சார்ந்த இயக்கங்களும் இந்த யதார்த்தங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு அமையவே அவர்களது எதிர்காலமும் இருக்கப் போகிறது என்பது மட்டும் இன்று நிதர்சனமாக இருக்கிறது'.
கருணாகரன் இன்னொன்றையும் சொல்கிறார்:
'ஒற்றை மைய உலகின் தோற்றம் குறித்த அவதானமும் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு அவசியமானது என்று வலியுறுத்தியிருக்கிறேன்'.
பன்முக நாடுகள் முள்ளிவாய்க்கால் பேரழிவைத் தீர்மானித்தன என்று பேசுவதற்கும், இப்போதும் ஒற்றைத்துருவ உலகு என்று பேசுவதற்கும் அடிப்படையில் மலைக்கும் மடுவுக்குமான ஒரு அரசியல் முரண் இருக்கிறது. கெடுபிடிப்போருக்குப் பின்பான ஒற்றைத்துருவ உலகு அல்ல இது. பல்துருவ உலகு இது. ஒற்றை அதிகாரமான அமெரிக்காவினால் தீர்மானிக்கப்படுகிற உலகு அல்ல இது. பல்வேறு உலக அதிகாரங்களால் தீர்மானிக்கப்படுகிற உலகு இது. இந்த அதிகாரங்களில் ஒன்றைச் சார்ந்திருப்பது என்பதற்கு மாற்றாக, இவைகளை ஒருவர் தமது நலன்களுக்கு ஏற்ப எவ்வாறு பாவிப்பது என்பதுதான் இன்று உலக அரசியல். இலங்கை அரசு இதனைக் கச்சிதமாகப் புரிந்திருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் கருத்தாக்கத்தை அது தனது நலன்களுக்குக் கச்சிதமாகப் பாவித்து விடுதலை அரசியலை அது அழித்தது. இந்தப் புரிதல் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. இந்தப் பகுப்பாய்வின் பின்பும் எனது முடிவு இதுதான்: இந்த அழிவின் தோற்றக் காரணமும் இந்தப் பேரழிவின் மாபெரும் உயிர்க்கொலைக்கும் பிரதான காரணம் இலங்கை அரசு என்பதுவே எனது நிலை. கருணாகரனும், மாற்றுக் கருத்தாளர்களும் நானும் முரண்படும் மிக முக்கியமான அரசியல் வெளி இதுதான்.
ஐநா அறிக்கை தொடர்பாக கருணாகரன் பின்வருமாறு சொல்கிறார்:
'இந்த அறிக்கையை தயாரிப்பதற்காகத்தானா அல்லது இது போன்ற அறிக்கைகளைத் தயாரித்து அதிகார நாடுகளின் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்தத்தானா ஐ.நா நிறுவனம் செயற்படுகிறது? மேலும் இந்த அறிக்கையின்; பயன்களை அனுபவிப்பவர்கள் யார்? .... போரையும் அதில் நடந்த அனர்த்தங்களையும் நன்றாக அறிந்த ஐ.நா அதைத் தடுத்து நிறுத்தக்கூடிய வலுவோடும் பொறுப்போடும் இருந்தது. ஆனால் என்ன செய்தது? போர் முடிந்த பிறகு நடுநிலையோடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நமக்குக் காண்பிக்கிறது. எங்களின் உளவியலை ஆற்றுப்படுத்த யோசிக்கிறது. அதாவது எங்களின் நியாயமான கோபங்களை இந்த அறிக்கையின் மூலம் கரைத்து வடியவிட முயற்சிக்கிறது. இது ஐ.நாவின் மிகப் பெரும் தந்திரங்களில் ஒன்று. உபாயங்களில் ஒன்று. இது ஒரு கண்கட்டு வித்தையன்றி வேறென்ன? இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த நிலையில் வரலாற்று அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் கொண்டுள்ள ஒரு மனம் இவற்றைப் பரிகாசம் செய்யாமல் வேறு என்ன செய்யும்? ஆனால் வெளியே இருப்போருக்கு இந்த அறிக்கை முக்கியமானதாகவே படும். ஏனெனில் அவர்களின் அனுபவம் வேறு. அதனால் அவர்களுக்கு இந்த அறிக்கை பெரியதொரு விசயமாகவே தெரிகிறது..இந்த அறிக்கையினால் அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களினால் எத்தகைய நன்மைகளைப் பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரையில் பெற்றிருக்கிறார்கள்? அல்லது அவர்கள் இனியாவது என்ன நன்மைகளையெல்லாம் சர்வதேச அரசியற் பொறிகளிலும் கூட்டுகளிலும் இருந்து பெறவுள்ளனர்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை யமுனா ராஜேந்திரனும் அவரைப் போன்றவர்களும் அறுதியிட்டுக் கூற முடியுமா? பொதுவாகவே ஐ.நாவின் அறிக்கைகளும் செயற்பாடுகளும் தீர்மானங்களும் யாருக்கு அதிக நன்மைகளைத் தருகின்றன என்ற ஆரம்ப அறிவைக்கூட, எளிய உண்மைகளைக் கூட சர்வதேச அரசியலைப் பற்றி, விடுதலை அரசியலைப் பற்றி தன்முதல் மூச்சாகக் கொண்டு எழுதிவரும் யமுனா ராஜேந்திரன் அறியாமலிருப்பது நகைப்பிற்குரியது, கேள்விக்குரியது'.
பல்துருவ உலகை ஒற்றைத்துருவ உலகு என வரையறுப்பது போலவே ஐ.நா.சபை, மனித உரிமை குறித்த கருணாகரனின் பார்வை சோவியத் யூனியன்-அமெரிக்கா இடையிலான பனிப்போர் காலகட்டத்திய பார்வை என்று நான் நினைக்கிறேன். ஐநா சபை என்பது ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களை முன்வைப்பது எனும் பார்வை காலாவதியான பார்வை. ஐநா ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் எலலாவற்றையும் சரியாகச் செய்யும் எனவோ அல்லது எதுவுமோ செய்யாது எனவோ பார்க்கிற இருதுருவப் பார்வை யதார்த்தத்திதைக் கணக்கிலெடுக்காத பார்வை. இடதுசாரிகள் கடந்த காலத்தில் மனித உரிமை அரசியலை அமெரிக்க சார்பான அரசியல் என நிராகரித்து வந்திருக்கிறார்கள். இன்று இனக்கொலை புரிகிறவர்களும் மனித உரிமை அரசியலை மேற்கத்தியத் திட்டம் என நிராகரிக்கிறார்கள். இறையாண்மையின் பெயரில் உள்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மனித உரிமை எனும் பிரச்சினையை தமது கலாச்சார மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்ப்போம் என்கிறார்கள். மகிந்த ராஜபக்சே, இலங்கை சிங்கள-தமிழ் இடதுசாரிகள், இலங்கை அரசுடன் நிற்கிற தமிழ் அரசியல்வாதிகள் என அனைவரது பார்வையும் இதுதான்.
இலங்கை அரசு ஐநா அறிக்கையை நிராகரிக்கிறது. கருணாகரனும் ஐநா அறிக்கையை 'எள்ளலுடன்' பார்க்கிறார். வேறு வேறு நோக்கிலிருந்து இலங்கை அரசும் சரி, கருணாகரனும் சரி ஐநா அறிக்கையை நிராகரிக்கிறார்கள். ஐநா அமைப்பை நான் சர்வ வல்லமை கொண்ட அமைப்பாகப் பார்க்கவில்லை. அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் ஐநாவில் எவ்வளவு செல்வாக்கு உண்டோ அதே செல்வாக்கு இலங்கையின் நண்பர்களான ரஸ்யாவுக்கும் சீனாவுக்கும் உண்டு. இதை அறிகிற எவரும் இதில் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் மீறி, ஐநா இலங்கையில் ஏதும் செய்துவிட முடியாது என்பது ஐநாவின் வரலாறு அறிந்த ஒரு பச்சைக் குழந்தைக்கும் தெரியும். ஈராக், லிபியா, சிரியா முதல் இலங்கை வரை இதுதான் யதார்த்தம். இன்னுமொரு யதார்த்தம் தமது நலன்கள் காப்பாற்றப்படுமானால் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் எங்கும் நேரடியாக அரசியல்-பொருளியல்-ராணுவ ரீதியில் தலையிடும். ரஸ்யாவும் சீனாவும் நேரடியாக அரசியல்-பொருளியல் ரீதியிலும் மறைமுகமாக ராணுவரீதியிலும் தலையிடும்.
நமது மிகச் சமீப கால உதாரணம் கிழக்கு திமோரும், லிபியாவும், சிரியாவும். இந்த ஆபத்து இலங்கைக்கு உண்டு என்பதால்தான் மனித உரிமைப் பிரச்சினையில், அதிகாரப் பகிர்வு பிரச்சினையில் இலங்கை ஒரு சர்வதேசப் பொறிக்குள் இருக்கிறது, ஏதேனும் செய்யுங்கள் என்கிறார் பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக. என்னை மின்சார நாற்காலியில் உட்காரவைக்கத் திட்டமிடுகிறார்கள் என்கிறார் மகிந்த ராஜபக்சே. இவ்வகையில் ஐநா அறிக்கை, டப்ளின் அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை, மனித உரிமை கண்காணிப்பு அறிக்கை போன்றன தமிழ் மக்களின் மனித உரிமை, அதிகாரப் பகிர்வு தொடர்பான மகிந்த அரசின் மீதான ஒரு அழுத்த அரசியலாக இருக்கும் என நம்புகிறேன். அமெரிக்காவின் மீது கடுமையான விமர்சனம் கொண்ட நவசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு, மூலதனத்தைத் தமிழில் மொழிபெயர்த்த தோழர்.தியாகு போன்றவர்கள் ஐநா அறிக்கையை விமர்சனத்துடன் ஏற்பதிலுள்ள அரசியல் இதுதான். இது தமிழ் மக்களுக்கு ஆதரவான பண்புகள் கொண்டது. இதனை மகிந்த நிராகரிப்பதிலும், கருணாகரன் 'எள்ளலாக'ப் பார்ப்பதிலும், தமிழ்ச்செல்வன் 'கீழாக'ப் பார்ப்பதிலும் உள்ள அரசியல் என்ன என்பதை கருணாகரன் விளக்கமாகப் பேச வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.
பன்முகநாடுகள், ஒற்றைத்துருவ உலகு, ஐநா அறிக்கை என பல்வேறு முரண்கள் கொண்ட பார்வைகளை முன்வைக்கும் கருணாகரன், தன் வழியிலான பகுப்பாய்விலிருந்து என்னவிதமான அரசியல் நிலைபாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்? அதனை அவர் பின்வரும் சொற்களில் முன்வைக்கிறார் :
'புதிய சிந்தனையுடன் விடுதலையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். தொடர்ந்தும் நாம் அலைய முடியாது, சனங்கள் தொடர்ந்தும் துயரங்களோடு வாழ இயலாது என்பதை அழுத்திக் கூறிவருகிறேன்'.
புதிய சிந்தனை என்பது மிகப் பொதுப்படையான ஒரு சொல். எந்தவிதமான குறிப்பான அரசியல்-கோட்பாட்டு-நடைமுறைத் தந்திரமும் கொண்டிராத ஒரு சொல். இலங்கை அரசு சார்ந்து செயல்படும் அமைச்சர்கள், மகிந்த சிந்தனையை ஏற்கும் தமிழ் ஆலோசகர்கள், தமிழ் மக்களின் நலன்களுக்கு என தன்னார்வ நிறுவனம் கொண்டிருக்கும் இரண்டாவது தலைவர் (நன்றி: யோ.கர்ணன்) என இவர்களும் தமிழ் மக்கள் விடுதலை என்றும் புதிய சிந்தனை என்றும் பேசுகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசை விமர்சிக்கும் கட்சிகள் என்போரும் விடுதலை அரசியலும் புதிய சிந்தனையும் பேசுகிறார்கள். இதுவன்றி சிங்கள-தமிழ் பாட்டாளிவர்க்க ஒற்றுமை பேசுகிறவர்களும் விடுதலை மற்றம் புதிய சிந்தனை குறித்துப் பேசுகிறார்கள்.
இன்று இலங்கை தமிழர் அரசியல் என்பது மூன்று அரசியல் கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அபிவிருத்தி அல்லது இணக்க அரசியல், அதிகாரப் பகிர்வு அரசியல், மனித உரிமை அரசியல் என்பன அவை. அபிவிருத்தி-இணக்க அரசியல் பேசுபவர்கள் அதிகாரப் பகிர்வு மற்றும் மனித உரிமை அரசியலைப் பேசுவது இல்லை. இலங்கை நிலைமையில் அபிவிருத்தி-அதிகாரப் பகிர்வு-மனித உரிமை மூன்றுமே தமிழரின் விமோசன அரசியலில் ஒன்றோடு ஒன்று பிரிக்கவியலாது இணைந்தவை. இச்சூழலில் கருணாகரன் முன்வைக்கும் அரசியல் எத்தகையது என்பது தெளிவாக இல்லை.
2009 மே மாதம் 17 ஆம் நாள் பேரழிவு முடிந்து இந்த மூன்று ஆண்டுகளில்தான் கருணாகரன் முன்வைக்கும் இந்த புதிய சிந்தனை உருவாகியிருக்க முடியும். ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கருணாகரனது எழுத்துக்களை (காலச்சுவடு மற்றும் புகலிட நாட்டு ஊடகங்கள்) நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதுவன்றி வேறெங்காவது கருணாகரன் எழுதியிருக்கும் அரசியல் கட்டுரைகள் குறித்து எனக்குத் தெரியாது. அப்படி வெளியாகி நான் வாசிக்காதிருந்தால் அது என் அறியாமை என நான் தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறேன். எனது வாசிப்பின் அடிப்படையில் சொல்வதானால் யோ.கரணன் கதைகள் தொடர்பாக அவர் எழுதியவை உள்பட அவரது அரசியல் கட்டுரைகள் பெரும்பான்மையானவை விடுதலைப் புலிகளின் தவறுகள் குறித்தவைகள்தான். அதுவும் விடுதலைப் புலிகளின் அரசியலில் இருந்து தன்னை விலக்கி தூரநிறுத்திக் கொண்டு அவர் எழுதிய கட்டுரைகள்தான்.
ஓரிரு கட்டுரைகளே உலக அரசியலும் தென் இலங்கை அரசியலும் குறித்துப் பேசுபவை. இவையும் பகுப்பாய்வு (வல்லினம் நேர்காணலையும் சேர்த்தே சொல்கிறேன்) எனும் கட்டத்தில் இருப்பவைதான். ஆனால் கருணாகரன் பேசுகிற விடுதலை அரசியல் மற்றும் புதிய சிந்தனை என்பது இதன் அடுத்தகட்டமான தொகுப்பிலும் முடிவிலும் முன்மொழிவிலும் உருவாவதாகும். அப்படியான எந்தவிதமான விடுதலை அரசிலுக்கான தடத்தையும் நான் கருணாகரனின் எழுத்துக்களில் காணவில்லை. மேலாக, விடுதலைப் புலிகளின் நிறுவனங்களுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த, பரந்துபட்ட நிலையில் ஈழவிடுதலை அரசியலுடன் தொடர்பு கொணடிருந்த கருணாகரன் முழு விடுதலை அரசியல் குறித்த மறுபரிசீலனையுடன் ஈழவரலாற்றைப் பார்த்திருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் இல்லை.
அபிவிருத்தி அல்லது இணக்க அரசியல், அதிகாரப் பகிர்வு அரசியல், மனித உரிமை அரசியல் போன்றவற்றில் கருணாகரன் மனித உரிமை அரசியலை, அதிகாரப் பகிர்வு அரசியலைப் பேசுகிறார் என்பதற்கான சான்றுகள் இல்லை. எனில் கருணாகரணின் புதிய சிந்தனை அல்லது விடுதலை அரசியல் என்பதுதான் என்ன?
சே குவேரா இருந்த வீடு தலைப்பின் அரசியல் குறித்து கருணாகரன் சொல்வது இது:
'முன்னர் நிலவிய யதார்த்தம் வேறு. பின்னாளின் யதார்த்தம் வேறு. வரலாற்றின் ஓட்டமே அவரை அவ்வாறு எழுத வைத்திருக்கின்றது. கதைகளின் அனுபவங்கள் ஈழச்சூழலிலும் அதனுடைய வரலாற்றிலும் நடக்காமல் இருந்திருந்தால் கர்ணனின் கதைகளும் வேறாகவே இருந்திருக்கக்கூடும். சிலவேளை கர்ணன் எழுதவராமலே இருந்திருக்கவும் கூடும். இலங்கை அரசியலில் அதிலும் குறிப்பாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் இந்த மாதிரிப் புரட்சிகரமான பெயர்களும் அடையாளங்களும் குறியீடுகளும் எப்படி உருச்சிதைந்தன? அர்த்தம் இழந்தன என்பதைக் கர்ணன் குறிப்புணர்த்துகிறார். 'சே குவேரா இருந்த வீடு', 'தேவதைகளின் தீட்டுத்துணி' ஆகிய இரண்டு தலைப்புகளும் புனிதங்கள் என்று கட்டமைக்கப்பட்டவற்றின் சிதைவை கற்பிதங்களின் உருவழிவைக் காட்டுவன. இதுவே கர்ணனுடைய படைப்புகளின் அடிப்படைப் பண்புகளில் முக்கியமானது. ஆகவே சே குவேரா என்ற பெயரை வேறு நோக்கங்களுடன் பயன்படுத்தியிருப்பதாகக் கருதவேண்டியதில்லை. அவ்வாறு கருதினால் அது அதிக கற்பிதங்களுக்குரியதே'.
பின்னர் நிலவிய யதார்த்தத்திற்குத் தகவே சே குவேரா இருந்த வீடு கதை மாறியிருக்கிறது என்கிறார் கருணாகரன். புனிதங்கள் எனக் கட்டமைக்கப்பட்டவற்றின் சிதைவை கற்பிதங்களின் உருவழிவைக் காட்டுவன யோ.கர்ணன் கதைகள் என்றும், இதுவே கர்ணனுடைய அடிப்படைப் பண்புகளில் முக்கியானது என்கிறார் கருணாகரன். யோ.கர்ணனின் சில கதைகள் இத்தகையவை எனும் புரிதலையே நானும் எனது கட்டுரைகளில் வலியுறுத்துகிறேன்;. பிரச்சினை என்னவென்றால் இதில் நான் முரண்படுகிறேன் என்பதுதான். அகிலன், கருணாகரன் போன்றவர்களின் ஆவேசமான எதிர்வினைக்கான காரணம், நான் ஏதோ சே குவேராவின் பெயரை 'இவர்கள்' வணிக மதிப்புக்காகப் பாவித்திருக்கிறார்கள் எனக்குற்றம் சாட்டுகிறேன் என்று கருதிக்கொள்வது மட்டும்தான்.
பிரச்சினை அதுவல்ல. போராட்டத்தின் பின்னடைவு அல்லது வீழ்ச்சி அல்லது தந்திரோபாயத் தவறுகள் என்பன போராட்டத்திற்கான நியாயங்களை இல்லாததாக்கிவிட முடியாது. சே குவேரா, பிரபாகரன், அல் பான்சே கெனோ மூவருமே கொல்லப்பட்டார்கள். இவர்களது பிம்பங்களைச் சிதைப்பதையும் உருவழிப்பதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு கலைஞன் செய்ய முடியாது. சே குவேராவை கோழித் திருடன் என உருச்சிதைத்தது வார்னர் பிரதர்ஸ் தயாரித்த அமெரிக்கத் திரைப்படம். நாடாவது மசிராவது என்று அவுஸ்திரேலியாவுக்கு ஓடிப்போனவராக, பொரிக் கடை வியாபாரியாக பிரபாகரனை உருச்சிதைக்கிறது யோ. கர்ணனின் கதை. சே குவேரா என்கிற பிம்பமும் பிரபாகரனின் பிம்பமும் இப்படி என்னனென்ன பாடுபடுகிறது என்பதை வலியுறுத்தவே நான் மகிந்த, குவேராவின் மனைவியைச் சென்று சந்திப்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டேன்.
அகிலனும் சரி, கருணாகரனும் சரி இக்கதை தொடர்பாக எதனையும் பேசாது தவிர்க்கிறார்களே ஏன்? பிரபாகரன் எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளிநாடு போகவோ, களத்திலிருந்து நீங்கவோ முனையவில்லை. நோர்வே, யுடிஎச்ஆர் உள்பட பல்வேறு அறிக்கைகளில் பிரபாகரன் சரணடைய மறுத்து சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்கின்றன. யோ. கர்ணன் கதை அவர் 'நாடாவது மசிராவது' என்று சொல்லிவிட்டு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த 'பொரிக் கடைக்காரர்' என்கிறது. துவாராகாவும், பாலச்சந்திரனும் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் என்கின்றன தரவுகள். யோ.கர்ணனின் கதையில் துவாரகா இலங்கை ராணுவ விசாரணையின் பின் 'பத்திரமாக' விடுவிக்கப்பட்டார் என்கிறது. அவரது தம்பி சிறுவன் என்பதால் 'கருணையுடன்' இலங்கை ராணுவம் விடுவித்துவிட்டது எனக் கதை எழுதுகிறார் கர்ணன். இது என்ன உண்மைகளின் 'வகைமாதிரி' என்று அகிலனும், கருணாகரனும் சொல்வார்களா? இப்படி புரட்சிகர பிம்பங்களை உருச்சிதைப்பதன் வழி யாருக்கு, என்ன செய்தியை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள்?
ஐநா அறிக்கையோடு இன்னபிற அறிக்கைகள் மற்றும் கர்ணன் கதைகள் குறித்து தமிழ்ச்செல்வன் அவதானம் குறித்த கருணாகரனின் புரிதல் பின்ருமாறு:
'ஒரு படைப்பாளியைப் பார்த்து, ஏன் நீ எல்லா உண்மைகளையும் எல்லா விடயங்களையும் சொல்லவில்லை? என்று கேட்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிக் கேட்க முடியுமா? மட்டுமல்ல கோடன் வைஸின் புத்தகமும் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் எவ்வளவோ இடங்களில் வேறுபடுகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். எனவேதான் 'இவை ஈழத்து வாழ்வைப்பற்றிய கதைகளாக மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றின் மீது வைக்கப்படும் கேள்விகளாகவும் இந்தக் கதைகள் வெடிக்கின்றன' என்று தமிழ்ச்செல்வன் சொல்கிறார். தமிழ்ச்செல்வனின் பார்வையும் புரிதலும் இந்த இடத்தில் ஒரு கலைஞனின் அனுபவத்தைக் கொண்டுள்ளன. இதை ராஜேந்திரனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்ச்செல்வனின் அரசியல் வேறாக இருக்கலாம். அதன் நோக்கு நிலைகளும் வேறானவையாக அமையலாம். கர்ணனுடைய கதைகளை அவர் புரிந்து கொண்டுள்ள முறையே இங்கே கவனத்திற்குரியது. பிரதிகளின் வழியாகவே உண்மைகளைக் கண்டறிய முற்படுபவர், பிரதிகளின் வழியாகவே வரலாற்றையும் வாழ்வையும் உணர்ந்து கொள்ள முற்படும்போது ஏற்படுகின்ற அபத்தம் இதுதான். ஏனெனில் எல்லாப் பிரதிகளும் ஒரே தன்மையைக் கொண்டிருப்பதில்லை. ஒரே அணுகுமுறைக்குரியவையும் அல்ல. இதை விளங்கிக் கொள்ள வேண்டும்...'
எதற்காக ஐநா அறிக்கையையும் இனிவரும் மனித உரிமை அறிக்கைகளையும் இலக்கிய மதிப்பீட்டுக்குள் கொண்டு வருகிறார் தமிழ்ச் செல்வன்? இத்தகையை ஒப்பீட்டைச் செய்தது நானல்ல, மாறாக தமிழ்ச்செல்வன். இதற்கான அவசியம் என்ன? என்பது எனது கேள்வி. கர்ணன் கதைகள் தவிர பிற அறிக்கைகள் முரண்பாடுகள் கொண்டிருக்கின்றன என்றால் கர்ணன் கதைகள் வைக்கும் உண்மைகளில் முரண்பாடுகள் இருக்கவே கூடாதா? அல்லது கர்ணன் கதைகள் முரண்பாடுகளை முன்வைக்க முடியாத முற்றுண்மைகளா? என்பதுதான் எனது கேள்வி. மேலாக, இன்று இத்தகைய உலக அளவிலான அறிக்கைகள்தான் ஈழத்தமிழர்கள் மனித உரிமை அரசியலை முன்னெடுப்பதற்கான தரவுகளை வழங்கும் ஆவணங்கள். இதனால்தான் இவைகளை முன்வைத்து சர்வதேசிய விசாரணைக்கு நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்கிறார் தமிழ்ச்செல்வனின் தோழர் ரங்கராஜன் எனும் அகில இந்தியத் தலைவர்.
அன்னா அக்மதோவா, நிசார் கப்பானி, அதோனிஸ் என்று கர்ணன் கதைகளை முன்னர் ஒப்பிட்டுப் பேசிய கருணாகரன், இப்போது நிசார் கப்பானி, அதோனிஸ் போன்றோரை விட்டு விட்டு அன்னா அக்மதோவா குறித்து மட்டும் விளக்கம் தருகிறார். சியோனிஸ்ட்டுகளுக்கு எதிரான நிசார் கப்பானியின் அதோனிசின் எழுத்துக்களுக்கும் கர்ணனது எழுத்துக்கள் வெளிப்பட்ட முறைக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பதனை கருணாகரன் புரிந்து கொண்டார் என நினைக்கிறேன்.
இனி கருணாகரனின் சொற்கள்:
'வரலாற்றில் ஒவ்வொரு புள்ளிக்கும் வெவ்வேறு தன்மைகளும் ஒத்த தன்மைகளும் இருப்பதுண்டு. நிச்சயமாக எல்லாப் புள்ளிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. அப்படி அமையுமானால் அது வரலாறாகவும் மனித இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் சமூக ஊடாட்டம் உள்ளவையாகவும் இருக்க முடியாது. நான் குறிப்பிட்ட அன்னா அக்மதோவா தன் பிள்ளைக்காகவும் கணவருக்காகவும் தன்னுடைய அயல் (சக) மனிதர்களுக்காகவும் தன்னுடைய அரசையே ஆட்சியையே நிந்தித்தவர். அவருடைய சனங்களையும் பிள்ளையையும் கணவரையும் அவருடைய அரசே பலியிட்டது. அங்கே நிலவிய அதிகாரமே பலியெடுத்தது. இங்கே கர்ணனின் கதைகளிலும் சனங்கள் நம்பிய அமைப்பு சொந்த மக்களையே நெருக்கடிக்குள்ளாக்குகிறது. ஆகவே ஏறக்குறைய ஒத்த தன்மைகள் இரண்டுக்குமிடையில் நிகழ்கின்றன. இதேவேளை இலங்கை அரசினாலும் இந்த மக்கள் நெருக்கடிக்குள்ளாகின்றனர். அவற்றின் வெளிப்பாடுகளையும் உணர்வையும் பிரச்சினைகளையும் இன்னொரு நிலையில் கர்ணன் வெளிப்படுத்துகிறார். மேலும் பிற அதிகார அடுக்குகளையும். ஆகவே கர்ணனின் கதைகள் பல நிலைகளில் ஏற்படுகின்ற ஏற்பட்ட பல பிரச்சினைகளைப் பேசுகின்றன. இவற்றை தன்னுடைய புரிதலுக்கு மட்டும் சாத்தியப்பட்ட அளவுகோலினால் யமுனா ராஜேந்திரன் அளக்க முற்படுவது எவ்வளவு அபத்தமானது? இதற்காக நான் ஒரு விளக்கப்பள்ளியை எப்படித்தான் ஆரம்பிப்பது? '.
இது எனது ஆதாரமான கட்டுரையில் நான் முன்வைத்த கருத்துக்கள்:
'கருணாகரன், தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பிற்கான தனது முன்னுரையில் யோ.கர்ணனின் கதைகளை ஒரு புறம் ஸ்டாலினுக்கு எதிராக உண்மைகளைப் பேசிய அன்ன அக்மதோவா, பிறிதொருபுறம் சியோனிஸ்ட்டுகளுக்கு எதிராக உண்மைகளைப் பேசிய அதோனிஸ், நிஸ்ஸர் கப்போனி போன்றவர்களின் பின்னணியோடு புரிந்து கொள்ளக் கோருகிறார். பாலஸ்தீன-சியோனிஸ்ட் பிரச்சினையை இலங்கைச் சூழலில் எவ்வாறு பொருத்துவது? தமிழர்கள் பாலஸ்தீனர்கள். சிங்கள ஆட்சியாளர்கள் சியோனிஸ்ட்டுகள். சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக யோ.கர்ணன் என கருணாகரன் கோரிக் கொள்கிற மாதிரியான பண்பு யோ.கர்ணன் கதைகளில் மிகக் கொஞ்சமாகவே இருக்கின்றன. அவ்வாறு கர்ணன் கதைகளைக் கோரமுடியாது. ஸ்டாலினுககு எதிராக அக்மதோவா. இலங்கைச் சூழலில், ஈழச் சூழலில் இதனை மூன்றுவிதமாக வியாக்யானப்படுத்தலாம். ஸ்டாலினிஸ்ட்டான பிரபாகரனுக்கு எதிராக யோ. கர்ணன் கதைகள் அல்லது ஸ்டாலினிஸ்ட்டான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக யோ.கர்ணன் கதைகள் அல்லது ஸ்டாலினிஸ்டான மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக யோ. கர்ணன் கதைகள். யோ. கர்ணன் கதைகள் பெரும்பாலுமானவை விடுதலைப்புலிகளை விமர்சிப்பவை. இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் புலிகள் அதிகாரத்தில் இல்லை. புலித்தலைமை தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுவிட்டது. கர்ணனது தனித்தன்மை என்று சொல்லப்படுகிற எள்ளல் விடுதலைப் புலித்தலைவர்களும் அவர்களது நடத்தைகளும் குறித்ததாகத்தான் இருக்கிறது. இலங்கை அரசு குறித்த அதனது அரசத் தலைவர்கள் குறித்த எள்ளல்கள் ஏதும் கதைகளில் இல்லை'.
இங்கு மீளவும் நான் சொல்கிறேன்: பிரபாகரன் கீழான ஈழ நிலைமையை ஸ்டாலின் கீழான ரஸ்யாவுடன் ஒப்பிடுகிறார் கருணாகரன். சரி, விவாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் இங்கு இலங்கை அரசு, அந்த அரசுடன் ஒன்றாக இருந்து இன்று வடக்கிலும் கிழக்கிலும் அமைச்சரவையிலும் அதிகாரத்திலும் இருப்போர்களை எவரோடு ஒப்பிட முடியும்? 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் பின் ரஸ்யா ஒரு இறையாண்மையுள்ள நாடாக இருந்த சூழலில் அன்னா அக்மதோவா எழுதினார். இட்லருக்கு எதிரான ரஸ்ய தேசத்தின் போர்ச் சூழலில் அன்னா அக்மதோவா எப்படி எழுதியிருப்பார்? இட்லரைத் தொடாமலா அல்லது இட்லருக்கு ஆதரவாகவா? பிரபாகரன் காலத்தில் கர்ணன் எழுதவில்லை. பிரபாகரன் போராட நேர்ந்த சூழல், அதைவிடவும் மோசமாக இன்றிருக்கிற சூழல் என்பதோடுதான் 'ஈழத்து' அன்னா அக்மதோவாக்களை மதிப்பிட வேண்டும் எனவே நான் சொல்கிறேன்.
IV.
இனி இந்த விவாதத்தில் நான் சொல்ல ஏதும் இல்லை. விவாதத்தில் எனது முதல் கட்டுரை ஆகஸ்ட்டில் எழுதப்பட்டது. இப்போது நவம்பர் மாதம். ஏறக்குறைய நான்கு மாதங்கள் இந்த விவாதப்பரப்பினுள் வாழ்ந்திருக்கிறேன். அகிலனுக்கு எதிர்வினையாக இரு கட்டுரைகள், கருணாகரனுக்குப் பதிலாக இக்கட்டுரை என நான்கு கட்டுரைகளை இந்த விவாதத்தில் முன்வைத்திருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அரபுப் புரட்சி குறித்தும் ஈழம் குறித்துமே நான் தொகையாக எழுதியிருக்கிறேன். சமகாலத்தில் பின் சோவியத் மார்க்சியம் தொடர்பாகவும், மாவோவுக்குப் பிந்திய சீனா தொடர்பாகவும் இருநூல்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என்னைப் போன்றவர்கள் நம்பிக் கொண்டிருந்த விடுதலை அரசியல் வீழ்ச்சியடைந்த அல்லது பின்னடைவுக்கு உள்ளான காலம் இது. இது குறித்த மீளாய்வு என்பது எம் அனைவருக்கும் அவசியமானது. சோவியத் சீன மாற்றங்கள் பற்றி மட்டுமல்ல, பின் புரட்சிகர சமூகங்கள் குறித்தும் அந்தந்த நிலம் சார்ந்த மார்க்சியர்கள் கடந்த கால் நூற்றாண்டில் எழுதிக் குவித்திருக்கிறார்கள். ஈழ விடுதலை என்பது தமிழ் சிந்தனையைப் புரட்டிப் போட்டதொரு நிகழ்வு. உலகின் சகல விடுதலைச் சிந்தனைப் போக்குகளையும் ஈழவிடுதலையை முன்வைத்து நாம் உரசிப் பார்த்துக் கொள்ள முடியும்.
உலக விடுதலை அரசியல் போக்கின் அங்கமே ஈழவிடுதலை. கவித்துவ மனதுக்கு வானம் துண்டு துண்டானதாகத் தோன்றுவது கலைஞனது கற்பனையின் இயல்பு. மானுட விடுதலை அரசியலில் எவரதும் வானமும் என்னுடைய வானமும் எங்கோ சந்திக்கிறது என நம்புபவன் நான். பூமி குறித்த எனது நம்பிக்கையும் இதுதான். ஈழவிடுதலைப் போராட்டம் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட, அந்த நிலம் சார்ந்த மனிதர்களை நெருங்கிய மனிதர்களாகக் கொண்டதால் எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு போராட்டம். தமிழகத் தமிழர்களுக்கு ஈழ ஆயுத விடுதலைப் போராட்டம் என்பது ஓரு கண்திறப்பு. ஆகவே, அது குறித்துப் பேசுவதும் சிந்திப்பதும் எனது முன்னுரிமைகளில் ஒன்று.
போராட்டத்தினை விமர்சனத்தோடு பார்த்துப் போராடும் மக்களோடு நின்று கடந்த காலத்தை மீளாய்வு செய்வது எனது பார்வை. இவ்வகையில் போராட்ட அனுபவங்களையும் அதனது படிப்பினைகளையும் முழுமையாக இருண்மையாகச் சித்தரிப்பவர்களுடன் என்னால் ஒருபோதும் உடன்பட முடியாது. இந்த நோக்கிலிருந்தே என் கட்டுரைகள் எழுதப்பட்டன. எதிர்வினையாற்றிய அகிலனுக்கும் கருணாகரனுக்கும் எனது நன்றி. விவாதத்தைப் பின்தொடர்ந்த வாசக நண்பர்களும் தோழர்களுக்கும் எனது நன்றி. இந்த இறுதிக் கட்டுரையுடன் விவாதத்திலிருந்து இக்கணத்தில் நான் விலகுகிறேன்.
ஆசிரியர் குறிப்பு:
யோ.கர்ணணின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து யமுனா ராஜேந்திரன் அவர்கள் எழுதிய கட்டுரை (சே குவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின் வீடு) கடந்த சில வாரங்களாக பலத்த விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவாதத்தை தற்போது யமுனா ரஜேந்திரன் எழுதியுள்ள கட்டுரையுடன் முடிவுக்கு கொண்டு வருகிறோம்.
விவாதத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் எமது நன்றி.